Advertisement

அத்தியாயம் – 4

ராமமூர்த்தியுடன் அவருடைய அறையில் அமர்ந்து, அந்த ஆண்டுக்கான ஆடிட்டிங்க்குத் தேவையான கோப்புகளைத் தயார் செய்து கொண்டு இருந்த கதிரின் போன் அழைத்தது.

யாரென்று அவன் எடுத்துப் பார்க்க, அது வசந்த்!

“என்னடா?”

மறுபுறம், “சாப்பிட வரலையா? எங்கே இருக்க? நான் உன்னோட ரூம்ல தான் இருக்குறேன்” என்று வசந்த் சொல்லவும் தான், மதிய சாப்பாட்டு நேரம் கடந்து கொண்டு இருக்கிறது என்பதே கதிருக்கு நினைவு வந்தது.

கைக்கடிகாரத்தைப் பார்த்து அது இரண்டை காட்டவும், “ஹோ! டைம் ஆகிடுச்சா..?? வேலைல கவனிக்கலை.. நீ முதல்ல கான்டீன் போய் சாப்பிட்டுட்டு இரு. நான் வேலையை முடிச்சுட்டு வந்து ஜாயின் பண்ணிக்குறேன்” என்றான்.

“சரி, உனக்கு என்ன வாங்கி வைக்கட்டும்?” என்று கேட்ட வசந்த்திற்குத் தனக்குத் தேவையானதைச் சொல்லி விட்டு போனை அணைத்தான் கதிர்.

கதிரின் உரையாடலில் இருந்தே அவன் சாப்பிட செல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட ராமமூர்த்தி,

“நீ கிளம்புபா.. மீதியைச் சாப்பிட்டு வந்து பார்த்துக்கலாம்” என்று சொன்னார்.

“இல்ல சார், இதை முடிச்சுட்டுப் போறேன்” என்று கதிர் வேலையை முன்னிருத்திப் பேசவும், ‘இவன் இதைத்தான் சொல்வான்’ என்று அறிந்திருந்தவர், வேறு வழியில் அவனை மடக்கினார்.

“உனக்குப் பசிக்குதோ இல்லையோ, எனக்குப் பசிக்குதுப்பா. உன்னை வச்சுக்கிட்டு நான் மட்டும் எப்படிச் சாப்பிடுறது? கூடச் சாப்பிடுன்னு சொன்னாலும் வேணாம்ன்னு முறுக்குவ” என்று ராமமூர்த்தி ஒரு மாதிரியாகக் குறை சொன்னார்.

அவரின் பேச்சுக்குப் பின்னால், ‘இந்த கேன்டீன் சாப்பாட்டு எல்லாம் வேண்டாம். உனக்கும் சேர்த்து தினமும் நானே சாப்பாடு கொண்டு வரேன்’ என்று முன்பு சொன்ன அவரின் வார்த்தைகளை மறுத்திருந்ததை உணர்ந்தான் கதிர்.

அதனால் அவனின் மீதான செல்ல கோபமே அந்நேரம் அவரிடமிருந்து காரமாக வெளிப்படுகிறது என்பதை உணர்ந்திருந்தவனும், அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர்க்க விரும்பாது, கையிலிருந்த கோப்பை மூடித் தனக்கு முன்னே இருந்த டேபிளின் மீது வைத்து விட்டு, சாப்பிட்டு வருவதாக அவரிடம் சொல்லி விட்டே கிளம்பினான்.

‘அதானே.. கொஞ்சமும் பிடிகொடுக்க மாட்டானே?’ என்று  நினைத்தவரும் அவனுக்கு விடைகொடுத்தார்.

அங்கிருந்து நேராக கான்டீனை நோக்கிச் செல்ல அவசர அவசரமாக நடக்க ஆரம்பித்த கதிர் ஒரு வளைவில் திரும்பிய நேரம், பக்கவாட்டில் மறுபுறமிருந்து வந்த பெண்ணின் மீது கவனிக்காது இடித்து நின்றான்.

