Advertisement

அத்தியாயம் – 2

வீட்டின் அழைப்புமணி சத்தத்தைக் கேட்டு ‘முருகன் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாரா?’ என்ற எண்ணத்துடன் அணியப் போன பேன்ட்டை வேகமாக மாட்டிக் கொண்டு, ஒரு துண்டால் மேல் உடலை மறைத்தபடி வந்து வாயில் கதவைத் திறந்தான் கதிரவன்.

ஆனால் முருகனுக்குப் பதிலாக அங்கே நின்று இருந்தவரைக் கண்டு, ‘இவர் எங்கே இங்கே?’ என்ற எண்ணம் மேலோங்கினாலும், அவரிடம், ”உள்ளே வாங்க சார்!” என்று அழைத்து விட்டு முன்னே சென்றான் கதிரவன்.

அவனைத் தொடர்ந்தபடி வந்தவரோ, கதிரவனின் உயர் அதிகாரியும் எஸ்டேட்டின் மூத்த நிர்வாகியுமான ராமமூர்த்தி.

அவன் எடுத்துப் போட்ட பிளாஸ்டிக்  சாரில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, தன் கையிலிருந்த அடுக்கு கேரியர்பாக்சை அவனிடம் நீட்டியவர், “விஜயா கொடுத்துட்டு வரச் சொன்னாப்பா” என்று சொல்லவும், அதை எந்தவித மறுப்புமின்றி கை நீட்டி வாங்கிக் கொண்டான் அவன்.

கதிரவனைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால்.. பெற்றோரின்றி ஆசிரமத்தில் வளர்ந்தவன். ஒரு கட்டத்தில் படிப்பு முடிந்து அங்கிருந்து தனக்கான சுயத்தைத் தேடி வெளியேறியவனின் சில கால போராட்டத்தின் முடிவாக, அவனுக்குக் கிடைத்த வேலை தான், இந்த எஸ்டேட்டில் ராமமூர்த்திக்கு உதவியாளர் பதவி.

எந்தவித சிபாரிசுமின்றி, திறமையின் அடிப்படையில் கிடைத்த இந்த வேலை, கதிருக்கு எந்தளவுக்கு மனதிருப்தியையும் சந்தோஷத்தையும் கொடுத்ததோ, அதே அளவுக்கு, அந்த நேர்காணலை நேர்மையாக நடத்தியிருந்த ராமமூர்த்தி மீதான மதிப்பும் மரியாதையும் அன்றே பல மடங்கு அவனிடம் கூடியிருந்தது.

ஆனால் அந்த மதிப்பையும், மரியாதையையும் கூட சில நாட்களிலேயே தங்கள் அன்பாலும், அக்கறையாலும் ராமமூர்த்தி – விஜயா தம்பதியினர் அவர்களின் மீதான பாசமாக மாற்றியது கதிருக்கே சற்று வியப்புத்தான்!

அங்கு வேலைக்குச் சேர்ந்த இந்த நான்கு வருடங்களில், அவன் தேவையின்றி யாரிடமும் அதிகமாகப் பேசியதோ, சிரித்ததோ இல்லை.

இப்படி எப்பொழுதும் ஒருவித ஒதுக்கத்துடனும், இறுக்கத்துடனுமே கதிர் ஒதுங்கிப் போனாலும், அவனை விடாது கருப்பாகத் துரத்தி, ‘விசேஷம்… பிரதோஷம்…’ என்று எதையாவது சொல்லி, தங்கள் வீட்டில் செய்யும் பலகாரங்களைக் கதிரவனுக்குக் கொடுத்து அனுப்பி விடுவார் விஜயா.

முதலில் அதையெல்லாம் மறுத்தவனால், ஒரு நிலைக்கு மேல் அவர்களின் அன்பில் கரையத்தான் முடிந்ததே தவிர, எப்பொழுதும் போல கல்லாக இருக்க முடியவில்லை. அதற்கான சான்று தான், இன்று ராமாமூர்த்தியிடம் வெளிப்படாத அவனின் மறுக்கா தன்மை.

நேற்றைய சம்பவத்தின் தாக்கம் எங்காவது தென்படுகிறதா? என்று தன் முன்னே இருப்பவனை ஆராய்ந்து பார்த்தவருக்கு, அவனின் முகத்தில் இருந்து ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது போகவும், ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டார்.

