சரி பார்க்கலாம்.” என்றான்.

இதுவரை வேண்டாம் வேண்டாம் என்றவன், இப்போதுதான் முதல்முறை பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறான். அது போதாது சிவகாமிக்கு, அவர் உடனே தெரிந்த இடங்களில் சொல்லி வைக்க ஆரம்பித்தார்.

மறுநாள் மாலை சந்தோஷ் சேரில் ஏறி நின்று, கம்பி வழியாக, இப்போது  அங்கி அங்கி என லிங்காவையே அழைக்க…. வெளியே வந்து எட்டிப் பார்த்த தீபிகா அண்ணனிடம் சென்றவள், “டேய் அண்ணா, உன் ப்ரண்ட் உன்னைக் கூப்பிடுறான்.” என்றதும், முதலில் புரியாமல் யார் என்றவன், சந்தோஷின் குரல் கேட்டு விட்டு புன்னகையுடன் எழுந்து வெளியே சென்றான்.

லிங்காவைப் பார்த்ததும் சந்தோஷ் கையாட்ட…. “இங்க வா டா…” என்றான் லிங்கா. உடனே சேரில் இருந்து இறங்கியவன், உள்ளே சென்று யாதவியை அழைத்து வந்து கேட்டை திறக்க சொல்ல… பசங்க யாரும் இல்லையே என யாதவி எட்டிப் பார்க்க… லிங்கா வாயிலில் நிற்பதை பார்த்து விட்டு, “நீ அவங்களைக் கூப்பிடியா?” என மகனிடம் கேட்க… ஆமாம் என்று தலையசைத்தான். 

மகன் உண்மையை சொன்னதால் அப்போது யாதவி ஒன்றும் சொல்லவில்லை. கேட்டை திறந்து விட… சந்தோஷ் மெதுவாக படிகளில் இறங்கி சென்றான்.

சந்தோஷை அழைத்து வந்த லிங்கா, “நான் என் கேஸ் வேலையைப் பார்க்க வேண்டாம். கேஸ் எங்க போகப் போகுது சொல்லு, வேணா வாயுதா வாங்கிக்கலாம், இல்லை டா…” எனச் சொல்லி சிரிக்க…

சந்தோஷுக்கு என்ன புரியும். இன்று வரும் போதே கையில் பிளாஸ்டிக் பேட்டும், பாலும் கொண்டு வந்திருந்தான்.

பார்த்தியா ரொம்ப விவரம்.” என்றால் தீபிகா. இருவரும் அன்று கிரிகெட் விளையாடினார்கள்.

வார நாள் எல்லாம் அங்கிள் ஆபீஸ் போயிருக்காங்க என்று சொல்லி யாதவி சந்தோஷை வெளியிலேயே விடவில்லை. வீட்டிற்குள் அவளும் அவனுடன் சேர்ந்து விளையாட என, அந்த வாரம் முழுக்கவே அவள் அனுப்பவில்லை. வார இறுதியில் வெளியே பையன்கள் விளையாட… அன்று பிடிவாதமாக வெளியே சென்றவன், லிங்காவைப் பார்த்ததும் அவனிடம் தொற்றிக் கொண்டான்.

அந்த வாரம் லிங்கா யாதவியின் அலுவலகத்திற்கு ஒரு வேலையாக வந்தான், வந்த வேலை முடிந்ததும் யாதவியிடம் சென்று, “எப்படி இருக்கு உங்க வேலை?” என்றதற்கு,

ம்ம்… நல்லா இருக்கு.” என்றாள். 

இருவரும் எதிர் எதிர் வீட்டில் இருந்தாலும், இதுவரை சாதாரணமாக கூட பேசிக் கொண்டது இல்லை. 

“சந்தோஷ் உங்களைத் தொந்தரவு பண்றான் தான… நீங்க அவன் கூப்பிட்டா கண்டுக்காதீங்க.” என்றாள்.

