Advertisement

  2
உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமே உங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும்.

         ரஞ்சித்திடம் விடைபெற்று வீட்டிற்கு வந்ததற்கு பிறகு., அவளது தோழி ஏஞ்சல் வந்ததும் வராததுமாக கலாய்க்க தொடங்கினாள்.,

       “அடியே பயந்தாங்கோலி., எப்படி வந்த கண்டிப்பாக யாராவது கூட்டிட்டு தான் வந்து விட்டிருப்பாங்க., இல்லாட்டி நீயாவது வருவதாவது“., என்றாள்.

         “அதெல்லாம் ஒன்னும் இல்ல., நானே வந்துட்டேன் தெரியுமா., நம்பு ஏஞ்சல் தனியா தான் வந்தேன்“., என்றாள் நிஷா.,

         “அடியே நிஷி., சொல்லுற பொய்ய கரெக்டா சொல்லு“., என்று அவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டின் சிறிய வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் ஏஞ்சல்.

          “எனத்தை எட்டி பாக்குற“.,என்றாள் நிஷா.

      “வேற என்ன தேடி பாப்பாங்க உனக்கு துணைக்கு வந்து விட்டது யார் என்று பார்த்தேன்., அண்ணன் வந்தாங்களா.,  அப்பா வந்தாங்களா ன்னு பார்த்தேன்., இல்லாட்டி உங்க ஊர் மக்கள் யாராவது வருவாங்க., அவங்க வர்றாங்களான்னு பார்த்தேன்“., என்று சொன்னாள்.

      “அதெல்லாம் ஒன்னும் இல்ல., நீ திரும்ப திரும்ப இப்படியே சொல்லாத., நான் கரெக்டா பஸ்ல வந்து  இறங்கி.,   அங்கிருந்து ஷேர் ஆட்டோ பிடிச்சு கரெக்ட்டா நம்ம வீடு இருக்கிற ஏரியாக்கு வந்து இறங்கிட்டேன்., தெரியுமா“., என்றாள்.

        “ஏய் பொய் சொல்லாம சொல்லு., கண்டிப்பா நீ பஸ்ல பயந்து இருப்ப.,  எனக்கு தெரியும்., ஷேர் ஆட்டோ ஓகே தான்., பஸ் ஸ்டாப்பில் இறங்கிட்டா., ஷேர் ஆட்டோ புடிச்சி வந்துடுவ.,  ஆஃபீஸ்க்கு நான் வராத அன்னைக்கு கரெக்டா ஆபீசிலிருந்து வீட்டுக்கு வந்துடுவ., அது ஓகே நான் ஒத்துக்குறேன்.,

    ஷேர் ஆட்டோ னா கூட்டமா இருக்கும் அதுல தான் ஏறுவேன் ன்னு., நீ வந்துருவ தனியா ஆட்டோலயோ., கேப்ல வரச் சொன்னா.,  என்னிக்குமே நீ ஏறமாட்ட.,  அது எனக்கும் தெரியும்., சரி பஸ் ஸ்டாப் வரை யாரு துணைக்கு வந்தா அதை சொல்லு.,  உங்க ஊர் ஆட்கள் யாரும் வந்தார்களா“., என்று மீண்டும் கேட்டாள்.

         இவளோ சிரித்தபடிஇல்லை, இல்லை., நீ நம்பவே மாட்டீக்க பாரு., கடைசி வரைக்கும் நான் தனியா வரலைன்னு.,  எப்படித்தான் கண்டு பிடிக்கிறீயோ“.,  என்று சொல்லி, நேற்று பஸ்சில் நடந்த விஷயங்களையும்.,  ரஞ்சித்தை பற்றியும் சொன்னாள்.

             அதன்பின்பு ரஞ்சித் அவளுக்கு அலைபேசி எண்ணை கொடுத்தது பற்றியும் சொல்லி., ஏதேனும் உதவி என்றால் அழைக்கும்படி ரஞ்சித் சொன்னதை பற்றியும் சொன்னாள்.

