யாதவிக்குச் சனி ஞாயிறு விடுமுறைதான். அதனால் வார இறுதியில் நிதானமாக எழுந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஜெயந்தி வீட்டிற்கு வந்தவர், கீரை, காய்கறிகள் என்று நிறையக் கொடுத்தார். அவளுக்கும் மகனுக்கும் அதுவே ஒரு வாரத்திற்கு வரும்.
வேண்டாம் என்றால் கேட்கவே இல்லை. இது காட்டில விளைஞ்சது. கெமிக்கல் எல்லாம் சேர்க்காம விளைஞ்சது. இதெல்லாம் கடையில கூடக் கிடைக்காது. இதைப் போய் வேண்டாம்னு சொல்றியே என்றார்.
“உங்களுக்குத் தோட்டம் இருக்கா?” என யாதவி கேட்க…
“எங்களுக்கு இல்லை. எதிர்த்த வீட்ல சிவகாமி அக்கா அவங்க தோட்டத்தில விளைஞ்சது கொடுப்பாங்க. இது எனக்கும் சாருக்கும் ரொம்ப அதிகம். அதோட உனக்கும் கொடுக்கச் சொல்லி நிறையத்தான் கொடுத்தாங்க.” என்றார்.
அன்று வாஷிங் மெஷின் மாட்ட ஆள் அனுப்பியதற்கு, அவன் முகம் பார்த்துக் கூட நன்றி சொல்லவில்லை. இப்போது அவர்களுடையதை வாங்கிக்கொள்ளத் தயக்கமாக இருக்க… ஜெயந்தி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வைத்து விட்டுச் சென்றுவிட்டார்.
பச்சை பசேல் என்றிருந்த கீரையைப் பார்த்ததும், வீணாக்கவும் மனம் இல்லை. மகனுக்கு நல்லது என நினைத்தவள், கீரையைச் சிறுபருப்பு சேர்த்து கடைந்து விட்டு, பீர்கங் காயை பொரியல் செய்தாள்.
அன்று மாலை காலி மனையில் பெரிய பிள்ளைகள் விளையாட… சந்தோஷ் இங்கிருந்து, “அண்ணா… அண்ணா…” என அவனையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தான்.
அவர்கள் எல்லாம் பெரிய பிள்ளைகள் இவனோடு எப்படி விளையாடுவார்கள். ஆனால் அவன் கேட்பதை பார்த்து யாதவிக்கே பாவமாக இருந்தது.
“நீயும் பெரிசானதும் அவங்களோட போய் விளையாடலாம்.” என மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஜன்னல் வழி அவனைப் பார்த்த லிங்கா, வெளியே வந்து பக்கத்தில் இருந்த காலி மைதானத்துக்குச் சென்றவன், அங்கருந்த பையன்களிடம், “டேய், போய் அவனைத் தூக்கிட்டு வாங்க டா… ரொம்பச் சவுண்டு விடுறான். என்ன விளையாடுறான்னு பார்த்திடலாம்.” என்றதும்,
இரண்டு பையன்கள் சென்று சந்தோஷை அழைக்க…. யாதவிக்கு லிங்கா தான் அவர்களை அனுப்பியது என்று தெரியும். அவள் தயங்க ஆனால் பையன்களைப் பார்த்ததும் சந்தோஷ் அவர்களுடன் துள்ளிக் குதித்தி ஓடி விட்டான்.
சந்தோஷ் வந்ததும் அவனிடம் பேட்டை கொடுக்கச் சொல்லி லிங்கா சொல்ல… சந்தோஷால் பேட்டை தூக்கவே முடியவில்லை… பின்னே அவன் உயரத்தில் பேட் இருந்தால் அவனும் என்ன செய்வான்.
சந்தோஷ் விவரமாக, பால் போடுறேன் எனப் பந்தைக் கேட்டான். இந்த வயதில் எவ்வளவு விவரம் என லிங்காவுக்குச் சிரிப்பு தான். மகன் செய்வதைப் பார்த்து யாதவிக்கும் சிரிப்பு தான்.
