Advertisement

எனக்கென வந்த தேவதையே

அத்தியாயம் 16

சிவகாமிக்குச் சென்னையில் பொழுதே போகவில்லை. மகளைத் திட்டிக் கொண்டு தான் இருந்தார். “அங்க உங்க அண்ணன் பாதி நாள் வீட்ல இருந்து வேலை பார்ப்பான். மதியம் அவனுக்குச் சாப்பாடு போடுவேன். இப்போ சந்தோஷ் பயலும் இருக்கான். அவனும் வீட்டை சுத்தி சுத்தி வருவான். இங்க பொழுதே போக மாட்டேங்குது.” என்று புலம்பிக் கொண்டே தான் இருந்தார்.

தீபிகா அதைப் பரத்திடம் சொல்ல… “குழத்தைக்கு ஐந்து மாதம் ஆகிட்டா கூட நாமே சமாளிச்சுக்கலாம். அதோட உங்க அம்மா இங்க இருந்தா தான்… அங்க உங்க அண்ணனோட அருமை தெரியும். கொஞ்ச நாள் அவங்க இங்க இருக்கட்டும். அப்போதுதான் அங்க போய் ஒழுங்கா இருப்பாங்க.” எனக் கணவன் சொன்னது தீபிகாவுக்கும் சரி என்றே தோன்றியது.

சிவகாமி வீட்டு வேலை செய்யும் பெண்ணையே காலை வந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு விட்டு செல்ல சொல்லி இருக்க… அதோடு வாரத்தில் இரண்டு நாட்கள் லிங்கா இருக்கும் நேரம் வந்து வீட்டையும் சுத்தம் செய்துவிட்டு செல்வார். யாதவி சிவகாமி இல்லாத போதும், அந்த வீட்டிற்குள் செல்லவே இல்லை.

அவளுக்குக் காலை எழுந்து கணவனுக்குச் சமைத்து வைத்து விட்டு அலுவலகம் செல்லவே நேரம் சரியாக இருந்தது. சந்தோஷை கிளப்புவதை லிங்கா பார்த்துக் கொள்வான்.

யாதவி சோறை மட்டும் ஹாட்பாக்ஸில் வைத்திருப்பாள். அவன் அம்மாவிடம் சூட சூட உண்டு பழக்கம் அல்லவா… குழம்பு பொரியல் எல்லாம் லிங்கா உண்ணும் போது சூடு செய்து கொண்டு உண்பான்.

அன்று லிங்காவுக்கும் வெளி வேலை இருந்ததால்… காலை உணவை இவர்களுடனே உண்டுவிட்டுக் கிளம்பினான். மூவரும் பைக்கில் செல்ல… முதலில் சந்தோஷை பள்ளியில் விட்டு பிறகு மனைவியை அலுவலகத்தில் விட்டவன், அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

மதிய உணவு நேரத்திற்கு அவன் வேலையை முடித்துக் கொண்டு திரும்ப…. சந்தோஷிற்கு அரை நான் தான் பள்ளி என்பதால்… அவனையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லலாம் என்று நினைத்து, அவன் பள்ளிக்குச் சென்றான்.

சந்தோஷ் அங்கே விஷ்ணு அஞ்சலியுடன் சரி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான். லிங்கா நின்று அவன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் சந்தோஷ் அவனைக் கவனிக்கவில்லை.

அவன் இன்னமும் விளையாட்டு மும்முரத்தில் இருக்க… “சந்தோஷ்.” என லிங்கா அழைக்க… பிறகே பார்த்தவன், “அப்பா…” என்று ஓடி சென்று அவனிடம் தாவினான். தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் மகிழ்ச்சியை வெளிபடுத்த…

இங்க இருக்கியா இல்ல வீட்டுக்கு போகலாமா?” என்று லிங்கா வேண்டுமென்றே கேட்க…

வீட்டுக்கு என்றவன், லிங்காவிடம் இருந்து இறங்கி சென்று, அவன் பைகளை எடுத்துக் கொண்டு வந்தான்.

அவன் செல்வது விஷுனுவுக்குப் பிடிக்கவே இல்லை. பிறகு அவன் யாரோடு விளையாடுவான்.

நீங்க ஏன் இப்ப வந்தீங்க?” என்றான் லிங்காவைப் பார்த்து. அவன் சந்தோஷை விட ஒரு வயது பெரியவன்.

ஓ சாரி, நீங்க விளையாடிட்டு இருந்தீங்க இல்ல… அங்கிள் டெய்லி இந்த நேரத்துக்கு வரமாட்டேன். நாளைக்கு விளையாடுங்க.” என்றதும்,

அங்கி இல்ல அப்பா.” என்று சந்தோஷ் திருத்த… லிங்காவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

உனக்குத் தான் அப்பா… அவனுக்கு அங்கிள்.” என்றவன், அங்கிருந்த ஆயாவிடம் சொல்லிக் கொண்டு மகனோடு மனைவியின் அலுவலகத்திற்குச் சென்றான்.

