Advertisement

16

வீட்டுக்கு மளிகை பொருட்களை ட்ராலியில் அடுக்கியவள், அதன் பின் பாத்திரங்கள் பக்கம் சென்று அங்கு இருந்தவற்றில் சிலதை வாங்கிக் கொண்டு இருக்கும் பொழுதே, அவளின் கண்கள் அங்கே எதிர்ப்பக்கம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த விதவிதமான செராமிக் பொருட்களின் மீது சென்றது.

அதை நோக்கிச் சென்றவள், அதிலிருந்து இரு டீ கப்புகளை தேர்ந்தெடுத்துக் கைகளில் ஏந்தியவள், அதில் தீட்டப்பட்டு இருந்த ஓவியத்தின் அழகைக் கண்டு அதிசயித்து, அதை வாங்கும் பேராவல் கொண்டாள்.

அதன்பொருட்டு அதை எடுத்துக் கொண்டு கணவனிடம் அனுமதி வாங்க அவன் இருக்குமிடம் நோக்கி வந்தவள், அங்கு அவனைக் காணாது பதைபதைத்துப் போனாள்.

‘எங்கே போனாங்க? இங்கே தானே இருந்தாங்க?’ என்று நாலாபுறமும் சுற்றி முற்றி கண்களை ஓட விட்டுப் பார்த்தவளுக்கு, எங்கும் அவன் இல்லாது போனதில், அதுவரை இருந்த மகிழ்ச்சி வற்றிப் பயம் வந்து ஒட்டிக் கொண்டது.

அடர்ந்த காட்டில் வழி தெரியாது மாட்டிக் கொண்ட பூனையைப் போல, அச்சத்துடன் அசையாது நின்று இருந்தவளைச் சுற்றிலும் அவ்வளவு பேர் இருந்த போதும், அவளுக்குத் தேவை என்னவோ அவளின் கணவனாக மட்டுமே இருந்தான்.

“எங்கே போனாங்க என்னை விட்டுட்டு??” என்று ஆயிரம் முறையாவது மனதினில் கேட்டு அரண்டு போய் நின்று இருந்தவளுக்கு,  அடுத்து ஒரு அடி எடுத்து வைக்க கூட முடியாதபடி பயம் பிடித்து ஆட்டியதில், கண்கள் லேசாகக் கலங்கிப் போனது.

என்ன செய்வது? ஏது செய்வது? என்று புரியாது நின்று இருந்தவளின் பின்னிருந்து, “கொஞ்சம் வழி விடுறீங்களா?” என்று கேட்ட குரலில் திடுக்கிட்டுப் போனவள், நிலை தடுமாறி, அவருக்கு வழி விடுகிறேன் பேர்வழி என்று சடாரென ஒரு பக்கம் நகர்ந்ததில், அந்தப் பக்கமாக வந்த பெண்மணியைக் கவனிக்காது அவரின் மீது மோதி விட்டாள்.

அவ்வளவு தான்!! மோதியவர் எங்கே திட்ட போகிறாரோ என்று எண்ணி அரண்டவள், “என்னை மன்னிச்சுடுங்க! என்னை மன்னிச்சுடுங்க! தெரியாம.. தெரியாம இடிச்சுட்டேன்” என்று திக்கித் திணறி கூறினாள்.

அதில் எதிரே இருந்தவருக்கு என்ன தோன்றியதோ, “விடுமா! இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்கிற?” என்றார் அவர். அப்பொழுதும் தெளியாது நடுங்கிக் கொண்டு நின்று இருந்தவளைக் கண்டவர், “உனக்கு எதுவும் பிரச்சனையில்லையே?” என்று அக்கறையாகக் கேட்டார்.

என்னவென்று பதில் அளிப்பாள் தாமரை? ‘என் புருஷனைக் காணோம் என்றா?’

அவரின் அனுசரணையில் கொஞ்சம் சமாதானம் கொண்டாலும், அந்த இடத்தில் இருக்கவே தாமரைக்கு அந்நேரம் பிடிக்கவில்லை.

என்னவோ சுற்றி இருப்பவர்களிடமிருந்து தான் மிகவும் வேறுபட்டு இருப்பதைப் போல எண்ணியவள், “இல்ல இல்ல.. அப்படி எதுவுமில்லை” என்று அவரிடம் படபடப்புடன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே, அந்த இடம் வந்து இருந்தான் கதிர்.

