மாடுகளுக்குப் பொங்கல் படைத்து, பூஜை போட்டு முடிக்க…. லிங்கா சிவகாமியிடம் கொடுத்து தான் வேலை ஆட்களுக்குப் பணம் கொடுக்க வைத்தான்.

பணத்தை வாங்கிக் கொண்டு வேலை ஆட்கள் கிளம்பி விட… இவர்கள் எல்லாம் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தனர். காலை வரும் முன்னரே மதிய சமையல் முடித்து வைத்து விட்டே சிவகாமி வந்திருந்தார். அதனால் போய்ச் செய்ய வேலை ஒன்றும் இல்லை.

இதே போலப் பக்கத்து தோட்டத்து ஆட்களும் பூஜை செய்ய வந்திருக்க… அவர்களோடு சிவகாமி உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

அவர்கள் சிவகாமியிடம் யாதவியைப் பற்றி விசாரித்தவர்கள், “உங்களுக்குப் போய் இப்படி ஒரு நிலை வரும்னு நினைக்கலை அண்ணி. அண்ணன் இருந்திருந்தா பையனை இப்படிச் செய்ய விட்டிருப்பாரா?” என்று சொல்ல….

நான் என்பதால் தான் மகன் தன் பேச்சை கேட்கவில்லையோ… தந்தை இருந்திருந்தால் கேட்டிறிப்பானோ என்ற எண்ணம் சிவகாமிக்கும் தோன்றியது.

சிவகாமி எப்போதுமே அப்படித்தான். மனதை ஒரு நிலையில் வைத்திருக்க மாட்டார். இப்படி அப்படி என்று குழப்பிக் கொண்டே இருப்பார். அதுதான் லிங்கா அவர் சம்மதம் கிடைக்கும் வரை திருமணத்திற்குக் காத்திருக்கவில்லை.

எல்லாம் அவங்கவங்க விதிப்படித்தான் நடக்கும்.” என்று அவர்களிடம் புலம்பிவிட்டு எழுந்து வந்தார். திரும்பி வரும் போது சந்தோஷ் அவர்களுடன் காரில் வந்தான்.

மதிய உணவு அருந்தியதும், பரத் மனைவி மகளை அழைத்துக் கொண்டு அவனின் பெற்றோர் இருக்கும் திருநெல்வேலிக்கு கிளம்பி விட்டான். இரண்டு நாட்கள் அவர்களோடு இருந்துவிட்டு வர சென்றனர். அவர் அப்பாவுக்குச் சொந்த தொழில் இருக்க… அதனால்தான் அவர்களால் மகனோடு சென்னையில் சென்று இருக்க முடியவில்லை. பரத்தின் அண்ணன் பெற்றோரோடு தான் இருக்கிறார்.

அவர்கள் கிளம்பியது மகனிடம், “நீ சாப்பிடலையா?” என்று சிவகாமி கேட்க…

இல்லை வேண்டாம், நான் என் வீட்ல சாப்பிட்டுக்கிறேன்.” என்று அழுத்தி சொன்னவன், “நீங்க ஊருக்கு வேற போறீங்க. ரொம்ப வேலைப் பார்க்காம ரெஸ்ட் எடுங்க.” என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டான்.

சிவகாமிக்கு எப்போதுமே அவர் வீட்டை விட்டு வெளியில் எங்கும் சென்று தங்க பிடிக்காது. இப்போது எதாவது பேசினால்… அதைச் சாக்கு வைத்து தீபிகாவுடன் செல்ல மாட்டார் என்று நினைத்தவன், அப்போது அவனின் வருத்தத்தையும் அவரிடம் காட்டவில்லை.

இவன் நல்லதுக்குச் சொன்னாலும், சிவகாமி தான் தவறாகப் புரிந்து கொள்கிறாரே… வேறு என்ன செய்வான்.

யாதவி வந்துதான் சமைத்துக் கொண்டிருந்தாள். கணவனைப் பார்த்தவள், “உங்களுக்குச் சாதம் சேர்த்து வைக்கட்டுமா?” என்று கேட்க… சரி என்றவன், “நான் இனி இங்கேயே சாப்பிடுறேன் யாதவி.” என்றான்.

