Advertisement

அத்தியாயம் – 8

கதிரவனிடன் பேசி வந்த பிறகு, ‘இன்று பணம் கிடைத்து விடும், நாளை கிடைத்து விடும்என்று இரண்டு நாட்கள் பொறுமையுடன் காத்திருந்த தாமரைக்கும் மற்றும் ராஜம்மாவுக்கும், மூன்றாம் நாள் அப்படி இருக்க முடியவில்லை.

ஏனென்றால் நாளை விடிந்தால் கடனைக் கேட்டு வீட்டு முன் வந்து நின்று விடுவான் வேலு.

அவனிடம் கொடுக்க அவர்களிடம் சல்லி பைசா கூட இல்லை என்பதே அவர்களைக் கொல்லாமல் கொல்ல, அதனால் அன்று வேலையில் முழுமனதாக ஈடுபட முடியாமல் பெண்கள் இருவருமே கொஞ்சம் தடுமாறிக் கொண்டு தான் இருந்தனர்.

மாலை வேலை முடியும் வரை, ஏதோ ஒரு நம்பிக்கையை இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்த பெண்களுக்கு, வீட்டுக்குச் செல்ல வேண்டிய பாக்டரியின் சங்கு ஊதப்படவுமே உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது.

இனி யார் வந்து கொடுக்கப் போகிறார்கள் பணத்தை?’ என்று அரண்ட விழிகளுடன் தன்னை நோக்கிய தாமரையை அழைத்துக் கொண்டு நேராகக் கதிரவனின் அறைக்குச் சென்றார் ராஜம்மா.

அங்கு அவனின் அறை அவனில்லாது மூடி இருக்கவும், அடுத்து எங்கே போய் அவனைக் காண்பது? என்று தெரியாது திகைத்துக் கையைப் பிசைந்து கொண்டு நின்ற ராஜம்மா, நாலாபுறமும் கண்களில் கதிரவனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த நேரம், அங்கே வந்தான் வசந்த்.

ஏற்கனவே ராஜம்மா கதிரவனின் மூலம் அவனுக்கு அறிமுகம் என்பதால், “என்ன பாட்டி.. இங்கே நின்னுட்டு இருக்கீங்க?” என்று கேள்வியுடன் அவரின் அருகில் வந்தவனைக் கண்டவர், “கதிரவன் தம்பியைப் பார்க்கத்தான் காத்திட்டு இருக்கோம் சார்” என்று குரல் கமற சொல்லவும்..

அவரின் முகச் சுணக்கத்தைக் கண்டவன், “எதுவும் பிரச்சனையா பாட்டி? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க, நான் கதிர்கிட்ட சொல்லிடுறேன்” என்றான் வசந்த்.

“இல்லப்பா, அந்தத் தம்பியைப் பார்க்கணும்..” என்று சற்று இழுத்துச் சொன்னவர், ‘அப்பொழுதும் பிரச்சனை எதுவுமில்லை’ என்று சொல்லாததைக் கண்டுகொண்டவன்,

“கதிர் மதியமே  ஏதோ பெர்சனல் வேலைக்காக லீவ் சொல்லிட்டு வீட்டுக்குக் கிளப்பிட்டானே பாட்டி?” என்ற தகவலில் அதுவரை பிடித்து வைத்து இருந்த குருட்டு நம்பிக்கையும் சிதைந்து போனதில், ராஜம்மாவும் தாமரையும் ஒருசேர உள்ளுக்குள் உடைந்து போயினர்.

இதற்கு மேல் அங்கு நிற்கவோ பேசவோ எதுவுமில்லை என்ற எண்ணம் கொடுத்த துவளலில், “நாங்க கிளம்பிறோம் தம்பி” என்று மட்டும் சொல்லி விட்டு, தளர்வு நடையுடன் அங்கிருந்து தாமரையை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார் ராஜம்மா.

கடைசி நம்பிக்கையும் அற்றுப் போனதில், அடுத்து என்னவென்று யோசிக்க கூட முடியாது ராஜம்மாவின் மூளை ஒரேடியாக மரத்துப் போயிருந்தது.

அதைக் கண்ட தாமரைக்கு இந்தத் தள்ளாத வயதிலும், தனக்காகக் கொஞ்சமும் தளராது போராடிக் கொண்டு இருக்கும் ராஜம்மாவைக் கண்டு தான் அதிகம் மனம் வருத்தமாக இருந்தது.