        “ஏய் நிஜமாவே நல்லவரா இல்ல.,  நல்லவன் மாதிரி நடிச்சுட்டு அதுக்கப்புறம் ஏமாத்துற  மற்றவர்களும் இருக்காங்க தெரியுமா“., என்று சொன்னாள் ஏஞ்சல்.,

        ஒரு நிமிடம் முகம் மாறிய நிஷா பின் உறுதியாக., “இல்லவே இல்ல., இவங்க கண்டிப்பா அப்படி இருக்க மாட்டாங்க., எனக்கு நம்பிக்கை இருக்கு., நிறைய அட்வைஸ் பண்ணாங்க.,  எனக்கு எங்க அப்பா கூட இருக்குற பாதுகாப்பான பீல் இருந்துச்சு ன்னு  சொல்லுவேன்.,
எங்க அண்ணன் கூட  சல்சல் ன்னு கோபப்படுவாங்க., அப்பா கூட வந்தா எப்படி இருக்குமோ., அப்படி இருந்தேன்.,   அது மட்டும் இல்லாம நிறைய அட்வைஸ் பண்ணாங்க.,  இறங்கும் போது கூட நான் பத்திரமா போயிடுவே இல்ல அப்படின்னு கேட்டுட்டு.,  நான் ஷேர் ஆட்டோ ஏர்ற வரைக்கும் நின்னு பார்த்துட்டு தான் போனாங்க., தள்ளி நின்னாங்க“.,  என்று சொன்னவள்., ‘அவன் தனக்கு அலைபேசி எண்ணை கொடுத்ததை வைத்து இவள் தவறாக சொல்கிறாளோஎன்று நினைத்தாள்.,

  “எதுவும் ப்ராப்ளம் வந்தா., என்னை கூப்பிடு அப்படின்னு சொன்னாங்க., வேற எதுவும் ஹெல்ப் வேணும்னா கூப்பிடு ன்னு சொன்னாங்களே ஒழிய., என் போன் நம்பர் ஒன்னும் அவங்க கேக்கல தெரியுமா“., என்று சொன்னாள் நிஷா.

           “அம்மாடியோ நான் ஒண்ணுமே சொல்லல.,  சும்மா சொல்லதான் செஞ்சேன்.,  நீ எதுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்கி பேசுற., இப்பவும் சொல்றேன் நல்லவங்களா இருக்கட்டும்., ஆனால்  அவங்க நல்லவங்களா., கெட்டவங்களா னு.,  தெரியாம நீ அவசரக்குடுக்கை மாதிரி போன் பண்ணி தொலைத்து விடாதே சரியா.,  இப்ப ஆபீசுக்கு கெளம்பு“., என்றாள் ஏஞ்சல்.

       “டயர்டா இருக்கு.,  வீட்ல உக்காந்து ஒர்க் பண்ணட்டுமா“.,  என்று கேட்டாள் நிஷா

     “அதுதான் நல்ல தூங்கிட்டு தானே வந்து இருக்க., அப்புறம் என்ன உனக்கு ரெஸ்ட்., கிளம்பு கிளம்பு., ஆபீஸ் கிளம்பி போய் பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுக்கனும் இல்ல.,  நேத்து நைட்டு வேண்டி இருக்கேன்னு.,  இப்பதான் கதை சொன்ன., லஞ்சம் கொடுக்க வேண்டாமா கிளம்பு கிளம்பு., போயி லஞ்சத்தை கொடுத்துட்டு ஆபீஸ்ல வேலை பார்ப்போம்“., என்று சொல்லி அவளை கிளப்பிக்கொண்டு அலுவலகம் சென்று சேர்ந்தாள் ஏஞ்சல்.,

           அலுவலகம் வந்த பிறகு எப்போதும் போல சென்றவள் கையெழுத்து இட்டு விட்டு., மீண்டும் வெளியே வந்து அலுவலக வளாகத்தில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காயை லஞ்சமாக வைத்து விட்டு., அவரை வணங்கி விட்டு., ரஞ்சித்தை போன்ற ஒருவனை தனக்கு அறிமுகப்படுத்தி வைத்தற்காக நன்றி உரைத்து விட்டு போனாள்.,

      அலுவலகம் சென்ற பிறகு அவளது வேலைகள் அவளை இழுத்துக்கொள்ள.,  தன் வேலையில் மூழ்கிப் போனாள்.

