Advertisement

அத்தியாயம் 02

காலை நேரம் ஊதுபத்தி புகையிலும், சாம்பிராணி வாசத்திலும் வீடே நிறைந்திருந்தது. ஞாயிறு அன்று காலையிலும் வழக்கம் போலக் கடைக்குச் செல்லக் கிளம்பி வந்திருந்தான் அருள்வேலவன். அதே நேரம் சரசரக்கும் பட்டணிந்து ஈரத்தலையை உலர்த்தியவாறு எதிரே வந்தார் தேவகி.

“அருள், ஒரு நிமிஷம் நில்லுப்பா” என்க, “என்னம்மா?” என்றவாறு எதிரே நின்றான்.

“இன்னைக்கும் நீ கடைக்குப் போகணுமா? முக்கியமான வேலை எதுவும் இருக்காடா?” என்க, “ச்சூ, அதைவிட முக்கியமான வேலை எதுவும் இருக்காம்மா?” என்றான் அசுவாரஸ்யமாக.

ஆர்வமாகத் தலையாட்டியபடி, “ஆமாடா, இன்னைக்கு ஜெகனுக்குப் பொண்ணு பார்க்கப் போறோம், நீயும் வந்தா நல்லாயிருக்கும். மொத்தக் குடும்பமாய் போகும் போது உன்னை மட்டும் எப்படிடா விட்டுட்டுப் போக?” எனத் தேவகி அழைக்க,  “அம்மா இதுக்கு தான் கேட்டீங்களாக்கும்? நான் வந்து என்னமா செய்யப் போறேன்? பெரியவுங்க நீங்களே பார்த்துப் பேசிட்டு வாங்க, எனக்குக் கடையில வேலை இருக்கு” என்றவன், நில்லாது சென்று விட்டான்.

வரமாட்டான் என அறிந்தவர் தான். இருந்தாலும் அழைத்துப் பார்க்க, அவர் எண்ணம் போலே மறுத்தும் விட்டான். ஆனால் இதில் தேவகி குறிப்பிட மறந்த ஒன்று, ராஜியின் வீட்டிற்குத் தான் பெண் பார்க்கச் செல்ல உள்ளனர் என்பதைத் தான்.

ஒருவழியாகக் காலை உணவைத் தயார் செய்து, கணவர் பாரிவேந்தன், இளைய மகன் மனோவையும் உண்ண வைத்துக் கிளப்பிக் கொண்டு பத்மாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் தேவகி.

அவர்கள் வீட்டிலும் அனைவரும் தற்போது தான் பரபரப்பாகக் கிளப்பிக் கொண்டிருந்தனர்.

உள்ளே செல்ல, “வாங்க தேவகி, நல்ல நேரத்துக்கு வந்தீக்க” என பத்மா அழைக்க, “தட்டு, தாம்பூலம் எல்லாம் ரெடியா இருக்கா? எத்தனை தட்டு?” எனக் கேட்டவாறு உள்ளே சென்றார் தேவகி.

அதே நேரம் சட்டென அவர்கள் முன் வேட்டி சட்டையில் குதித்த விக்கி, கண்களில் ஸ்டைலாகக் கறுப்புக் கண்ணாடியை அணிந்தான்.

சிரிப்புடன் அவன் முதுகில் தட்டிய மனோ, “டேய்! பொண்ணு பார்க்கப் போறது ஜெகன் அண்ணாவுக்குடா உனக்கில்லை” எனக் கேலி செய்ய, “இருந்தாலும் இன்னைக்கு ஹீரோ நான் தான்” என்றான் கெத்தாக.

வாய் பிளந்தவன், “அப்போ அந்த எட்டரை பஸ்…?” என மனோ கேட்பதற்குள் அவன் வாயை மூடிய விக்கி, “தெய்வமே, ஜெகனுக்கு மேரேஜ் முடியுற வரைக்கும் கொஞ்சம் மௌன விரதத்தைக் கடைப்பிடிக்கக் கூடாதா?” என்றான் பதறியபடி.

சிரிப்புடன், “அப்போ தெய்வத்துக்குத் தட்சணை..?” என கறாராகக் கேட்டான்.