“இன்னைக்கு நான் தோட்டம் இன்ஸ்பெக்ஷன் போறேன். அதனால நீ ஃபாக்டரி உள்ளே ஒரு விசிட் போயிட்டு வந்திடு. ஏதாவது விஷயம்ன்னா எனக்கு கால் செய்” என்று எழுந்து நின்று சொல்லவும்,

“ம்ம்ம்” என்று மட்டும் சொல்லித் தலையாட்டினான் கதிர்.

அதற்கு மேல் அவனிடம் என்ன சொல்ல என்று புரியாதவரும், வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பி வாசல் அடைந்து செருப்பை மாட்டும் பொழுது தான், ‘அவன் சோகமா இருந்தா ஏதாவது ஆறுதல் சொல்லிட்டு வாங்க.. நீங்க பாட்டுக்குக் கம்முன்னு வந்துராதிங்க’ என்ற மனைவியின் கட்டளை நினைவுக்கு வந்தது போல!! உடனே சடாரென கதிரை நோக்கி நிமிர்ந்தார் ராமமூர்த்தி.

“நேத்து பார்த்த பொண்ணு ஒன்னும் அந்த அளவுக்கு அழகா இல்லைல கதிர்?” என்று அவனிடம் கேட்டு விட்டு, பின் அவராகவே, “உனக்குப் பொருத்தமாவும் இல்லை” என்று சொன்னார்.

இப்பொழுதாவது ஏதாவது சொல்வானா என்றவாறு கதிரவனைப் பார்த்திருந்தவர் நொந்து போனார்.

பின்னே.. கிளம்பும் போதே தெளிவாக மனைவிடம் சொன்னார். 

“ஆத்துல மீன் பிடிக்கலாம், குளத்துல மீன் பிடிக்கலாம், கட்டாந்தரையில மீன் பிடிக்க அனுப்புறேயடி விஜயா? இது உனக்கே நியாயமான்னா.. கேட்டாளா அவ? இப்போ பாரு, என்ன சொன்னாலும் ஒரே ரியாக்ஷன் காட்டிட்டு நிக்கிற இவன்கிட்ட நான் என்னத்த ஆறுதல் சொல்றது? போற போக்க பார்த்தா இப்போ எனக்குத்தான் யாராவது ஆறுதல் சொல்லணும் போலயே!!” என்று எண்ணியவர், பாவமாகக் கதிரவனைப் பார்க்கவும், லேசாக இதழ் விரிக்காமல் சிரித்தான் கதிர்.

‘இதுக்கு இவன் சிரிக்காமலேயே இருந்து இருக்கலாம். இவன் பேசுனாவே எனக்குப் புரியாது. இதுல இப்படிச் சிரிச்சா நான் என்னனு நினைக்கிறது?’ என்று எண்ணி ராமமூர்த்தி குழம்பிய பார்வை பார்த்து வைத்தார்.

“அந்தப் பொண்ணை பார்க்கப் போறதுக்கு முன்னாடி, ‘பொண்ணு ரதி மாதிரி இருக்கா, எனக்குப் பொருத்தம்ன்னா அப்படி ஒரு பொருத்தம்ன்னு’ விஜயாம்மா சொன்னாங்க” என்று கதிரவன் அப்பொழுது தான் வாயைத் திறந்தான்.

ராமமூர்த்திக்கோ அவனின் பேச்சைக் கேட்டு, அப்படியே எங்காவது போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

“அது.. அது நேத்து போட்டோவை அவ சரியா பாக்கலை போல கதிர். அதான் அப்படிச் சொல்லியிருப்பா. நேர்ல பாத்தவுடன் தான்..” என்று அவர் ஏதோ சமாதானம் சொல்ல முனைய, அவரை அதிகம் சிரமப்படுத்த எண்ணாதவன்,

“அவங்க என்னை வேண்டாம்ன்னு சொன்னதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இதை விஜயாம்மாகிட்ட சொல்லிடுங்க” என்றான் அமைதியாய்.

ராமமூர்த்தியோ ‘நிஜமாவா?’ என்பது போலப் பார்த்து நின்றார்.