         எங்கும் தனியே செல்வதில் பயம்., தயக்கம்., மட்டுமே., மற்றபடி தோழிகள் அவளோடு இருந்தாள் சந்தோஷமாக வலம் வருவாள்., யாராவது ஒருவர் அவளுக்கு துணைக்கு வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு எப்போதும் உண்டு. மற்றபடி வேலைகளில் அவள் படு கெட்டி.,

      நிஷா மதுரைக்கு அருகே உள்ள ஊரில் வளமான குடும்பத்தில் பிறந்த ஒரே பெண் குழந்தை.,  வீட்டில் இரண்டு அண்ணன்கள் இருக்க., ஒரே பெண்ணை செல்லமாக வளர்த்த  வைத்திருந்தனர்.,

      அவள் கல்லூரிக்கு சென்று  போகும் போதும் அவளை உள்ளூரிலேயே சேர்த்தனர். தினமும் வீட்டில் இருந்து சென்று வரும்படி தங்களுக்குள் வைத்துக் கொண்டனர்., அந்த காரணத்தினாலேயே அவளால் இப்போதும் தனியே வெளியே செல்ல பயம்.,

     காரில் அழைத்து கல்லூரியில் விட்டு திருப்பி அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள்., அவளின் பயம் அறிந்த பிறகு தான்., தாங்கள் வளர்த்த விதம் சரியில்லை என்பதை உணர்ந்தனர்.

           அதன்பிறகே  ‘வேலைக்குப் போகட்டும் கொஞ்சமாவது அவளை அவள் மீட்டு கொள்ளட்டும்., இப்படி பயந்து கொண்டே இருந்தால் போகுமிடத்தில் அவள் வாழ்க்கை எப்படி இருக்கும்‘., என்ற எண்ணத்தோடு தான் இப்போது இந்த வேலைக்கும் சம்மதித்து அனுப்பியிருக்கிறார்கள்.

     கடகடவென நாள்கள் ஓடியது போல தோன்றினாலும் ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் இவள் ரஞ்சித்துக்கு ஒரு முறை கூட அழைக்கவில்லை., தினமும் எடுத்து வாட்ஸ்அப்  செய்யலாம் என்று யோசித்தாலும்.,

     தன்னை நினைவு இருக்குமா., ஒருநாள் உதவி செய்ததற்காக இவள் தொல்லை செய்கிறாள் என்று நினைத்து விடுவார்களோ., நாமே வலிய போய் பேசினால் தவறாக இருக்குமோ., அப்போதே நன்றி உறைத்து விட்டு வந்து விட்டோம்., இனி பேசக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாலும்., அவன் எண்ணை சேவ் செய்து வைத்திருப்பதால்.,

     அவ்வப்போது அவனுடைய வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து மெஸேஜ் அனுப்ப முயற்சி செய்வதும்., திருப்பி வேண்டாம் என முடிவு செய்வதுமாக இருப்பாள்., அவனுடைய ப்ரோபைல் போட்டோவை மட்டும் அவ்வப்போது பார்த்துக் கொள்வாள்.,

       ‘எவ்வளவு நல்ல மனசு அந்த பஸ்ல உள்ள அம்மா சொன்ன மாதிரி., ஆளை வைத்து யாரையும் எடை போடக் கூடாது என்பது எவ்வளவு உண்மை., அன்னைக்கு மட்டும் இவரும் ஒரு தப்பான  நபரா இருந்து இருந்தா., என்னோட டிராவல் எவ்வளவு மோசமானதா இருந்து இருக்கும்.,

       அதுமட்டுமில்லாம அதுக்கப்புறம் நிலைமை எப்படி இருந்திருக்கும்.,  நல்லவேளை நல்லவங்க பக்கத்துல இருக்க போய் நான் தப்பிச்சேன்‘., என்று நினைத்துக் கொள்வாள்.

