வீட்டிற்கு வந்ததும் சந்தோஷ் அவனது விளையாட்டுச் சாமன்களை வைத்து விளையாட… லிங்கா ஒரு நாற்காலியிலும் யாதவி ஒரு நாற்காலியிலும் உட்கார்ந்திருந்தனர்.
சிறிது நேரம் சென்று, “நாம திடிர்ன்னு கல்யாணம் பண்ணது அவங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கும். நீங்க இந்த நேரத்துல அவங்களோட இருங்க. அவங்க என்னைத்தான் வரக் கூடாதுன்னு சொன்னாங்க. உங்களைச் சொல்லலை. நீங்க அங்க இருங்க லிங்கா.” என்றால் யாதவி.
அவனும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தான். இப்போது விலகி நின்றால்… விரிசல் அப்படியே நிரந்தரம் ஆகிவிடும். உடனே யாதவியோடு குடும்பம் நடத்த அவன் இந்தத் திருமணம் செய்யவில்லை. அவர்களுக்குள் பிரிவு ஏற்படாமல் இருக்கவே இந்தத் திருமணம். இப்போது திருமணமும் நடந்து விட்டது. இனி பொறுமையாகக் கையாள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
யாதவி புரிந்து கொள்வாள். ஆனால் சிவகாமி புரிந்துகொள்ள மாட்டார். பொண்டாட்டி வந்ததும் மகன் தன்னை விட்டுவிட்டதாக நினைப்பார். அவனின் தந்தை இருந்தாலும் பரவாயில்லை, அவரும் இல்லாத போது, கவனமாகக் கையாள வேண்டியது இருந்தது.
“சரி நான் அங்க இருக்கேன். ஏதாவதுன்னா போன் பண்ணு.”
“ம்ம்…”
லிங்கா சந்தோஷை எட்டிப் பார்க்க… அவன் விளையாடிக் கொண்டிருந்தான். யாதவியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான்.
லிங்கா மட்டும் திரும்பி வர.. சிவகாமி அழுது கொண்டிருந்தார். அவரைப் பாக்கியம் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
“அம்மா, நீங்க அழுவுற அளவுக்கு எல்லாம் இங்க ஒன்னும் நடக்கலை மா… அழுதழுது எதாவது இழுத்து வச்சுக்காதீங்க. எந்திரிச்சு போய் எதாவது வேலை இருந்தா பாருங்க.” என லிங்கா சொல்ல… மகன் எங்கே தன் கையை விட்டு போய்விட்டானோ என்று நினைத்துதான் அழுது கொண்டிருந்தார். அவன் திரும்ப வந்ததும் சிவகாமியும் அழுகையை நிறுத்தினர். ஆனால் உடம்பு முடியவில்லை என்று சொல்லி படுத்துக் கொண்டார்.
பாக்கியத்தை அவர் மகன் வந்து அழைத்துச் சென்றான். அன்று லிங்கவுடன் சண்டை போட்டதால், உள்ளே வராமல் வெளியே இருந்தே அழைத்துச் சென்றான்.
இரண்டு வாரங்கள் வீட்டில் இல்லாதது. வீடெலாம் தூசியாக இருந்தது. யாதவி வீட்டை கூட்டி விட்டு முகம் கழுவி விளக்கேற்றி வணங்க… அப்போது பால்காரர் வர பால் வாங்கினாள். ஜெயந்தி வந்து அவளோடு பேசிக் கொண்டிருக்க… யாதவி அவள் வீட்டில் கொடுத்த இனிப்புக் காரங்களை அவருக்கும் எடுத்து வந்து கொடுத்தாள்.
“நீ சொல்றது சரிதான். இனிமே என்ன பண்ண முடியும்?” என்றவர் விடைபெற்று சென்றார்.
லிங்காவும் பரத்தும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க… தீபிகா மகளைக் கணவனிடம் கொடுத்துவிட்டு அங்கேயே உட்கார்ந்தாள்.