ஆனால் அவனின் மீது மோதிய பெண்ணோ, எதிர்பாராத மோதலில் கொஞ்சமே பின்வாங்கி நிலைதடுமாறி நின்ற போதும், அப்பொழுது தான் சாப்பிட கைக் கழுவி வந்திருந்தவளின் கையில் இருந்த ஈரத்தால், அவள் கையில் இருந்த டிபன் பாக்ஸ் இடித்த வேகத்தில் அவள் கை நழுவி கீழே விழுந்தது. அதனால் அதன் மூடி திறந்து பாதி உணவு வெளியில் சிந்தியும், மீதி பாக்ஸிலும் தேங்கிப் போனது.

சாப்பாடு கொட்டிப் போனதைக் கண்டு ‘அச்சோ!’ என்று எண்ணிய கதிர், மன்னிப்பு கேட்க நினைத்து நிமிர்ந்து, தான் இடித்த பெண்ணின் முகம் பார்க்க முனைந்த நேரம், அவளோ, ‘ஒரு ஆடவனை இடித்து விட்டோமே?’ என்ற பயத்தில் கண்களில் மிரட்சியுடன் கைக் கால்கள் நடுங்க கதிரைப் பார்த்து நின்று இருந்தாள்.

“மன்னிச்சுடுங்க சார்.. மன்.. மன்னிச்சுடுங்க சார்..” என்று திக்கித் திணறி பெரும்பாடுபட்டு முன்னே இருப்பவனின் முகம் பார்க்காது, அவன் சட்டையைப் பார்த்துச் சொன்னாள்.

அவளின் செய்கையும், பேச்சும், அதில் வெளிப்பட்ட பயமும் கதிருக்குக் கொஞ்சம் அதிகமாகவே தோன்றியது.

“ரிலாக்ஸ்!” என்று முதலில் எதிரே இருப்பவளைச் சமாதானப்படுத்த முயல, ஆனால் அவனின் பேச்சு விளங்காது, அவனைப் புரியாது நிமிர்ந்து பார்த்தாள், மழைக்குக் கூடப் பள்ளிக்கூடம் செல்லாத தாமரை.

அவளின் விழிகளோடு தன் கண்களை ஒரு நிமிடம் கலந்தவனுக்கு அதிலிருந்த கலக்கத்தில், “உன் மேல மட்டும் தப்பில்லை. நானும் தான் அவசரமா வந்ததுல உன்னைக் கவனிக்காம இடிச்சிட்டேன். அதுல உன்னோட சாப்பாடு வேற கொட்டிடுச்சு.. மன்னிச்சிடு!” என்று அவன் சொல்லும் பொழுது தான், கீழே குனிந்து தன் உணவு கொட்டி இருப்பதையே அப்பொழுது தான் கவனித்தாள் தாமரை.

கீழே சிதறிக் கிடந்த உணவைக் கண்டு உள்ளுக்குள் நொந்து போனாள் அவள்.

அந்த முக வாட்டத்தைக் கண்டவன், தன்னுடைய பர்ஸிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துத் அவளிடம் நீட்டினான்.

அவள் குழப்பமாய் அவனை ஏறிட, “இந்தா.. இதை வாங்கிக்கோ. கேன்டீன்ல ஏதாவது வாங்கிச் சாப்பிடு!”  என்று சொன்னான்.

தன் தவறை திருத்திக் கொள்ள நினைத்து அவன் அவ்வாறு சொல்லியதைக் கேட்டுக் கண்கள் விரிய அவனை அதிசயித்துப் பார்த்தாள் தாமரை.

தந்தையைத் தேடி வீடு வந்து சத்தம் போடும் துஷ்டர்களையும், முழு நேரமும் குடியில் இருக்கும் தந்தையையும் தவிர, அவள் வாழ்வில் சந்திக்க நேர்ந்த மிகச் சில ஆண்களில் இருந்து கதிர் மிகவும் வேறுபாடாக அவளின் கண்களுக்குத் தெரிந்ததால், அவனையே இமைக்க மறந்து சில நிமிடம் பார்த்திருந்தாள் தாமரை.

