Advertisement

“அவ்ளோ தானா?” வாசு அவளை இன்னும் ஆராய்ந்துகொண்டே கேட்டான்.

“இந்த மூக்குத்தி மட்டும் தான் இருக்கு” மீரா கூறினாள்

“வைரமா?”

“ஆமா”

“அப்போ குடு”

மீராவின் தாய் கொந்தளித்தார்.

“என்ன மாப்பிள்ளை? அந்த குட்டி மூக்குத்தியை கூட விட மாட்டிங்களா?”

வாசு எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான். சிவில் இன்ஜினியரிங் படித்தவன். இதுவரை ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் வேலை பார்த்தவன் இப்பொழுது தனியாக எடுத்து செய்ய நினைக்கிறான். அவனுக்கு குடும்ப சொத்து என்று எதுவும் இல்லை. சூரிட்டி காட்டி கடன் வாங்க கூட எதுவும் இல்லை. மீராவும் அவனும் வேலை பார்த்து இந்த ஒரு வருடமாக சிறிது சேமித்து வைத்து இருந்தனர்.

நேற்று தான் மீராவுக்கு வளைகாப்பு பண்ணி அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள்.

இந்த நேரத்தில் வாசுவுக்கு ஒரு புராஜெக்ட் கிடைக்க அதுக்கு முதல் போட வேண்டியது இருந்தது.

மீராவின் அம்மா வீடு மேல்தட்டு வர்க்கம் தான். காதல் என்று இவனை கொண்டு வந்து நிறுத்த அவனின் பேச்சும் துறுதுறுப்பும் அவள் அப்பாவுக்கு பிடித்துவிட்டது. நூறு பவுன் போட்டு திருமணம் செய்து கொடுத்தார்.

அந்த நகையை தான் விற்க எடுத்து செல்கிறான். அவன் போட்ட ஒரு பவுன் தாலி தவிர அனைத்தும் வாங்கி செல்கிறான்.

வாசுவின் அப்பா வாய் திறந்தார். “இது அவங்க குடும்ப விஷயம். நீ தலை இடாதே”

மீராவின் இரண்டு அக்கா அவர்களின் கணவர், மீராவின் அண்ணன் அனைவரும் அங்கு தான் இருந்தனர். மீராவின் அக்காக்கள் அவளை நக்கலாக பார்த்தனர். அண்ணன் கவலையுடன் பார்த்தான்.

வாசுவுக்கு இன்னும் கொஞ்சம் பணம் இடித்தது. ஒரு பைனான்ஸ் கம்பெனியில் கேட்டிருக்கிறான். வட்டி அதிகம் தான். அதனால் தான் முடிந்த அளவு கடனை குறைக்க அவளின் நகை முழுவதும் எடுத்து செல்கிறான்.மாமனார் வீட்டில் அவர்களாக்க் கொடுத்தால் வாங்கிக்கொள்வான் தான். தானாக கேட்க தைரியம் இல்லை.

மீராவின் தாய் அவளை திட்டிக்கொண்டே இருந்தார். காதல்னு சொல்லி ஒரு ஒன்னும் இல்லாதவனை கட்டிக்கிட்டு வந்துருக்கா. நிறை  மாசமா இருக்கப்போ இப்படி அவளை பொட்டு நகை இல்லாமல் ஆக்கிவிட்டான்  என்று கத்தினார்.

மீரா அனைத்தும் கேட்டுக்கொண்டு கடப்பாரையை முழுங்கியதுபோல் அமர்ந்து இருந்தாள். அவளுக்கு அவனை பற்றி நன்றாக தெரியும். ஒரு ஒரு ரூபாய்க்கும் அவ்வளவு மதிப்பு கொடுப்பான். இப்படி லட்ச கணக்கில் பணத்தை விட்டுவிட மாட்டான் என்று நம்பினாள். அவளும் வேலைக்கு போகிறாள் அல்லவா. அதனால் தைரியமாகவே இருந்தாள்.

அவளின் அண்ணிக்கு மீராவின் குணம் தெரியும். அவள் எப்பொழுதும் நகை விரும்பமாட்டாள். அதனால் இப்படி கழட்டிக்கொடுக்கவும் அவள் அலட்டிக்கொள்ளவில்லை என்று புரிந்துகொண்டாள்.