சந்தோஷ் அவனைப் பார்த்ததும் அப்பா என்றது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க… அதை மனைவியிடம் பகிர்ந்துகொள்ளவே அங்கே சென்றான்.

வெளியில் இருந்து மனைவிக்குக் கைப்பேசியில் அழைத்தவன், மகனிடம் கொடுக்க… சந்தோஷ் வாங்கி அம்மா என்றான். கணவனின் கைபேசியில் மகனின் குரல் கேட்க…

அப்பாவும் பையனும் சேர்ந்தாச்சா…” என்றாள் யாதவி.

அவனிடம் இருந்து கைபேசியை வாங்கிய லிங்கா, “யாதவி ஒரு நிமிஷம் வெளிய வந்திட்டு போ.” என்றான்.

யாதவி வெளியே வர… மகன் இன்று தன்னைப் பார்த்ததும், அப்பா… என்று பாய்ந்து வந்ததைச் சொல்லி அவன் மகிழ….

இவன் கூப்பிட்டதுக்கே இவ்வளவு சந்தோஷமா?” என யாதவி தன்னையும் அறியாமல் சொல்லி விட்டிருந்தாள். சொன்னதும் தான் அவளுக்கே விளங்கியது.

இவன்தான் என்னை அப்பான்னு கூப்பிடுவான். வேற யாரு கூப்பிடுவா?” எனக் கேட்ட லிங்காவுக்கும், பிறகே அவள் சொல்வதில் வேறு அர்த்தம் இருக்கிறதோ என யோசிக்கத் தோன்றியது.

சட்டென்று அவன் மனைவியின் முகத்தைப் பார்க்க… அவளும் யோசனையில் தான் இருந்தாள். அப்படி எதாவது என்றால் இப்படியா இருப்பாள் என்று நினைத்தவன், தான் தவறாகப் புரிந்து கொண்டதாகவே நினைத்தான்.

அவன் கிளம்புவதாகச் சொல்ல, “அம்மா நீயும் வா…” என்றான் மகன்.

அம்மாவுக்கு ஆபீஸ் இருக்கே.” என்றவள், “இவனை ஏன் இப்பவே கூட்டிட்டு போறீங்க? இவன் உங்களை வேலையே பார்க்க விட மாட்டான்.” என்றதற்கு,

நான் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள தூங்கிடுவான். அதுக்குப் பிறகு பார்த்துப்பேன். எனக்கு ஒன்னும் கஷ்ட்டம் இல்லை.” என,

சமத்தா இருக்கணும் ஓகே வா… அப்பாவை வேலைப் பார்க்க விடணும்.” என மகனிடம் சொல்ல… தந்தையோடு வீட்டுக்குச் செல்லும் குஷியில், சந்தோஷ் எல்லாவற்றிக்கும் தலையைத் தலையை ஆட்ட… பார்த்த லிங்கா யாதவி இருவருக்கும் சிரிப்புதான்.

நீ சாயங்காலம் பார்த்து வா…” என லிங்கா கிளம்ப… யாதவி அவர்கள் இருவருக்கும் புன்னகையுடன் விடை கொடுத்தாள்.

அவள் இருக்கையில் வந்து உட்கார்ந்து தான் இருப்பாள். அவளது கைபேசி அழைக்க… தெரியாத எண் என்பதால் யோசனையுடன் தான் எடுத்தாள்.

ஹலோ…”

ஹலோ யாதவி மேடம், எப்படி இருக்கீங்க?” எனப் பரிட்சயமான குரல் கேட்க… மீண்டும் ஒருமுறை கைபேசியைச் சந்தேகமாகப் பார்த்தவள் என்ன திவாகர்…. உங்க நம்பர்ல இருந்து கூப்பிட்டா எடுக்க மாட்டேன்னு…. இன்னொரு நம்பர்ல இருந்து கூப்பிடுறீங்களா? உங்களோட பேசிட்டு இருக்க எல்லாம் எனக்கு நேரம் இல்லை. இது ஆபீஸ் நேரம்.” என்றவள் வைக்கச் செல்ல….

என்கிட்டே மட்டும் தான் பேச நேரம் இல்லை போல…இவ்வளவு நேரம் ஆபீஸ் முன்னால நின்னு யார்கிட்டையோ சிரிச்சு சிரிச்சு பேசின… அப்போ எல்லாம் ஆபீஸ்ன்னு தெரியலையா…” என்றான் திவாகர் கேலியாக.