“என்னாச்சு?” என்றபடி அவளின் முன் சொடக்குப் போட்டு அவளைச் சுய உணர்வுக்குக் கொண்டு வந்தான் கதிர்.

தாமரையோ, சட்டென தன் செயலில் தன்னைத்தானே மானசீகமாகத் தலையில் கொட்டிக் கொண்டு தலை குனிந்தவள், “ஒண்ணுமில்லை சார்” என்று மறுப்பாகத் தலையாட்டிச் சொன்னாள்.

“இந்தா, இதை வாங்கிக்கோ!” என்று கையில் இருக்கும் பணத்தை அவளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சீக்கிரம் நகர்ந்து செல்லவே நினைத்தான் கதிர். 

ஏனென்றால் சாப்பாடு நேரம் கடந்து கொண்டு இருக்கிறதே? என்ற எண்ணம் அவனுக்கு.

“இல்லை சார், வேண்டாம்! நான் பார்த்துக்குறேன். நீங்க கிளம்புங்க, சாப்பாட்டுக்கு நேரமாச்சு” என்று அவன் போகும் வழியறிந்து, அது எங்குச் செல்கிறது என்பது புரிந்து, அவ்வாறு சொன்னாள் தாமரை.

‘சாப்பிட அவளிடம் பணம் இருக்கும் போல! தன்னிடம் பணம் வாங்க அவளுக்கு விருப்பமில்லை போல!’ என்று பல காரணங்களைத் தனக்குள்ளேயே அடுக்கிக் கொண்டவன், தான் நீட்டிய பணத்தை மீண்டும் பர்ஸில் வைத்துக் கொண்டு சரியென்பது போல அவளிடம் தலையாட்டி விட்டு, அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றான்.

அங்கிருந்து நகர முடிந்தவனால், சற்று முன் பார்த்த பெண்ணின் நினைவில் இருந்து நகர முடியாது, ஏதோ ஒன்று அவனின் மூளையை அரித்தது.

‘இந்த முகத்தை எங்கேயோ பார்த்து இருக்கோமே?? எங்கே?? எங்கே??’ என்றபடியே எதுக்கு அதைப் பற்றி நினைக்கிறோம் என்று கூடத் தெரியாது எண்ணிக் கொண்டு இருந்தவனின் மூளையில் மின்னல் வெட்டியது. இரண்டு நாட்களுக்கு முன் அனாமிகா காட்டிய ஃபைலில் இவளைப் பார்த்த நியாபகம் வரப் பெற்றவனின் தலை தானாகவே தாமரை இருந்த இடம் நோக்கித் திரும்பியது.

அங்கே கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனவன், மீண்டும் அவளை நோக்கி ஓடி வராத குறையாகத் திரும்பி வந்து நின்றான்.

தரையில் சிந்திய உணவை மட்டும் தனியாகப் பிரித்து வழித்து எடுத்து, தன்னுடைய சாப்பாட்டு மூடியில் அதை எடுத்துக் கொண்ட தாமரை, டிபன் பாக்சிற்குள் தேங்கி இருந்த உணவை சிந்தாது சிதறாது பத்திரமாக அப்படியே எடுத்துக் கொண்டாள்.

சற்று முன் கைக் கழுவிய இடத்திற்கு அருகில் இருந்த குப்பை கூடையில் சாப்பாட்டு மூடியில் இருந்த வீணான உணவைக் கொட்டியவள், தன் கையையையும் மூடியையும் அங்கே கழுவி விட்டு பாக்சில் இருந்த மீதி உணவைப் பத்திரமாக மூடி எடுத்துக் கொண்டு, மீண்டும் சாப்பிட கிளம்பிய நிகழ்வை ஆரம்பத்தில் இருந்தே கண்டுவிட்டுத்தான் கதிர் அவளை நோக்கி வந்தது.

“என்ன பண்ற?”

அவளை வழி மறித்து நின்று கேட்டவனின் கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், அடுத்த நொடி முன்னே நிற்பவன் மீதான நல்லெண்ணத்தின் விளைவாகப் பதட்டம் குறைந்தது.

