எனக்கென வந்த தேவதையே

அத்தியாயம் 9

சிவகாமி மகனோடு பேசுவதே இல்லை. அவன் சென்று அவர் அண்ணனிடம், நான் பேசியது தப்பு என்று மன்னிப்பு கேட்டு விட்டு வர வேண்டுமாம். பாக்கியம் வேறு, “உங்க அண்ணன் ரொம்பக் கோபமா இருக்கார் அண்ணி.” என இன்னும் ஏற்றி விட்டார்.

இவர்கள் யாதவியை என்ன பேசினார்கள் என்று சொல்லவில்லை. லிங்கா நரசிம்மனை பேசியதை பற்றி மட்டும் மற்ற உறவினர்களிடம் வத்தி வைத்தனர்.

நல்லதுக்கே இந்தக் காலத்தில காலம் இல்லை.” என்று புலம்ப… யாரோ ஒரு பெண்ணிற்காக, குடும்பத்தில் பெரியவரை லிங்கா இப்படிப் பேசியது சரி இல்லை என்று மற்ற உறவுகளும் நினைக்க… சிலர் அதை லிங்காவிடமே சொல்லிக்காட்ட… அவன் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தான்.

தீபிகாவும் சிவகாமியிடம் பேசி பார்த்தாள். “அண்ணனுக்குப் பிடிச்சா விடுங்களேன் மா… என் வீட்டுக்காரர் வேற உங்க மேலதான் தப்பு சொல்றார்.” என்றதும்,

அவர் வீட்ல நடந்தா… அவர் இப்படிப் பேசுவாரா… ஜாதகம் பார்த்து, வீட்ல பேசி முறைப்படி செஞ்சு வச்ச கல்யாணமே நிலைக்கலை. அதுதான் அப்படினா… இப்போ இவனே பார்த்திருக்கான் பாரு ஒரு பொண்ணு, எங்ககிட்டயே அவ்வளவு திமிரா பேசுறா… நாளைக்குக் கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி இருப்பான்னு யாருக்கு தெரியும்.”

இவ இப்படிப் பேசுறதுனாலதான் அவ புருஷன் போடின்னு சொல்லிட்டான் போல… உங்க அண்ணனுக்கு முன்னாடி வாச்சது தான் சரி இல்லை… இனி பண்ற கல்யாணமாவது நல்லபடியா பண்ண வேண்டாமா?”

அந்தக் கல்யாணத்துனால் எல்லோர்கிட்டயும் எவ்வளவு பேச்சு வாங்கினோம். இப்போ இப்படின்னு தெரிஞ்சதும், உடனே எல்லோரும் கேட்கிற முதல் கேள்வியே, ஏன் குழந்தையோட இருக்கப் பெண்ணைக் கல்யாணம் பண்றீங்கன்னு தான். யாருக்கும் பேசுறதுக்கு எதுக்கு இடம் கொடுக்கணும்?” எனச் சிவகாமி சொல்ல…

வெளியில் இருந்து வந்த லிங்கா அவர் பேசிய அனைத்தையும் கேட்டிருந்தான்.

அம்மா, அப்போ மத்தவங்க பேசுவாங்கன்னு தான் சொல்றீங்க. உங்களுக்கு ஒன்னும் பிடிக்காம இல்லையா?” என்றதும் சிவகாமியின் முகம் போன போக்கை பார்த்து,

அம்மா, மத்தவங்க பேரை சொல்லி நீங்க தப்பிக்காதீங்க. உங்களுக்கு இஷ்ட்டம் இல்லை. குழந்தையோட இருக்கப் பெண்ணை ஏத்துக்க மனசு வரலைன்னு சொல்லிட்டு போங்களேன்.”

ஆமாம் டா நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே…”

நான் என் முடிவுல உறுதியா இருந்தா?”

உன்னை எல்லாம் என்னால தடுக்க முடியாது பா… நான் சொல்றது சொல்லிட்டேன். ஆனா எனக்குப் பிடிச்ச பெண்ணைக் கல்யாணம் பண்ணாதான், நான் இருக்கிற வீட்டுக்குள்ள வரலாம்.” என்றவர், உள்ளே சென்று விட… அவர் எதற்கும் ஒத்து வரமாட்டார் என்பதை அவனும் உணர்ந்திருந்தான்.