          அவளால் அவள் தோழி சொன்னதை ஏற்கவே முடியவில்லை.,  அவ்வப்போது ரஞ்சித் பற்றி அவளறியாமல் பேச்சு வந்தாலும்.,

        தோழியோ எப்போதும் சொல்வதுஇது போல் வேண்டுமென்றே நல்லவர்கள் வேஷம் போட்டு இருப்பவர்களும் எத்தனையோ பேர் உண்டு., என்னமோ நீ நல்லவங்க நினைச்சு யாரையும் நம்பாதே.,  பொதுவாக யாரையும் நம்ப கூடாது.,  அவங்க எவ்வளவு தான் நல்லவங்களா இருந்தாலும்., நம்ம வீட்டு ஆட்களைத் தவிர யாரையும்  இந்த காலத்துல முழுசா நம்ப முடியாது., அதுவும் சில வீட்டில் சொந்தங்களையே நம்ப கூடாது.,  அப்படிங்கிற சூழ்நிலையில் நீ யாரோ ஒருத்தரை நல்லவங்க ன்னு திரும்பத் திரும்ப சொல்றது தான் என்னால ஏத்துக்க முடியல., இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்காதே நிஷா.,

     உன்னை உங்க வீட்டுல மத்த விஷயத்தில் எல்லாம் கரெக்டா வளர்த்திருக்காங்க., ஆனால் இப்படி கைக்குள்ளேயே வைத்து வளர்த்து தான் தப்பு பண்ணிட்டாங்க., இப்ப பாரு இன்னும் தனியா போறதுக்கு பயப்படுற.,  இப்படிலாம் இருக்காத, எதுவா இருந்தாலும் தைரியமா இருக்க பழகிக் கொள்“..,  என்று சொன்னாள்.

     அவள் அறியாமல் நிஷாவும்ஆமாம்மா அன்னைக்கு ரஞ்சித்தும் இப்படி தான் சொன்னாங்க., இப்படியெல்லாம் பயப்படக்கூடாது., தைரியமா இருக்க கத்துக்கனும் ன்னு சொன்னாங்க“., என்று ரஞ்சித் பேச்சை எடுத்தாள்.

         “அடியே இப்பதான சொன்னேன்., யாரையும் முழுசா நம்பாதே“., என்றாள்.

         “உனக்கு அவரைப்பற்றி புரியவே இல்லை“., என்று சொல்லிவிட்டு தன் பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டாள்.

         அந்த வீக் எண்ட் அவர்களுக்கான சந்தோஷமாக நாளாக மாற்ற தோழிகளோடு சேர்ந்து அங்கு இருக்கும் சிறந்த மாலுக்கு சென்றனர்.,

      தோழியர் அனைவரும் சேர்ந்து படம் பார்த்துவிட்டு., மதிய உணவை புட்கோட் ல் முடித்துக் கொள்ளலாம் என்று தோழிகள் பேசிக்கொண்டு உணவு விடுதி இருக்கும் பகுதிக்கு சென்று தங்கள் உணவை முடித்துக்கொண்டு வெளியே வத்தனர்.

      ஒரு தோழியோ.,  “ஏதாவது சும்மா விண்டோ ஷாப்பிங் மாதிரி கடையில பார்த்துட்டு போலாம்., மே பி புடிச்ச குர்தீஸ் ஏதும் கிடைத்தா வாங்கிக்கலாம்.,  போலாமா“., என்று கேட்டனர்.

      அவளோ அவள் ஏஞ்சலிடம்வீட்டுக்கு போவோமா“., என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.

      பின்பு ஒரு வழியாக அனைவரும் அவள் தோழி சொன்னது போல ஒரு விண்டோ ஷாப்பிங் முடித்துக் கொண்டு செல்லலாம் என்று முடிவுக்கு வந்திருந்தனர்.

      அதேநேரம் சுரத்தே இல்லாமல்மறுபடியும் நடக்க வைக்கிறார்களே.,  வீட்டுக்கு போனா கொஞ்சம் நல்ல தூங்கி எந்திரிக்கலாமே.,  என்ற யோசனையோடு நடந்தவள் அங்கிருந்த.,  அவர்கள் நுழைந்த துணிக்கடையில் ரஞ்சித்தை பார்த்தவுடன்., தன் ஏஞ்சலுக்கு இதுதான் ரஞ்சித் என்று தூரத்தில் நின்றவனை அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தாள்.,

      அவனோ அவன் நண்பனோடு பில் பே பண்ணும் கவுண்டரில் நின்றான். இவளோ நீங்க துணி எடுத்துட்டு வாங்க.,  நான் இதே வாசலில் நின்னு பேசிட்டு இருக்கேன்., கொஞ்ச நேரம் பேசிட்டு அப்படியே வந்துடறேன்“., என்று சொன்னாள்.,

      நிஷாவின் ஏஞ்சலோ அவளைப் பார்த்து முறைத்தாள்., “உனக்கு அன்னைக்கு தானே சொன்னேன்“., என்று சொன்னாள்.