அவன் கேட்டதும் தன் பையில் கைவிட்டு துழாவியவன், ஒரு நூறு ரூபாயை நீட்ட, அவன் கையிலே அடித்த மனோ, “இதெல்லாம் வேண்டாம், கொஞ்சம் அசென்மென்ட் வொர்க் இருக்கு அதை மட்டும் முடிச்சிக்கொடுத்தால் போதும்” என்றான் பெரிய மனதுடன்.

அவனை மேலும் பாவமுடன் பார்த்த விக்கி, “என் அசைன்மென்ட்ஸ் ஜூனியர் பொண்ணுங்க தான் செய்றாங்க, இதுல நீ வேறையா? சோதிக்காதீங்கடா என்னை..” என்றவன் புலம்ப, அடக்க முடியாத சிரிப்புடன் அவன் தோளில் தட்டினான் மனோ.

அருகே சீதா, மகள் கிருஷ்மிதாவை அதட்டிக் கொண்டிருக்க, அவள் கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தாள். அதைக் கவனித்த பாரி, “அடடே! கிருஷ்மி குட்டி, இந்த பட்டுப் பாவாடையில ரொம்ப அழகா இருக்காளே…” என அருகே சென்றார்.

“பாருங்க மாமா இவளை, தலை வாரும்போது தான் ஒரு டப்பா எண்ணெய்யை கொட்டிட்டா. சரின்னு கவுனைக் கழட்டி பட்டுப் பாவாடை போட்டு விட்டால் இப்போ வந்து அதுக்கு மேட்ச்சா நெயில் பாலிஷ் போட்டு விடணுமாம் இந்த பெரிய மனுஷிக்கு. எனக்கு எவ்வளவு வேலை கிடக்கு, அத்தை வேற இன்னும் தட்டு எடுத்து வைக்கலைன்னு கத்திக்கிட்டு இருக்காங்க, இவ என் கூட வம்பு பண்ணிக்கிட்டு இருக்கா” எனச் சீதா புலம்பினாள்.

“நீ போம்மா, நான் பார்த்துக்கிடுறேன்” என அனுப்பியவர், மெல்ல சோபாவில் அமர்ந்தபடி வாக்கிங் ஸ்டிக்கை கைகளிலிருந்து உருவி வைத்தார். சிறுமியின் புறம் திரும்பி, “கிருஷ்மி குட்டி, இப்பப் பாரு தாத்தா எவ்வளவு அழகா போட்டு விடுறேன்னு. இதுக்குப் போய் அழலாமா? புது சித்தியைப் பார்க்கப் போகும் போது இப்படியா அழு மூஞ்சியாவா இருப்ப? அழகா இருக்க வேண்டாமா?” என்றவர், மடியில் அமர்த்தித் தானே பொறுமையுடன் நடுங்கும் கைகளால் போட்டும் விட்டார்.

கணேஷூம் வர,  ஜெகனும் அவன் தந்தையும் கிளம்பி வந்தனர். ஒருவழியாகப் பெண்களும் தங்கள் வேலையை முடித்து வர, நல்ல நேரம் பார்த்து இரு காரில் அனைவரும் ராஜி வீடு நோக்கிச் சென்றனர்.

வாசலிலே ராஜியும் அவள் கணவன் பிரகாஷூம் வந்து நின்று வரவேற்க, அவர்களோடு வந்த அருளின் குடும்பத்தைப் பார்த்ததும் அவன் முகம் மாறியது. அவர்களின் வரவை அவன் எதிர்பார்க்கவுமில்லை, வரவால் மகிழவுமில்லை.

அவன் அப்படியே நின்றுவிட, ராஜி அவன் காலில் மிதிக்க, சட்டென உணர்வு பெற்றவன் அருள் இல்லை என்பதை அறிந்து கொண்டு அனைவரையும் வரவேற்றான்.

அனைவரும் உள்ளே செல்ல, ஹாலில் நின்று கொண்டிருந்த ராஜியின் மாமியார் பார்வதி அனைவரையும் வரவேற்று அமரும்படி உரைத்தார். அவருமே மொத்த குடும்பத்தையும்  தட்டுத் தாம்பூலத்துடன் எதிர்பார்த்திடவில்லை. அவர் சமையலறை நோக்கிச் சென்றிட, பிரகாஷின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு அன்னையின் அருகே சென்று அமர்ந்தாள் ராஜி.