அவரின் கண்கள் வெளிப்படுத்திய கேள்வியின் அர்த்தம் புரிந்தவனும், “குடும்பம்ன்னா என்னனே தெரியாத நானே,  சொந்தமும் பந்தமும் சூழ இருக்க ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க பேராசை படும் போது, பெரிய குடும்பத்துல வளர்ந்த அவங்க வீட்டுப் பொண்ணை, அதே மாதிரி ஒரு குடும்பத்துல கொடுக்க அவங்க நினைக்கிறதுல தப்பு ஒன்னுமில்லையே சார்? அதனால தான் சொல்றேன், இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” 

அழுத்தம் திருத்தமாகச் சொன்னவனின் பேச்சே அவனுக்கான மனமுதிர்ச்சியைச் சொல்லாமல் சொல்லியதில் ராமமூர்த்தி தான் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தார்.

பின்னே.. தனக்குத் தெரிந்த நல்ல பையன் என்று தரகரிடம் கதிரின் வேலை, படிப்பு பற்றிய முழு விவரமும் சொன்னவர்.. அவனின் பிறப்பு பற்றிச் சொல்லாது விட்டது அவருடைய தவறு தானே?? ஆனால் அவரும் தான் என்ன செய்வார்? இந்தக் காலத்திலும் இப்படி அனாதை என்று ஒதுக்குபவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் அப்பொழுது நினைக்கவில்லையே!

இது ஒன்றும் கதிருக்கான முதல் நிராகரிப்பு இல்லை. இதற்கு முன்பே மூன்று பெண் வீடுகளில் மறுக்கப்பட்டவன் அவன். அதனால் தானோ என்னவோ, நேற்றைய முடிவு அவனை அதிகம் பாதிக்கவில்லை போல!

“சரிப்பா, நான் கிளம்புறேன். நீ சாப்பிட்டுட்டு ஆபீஸ் கிளம்பு, நேரமாச்சு!” 

அவனிடம் சொல்லிப் புறப்பட்டவரின் நெஞ்சத்திலோ, கதிரின் திருமணம் குறித்த ஒரு வேண்டுதல் இறைவனிடம் அந்நேரம் வைக்கப்பட்டது.

டிபன் சாப்பிட்டு முடித்துப் பாத்திரத்தைக் கழுவி சமையல் மேடையில் கதிர் வைக்கும் பொழுதே, அவனை ஏற்றிச் செல்ல வண்டியுடன் முருகன் வாசலில் வந்து இருந்தான்.

வீட்டை பூட்டி விட்டு முன்இருக்கையில் ஜீப்பில் ஏறிக் கொண்டவன், போகிற வழியில் தன் வீட்டைத் தாண்டி இருக்கும் வளைவில் குடியிருக்கும் நண்பன் வசந்தை தங்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு எஸ்டேட் நோக்கிச் சென்றான்.

கதிருடன் ஃபேக்டரியில் சூப்பர்வைசராக வேலை பார்ப்பவன் வசந்த். 

வடமாநிலத்தில் இருந்து வந்து சேர்ந்த அவனுக்கு முதலில் இங்கே வேலை செய்வதும், வேலையாட்களை வேலை வாங்குவதிலும் அதிகச் சிரமமாக இருந்த போது, கதிர் தான் அவனுக்கு நிறைய விஷயங்களில் உதவியிருந்தான். 

அதில் அவன்பால் ஈர்க்கப்பட்டவன், கதிருடனான தன்னுடைய நட்பை கொஞ்சம் வலுவாகவே வளர்த்துக் கொண்டான்.

வசந்தின் இலகுவான பேச்சும், யாரிடமும் கர்வமில்லாது பழகும் அவனின் தன்மையும் ஏதோ ஒரு விதத்தில் கதிருக்குப் பிடித்துப் போனதில், அவனிடம் மட்டும் தன்னுடைய கூட்டை விட்டு வெளியே வந்து சில நேரங்களில் மனம் விட்டுப் பேசுவான் கதிர். 

அதே போல அன்றும் பேசியபடி ஃபாக்டரி வந்து சேர்ந்த இருவரும் அதன்பின் தங்கள் வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டனர்.