“ஆனாலும் மச்சான், நீ இப்படிச் சொல்லாம கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாது டா.” என்று பரத் தனக்குச் சம்பந்தம் இல்லாதது போல ஆரம்பிக்க…
“என்னை இதை நம்பச் சொல்றீங்களா? நீங்க ரெண்டு பேரும் கூட்டு களவாணிகள்னு எனக்கு மட்டும் இல்லை… இந்த ஊருக்கே தெரியும். எங்க அண்ணன் உங்ககிட்ட சொல்லாம எதுவும் பண்ணி இருக்க மாட்டான். சும்மா நடிக்காதீங்க. காலையில இருந்து ஆளைக் காணோம். இதுல இவர் சொல்றதை நாங்க நம்பனுமாம்.” என்ற தீபிகா கணவனின் தலையில் கொட்டினாள்.
“அடிக்காத டி பிசாசே…” என்றவன், “உங்க அம்மாவும் அத்தையும் எதோ ப்ளான் போட்டாங்க தானே…” என்றதற்கு, ஆமாம் என்று தீபிகாவும் ஒத்துக் கொண்டாள்.
“அதுக்குதான் நாங்க முந்திகிட்டோம்.” என்றான்.
இன்னும் எதையெல்லாம் இழுத்து வைத்திருப்பார்களோ… நல்லவேளை திருமணம் செய்து கொண்டோம் என லிங்காவும் நினைத்தான்.
மதியம் வைத்த குழம்பு இருக்க… தீபிகா இருவருக்கும் தோசை ஊற்றிக் கொடுத்தாள். உண்டதும் பரத் சென்னை கிளம்பிவிட்டான். லிங்கா சென்று அவனைப் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு வந்தான்.
திரும்பி வரும் போது யாதவி என்ன செய்கிறாள் எனப் பார்க்க அங்கே செல்ல… அவள் பால் சோறு உண்டு கொண்டிருந்தாள். பக்கத்தில் சந்தோஷ் உட்கார்ந்திருந்தான்.
அவர்கள் இருவரும் ஹாலில் தரையில் உட்கார்ந்து இருக்க… லிங்காவும் தரையிலேயே உட்கார்ந்து சந்தோஷை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான்.
“நீங்க சாப்பிடீங்களா?”
“பரத் ஊருக்கு கிளம்பினதுனால அவனோட சேர்ந்து சீக்கிரமே சாப்பிட்டேன். வீட்ல ரெண்டு பேரும் பொம்பளைங்க. அதோட சின்னக் குழந்தை வேற இருக்கு…அதுதான் நான் சென்னைக்கு வந்த போது, பரத் இங்க வந்திருந்தான்.” என்றான்.
“நீ ஏன் பால் சோறு சாப்பிடுற?”
“இன்னைக்குத் தான ஊர்ல இருந்து வந்திருக்கேன். இனிமே தான் மாவு ஆட்டணும்.”
“நான் உன்னை எதாவது வேணுமான்னு கேட்டிருக்கணும் இல்ல… எனக்குத் தோணவே இல்லை. படிக்கும் போது நிறைய ஹாஸ்ட்டல்ல தான் இருந்திருக்கேன். வீட்ல ஆம்பிளை பையன்னு எங்க அம்மா சமையல்கட்டு பக்கமே விட்டது இல்லை. அவங்க இல்லாதப்ப டீ, காபி போட… மாவு இருந்தா தோசை ஊத்திப்பேன் அவ்வளவு தான் தெரியும்.”
“பரவாயில்லை… எனக்குப் பால் சோறு சாப்பிட்டுப் பழக்கம் தான்.”
உண்டு முடித்து யாதவி அவனுக்குச் சூடாகப் பால் கொண்டு வந்து தர… அவன் அதை வாங்கிப் பருக… அவன் ஒரு பக்கம் உட்கார… இவள் ஒரு பக்கம் உட்கார்ந்தாள்.
