Advertisement

அத்தியாயம் 01

காலை எட்டுமணி, நெற்றியில் சிறு கீற்றாய் விபூதியும், குங்குமமும் இட்டுக்கொண்டு, வெள்ளை நிற மேல்சட்டையும் கருப்பு நிற கால்சட்டையும் அணிந்தபடி பூஜையறையிலிருந்து வெளி வந்தான் அருள்வேலவன்.

“அம்மா கடைக்கு போயிட்டு வாரேன்” எனக் குரல் கொடுத்தவாறு வெளிவாசல் நோக்கிச் சென்றவன் ஹாலில் அமர்ந்திருந்த ராஜேஸ்வரியைக் கண்டுகொண்டான்.

“என் காதலுக்கு எதிரியே நீ தான், என்னைக் கேள்வி கேட்க நீ யாரு? நீ என்ன என் கூடப் பிறந்தவனா?’

என்றோ அவள் கேட்ட கேள்விகள் இன்றும் அவன் நினைவில் வந்து நெஞ்சைத் தைத்தது.

அவனைக் கண்டுகொண்டு அவளும் எழுந்து நிற்க, “வா ராஜிம்மா நல்லாயிருக்கியா?” என நலம் விசாரித்தான்.

“நல்லாயிருக்கேன் அண்ணா, கடைக்கு கிளம்பிட்டியா?” என்க, ஆமென்ற தலையசைப்போடு வெளியேறினான்.

தன் கணவனைப் பற்றி ஒருவார்த்தை கேட்கவில்லையே என மனதில் குறைபட்டுக் கொண்டாள். அவன் விலக்கி வைக்கவில்லை, விலக்கி வைக்கும்படி தன் கணவன் தான் நடந்து கொண்டான் என அறிந்தும் அவள் காதல் மனம் ஏற்கவில்லை.

சமையலறையிலிருந்து சித்தி அழைக்கவே எழுந்து உள்ளே சென்றாள்.  அவள் கையில் ஹார்லிக்ஸ் கலந்த கோப்பையொன்றைக் கொடுத்த தேவகி பேசியவாறே காலை உணவைத் தயார் செய்து கொண்டிருந்தார்.

“மாமியார் வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா? செக்கப் போனியா? டாக்டர் என்ன சொன்னாங்க? ஸ்கேன் பார்த்தியா? குழந்தை எப்படி இருக்காமாம்?” எனத் தேவகி கேட்க, குடித்து முடித்து கோப்பையைக் கீழே வைத்தாள் ராஜி.

“நல்லாயிருக்காங்க சித்தி, மூனு மாசம் தானே முடிச்சியிருக்கு இந்த மாசம் செக்கப்க்கு போகும் போது தான் ஸ்கேன் பார்ப்பாங்க சித்தி”

“மாப்பிள்ளை வாராமல் நீ மட்டும் வந்திருக்க என்ன விஷயம்?”

“என் நாத்தனாருக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு, அதான் நம்ம ஜெகன் அண்ணாவுக்குக் கேட்கச் சொல்லி அப்பாகிட்ட சொல்ல வந்தேன் சித்தி”

“நல்ல விஷயம் தான்,  அப்படியே உங்க சொந்தத்துல பொண்ணு இருந்தால் அருளுக்கும் சொல்லுடி” என்க, மரியாதைக்குத் தலையாட்டி வைத்தாள். ஜெகனும் அருளும் சமவயதினர் இருவருக்குமே பெண்பார்க்கப் பேச்சுவார்த்தையை வீட்டில் தொடங்கியிருந்தனர்.

காலை எட்டு முப்பதிற்குக் கல்லூரி கிளம்பி வந்தான் தேவகியின் இளையமகன் மனோஜ். ராஜியைக் கண்டதும் பேசியவாறு இருவரும் காலை உணவினை முடிக்க, அவளை வீட்டில் விட்டுச் செல்லும்படி இருவரையும் அனுப்பி வைத்தார் தேவகி.