பந்தை அவனிடம் கொடுக்க… பந்தை தூக்கிப் போட, அந்தப் பையன்கள் எடுத்து வந்து கொடுக்க… மீண்டும் பந்தை தூக்கிப் போட எனச் செய்து கொண்டிருந்தான்.
இவனுக்காக எவ்வளவு நேரம் அந்தப் பையன்கள் விளையாடாமல் இருப்பார்கள்.
போதும் வா என யாதவி மேலே இருந்து அழைக்க… இப்போது வரை லிங்கா யாதவியை ஒரு பார்வை கூடப் பார்க்கவில்லை. சந்தோஷை தூக்கியவன் யாதவியைப் பார்த்து, “கொஞ்ச நேரம் கழிச்சு அனுப்புறேன்.” என அவன் வீட்டிற்குக் கூட்டி சென்று விட்டான். பையன்களை விளையாட விட்டால் சரி என்று யாதவியும் உள்ளே வந்து விட்டாள்.
வீட்டிற்கு வந்த லிங்கா சந்தோஷை முகத்திற்கு நேராகத் தூக்கிப் பிடித்து, “இப்போதான் டா உன்னை முழுசா பார்க்கிறேன். எப்ப பாரு உங்க அம்மா கங்காரு குட்டியை போலத் தூக்கிட்டு திரியுற மாதிரி தான் பார்த்திருக்கேன்.” என்றான் சிரிப்புடன்.
யாருடன் பேசுகிறான் எனச் சிவகாமியும் உடன் தீபிகாவும் வர…. சந்தோஷைப் பார்த்ததும், “இவன் எப்படி வந்தான்? அவங்க அம்மாவை ஒட்டிட்டே இருப்பானே…” என்ற சிவகாமி, சந்தோஷிற்குப் பிஸ்கட், முறுக்கு என்று கொண்டு வந்து வைக்க…. சந்தோஷ் அதை ஆர்வமாக எடுத்து உண்டான்.
கையில் பிஸ்கட் வைத்து உண்டபடி வீட்டை நடந்தே சுற்றிப்பார்த்தான். மூவருக்கும் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதே நேரம் இனிமையாகச் சென்றது.
யாதவி சிறிது நேரம் சென்று வந்து எட்டிப்பார்க்க… லிங்கா சந்தோஷுடன் கார் பார்க்கிங்கில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். உடன் தீபிகா மேடிட்ட வயிற்ருடன் ஓரமாக நின்றிருக்க, யாதவி அது லிங்காவின் மனைவி என நினைத்துக் கொண்டாள். அவள் இன்றுதான் தீபிகாவை பார்க்கிறாள்… யாதவி மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.
சிறிது நேரம் சென்று சந்தோஷை அழைத்துக் கொண்டு வந்த லிங்கா கீழே இருந்தே கேட்டை தட்ட… யாதவி எட்டிப் பர்த்த்துவிட்டு கீழே செல்ல… அவள் வருவதைப் பார்த்ததும், சந்தோஷை கீழேயே விட்டுவிட்டுச் சென்றான்.
“நல்ல ஆட்டமா?” எனக் கேட்டபடி யாதவி மகனை அழைத்து வர…
“அங்கி… அங்கி….” என்று அவன் சொல்லிக் கொண்டே வர… அங்கிளை தான் அங்கி என்கிறான் என்று புரியவில்லை.
அன்று நன்றாக விளையாடியதாலோ என்னவோ, சந்தோஷ் ஒழுங்காக உண்டான். இரவு உணவு தட்டில் போட்டு அவனையே உண்ண சொல்லி கொடுத்து விடுவாள். அந்த நேரம் மட்டும் தான் மடிக் கணினியில் குழந்தைகள் வீடியோ எதாவது போடு விடுவாள். அதைப் பார்த்துக் கொண்டே உண்டான். அவர்கள் வீட்டில் டிவி இல்லை. இருந்தால் அதை எந்நேரமும் பார்க்க சொல்லும் என யாதவி டிவி மட்டும் வாங்கவில்லை.