உடனே, “சாப்பிட போறேன் சார்” என்றாள்.

“அது எனக்குத் தெரியாதா? அந்த பாக்ஸ்ல இருக்குறதையும் ஏன் கொட்டலை?”

“இதைக் கொட்டிட்டா அப்புறம் நான் எதை சார் சாப்பிடுறது?” என்று சர்வசாதாரணமாகக் கேள்வி கேட்டாள் தாமரை.

அந்தக் கேள்வியில் உறைந்து போனது என்னவோ கதிர் தான்.

“அது கீழே விழுந்தது, அதை எப்படிச் சாப்பிடுவ?”

“இல்ல சார், தரையில் விழுந்ததைக் கொட்டிட்டேன். இந்தச் சாதம் பாக்ஸ்குள்ள இருந்தது. நல்லா தான் இருக்கு, சாப்பிடலாம்”

அவளின் அந்த விளக்கம் கதிரைச் சமாதானப்படுத்தாது மேலும் அவனை எரிச்சல் படுத்துவதாக இருந்தது.

“அதான் நான் பணம் தரேன்னு சொன்னேன்ல.. அதை விட்டுட்டு எதுக்கு இந்த வேலை செய்ற?” என்றவனின் எண்ணமோ, ‘இப்படிச் சாப்பிட வேண்டிய அவசியம் என்ன இவளுக்கு?’ என்ற கோபம் மட்டுமே!

அதில் ‘யாரிடம் பேசுகிறோம்? எதுக்கு இப்படிக் குரலை உயர்த்துகிறோம்?’ என்று தெரியாமலேயே தன் வார்த்தைகளில் காரத்தைக் கூட்டிப் பேசிக் கொண்டு இருந்தான் கதிர்.

ஆனால் அவனின் பேச்சில் அரள வேண்டியவளோ கொஞ்சமும் மிரளாது, “உங்க பணத்திலும் நான் சாப்பிட போறது என்னவோ இதே சாப்பாடு தானே சார்.. அதுக்கு எனக்கு இதுவே போதும் சார்! அதுமட்டுமில்லாம இந்தச் சாப்பாட்டு கூடக் கிடைக்காம ஊர் உலகத்தில் எவ்ளோ பேர் கஷ்டப்படுறாங்க. அப்படி எனக்கு இன்னைக்கு இதுவாவது கிடைச்சுதேன்னு நான் சந்தோஷப்படுறேன்”

அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுளீரென்று கதிரைத் தாக்கிக் கொண்டு இருந்தது.

அதை அறியாதவளோ, “நான் வரேன் சார்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்தாலும், அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் கதிரினுள் மறையாது ஈட்டியாக அவனைக் குத்திக் கிழித்து, அவனை நினைத்து அவனே கூனி குறுகும்படியும் செய்தது.

அவள் சொன்னது எந்தளவுக்கு உண்மை என்பதை ஒரு காலத்தில் அவனை விட யாரால் அனுபவித்து உணர்ந்து இருக்க முடியும்..?

அனாதையாக ரோட்டில் பசியும் பட்டினியுமாகத் திரிந்தவனுக்கு, கீழே கிடந்த  மிச்சம்  மீதி கூட தேவாமிர்த உணவாக மாறிய காலமும் உண்டு தானே..?? அப்படி உண்டவனுக்கு இன்று இவள் சாப்பிடும் உணவு எவ்வளவோ மேல் தானே..!!

ஆசிரம வாழ்க்கையில் அவனுக்கு மூன்று வேளை உணவு கிடைத்த போதும், அதை மதித்து உண்பது எப்படி என்றுதானே அங்கேயும் அவன் கற்று உண்டது. அப்படி இருக்கும் பொழுது, தானா இன்று அவளின் உணவைக் கொட்ட வேண்டியது தானே என்று கேட்டது???

‘எது என்னை இந்தளவுக்கு மாற்றியது? என்னுடைய தற்போதைய நிலையா? இல்லை என்னிடம் புதிதாகச் சேர்ந்து இருக்கும் பணமா?’

