ஆனால் அது தெரியாமல் இனி கணவனை நம் பக்கம் இழுப்பது சுலபம் என நினைத்து, “உங்களுக்குதான் ரொம்ப வேலை. இங்க வந்து ரெஸ்ட் எடுங்க.” என ஐஸ்வர்யா அழைக்க… “செத்துப் போனது என் அப்பா. இங்க எங்க அம்மாவும், தங்கச்சியும் எந்த நிலையில இருக்காங்க தெரியுமா? இதே உங்க வீட்ல நடந்தா… நீ இப்படித்தான் இருப்பியா? என்றான் ஆத்திரமாக.

தந்தையின் முப்பதாம் நாள் காரியம் முடிந்ததும், அவர்கள் பக்க உறவினர்களை அழைத்தவன், மனைவியின் பக்கம் இருந்தும் ஆட்களை வர சொல்லி, தன்னால் இனி மனைவியோடு சேர்ந்து வாழ முடியாது என்று சொல்லி விட்டான்.

லிங்காவின் உறவினர்கள், “நாங்க தான் பார்த்தோமே, மாமனார் செத்ததுக்கே யாரோ மாதிரி வந்திட்டு போனதை. கொஞ்ச நாள் நீங்க பொண்ணு வாழ்க்கையில தலையிடாம இருங்க. எல்லாம் சரி ஆகிடும்.” என்று சொல்ல…

“எங்க பெண்ணை நாங்க வந்து பார்க்க கூடாது, பேசக் கூடாதுன்னு நீங்க எப்படி சொல்வீங்க?” என ஐஸ்வர்யாவின் பெற்றோர் பேச என, இரண்டு பக்கமும் காரசாரமாகப் சண்டையிட்டுக் கொண்டனர். லிங்கா என்னால் சேர்ந்து வாழ முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட… பிறகு கோர்ட்டுக்கு சென்றனர்.

ஐஸ்வர்யாவின் தந்தையும் என்னென்னவோ செய்து பார்த்தார். லிங்காவுக்குத் தான் குறை. அதை மறைக்க, அவன் இப்படிச் செய்வதாகச் சொன்னார்கள். ஐஸ்வர்யா வைத்தியம் பார்த்த மருத்துவரை அழைத்து வந்து சாட்சி சொல்ல வைத்தான். ஐஸ்வர்யாவே தங்கள் தாம்பத்திய வாழ்க்கை நன்றாக இருப்பதாகச் சொன்னதாக மருத்துவர் சொன்னார்.

உடனே விவாகரத்து கிடைக்கவில்லைதான். ஐஸ்வர்யா வீட்டில் வழக்கை இழுத்தடித்தனர். இவனுக்கும் பணத்தாசை காட்டி பார்த்தனர். அவன் எதற்குமே மசியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்துதான் விவாகரத்துக் கிடைத்தது.

மனைவியைப் பிரிந்த வருத்தமெல்லாம் இல்லை. எப்படியோ தப்பித்தோமே அப்படித்தான் நினைத்தான்.

இப்படித் தெரியாத இடத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என நினைத்து, தங்கைக்குத் தன் நண்பனையே மனம் முடித்தான்.

அதெல்லாம் கடந்து வந்து விட்டான். இப்போது வேறு எதுவோ அரித்துக் கொண்டிருந்தது.

அங்கே சென்னையில் திவாகர் திருமணம் செய்து கொண்ட பெண், அவனின் தொல்லை பொறுக்காமல் தற்கொலைக்கு முயல… நல்லவேளை பிழைத்துக் கொண்டாள்.

அந்தப் பெண்ணின் வீட்டினர் போலீசில் புகார் கொடுக்க… திவாகரை கைது செய்திருந்தனர்.

இவனோடு வாழ்வதற்குச் சாவதே மேல் என்று அந்தப் பெண் நினைக்கும் அளவிற்கு அவளைத் தள்ளியது திவாகர் என்றால்… அவன் எப்படிப் பட்டவனாக இருப்பான்?

யாதவியின் பெற்றோருக்கு யாரோ சொல்லிதான் இந்த விஷயம் தெரிய வந்தது.

அக்காவும் அவனை விட்டு வந்ததுக்குப் பதிலா, இப்படிப் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?” என ஜனனி கேட்க,

அப்படிச் சொல்லாதே கேட்கவே பதறுது. என் பொண்ணு புருஷனோட வாழலைனாலும் பரவாயில்லை. அவ உயிரோட இருந்தா போதும்.”

