Advertisement

அத்தியாயம் 03

அனைவரும் வெவ்வேறான மனநிலையில் வீடு வந்து சேர, ஜெகன் தான் கொதித்துக் கொண்டிருந்தான். வாசலில் நுழைகையிலே வலது மூளையில் ஒரு செருப்பும் இடது மூளையில் ஒரு செருப்பும் பறந்தது. பத்மா, யாரை எவ்வாறு சமாளிப்பது எனக் கையை பிசையும் நிலையில் தேவகியையும் கையோடு வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தார். 

 

பெரியவர்கள் ஹாலில் அமர, கண்டுகொள்ளாமல் விறுவிறுவெனத் தன்னறை நோக்கிச் சென்ற ஜெகனை, “டேய், கொஞ்சம் நில்லுடா..” என அழைத்தார் கார்முகிலன்.

 

நான் தான் என் முடிவை சொல்லிவிட்டேனே என்பது போல் அன்னையைப் பார்த்து முறைத்தவன் முன் வந்து நின்றான். 

 

“என்ன ஜெகன்? உன் முடிவு என்ன..?” 

 

“நான் என்ன சொல்லணும்னு நீங்க எதிர்பார்கிறீங்கப்பா..?”

“நான் நேற்று சொன்னது தான், ஒரு பொண்ணைப் போய் பார்த்த பிறகு நிராகரிக்கிறது தவறு, அதுவும் போக, ராஜியோட வீட்டுப் பொண்ணுங்கிற போது அவ வாழ்க்கையும் மனசுல வைச்சு முடிவு சொல்லு”

 

“நீங்க முடிவு எடுத்துட்டுப் பேசுற மாதிரி இருக்குப்பா, அவங்க வீட்டுப் பொண்ணை நினைக்கிற நீங்க, என் வாழ்க்கையை பத்தி மட்டும் யோசிக்கலையே! நீங்க எனக்கு எந்த வகையிலும் நியாயம் செய்யலைப்பா”

 

“உனக்கு இப்போ என்ன அநியாயம் செய்துட்டேன்..?”

 

“அண்ணனுக்கோ விக்கிக்கோ இந்த மாதிரி ஒரு குறையுள்ள பொண்ணை பார்ப்பீங்களா..?”

 

“குறைன்னு சொல்லாத ஜெகன், வெறும் ஸ்கின் ப்ராப்ளம் தான்” என இடையில் பேசினார் பாரிவேந்தன். 

 

“ஏன், உங்க பையனுக்குன்னா இப்படிச் செய்வீங்களா சித்தப்பா? சும்மா உங்க பையனுக்கு ஒரு நியாயம், ஊரான் வீட்டுப் பையன்னா ஒரு நியாயம்னு பேசாதீங்க..” சட்டென அவன் உரைக்க, அவர் மௌனமாகிவிட, “ஜெகன்…” என அவ்விடம் அதிர கத்தினார் கார்முகிலன். 

 

“பார்த்துப் பேசு இல்லை, தோலை உறிஞ்சிடுவேன் பார்த்துக்கோ..!” என ஒரு தந்தையாக அவர் கண்டிக்க, சினம் பொங்க, பேசயியலாது அமைதியாய் நின்றான் ஜெகன். 

 

“அதான் அவனுக்குப் பிடிக்கலைன்னு சொல்லுறான்ல இன்னும் என்ன, விட்டுடலாங்க…” என ஜெகனுக்குப் பரிந்து கொண்டு பத்மா வர, மனைவியை எரிப்பது போல் பார்த்தார். 

 

“என்ன பேசுற நீ..? இதெல்லாம் முன்னவே நல்லா விசாரிச்சுட்டு இஷ்டம்னா போய் பார்த்து இருக்கணும். இப்படி எல்லாரையும் கூட்டிட்டிப் போய் பார்த்துட்டு வந்து பிடிக்கலைன்னு சொன்னா என்ன அர்த்தம்?”

 

“சும்மா பார்த்துட்டுத் தானே வந்து இருக்கு, நாம தான் எதுவும் வாங்குக் கொடுக்கலையே…” எனும் போதே கணவரின் உஷ்ணப் பார்வையில் பத்மாவின் குரல் உள் சென்றது. 