அவளை ஒருமாதிரி பார்த்தவன், “நான் சொன்னேனா தொந்தரவா இருக்குன்னு. நாங்க ப்ரண்ட்ஸ். வார நாள்ல நாங்க பிஸி. ஆனா சனி ஞாயிறு நாங்க பையனுங்க விளையாடிட்டு போறோம். நீங்க எங்க பிரிண்ட்ஷிப் உள்ளே வராதீங்க.” என்ற லிங்காவை பார்த்துப் புருவத்தை உயர்த்திய யாதவி… “சந்தடி சாக்குல உங்களையும் பையன்னு சொல்லிட்டீங்க.” என்றதும், லிங்கா புன்னகையுடன் அவளிடம் விடைபெற்றான்.

அலுவலகத்தில் அவர்கள் இருவரையும் குறிப்பாக காட்டி தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டனர். லிங்காவுக்கு பயந்து யாதவியிடம் நேரடியாகத்தான் வைத்துக்கொள்வது இல்லை… மறைமுகமாக அல்லது அவள் இல்லாத நேரம் அவளைப் பற்றி பேசி சிரிப்பது உண்டு. 

அந்த வார இறுதி யாதவி துவைத்த துணிகளை மாடியில் காய வைக்கச் செல்ல… அங்கே ஜெயந்தி இருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, “தீபிகாவை பார்த்தா பெண் குழந்தை போலத் தான் இருக்கு.” என்றார்.

அவங்க டெலிவரிக்கு அம்மா வீட்டுக்கு போகலையா?” என்று யாதவி கேட்க,

“அவ அம்மா வீட்டுக்குத்தானே வந்திருக்கா.” என்றார்.

அப்போ அது லிங்காவின் மனைவி இல்லையா என நினைத்தவள், நல்லவேளை இதை அவர்களிடம் கேட்கவில்லை என்று நினைக்க… அதற்குள் புரிந்து கொண்ட ஜெயந்தி, “தீபிகா லிங்காவோட தங்கை. இங்க பிரசவத்திற்கு வந்திருக்கா…” என்றார்.

லிங்காவிற்கு முப்பது வயதிற்குக் குறையாமல் இருக்கும். ஏன் இன்னும் திருமணம் செய்து கொளல்வில்லை என்று நினைத்தவள், அதைக் கேட்க முடியாது அமைதியாக இருக்க… “லிங்காவுக்குத் தீபிகாவுக்கு முன்னாடியே கல்யாணம் ஆகிடுச்சு. ஆனா அவனும் உன்னைப் போலத்தான், சரியில்லாத பொண்டாட்டி, போராடி பார்த்திட்டு போடின்னு விட்டுட்டான். ஆனா டைவர்ஸ் வாங்கிறதுகுள்ள பிள்ளை ரொம்பவும் கஷ்ட்டபட்டுட்டான். அதனால இப்போ இன்னொரு கல்யாணம்னு சொன்னாலே தலைதெறிக்க ஓடுறான்.” என்றார் ஜெயந்தி அவராகவே.

இப்போது லிங்காவைப் பற்றித் தெரிந்ததும், யாதவி இன்னுமே அவனிடமிருந்து தள்ளி நின்றாள். இருவருமே துணை இல்லாமல் இருக்கும் போது, பழகினால் பார்ப்பவர்களுக்குத் தவறாகத்தானே தோன்றும். எதற்குத் தேவையில்லாத பேச்சுக்களுக்கு இடம் தர வேண்டும் என்று நினைத்தவள், வார இறுதியில் மாலை நேரம் மகனை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று வந்தாள். எவ்வளவு நாள் வெளியவே சுற்றிக் கொண்டிருக்க முடியும்.