மனைவி யாரிடமோ பேசிக் கொண்டு இருப்பதைக் கண்டு அவளின் முகம் காட்டிய பாவத்தில், “என்னாச்சு?” என்று கேட்டான்.

கணவனின் குரல் கேட்டு கண்களில் ஒளி வெள்ளம் பெருக, அவனைத் திரும்பிப் பார்த்தவள், அவனுக்குப் பதில் சொல்லணும் என்பது கூட மறந்து, அவனின் கையை பிடித்துக் கொண்டு, ஒரு பக்கமாக அவனை ஒட்டிக் கொண்டாள்.

மனைவியின் திடீர் செய்கையில் மனது ஜில்லிட்ட போதும், தாங்கள் இருக்குமிடம் மற்றும் தங்களையே பார்த்துக் கொண்டு இருக்கும் பெண்மணியைக் கண்டு, சற்றுச் சங்கோஜமாக உணர்ந்தான் கதிர். இருந்த போதும் தாமரையைத் தன்னை விட்டு அகற்ற அவன் முயலவில்லை.

புதுமண தம்பதியினர் என்பதை தாமரையின் கழுத்தில் வீற்றிருந்த புது மஞ்சள் தாலியை வைத்தே கண்டுகொண்ட பெரியவர், “புது இடம்ன்னு நினைக்கிறேன். அதான் கொஞ்சம் பயந்துட்டா” என்று தன் அனுபவத்தில் சொன்னவர்,

“பார்த்துக்கோப்பா!” என்று கதிரிடம் இன்முகமாகச் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அவரின் பேச்சில் ‘இதில் பயப்பட என்ன இருக்கு?’ என்று எண்ணியவன், “என்னாச்சு?” என்று மனைவியின் முகம் நிமிர்த்திக் கேட்கவும்,

“நீங்க எங்கே போனீங்க? நான் உங்களை எவ்ளோ தேடுனேன் தெரியுமா?” என்று குரலை உயர்த்திச் சற்றுக் கோபமாகவே கேட்டாள் தாமரை.

அவளின் மற்ற வார்த்தைகளைக் கேட்காதவன் போல, “என்னைத் தேடுனியா?” என்று மட்டும் அழுத்தம் கொடுத்துக் கதிர் கேட்கவும்..

“ம்ம்ம்.. ரொம்ப..” என்றாள் தாமரை தலையை வேக வேகமாக ஆட்டி..

மனைவியின் ரொம்பவிலும், அவளின் செய்கையிலும் கதிரின் மனம் இறக்கை விரித்து வானம் தாண்டி பறந்தது அந்நேரம்.

அதுவரை யாரிடமும் கேட்காத வார்த்தை… தனக்காகவும், தன்னைத் தேடவும் இந்த உலகத்தில் ஒரு ஜீவன் இருக்கிறது என்று கதிர் உணர்ந்த நொடியில், அவனுக்கும் அவன் மனைவியை அவ்வளவு பிடித்திருந்தது.

“எதற்காகத் தேடுன?” என்றவனின் கேள்வியில், அதுவரை இருந்த சோகங்கள் மறைந்து உத்வேகம் கொண்டவளாக, தன் இடது கையில் வைத்து இருந்த பீங்கான் கப்பை கணவனிடம் தூக்கிக் காட்டியவள்,

“இதை வாங்குவோமா? உங்களுக்கு ஒன்னு எனக்கு ஒன்னு.. ரொம்ப அழகா இருக்குல?” என்று அதன் மீதே கண்ணைப் பதித்தவாறு அவள் கேட்க, அவளின் கணவனோ, அவளின் மீதான விழியைச் சற்றும் அகற்றாது, “ம்ம்ம்.. ரொம்ப அழகா இருக்கு!” என்று சொன்னான்.

“நிஜமாவா? இது ரெண்டையும் வாங்கிக்கலாமா?” என்று மீண்டும் கண்களை விரித்து உற்சாகமாகத் தாமரை கேட்டாள்.

