நலம் விசாரிப்பு முடிந்தவுடன், “தம்பி போன தடவை வெள்ளம் வந்ததுக்கே… இன்னும் நிவாரணப் பணம் கிடைக்கலை… அடுத்த மழையும் வரப் போகுது.” என்று ஒருவர் சொல்ல…
“திங்கள்கிழமை தென்காசிக்கு போற வேலை இருக்கு. நான் அப்படியே அங்க ஆபீஸ் போய் என்ன நிலவரம்னு விசாரிச்சிட்டு வரேன்.” என்றான்.
“எதோ நீ இருக்கிறதுனால எங்க பொழப்பு ஓடுது. நீ மட்டும் இல்லைனா… இதெல்லாம் எங்களுக்கு யார் செய்வா” என்று ஒருவர் சொல்ல…
“எனக்கும் தானே வேலை ஆகணும். நான் உங்களுக்காக மட்டும் போகலை.” என்றவன், அந்தப் பெரியவரை அனுப்பிவிட்டு உள்ளே வர…
“நல்லா ஊர் வேலை எல்லாம் பாரு. நான் சொல்றதை மட்டும் கேட்டுடாத.” என் அவனின் அம்மாவின் பேச்சுக் காதில் விழாதது போல உணவு மேஜையில் உட்கார்ந்தவன், தோசையைப் பிட்டு வாயில் வைத்தபடி, “தீபிகா சாப்பிட்டாளா?” என்று கேட்க… இவன் மட்டும் பதில் சொன்னனா என்ன? அதனால் அவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தார் போல… அதுவும் பதில் தெரிந்து கொண்டே கேட்டால் அவரும் என்ன செய்வார். அதனால் சிவகாமி அமைதியாக இருந்தார். லிங்காவும் அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றான்.
அடுத்த அரை மணி நேரத்தில் வாயிலில் சின்ன டெம்போ வந்து நிற்க… அதற்கு அடுத்த அரை மணி நேரத்தில், அதில் இருந்த சாமான்களை இருவர் மாறி மாறிக் கொண்டு வந்து மேலே வைத்துவிட்டு சென்றனர்.
லிங்கா பைக்கில் வந்தவன், வழியில் நின்ற வாகனத்தைப் பார்த்து, யாரோ எதிர் வீட்டிற்குப் புதுசா குடி வர்றாங்க போல என நினைத்துக் கொண்டு சென்றான்.
யாதவி பெரிய பொருட்களை உரிய இடத்தில் அப்போதே வைக்கச் சொல்லி பார்த்துக் கொண்டாள். கொஞ்ச சாமான்கள் தான். அதனால் வேலை சீக்கிரமே முடிந்து விட்டது. அவர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தவள், அவள் சாமான்களில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை எடுத்து வீடு சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
இங்கே வந்ததும் கடையைத் தேடி அலைய முடியாது என்று அங்கேயே எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள்.
ஏற்கனவே வீடு சுத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் வீட்டை சுத்தம் செய்துவிட்டு குளித்து விட்டு வந்தவள், அப்போது நல்ல நேரம்தான் என்பதால்… முதலில் சாமி படத்தை எடுத்து வைத்து, அதன் முன் உப்பு மஞ்சள் வைத்து விளக்கேற்றி வணங்கினாள்.
வாங்கி வந்த பாலை முதலில் காய்ச்சி சாமி படத்தின் முன்பு வைத்துவிட்டு, கற்பூரம் காட்டியவள், பிறகு அதை அருந்தி விட்டு, முதலில் சமையல் அறை பொருட்கள் இருந்த அட்டைபெட்டியை பிரித்து உரிய இடத்தில், துணி கொண்டு துடைத்து விட்டு பிறகு அடுக்க ஆரம்பித்தாள். அதை முடித்த போது மிகும் கலைத்து போயிருந்தாள்.
அதிகாலை எழுந்தது, அலைச்சல், வேலை என உடம்பு களைத்துப் போனது. பசிக்க வேறு செய்ய… வெளியே சென்று உண்ண இப்போது முடியும் போலத் தோன்றவில்லை.