இந்தப் பாவி என்ன கொடுமை பண்ணானோ, அந்தப் பொண்ணு சாகிறதே மேலுன்னு நினைச்சிட்டா…. அப்படி நம்ம யாதவி முடிவுடுத்திருந்தா… நான் ஏன் இதை யோசிக்காம போனேன்?”

என் பொண்ணு புருஷனோட வாழணும்னு தான் யோசிச்சேனே தவிர, அவ மனசு ஒடிஞ்சு வேற மாதிரி முடிவு எடுத்தா என்ன ஆகும்னு யோசிக்கவே இல்லையே…நல்லவேளை யாதவி தப்பிச்சா.” என்றார் லக்ஷ்மி கண்ணீருடன்.

இப்போ புலம்புங்க. நல்லவேளை யாதவி உங்க பேச்சை கேட்கலை.” ஜனனி சொல்ல…

உன் கல்யாணம் முடிஞ்சதும் நாங்க யாதவியோட போய் இருக்கோம்.” என்றார் லக்ஷ்மி.

ஒன்னும் தேவை இல்லை. அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும். இனிமேயாவது அவ வாழ்க்கையை அவ சந்தோஷமா வாழணும். நீங்க போய் அவளோட இருந்தா… அவ இன்னொரு கல்யாணத்தை பத்தி யோச்கிக்க மாட்டா… அதனால நீங்க எப்பவும் போலவே இருங்க.” எனச் சொல்லிவிட்டு ஜனனி சென்றாள். அவள் சொல்லி சென்றது, பெற்றோரை யோசிக்க வைத்தது.

மாலை லிங்கா அவன் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டுப் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்க… வேலை முடிந்து, பள்ளியில் இருந்து மகனை அழைத்துக் கொண்டு யாதவி பேருந்தில் சென்று கொண்டிருந்தாள்.

ஜன்னல் வழியாக லிங்காவை பார்த்துவிட்டு சந்தோஷ்,“அங்கி அங்கி…” எனக் கத்த… யாதவி அவனை அடக்கிப் பார்த்தும் முடியவில்லை. பேருந்தில் இருந்த எல்லோருமே திரும்பிப் பார்க்க… சற்று நேரம் சென்றுதான் லிங்காவுக்குக் கேட்டது.

அவன் பக்கவாட்டில் திரும்பி பார்க்க… அவனைப் பார்த்ததும் சந்தோஷ் விட்டால் ஜன்னல் வழியாகவே பாய்ந்து விடுவான் போல… கைகளை நீட்ட… லிங்காவுக்கும் அவனைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்க…. அப்போது யாதவி மகனை உட்கார சொல்லி முதுகில் அடித்து விட்டாள். உடனே சந்தோஷ் வீல் என்று ஒரே அழுகை.

லிங்கா பேருந்துக்கு முன்னால் சென்றவன், கைகாட்டி பேருந்தை நிறுத்தினான்.

வண்டியை விட்டு இறங்கியவன், பேருந்தில் சென்று ஏற… அவன் வருவதைப் பார்த்துச் சந்தோஷ் அவனிடம் சென்றவன், “அம்மா அடிச்சி…” என்றதும், அவனைத் தூக்கிக் கொண்டவன், யாதவிடம் ஒன்றுமே சொல்லவில்லை. பேருந்தில் இருந்து இறங்கி சென்றுவிட்டான்.

பேருந்து கிளம்ப… பைக்கில் சந்தோஷை முன்புறம் உட்கார வைத்துக் கொண்டு, லிங்கா சென்றுவிட்டான்.

சற்றுத் தூரம் சென்று சாலை ஓரம் நிறுத்தி, அழுதவனைச் சமாதானம் செய்து, அவனுக்கு அங்கிருந்த கடையில் சாக்லேட் வாங்கிக் கொடுத்து முத்தமிட்டவன், அவனை வண்டியில் உட்கார வைக்க… பேருந்தில் இருந்து இறங்கிய யாதவி இதெல்லாம் பார்த்துக் கொண்டு தான் நடந்து வந்தாள். அவள் வருவதை அவனும் பார்த்தான். ஆனால் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான்.