தன்னுடைய கேபின் சென்று அன்றைய வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்திருந்த கதிர், சில கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டு இருந்த நேரம், அங்கே கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் அக்கௌண்டன்ட் அனாமிகா.

“குட் மார்னிங் பாஸ்!” என்றபடி தான் கையோடு கொண்டு வந்து இருந்த புதிய பணியாளர்கள் சேர்ப்பு விவரங்கள் அடங்கிய பட்டியலை அவனிடம் நீட்டினாள்.

அவளிடமிருந்து அதை வாங்கியபடி, “எத்தனை முறை சொல்லி இருக்கேன், என்னை அப்படிக் கூப்பிடாதேன்னு.. கேட்கவே மாட்டீயா நீ??” என்று அவளின் முகம் பாராமலேயே சொன்னான் கதிர்.

“அதைக் கொஞ்சம் என் மூஞ்சியை பார்த்துத்தான் சொல்றது” என்று கேட்டவளின் முகத்தைப் பார்த்துக் கதிர் முறைக்கவும், “இதற்கு நீங்க பார்க்காமலேயே இருந்து இருக்கலாம் பாஸ்” என்று கலாய்த்தாள் அவள்.

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவனாக, மீண்டும் அவள் கொடுத்த பட்டியலில் தன்னுடைய பார்வையை ஓட்டியபடி, ஒவ்வொன்றையும் சரிபார்த்து, அதில் தன்னுடைய ஒப்புதல் கையெழுத்தை போட்டுக் கொண்டு இருந்தான் கதிர்.

“இந்த உர்ர்ர்ர்ர்ர் மூஞ்சியை மட்டும் கொஞ்சம் மாத்தினா, இந்த ஆஃபீசில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை தெரியுமா பாஸ்??” என்று உரிமையுடன் பேசுபவளுக்கு, அந்த உரிமையைக் கொடுத்தது வேறு யாருமே இல்லை, கதிரே தான்!

ஆச்சரியம்!! ஆனால் அது தான் உண்மை! பின்னே.. அவனின் மானசீகத் தங்கையாயிற்றே அவள்!! அதன் பிரதிபலிப்புத்தான் அவனிடமான இந்த உரிமை பேச்சு.

அனாமிகா வேறு யாருமில்லை, ராமமூர்த்தி – விஜயா தம்பதியினரின் ஒரே தவப் புதல்வி.

தான் வளர்ந்த இயற்கை சூழலை அதிகம் விரும்புவள். படித்து முடித்த எம்.பி.ஏக்கு நகரத்துக்கு வெளியே சென்றால் லட்சத்துக்கு மேலே கூடச் சம்பாதிக்கலாம் என்று நன்கு அறிந்திருந்த போதும், அதை விரும்பாது, அவளின் திறமைக்கான வேலையை அங்கேயே எற்படுத்திக் கொண்டாள் தந்தையின் உதவியின்றி.

தன்னை விட ஐந்து வயது பெரியவனான கதிரை தன் பெற்றவர்கள் தத்தெடுக்காத பிள்ளையாகப் பாவிக்க, இவளோ ஒரு படி மேல் சென்று, அவனைத் தன் அண்ணனாகவே தத்தெடுத்துக் கொண்டாள், அதுவும் பகிரங்கமாகவே! அதில் அவளின் பெற்றோரை விட அதிகம் மகிழ்ந்தது கதிர் தான்.

ஆனாலும் அதை எப்பொழும், எங்கேயும் அவன் இதுவரை அவளிடம் வெளிக்காட்டியதில்லை, வெளிக்காட்டவும் விரும்பவில்லை. ஏனென்றால் அதுதான் அவனின் இயல்பே!

அந்த இயல்பை உடைக்கத்தான் அனாமிகாவும் பல விதங்களில் அவனிடம் போராடி வருகிறாள். எங்கே?? ஒரு இன்ச் கூட நகர மாட்டேன் என்கிறானே நம்முடைய அசையா புலி??