அங்கே வீட்டில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதுதான், திவாகரின் இரண்டாவது மனைவி தற்கொலைக்கு முயன்றது பற்றி யாதவிக்குத் தெரியும்.

அந்தப் பொண்ணுகிட்ட அவனைப் பண்ணிக்காதேன்னு நான் சொல்லி இருக்கணும் இல்ல…” என யாதவி வருந்த…

நாம சொன்னா கேட்டுடுவாங்களா… நம்மகிட்ட நடிச்ச மாதிரிதானே அவங்ககிட்டயும் நடிச்சிருப்பான்.”

யாருக்கு அவரைப் பத்தி தெரியுமோ இல்லையோ… எனக்கு அவரைத் தெரியும். அவரோட எந்தப் பெண்ணும் வாழ முடியாது.” என்ற மகளை லக்ஷ்மி கவலையாகப் பார்த்தார்.

உன் தங்கை எதோ சொன்னாளே… அங்க எதோ வக்கீலுக்கு உன்னைப் பிடிச்சு கல்யாணத்துக்குக் கேட்டிருக்காருன்னு. என்ன ஆச்சு யாதவி? உனக்குப் பிடிச்சிருக்கா? நல்ல பையனா இருந்தா பண்ணிக்கலாமே… நீ தனியா இருக்கிறது எனக்கும் உங்க அப்பாவுக்கும் பிடிக்கவே இல்லை. எங்களுக்கு அப்புறம் உனக்கு யார் இருப்பா?” என லக்ஷ்மி சொல்ல…

அவங்க வீட்ல பேசிட்டு சொல்வாரு மா…” என யாதவி முடித்துக் கொண்டாள்.

நான் அவருக்குப் பத்திரிகை அனுப்பினேனே… அவரு என் கல்யாணத்துக்கு வருவாரு தானே…” என ஜனனி கேட்க…

எனக்கு எப்படித் தெரியும்? அவரைத்தான் கேட்கணும்.” என்றால் யாதவி அலட்சியமாக.

இவள் பாட்டுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வந்துவிட்டாள். லிங்காவிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. வேலையை உடனே எல்லாம் மாற்ற முடியாது. வேறு வீடுதான் பார்க்க வேண்டும். அது அங்கே போனால் தான் முடியும். எல்லாம் நினைத்து அவளுக்கு ஒரே குழப்பம். இதில் அன்று மாலையே திவாகர் வந்து நின்றான்.

இவன் ஜெயிலில் இல்லையா என நினைத்து எல்லோரும் பார்க்க… பெயிலில் வெளியில் வந்து விட்டானாம்.

உங்களுக்கு எனக்கும் ஒரு சம்பந்ததும் இல்லை திவாகர். எதுக்கு இங்க வந்தீங்க?” என யாதவி கேட்க…

நான் சந்தோஷை பார்க்க வந்தேன்.” என்றான்.

போன் பண்ணி எங்க வரணும்னு கேட்டுட்டு தானே வரணும்.” என்றவள், “சந்தோஷ் இப்ப தூங்கிறான். பார்க்க முடியாது, நீங்க கிளம்புங்க.” என்றாள்.

யாதவி ப்ளீஸ் நான் உன்கிட்ட பேசணும்.” என்றவன், “நான் இப்போ ரெண்டாவதா கல்யாணம் பண்ணேன் இல்லையா… சரியான பிசாசு அவ… என்னை மாட்டி விடுறதுக்காகவே தற்கொலை நாடகம் போட்டு என்னை ஜெயில்ல வச்சிட்டா.”

ரொம்ப மோசமானவ எனக்கு அவ வேண்டாம்.” என்றவன்,

நான் இப்ப முன்ன மாதிரி இல்லை யாதவி. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்.” எனத் திவாகர் பழைய பல்லவியை மீண்டும் ஆரம்பிக்க…

திவாகர், இதைப் போல எத்தனை தடவை நீங்க என்கிட்டே சொல்லி, நானும் நம்பி உங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கேன்னு உங்களுக்கே தெரியும். அப்புறம் அது நடக்கவே நடக்காதுன்னுதான் விவாகரத்து வாங்கினதே…”