தனக்குத்தானே கேள்வி கேட்டவனுக்கான விடை கிடைக்கவில்லை என்றாலும், அதையும் தாண்டி வேறு ஒரு விஷயத்தை அவனின் அடிமனது அவனுக்கு உணர்த்தியது.

அது தூரத்தில் சென்று கொண்டு இருப்பவளிடம், சில நிமிடங்களேயேனாலும், அவனையே அவன் கண்டான் என்பது தான் அது. அவன் காதில் நேற்று கேட்ட ‘சொல்லால் அடித்த சுந்தரி, மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி’ ஓடியது.

சிலையாக நின்று இருந்தவனுக்கு அந்த வழியாகச் சாப்பாட்டு முடித்துத் திரும்பிய தொழிலாளர்கள் வணக்கம் வைக்கவும், சுய உணர்வு அடைந்து தாமரையின் எண்ணங்களில் இருந்து விடுபட முயன்றவனாக கான்டீன் நோக்கிப் பயணித்த கதிர், அங்கே நண்பன் வாங்கி வைத்திருந்த உணவைச் சாப்பிடாது அதை விரலால் அளைந்து கொண்டு இருந்தான்.

“என்னடா என்னாச்சு?” என்று அதைக் கண்ணுற்று வசந்த் கேள்வி எழுப்ப,

“என்ன என்ன?” என்று புரியாது திருப்பிக் கேட்டான் கதிர்.

“இல்ல.. எப்பவும் சாப்பாட்டை காக்க வைக்க கூடாதுன்னு என்கிட்ட சொல்லுவ. இன்னைக்கு நீயே இப்படிச் சாப்பிடாம அதை அளைந்துகிட்டு இருக்க. அதான் என்னாச்சுன்னு கேட்கிறேன்”

வசந்தின் விளக்கத்தைக் கேட்டு மீண்டும் ஒருமுறை தாமரை தான் கதிரின் ஞாபகத்தில் வந்து போனாள். அதில் நிஜமாகவே அதிகமாகக் குழம்பிப் போனான் கதிர்.

‘இப்பொழுது எதற்கு அவளை நினைக்கிறோம்?’

இருந்தாலும் தன்னைத்தானே அவளின் நினைப்பில் இருந்து மீட்டுக் கொண்டவன், வேறு எந்தவித நினைப்புக்கும் இடம் கொடுக்காது சாப்பிட்டு முடித்து, நேராக ராமமூர்த்தியின் கேபினை நோக்கிச் சென்றான். அங்கே சென்ற பின் தானாக மற்றது மறந்து அன்றைய வேலைகளில் மூழ்கிப் போனான் கதிர்.

மணி நான்கு என்ற நிலையில் ஒருவழியாகப் பார்த்துக் கொண்டு இருந்த வேலை அனைத்தும் முடிந்தது.

“சரிப்பா, நான் இதை ஆடிட்டர்க்கு அனுப்பிடுறேன். நீ அந்த பாக்கிங் செக்ஷன் போய் இன்னைக்கு குட்ஸ் எல்லாம் ரெடியான்னு பார்த்துட்டு வந்திடு” என்று சொன்னார் ராமமூர்த்தி.

அவர் சொல்படி அங்கே சென்று அனைத்தையும் சரிபார்க்க ஆரம்பித்தான்.

வேலை முடிந்து அனைவரும் வீடு சென்று கொண்டு இருந்த நேரம், கதிரும் முருகனுக்கு அழைத்து ஜீப்பை வாசலுக்குக் கொண்டு வரத் தகவல் சொல்லி விட்டு ஃபாக்டரி விட்டு வெளியேறிய நேரம், தற்செயலாகத் தனக்கு முன் நடந்து கொண்டு இருந்த ராஜம்மாவைப் பார்த்து விட்டு அவரின் அருகில் சென்றான்.

“எப்படி இருக்கீங்க ராஜம்மா???”

அவனது விளிப்பில் திரும்பியவரின் முகம் மலர்ந்தது.