இப்பொழுது கதிர் இருக்கும் சந்தோஷ மனநிலைக்கு, அந்தக் கடையையே தாமரை கேட்டால், வாங்கிக் கொடுத்து இருப்பானோ என்னவோ? அந்த அளவுக்கு மனைவியின் சிறுசிறு அன்பின் வெளிப்பாட்டில் கூட, அவள் மீது பித்தாகிக் கொண்டு இருந்தான் அவன்.

தான் கையில் வைத்து இருந்த கப்பை, கணவன் பிடித்து இருந்த தள்ளு வண்டியில் மேலாக உடைந்து விடாதவாறு வைத்தவள்,

“நான் எல்லாம் வாங்கிட்டேன். நீங்க வேற எதாவது வாங்கணுமா?” என்று கேட்கவும், “ம்ம்ம்.. சில திங்க்ஸ் வாங்கணும்” என்றான் அவன்.

“அப்போ நான் இங்கேயே இருக்கேன். நீங்க போய் வாங்கிட்டு வரீங்களா?” என்றவளுக்கு வேண்டாம் என்று சொன்னவன், அவளின் கையை ஒருபுறம் பிடித்துக் கொண்டு மறுபுறம் ட்ராலியை தள்ளிக் கொண்டு, வாங்க வேண்டிய பொருள் இருக்கும் இடம் சென்றான்.

அந்தக் கைகளின் பிணைப்பில் அதிகமாகத் தாமரை கணவனிடம் மாட்டிக் கொண்டு தடுமாறினாள். ஆனாலும் அவனை விட்டு விலக நினைக்காது  அவனுடனே சேர்ந்து நடை போட்டாள்.

அனைத்தையும் வாங்கி முடித்து பில் போட்டவர்கள், அதையெல்லாம் ஜீப்பின் பின்பகுதியில் அடுக்கி வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

டவுனில் இருந்து மலையடிவாரம் வந்து இருந்த நிலையில், “நாளைக்கு அனாமிகா வீட்டிற்குப் போகும் போது ஏதாவது வாங்கிட்டுப் போகணுமா?” என்று கதிர் கேட்டான்.

“இஷ்! மறந்துட்டேன் பாருங்க.. நல்லவேளை நியாபகப் படுத்துனீங்க” என்றவள், “கொஞ்சம் பூ, பழம், ஸ்வீட் வாங்கிட்டுப் போகலாமா?” என்று கணவனிடம் கேட்டாள்.

“எனக்கென்ன தெரியும்? நீ சொன்னால் சரிதான்!” என்று  சொன்னவன், அவள் சொன்ன அனைத்தையும் வாங்கி முடித்த போது இரவு நெருங்கி இருந்ததால், இனி வீடு போய்ச் சமைத்து உண்ண வேண்டாம் என்று களைப்பின் காரணமாக முடிவெடுத்த கதிர், அங்கேயே ஒரு ஹோட்டலில் இருவருக்கும் இரவு உணவினை பார்சல் பண்ணிச் சேர்த்து வாங்கிக் கொண்டான்.

இரவு நேர வாடைக்காற்று வஞ்சியவளை வஞ்சனையில்லாது மேனி எங்கும் தழுவி தாலாட்டிச் சீராட்டியதில், அயர்வில் தாமரைக்குத் தூக்கம் வந்தது.

ஓடும் வண்டியில் சௌகரியமாகத் தூங்க முடியாது கஷ்டப்படும் மனைவியைப் பக்கவாட்டில் கண்டுகொண்ட கதிர், வண்டியின் வேகத்தைச் சற்றுக் குறைத்து, வலது கையால் ஸ்டியரிங்கை ஸ்டெடியாகப் பிடித்துக் கொண்டு, இடது கையால் மனைவியின்  தூக்கம் கலையாதவாறு அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

கணவனின் கதகதப்பில், தூக்கக் கலக்கத்தில் அவனை இன்னும் நெருங்கி அணைத்துக் கொண்டு, நிம்மதியாகத் தூங்கிப் போனாள் தாமரை.

மனைவியின் நெருக்கம் கொடுத்த கிறக்கத்தில் கதிரின் பாடு தான் படு திண்டாட்டமாக இருந்தது. மனைவியை விலக்கவும் முடியாது, அவளை நெருங்கவும் முடியாது தவித்தவன், ஒரு வழியாக மனதை அடக்கிக் கொண்டு, இரவு மலைப்பாதை பயணம் என்பதால் கவனத்தை ரோட்டின் மீது செலுத்தினான்.

