ஆண்கள் எல்லோரும் டீ குடிக்க என்று வெளியே சென்றிருந்தனர். பன்னிரண்டு மணி இருக்கும், அப்போது லிங்கா அலுவலகத்திற்குள் நுழைந்தான். யாதவி வேலைப் பார்ப்பது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த அலுவலகத்தில் தான்.
இன்னும் போன மழை ஏற்படுத்திய சேதாரத்திற்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அதைக் கேட்க வந்திருந்தான்.
யாதவியை அங்கே அவன் எதிர்பார்க்கவில்லை. அவளைப் பார்த்ததும் ஆச்சர்யம் தான். இங்கே தான் வேலைப் பார்க்கிறார்களா என நினைத்துக் கொண்டான்.
யாதவிக்கு அவனைப் பார்த்ததும் நினைவு வந்துவிட்டது. அவளுக்குத் தன்னை அடையாளம் தெரிகிறது என்று அவனுக்கும் புரிந்தது. ஆனால் இன்னும் அவன்தான் லிங்கா என்று தெரியவில்லை.
அவளின் இருக்கைக்குச் சென்றவன், அவன் வந்த விவரம் சொல்ல… அவனை உட்கார சொல்லிவிட்டுக் கணினியில் விவரம் தேட ஆரம்பித்தாள்.
“எப்பவோ செக் வந்திருக்கே… உங்களுக்குத் தெரியாதா?” என்றதும்,
“ம்ம்… உங்க ஆளுங்க அந்த லட்சனத்துல வேலைப் பார்க்கிறாங்க.” என்றவன்,
“இன்னைக்கே கிடைக்குமா? ஆளுங்களை வர சொல்லணும்.” என்றதும், யாதவி இன்னைக்கே கொடுத்திடலாம் என்று சொல்ல… அப்போதே யாருக்கோ அழைத்துப் பேசியவன், “நான் அங்கதான் இருக்கேன். மத்தவங்களையும் கூட்டிடு வாங்க.” என வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டான்.
சுமதி ஓய்வறையில் இருந்து வந்தவள், லிங்காவை பார்த்து விட்டு, “எப்படி இருக்கீங்க வக்கீல் சார்?” என்றதும், தான் யாதவிக்கு அவன் வக்கீல் என்று தெரியும். இருவரையும் முறையாக அறிமுகம் செய்து வைத்தாள்.
“புது மேடம் ரொம்பச் சுறுசுறுப்பு, எங்க வேலை எல்லாம் கூட வேகமா நடக்குது.” என அவன் யாதவியைக் காட்டி சொல்ல…
“ஆமாம். ஆனா” என்ற என்றவள், “யாதவி, நாம இங்க இருக்கவங்க கூடத் தான் வேலைப் பார்க்கணும், நீங்க சாதாரணமா இருங்க. இல்லைனா உங்களையே ரொம்ப ஓட்டுவாங்க.” என்றதற்கு,
“அவங்க அர்த்தமே இல்லாம பேசி சிரிக்கிறதுக்கு எல்லாம் கூடச் சேர்ந்து என்னால சிரிக்க முடியாது.” என்றால் யாதவி வெடுக்கென்று.
தனது சொந்த விஷயமாகவும் சரி, அவனின் பணியின் குறித்தும், லிங்கா அந்த அலுவலகத்திற்கு நிறைய முறை வந்திருப்பதால்… அவனுக்கு அங்கே எல்லோரையும் நன்றாகத் தெரியும். யார் எப்படி என்றும் தெரியும்.
யாதவி கணினியில் கண்ணாக இருக்க… லிங்கா சுமதியை பார்க்க… அவள் அவனைப் பார்த்து உதடு பிதுக்கினாள். நான் பார்த்துக்கிறேன் என்னும் விதமாக விழிகளை மூடித் திறந்தான்.
சுமதி அவள் இருக்கைக்குச் சென்றதும், “ என்னங்க வாஷிங் மெஷின் இப்போ வேலைப் பார்க்குதா?” என்று அவன் திடிரென்று கேட்க…புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தவள், இவன் எதற்கு அதைக் கேட்கிறான் என யோசிக்கும் போதுதான், லிங்கா என்னும் பெயர் பரிட்சையமாக இருப்பதை உணர்ந்தாள்.
“தேங்க்ஸ்…” என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டாள்.
இதற்கு முன் தன்னை யார் என்று தெரியாது சரி… இப்போது நன்றாக பேசினால் என்ன என்று லிங்காவும் நினைத்தான்.