அடுத்த மாதத்தில் அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. இப்பொழுது பிறந்த குழந்தைக்கும் நகை போட அஞ்சினர். மீராவின் தாய் தடுக்க மீராவின் அண்ணன் போட்டான். அதையும் வாசு கழட்டி சென்றான். மீராவும் எதுவும் கூறவில்லை. அவள் அண்ணனுக்கு தான் மனது கனத்துபோனது.

அவள் அண்ணனும் அண்ணியும் டாக்டர்கள். நன்றாகவே சம்பாரிப்பவர்கள். அவள் அண்ணிக்கு இந்த துறுதுறு என்று இருக்கும் தம்பியை முதலில் இருந்தே பிடிக்கும். அவன் வீட்டிற்கு வந்தால் நன்றாகவே கவனித்துக்கொள்வாள்.

இப்பொழுது அவனை தான் மட்டும் ஒரு நாள் தனியாக சென்று சந்தித்தாள்.

“என்ன தம்பி எப்படி இருக்கீங்க?”

“நல்ல இருக்கேன்க்கா. என்ன இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க?”

“நானும் குழந்தைக்கு ஒரு தங்க வளையல் செட் வாங்கியிருக்கேன்.”

“ஆஹா. குடுங்கக்கா” என்று கை நீட்டினான்.

“ஏன் தம்பி இப்படி பண்றீங்க? இன்னும் உங்களுக்கு எவ்ளோ தான் பணம் வேணும்”

“பைனான்ஸ்ல வாங்கியிருக்க கடன் தான் வட்டி ஏறிட்டே இருக்குக்கா. நான் பிஸினஸ்ல இருந்து காசு எடுக்க இன்னும்மொரு மூணு மாசம் ஆகும். அதுக்குள்ளே வட்டி குறைக்கலாம்னு தான் கிடைக்கிற காசு எல்லாம் அதுல போடுறேன்.”

“எவ்ளோ கடன் வாங்கிருக்கீங்க”

“நாற்பது லட்சம்”

“எவ்ளோ வட்டி ஆகும்”

“வட்டியே பத்து போய்டும்க்கா”

“சரி நான் கொடுக்குறேன். நீங்க உங்களுக்கு ரிட்டன் வந்ததும் எனக்கு திருப்பி குடுத்துங்க. சரியா?”

“ரொம்ப தேங்க்ஸ் அக்கா. வட்டி எதுவும் வேணாம் தானே?”

“நீ பொழைச்சிக்குவ” என்று சிரித்துக்கொண்டே கூறினார். பணத்திற்கு செக் கொடுத்து சென்றார். வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றுவிட்டார்

“லாபம் தானே இதுவரைக்கும்?”

“ஆமாம்க்கா”

“பிள்ளையும் வந்துடுச்சு. கவனாமா பாத்துக்கோ உன் பிசினஸ்ஸ.”

“எனக்கு பொண்டாட்டி பிள்ளைங்கள காப்பாத்துறது பெரிய கஷ்டம் இல்லக்கா. நான் வேணும்னு கேட்டதும் இருக்குற எல்லாத்தையும் கொடுத்தா. இது வரைக்கும் அத பத்தி ஒரு வார்த்தை கூட கேக்கல. எனக்கு பிசினஸ் பண்ணனும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனால் என்கிட்ட சோர்ஸ் எதுவும் இல்லை. அவ எனக்கு நகைய குடுத்து எனக்கு வேண்டிய ஃப்ரீடம் குடுத்து இப்போ வரைக்கும் அவளே தான் சம்பாரிச்சு வீட்டு செலவும் பாத்துக்குறா. எண்ணோட ஓட்டம் எல்லாம் அவ என் மேல வச்ச நம்பிக்கைய காப்பாத்த்தான். கண்டிப்பா தோற்க மாட்டேன்க்கா.”

“மீராவும் ரொம்ப குடுத்துவச்சவ தான் நம்பி.” என்று நெகிழ்ந்தார்.

பிசினஸ்ஸில் நல்ல லாபம் பார்த்தான். ஆனால் மீண்டும் அதுலேயே முதலீடு  செய்தான். அக்காவிடம் வாங்கிய கடனை இந்த இரண்டு வருடமாக இன்னும் அடைக்கவில்லை. அவரும் கேட்டு ஓய்ந்துவிட்டார். ஆனால் அவன் பிசினஸ் லாபத்தில் தான் செல்கிறது என்பதால் தைரியமாக இருந்தார்.