அவருக்காகவே தன்னுடைய சோகத்தைச் சிறிதும் வெளியே காட்டாது ஒரு முடிவுடன் எழுந்து சமையற்கட்டு சென்றவள், ராஜம்மாவுக்கான இரவு உணவைத் தயார் செய்து எடுத்துக் கொண்டு வந்து அவரை உண்ணச் சொன்னாள்.

“சாப்பிடுங்க பாட்டி, நேரமாவுது” என்று தன் முன் அமர்ந்து சொன்னவளின் முகத்தில் இருந்து அவளின் மனதை ராஜம்மாவால் அறிய முடியாத போதும், அவளின் குணம் அறிந்தவர் ஆயிற்றே அவர்!

சிறுவயதில் இருந்தே தாமரை எதற்கும், யாரைப் பார்த்தும் அதிகம் ஆசைப்படாதவள், தன்னிடம் எது இருக்கிறதோ அதிலே திருப்திப்பட்டுக் கொள்வாள்.

தனக்குக் கிடைக்காததை நினைத்து ஒரு போதும் வெதும்பியதுமில்லை, துன்பப்பட நேர்ந்த வேளைகளில் கூடக் கடவுளைச் சபித்ததுமில்லை.

அப்படிப்பட்டவள் இன்று மட்டும் அந்தக் கடவுளைச் சபித்து விடப் போகிறாளா என்ன? கண்டிப்பாக இல்லை!!

அதற்கு மாறாக, நாளை நடக்கப் போவதை ஏற்றுக் கொள்ளத் தன்னைத்தானே தயார் செய்து கொண்டு இருப்பாள் என்று சரியாகச் சின்னவளைக் குறித்து கணித்தவர்,

அதையே வார்த்தைகளாக்கி அவளிடம், ”என்னமா, இனி இந்தக் கிழவியால் உன்னைக் காப்பாற்ற முடியாதுன்னு, நீயே  உன்னை அந்த ராட்சஷன்கிட்ட பலி கொடுத்துக்கத் தயார் ஆகிட்ட போல!” என்று கேட்கவும்,

புன்னகையை முகத்தில் வலிய ஒட்ட வைத்துக் கொண்டு, “இ.. இது இதுல பலியாக என்ன இருக்கு பாட்டி? அவர் என்னை என்ன வச்சுக்குறேன்னா சொன்னார்? ஊர் உலகம் தப்பா பேசாதவாறு கட்டிக்குறேன்னு தானே சொன்னார். அதுவரைக்கும் நான் கொடுத்து வச்சவ தானே??” என்று குளம் கட்டிய கண்ணீரை ராஜம்மா கண்டுவிடாது முகத்தை வேறுபுறம் திருப்பியவாறு பேசி முடித்தாள் தாமரை.

அவளின் செயலைக் கவனித்தவரோ, “உன் வாய் பொய் சொன்னாலும் உன் கண்ணு உண்மையைச் சொல்லுதேமா!” என்றார் அனுபவஸ்தவராக.

அந்த வார்த்தைகளில் தாமரையின் விழிகளில் இருந்து மடை திறந்த வெள்ளமாகக் கண்ணீர் கன்னங்களில் சரிந்தது. அதைக் கண்டவருக்கோ உள்ளம் பாசத்தில்  கரைந்தது.

“உனக்குப் போய் ஆண்டவன் இப்படி ஒரு வாழ்க்கையைக் கொடுக்கப் பார்க்கிறானே மா?!” என்று மனம் தாளாது ராஜம்மா புலம்பவும்,

“யார் மீதும் குற்றமில்லை” என்பதாகவே தாமரையின் பதில் இருந்தது.

நெடு நேரம் நீடித்த பெண்களின் உரையாடல் ஒரு முடிவே இல்லாது தொடர்வதை உணர்ந்த தாமரை, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்தில், “நாளை விஷயத்தை நாளை பார்த்துக் கொள்ளலாம் பாட்டி. இப்போ சாப்பிட்டுப் படுங்க” என்று மட்டும் சொன்னாள்.