பிறகு என்ன நினைத்தாளோ… “நான் கீழ் வீட்ல இருக்கவங்ககிட்ட தான் கேட்டேன். அவங்க உங்களைத் தொந்தரவு பண்ணிடாங்க.” என்றாள்.
அதாவது இவள் கேட்க சொல்லவில்லையாம். கையிலேயே துவைக்கட்டும்னு விட்டிருக்கணும் என நினைத்துக் கொண்டான்.
மதியம் நேரம் ஆக ஆக மகன் என்ன செய்கிறானோ… உணவை உண்டானோ என்று கவலையாக இருக்க… அவளது பதட்டம் முகத்திலும் தெரிந்தது.
பள்ளி வரை சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தவள், “ஒரு வேலை இருக்கு. கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன்.” என அவள் சுமதியிடம் சொல்லிவிட்டு, லிங்காவைப் பார்க்க… “அந்த ஆளுங்க வரவும் நேரம் ஆகும். நீங்க போயிட்டு வாங்க.” என்றான்.
சந்தோஷ் இவளைப் பார்க்காதபடி மறைந்து நின்று மகனைப் பார்க்க… அவன் வயதுடைய சிறுவன் மற்றும் சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவர்களைப் பார்த்துகொள்ளும் ஆயா இவளைப் பார்த்ததும் எழுந்து வந்தார்.
“சாப்பிட்டானா அக்கா?” என்று கேட்க…
“நான் கூட ஊட்டளை… டிபன் பாக்ஸை திறந்து தான் கொடுத்தேன், அவனே சாப்பிட்டான். மத்த ரெண்டு பேருக்கும் தான் ஊட்டுரதுகுள்ள பெரிய பாடா இருந்தது. உங்க பையன் ரொம்பச் சமத்து, பாத்ரூம் வந்தாக் கூட அழகா சொல்றான். இன்னும் கொஞ்ச நேரத்தில் தூங்க வைக்கிறேன்.” என்றார்.
மகனை பற்றிய கவலை விலகியதில், “ஏதாவதுன்னா போன் பண்ணுங்க அக்கா.” என்றவள், மீண்டும் அலுவலகம் வர… லிங்கா அங்கே இல்லை.
“சாப்பாடு நேரம் இல்லை… சாப்பிட்டு முடிங்க வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்.” என்றால் சுமதி. சுமதியும் யாதவியும் சேர்ந்து மதிய உணவை உண்டனர்.
லிங்கா சற்று நேரத்தில் வந்து காத்திருக்க… அப்போது வெளியே சென்ற அலுவலர்கள் உண்டு முடித்துத் திரும்பி வந்தனர். பன்னிரெண்டு மணிக்கு முன்னால் சென்றவர்கள், இப்போதுதான் வந்தனர்.
வரும் போதே சதீஷ், யாதவியின் உடையைக் குறிக்கும் வகையில், மஞ்ச காட்டு மைனா என்னைக் கொஞ்சி கொஞ்சி போனா…” என்று பார்த்து பாடிக் கொண்டு வர… யாதவி கண்டுகொள்ளாமல் இருக்க… லிங்காவின் முகம் கடுமையாக மாறியது.
“நான் அப்பவே வந்துட்டேன். நீங்க தான் இல்லை. வாங்கிற சம்பளத்துக்குக் கொஞ்சம் வேலையும் பாருங்க.” என்றான் கிண்டலாக.
“பார்த்துட்டா போச்சு.” என்று கிண்டலாகவே பதில் கொடுத்த சதீஸ். அப்புறம் வேற என்ன விசேஷம்? வக்கீல் சார் இல்லைனா காரணம் இல்லாம வர மாட்டீங்களே…” என்றதும்,
“யாதவி எங்களுக்குத் தெரிஞ்சவங்க. அதுதான் பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்.” என்றதும், இது என்ன புதுக்கதை என்பது போல யாதவி பார்க்க…அவளை பார்வையாலேயே அடக்கியவன்,
“வேற வேலையும் இருந்துச்சு.” என்றான்.
“ஓ… யாதவியை உங்களுக்குத் தெரியுமா?”
“எனக்கு மட்டும் இல்லை. எங்க குடும்பத்துக்கே தெரியும்.” என்றதும், சதீஷின் முகம் மாறவே செய்தது. லிங்காவிற்கு இந்த ஊரில் இருக்கும் செல்வாக்கு அவன் அறிந்ததே…
“சரி சார்… நான் போய் வேலையைப் பார்க்கிறேன்.” என்று சென்றுவிட்டான்.
