அலுவலகத்திற்குள் வந்த லிங்காவை சக ஊழியர்கள் வரவேற்க… யாதவி நிமிர்ந்து ஒருபார்வை மட்டும் பார்த்துவிட்டு வேலையில் கவனமாக இருக்க… திமிரை பார்த்தியா இவளுக்கு என நினைத்துக் கொண்டான்.

என்ன லிங்கா சார்…ஆபீஸ் மூடுற நேரம் வந்திருக்கீங்க?” என்று சதீஸ் கேட்டதற்கு,

என் பொண்டாட்டியை வீட்டுக்கு கூடிட்டு போக வந்தேன். அதுக்கு இந்நேரம் தானே வரணும்.” என்றதும் எல்லோருக்கும் புரிந்து விட… இருந்தாலும் தவறாக எதுவும் சொல்லி விடக் கூடாது என அமைதியாக இருக்க…

நானும் யாதவியும் கல்யாணம் பண்ணிகிட்டோம்.” என்றவன், எல்லோருக்கும் இனிப்பு கொடுக்க….

வாழ்த்துக்கள் லிங்கா சார்…” என்றவர்கள் யாதவிக்கும் வாழ்த்து சொல்ல… அவள் லேசாகப் புன்னகைத்தாள்.

சுமதி யாதவியைப் பார்த்து, “இப்படி ஒரு அழுத்தத்தை நான் பார்த்ததே இல்லை. நீங்களே சொன்னா என்ன யாதவி?” என்று கேட்க…

அவர் எப்படியும் வருவாருன்னு எனக்குத் தெரியும். அவரே சொல்லட்டும்னு நினைச்சேன். பாருங்க நான் சொல்லி இருந்தா இப்படி ஸ்வீட் எல்லாம் கொடுத்து சொல்லி இருக்க மாட்டேன்.” என்று யாதவி சொல்ல… எல்லோரும் அதைக் கேட்டு சிரிக்க… லிங்காவும் அவளைப் புன்னகையுடன் பார்த்திருந்தான்.

இருவரும் விடைபெற்று வெளியில் வர…. லிங்கா அவளைப் பைக்கில் அழைத்துக் கொண்டு சந்தோஷின் பள்ளிக்கு செல்ல… அங்கே அவனின் பெயரை கார்டியனாகச் சேர்த்து விட்டு, இருவரும் சந்தோஷை அழைத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

சந்தோஷிற்கு லிங்காவைப் பார்த்ததும் ஒரே குஷி… அதோடு பைக்கில் செல்வது இன்னும் குஷி.

நேத்து சந்தோஷை கோவிலுக்குக் கூட்டிட்டு போகலை. இன்னைக்கு மூன்னு பேரும் போகலாமா?” என்றதற்கு, யாதவி சரி என்றாள்.

மூவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு, அப்படியே கடைத்தெருவுக்குச் சென்று வேண்டிய சாமான்கள் வாங்கிக் கொண்டு, இரவு உணவையும் வெளியவே முடித்துக் கொண்டு வீடு வந்தனர்.

இவர்கள் வந்த போது ஜெயந்தி அவர் வாங்கி வைத்திருந்த பாலைக் கொடுக்க… வந்ததும் அதைக் காய்ச்சியவள், லிங்காவுக்கும், சந்தோஷுக்கும் கொடுக்க… இருவரும் பருகினர். இரவு எப்போதும் போல லிங்கா அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டான்.

அடுத்து வந்து நாட்களில் காலையில் பெரும்பாலும் லிங்கா தான் சந்தோஷை பள்ளியில் விட்டுவிட்டு, அப்படியே யாதவியை அலுவலகத்தில் விடுவான். மாலை எப்போதோ ஒருமுறை அந்தப் பக்கம் வேலையாக வந்தால்… அப்படியே இவர்களையும் அழைத்து வருவான். இல்லையென்றால் இருவரும் பேருந்தில் வருவார்கள். இரவு ஒருமுறை வந்து இருவரையும் பார்த்துவிட்டு செல்வான்.

சிவகாமி உடம்பு முடியவில்லை என்று படுத்தே கிடந்தார். அவரைப் பார்ப்பது போலப் பாக்கியம் வந்து விடுவார். இதில் ஒவ்வொருவராக விஷயம் தெரிந்து கைபேசியில் அழைத்துக் கேட்க… சிவகாமியும் பாக்கியமும் புலம்பி விட்டு வைப்பார்கள்.

இனி புலம்பி என்ன ஆகப் போகிறது என்றும் சொல்லிக்கொள்வார்கள்.

லிங்காவின் தந்தை பக்க உறவினர்களுக்கு விஷயம் தெரிய… அவர்கள் நேரிலேயே வந்துவிட்டனர்.

கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னான். எதோ இப்பாவாவது செஞ்சுகிட்டனே என நினைத்தனர்.

லிங்காவின் சித்தப்பா குடும்பம் மொத்த பேரும். மகன் மருமகள் பிள்ளைகள் சகிதம், அந்த வார சனிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்திருந்தனர்.