“என்னம்மா இது? இப்படிச் சித்தப்பா குடும்பத்தையும் கூட்டிட்டி இத்தனை தட்டித் தாம்பூலத்தோட வந்து இருக்கீங்க?” எனக் காதருகே கிசுகிசுத்தாள்.

“பின்ன..நீ தானே பொண்ணு பார்க்க வரச் சொன்ன?” அவரும் மெல்லிய குரலில் கேட்டார்.

“அம்மா அதுக்குன்னு இப்படியா செய்வ? நம்ம வீட்டாளுங்க மட்டும் என்னைப் பார்க்கிற மாதிரி வந்து நலம் விசாரித்துவிட்டு என் மாமியார்ட மெல்ல விஷயத்தை ஆரம்பிக்கலாம்ல? இப்படி தடாலடியாவா வருவீங்க?” என குறைபட்டாள்.

முகம் சுணங்கியவர், “அப்போ உங்க வீட்டுல சொல்லவே இல்லையா?” என்றார் குரலில் சிறு பதற்றத்துடன். ஏனெனில் ஜெகன், கணேஷ், சீதாவுடன் நீயும் சென்று ஒருமுறை பார்த்து வா எனக் கணவர் சொல்லக் கேட்காது மொத்தக் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு தட்டுத் தாம்பூலத்தோடு பகட்டாக வந்தது அவர் தான்.

‘கணவர் வார்த்தையை ஒருமுறை கேட்டிற்க வேண்டுமோ?’ என நினைத்து விளக்கெண்ணெய்யைக் குடித்ததைப் போல் பத்மா முழிக்க, “நீங்க வருவீங்கன்னு தெரியும், இப்படி வருவீங்கன்னு தெரியாது, வாணி கூட சிம்பிளா சுடிதார்ல தான் இருக்கா” எனக் கையை பிசைந்தபடி உரைத்தாள் ராஜி.

அதற்குள் சமையலறையிலிருந்து கையில் ட்ரேயுடன் பார்வதி ஹால் நோக்கி வர, சட்டென ராஜி அன்னையின் அருகிலிருந்து எழ, “அதற்கென்ன ராஜி, எதார்த்தமா இருக்கையில தான் பொண்ணோட அழகே தெரியும், சுடிதார்லையே கூட்டிட்டு வாம்மா” என்றார் தேவகி.

ஆபத்பாந்தவனாய் வந்த வார்த்தைகளில் சித்தியை ஒரு நன்றிப் பார்வை பார்த்தவள், கணவரின் முறைப்பிலிருந்து தப்ப, வாணியின் அறை நோக்கி ஓடிவிட்டாள்.

“பார்த்து, மெல்லப் போ ராஜிம்மா…” அக்கறையாக மாமியாரின் குரல் அவளைப் பின் தொடர்ந்தது.

என்ன பேசுவதென்று தெரியாது வரவேற்றதோடு அமைதியாக நின்றுவிட்ட பிரகாஷ், மனதிற்குள் மனைவியை வாட்டிக் கொண்டிருந்தான்.

இப்படி அனைவரும் வருவார்கள் என முதலே சொல்லியிருந்தால் அவன் பக்கமும் இரண்டு பெரியவர்களை அழைத்திருப்பானே! இதைக் கூட மனைவி அவர் வீட்டினரோடு பேசி தெரிந்து வைத்திருக்கவில்லையே என்ற எரிச்சலை முகத்தில் காட்டாது அமைதியாக நின்றான்.

சீதாவும் தேவகியும் தங்களுள் பேசிக்கொண்டிருக்க, ஆண்கள் ஒருபுறம் அமர்ந்திருக்க மனோவும், விக்கியும் அவர்களுள் பேசிக்கொண்டிருக்க, ஜெகன் தன் அலைப்பேசியில் பார்வையைப் பதித்தபடி தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

உள்ளே சென்ற நொடி நேரத்தில் இசைவாணியை அழைத்துக் கொண்டு ராஜி வர, மகளின் கையில் ட்ரேயைக் கொடுத்த பார்வதி, அனைவருக்கும் கொடுக்கும் படி பார்வையால் சமிக்ஞை செய்தார்.