குக்கரில் சாதம் வைத்து, தயிரை போட்டு ஊறுகாயை தொட்டுக் கொண்டு உண்டவள், பையில் இருந்து போர்வையை எடுத்து, தரையில் இருந்த மெத்தையில் விரித்து விட்டு படுத்துக் கொண்டாள்.
படுத்தது தான் தெரியும், உடனே உறக்கத்திற்குச் சென்றிருந்தாள். அவள் கைபேசியின் அழைப்பில் தான் விழித்தாள். வீடே இருட்டாக இருக்க… ஜன்னல் வழி லேசான வெளிச்சம் தெரிந்தது.
அடக்கடவுளே இப்படியா தூங்குவோம் என்று நினைத்தவள், கைபேசியை எடுத்துப் பார்க்க… அவளது தங்கை தான்.
“என்ன டி அங்க ஒன்னும் பிரச்சனை இல்லை தான.” என்றால் எடுத்ததும்,
“காலையில தான கா பேசின… இங்க ஒன்னும் பிரச்சனை இல்லை… நீதான் புது இடத்துக்குப் போயிருக்க. எப்படி இருக்கு?”
“நல்லா இருக்கு. சென்னை வெயில்ல இருந்திட்டு இங்க இருக்கவே குளுகுளுன்னு இருக்கு. அதுதான் படுத்து நல்லா தூங்கிட்டேன். நீ எழுப்பலைனா காலையில வரை தூங்கி இருப்பேன் போல…” என்றவள், மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள்.
முகம் கழுவி விட்டு வந்து மின்விளக்கை போட்டவள், சாமி படத்தின் முன்பிருந்த விளக்கையும் ஏற்றிவிட்டு, கையில் டீயுடன் வெளியே பால்கனிக்கு வந்து நின்று கொண்டாள்.
எதிரே பெரிய வீடு கார்பார்கிங்கோடு இருந்தது. வாயிலில் லிங்கா பி. ஏ. பி. எல்., என போர்ட் இருக்க.. அவன்தான் காலையில் தான் பார்த்த ஆள் என்று அவளுக்கு எப்படித் தெரியும். யாரோ வக்கீல் என்று நினைத்துக் கொண்டாள். பக்கத்தில் ஒரு பெரிய காலி மனை இருந்தது. அதில் சிலர் விளையாடிவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
சரி வேலையைப் பார்ப்போம் என நினைத்தவள், முதலில் இட்லிக்கு ஊரப் போட்டுவிட்டு, அடுத்துப் படுக்கை அறையில் அவள் அலமாரியில் துணிகளை எல்லாம் எடுத்து வைத்தாள். கைகள் பாட்டுக்கு வேலை செய்தாலும், மனம் ஒரு நிலையில் இல்லை. தான் எந்தத் தைரியத்தில் இங்கே வந்திருக்கிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை.
எல்லாம் அடுக்கி முடித்துவிட்டு, இன்னும் வாஷிங் மெஷின் மாட்டாததால்… அதற்கு ஆள் தான் வரவேண்டும் என்பதால்… அழுக்கு துணிகளைக் கையில் துவைத்து காயப்போட்டு விட்டு, மதியம் வைத்த சாதத்தையே உண்டுவிட்டு, கிரைண்டரில் மாவு அரைத்தாள்.
எல்லாம் முடித்துப் படுக்கை அறைக்கு வந்தபோதுதான் இன்னும் ஜன்னலுக்குத் திரைசீலை மாட்டவில்லை என்பது தெரிந்தது. கண்ணாடி ஜன்னல் என்பதால், அந்தப் பக்கம் இருந்து பார்த்தால் தெரியும். திரைசீலை போடாமல் இரவு உறங்க முடியாது. அதை எதில் வைத்தோம் எனத் தேட ஆரம்பித்தாள்.
எதிரில் இருக்கும் லிங்காவின் வீட்டு மாடியில், பின்பாதி மட்டுமே கட்டிடம், முன்பாதி இடத்தில் மழை நீர் விழாமல் இருக்க… கேரளா ஓடு போட்ட தளம், அதில் செடிகள், உட்கார இருக்கைகள் எல்லாம் இருக்கும். இரவு உணவு உண்டு மாடிக்கு வந்தவன், எப்போதும் போல நடைபயில… எதிர்வீட்டின் ஜன்னலில் வெளிச்சம் தெரிய… அவன் பார்வை அங்கே சென்றது.