நல்லவேளை திருமணம் செய்து கொண்டோம் என்று தோன்றியது. இல்லையென்றால் முகம் பார்த்து பேசவே யோசிப்பாள். இப்படி உரிமையாக வந்து செல்லவாவது முடிகிறதே என நினைத்துக் கொண்டான்.
சந்தோஷ் அவன் மடியிலேயே உறங்கி இருக்க… யாதவியின் கண்களிலும் உறக்கத்தைப் பார்த்தவன், “சரி நான் கிளம்புறேன். நீங்க படுங்க.” என்றதும்,
“ஆமாம் நாளைக்கு ஆபீஸ் போகணும். காலையில எழுந்துக்கணும்னு நினைச்சாலே கஷ்ட்டமா இருக்கு.” என்றாள்.
தன் மடியில் இருந்த சந்தோஷை தூக்கியவன், எங்கே படுக்க வைக்க வேண்டும் என்று கேட்க… அறைக்குள் சென்று யாதவி மெத்தையை எடுத்து தட்டி போட்டு போர்வையை விரிக்க… சந்தோஷை படுக்க வைத்தவன், அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.
அவன் சென்றதும் பாத்திரங்களைக் கழுவிவிட்டு, மறுநாளுக்குத் தேவையானது எடுத்து வைத்துவிட்டு பெற்றோரை அழைத்தவள், இன்று லிங்காவை திருமணம் செய்து கொண்டதாகச் சொல்ல….அவர்களுக்கு அதிர்ச்சி தான்.
“ஏன் அவசரமா பண்ணீங்க? சொல்லி இருந்தா நானும் அப்பாவும் வந்திருப்போமே.” என்றதற்கு, ஜெயந்தியிடம் சொன்னதையே சொன்னவள், அவங்க வீட்ல யாரும் வராத போது, நீங்க மட்டும் வந்தா நல்லா இருக்காது இல்ல மா…”
“அவர்தான் நேத்தே தெளிவா சொல்லிட்டு தானே வந்தார். கல்யாணத்துக்கு யாரையும் கூப்பிடுற மாதிரி இல்லைன்னு.”
“அவர் வீட்ல என்ன சொன்னாங்க”
“அவங்க கோபமாத்தான் இருக்காங்க. அதனால நாங்க இங்க நான் இருந்த வீட்ல இருக்கோம்.” என்றாள்.
“உனக்குக் கல்யாணம் நடந்ததை நினைச்சு சந்தோஷ்ப்படுறதா… இல்லை இப்படி நடந்திடுச்சேன்னு நினைச்சு வருத்தபடுறதா புரியலை.”
“அம்மா அதெல்லாம் நினைக்காதீங்க. ரெண்டு பேருக்குமே ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கு. இதுல இன்னொரு கல்யாணமான்னு ஒருமாதிரி இருந்தது. ஆனா இப்போ அவர் ப்ரண்ட்ஸ் மட்டும் தான் கூட இருந்தாங்க. அதனால ஒன்னும் தெரியலை…” என்றவள், திருமணம் எப்படி நடத்தது என்று விரிவாகச் சொன்னாள்.
“ஜனனி எப்படி இருக்கா?”
“அவ இப்போதான் தூங்கப் போனா.”
“சரி நாளைக்கு அவகிட்ட பேசுறேன்.”
“யாதவி அவங்க கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் நீ பொறுமையா போ… எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.” என்றார் அவளின் அம்மா. சரி என்றவள் வைத்துவிட்டாள்.
தாங்கள் இருவரும் இன்னும் தனித்தனியாக இருக்கிறோம் என்று அவர்களிடம் சொல்லவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதைச் சொல்ல வேண்டும் என்றில்லை.
மிகவும் களைப்பாக இருக்க.. மகனின் அருகே சென்று படுத்து உறங்கிவிட்டாள்.