இடையில் நிறைய விழாக்களில் கலந்துகொள்ள ஒன்றும் இல்லாமல் தான்  வந்தாள் மீரா.

அவளின் அக்காக்கள் சிரிக்க அண்ணி தான் அவள் நகையை போட்டுக்கொள்ள கொடுத்தாள்.

மீராவுக்கும் மனிதர்களை புரிய தொடங்கியது.

மேலும் ஒரு வருடம் சென்றது.

மூன்றாம் வருடம் வாசு விஸ்வரூபம் எடுத்தான்.

முதலீடு செய்ய தனியாக வைத்துவிட்டு மனைவிக்கு இருநூறு பவுன் நகை எடுக்க திட்டமிட்டான். அக்காவின்  பணத்தையும் திருப்பி கொடுத்தான்.

“எனக்கு நகை பத்தி எதுவும் தெரியாதுங்க. வேணும்னா அக்காவ கேக்கலாம்.”

“வேணாம். உன் அண்ணிய வரச்சொல்லு”

அண்ணியை அழைத்துக்கொண்டு நகை வாங்க சென்றான். அவரும் உதவினார். மனைவி குழந்தைக்கு எடுத்ததும், மேலும் பத்து பவுனுக்கு ஒரு நெக்லெஸும் தோடும் வாங்க கூறினான்.

“போதும்ங்க” என்றாள் மீரா.

“இது உன் அண்ணிக்குடி”

“ஆஹா. தம்பி எனக்கு எடுத்து தரீங்களா. நானே செலக்ட் பண்ணுறேன் என்று கூறி வாங்கி கொண்டார்.”

மீரா இருவரையும் ஆச்சர்யமாக பார்த்தாள்.

எடுத்த நகைகள் அனைத்திற்கும் கடையில் நிறைய பரிசும் கொடுத்தனர். அதற்கும்  இந்த அக்கா தம்பி இருவரும் உனக்கு எனக்கு என்று போட்டி போட்டு பிரித்துக்கொண்டனர்.

மீரா இருவரையும் ரொம்ப கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள். இருவரும் கண்டுகொள்ளவில்லை. நீ பார்த்தால் பார்த்துக்கோ என்று இருந்தனர்.

மீரா அம்மா  வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

மீண்டும் ஒரு முறை இவனுக்கு பணமுடை ஆனது. எடுத்து வைத்த முதலீட்டுப்பணம் போதவில்லை.   மறுபடியும் ஒரு பொட்டு விடாமல் விற்க எடுத்து சென்றான்.

அக்காவிடமும் போய் நின்றான். அவர் இவன் வாங்கி கொடுத்த நகையை திருப்பிக் கொடுத்தார். கூச்சம் இன்றி வாங்கி கொண்டான்.

“ஏங்க கொடுத்ததை திருப்பி வாங்குறீங்களே வெக்கமே இல்லையா?” மீரா கேட்டாள்.

“வெட்கத்தை வச்சு நான் என்னடி பண்றது?”

அதோடு நிறுத்தவில்லை.

“கைல எவ்ளோ காசுக்கா இருக்கு?”.

“ரெண்டு சிஆர் இருக்கும்”

“அப்படியே அதுக்கும் ஒரு செக் குடுத்துருங்கக்கா”

கொடுத்துவிட்டாள்.

குடும்பம் மொத்தமும் வாய் பிளந்து பார்த்தது.

“இந்த தடவை எனக்கு வட்டி வேணும்”

“எவ்ளோ?”

“பத்து?”

“கம்மியா கேளுங்க”

“எட்டு?”

“சரி” என்று கூறி வாங்கி சென்றுவிட்டான்.

 வெளியில் வாங்கினால் பதினைந்து பெர்ஸன்ட் வட்டி கட்டுவான். அவனுக்கும் இதில் லாபம் தான்.

இதுவே அடிக்கடி தொடர்ந்தது. எட்டு வருடங்கள் உருண்டோடியது.

இப்பொழுதும் நகைக்கடை.