அலைபேசியில் கவனமாக இருந்த ஜெகன் முன் நிழல் படர, கண்ணாடிக் கிளாஸில் ஜூஸை நீட்டிய கரத்தை அதிர்ந்து பார்த்தவன் நீக்காத அதிர்வோடு சட்டென நிமிர்ந்து அவளை முழுதுமாய்ப் பார்த்தான்.

அதிர்ந்த அவன் பார்வை அசூகையாய் மாற, நொடிக்கும் குறைவான நேரம் என்னும் போதும் அவள் அதைச் சரியாக உணர்ந்துவிட, “நோ தேங்க்ஸ் நான் ஜூஸ் சாப்பிடுறதில்லை” என்ற மெல்லிய குரலோடு பார்வையைத் திருப்பிவிட்டான்.

பெரும் வலியின் சாயல் அவள் முகத்தில் வந்து நொடி நேரத்தில் பரவி மறைய, இறுகிய முகத்தோடு பின் நகர்ந்த இசைவாணி அன்னையின் பின் சென்று நின்றுகொண்டாள். உடைத்தே விட்டாள்.

கண்கள் இரண்டும் கலங்கத் தயாராக இருந்தது, இதழ்களை இறுக மூடி அழுகையை அடக்கியிருந்தாள். நிராகரிப்பின் வலி மின்சாரமாய் தாக்கியது, பழகிய வலி தான்.

ஆனாலும் வலி அவளை வலிக்கச் செய்து, அவளை வலுவிழக்க வைத்தது.

அவள் வந்து நின்ற இரண்டு நிமிடங்கள் முழுதும் அவளை முகம் மாறாது பார்த்திருந்தது தேவகி மட்டும் தான்.

“போ வாணி, ஒரு கப் காஃபி போட்டுட்டு வா” என மகளின் நிலை அறிந்து அவளை அங்கிருந்து அகற்றினார் பார்வதி.

அவள் அங்கிருந்து நகர்ந்துவிட, அவள் பிம்பம் தேவகியின் கண்ணிலிருந்து மறைய மறுத்தது. செதுக்கி வைத்த சிற்பம் போன்றே அளவான உடல்வாகும் அதற்கேற்ற உயரமும், படபடக்கும் இமையும் தாடையில் சிறு குழியும், கண்ணை உறுத்தாத உடையும் கண்ணைப் பறிக்கும் முக வடிவும்! குறையென்று சொல்லுவதற்கு அவள் நிறம் தவிர ஒன்றுமில்லை! தங்க நிற மேனியில் பதித்த வைரம் போலே ஆங்காங்கே வெண்ணிறத் திட்டுக்கள். வைக்டிலைகோ (Vitiligo).

ஜெகனின் செயலில் கொலைவெறியோடு ராஜியை முறைத்தான் பிரகாஷ், அவளோ மாமியாரின் பின் ஒளிந்து கொண்டு அன்னையை முறைத்தாள். யாரிடம் என்ன சொல்லுவது என்று தெரியாது பத்மா பரிதாபமாக அமர்ந்திருந்தார்.

பாரிவேந்தனும் கார்முகிலனும் தங்களுக்குள் பார்வை பரிமாறிக்கொள்ள, மனோவும் விக்கியும் ஜெகனின் இருபுறமும் தோள்களில் தட்டியபடி அமர்ந்திருந்தனர்.

“ஜூஸைக் குடிங்க அண்ணி…” என்ற பார்வதியின் மென்மையான குரலில், பத்மா தலையாட்ட, “நீங்க பொண்ணோட ஜாதகம் கொடுங்க, நாங்க எங்க குடும்ப ஜோதிடர்ட்ட காட்டிட்டு சொல்லுறோம்” எனக் கேட்டார் கார்முகிலன்.

“சரிங்க அண்ணே..” என்ற பார்வதி, பிரகாஷின் புறம் திரும்பி, “என் பீரோல பாப்பா ஜாதகம் இருக்கு எடுத்துட்டுவாப்பா..” என அனுப்பி வைத்தார்.