சிவகாமி உண்டு முடித்து ஹாலில் இருந்தவர், மகன் இரும்பு கேட்டை மூடிவிட்டு மாடிக்குச் செல்வதை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.
மாடி அறைக்கு வந்ததும் உடைமாற்றிவிட்டு வெளியே வந்து லிங்கா பார்க்க… யாதவியின் படுக்கை அறையில் விளக்கு எரியாமல் இருப்பதிலேயே அவள் உறங்கி விட்டாள் எனத் தெரிந்தது. அவனும் சென்று நேரமே படுத்து உறங்கிவிட்டான்.
மறுநாள் காலை எழுந்த யாதவி, இரண்டு வாரங்கள் சென்று அலுவலகம் செல்வதால்… வேலை செய்யத் தடுமாறினாள். வீட்டில் காய்கறி எதுவமே இல்லை. அதனால் காலை மதியம் இருவேளைக்கும் சாதமும் பருப்பும் சேர்த்து வைத்தாள். இன்று வரும் போது காய் வாங்கிக் கொண்டு வரவேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
வேலையை முடித்து விட்டு மகனை எழுப்ப… அவன் எழுந்துகொள்ளாமல் படுத்தி எடுத்தான். பிறகு அவனை ஒரு வழியாகக் கிளப்பி அவளும் கிளம்ப… எப்போதையும் விடத் தாமதமாகிவிட்டது.
பைகளை எடுத்துக்கொண்டு மகனை தூக்கி கொண்டு அவள் விறுவிறுவென நடக்க… வெளியில் நின்றிருந்த சிவகாமி அவளைப் பார்த்து தான் இருந்தார். இன்னும் லிங்கா எழுந்து வரவில்லை.
இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் தான் பண்ணி இருக்காங்களா? என அவருக்கே சந்தேகம் வந்தது. என்னவோ பண்ணட்டும் என்று நினைத்தவர் உள்ளே சென்றுவிட்டார்.
லிங்கா எழுந்துகொள்ளும் போது நேரம் ஒன்பது மணி. அரக்கபரக்க எழுந்தவன், மாடியில் இருந்து எதிர்வீட்டை பார்க்க…வீடு பூட்டியிருந்தது. அவளை அலுவலகத்தில் சென்று விட வேண்டும் என நினைத்திருந்தான். நன்றாக உறங்கி விட்டான்.
நிதானமாகக் கிளம்பி காலை உணவை அருந்திவிட்டு, அவன் அலுவலக அறையில் சென்று வேலைப் பார்த்தான். இன்று வெளியில் செல்லும் வேலை இல்லை. அவனைப் பார்க்க சிலர் வர… மாலை வரை வேலை சரியாக இருந்தது.
நான்கு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி, யாதவியின் அலுவலகம் சென்றான். செல்லும் முன் இனிப்புகள் வாங்கிக் கொண்டு சென்றான். அவனுக்குத் தெரியும் யாதவி எதுவும் சொல்லியிருக்க மாட்டாள் என்று.
யாதவி எப்போதும் போலச் சுடிதார் அணிந்து வந்திருந்தாலும், புதிதாக நெற்றி வகுட்டில் இருந்த குங்குமம் எல்லோரையும் ஆராய்ச்சியில் ஈடுபட வைத்திருதது. ரெண்டு வாரமா வரலை… வேற யாரையும் கல்யாணம் பண்ணிகிட்டாங்களா… இல்லைனா முன்னாடி கல்யாணம் ஆனதுக்கு இப்போ வச்சிருக்காங்களா எனத் தனியாகக் கலந்தாய்வு நடந்து கொண்டிருந்தது.
யாதவிக்குத் தெரிந்தாலும் கண்டுகொள்ளவில்லை. சுமதியிடம் கூட எதுவும் சொல்லவில்லை. இரண்டு வாரங்கள் வேலையையும் இன்றே முடிப்பவள் போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.