 

“என்ன பேசுற நீ? இதுவே நம்ம வீட்டுப் பொண்ணுன்னா இப்படித் தான் சொல்லுவியா? சாதாரணமாகவே நிராகரிப்பது தப்பு, அதுலையும் இது தான் குறைன்னு குத்திக்காட்டி ஒரு பொண்ணை நிராகரிக்கும் போது அவ மனசு தாங்குமா? அந்தப் பாவத்தை நம்ம குடும்பம் சுமக்கணுமா?”

 

“இப்போ என்ன, இல்லாததையா சொல்லிட்டோம்..?” 

 

“அழகை வைச்சுப் பொண்ணை எடை போடாதே பத்மா, குணத்தை வைச்சு பாரு. 

வீட்டுக்கு வர மருமகள் வீட்டுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கணும். எனக்கு என்னவோ இந்தப் பொண்ணு நல்ல பொண்ணாத் தான் தெரியுது” எனத் தேவகி இடையில் பேசினார். 

 

‘இவர்களை யார் பஞ்சாயத்து செய்ய அழைத்தது?’ என்ற நினைத்து எரிச்சலில் இருந்தான் ஜெகன். 

 

“முதல்லையே தெரிஞ்சிருந்தா பார்த்திருக்கவே மாட்டோம்..” என பத்மா உரைக்க, “ஏன் உன் மகள் சொல்லாமப் போனான்னு கேளு, ஏன் ஒருத்தருக்குக் கூடவா அந்தப் பொண்ணை முன்ன தெரியாது..?” எனக் கேட்டார் கார்முகிலன். 

 

“எனக்குத் தெரியும் மாமா, ராஜி கல்யாணத்துல பார்த்திருக்கேன்..” என சீதா மெல்லிய குரலில் சொல்ல, மனோ, விக்கி இருவருமே தெரியுமெனத் தலையாட்டினர். 

 

“இதை ஏன் எங்கிட்ட முன்னவே சொல்லலை..” என வேகமாகக் கேட்டார் பத்மா.

 

“உங்க எல்லாருக்குமே தெரியும் தான் நினைச்சேன் அத்தை, அதுவும் போக இந்த வீட்டுல இருந்து சம்பந்தம் பேசப் போனா நல்லா விசாரிச்ச பிறகு தானே பொண்ணு மாப்பிள்ளையே பார்க்க அனுமதிப்பீங்க அதனாலே தெரியும்னு தான் நினைச்சேன்” எனத் தன் அனுபவத்தில் சொன்னாள் சீதா. 

 

“ராஜி கல்யாணத்துல நடந்த பிரச்சனைகள்ல பொண்ணை நான் கவனிக்கவேயில்லையே” என்றார் தேவகி. 

 

“இப்படித் தானே அவங்க வீட்டுலையும் நினைத்திருப்பாங்க, பொண்ணு இப்படின்னு தெரிந்தே பார்க்க வந்துட்டு இப்போ எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்?” என மீண்டும் கேட்டார் கார்முகிலன். 

 

யாரிடமும் பதிலில்லை, அனைவரும் அமைதியாக நின்றிட, “முடிவா என்ன தான் சொல்லுற ஜெகன்?” என நேரடியாக அவனிடமே கேட்டார் கார்முகிலன். 

 

இத்தனை தூரம் சொல்லிய பின்னும் அவர்கள் முடிவை தன் மீது திணிப்பதாகத் தோன்ற, சினம் கொண்டான் ஜெகன். 

 

“எனக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத பொண்ணை என்னால திருமணம் செய்துக்க முடியாது, நீங்க பெத்த பையன் தானே நான், எனக்கு என்ன குறை? கை, கால் இல்லையா? இல்லை நான் தான் ஆம்பளை இல்லையா?” என்றான் குறையாத கோபத்தோடு. 

 

“ஜெகன்.. ஏன்டா இப்படி எல்லாம் பேசுற..?” எனக் குரல் கரகரக்க, கண்ணைக் கசக்கினார் பத்மா. 