அன்று சந்தோஷ் சீக்கிரமே இரவு உறங்கி விட்டான். யாதவி மறு வாரத்திற்கு இருவருக்கும் தேவையான உடைகளை இஸ்த்திரி செய்தாள்.
அன்று இரவு தன்னுடன் உணவுண்ட தன்கையை அதிசயமாகப் பார்த்த லிங்கா, “எந்நேரமும் உன் வீட்டுகார்கிட்ட போன்ல பேசிட்டு இருப்ப. இன்னைக்கு என்ன அதிசயமா ப்ரீயா இருக்க?” என்றதற்கு, கணவன் வேறு வேலையாக இருக்கிறான் என்றாள்.
தீபிகாவை சென்னையில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவள் கணவனும் வக்கீல் தான். இப்போது பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாள்.
“சந்தோஷ் போல ஒரு குழந்தை நம்ம வீட்லயும் வந்திருந்தா… ஒருவேளை விவாகரத்து அது இதுன்னு போயிருக்கதோ.” எனச் சிவகாமி புலம்ப…
“நல்லவேளை இல்லைன்னு நினைச்சுக்கோங்க. அவங்க பெண்ணையே இந்த வீட்ல வாழ விடாதவங்க, குழந்தையை மட்டும் நம்மகிட்ட கொடுத்திடுவாங்களா… என் குழந்தையும் என்கிட்ட கொடுக்காம பண்ணி இருப்பாங்க. எனக்குத் தான் அது இன்னும் நரக வேதனையா இருந்திருக்கும்.” என லிங்கா சொல்ல…
“அம்மா ஏன் மா கண்டதையும் பேசி அண்ணனை டென்ஷன் பண்றீங்க.” என்றாள் தீபிகா.
“நான் எதோ என் ஆதங்கத்தைச் சொன்னேன். சரி இவன் இன்னொரு கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தைன்னு இருக்கலாம் இல்ல…”
“போதும் மா… நீங்க ஒரு தடவை பொண்ணு பார்த்து, அவளை நான் கட்டி, நான் பட்ட பாடே போதும்.” என்றான் லிங்கா கையெடுத்து கும்பிட்டபடி.
“பொண்ணு அழகா இருக்கா, நூறு பவுன் நகை போட்டு வரா, பெரிய இடம் இதெல்லாம் பார்த்தீங்களே… அந்தப் பெண்ணை அவங்க வீட்ல எப்படி வளர்த்திருக்காங்கன்னு பார்த்தீங்களா? நான் அப்பவே சொன்னேன். ரொம்பச் செல்லமா வளர்ந்த மாதிரி இருக்கு, நம்ம வீட்டுக்கு ஒத்து வருமான்னு. பொண்ணுங்க கல்யாணம் ஆகிட்டா மாறிடுவாங்கன்னு நீங்கதான் சொன்னீங்க.”
“உங்க பேச்சைக் கேட்டு வீணா போனதுதான் மிச்சம்.”
“நான் மட்டுமா பார்த்தேன், உங்க அப்பாவும் தான் பார்த்தார்.”
“அதுக்கு அவரும் தேவையான அளவு பட்டுட்டுத்தான் போனார். நம்மகிட்ட இல்லாத வசதியா மா…”
“சரி டா நாங்க பார்த்தது தான் சரி இல்லை… எனக்கு அப்புறம் உனக்கு யாரு டா இருப்பா? இப்படியே காலமெல்லாம் தனியா இருப்பியா?” எனச் சிவகாமி கேட்க…
அதற்கு லிங்கா எதோ சொல்ல வர… “அண்ணா, ஒரு தடவை தப்பாச்சு தான். அதுக்காக எப்பவும் அப்படித்தான் ஆகும்னு இல்லை. நீங்க வேண்டாம்னு சொல்லாம…. நல்ல பெண்ணா வந்தா பண்ணிக்கிறேன்னு சொல்லுங்க. உங்களை உடனே பண்ணிக்கச் சொல்லலை.” எனத் தீபிகா எடுத்து சொல்ல…