            நிஷாவும் ஏஞ்சலிடம்நீ அப்படி எல்லாம் நினைக்காதே., அவங்க அப்படிப்பட்டவங்க எல்லாம் கிடையாது எனக்கு  அன்னைக்கு அவங்க பண்ணது டைம்லி ஹெல்ப்., என்னால அந்த உதவி எல்லாம் மறக்க முடியாது., அப்படி சட்டுன்னு மறக்குற அளவுக்கு சாதாரண உதவியும் கிடையாது., நான் பயந்தது எனக்குத்தான் தெரியும்., தைரியமா வெளியே வேணா காட்டிக்கலாம்., ஆனா அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தனியாக வரும் போது எவ்வளவு பயமா இருக்கும் ன்னு., அன்னைக்கு தான் அனுபவிச்சு பார்த்தேன்., சோ சாரி நான் கண்டிப்பா அவங்கள பாத்து பேசிட்டு தான் வருவேன்.,  நீங்க விண்டோ ஷாப்பிங் தான பண்ண போறீங்க., ஏதாவது வாங்குறதா இருந்தா கூட முடிங்க.,   நான் ஜஸ்ட் வெளியே அவங்ககிட்ட பேசிட்டு வந்துருவேன்“., என்று சொல்லிவிட்டு அவனை நோக்கி சென்றாள்.

          அவனும் பில் பே பண்ணி விட்டு திரும்பியவன் நிஷாவை பார்த்தவுடன் சிரித்தபடி கையில் பேக்குடன் அவளையே பார்த்தபடி நின்றான்.

           இருவரும் சற்று தொலைவில் இருந்ததால்., அவள் கையை மட்டும் ஆட்டி அவனைப் பார்த்து ஹாய் காட்ட., அவனும் கையை காட்டியபடி அவளை நோக்கி வேக எட்டுகளுடன் அருகில் வந்தவன்.,

         “தனியாவா வந்த அதிசயமா இருக்குஎன்று கேட்டான்.

           அவளோஅதெல்லாம் இல்ல பிரண்ட்ஸோட வந்தேன்“., என்று சொல்லி தன் தோழியர்கள் இருந்த பக்கத்தை கைக் காட்டினாள்.,

         அவனும் அவர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டுஏதாவது ஷாப்பிங் பண்ண வந்தியா.,  ஷாப்பிங் முடிச்சிட்டு வா நான் பிரண்டோட வெளியே இருக்கிறேன்“.,  என்று சொன்னான்.

      “இல்ல இல்ல., அவங்க தான் ஷாப்பிங் பண்ண வந்தாங்க“., என்று சொல்லி  காலையில் கிளம்பி வந்ததிலிருந்து சினிமா பார்த்தது., உணவு உண்டது.,  இப்போது தோழிகளோடு விருப்பமே இல்லாமல் கடைக்குள் நுழைந்தது என அனைத்தையும் சொல்லிவிட்டாள்.,

        “உங்களை பார்த்ததால் தான் நான் உன்கிட்ட பேசலாம்னு வந்துட்டேன்., அவங்க அங்க வாங்கிட்டு வருவாங்க., நானும் உங்ககூட வெளிய வாரேன்.,  ஜஸ்ட் கடை பக்கத்திலேயே நின்று பேசுவீங்களா“., என்று கேட்டாள்.

        அவன் சிரித்தபடிஇல்ல உன்ன கடத்திட்டு போய் விடுவேன்“., என்று சொன்னான்.,

           அவன் நண்பனும்நீ சொன்ன பொண்ணு., இந்த பொண்ணு தானே“., என்று கேட்டான்

         அவன் சிரித்தபடிஆமா இந்த பொண்ணு தான்., அன்னைக்கு பஸ்ல மீட் பண்ணினேன். சொன்னேன்ல“., என்று சொல்லி தன் நண்பனை நிஷாவிற்கு அறிமுகப்படுத்தினான்.