இரண்டு வாரங்கள் சென்றாள்… அதற்கு மேல் போக முடியவில்லை. வார இறுதியில் அலைந்து விட்டு வந்தால்… வார நாட்களுக்குத் தயார் செய்வது கஷ்ட்டமாக இருந்தது. வார நாட்களில் வேலையும் குவிந்தது. மீண்டும் வார இறுதியில் சந்தோஷும் லிங்காவும் சேர்ந்து விளையாடத்தான் செய்தார்கள். ஆனால் ஒரு அளவில் இருக்கும்படி பார்த்துக் கொண்டாள்.

கடந்து முடிந்த இரண்டு மாதத்தில் திவாகருக்கு மறுமணம் நடந்து முடிந்திருந்தது. எந்த நிலையிலும் மனைவி தன்னை விட்டு போக மாட்டாள். அதுவும் குழந்தை என்று வந்த பிறகு போகவே மாட்டாள் என்று நினைத்திருந்தான். ஆனால் யாதவி தான் அப்படி இல்லை என்று புரிய வைத்திருந்தாள்.

அவனும் சண்டையிட்டு, மிரட்டி, என் காலில் கூட விழுந்து பார்த்து விட்டான், யாதவி எதற்குமே அசையவில்லை. விவாகரத்து பெற்ற பின்பு கூட அவளைச் சென்று பார்த்து, மீண்டும் சேரும் வாய்ப்பை பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் யாதவி வேலையை மாற்றிக் கொண்டு சென்றுவிட்டாள்.

குடிக்கப் பணம் வேண்டுமே அதற்காகவாவது வேலைக்குச் செல்ல வேண்டுமே… திவாகர் வேலைப் பார்ப்பது தனியார் நிறுவனத்தில். ஒழுங்காக வேலைக்கு வரவில்லை என்றால் வேலையை விட்டு தூக்கி விடுவார்கள். அதனால் யாதவியின் பின்னாலும் செல்ல முடியவில்லை.

வீட்டில் வேறு அவன் அம்மா ஒரே அனத்தல்… “இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு என்னால வேலை பார்க்க முடியாது.” என்று சொல்ல… இன்னொரு திருமணத்திற்குச் சரி என்றான்.

பெண்ணுக்குத் திருமணம் நடந்தால் போதும் என்று நினைத்தார்கள் போல… திவாகருக்குப் பெண் கொடுக்கவும் ஆள் இருந்தது. திவாகர் பகல் வேளையில் நன்றாகவும் இருப்பான். குடித்தால் தான் மிருக குணம் தலை தூக்கும். வைத்தியம் பார்த்துக் குடியில் இருந்து வெளியில் வருவதற்கு முன்பே இன்னொரு திருமணம்.

“அவளுக்கு வேலைக்குப் போன இடத்தில வேற யார் கூடவோ தொடர்ப்பு ஏற்பட்டு போச்சு… அதனால தான் என் பையனை வேண்டாம்னு போயிட்டா…” எனத் திவாகரின் அம்மா யாதவி மீதே பழி போட… அதையும் பெண் வீட்டினர் நம்பினர். திவாகரும் அதையே பிடித்துக் கொண்டான்.

திருமணம் முடிந்ததை அவள் அம்மா சொல்ல… யாதவிக்குத் தான் தப்பியதை நினைத்து நிம்மதி அடைவதா… அல்லது இன்னொரு பெண்ணின் வாழ்க்கை கெட்டுப் போனதை நினைத்து வருந்துவதா என்று தெரியவில்லை.

அவள் அம்மா ஜனனியை இந்த வாரம் பெண் பார்க்க வருகிறார்கள் என்று சொல்ல… அது கேட்டது போலக் கூட யாதவி காட்டிக்கொள்ளவில்லை. வேலை இருப்பதாகச் சொல்லி போன்னை வைத்து விட்டாள்.

இரவு உறங்குவதற்கு முன் பாத்திரங்களை எல்லாம் விளக்கி… மறுநாள் உணவு கொண்டு செல்லும் பாத்திரங்கள், தண்ணீர் பாட்டில் எல்லாம் வெந்நீரில் கழுவி வைத்தவள், அடுப்பு மேடையும் சுத்தம் செய்தாள். கைபாட்டுக்கு வேலை செய்தாலும் மனம் கொதித்துப் போய் இருந்தது.