“நீங்க பார்த்து, குடும்பமாப் பேசிட்டே முடிவு சொல்லுங்க. ஒன்னும் அவசரமில்லை, வாணி இப்போ தான் படிப்பை முடித்து வந்திருக்காள், ராஜிக்கு குழந்தை பிறக்கவும் தான் வாணிக்குக் கல்யாணம் பத்திப் பேசுறதா இருந்தேன். ஆனால் ராஜி தான் கொஞ்சம் அவசரம்..” என்றவர் சிறு புன்னகையுடன் சமையலறை நோக்கிச் சென்றார்.

அதாவது உங்கள் மகளின் ஏற்பாடு தான் இதே தவிர, நீங்கள் நிராகரித்தாலும் எங்களுக்கு வருத்தமில்லை என்பதைத் தான் அவர் வேறுவிதமாக சொல்லிச் சென்றுவிட்டார்.

கணவரும் மாமியாரும் இல்லை என்றதும் மீண்டும் ராஜி அன்னையை நெருங்கினாள். ஜெகன் முகம் இறுக அமர்ந்திருந்தான். அவனிடம் தற்போது பேசினால் எரிமலையாய் வெடிப்பான் என நன்கு அறிந்தவள், பத்மாவிடம், “நீங்க அவளை என் கல்யாணத்துல பார்த்திருக்கீங்க தானே?” என தன் மீது தவறில்லை என்பது போல் குறிப்பிட்டாள்.

கணவரைத் தவிர்த்து சீதாவையும் பிள்ளைகளையும் பார்த்த பத்மா, “அன்னைக்கு மண்டபத்துல இருந்த கூட்டத்துல சரியா கவனிக்கலை ராஜிம்மா” என்றார் மெல்லிய குரலில்.

“நீ ஒருமுறை மொபைல்ல ஃபோட்டோவாது காட்டியிருக்கலாமே?” எனத் தேவகி கேட்க, “வீட்டிற்கு வந்த அன்றே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே?” எனக் கண்டிப்புடன் கேட்டார் கார்முகிலன்.

“எல்லாருக்கும் தெரியும்னு நினைச்சேன்” என உள்ளே சென்றுவிட்ட மெல்லிய சிணுங்கல் குரலில் உரைத்தவள், பார்வதியின் வரவை பார்த்து எழுந்து நின்றாள்.

கையில் காஃபியோடு வந்தவர், அதை ஜெகனிடம் கொடுக்க, அமைதியோடு அவன் வாங்கிக்கொண்ட நேரம் எதிர்ப்புற அறையிலிருந்து பிரகாஷ் வந்தான்.

பிரகாஷ் ஜாதகத்தைக் கொடுக்க, கணேஷ் வாங்கிக்கொள்ள, அனைவரும் விடைபெற்றுக் கிளம்பினர்.

அனைவரும் காரில் ஏறிவிட, கடைசியாக வந்த ஜெகன் அன்னையின் கையைப் பற்றி நிறுத்தினான்.

“அம்மா இங்க பாரு, வீட்டுக்குப் போனதும் இந்த பொண்ணைத் தான் கட்டிக்கிடணும்னு எமோஷனல் பிளாக் மெயில் எதுவும் செய்யக் கூடாது சொல்லிட்டேன். இந்த பொண்ணை எப்படிம்மா என்னால கட்டிக்க முடியும்? நாளை பின்ன விருந்து, விஷேசம், பிரெண்ட்ஸ், பார்ட்டின்னு வெளியே போகும் போது இந்த பொண்ணை என் மனைவின்னு கூட்டிட்டு போக முடியுமா சொல்லு? அதைவிட சகிச்சிக்கிட்டு இவ கையால ஒரு கிளாஸ் தண்ணீர் வாங்கிக்கூட என்னால இப்போ குடிக்க முடியலையேம்மா! இவ கூட வாழ்க்கை முழுதும் எப்படிம்மா..?” என அவன் ஆற்றாமையில் கத்த, “ஷ்..ஏதா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கிடலாம், வாடா” என இழுத்துச் சென்றார் பத்மா.

இவர்கள் நின்று பேசிய ஜன்னலுக்கு உட்புறம் கண்ணீரோடு நின்றிருந்தாள் இசைவாணி.

Advertisement