       ஹாய் அண்ணா என்று சொல்லி அவனை அண்ணனாக்க.,  அவனும் சரிதான் என்று சொல்லி சிரித்து விட்டு.,  வெளியே இருந்த வெற்றிடத்தில் நின்று பேசத் தொடங்கினர்.

        அப்போது ரஞ்சித் நிஷாவை வம்பு இழுக்கும் விதமாக.,  “நானும் உன்னை தனியா பார்த்தவுடன்., ஒரே வாரத்தில் தைரியமா ஆகிட்டீயோ அப்படின்னு நினைச்சேன்., ஆனா நீ  ஃப்ரெண்ட்ஸ் ஐந்து பேரோட வந்திருக்க., எவ்வளவு பாதுகாப்போடு வந்து இருக்க“.,  என்று சிரிப்போடு சொன்னான்.

              அவளோஎனக்கு அதெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் இந்த பயம் போகும் ன்னு மட்டும் தோனல“.,  என்று சொன்னாள்.,

       அவன் நண்பனும்சரி நீங்க பேசிட்டு இருங்க., நான் பக்கத்துல இருக்கிற அந்த கடைக்கு போயிட்டு வாரேன்“.,  என்று சொல்லி அருகில் இருந்த செருப்பு கடைக்குள் நுழைந்தான்.

       ரஞ்சித்தும்.,  நிஷாவும் மட்டும் அங்கு பேசத் தொடங்கினர். அருகில் இருந்த  சிறிய அமரும் பென்சில் இருவரும் அமர்ந்து விட்டனர்.

          அவள் அவனிடம் அவனிடம் விடைப் பெற்று சென்றதிலிருந்து இப்போது வந்தது வரை உள்ள அலுவலக கதை.,  பிள்ளையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தியது., தோழி அவளுக்கு அறிவுரை வழங்கியது., என அத்தனையும் சொன்னாள்.

        அவன் சிரித்தபடி  “உன் பிரண்ட் இவ்வளவு சொல்லி இருக்காங்க., அப்பவும்  நீ என்னை நம்பி எல்லாத்தையும் வந்து சொல்லிட்டு இருக்கியே., அப்ப நீ உன் பிரண்டு சொன்னதை கேட்க மாட்டியா“., என்று கேட்டான்.

      “இல்லையே., நீங்க அப்படி ஒன்னும் கெட்டவங்க கிடையாது., அவ உங்களை பார்த்தது இல்ல இல்ல.,  அதனால தான் அப்படி சொல்றா., உங்க கூட பேசினா அப்படி சொல்லியிருக்க மாட்டா..,  உண்மையை சொல்லனும்னா அன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப பாதுகாப்பான பீல் பண்ணினேன். பர்ஸ்ட் கொஞ்சம் பயமா இருந்துச்சி.,  உண்மைதான், ஆனா அதுக்கப்புறம் என்னமோ நீங்க பக்கத்துல இருக்கறதுல ரொம்ப ஷேப்பா ஃபீல் பண்ணினேன்.,

      அது மட்டும் இல்லாம நான் அன்னைக்கு ஷேர் ஆட்டோல  ஏர்ற வரைக்கும் நீங்க அங்க நின்னு பார்த்துட்டு தானே இருந்தீங்க.,  நான் அதையும் பார்த்தேன்., சோ இவ்வளவு பாதுகாப்பா பார்க்கிற நீங்க வந்து கண்டிப்பா தப்பானவங்களா  இருக்க மாட்டீங்க ன்னு தோணுச்சு., அதுதான் இப்போ உங்ககிட்ட சொல்றேன்“., என்று சொன்னாள்.

     அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தவன்., ‘வீட்டில் மற்ற விஷயங்களில் விவரமாக வளர்ந்தாலும்., இன்னும் அவள் பயப்படுவதை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தவன்‘., “சரி விடுஎன்று சொல்லிவிட்டு..,

        “எல்லாரிடமும்  இப்படித்தான் நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்லுவியா“., என்று கேட்டான்.

      “இல்லையே நான் என்னோட ஃப்ரெண்ட் கிட்ட மட்டும் தான் சொல்லுவேன்., இப்போ என்னமோ உங்க கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணனும் தோணுச்சு.,அதனால தான் ஷேர் பண்ணுறேன்“., என்று சொல்லியபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தவள்.

        “ஏன் நான் உங்ககிட்ட எதையும் ஷேர் பண்ண கூடாதா“., என்று கேட்டாள்.