அவர்கள் வரும் போது லிங்கா அலுவலக அறையில் தான் இருந்தான். வந்தவர்களை உபசரிக்க… “கல்யாணம் ஆகிடுச்சு சொன்னாங்க, எங்க உங்க மருமகள்?” என வந்தவர்கள் கேட்க.. சிவகாமி பதில் சொல்லாமல் இருக்க… லிங்கா யாதவிக்கு அழைத்து வீட்டிற்கு உறவினர்கள் வந்திருப்பதாகச் சொன்னவன், அவர்களை அங்கே இன்னும் பத்து நிமிடங்கள் சென்று அழைத்து வருவதாகச் சொல்லி வைத்தான்.

வீடெல்லாம் சுத்தமாகத்தான் இருந்தது. அம்மாவும் மகனும் அப்போதுதான் உறங்கி எழுந்திருந்தனர். வேகமாக மகனுக்கு முகம் கழுவி உடைமாற்றியவள், தானும் தயாரானாள்.

லிங்கா அவன் சித்தப்பா குடும்பத்தினரை அழைத்து வந்து அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க… யாதவி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். சந்தோஷை லிங்கா தூக்கி வைத்திருந்தான்.

எதாவது சாப்பிடுங்க.” என யாதவி சொல்ல…

நாங்க அங்க சாப்பிட்டோம். டீ மட்டும் கொடு மா.” எனக் கேட்டு வாங்கி அருந்திவிட்டு சென்றனர்.

மீண்டும் இங்கே சிவகாமி இருக்கும் வீட்டிற்கு வந்தவர்கள், நல்ல பெண்ணா தானே இருக்கா… ஏன் சேர்த்து வச்சுக்காம தனியா இருக்கீங்க. மருமகளோடு சேர்ந்து இருங்க.” எனச் சிவகாமிக்கு அறிவுரை வழங்கிவிட்டு செல்ல…

என்னை வேணும்னே கிண்டல் பண்ண, உன் சித்தப்பா பொண்டாட்டி கிளம்பி வந்திருக்கா. இப்படி ஒரு பெண்ணை மகன் கல்யாணம் பண்ணி இருக்கான்னு மனசுக்குள்ள சிரிச்சிருப்பா.” எனச் சிவகாமி சொல்லி கொந்தளிக்க…

இப்படிப்பட்ட பொண்ணுனா எனக்குப் புரியலையே…. உங்களுக்கு அவளைப் பிடிக்கலைனா விடுங்க மா… அதுக்காக இப்படியெல்லாம் பேசாதீங்க. யாரு என்ன நினைச்சாலும் எனக்கு ஒன்னும் இல்லை.” என்றான் லிங்கா கண்டிப்பாக.

அன்று இரவு யாதவி உண்ணும் போது, லிங்கா அவளது தட்டில் இருந்த பொரியலை கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டவன் முகம் அஷ்ட்டகோனலாக…

என்ன இவ்வளவு கேவலமா இருக்கு உன் சமையல்.” என்றதும் யாதவி அவனை முறைக்க…

நிஜமா சொல்றேன் நல்லாவே இல்லை.” என்றான்.

சந்தோஷுக்காகக் காரம் கம்மியா போட்டிருக்கேன்.

அவனுக்குச் சரி, நீயேன் இதைச் சாப்பிடுற?

எனக்குன்னு தனியா வேற பண்ணுவாங்களா?” என அவள் கேட்க…

பெண்கள் தங்களுக்கு மட்டும் என்றால் சமைக்கவே மாட்டார்கள் என்று லிங்காவுக்குத் தெரியாது போல… அவன் எதோ அதிசய பிறவியைப் போல அவளைப் பார்த்து வைத்தான்.

நீ ஸ்லிம்மா இருக்கிறதோட ரகசியம் இதுதான் போல…”

இத்தனை நாட்களில் அவள் சந்தோஷுக்கு என்ன கொடுக்கிறாளோ அதைதான் அவளும் உண்ணுகிறாள் என்று கவனித்திருந்தான். இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று நினைத்தவன், “இனி நைட் நான் உன்னோட சாப்பிடறேன். நம்ம ரெண்டு பேருக்கும் ஒழுங்கா சமைக்கிற.” என்றான்.

அதன் பிறகு வந்த நாட்கள் இரவு உணவு இருவரும் சேர்ந்தே அருந்தினர். கணவனுக்காக யாதவியும் ஒழுங்காகச் சமைத்தாள். சந்தோஷிற்குக் காரத்தையும் லிங்கா பழக்கினான். இரவு எப்போதும் போல அவன் வீட்டிற்குச் சென்று விடுவான்.

திருமணமாகி பத்து நாட்களுக்கு மேலே சென்றிருக்கும், அன்று சனிக்கிழமை என்பதால் மகனை உறங்க வைக்க அவசரம் காட்டாமல் யாதவி அவனை விளையாட விட்டிருக்க… இரவு உண்டுவிட்டு கணவனுக்குப் பால் கொண்டு வந்து தந்துவிட்டு எதிரில் உட்கார்ந்தாள்.