அவள் சொன்னதையே அவளுக்குத் திருப்பிச் சொன்ன பாட்டி, அவளையும் தன்னுடன் சாப்பிட அழைக்கவும், வேறு வழியின்றி இருவருமே ஒருவருக்காக மற்றவர் உண்டும் உண்ணாமலும் எப்படியோ உண்டு முடித்தனர்.

முத்துசாமி இறந்த நாளில் இருந்தே தாமரையைத் தனியாக விட முடியாத ராஜம்மா, அவளுடன் தான் அவள் வீட்டில் இரவு படுத்துக் கொண்டிருந்தார்.

தாமரையைத் தன் மடி சாய்த்துத் தட்டிக் கொடுத்து முதலில் அவளைத் தூங்க வைத்தவர்,

“ஆண்டவா! எப்படியாவது நாளைக்கு இந்தப் பெண்ணைக் காப்பாற்றுப்பா!” என்று ஒரு வேண்டுதலை மனக்குமுறலுடன் வைத்து விட்டே உறங்கினார்.

யாருக்காகவும் காத்திருக்காது விடிந்த விடியலைப் போல, மறுநாள் பொழுது புலந்ததுமே, வேலு தாமரையின் வீட்டு கதவைத் தட்ட ஆரம்பித்து இருந்தான்.

இடியென கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்த பெண்களுக்கு, அந்த முழக்கமே வந்திருப்பது யாரென தெரியப்படுத்தியதில், அவர்களின் உள்ளமும் உடலும் அதிர்ந்து போனது பயத்தில்.

எவ்வளவு நேரம் இப்படியே கதவைத் திறக்காமல் உள்ளேயே ஒளிந்து இருக்க முடியும்? என்று எண்ணிய தாமரை, மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு வாயிலை நோக்கிச் சென்ற நேரம், அவளின் கைப் பிடித்து நிறுத்தி, அவளுக்கு முன் சென்று கதவைத் திறந்தார் ராஜம்மா.

கதவு திறக்கப்படவுமே, அங்கே தாமரையின் முகம் காண ஆசையாகக் காத்திருந்த வேலுவுக்கு பாட்டியின் தரிசனம் கிடைக்கவும், அதுவே அவனைக் கொஞ்சம் கடுப்பேற்றி விட்டது.

அதை அப்படியே குரலில் வெளிப்படுத்தியவன், “என் பணம் எங்கே?” என்று இருபொருள் படக் கேட்டான்.

அதன் அர்த்தம் புரிந்த போதும் தங்களின் சூழ்நிலை காரணமாக, “அது வந்து தம்பி…” என்று பாட்டி  இழுக்கும் பொழுதே, “இந்த வந்து போயி கதை எல்லாம் இங்கே வேணாம்.. என் பணம் எங்கே?”  என்றான் மீண்டும் கறார் குரலில்.

அவனுக்குத் தெரியாதா? பாட்டி யார் யாரிடம் கடனுக்குச் சென்று நின்றார்கள் என்று..

அவர்களில் ஒருவரைக் கூட அவருக்குப் பணம் கொடுக்க விடாது செய்தவனும் அவன் தானே? அந்தத் தைரியம் கொடுத்த உத்வேகத்தில் தானே ராஜம்மாவிடம் இந்த எகிறு எகிறுவதே.

அது புரியாதவரும், அவனிடம் கெஞ்சியாவது தாமரையைக் காப்பாற்ற முயற்சிக்கலாம் என்று எண்ணி, “தம்பி! கேட்ட இடத்தில இருந்து கைக்குப் பணம் வரலை. இன்னும் கொஞ்ச நாள் டைம் கொடுத்தீன்னா எப்படியாவது உன் கடனை நாங்க திருப்பி அடைச்சிடுறோம்” என்று குரல் தாழ்ந்து சொன்னார்.

அதைக் கேட்டு ஏகத்துக்கும் கடுப்பான வேலு, “என்ன இன்னும் டைம் கொடுக்கணுமா?” என்று எரிச்சலுடன் கேட்டவன்,

மேலும் “இங்கே பார் கிழவி.. ஏற்கனவே உன் மேலே கொலை காண்டுல இருக்கேன். ஒழுங்கா இந்த விஷயத்தில் தலையிடாம ஒதுங்கிப் போய்டு! இல்லைன்னு வச்சுக்கோ, இப்பவே உன்னைக் காணா பொணமாக்கிடுவேன்!” என்று ஆக்ரோஷத்தில் உறுமவும்,

ராஜம்மா நடுங்கினாரோ இல்லையோ அவனின் பேச்சில் தாமரை கொலை நடுங்கிப் போனாள்.