 

“பின்ன நீங்க இப்படிச் செய்தால் நானும் தான் என்ன சொல்லட்டும்? நான் என்ன ராஜியை மாதிரி பண்ணிட்டு வந்து நின்னேனா? உங்க கௌரவத்திற்குக் குறைவா என்னைக்காவது நடந்து இருக்கேனா? இது வரைக்கும் உங்களுக்கு நல்ல பிள்ளையாத் தானே இருந்திருக்கேன், என் மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை அமைத்துத் தர்றது உங்க கடமை இல்லையா?” என்ற ஜெகனின் வார்த்தைகள் நேரடியாகவே கார்முகிலனிடம் பேரம் பேசியது. 

 

“அதான் இவ்வளவு அழுத்தமாச் சொல்லிட்டானே, கட்டாயப்படுத்திக் கல்யாணம் தான் செய்து வைக்கலாமே தவிர, வாழ வைக்க முடியுமா?” என்றார் பத்மா. 

 

கார்முகிலனுக்கும் அதுவே சரியெனத் தோன்ற, “இங்க கேட்குறியே, இதுவே ராஜி சம்பந்தியம்மாவும் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவ நீ?” என்றார். 

‘அவங்களே ஏத்துக்கிட்டாளும் இந்த மனுஷன் விட மாட்டார் போலையே!’ மனதில் கணவனைத் திட்டியபடி, பதிலின்றி பாவமான முகத்தோடு நின்றார் பத்மா. 

 

“ஜெகனுக்கு வேண்டாம்னு சொல்லிட்டானே, நாங்க வேணா அருளுக்கு கேட்குறோம்…” என இடையில் தேவகி கேட்டார். 

 

அனைவரும் அதிர்ந்து நிற்க, குண்டூசி விழுந்தாலும் எதிரொலிக்கும் அளவிற்கு அவ்விடமே ஒரு நொடி மௌனமானது.

 

“தாராளமாக் கேளுங்க தேவகி, அருளும் நம்ம பையன் தானே?” தப்பித்தால் போதுமெனப் பத்மா உரைக்க, “எல்லாம் தெரிந்தே எப்படிம்மா இப்படி ஒரு முடிவு எடுக்குற? கண்டிப்பா அண்ணன் இதுக்கு ஒத்துக்கிடவே மாட்டான்” என்றான் மனோ. 

 

“அருளை நான் சம்மதிக்க வைக்கிறேன், அந்தப் பொண்ணுக்கு என்னடா குறை..?”

 

“நான் அதைச் சொல்லலைம்மா, ராஜி வீட்டுக்காருக்கும் அண்ணனுக்கும் தான் ஆகாதே! அவங்களே இதுக்குச் சம்மதிக்க மாட்டங்கம்மா” 

 

“ஆரம்பிக்கும் போதே அபசகுனமாப் பேசாதே மனோ” தேவகி கண்டிக்க, மனோவின் கருத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட பாரிவேந்தன், “ஏதா இருந்தாலும் யோசிச்சு முடிவெடு தேவகி. அருள் மனசு வைத்தாலே தவிர யாராலையும் அவனைக் கட்டாயப்படுத்த முடியாது” என்றார். 

 

அதற்குத் தலையாட்டிய தேவகி, “இப்போதைக்கு எதுவும் அவங்க வீட்டுல சொல்ல வேண்டாம் பத்மா, நான் அருள்கிட்ட பேசிட்டு முடிவா சொல்லுறேன். அப்பறம் பேசிக்கலாம்” என்றுரைத்தார்.  

 

தன் தலைக்கு வந்த சுமை அவர்கள் தலைக்கு இடமாறிய நிம்மதியில் புன்னகை முகமாய்த் தலையாட்டினார் பத்மா. 

 

“சரி தான், அந்த மாதிரி பொண்ணுக்கு அருள் மாதிரி படிக்காதவன் தான் சரியான பொருத்தமா இருப்பான்” சட்டென ஜெகனிடமிருந்து வந்து விழுந்தன வார்த்தைகள். 

 

“ஜெகன், உனக்கு வாய் நீளுது நல்லதுக்கில்லை சொல்லிட்டேன்” என அதட்டிய கணேஷை, பிஸ்கட்டிற்கு வாலாட்டும் நாயை போலே ஒரு அற்பப் பார்வை பார்த்தான் ஜெகன். 