“என்ன வாங்கணும்? எவ்ளோ வாங்கணும்னு சொல்லுங்க தம்பி”

“என்ன வேணா வாங்குங்க. எவ்ளோ வேணா வாங்குங்க”

“பார்ரா. அப்புறம் காசு பத்தலன்னு  சொல்ல கூடாது”

“சரி”

ஒரு வைரம் செட், ரூபி செட், மரகதம் செட், தங்கம் செட், குழந்தைக்கும் வகை வகையாக எடுத்தார்.

“எனக்கு தம்பி?”

“எடுக்கா”

இந்த வெ மா சூ சொ எதுவும் இந்த இருவருக்கும் கிடையாது என்பதை இத்தனை வருடத்தில் மீரா புரிந்துக்கொண்டாள். அதனால் எதுவும் கூறாமல் இருந்துகொண்டாள்.

அங்கு கிடைத்த பரிசுக்கும் இருவரும் போட்டி பொட்டு கொண்டனர். தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தாள்.

குடும்பத்தை தாண்டி வெளியில் இப்படி எந்த பாசாங்கும் இல்லாத உறவு கிடைப்பது ஒரு வரம். அதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டார்கள். அந்த பாசத்தை அனபவித்தார்கள்..

அவள் அண்ணியை அனுப்பிவிட்டு கணவனுடன் அவர்கள் புதிதாக கட்டி இருக்கும் வீட்டிற்கு சென்றனர்.

காரில் செல்லும்பொழுது

“எதுக்கு இவ்ளோ நகை? எனக்கு உடம்பு பூரா பூட்டி அழகு பார்க்க போறிங்களா?”

“எனக்கு எப்போவும் உன் உடம்புல எல்லாத்தையும் கழட்டிட்டு அழகு பார்க்கத்தான் பிடிக்கும்.” விஷமத்துடன் கூறினான்.

அவளுக்கு முகம் சிவந்தது.

“உனக்கு நகை அழகு இல்லடி. எனக்கு என்னமோ நகை உன் அழகை எடுத்துகிறது போல தான் தோணுது.”

“என் அக்கா அண்ணி கூட அப்டி தான் சொல்லுவாங்க. நீ ஒன்னும் இல்லாம இருந்தா தான் அழகா இருக்கன்னு”

“உன்ன ஒன்னும் இல்லாம நான் மட்டும் தானே பார்த்திருக்கேன். கொள்ளை அழகுதான். அத எப்படி உன் அக்காவும் அண்ணியும் சொல்லுவாங்க?” மறுபடியும் விஷமம்.

“நான் நகையை மட்டும் தான் சொன்னேன்”

“நான் நகையை மட்டும் சொல்லலப்பா” சிரித்தான்.

வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அது வீடு அல்ல. பங்களா. அட்டகாசமாக கட்டி இருந்தான். விரைவில் கிரகப்பிரவேசம் செய்ய இருக்கிறார்கள்.

அவள் சற்று தயங்கி தயங்கி நடந்து வந்தாள். கால் இன்னும் முழுவதும் குணம் ஆகவில்லை.

ஆறு மாதம் முன்பு ஒரு விபத்தில் காலில் நல்ல அடி. எழுந்து நிற்கவே ஒரு வருடம் ஆகும் என்றுவிட்டனர்.

 அவளின் அக்காக்கள் இருவரும் ஏதோ அவள் நொண்டி ஆகிவிட்டது போல் அதையே பேசி பேசி அவளை ஏதோ நோயாளி போல உணரவைத்தனர். அவள் மனதளவில் துவண்டு போக வாசுவும் தளர்ந்து போனான். பிசினஸ்ஸை கவனிக்காமல் அவளுடனேயே அவள் முகம் பார்த்து இருந்தான்.

அவள் அண்ணி தான் ஒரு போடு போட்டு அனைவரையும் அடக்கினாள்.

“என்ன ரெண்டு பெரும் ஏதாச்சும் பேசி அவளை லோவா பீல் பண்ண வைக்கறீங்க. முதல இடத்தை காலி பண்ணுங்க” என்று கூறி அக்காக்களை விரட்டினார்.