விவாகரத்து பண்ணதுக்குப் பிறகும் உங்ககிட்ட இருந்து எனக்கு விடுதலை கிடைக்காது போல… நீங்க இப்படி என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொல்றதுக்கு, மொத்தமா கொன்னுடுங்க. நிம்மதியா செத்து போயிடுறேன்.” என யாதவி கையெடுத்து கும்பிட…

செத்து போறேன் என்று இதுவரை யாதவி வாயில் இருந்து வந்ததே இல்லை. அவள் வீட்டினர் அவளை அதிர்ச்சியாகப் பார்க்க…

இங்க பாருங்க டைவர்ஸ் ஆகிடுச்சு… இப்படித் திரும்பத் திரும்ப வந்து தொல்லைக் கொடுத்தா…. நாங்க போலீசுக்கு போவோம்.” என யாதவியின் அப்பா சொல்ல, இப்போது தானே ஜெயிலில் இருந்து வந்திருக்கிறான், அந்தப் பயத்தில் திவாகர் உடனே அங்கிருந்து கிளம்ப…

நல்லபடியா குடியை விட்டு, இப்போ கல்யாணம் பண்ண பொண்ணோட ஒழுங்கா வாழுங்க. சும்மா இங்க வந்து தொந்தரவு கொடுக்காதீங்க.” என்றார் லக்ஷ்மியும்.

அவன் சென்றதும், “அந்த ஆளுதான் லூசுன்னு தெரியும் இல்ல… நீயும் அப்படிப் பேசுற.” என ஜனனி அக்காவை கடிந்துகொள்ள,

எல்லாம் என் விதி. இந்த ஆளு ஒழுங்கா இல்லாததுனால… நான் எல்லார்கிட்டயும் பேச்சு வாங்கிறேன்.” என யாதவி கண்கலங்க…

உன்னை யாரும் எதுவும் சொன்னாங்களா?” என அவளின் அம்மா கேட்க…. இல்லை என்று தலையசைத்தவள், எழுந்து உள்ளே அறைக்குள் சென்று விட்டாள்.

என்ன டி இவ ஒரு மாதிரி இருக்கா?” என லக்ஷ்மி இளைய மகளிடம் கேட்க… “லிங்கா என் கல்யாணத்துக்கு வந்தா… நாம அவர்கிட்டயே பேசலாம். இவ இனிமேலும் தனியா இருக்கிறது நல்லது இல்லை.” என்றால் ஜனனியும் கவலையாக.

இந்தப் பாவி அவளை நிம்மதியா இருக்க விட மாட்டான் போலிருக்கு.” என லக்ஷ்மி புலம்பியபடி எழுந்து சென்றார்.

யாதவியின் கைபேசியில் இருந்து லிங்காவின் எண்ணை அவளுக்குத் தெரியாமல் எடுத்து, அன்றே அவனை அழைத்த ஜனனி, “ஹலோ மாம்ஸ் எப்படி இருக்கீங்க?” என்று கேட்க…

ஹே வாலு நீயா… நான் நல்லா இருக்கேன். அப்புறம் கல்யாணப் பொண்ணு எப்படி இருக்க?” என லிங்காவும் இயல்பாக உரையாட…

உங்க ஆளு இங்க வந்திட்டா இல்லை… அதனால நான் சுமாராத்தான் இருக்கேன். எப்பவும் என்னைக் குறை சொல்லிட்டே இருக்கா…” என அவனிடம் அவள் யாதவியைப் புகார் சொல்ல…

அவள் பேசுவதை வைத்தே யாதவி அங்கே யாரிடமும் எதுவும் சொல்லவில்லை என லிங்காவுக்குப் புரிய…

அவ எது பண்ணாலும் சரியாதான் இருக்கும்.” என அவன் யாதவிக்குப் பரிந்து பேச….

அதுதானே நீங்க எனக்குச் சப்போர்ட் பண்ணுவீங்களா?”

நான் ஏன் பண்ணனும்? அதுதான் சிபி இருக்காரே…”

நீங்க கொஞ்சம் அவருக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுங்க. அவர் என்னைத்தான் எப்பவும் வார்றாரு.” என்றதற்கு லிங்கா வாய்விட்டுச் சிரித்தான்.

மாம்ஸ் கல்யாணத்துக்கு வருவீங்க தான… உங்களுக்கு ஹோட்டல்ல ரூம் போடவா?”