யாதவி திவாகரை பற்றிச் சொல்லும் போதெல்லாம், அதெல்லாம் ஒன்னும் இல்லை, சரி ஆகிடும். இப்படித்தான் அவள் பெற்றோர் பேசுவார்கள். அவர்களுக்கு இத்தனை செலவு செய்து செய்து வைத்த திருமணம் வீணாகி விடுமோ… இவளும் இங்கே வந்து உட்கார்ந்து கொண்டால்.. நாம் தானே பார்க்க வேண்டும் என்று அதுதான் கவலை. 

அதை அறிந்து தான் குழந்தை பெற்று ஆறு மாதத்தில் யாதவி தனியாக வீடு பார்த்துக் கொண்டு சென்றுவிட்டாள். அரசாங்க வேலை என்பதால் சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுப்புக் கிடைத்தது. அதனால் அவளால் தன்னைப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

எதோ வேலைக்குச் சென்ற போது மகனையாவது அவள் பெற்றோர் பார்த்துக் கொண்டனர். வார நாளில் மட்டுமே மகனை பெற்றோர் வீட்டில் விட்டு மாலை மீண்டும் அழைத்துச் செல்வாள். 

வார இறுதியில் வர மாட்டாள். ஆனால் அன்று எதோ ஒரு வேலையாக அந்தப் பக்கம் சென்றவள், ஜனனியை பார்த்து விட்டு  வரலாம் என்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெற்றோர் வீட்டுக்கு செல்ல… வாயிலில் நிறையக் காலணிகள் இருக்க… இவள் அழைப்பு மணியை அடிக்க… கதவை திறந்த லக்ஷ்மி மகளைப் பார்த்ததும், அவளை வெளியவே நிற்க வைத்து, “ஜனனியை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்க. நீ இப்போ உள்ள வந்தா… உன்னைப் பத்தி கேட்பாங்க. அதனால நீ இப்போ போ.” என்றதும், யாதவிக்கு முகத்தில் அறைந்தது போல இருந்தது.

அப்போது முடிவு செய்து கொண்டாள். இனி என்ன ஆனாலும் இவர்கள் உதவியை மட்டும் பெறுவது இல்லை என்று… மறுநாளே வேலை மாற்றலுக்கு விண்ணப்பம் செய்து விட்டாள்.

திருமணமாகி விட்டால் பெண்கள் தங்கள் பிறந்த வீட்டிற்கே அன்னியம் ஆகி விடுகிறார்கள். விருந்தாளி போல இரண்டு நாட்கள் வந்துவிட்டு சென்றால் தான் சீராடலும், மரியாதையும் கிடைக்கும் என்பதை யாதவி உணர்ந்து கொண்டாள்.

அன்று இரவு யாதவியால் உறங்கவே முடியவில்லை. கதவைத் திறந்து முன் வராண்டாவில் நடந்து கொண்டிருந்தாள். எதிரே மாடியில் லிங்காவும் நடந்து கொண்டிருந்தான்.

திருமணம் முடிந்த பின் எங்கள் கடமை முடிந்தது என்று நினைக்கும் பெற்றோர் யாதவிக்கு. ஆனால் மனைவியின் பெற்றோர் திருமணம் முடிந்த பின்னும், எங்கள் பெண் என்று அதிக உரிமை எடுத்துக் கொண்டதால்… பாழானது லிங்காவின் வாழ்க்கை.

இவளும் அவனைப் பார்க்க வில்லை. அவனும் இவளை பார்க்கவில்லை. அவரவர் யோசனையில் இருந்தனர். நடந்து களைத்து உறக்கம் வந்த பின் இருவரும் படுக்கக் சென்றனர்.