 

“சரிங்க அண்ணா, நாங்க கிளம்புறோம்..” என்ற பாரிவேந்தன் தன் குடும்பத்தினரோடு விடைபெற்றுத் தன் வீடு நோக்கிக் கிளம்பினார்.

 

இசைவாணி அறையே இருளில் மூடி இருக்க, உறங்கிவிடாளென நினைத்த பிரகாஷ், கடந்து தன்னறை நோக்கிச் சென்றான். வந்தவர்கள் சென்றதிலிருந்து அவன் கண்ணில் படாமல் சுற்றிக்கொண்டிருந்த ராஜி இறுதியாக அவர்கள் அறையில் தான் மாட்டினாள். 

 

“ஆமா உங்க குடும்பம் மட்டும் வர வேண்டிய தானே? எதுக்கு அவன் அம்மா அப்பா எல்லாம் வந்தாங்க..”

 

“எங்க குடும்பம் வேற அவங்க குடும்பம் வேறன்னு நாங்க பிரிச்சிப் பார்க்கிறது இல்லைங்க, என்ன நல்ல விஷயம் பேசினாலும் சித்தப்பா, எங்கப்பா சேர்த்துத் தான் முடிவெடுப்பாங்க”

 

“என்னவோ! அதெல்லாம் உன்னோட வைச்சிக்கோ, சரி உங்க வீட்டுல இருந்து போன் பண்ணாங்களா? என்ன சொன்னாங்க?” 

 

“இன்னும் இல்லைங்க..”

 

“ஒரு முடிவு சொல்லுறதுக்கு இவ்வளவு நேரமா?”

 

“காலையில தானே பார்த்துட்டுப் போனாங்க, நாளைக்கு எல்லாம் சொல்லிடுவாங்க..”

 

“இங்கபாரு, என் தங்கச்சி அறிவுக்கும் திறமைக்கும் எத்தனையோ மாப்பிள்ளை கிடைப்பாங்க, நீ கேட்டியேன்னு தான் நான் இதுக்குச் சம்மதிச்சேன் நினைவுல வைத்துக்கோ” 

 

என்னவோ அவன் தங்கை மீதுள்ள பாசத்தில் பேசினாலும் எதார்த்தம் என்ன என்பதை அவள் நன்கு அறிவாள். ஒரு அரேஜ் மேரேஜில் எத்தனை விதமான எதிர்பார்ப்புகள், எத்தனை விதமான நிபந்தனைகள் அதுவும் போக அந்தஸ்து, ஜாதகம், ஜாதி, மதம், மனசு என அனைத்தும் பொருந்தி வந்து ஒரு திருமணம் முடிவாவது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை கணேஷின் திருமணத்தில் நன்கு உணர்ந்திருந்தாள். 

 

அவன் உரைத்ததைக் கண்டு கொள்ளாது படுக்கையைச் சரி செய்து தளர்வாய்ச் சாய்ந்து அமர்ந்தாள். 

 

“ஏய்.. ராஜி, நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருக்கேன், கண்டுக்காம போற..” என்றவன் கத்த, “நீங்க பேசுங்க பேசுங்க, நான் உக்காந்துக்கிட்டே கேட்குறேன்..” என்றாள் நிதானமாக. 

 

“ஏய் என்னடி திமிரா..?”

 

“இல்லைங்க கால் வலிக்குது…” என்றவள் பாவமாகப் பார்க்க, சட்டெனக் கோபம் அடங்க, கர்ப்பிணியான மனைவியைக் காதலோடு பார்த்தான். அவள் காலடியில் அமர்ந்தவன், கால்களை மென்மையாகப் பிடித்துவிடத் தொடங்கினான். 

 

“என்ன தான் வெளியே விசாரிச்சுப் பெண் கொடுத்தாலும் எந்த அளவுக்கு அந்த உறவு நல்ல விதமா அமையும்னு சொல்ல முடியும்? முன்ன பின்ன தெரியாதவங்களை எப்படிங்க நம்ப முடியும்? நம்ம வாணி நல்லதுக்குத் தானே சொல்லுறேன். ஜெகன் என் கூடப்பிறந்தவன், சின்ன வயசுல இருந்தே அவனைப் பார்த்துத் தான் நான் வளர்ந்திருக்கேன். இரண்டுபேருமே சரியான பொருத்தமா இருப்பாங்க, அதுவும் போக எங்க வீட்டைப் பத்தி உங்களுக்குத் தெரியாதுங்களா? அம்மாவும் அண்ணியும் வாணியை நல்லாப் பார்த்துப்பாங்க” 

 

“இதைச் சொல்லித் தானே எங்கிட்ட சம்மதம் வாங்குன..!”