“நேத்து பொண்ணு பார்த்த விஷயம் அம்மா சொன்னாங்க. நீங்க ஒன்னும் அவசரப்பட்டு வெர்ரி கிர்ரி பண்ணிடலையே?? அப்படியெல்லாம் எதுவும் செஞ்சு என்னோட இமேஜை டேமேஜ் பண்ணிடாதீங்க ப்ரதர்” 

தந்தைக்கு எதிர்ப்பதமாகப் பேசும் அவரின் மகளைக் கொஞ்சம் ஆச்சரியம் கலந்தே பார்த்தான் கதிர்.

“என்ன லுக்? நிஜமா தான் சொல்றேன் ப்ரதர்! ஊருக்குள்ள என்னோட அண்ணன்னு உங்களுக்குக் கொஞ்சம் கெத்து இருக்கு. அதை இந்த மாதிரி சில்லறை விசயத்துக்கு எல்லாம் ஃபீல் பண்ணிக் கெடுத்துடாதீங்க. என்ன நான் சொல்றது சரி தானே?” என்று அறிவுறுத்தினாள் அவள்.

கதிரோ, “இது வேறயா?” என்ற விதத்தில் பார்த்தவன், “நீ சொன்னா சரி தான்!” என்று சொல்லி முடித்தான்.

அவனின் பேச்சைக் கேட்டு, “இந்த சரியே சரியில்லையே??” என்று கண்களைச் சுருக்கிக் கொண்டு சொன்னவள்,

”ஓஹோ… ஓஹோஹூ… அப்போ என்னை நீங்க நம்பலை. என் வார்த்தையை நம்பலை. ஊருக்குள்ள எனக்குன்னு இருக்கிற இமாலய இமேஜையும் நம்பலை, அப்படித்தானே? டெல்! டெல்! டெல் மீ ப்ரோ!” 

டேபிளைத் தட்டிக் கெஞ்சாத குறையாகப் பாவனை காட்டிக் கேட்டவளின் கெஞ்சலில் லேசாகச் சிரித்தான் கதிர்.

“இப்போ நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்குற?” 

‘அடப்பாவி அண்ணா!! இவ்வளவு நேரம் நான் என்ன ஊமை பாஷையா பேசுனேன்?? நல்லா சத்தம் போட்டுத் தான உன் கால்ல விழாத குறையா கெஞ்சுனேன்? அப்படி இருந்தும் விடிய விடிய கதை கேட்டுட்டு இப்போ வந்து சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொல்றியே!! இப்போ நான் எங்கே போய் முட்டுவேன்?’ 

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, முறைத்து நின்றவளின் தோற்றத்தைக் கண்ட யாருமே வாய் விட்டுச் சிரித்து விடுவர். 

ஆனால் கதிரோ சிரிப்பை அடக்கியபடி, “உன்னைத்தான் கேட்கிறேன், இப்போ நான் என்ன சொல்லணும்?” என்று மீண்டும் கேட்டான்.

“ம்ம்ம்ம்… நான் ஒரு லூசுன்னு சொல்லு!” என்று அனாமிகா கோபமாகச் சொல்ல, அதைக் கேட்டு கதிர் வாய் திறந்து ஏதோ சொல்லும் முன்னே,

“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம், எல்லாம் எனக்கே தெரியும். நீங்க சைனை மட்டும் பண்ணிக் கொடுங்க போதும்!” என்று ஒற்றை கைத் தூக்கி கண் மூடி சொன்னவளுக்குள்ளோ, ‘சொன்னாலும் சொல்லிடுவாங்க போலயே!!’ என்ற எண்ணமே அதிகம் இருந்தது போல!! 

அதனாலேயே பெருந்தன்மையாக ஜகா வாங்கி இருந்தாள் அவள்.

அவள் முகம் சுருங்குவதைக் கண்ட கதிருக்கு என்ன தோன்றியதோ??

“உன்னைப் பத்தி நீ என்ன நினைக்கிறியோ தெரியலை. ஆனால் என் தங்கை பயங்கர புத்திசாலின்னு எனக்குத் தெரியும்” என்ற கதிரின் பேச்சை விட, அவனின் தங்கை அழைப்பில், சட்டென மலர்ந்து பூரித்துப் போனது அனாமிகாவின் முகம்.

யார் சொன்னது கதிருக்குப் பாசம் பந்தம் பற்றித் தெரியாது என்று! 