“நான் நல்லா இருக்கேன் பா. நீ எப்படி இருக்க? இப்போ உடம்பு பரவாயில்லையா?” என்று மலர்வாய் அவனின் நலம் விசாரித்தார் அவர்.

“இதை நீங்க விடவே மாட்டீங்களா?? எப்பவோ உடம்பு சரியில்லாம போனதுக்கு எப்போ என்னைப் பார்த்தாலும் இதையே தான் கேட்பீங்களா??”

“உன்னைப் பார்த்தாலே எனக்கு அந்த நினைப்பு வந்திடுது தம்பி. அதில் தானாவே அப்படிக் கேட்டுடுறேன்” என்று புன்னகையுடன் விளக்கம் கொடுத்தார் ராஜம்மா.

கதிர் இங்கு வேலைக்கு வந்த புதிதில் அங்கு நிலவிய கடும் குளிரும் பனியும் அவனுக்கு ஒத்துக் கொள்ளாது போக, மிகவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஜன்னி வரை சென்று அவதிப்பட்டான். ராமமூர்த்தியின் ஏற்பாட்டில் சில காலம் ராஜம்மா தான் அவனின் வீட்டிற்கே சென்று, சிலபல மூலிகை கஷாயம் மற்றும் பத்திய உணவு சமைத்துக் கொடுத்து, அவனின் உடம்பைத் தேற்றி விட்டார்.

அதன்பின் தான் அவருக்கு இங்கு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தான் அவன். அதன்பின் ஃபாக்டரிக்குள் இருவரும் எங்கே எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும், அவர்களுக்கிடையேயான அன்புடன் கூடிய விசாரிப்புக்கள் சில மணி நேரங்களாவது நடக்கும்.

“இந்த ஊர் எனக்கு நல்லா செட் ஆகிட்டதால இப்போ எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லமா. நீங்க தான் மெலிஞ்சு தெரியுறீங்க. சரியா சாப்டுறீங்களா இல்லையா?” என்றான் அக்கறையாய்.

அதில் நெகிழ்ந்து போன ராஜம்மாவோ, “வயசு ஆகுதுல தம்பி.. அதான் முன்னாடி மாதிரி அதிகம் சாப்பிட முடியலை” என்று அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே அங்கு ராஜம்மாவை நெருங்கியிருந்தாள் தாமரை.

அவளைக் கண்ட இருவரின் பேச்சும் தடைபட்டுப் போனது.

தன் வேலை முடித்து பாட்டி ஒருவருடன் பேசிக் கொண்டு இருப்பதைக் கண்ட தாமரை, அவருடன் இருப்பவனைப் பார்த்தும், ‘மதியம் அவனைத்தான் பார்த்தோம், பேசினோம்’ என்ற வெளிப்பாடு சிறிதுமின்றி ராஜம்மாவிடம், “நான் வெளியில் காத்திருக்கிறேன் பாட்டி. நீங்க பேசிட்டு வாங்க” என்று சொல்லி விட்டு, அவர்களைக் கடந்து இயல்பாக வெளியேறவும், கதிருக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது.

‘அவள் என்னிடம் பேசி இருக்க வேண்டாம். ஆனால் மதியம் என்னிடம் அப்படிப் பேசி விட்டு, இப்பொழுது என்னவோ என்னை யாரென்றே தெரியாத மாதிரி போகிறாள்? சரியான திமிர் பிடித்தவளாக இருப்பாளோ?’ என்று போகிறவளையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் கதிர்.

அவனது நிலை அறியாத பெரியவரோ, “ரொம்ப நல்ல பொண்ணு தம்பி! என் கூடத்தான் இங்கே வேலை பார்க்குது” என்று அவளுக்கு அவனின் எண்ணத்திற்கு எதிர்மாறாக சர்டிஃபிகேட் கொடுத்தார்.

“உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணா பாட்டி?”

“ஆமா தம்பி, என் வீட்டுக்குப் பக்கத்துக்கு வீடுதான்” என்றவர், அத்தோடு விட்டு இருந்தாலும் பரவாயில்லையே..?