நடந்து செல்லும் தூரம் தான் ஒரே தெருவில் மறுமுனையில் இருக்கும் வீடு, அவளை விட்டதும் மனோவின் பைக்கில் தாவியேறினான் ராஜியின் இளைய அண்ணன் விக்னேஸ்வரன். இருவரும் ஒரே கல்லூரியில் இறுதியாண்டு முதுநிலை வணிக நிர்வாகம் பயிலுகின்றனர்.

“ஏழுகழுதை வயசாகுது இன்னும் குரங்குச் சேட்டையை விடுறானா பாரு, மனோ இவனை போற வழியில ஏதாவது ஜூல தள்ளிவிட்டு போ” என இருவரிடமும் உரைத்தாள் ராஜி.

“ஆமா சொல்லிட்டாப்பா, குரங்கு கூட்டத்துக்கே தலைவி, போ..போய் பொங்கல் காலியாகிறதுக்குள்ள இரண்டாவது தடவை கொட்டிக்கோ. ஒரே ஊருல இருக்கப்போய் சும்மா சும்மா அம்மா வீட்டுக்கு வந்திடுறது,  நீ கிளம்பு டா” என்றவன் மனோவின் தோளில் தட்டினான்.

ராஜியை விட ஒரு வயது மட்டுமே மூத்தவர்கள். ஆதலால் அவளிடமிருந்து மரியாதையைச் சிறிதும் எதிர்பார்க்க முடியாது போனது.

“டேய், சர்வீஸ் விட்ட உன் பைக்கை இன்னுமா நீ செட்டுல இருந்து எடுக்கல?” என மனோ கேட்க,

“என்ன அவசரம் மெல்ல எடுத்துக்கலாம்” என்றான் விக்கி.

“ஏன் பெட்ரோல் காசை மிச்சம் பிடிக்கிறியாக்கும்? அப்படி ஒன்னும் நீ கஞ்சனில்லையே!”

“ஏன் நான் என்ன புளி மூட்டை மாதிரியா இருக்கேன்? என்னை கூட்டிட்டு போக அவ்வளவு கஷ்டமா? அப்படி ஒன்னும் நீ கஷ்டப்பட்டு உன் பைக்ல கூட்டிட்டு போக வேண்டாம், இதோ இந்த பாஸ்டாப்புல இறங்கிக்கிறேன்” என்றவாறு குதிக்க முயல, மனோஜ் வண்டியை நிறுத்தி விட்டான்.

“டேய் பரதேசி, விழுந்து வாரி பல்லை பேத்துக்காத..” மனோ திட்டிக்கொண்டிருப்பதைக் காதில் வாங்காமல், தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு தாடையில் தடவிக்கொண்ட விக்கி, “இன்னுமா எட்டரை பஸ் வரலை, இல்லை போயிருக்குமா?” எனப் புலம்பினான்.

“என்னடா நானும் பார்க்கிறேன், ஒரு வாரமா தெருமுக்கு வரை என்னோட பைக்ல வந்துட்டு இங்கிருந்து எட்டரை பஸ்ல வாரையே என்ன விஷயம்?” என்றான் சந்தேகப் பார்வையோடு.

“தம்பி மனோ, விஷயம் என்னன்னு சொன்னா வீட்டுல பேசி கல்யாணத்தை முடிச்சி வைச்சிட்டுவியா என்ன?” என்றவன் கேட்க, போக்ரான் அணுகுண்டே தன் தலையில் விழ வருவது போல் மனோ அதிர்ந்து பார்த்து பார்க்க, அதே நேரம் பேருந்து வந்து நிற்கவும் அதில் ஏறிக் கொண்ட விக்கி, “டேய் எனக்கு முன்ன காலேஜ் வந்து சேருடா” எனக் கையசைத்து விட்டுச் சென்றான்.

இவன் போற போக்கே சரியில்லை, எந்த ஏழரை பின்னப் போய் எமலோகத்துக்கு டிக்கட் வாங்கப் போறான்னு தெரியலையே! இது மட்டும் அண்ணனுக்கு தெரிச்சது நம்ம தோலையும் சேர்த்து வைச்சி உரிச்சிடும் என நொந்துக்கொண்டு வாகனத்தை மிதித்தான் மனோ.