மறுநாள் இரவு பரத் மனைவி மகளுடன் இங்கே வந்துவிட்டான். அதற்கு அடுத்த நாள் காலை எட்டு மணிக்குச் சென்னை கிளம்பினர். வெகு தூர பயணம் என்பதால்… லிங்கா டிரைவர் போட்டே அனுப்பினான்.

அவர்களை வழியனுப்ப லிங்கா, யாதவி, சந்தோஷ் மூவரும் கீழே வந்திருந்தனர்.

அவர்கள் கிளம்புவது பார்த்துச் சந்தோஷ் ஒரே அழுகை. அவர்களோடு தானும் செல்ல வேண்டும் என்று அவன் பிடிவாதம் பிடிக்க…

நீ உங்க அம்மா ஆபீஸ்ல இருந்து கொஞ்ச நேரம் லேட்டா வந்தாலே… வெளிய போய் நிற்ப… இதில இவர் அவங்க அம்மா இல்லாம இருந்திடுவாராம்.” என்ற லிங்கா, “நாம அப்புறமா போகலாம்.” என்றான் மகனிடம்.

சிவகாமிக்கே அவன் அழுவதைப் பார்த்து வருத்தமாக இருந்தது. அவர் பொதுவாகப் போய் வருகிறேன் என… பரத்தும் தீபிகாவும் அவர்களிடம் தனித்தனியாகச் சொல்லிக் கொண்டு சென்றனர். அவர்கள் சென்றதும், லிங்கா சந்தோஷை தூக்கி கொண்டு மாடிக்கு வர… பின்னே யாதவியும் வந்தாள்.

லிங்கா அவனை இறக்கி விட… சந்தோஷ் சென்று வாசல் பக்கமாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே வராமல் நிற்க… லிங்காவுக்கு அவனைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

என்ன டா பிரச்சனை உனக்கு? அப்பா உன்னை அப்புறம் வெளிய கூட்டிட்டு போறேன்.” என்றான்.

இவன்கிட்ட எதுக்கு இதெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க.” என்றவள், “அப்படியே ஒன்னு போட்டேனா தெரியும். நாலு நாளா ஆடினது பத்தாதா? இன்னும் ஊர் சுத்தணுமா உனக்கு? ஒழுங்கா நோட் எடுத்து வச்சு எழுதிப் பாரு. இந்த நாலு நாளா ஒண்ணுமே படிக்கலை.” என்று மகனை திட்ட…சந்தோஷ் இன்னும் சத்தமாக அழுக…

யாதவி, அவன்கிட்ட மெதுவா சொல்லு அவன் கேட்பான்.” என்றவன், சந்தோஷிடம் சென்று, “நாளைக்கு ஸ்கூல் இருக்கு இல்ல… நாம படிப்போமா..” என்று அழைக்க… அவன் உடனே சரி என்று வர… சொன்னேன் இல்ல என்று அவன் யாதவியிடம் பெருமை பேச…

இந்த வீட்ல நான் பேசினா கூடத் தப்பு. இப்படி அவன் முன்னாடியே சொல்லுங்க, அவன் என்னை மதிக்கவே மாட்டான்.” என யாதவி கோபிக்க….

அப்படியா?” என மகனைப் பார்த்து கேட்டவன், “நீ அம்மா சொன்னாக் கேட்ப தான…” என்று கேட்க… சந்தோஷ் வீம்புக்கு இல்லை என்று தலையாட்ட… அதைப் பார்த்து லிங்காவுக்கும் யாதவிக்கும் சிரிப்பு வந்து விட்டது.

டேய், நீ உங்க அம்மாகிட்ட எனக்கு அடி வாங்கிக் கொடுக்கிற முடிவுல இருக்கப் போல…” என்றதும்,

என் பேச்சை கேட்கலைனா போறான். உங்க பேச்சையாவது கேட்கிற மாதிரி பார்த்துக்கோங்க.” என்று சொல்லிவிட்டு யாதவி செல்ல… லிங்கா மகனிடம் அம்மா சொன்னாலும் கேட்கணும் என்றான்.