அவனுக்கான எல்லா உணர்வுகளும் ஆழ்கடலின் அடியாழத்தில் அமுங்கி கிடப்பதைப் போல அவனுள் கிடக்கிறது. அதை வெளிப்படுத்தவும், வெளிக்கொண்டு வரவும் அவனுக்கானவள் இன்னும் அவனின் வாழ்க்கையில் வராததே, அவனின் இந்த  அமைதிக்கான காரணமோ என்னவோ?!

மனதுள் எண்ணிய அனாமிகாவுக்கு, ‘எப்பொழுது வருவாள் அந்த மகராசி?’ என்ற ஏக்கம் தான் அதிகமாக இருந்தது.

அதை அப்படியே வார்த்தைகளில் வடித்து, “உனக்குன்னு ஒரு தேவதை கண்டிப்பா எங்கேயோ பிறந்து இருப்பா. அவ உன்னைத் தேடி சீக்கிரம் வருவா பார் அண்ணா!!” என்று நெகிழ்ந்த குரலில் அனாமிகா உரைத்த அதே நேரம், தாமரையின் முகத்தைத்தான் அவள் கொடுத்த கோப்பில் பார்த்துக் கொண்டு இருந்தான் கதிரவன்.

அந்த முகத்தில் இருந்த அப்பாவி குழந்தைத்தனத்தில் தன்னை மறந்து கண்களை அவளிலேயே சில நிமிடங்கள் நிலைக்க விட்டவனுக்கு, தங்கையின் பேச்சு காதில் விழுந்த நேரம் அவளை நிமிர்ந்து பார்த்தவன், மீண்டும் ஏனென்றே தெரியாது தாமரையின் முகத்தைக் குனிந்து பார்த்தான்.

“அவள் வரும் போது வரட்டும். இப்போ நீ போய் உன் வேலையைப் பாரு!” என்று தன்னைத்தானே மீட்டுக் கொண்டு, அனைத்து கோப்புகளில் கையெழுத்து போட்டு முடித்து, மீண்டும் அனாமிகாவிடம் கொடுத்தபடி சொன்னான்.

“அதானே?? என்னை எமோஷனலா பேச விட மாட்டீங்களே??” 

கதிரிடம் நொடித்துக் கொண்டாலும், அன்றைய வேலைப்பளு அதிகம் இருந்ததால் அவ்விடத்தை விட்டு உடனே சென்று இருந்தாள் அனாமிகா.

என்னதான் விளையாட்டுப் பெண்ணாகத் தனக்குரியவர்களிடம் அனாமிகா நடந்து கொண்டாலும், வேலை விஷயத்தில் அவளை யாரும் ஒரு குறை சொல்லி விட முடியாதபடியே கர்ம சிரத்தையாக எதையும் செய்து முடிப்பாள் என்பதை அங்கே அனைவரும் அறிவர், முக்கியமாகக் கதிர்!

அனாமிகா சென்ற பின்னும் அவள் சொல்லிச் சென்ற வார்த்தைகள் ஏனோ கதிரையே சுற்றி சுற்றி ரீங்காரமிட ஆரம்பித்ததில், கொஞ்ச நேரம் வெளி வேலைகளுக்கு விடுதலை கொடுத்து தன்னுடைய மனத்திடம் பேச ஆரம்பித்தவனின் எண்ணங்களோ, அவனையும் அறியாது அவனவளைப் பற்றியே வட்டமிட்டுக் கொண்டு இருந்தது.

கதிருக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, இந்த உலகத்தில் அவன் அதிகமாக ஆசைப்படுவதும், பிறறியாது ஏங்கித் தவிப்பதும் ஒன்றே ஒன்றுக்குத்தான்!! 

அது அவனுக்கே அவனுக்கான உறவுகள் நிறைந்த குடும்பம் மட்டுமே!!

அந்தக் குடும்பத்தைத் தனக்குக் கொடுக்கப் போகும் தன்னவளைத்தான் அவனும் பல வருடங்களாகத் தேடிக் கொண்டு இருக்கிறான்.

அவள் கிடைப்பாளா என்று அனுதினமும் அல்லாடிக் கொண்டு இருப்பவனுக்குத் தெரியவில்லை.. அவனின் ஆசையே தவறென்று!

Advertisement