 

“அதைத் தான் திரும்பவும் சொல்லுறேன், நீங்களும் நினைவுல வைத்துக்கோங்க…” 

 

“ஆனாலும் உங்கண்ணன் பார்வையே திருப்தியா இல்லை..”

 

“நீங்களா கற்பனை பண்ணிக்க வேண்டாம், முடிவு சொல்லட்டும், தெரியும்” 

 

“அதான் எப்போ..?”

 

இவனோ கேள் என்கிறான், அவர்களோ ஏன் முன்பே சொல்லவில்லை என்பார்கள்? நன்மைக்கு நினைத்து இரண்டு பக்கமும் அடிபடும் மத்தளத்தின் நிலையில் முழித்தாள். 

 

“நாமளா கேட்டா அது மரியாதை இல்லைங்க…”

 

“என்னவோ இரண்டுபேருக்கும் பிடித்திருந்தால் சந்தோஷம், அப்படியில்லை வாணியை எந்த வகையிலையாவது வருத்தப்பட வைச்சாங்க, நான் சும்மா விடமாட்டேன் சொல்லிட்டேன்” என்றவனின் உறுதியான குரலில் ராஜிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ஏனெனில் இன்றைய ஜெகனின் செயல் அவள் எதிர்பாராதது. 

 

ஆனால் முடிவறிந்த இசைவாணியோ தன்னறை இருளில் கண்ணீரில் ராகம் இசைத்துக் கொண்டிருந்தாள். எதிர்பாராது கேட்டுவிட்ட ஜெகனின் வார்த்தைகள் அவள் மெல்லிய இதயத்தைக் குத்திக் கீறியிருந்தது. ஜெகனின் நிராகரிப்பில் அவளுக்கு வருத்தமேயில்லை, ஆனால் அவனின் வார்த்தைகள் வருந்தச் செய்தது. சராசரி ஆணாக வரும் மனைவி அழகாக இருக்க வேண்டுமென்ற அவன் எதிர்பார்ப்பு நியாயம் தானே என நினைத்தாள். 

படிப்பை முடித்துக் கல்லூரி விடுதியிலிருந்து வந்து நான்கு மாதம் தான் ஆகிறது. பிரகாஷ் வரன் பார்க்கத் தொடங்கலாம் என உரைத்த மறுநாளே ராஜி அவள் அண்ணனுக்குக் கேட்பாள் என எதிர்பார்க்கவில்லை! இந்த திருமணத்தில் அவளுக்கு ஏன் இத்தனை ஆர்வமெனத் தெரியவில்லை. 

 

ஆனால் முதலாக வந்த வரன், முதல் நிராகரிப்பு வலித்தது, ‘இது போன்ற வலியை இனி வரிசையாகத் தாங்க வேண்டுமா? அத்தனை வலு என்னிடமிருக்கிறதா என்ற கேள்வி அவளை வலுவிழக்க வைத்தது. இல்லை தாங்கவே இயலாது, அதற்கு இந்த வலி தரும் திருமணமே வேண்டாம்’

 

இந்த முடிவைத் தான் அன்னை ஏற்பாளா? இல்லை அண்ணன் ஏற்பானா? என்ற கேள்வியும் அடுத்ததாகத் தோன்ற, கேள்விகள் தான் நீண்டது. ஏன் என்னை இவ்வாறு கிறுக்கலான ஓவியமாகப் படைத்தாய் இறைவா? என்ற கேள்வியை வைத்து கண்ணீரோட அழுது அழுது அசதியில் உறங்கியும் விட்டாள்.

 

படைத்து வைத்தவனே பாதுகாப்பான் என்பதையும் அவனே அவளுக்கு உணர்த்த வேண்டும்.

Advertisement