இரண்டு மணி போலச் சில பேர் வர… அவர்கள் கொண்டு வந்து காட்டிய சான்றிதல்கள் மற்றும் அடையாள அட்டையைச் சரி பார்த்துவிட்டு, யாதவி சென்று அவர்கள் துறை மேலாளரைப் பார்க்க… அவர் கையெழுத்து போட்டதும், எல்லோரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு, காசோலையை அவர்களிடம் கொடுத்தாள்.
லிங்காவின் பெயரிலும் காசோலை வந்திருந்தது. அவனுக்கும் அங்கே விளை நிலங்கள் உண்டு. அவன் தந்தை இருந்தவரை அவர் பார்த்தார், இப்போது ஆள் போட்டு லிங்கா பார்க்கிறான்.
அரசாங்கம் கொடுத்த நிவாரணம், அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரத்தில் கால் பங்கு கூட இல்லை. ஆனால் எதோ இதாவது வந்ததே என்ற எண்ணத்தில் வாங்கிக் கொண்டனர். அதையும் அவர்களுக்கு அலைந்து திரிந்து வாங்கிக் கொடுத்தது லிங்கா என்பதால்… அவனுக்கு நன்றி சொல்ல… “மேடம்க்கு சொல்லுங்க. அவங்க இருந்ததுனால தான் சீக்கிரம் முடிந்தது.” என்றான் லிங்கா.
யாதவி பக்கம் திரும்பியவர்கள் நன்றி சொல்லி, “மேடம்க்கு எதாவது வேணுமா? நம்ம தோட்டத்து காய்கறி.” என்று ஆரம்பிக்க… “இது என்னோட வேலை.” என்றவள், பெரிய கும்பிடு போட்டு அவர்களை அனுப்பி வைக்க…லிங்கா புன்னகைத்தான்.
“ஏதாவதுன்னா போன் பண்ணுங்க யாதவி.” என்றவன், அவன் கார்டை கொடுத்து விட்டுச் சென்றான்.
“எனக்கே என்னைப் பார்த்துக்கத் தெரியுதா?” என்பது போலத்தான் யாதவியின் எண்ணம். அதனால் பெரிதாக அவனிடம் எதையும் அவள் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அன்றே அலுவலகத்தில் வித்தியாசத்தை நன்றாக உணர்ந்தாள்.
இவளை எதுவும் சீண்டாமல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாகச் சதீஷ், லிங்காவிற்குத் தெரிந்த பெண் என்றதும் அவளிடம் வாலாட்ட தைரியம் இல்லை.
அன்று இரவு உணவின் போது, வீட்டுக்கு ஒரு அகராதி பிடிச்சது இருக்கும் போல என்றார் சிவகாமி.
அவனைத் தான் சொல்கிறார் என்று புரிந்தது. அந்த இன்னொருத்தர் யாரை என்றுதான் புரியவில்லை.
“எதிர்த்த வீட்டு யாதவி இருக்கா இல்ல… அவ புருஷனை விவாகரத்துப் பண்ணிட்டாளாம். இவ விவாகரத்து பண்ணிட்டான்னு அக்காவை போலத் தானே தங்கையும் இருப்பான்னு… தங்கைக்கு எதுவும் வரன் சரியா வரலையாம். அதனால தான் தங்கைக்குக் கல்யாணம் ஆகட்டும்னு, இவ தனியா இங்க வந்து இருக்காளாம்.” என்றதும்,
அவள் ஏன் தன்னைச் சுற்றி ஒரு வட்டம் அமைத்துக் கொண்டாள் என்று லிங்காவுக்கு இப்போது புரிந்தது.
“என்னைப் போல அறிவாளியும் நாட்டில இருக்காங்க.” என்ற மகனை, எதைக் கொண்டு அடிப்பது என்பது போலச் சிவகாமி பார்க்க…
“ஒத்து வராதுன்னு தெரிஞ்ச பிறகு சேர்ந்து வாழ முடியாது மா…” என்றான்.
“அதுதான் ஒத்து வரலைன்னு ஆகிடுச்சே… வேற யாரையாவது பண்ணிக்கலாம் இல்ல…”
“அதுவும் இது போல இருக்காதுன்னு என்ன நிச்சயம்? ஆளை விடுங்க. இப்போ என்ன யாதவி நல்லா இல்லையா… நான் நல்லா இல்லையா….” என்ற மகனை சிவகாமி முறைத்தார்.
தொடர்ந்து வந்த நாட்களில், யாதவியால் அலுவலகத்தில் அமைதியாக வேலைப் பார்க்க முடிந்தது. மகனும் பள்ளியில் பொருந்தி போய் விட… அவளுக்கு நாட்கள் நன்றாகவே சென்றது.