பள்ளிப்படிப்பிலிருந்து இருவரும் இணை பிரியாத ஜோடிகள், பிரியத்தோடு அல்லாது அவர்களைக் கட்டி வைத்தது அருள் தான். என்ன தான் இருவரும் எதிர் வேறு குணமாக இருந்தாலும் அருள் மீதான மரியாதையும், சகோதரர்கள் என்ற உறவையும் தாண்டி நல்ல நட்பு இருந்தது இருவருக்குள்ளும்.

சிதம்பரத்தின் கடை வீதியில் இருக்கும் தேவகி சில்க்ஸ்ஸை காலையிலே திறந்து அமர்ந்திருந்தான் அருள். சில நிமிடங்கள் ஆண் பணியாளர்கள் வேலைக்கு வர, ஒரு மணி நேரத்தில் பெண் பணியாளர்களும் வேலைக்கு வரத் தொடங்கினர்.

சிசிடிவி வீடியோ காட்சிகளாக அனைத்தையும் அலுவலக அறையில் தன் முன் இருக்கும் கணினியில் பார்த்துக்கொண்டிருந்த அருள் பணியாள் ஒருவனை உள்ளே அழைத்து, “தேர்ட் பிளோர்ல வேலை பார்க்கிற ரமேஷை வரச்சொல்லு மணி” என்றான்.

சில நிமிடங்களில் அவனும் வர, ஒரு உக்கிரப்பார்வை பார்த்தான். அந்த பார்வையில் சர்வமும் நடுநடுங்க வார்த்தை தொண்டை தாண்டி வராது நின்றிருந்தவன், “சார் நான் எதுவும் செய்யலையே, நேத்து லீவ்ல இருந்தேன் சார்” என வாய் குளற, உளறினான்.

மறுநிமிடம் எழுந்த அருள் அவன் கன்னத்தில் ஒரு அறைவிட, உதடுகளின் இரத்தம் வழிய தலை சுற்றி கீழே விழுந்து எழுந்தான் ரமேஷ். உடல் மொத்தமும் நடுநடுங்க, குளிர்சாதன அறையிலும் வியர்வை குளியலோடு நின்றான்.

“நேத்து லீவ் போட்டு எங்கடா போன?”  அதட்டலாக அழுத்தமாக வந்தது குரல்.

நடுங்கியவன் தொண்டை அடைக்க, “அதான் லீவ் கேட்கும் போதே சொன்னேனே சார் அம்மாவை ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போறேன்னு….” என இழுத்தவனுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை மீண்டும் அருள் விட்ட அறையில்.

சிவங்க முகத்தோடு, “பொய் சொல்லுவியோ, பொய் சொன்ன தோல உரிச்சிடுவேன் பார்த்துக்கோ”  என்றான் மிரட்டலாக.

பொய் சொல்லவும் இயலாது உண்மையைச் சொல்லும் தைரியமும் இல்லாது மௌனமாய் நின்றான் ரமேஷ். முன் கோபமே அருள்வேலவனின் அடையாளம், வாய் பேசும் முன் அவன் கை பேசியிருக்கும்.

“ஸ்கூல் படிக்கிற பொண்ணு பின்னாலையே பூவை தூக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்க, அதுவும் அந்த பொண்ணு விலகிப் போகும் போதும் வழிய மறிச்சி வம்பு பேசுற? எங்கேயிருந்து வந்ததுடா இந்த தைரியம்? அவங்க வீட்டுல சொல்ல மாட்டானு நினைப்பா? இல்லை உன்னைக் கேள்வி கேட்க அப்பன் உசுரோட இல்லையேங்குற தெனாவட்டா?”