லிங்கா அவளைப் பார்க்க.. அவள் அணிந்திருந்த நைட்டிக்கு மேல் தாலி வெளியே இருக்க… அவனுக்குக் கழுத்தை விட்டு சற்று கீழே இருக்கும் செயின், அவளுக்கு மார்புக்கு மத்தியில் இருந்தது.

நான் அன்னைக்கு அவசரமா வாங்கினதுனால தாலி மட்டும்தான் வாங்கினேன். செயின் நான் கழுத்துல போட்டிருந்தது. உனக்கு இந்த வாரம் புதுசா வாங்கிக்கலாம்.” என்றதும்,

வேண்டாம் இதே நல்லா இருக்கு. எனக்கு இதே போதும்.” என்றாள்.

அன்று அவன் கிளம்புவது போலவே இல்லை.

கிளம்பலையா என்று எப்படிக் கேட்பது என்று தெரியாமல் இருந்தவள், கொஞ்சம் பதட்டமாகவும் உணர்ந்தாள். அவனும் அதைக் கவனித்துத் தான் இருந்தான்.

அன்று பரத் வந்திருந்தான். அதனால் அவன் அங்கே இருக்க… இவன் இங்கே இன்று தங்கும் எண்ணத்தில் தான் வந்திருந்தான்.

தூங்கலாமா என்று சந்தோஷிடம் கேட்டவன், அவனைத் தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்று, அவனை மெத்தையில் விட்டு அவனும் பக்கத்தில் படுத்துகொள்ள… சந்தோஷ் இவன் எதுக்கு டா இங்க இருக்கான் என்பது போலப் பார்த்தவன், “அங்கி வீடு அங்க…” என ஜன்னல் பக்கம் காட்டினான்.

அதாவது அவன் அங்கே சென்று தூங்க வேண்டுமாம். இது அவன் வீடு இல்லையாம்.

நல்லவேளை இவன் சின்னதா இருக்கும் போதே கல்யாணம் பண்ணேன். இல்லைனா இவங்க அம்மாவை கல்யாணம் பண்ண விட்டிருக்க மாட்டான் போல…” என நினைத்தவன்,

இதுவும் அங்கி வீடு தான் நீ படு.” என்றான்.

பாத்தி தேடுவா…” என்றான் அடுத்து.

சிவகாமி அவனைத் தேடுவாராம்.

எதுக்கு டா என்னைத் துரத்துற…” என லிங்கா கேட்க… வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த யாதவி சத்தமாகச் சிரித்து விட்டாள்.

அவன் என்னைத் துரத்துறது, உனக்குச் சந்தோஷமா இருக்கு போல…” என்றவன், “அங்க எங்க அம்மா உன்னை அங்க வரக்கூடாதுன்னு சொல்றாங்க. நீ என்னை அங்க இருன்னு சொல்ற…இன்னும் இவனுக்கு நான் யாருன்னே புரியலை.” என்றவன், இப்படியே இருந்தா விளங்கிடும் எனச் சொல்லிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டான்.

பிறகு வந்து போய்க் கொண்டிருந்தால்… சந்தோஷ் அவனைப் பற்றி என்ன நினைப்பான் என இப்போது தான் லிங்கா யாதவி இருவருமே யோசிக்க ஆரம்பித்தனர்.

நீங்களும் தானே அங்க இருந்துக்கிறேன்னு சொன்னீங்க. இப்போ என்னை மட்டும் சொல்றீங்க.” யாதவி சொல்ல…

ஆமாம் நான் பண்ணதும் தப்புதான். அதுதான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்.” என்றான்.

இப்போது மகனாக, கணவனாக இருப்பதை விட… முதலில் தந்தையாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தான். அதற்கு முதலில் அவர்கள் மூவரும் ஒரே குடும்பமாக வசித்தால் தானே முடியும்.  

யாதவி ஹாலில் விளக்கனைத்து வந்தவள், மகனின் மறுபுறம் படுத்துக்கொள்ள… இப்போது லிங்காவின் மனம் கொஞ்சம் சமாதானம் ஆனது. உண்மையில் அவன் அம்மாவுக்காகத்தான் யாதவியும் யோசிக்கிறாள் என அவனுக்குப் புரியாமல் இல்லை. எதாவது செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

சந்தோஷிடம் லிங்காவை அப்பா என்று அழைக்க சொல்ல ஒரு நொடி போதும். ஆனால் அப்படி அவன் அழைக்கும் போது, தந்தை என்ற உறவை சந்தோஷ் லிங்காவிடம் உணர வேண்டும் என்று இருவரும் நினைத்தனர்.   

சந்தோஷ் இருவரின் பக்கமும் மாறி மாறி படுத்து விளையாடியவன், சிறிது நேரத்தில் உறங்கிப் போனான்.