உன் அக்கா என்னை வான்னே சொல்லலையே… நான் எப்படி வர்றது?” லிங்கா கேட்க…

கல்யாணம் எனக்குத்தானே நான் கூப்பிட்டா போதாதா?” என்றால் ஜனனி.

ரூம் எல்லாம் போட வேண்டாம்.” என்றவன், “நான் வரேன், ஆனா அதை யாதவிகிட்ட சொல்லக் கூடாது. டீலா?”

டீல். நீங்க வந்தாலே போதும். நான் அவகிட்ட சொல்லலை.” என ஜனனியும் ஒத்துக்கொள்ள.. திருமணதிற்கு வருவதாகச் சொல்லி லிங்கா போன்னை வைத்தான்.

அன்று இரவு பரத்திற்கு அழைத்தவன், அவனிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

நல்லநேரத்தில் சிபி ஜனனியின் கழுத்தில் தாலிகட்டி முடித்திருக்க… மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டிருந்தனர். கீழே மேடைக்கு முன்னால் உறவினர்கள் நிற்க, அவர்களுக்குப் பின்னால் யாதவி நின்றிருந்தாள். அதிகாலையே எழுந்ததால்… உறக்க கலக்கத்தில் இருந்த மகனை தோளில் போட்டபடி நின்று மணமேடையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஜனனி அவளை மேடைக்கு அழைத்தும் செல்லவில்லை.

மண்டபத்திற்குள் வந்த லிங்காவின் கண்கள் மணமேடையின் அருகே யாதவியைத் தேடி அலைய…. அவள் அங்கே இல்லை. பிறகு அவன் பார்வையைச் சுழற்ற…. அவளின் நீண்ட பின்னிய கூந்தலை வைத்தே அவளைக் கண்டு பிடித்தான். இளம் பச்சை நிற பட்டுச் சேலையில், கூந்தலில் மல்லிகை சரம் வழிய… மகனோடு நின்றிருந்தாள்.

அவளை எப்படி அழைப்பது என்று தெரியாமல் லிங்கா அங்கேயே நிற்க… அவள் தோளில் சாய்ந்து படுத்திருந்த சந்தோஷ், லிங்காவை பார்த்ததும் தலையை உயர்த்தியவன், அவன் அம்மாவிடம் இருந்து இறங்கப் பார்க்க… அதை லிங்கா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

யாதவி மகனை இறுக்கி பிடிக்க… ஆனால் தன் முழுப் பலத்தையும் திரட்டி, அவளிடம் இருந்து இறங்கியே இருந்தான்.

அவன் இறங்கியவுடன் அதில் களைந்த தன் சேலையைச் சரி செய்தவள், பிறகுதான் இவன் எங்கே போகிறான் என்பது போலப் பார்க்க… அதுவரையில் அம்மா மகன் இருவரையும் மாறி மாறி பார்த்தவன், சந்தோஷ் உறக்க கலக்கத்தில் இருந்ததால் நடை தடுமாற… அவன் விழுந்து விடாமல் இருக்க… வேகமாக வந்து லிங்கா அவனைத் தூக்கி இருந்தான். அப்போது தான் யாதவி அவனைப் பார்த்தாள்.

சந்தோஷை தூக்கி முகத்திற்கு நேரே உயர்த்திப் பிடித்தவன், “ஹே குட்டி எப்படி இருக்கீங்க? என்னை நியாபகம் வச்சிருக்கீங்களா நீங்க.” என்றவன், அவன் கன்னத்தில் ஆசையாக முத்தமிட… சந்தோஷ் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.

அவன் வருவான் என்று அவள் நினைக்கவே இல்லை. யாதவி அவனையே பார்த்தது பார்த்தபடி நின்று விட… சந்தோஷை தோளில் தூக்கியபடி லிங்கா அவளைப் பார்த்து தலையசைக்க… பிறகே அவனிடம் சென்றாள்.

வாங்க…” என்றவள், “எப்போ வந்தீங்க?” என்று கேட்க…

காலையில தான் வந்தேன்.” என்றான்.

வந்து உட்காருங்க.” என அவனை அழைக்க… அவன் பின்னால் இருந்த இருக்கைக்குச் செல்ல… அவனுடன் யாதவியும் உடன் சென்றாள்.