ஒழுங்கா மரியாதையா பேசுங்க. அவர் என்னோட புருஷன்.” என்றவளுக்குப் பிறகே இதெல்லாம் திவாகருக்கு எப்படித் தெரியும் என்று தோன்ற….

நீங்க எங்க இருக்கீங்க திவாகர்?” என்றதற்கு,

நான் உன் ஆபீஸ் வெளியதான் இருக்கேன். நீ சென்னை பக்கமே வரலை… அதுதான் பார்த்திட்டு போகலாம்னு வந்தேன். காலையில வர லேட் ஆகிடுச்சு… அதுதான் நீ எப்ப வெளிய வருவேன்னு பார்த்திட்டு இருந்தேன். அப்போதான் உன்னைப் பார்த்தேன்.”

கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கப் போல….” என்றதும்,

நீங்களும் தான் கல்யாணம் பண்ணீங்க. நான் எதாவது கேட்டேனா? நமக்கு விவாகரத்து ஆகிடுச்சு திவாகர். இனி நான் என்ன பண்ணாலும், அது என்னோட சொந்த விஷயம். உங்களுக்கு அதைச் சொல்லனும்னு அவசியம் இல்லை.” என்றால் அலட்சியமாக.

நான் இன்னொரு கல்யாணம் பண்ணது தப்பு. அதனாலதான் நீ என்ன பண்றேன்னு பார்க்க முடியாம போயிடுச்சு. நீ இவ்வளவு சீக்கிரம் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன்னு நான் நினைக்கவே இல்லை.”

என்ன என்னை இன்னும் டார்ச்சர் பண்ணிட்டே இருக்கலாம்னு நினைச்சீங்களா? என்னைப் பார்த்தா அவ்வளவு முட்டாளா இருக்கா?” என யாதவி கோபத்தில் சீர….

நீதான் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்ட இல்ல… அப்போ சந்தோஷை என்கிட்டே கொடுத்திடு.” என்றதும், யாதவிக்கு அதிர்ச்சியில் ஒரு நொடி பேச்சே வரவில்லை.

சந்தோஷின் பேரை எடுத்தால் தான் யாதவியை மிரட்ட முடியும்.” என அவனுக்குத் தெரியும்.

இப்போ எனக்கு உங்ககிட்ட போன் பேசிட்டு இருக்க நேரம் இல்லை. நான் வேலை பார்க்கணும். நாம சாயங்காலம் நேர்ல பேசலாம். எங்க? எப்போன்னு? நான் போன் பண்ணி சொல்றேன்.” என்றதும்,

இல்லை இப்பவே பேசணும்.” என்றான்.

நீங்க என்னை இப்படியெல்லாம் மிரட்ட முடியாது திவாகர். நான் போலீஸ்க்கு போவேன்.” என்றதும், திவாகர் இறங்கி வந்தான்.

சரி நீ சொல்ற இடத்தில பார்க்கலாம்.” என்றதும்,

என் ஆபீஸ் முன்னாடி நின்னுட்டு இருக்காதீங்க. முதல் இங்க இருந்து போங்க. நான் சாயங்காலம் வேலை முடிச்சிட்டு தான் வருவேன்.” என்றவள், தொடர்பை துண்டித்து விட்டாள்.

உடனே லிங்காவுக்கு அழைப்போமா என்றுதான் நினைத்தாள். அவன் இப்போது வீட்டின் அருகே சென்றிருப்பான். இன்னும் அவன் உண்ண கூட இல்லை. சிறிது நேரம் சென்று அழைக்கலாம் என்று நினைத்தவள், அவளது மேல் அதிகாரியிடம் சென்று உடம்பு முடியவில்லை, அதனால் அரை நாள் விடுமுறை எடுப்பதாகச் சொல்லிவிட்டு வந்தாள். அன்று வெள்ளிக்கிழமை தான். அடுத்து இரண்டு நாட்கள் அலுவலகம் விடுமுறைதான்.

திவாகர் மேலும் அரை மணி நேரம் வெளியவே நின்றிருந்தான். யாதவி சொன்னது போல வேலை முடிந்துதான் வருவாள் போல என்று நினைத்தவன், அங்கிருந்து சென்று விட்டான்.

சந்தோஷ் மதியம் உறங்குவான். அவனை இங்கே அழைத்துக் கொண்டு மீண்டும் வருவது சிரமம். அதோடு அலுவலகத்தின் அருகே எந்தத் தகராறும் வேண்டாம் என்று நினைத்தவள், அலுவலகத்தின் பின் வாயில் வழியாக வெளியே வந்து ஆட்டோ பிடித்து வீட்டிற்குச் சென்றாள்.

Advertisement