அப்போது கையில் திரைசீலையுடன் ஜன்னல் அருகே வந்த யாதவியை பார்த்தான். அவன் நின்ற இடம் இருட்டாக இருந்ததால்… யாதவிக்கு அவனைத் தெரியவில்லை. அவள் திரைசீலையை அங்கிருந்த கம்பியில் மாட்ட ஆரம்பித்தாள்.
காலையில் அவளைப் பார்த்ததுதான். பிறகு அவளைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. இப்போது எதிர்வீட்டில் பார்த்ததும், ஓ இவங்க தான் புதுசா குடி வந்தவங்க போல என நினைத்துக் கொண்டான். வேறு எந்த ஆராய்ச்சியும் அப்போது தோன்றவில்லை.
உறக்கம் வரும்வரை வேலை பார்த்துக் கொண்டே இருந்த யாதவி, பிறகு அசதியில் படுத்து உறங்கி விட்டாள்.
காலை எழுந்ததும் முன்தினம் அரைத்த மாவை எடுத்து குளிர்சாதன பெட்டியில் பத்திரப்படுத்தியவள், அவள் வேலைகளை முடித்துக் குளித்துவிட்டு வந்தவள், கீழ் வீட்டினர் வேலைக்குச் சென்று விடுவார்கள் என்பதால்… அப்போதே அவர்களைப் பார்க்க சென்றாள்.
அவளைப் பார்த்ததும் அந்த வீட்டு உரிமையாளர் ஜெயந்தி வெளியே வர… “எனக்குத் தென்காசியில கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு அப்படியே சென்னை போயிட்டுச் சனிக்கிழமை காலையில வந்திடுறேன். அப்போதான் திங்கள் கிழமையில இருந்து வேலைக்குப் போக சரியா இருக்கும்.” என,
“சரி…” என்றவர் வேறு எதுவும் வேண்டுமா என்று கேட்க…
வாஷிங் மெஷின் இணைக்க வேண்டும் என்றதும், சரி ஆள் பார்த்து சொல்றேன் என்றவர், வீட்டிற்கு வந்து பசும் பால் ஊற்றுபவரின் எண்ணையும் கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு யாதவி மாடிக்கு சென்றாள்.
மிச்சம் மீதி இருந்த வேலைகளையும் முடித்துக் கொண்டு பதினோரு மணி போலகாலை உணவாக தோசையை உண்டுவிட்டு தென்காசி கிளம்பி சென்றாள்.
அங்கே அவள் முடிக்க வேண்டிய வேலைகள் சில இருக்க. அதெல்லாம் முடித்து, அவள் அலுவலகம் எல்லாம் சென்று பார்த்துவிட்டு, மாலை அங்கிருந்தே பஸ்சில் சென்னைக்குச் சென்றாள்.
அன்றிரவு உணவு பரிமாறியபடி சிவகாமி மகனிடம், “எதிர்வீட்ல யாரோ புதுசா குடி வந்திருகாங்க. என் கண்ணுல ஒரு பொண்ணு மட்டும் தான் தட்டுபட்டா… வேற யாரும் இருக்கிறது போல இல்லை.” என்றார்.
“தனியா இருந்தா லேடீஸ் ஹாஸ்டல் இது மாதிரிதான் போவாங்க. இப்படி தனி வீடு எடுத்து இருக்க மாட்டாங்க. கண்டிப்பா வேற யாரும் கூட இருப்பாங்க. கல்யாணம் கூட ஆகி இருக்கலாம்.” என்றான் லிங்கா.
“நீ பார்த்தியா அந்தப் பெண்ணை?”
“ஆமாம் நான் வந்த பஸ்ல தான் வந்தாங்க. பார்த்தா கல்யாணம் ஆன மாதிரியும் இருந்தது. ஆகாத மாதிரியும் இருந்தது.”
லிங்கா அன்றிரவு மாடியில் உலாவியவன், எதிர்வீட்டு மாடி இருளில் மூழ்கி இருப்பதைப் பார்த்ததும், “இப்போ தானே குடி வந்தாங்க. அதுக்குள்ள எங்க போனாங்க.” என நினைத்துக் கொண்டான்.