இவ்வளவு சொல்லியும்  தாமரையை நெருங்க முடியாதபடி வாசலை மறைத்துக் கொண்டு ராஜம்மா நிற்பதைக் கண்டவன், கோபத்தின் உச்சிக்கு சென்று அவரை அங்கிருந்து அகற்றும் வெறி கொண்டு, அவரை நோக்கித் தன் கைகளை நீட்டிய நேரம்,  பாட்டியைத் தனக்குப் பின்னால் இழுத்துக் கொண்டு பாய்ந்து அவனுக்கு முன் வந்து நின்றாள் தாமரை.

“அவங்களை ஒன்னும் பண்ணிடாதீங்க!” என்று கைகள் கூப்பி நின்றவளின் கண்ணீரைக் கண்டுகொள்ளாது, தன் முன் நின்றவளை ஒரு நிமிடம் அங்குலம் அங்குலமாக ரசிக்க ஆரம்பித்தான் வேலு.

அவனின் துச்சாதனன் பார்வையில், தன் மேனியில் கம்பளிப்பூச்சி ஊர்வதைப் போல உணர்ந்து, உள்ளுக்குள் வெந்து போனாள் தாமரை.

“நீ என் கூட வந்துட்டா  நான் ஏன் செல்லம் இந்தக் கிழவியை எல்லாம் தொட போறேன்?” என்று பல்லை இளித்துச் சொன்னவனின் பேச்சைக் கேட்டு கூனி குறுகிப் போனவள்,

“என்னை விட்டுடுங்களேன்!!” என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கண்ணீர் மல்க நேரடியாகவே வேலுவிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.

அதைக் கண்டவனுக்கோ சினம் தான் ஏறியது. “ஏய்! என்ன நக்கலா பண்ணிட்டு இருக்க? கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுன்னு சொன்னா, என்கிட்ட இல்லைன்னு சொல்ற. சரி, அதுக்கு பதிலா என் கூட வந்து வாழுன்னு சொல்றேன். அதுவும் முடியாதுன்னா என்ன அர்த்தம்? என்னைப் பார்த்தா என்ன உங்களுக்கு எல்லாம் கேணை மாதிரி இருக்கா?? ஒழுங்கு மரியாதையா என் கூட அடம்பிடிக்கமா வந்துடு!” என்றான் அதிகாரமாக.

அவனின் பேச்சைக் கேட்டுக் கொஞ்சமும் அசையாதவளின் செய்கையில், ‘இது வேலைக்கு ஆகாது! மயிலே மயிலேன்னா எந்த மயில் தான் தானா வந்து இறகு போட்டு இருக்கு? நாம புடுங்குனா தான் உண்டு’ என்று எண்ணிக் கொண்டவன், “வாடி!” என்றபடி தாமரையின் கரத்தை தன் இரும்பு கரம் கொண்டு பற்றி இழுத்து, தன்னுடன் வெளியே அழைத்துச் செல்ல முற்பட்டான்.

வேலுவின் அதிரடியில் ஆடிப் போன ராஜம்மா, “டேய் விடுடா அவளை! இல்லை கத்தி ஊரைக் கூட்டிடுவேன்” என்று சொல்ல,

அதில் நின்று நிதானித்தவன், ”என்னது? ஊரைக் கூட்டுவியா? கூட்டு… யார் வேணாம்ன்னு சொன்னா? அன்னைக்கு நியாயம் பேசுன எவன் வந்து இன்னைக்கு உங்களுக்காகப் பேசுறான்னு நானும் பார்க்கிறேன்” என்று மறுகையால் மீசையை நீவி விட்டபடி சற்றுத் தெனாவெட்டாகவே சொன்னான்.

அந்தப் பேச்சுக்கு பின் இருக்கும் தைரியம் ஏன்? என்று ராஜம்மாவாக்குத் தான் நன்கு தெரியுமே! “சொன்ன சொல் தவறிய பின், இந்த ஊர் மட்டுமில்ல இனி வேறு யாரும் தங்களுக்குப் பரிந்து கொண்டு வேலுவிடம் பேச முன் வர மாட்டார்கள்” என்று.