முதிர்ச்சியின் காரணமாகவோ, இல்லை தாமரை குறித்த எண்ணத்தின் காரணமாகவோ, அவளின் தாயின் இறப்புக்கும் தந்தையின் கையாலாகாதத்தனத்துக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு இருப்பவளின் நிலையை இரத்தினச் சுருக்கமாக அவனிடம் கவலையாகச் சொல்ல ஆரம்பித்தார்.

இறுதியில், “ஏதோ இங்கே வேலைக்கு வந்தாவது அந்தப் பொண்ணுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்காதான்னு தான், அவங்க அப்பாகிட்ட கெஞ்சிக் கூத்தாடி இங்கே வேலைக்குக் கூட்டிட்டு வந்து இருக்கேன் தம்பி. ஆனா அந்த ஆண்டவன் இந்தப் பொண்ணுக்கு என்ன எழுதி வச்சு இருக்கான்னு தெரியலையே?” என்று அங்கலாய்த்துச் சொல்லியவர், தாமரை வெளியில் காத்திருக்கிறாள் என்ற எண்ணத்தில், அத்துடன் தன் பேச்சை முடித்துக் கொண்டு விடைப்பெற்றார்.

அவரை அனுப்பி வைத்த கதிருக்கோ பல கேள்விகள் எழுந்து அவனை ஆட்டிப் படைத்தது. அதையெல்லாம் அவனின் பிடிவாதம் கொண்டு புறம் தள்ளியவன், வெளியே சென்று தனக்காகக் காத்திருந்த நண்பனுடன் ஜீப்பில் ஏறினான்.

அவனின் விதியோ அல்லது சதியோ..?

ராஜம்மாவுடன் சென்று கொண்டிருந்த தாமரையின் உருவம் அவர்களைக் கடந்து சென்ற ஜீப்பின் சைடு மிரரில் தெரிய, தன்னை மறந்து அவளையே அதில் கண்டுகொண்டு இருந்தான் கதிர்.

வீடு சென்ற பின்னும் ஏனோ அவனால் தாமரையின் நினைவில் இருந்து முழுதாக வெளிவர முடியாது போனது. அதுவும் அவளின் பின்புலம் அறிந்த பின், அவனின் மனம் பலமாக அவளைச் சுற்றியே சுழன்று கொண்டு இருந்தது.

இது அவளின் மீது கொண்ட அவனின் இரக்கமா? இல்லை அவளிடம் அவன் காணும் அவனறிந்த கஷ்டங்களின் பிம்பமா? எது தன்னை  இந்தளவுக்குத் தாக்கி அவளையே நினைக்க வைக்கிறது?

ஒன்றும் விளங்காமல், அதில் இருந்து விடுபடவும் முடியாமல் இரவு உணவு கூடத் தயார் செய்யாது, கட்டிலில் சாயந்தமர்ந்து கால்களை நீட்டிச் சிந்தித்துக் கொண்டு இருந்தவனின் மனச்சாட்சியோ, அவனைப் பலவிதத்தில் கேள்வி கேட்டுக் குடைய ஆரம்பித்தது.

ஒருநிலைக்கு மேல் அதைத் தாங்காது தலையை உதறிக் கொண்டு தன்னிலை அடைந்தவன்,

“ஒரு நாள் சந்தித்தவளைப் பற்றி நான் ஏன் இந்தளவுக்குச் சிந்திக்கிறேன்?’ என்று தனக்குள்ளேயே கேட்டு விட்டு, பின் அவனாகவே, ‘இது சரியில்லை கதிர்!!’ என்று ஒருவழியாகத் தன்னிலை தெளிந்து, குளியலறை நோக்கி எழுந்து சென்றான்.

ஆனால் அவனுக்கு எப்பொழுது தெரிய போகிறதோ? இனி அவளைப் பற்றி நினைப்பது மட்டுமே தான் தம்பி உன் வாழ்வாக போகிறதென்று விதி சொன்னதை..!!

Advertisement