“இல்லை சார் நேத்து அவளுக்குப் பிறந்தநாள் அதான் விஸ் பண்ணி பொக்கே கொடுக்கப் போனேன்”

“யாருடா அவ? உன் அக்காளா தங்கச்சியா நீ வாழ்த்துச் சொல்ல? உனக்கென்ன மனசுல மன்மதன்னு நினைப்பா? என்ன வயசு இருக்கும்டா அந்த பொண்ணுக்கு? பதினைந்து, பதினாறு வயசு சின்னப்புள்ளைடா அது! கலர்கலரா சட்டையைப் போட்டுக்கிட்டு பூவும், சாக்லெட்டும் கொடுத்து சின்ன பிள்ளைங்க மனசுல சலனத்தை உருவாக்காதீங்கடா.

நாலு நல்ல விஷயம் தெரிச்சிக்கட்டும்னு பெத்தவுங்க படிக்க அனுப்புனா உன்னை மாதிரி தருதலைக்க திரும்பவும் அவங்களை வீட்டுக்குள்ளையே அடைக்க வச்சிடுவீங்க போல இருக்கு, ச்சே.. இனி நீ ஒரு நிமிஷம் இங்க இருக்கக்கூடாது வெளியே போடா”

பதறிய ரமேஷ் “சார், சார் இனி தெரியாமக் கூட இந்த மாதிரி தப்பைப் பண்ண மாட்டேன், மன்னிச்சிடுங்க சார்” எனக் கெஞ்சினான்.

வெளியில் கெஞ்சிய போதும் என் சொந்த விஷயத்தில் இவன் ஏன் தலையிடுகிறான் என்ற ஆத்திரமும் இருந்தது. ஆனாலும் வேலை முக்கியமே அதற்காகக் கெஞ்சினான்.

“யாருக்குடா வேணும் உன் மன்னிப்பு? வேற எவ கூட சுத்திக்கிட்டு இருந்திருந்தாலும் உன்னைக் கேள்வி கேட்டிருந்திருக்க மாட்டேன் தான், இதுல ஒரு சின்ன பிள்ளையோட எதிர்காலமிருக்கேன்னு தான் கேட்குறேன். இங்க பொண்ணுங்களும் வேலை பார்க்கிறாங்க அவங்க பாதுகாப்புக்கு நான் தான் பொறுப்பு. உன் பொறுக்கித்தனத்தை கண்ணால பார்த்த பின்னும் இனி எதை நம்பி உன்னை இங்க வேலைக்கு வைச்சுக்கிட்டு இருக்க சொல்லு?”

“இல்லை சார் என்னைப் பத்தியும் என் குடும்பத்தைப் பத்தியும் உங்களுக்குத் தெரியுமே சார், எனக்கு வேலை போனா வீட்டுல ரொம்ப கஷ்டமாயிருக்கும் சார், ப்ளீஸ் சார்”

“ஏன் தெருத்தெருவா சுத்தும் போது குடும்பம் ஞாபகத்துக்கு வரலையோ? உங்க அப்பா ரொம்ப நல்ல மனுஷன்டா. அவருக்காகத் தான் சும்மா விடுறேன், நம்ம மரக்கடை குடோனுக்கு போ, மூர்த்தி சார்கிட்ட நான் சொல்லிக்கிடுறேன்”

“சார், ப்ளீஸ் சார் இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க..”

“இப்போ நீ கிளம்புறையா இல்லை இன்னும் இரண்டு அறை விடவா?” என்ற அருளின் மிரட்டலில் நடுங்கியே ஓடிவிட்டான்.

அதன் பின் மேனேஜரை அழைத்து அன்றைய வேலைகளைப் பற்றிக் கூறிவிட்டு, சப்ளையருக்கு அழைத்து வேண்டியவைகளை ஆடர் சொல்லிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினான். வீட்டில் சென்று காலை உணவினை முடித்துவிட்டு தங்கள் பர்னிச்சர் ஷோ ரூம்க்கு கிளம்பிவிட்டான்.

ராஜி வீட்டிற்குள் செல்ல உணவு மேசையில் பெரிய அண்ணன் கணேஷும் தந்தை கார்மேகமும் அமர்ந்து உண்டுகொண்டிருந்தார். சமையலறையில் இருந்த அண்ணி சீதாவையும் அன்னை பத்மாவையும் அழைத்தாள் ராஜி.