      அவன் சிரித்தபடி அவளை பார்த்துக் கொண்டேஇல்லை இல்லை பண்ணலாம்., ஆனா நீ தைரியமா இருந்தா மட்டும் தான்., நான் உன் கூட பேசுவேன்.., நான் கோழையான பொண்ணுங்க கூட பேச மாட்டேன்.,  கோழையான பொண்ணுங்களை எனக்கு பிடிக்கவும் பிடிக்காது., எப்பவும் தைரியமா இருக்கணும்“., என்று சொல்லி அவளுக்கு அறிவுரை வழங்க தொடங்கினான்.

        மூஞ்சை சுளித்துக் கொண்டுப்ளீஸ் ப்ளீஸ்  அட்வைஸ் பண்ணாதீங்க ப்ளீஸ்“.,  என்று சொன்னவள்., “ஓகே ஓகே நான் கொஞ்சம் கொஞ்சமா என்னை மாற்றிக்கிறேன்“., என்று சொன்னாள்.

       பின்பு அவனுடைய போன் நம்பரை தான் பதிந்து வைத்திருப்பதை சொன்னவள்., நான் தினம் வாட்ஸ்அப் பண்ணுவதற்கு எடுப்பேன்.,  ஆனால் எப்படி பேச என்ற தயக்கத்தில் வாட்ஸ்அப் கூட பண்ண மாட்டேன்“.,என்றாள்.

      “ஓகே ஓகே.,  நானே உனக்கு வாட்ஸ்அப் பண்றேன்., உன் நம்பர் குடுஎன்று கேட்டான்.

      “இல்ல இல்ல.,  நானே உங்களுக்கு ஹாய் அனுப்புறேன்“, என்று சொல்லி அவனை  அருகில் வைத்துக்கொண்டே ஹாய் அனுப்பி தன்னுடைய நம்பரை அவனுக்கு கொடுத்தாள்.

         பின்புஅடுந்த தடவை நீங்க எப்ப ஊருக்கு போறீங்க சொல்லுங்க., அந்த டைமில் நானும் கிளம்பி வர்றேன்.,  எங்கப்பா தெரிஞ்சவங்க யார் கூடவாவது வா னு சொல்வாங்க., அதைவிட நான் உங்க கூட வந்தா சேப்பா இருப்பேன்“., என்று சொன்னாள்.

        அவளைப் பார்த்தவன்ஒரே சந்திப்பில் இந்த பெண் எப்படி தன்னை நம்புகிறாள்‘., என்று தோன்றினாலும்  அவளின் நம்பிக்கை அவன் மனதிற்கு இதமாக இருந்தது.,

             மீண்டும் அவன் சொன்னதுஉன் தோழியின் அறிவுரையும் சற்று கேள்.,  யாரையும் முழுதாக நம்பாதே“., என்று சொன்னான்.

         அவளோநான் அப்படியெல்லாம் எல்லாரையும் நம்ப மாட்டேன்., எனக்கு என்னமோ உங்கள நம்பலாம் ன்னு தோணுச்சு., அதனால நம்புறேன்“., என்று சொன்னாள்.,
       அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தோழிகள் வந்தனர்., தோழிகளுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.,

        அனைவரும் ஹாய் சொல்லிவிட்டு பேச., அதற்குள் அவன் நண்பனும் வர அவர்கள் இருவரும் விடைபெற்று கிளம்பினர்.

    நிஷாவின் தோழிகளோ ஆளாளுக்கு அவன் உருவத்தை வைத்துமுரடாக இருப்பானோ., பார்க்க பயமாக இருக்கிறது“., என்று ஆளாளுக்கு பேசினாலும்., அவனிடம் பேசிப் பார்த்த பிறகு ஏஞ்சல் அவனைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்லவில்லை,

          நிச்சயமாக இவன் நல்லவனாக தான் இருக்கவேண்டும்., நிஷி அவனை மிகவும் நம்புகிறாள் என்றே நினைத்தாள்.,

        மனம் முழுவதும் மகிழ்ச்சி
        நிரம்பி வழிகிறது.,
        பார்வையிலேயே  பாதுகாக்க
         உன்னால் மட்டுமே முடியும்.,

Advertisement