“மீரா. ஊரு உலகத்துல யாருக்குமே அடி படறது இல்லையா. உனக்கு மட்டும் தான் இப்படி ஆகி இருக்கா? உன் புருஷனை பாரு. நீ இப்படி கவலைப்படறதால அவரும் வேலை பார்க்க போகாம இங்கயே இருக்கார். காருக்கு பெட்ரோல் மாதிரி அவருக்கு நீ. நீ இல்லன்னா வண்டி ஓடாது. இங்கயே  தான் நிற்கும். நீ இப்படியே இருந்து அவரை ஒன்னும் இல்லாம ஆக்க போறியா?”

மீராவுக்கு உரைத்தது. அவளுக்கு இப்பொழுது மனபலம் தேவை. அதை உருவாக்கிகொண்டாள். கணவனுக்காக மிக விரைவாக எழுந்து நின்றாள். மீண்டு வந்தாள். வாசுவும் உற்சாகமாக வேகம் எடுத்தான்

வாசுவே கை கொடுத்து அவளை அழைத்து வந்தான். வீட்டினுள் வந்ததும் அவள் புடவையின் இடுப்பு பகுதியை ஒதுக்கிவிட்டான்.

“என்ன பண்றீங்க?”

“உனக்கு ஹெல்ப் பணறேன்ல. எனக்கு ஏதாச்சும் என்டேர்டைன்மெண்ட் வேணாமா”

அவள் இடுப்பில் கை கொடுத்து அழுத்தி பிடித்தான். இன்னொரு கையை அவள் தோளில் பொட்டு கழுத்தில் தடவிக்கொண்டு வந்தான். இப்படியே அவளிடம் இழைந்து கொண்டு வீடு முழுக்க சுற்றி காட்டினான்.

படி ஏறும் பொழுது இடுப்பின் இரண்டு பக்கமும் அழுத்தி பிடித்து ஒவ்வொரு படியாக மிகவும் பொறுமையாக ஏற்றிவிட்டான்.

“நீங்க எனக்கு ஹெல்ப் பண்ற மாதிரியே தெரியலையே”

“ஆமாம். ரொமான்ஸ் தான் பண்றேன். வாடி”

மூன்று மணி நேரமாக வீட்டை சுற்றிக் காட்டுகிறேன் என்று அவளை படுத்திக்கொண்டுருந்தான்.

“என் ஸ்டிக்க்க எடுத்துட்டு தனியா வந்துருந்தா இருபது நிமிஷத்துல நான் பார்த்தே முடிச்சிருப்பேன்.”

“நான் இருக்கும்போது நான் தான் உன்னோட ஸ்டிக்”

“வெரி பேட் குவாலிட்டி ஸ்டிக்”

பேசிக்கொண்டே ஒரு பிரெஞ்சு விண்டோ முன்பு நிறுத்தினான்.

அதை திறந்துவிட்டதும் சூரிய  வெளிச்சம் அந்த பெரிய அறை எங்கும் நிரம்பி அந்த இடத்தையே விசாலமாக காட்டியது.

“வாவ். எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு. எவ்ளோ வெளிச்சமா இருக்கு இந்த ரூம்.” சந்தோசமாக சிரித்துக்கொண்டே பார்த்தாள்.

சூரியனுடன் போட்டி இடும் அவள் முகத்தின் வெளிச்சம். வாசு அசையாமல் நின்றுவிட்டான். அவளையே விழுங்குவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தான்.

சுற்றிழும் பார்த்துவிட்டு அவனை திரும்பி பார்த்தபொழுது அவள் பார்த்தது இந்த விழுங்கும் பார்வையை தான். உடல் முழுவதும் ரத்த நிறம் கொண்டாள்.

“எஸ். திஸ் ஒன்.” என்று கூறி அவன் ஆள்காட்டி விரலால் அவள் கன்னத்தை சுட்டினான்.

“நான் உன்கிட்ட லவ் சொன்ன அன்னிக்கு நீ வாய் திறந்து எந்த பதிலும் சொல்லல. உன்னோட இந்த வெட்கமும் சிவப்பும் தான் எனக்கு வேண்டிய பதிலை சொல்லிச்சு. அன்னிக்கு தான் முதல் முதலா உன்னோட வெட்கத்தைப் பார்த்தேன். அப்போ இருந்து இது என்னை பைத்தியம் பிடிக்க வைக்குதுடி.” அவள் கன்னத்தில் கன்னம் வைத்து இழைந்தான்..

“இப்போ முத்திடுச்சு போல”

“சோ வாட்?”

Advertisement