அனைவரும் வர, “என்ன விஷயம் ராஜிம்மா? இப்படி எல்லாரையும் ஒன்னு கூட்டி வைச்சிட்டு எங்க முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்க” என தந்தை கேட்டார்.

“அப்பா என் நாத்தனார் படிப்பு முடிச்சி வந்துட்டாள், அவர் வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு. நீங்க என் கல்யாணத்துல வாணிய பார்த்திருப்பிங்களே? அதான் நம்ம ஜெகன் அண்ணாவுக்கு கேட்கலாமாப்பா” என விஷயத்தை ஆரம்பித்தாள்.

சற்றே கார்மேகம் யோசித்துக்கொண்டிருக்க, “மாப்பிள்ளைகிட்ட கேட்டுட்டியா ராஜிம்மா?” என்றான் கணேஷ்.

“இல்லண்ணா வீட்டுல உங்க எல்லார் விருப்பமும் என்னன்னு கேட்டுட்டு சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்”

“சரியா வருமா ராஜி? உன் கல்யாணம் அப்போவே என் தம்பிக்கும் அருளுக்கும் பிடிக்கலையே, இப்போ திரும்பவும் அதே வீட்டுல எப்படி சம்பந்தம் வைச்சிக்க?” என்றார் கார்மேகம்.

ராஜியை திருமணம் செய்து கொடுக்கும் போதே இவர்கள் வீட்டில் யாருக்கும் விருப்பமில்லை, எல்லாம் அவள் பிடிவாதத்தில் தான். அப்படியிருக்க மீண்டும் அந்த வீட்டிலிருந்து பெண் எடுப்பாதா என்ற யோசனை.

ராஜிக்கு முகமே வாடிவிட்டது, தன்னை விடவும், தன் புகுந்தகத்தை விடவும் அருளைப் பெரிதாக நினைப்பதும் அவனைப் பற்றி யோசிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் வீட்டில் தான் இரண்டாம் பட்சமாகிவிட்டதாக எண்ணினாள். அவள் முக வாட்டத்தை அன்னை பத்மா சரியா கவனித்து விட்டார்.

“இப்போ என்ன முடிவா பண்ணிட்டோம்! ஒருதடவை போய் பார்த்திட்டு  இரண்டுபேருக்கும் பிடிச்சா மேல பேசிக்கலாம், என்ன இருந்தாலும் அது நம்ம சம்பந்தி வீடு தானங்க” என்றார் பத்மா.

பெண்பார்க்கச் செல்லுவது என்ன சாதாரண விஷயமா? பார்த்த பின் வேண்டாமென்றா சொல்ல இயலும்! அதுவும் சம்பந்தம் செய்த வீட்டில் அமர்ந்து கொண்டு என்ற யோசனையிலிருந்தார்.

“மாப்பிள்ளை இதுக்கு ஒத்துக்கணுமே..?” என்றவரின் குரலில் இன்னும் சந்தேகம் தான்.

“உங்களுக்கு எல்லாம் விருப்பம்னா சொல்லுங்க அவர்கிட்ட நான் பேசிக்கிடுறேன்” சட்டென உரைத்தாள் ராஜி.

கார்மேகம் இன்னும் யோசனையோடு இருக்க, “ஏதா இருந்தாலும் யோசிச்சுப் பண்ணுங்கப்பா நமக்கு மாப்பிள்ளையும் முக்கியம் அருளும் முக்கியம்” என்ற கணேஷ் எழுந்து சென்றான்.

கணவர் இன்னும் அமைதியாகவே இருக்க, “சரி ராஜி, அப்போ இந்த வார கடைசில எல்லாரும் வாரோம், பார்த்துட்டுப் பேசிக்கிடலாம். உன் வீட்டுல சொல்லிடு” என பத்மா முடிவாகச் சொல்ல, சரியென்று தலையாட்டினாள் ராஜி.

Advertisement