அந்த மிதப்பில் தங்களை எள்ளி நகையாடுபவனிடம் என்ன சொல்லித் தாமரையை மீட்பது என்று பரிதவித்துப் போய் நின்றவர், அப்போதும் விடாது, “அந்தப் பெண்ணை விட்டுடுப்பா, உனக்குக் கோடி புண்ணியமா போகும்!” என்று அவர் ஒருபுறம் கெஞ்சினார் என்றால், தாமரையோ, “என்னை விட்டுடுங்களேன்!”  என்று மறுபுறம் கதறினாள்.

பெண்களின் கெஞ்சலையும், கதறலையும் கேட்டுக் கொஞ்சமும் மனம் இறங்காதவனின் செயலைக் கண்டுகொண்டு இருந்த  அக்கம்பக்கத்தினருக்கு வேலுவின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தாலும், அவனைத் தட்டிக் கேட்க முடியாத இயலாமையில் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றார்கள்.

“இனி இந்தப் பெண்ணின் வாழ்க்கை அவ்வளவு தான்!!” என்று சுற்றி இருந்தோர் உச்சுக் கொட்டாத குறையாக தாமரை குறித்து மனதிற்குள் பரிதாபப்பட்ட நேரம், அங்கு வெளிவாசலில் வந்து நின்றது ஒரு கார்.

அதிலிருந்து இறங்கிய இருவர் அங்கு நடந்து கொண்டு இருந்த நிகழ்வைக் கண்டு உள்ளம் கொதித்துப் போய், நொடியும் தாமதிக்காது, தாமரையை மீட்க அவளை நோக்கி ஓடோடி வந்தனர்.

“விடுடா ராஸ்கல் அந்தப் பெண்ணை!!” என்று வேலு பிடித்து இருந்த கையைப் பொசுக்காத குறையாகப் பார்த்துச் சொன்னவரின் பேச்சில்,

“யார் நீங்க?” என்றான் வேலு.

“நான் யாரா இருந்தா உனக்கு என்னடா? உனக்குத் தேவை பணம்! இந்தா, பொறுக்கிட்டுப் போ!” என்று அதட்டியபடியே தன் கையில் இருந்த பையிலிருந்து இரு பணக்கட்டை எடுத்து வேலுவின் முகத்தில் தூக்கி எறியாத குறையாக விசிறி அடித்தார் ராமமூர்த்தி.

அவரின் மேல்தட்டுத் தோற்றமும், அதட்டலும் வேலுவைச் சற்று வார்த்தை விட்டு விடாது நிதானிக்க வைத்தாலும், தாமரையைப் பிடித்திருந்த கையை அவன் இன்னும் விடவில்லை.

“விடுடா பொறுக்கி!” என்றபடி தாமரையின் கையை வேலுவிடமிருந்து பறிக்காத குறையாக பறித்துக் கொண்டு, தன்னிடம் அவளை அடைகாத்துக் கொண்டு நின்றார் ராமமூர்த்தியுடன் வந்திருந்த விஜயா.

இவர்கள் இருவரும் யார் என்று தாமரைக்குத் தெரியாத பொழுதும் ராஜம்மாவுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது.

அதன்பொருட்டு “அம்மா! நீங்க இங்கே?” என்று விஜயாவைப் பார்த்துக் ராஜம்மா கேட்கவும், “அதெல்லாம் அப்புறம் சொல்றேன் மா” என்று அவரிடம் சொன்னவர், தன் கணவரின் புறம் திரும்பி, “முதலில் இந்தப் பொறுக்கியை போலீசில் பிடிச்சு கொடுங்கங்க. அப்போதுதான் இவனுக்கு எல்லாம் புத்தி வரும்” என்று கனன்ற தன் நெஞ்சத்தை அடக்க முடியாது வார்த்தைகளில் அனலைக் கக்கினார் விஜயா.

“ஏய்! இந்தாரும்மா.. யாரு பொறுக்கி?” என்றான் வேலு சற்றுக் குரலை உயர்த்தி தன்மானம் தாங்காது.

அதைக் கேட்டு அவனைப் அற்ப பதரை போல் பார்த்த விஜயா, “பணத்தைக் கொடுத்துட்டு அதுக்குப் பதிலா ஒரு பொண்ணைப் பணயமா கேட்குறியே, உன்னையெல்லாம் பொம்பளை பொறுக்கின்னு சொல்லாம வேற என்னடா சொல்லுவாங்க?” என்று சூடாகவே அவனுக்குப் பதிலடி கொடுத்தார்.