வீட்டு வேலை முடித்து, அடுத்து வரும் வார நாட்களுக்குத் தேவையானது எல்லாம் யாதவி எடுத்து வைக்க… அன்றைய நாள் வீட்டிலேயே இருந்தனர்.

வரிசையாகப் பண்டிகை நாட்களாகப் போய் விட, வேலையும் நிறைய இருக்க… யாதவி அசதியாக இருப்பதைப் பார்த்து லிங்காவும் இரவுகளில் விலகி தான் இருந்தான்.

அன்றும் கட்டிலில் படுத்தவனுக்குத் திவாகரை நினைத்து, எப்படிச் சந்தோஷிடம் இருந்து அவனை விலக்குவது என்பது குறித்து யோசனை…. அதோடு அவன் அம்மாவை நினைத்தும் ஏகப்பட்ட குழப்பம்.

அவன் கட்டிலில் படுத்து யோசனையில் இருக்க… சந்தோஷ் உறங்கி இருந்தான். யாதவி அவளே தரையில் மெத்தையை விரித்துவிட்டு கணவனின் அருகே சென்றவள், அவன் கை பிடித்து எழுப்ப…. எங்கே என்பது போலப் பார்த்தவன், பிறகே தரையில் இருந்த மெத்தையைக் கவனித்தான்.

வேண்டுமென்றே எங்க? என்றான்.

வாங்க அங்க படுத்து பேசிட்டு இருக்கலாம்.” என்று யாதவி அழைக்க…

பேசிட்டு மட்டும் இருந்தா போதுமா?” என்று அவன் வாயிக்குள் சிரிப்பை அடக்கியபடி கேட்க…அவனை முறைத்த யாதவி, “வாங்கன்னா வாங்களேன்.” என்று அவன் கைபிடித்து இழுக்க…

நான் உன்னைத் தூக்கிட்டு தானே போவேன். நீயும் என்னைத் தூக்கிட்டு போ.” என்றான்.

உங்களுக்குத் தேவைனா மட்டும் தூக்கிட்டு போவீங்க. அப்புறம் அங்கேயே விட்டுட்டு, நீங்க மட்டும் இங்க வந்து படுத்துப்பீங்க.” யாதவி அவனை எழுப்பியபடி சொல்ல….

மனைவியின் இழுப்புக்கு எழுந்து அவளுடன் சென்றபடி, “அது முதல் இருக்கத் தெம்பு அப்புறம் இருக்கிறது இல்லை. என்ன பண்ண சொல்ற? கட்டிலில் இருந்து தூக்கிறது ஈஸி…. தரையில இருந்து தம் கட்டி தூக்க முடியாது.” என்றவன், “அதுவும் நீ எப்ப தூங்கலாம்னு இருப்ப போலிருக்கு. நீ உடனே தூங்கிடுற. நான் என்ன பண்றது?” என்றபடி அவன் மெத்தையில் படுக்க… இவன்கிட்ட போய்க் கேட்டோமே என்று தன்னையே நொந்து கொண்டவள், விளக்கணைத்து அவன் அருகில் படுத்துக் கொண்டாள்.

சரி எதோ பேசணும்னு சொன்னியே சொல்லு.” என லிங்கா அவள் பக்கம் திரும்பி படுக்க…

அவனை அனைத்துக் கொண்டவள், “இதுக்குதான் கூப்பிட்டேன். எதையும் யோசிக்காம தூங்குங்க.” என்றாள். மனைவி தன்னைப் புரிந்து கொண்டதில் லிங்காவின் மன இறுக்கம் தளர….

எனக்கு இப்படியெல்லாம் இருந்தா தூக்கம் வராது.” என்றவன், வேறு வேலையில் இறங்க… அன்று அசதியில் லிங்கா தான் முதலில் உறங்கிப் போனான்.

அவன் நெற்றியில் முத்தமிட்டு, அவனுக்குப் போர்வை போர்த்தி விட்ட யாதவி, எழுந்து சென்று கட்டிலில் மகனுடன் படுத்துக் கொண்டாள்.