லிங்கா சந்தோஷோடு வீட்டுக்கு செல்ல… “என்ன டா இந்தப் பக்கமே உன்னைக் காணோம்.” என்ற சிவகாமி அவனுக்கு உண்ண நொறுக்குத் தீனிகள் கொடுக்க… அவன் அதைக் கூட வாங்கவில்லை. தீபிகாவின் மகளைச் சென்று, பாப்பா பாப்பா எனப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பாப்பாவை அவன் விளையாட அழைக்க… அதைப் பார்த்து புன்னகைத்த லிங்கா…. “அதுக்கு இன்னும் ரொம்ப நாள் ஆகும்.” என்றவன், அவனைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்று விட்டான்.

சந்தோஷ் அந்த அறையை ஆராய… லிங்கா கட்டிலில் படுத்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். சில நாட்களாக இருந்த எரிச்சல் மறைந்து போனதை உணர்ந்தான். அது சந்தோஷை பார்த்ததால் மட்டுமா அல்லது யாதவியையும் சேர்த்து பார்த்ததால் வந்ததா என்று புரியவில்லை.

சில நாட்களாக அவள் திடிரென்று ஏன் தன்னிடம் இருந்து மறைந்து போனாள்? என யோசிக்க ஆரம்பித்தான். சந்தோஷையும் அவனிடம் விடவில்லை. அவன் சந்தோஷை பார்க்க கூட இல்லை.

வீட்டில் மட்டும் அல்ல… அலுவலகத்திலும் இவனைப் பார்த்தால்… வேறு வேலை இருப்பது போல எழுந்து சென்று விடுவாள். வேண்டுமென்றே செய்திருக்கிறாள் என்று இப்போது யோசிக்கும் போது புரிந்தது.

என்ன காரணமா இருக்கும் என யோசித்தவன், ஜனனி அன்று சென்றதில் இருந்து தான் இப்படி என்று புரிய…. அப்போ ஜனனி எங்கள் இருவரையும் தான் சேர்த்து பேசி இருப்பாளோ என்ற சந்தேகம் எழுந்தது. பரத்துக்குத் தோன்றியது ஜனனிக்கு மட்டும் தோன்றாதா என்ன? என நினைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் சென்று சந்தோஷை அழைத்துக் கொண்டு அவன் கீழே வர… அப்போது அவனது அத்தை வீட்டுக்கு வந்திருந்தார். அவரை நலம் விசாரித்தவன், சந்தோஷை சென்று விட்டுவிட்டு வந்து, அவன் அலுவலக அறைக்குச் சென்றுவிட்டான்.

சிவகாமியின் நாத்தனார் பாக்கியம், சந்தோஷை யார் என்று கேட்க…

அன்னைக்கு ஆஸ்பத்திரியில நீ வர்றவரை என்னோட இருந்தாளே யாதவி, அவளோட பையன். எதிர்வீட்ல தான் இருக்காங்க.” என்றதும், “ஆமாம் அன்னைக்குப் பார்த்தேன்.” என்றார்.

நல்ல பொண்ணு, ஆனா புருஷன் சரியில்லை. நம்ம லிங்கா போல விவாகரத்து ஆகிடுச்சு. இங்க தென்காசியில தான் வேலை பார்க்கிறா. அம்மாவும் பையனும் தனியாதான் இருக்காங்க.” என்றதும்,

தனியா இருக்கான்னு சொல்றீங்க. அப்புறம் எதுக்கு அவ பையனை லிங்காவோட பழக விடுறீங்க? நாளைக்கு வேற விதமா ஆகிட போகுது. லிங்காவுக்குச் சட்டுபிட்டுன்னு பொண்ணு பார்க்க ஆரம்பிங்க.” என்ற நாத்தனாரை,

அப்படியா சொல்ற? இந்தப் பையன் எங்க நான் சொல்றதை கேட்கிறான். இப்ப கூட ஒரு வரன் வந்தது. வேண்டாம்னு சொல்லிட்டான்.”

நீங்க செய்யுறது எதுவும் சரியில்லை அண்ணி, நான் அவ்வளவுதான் சொல்வேன்.” என்றார் பாக்கியம்.

அன்று முதல் சிவகாமி மகன் மீதும், யாதவி மீதும் ஒரு கண்ணை வைத்திருந்தார். ஆனால் அவள் சந்தோஷை கூட இந்தக் பக்கம் விடவில்லை. கொஞ்சம் குழப்பத்திலேயே இருந்தார்.