“ஏய்! யாரைப் பார்த்துப் பொம்பளை பொறுக்கின்னு சொல்லுற???” என்று அவரை நோக்கிப் பாய போன வேலுவைத் தடுத்து நிறுத்திய ராமமூர்த்தி, “உனக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுத்தாச்சுல.. அதை எடுத்துக்கிட்டு இடத்தைக் காலி பண்ணுற வேலையைப் பாரு!” என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லவும்..

“என்னது இடத்தைக் காலி செய்யணுமா??? அதைச் சொல்ல நீங்க யாரு சார்? முதலில் அதைச் சொல்லுங்க.. உங்களுக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க யாரு அவளுக்காக இவ்ளோ பணம் கொடுக்க?” என்று எகத்தாளமாகக் கேட்டான்.

ஆனால் அவனின் அரட்டல் உருட்டலுக்கு எல்லாம் அசருபவரா ராமமூர்த்தி!! ‘நீ எத்தன்னா நான் எத்தனுக்குத் எத்தன்டா!!’ என்பதைப் போல, எதைச் சொன்னால் இவன் வாய் அடங்கும் என்று அறிந்து இருந்தவர், தன்னை விடுத்துத் தங்கள் முதலாளியின் பெயரை முதலில் வேலுவிடம் சொன்னவர்..

“இந்தப் பெண் எங்க கம்பெனியில் தான் வேலை செய்யுது. இனி நீ இவர்களைத் தொந்திரவு செய்தா அவரைப் பகைப்பதற்குச் சமம்!” என்பதையும் மறைமுகமாகச் சொல்லி எச்சரித்தார்.

‘அடித்தட்டு மக்களை ஏய்த்துப் பிழைக்கக் கூடிய வேலு மோதக் கூடிய ஆளா ராமமூர்த்தியின் முதலாளி?’ என்பதில் ஒரு கணம் பயந்து போன வேலு, உடனே தன் பணத்தை எடுத்துக் கொண்டு ஜகா வாங்காத குறையாக, ஒரு மன்னிப்பை வேண்டி விட்டு அங்கிருந்து  கிளம்பினான்.

அவன் சென்ற பின்பு தான் தாமரைக்கும் ராஜம்மாவுக்கும் உயிரே வந்தது போல ஆனது.

தாயாகத் தன்னை அணைத்து இருப்பவர் யார் என்று அறியாத போதும், அவரின் பாசத்தில் பரவசம் கொண்டிருந்த தாமரை, அவரிடமிருந்து விலகி நின்று, “நீங்க யாருன்னு எனக்குத் தெரியலையே?” என்று தன் மானம் காத்தவர்களைப் பற்றி அறிய முற்பட்டாள்.

விஜயா அவளுக்குப் பதில் சொல்லும் முன் ராஜம்மா அதற்கான பதிலை அவளுக்குக் கொடுத்து இருந்தார்.

அதில் முகம் தெளிவு பெற்றாலும், இன்னும் முழுதாகத் தெளியாதவளின் நிலை அறிந்த ராமமூர்த்தி,

“என்னம்மா.. இவர்கள் ஏன் தனக்கு இவ்வளவு பணம் கொடுக்கணும்ன்னு யோசிக்கிறியா?” என்று கேட்கவும், சட்டென்று ஆமாம் என்று தலையாட்டியவளினுள்ளே, ‘உதவியவர்களிடமே இப்படிக் கேட்பது முறையா?’ என்ற கேள்வி எழவும், உடனே ‘இல்லை’ என்ற விதமாக மறுப்பாகத் தலை ஆட்டினாள். அவளின் குழம்பிய நிலையைக் கண்டு  ராமமூர்த்தியும் விஜயாவும் சிரித்து விட்டனர்.

ஆனாலும் அவளுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய கடமையை உணர்ந்த ராமமூர்த்தி, “நீ அலுவலக கடன் கேட்டு இருந்தல்ல அது தான் இது” என்று சற்றுக் குரலை உயர்த்தியே சொன்னார்.

அக்கம் பக்கம் இருப்பவர்களின் காதிலும், அவர் நினைத்தது போல சரியாய் போய் விழுந்ததில்…

அதுவரை, ‘யார் இவர்கள்??? எதுக்கு இவ்வளவு பணம் தாமரைக்காகக் கொடுக்கிறார்கள்?? என்று வாய் திறந்து கேட்க முடியாவிட்டாலும், அதன் விடையை அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்க அங்கே நடப்பதையே கவனித்து நின்று இருந்தவர்களுக்கு அதற்கான விடை தெரியவும்,

“ஒஹ்ஹ்! அப்படியா விஷயம்?” என்று மட்டும் நினைத்துக் கொண்டு கூட்டம் கலைந்து அவரவர் பிழைப்பைப் பார்க்கச் சென்று விட்டனர்.

சுற்றி இருந்த அனைவரும் கலைந்து செல்வதைக் கண்ட ராமமூர்த்தி, ஒரு அர்த்தம் நிறைந்த பார்வையில் மனைவியைக் காணவும், கணவரின் மனமறிந்தவரும் உள்ளுக்குள், “என்ன உலகமடா இது?!” என்ற ரீதியில் நகைத்துக் கொண்டார்.

“அலுவலக கடனா? ஆனா..?” என்று ராஜம்மா ஏதோ கேட்க வரும் முன், “என்ன ராஜம்மா… இப்படியே வெளியவே நிற்க வைத்துப் பேசி அனுப்பிடுவீங்க போலயே! மலை மேல் இருந்து கார் ஓட்டிட்டு வந்ததில் செம முதுகு வலி! கொஞ்சம் உட்கார சொல்ல மாட்டீங்களா???” என்றதும்,

திடுக்கிட்டுத் தன்னைத்தானே திட்டியபடி, “நான் ஒரு கூறு கெட்டவ சார்… நீங்க வீட்டுக்குள்ள வாங்க, நீங்களும் வாங்கம்மா” என்று வந்தவர்களை வீட்டினுள் அழைத்துச் சென்ற ராஜம்மா, “தாமரை! ஓடிப் போய் அந்தப் பாயை எடுத்து விரி” என்று சொல்லவும், சிட்டாக, “இதோ பாட்டி!” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இன்முகமாக வீட்டுக்குள் சென்றாள் அவள்.

தம்பதியினர் இருவரும் பாயில் அமர்ந்து மண் சுவற்றில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்தனர். “மோர் குடிக்குறீங்களா சார் இல்லைன்னா சர்பத் வாங்கிட்டு வரச் சொல்லவா?” என்றார் ராஜம்மா.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் மா.. இப்படி வந்து உட்காருங்க, ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட பேசணும்” என்று விடுகதை போட்டார் ராமமூர்த்தி.

“என்ன சார் பேசணும்?” என்று தன் முகத்தையே பார்த்திருந்தவரிடம் வந்த விஷயத்தைச் சொல்லும் முன் தன் மனைவியை ஒரு முறை பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தார் ராமமூர்த்தி.

கணவனின் விழி செய்தி படித்த விஜயா, அங்கே ஓரமாக நிலைவாசலைப் பிடித்துக் கொண்டு நின்று இருந்த தாமரையைப் பார்த்து. ”இங்கே வாம்மா, இங்கே வந்து உட்காரு!” என்று தனக்குப் பக்கத்தில் தரையைத் தட்டிச் சொல்லவும், அவரின் பேச்சைக் கேட்டு தயங்கிய விழிகளுடன் ராஜம்மாவைப் பார்த்தாள் தாமரை.

“வந்து உட்காரும்மா” என்று அவரும் அழைக்கவும், அங்குச் சென்று அவர்களுடன் அமர்ந்து கொண்டாள் தாமரை.

பெண்கள் இருவரும் தங்களையே ஆர்வம் மேலோங்கிய விழிகளில் மொய்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து, நேரடியாக வந்த விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் விஜயா.

அதைக் கேட்டு, “என்னம்மா சொல்றீங்க??” என்று பாட்டி அலறினார் என்றால்..

அவருக்கு அருகில் இருந்த தாமரையோ, செவி வழி இதயம் நுழைந்த செய்தியில் திடுக்கிட்டுப் பிரம்மை பிடித்தது போல சிலையாகிப் போயிருந்தாள்.

Advertisement