வீடு வந்த பின்னும் எழாத மனைவியைக் கண்டு, அவளை அலேக்காகத் தூக்கிச் சென்று உள்ளே படுக்க வைக்கக் கதிருக்கு ஆசை எழுந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அவன் தூக்கும் போதே அவள் எழுந்து விட்டால், அதைத் தான் எவ்வாறு எதிர்கொள்வது? என்பது தெரியாது திணறியவனுக்கு, அதை விட மனைவி தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்? என்ற எண்ணம் எழவும், தலையை அசைத்து அந்த எண்ணத்திற்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்தவன், லேசாகத் தட்டி மனைவியை எழுப்பினான்.

கணவனின் அசைப்பில் கண் விழித்து எழுந்தவள், தான் அசந்து தூங்கி விட்டோம் போலயே? என்று எண்ணிக் கொண்டு ஜீப்பை விட்டு கீழே இறங்கியவள், கணவனுடன் சேர்ந்து, வாங்கி வந்த பொருட்களை வண்டியில் இருந்து எடுத்து வந்து ஒரு அறையில் வைத்தாள். காலையில் அதைப் பிரித்து அடுக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தாள்.

உடை மாற்றி, முகம் கைக் கால் கழுவி வந்தவர்கள், வாங்கி வந்திருந்த உணவைப் பகிர்ந்து உண்டு விட்டு, வேறு எந்தப் பேச்சுமின்றி அசதியுடன் நேராகப் படுக்கையில் விழுந்து உறங்கிப் போனார்கள்.

மறுநாள் முழிப்பு வந்து எழும் பொழுதே, “அச்சோ! அசந்து தூங்கிட்டோம் போலயே” என்று ஏழரை மணிக்குப் படுக்கையை விட்டு அரக்கபறக்க எழுந்த தாமரை, பாத்ரூம் சென்று குளித்து முடித்து, நேராக கிச்சன் சென்று காலை உணவைத் தயார் செய்ய ஆரம்பித்தாள்.

இட்லி அவித்து புதினா சட்னிக்குத் தேவையானதை வதக்கி ஆற வைத்தவள், இப்பொழுது அதை மிக்ஸியில் போட்டாள். கணவனின் உறக்கம் தடைபடும் என்பதால் அதை ஜாரில் எடுத்து வைத்து விட்டு, நேராக நேற்று வாங்கிய மளிகை சாமான்களை எடுத்து வந்து பிரித்து, அதற்குரிய டப்பாக்களில் கொட்டி மூடி அடுக்க ஆரம்பித்தாள்.

ஒருவழியாக அனைத்தையும் முடித்து, பிற பைகளில் இருந்த மற்ற வீட்டுச் சாமான்களையும் எடுத்து ஷெல்ப்களில் அடுக்கி முடித்து நேரம் பார்க்க, அதுவோ ஒன்பதை நெருங்கி இருக்கவும், கணவன் எழுந்து விட்டானா என்று படுக்கை அறை சென்று நோட்டம் விட்டவளின் கண்களுக்குக் காலி கட்டில் தான் கண்ணில் பட்டது.

அதைக் கண்டு “எழுந்துட்டாங்க போல..” என்று படுக்கையை அவள் சரிசெய்து விட்டு, மீண்டும் சமையலறை சென்று மிக்ஸியில் சட்னியை அரைத்தாள் தாமரை.

கேசுவல் உடையான ஜீன்ஸ், ரெட் டீ-ஷர்ட்டில் வெளிவந்த கணவனைக் கண்டு ஒரு கணம் இமைக்க மறந்து நின்றாள் தாமரை.

இந்த மாதிரி உடைகளில் கணவன் இன்னும் இளைமையாக, அழகாக இருப்பதாக அவளின் எண்ணம்.

மனைவியின் பார்வையைக் கண்டும் காணாதவனாக அவளை நெருங்கினான் கதிர். ஏனென்றால் இது ஒன்றும் அவனுக்குப் புதிதில்லையே!! சில காலமாகவே தன்னை ரசிக்கும் மனைவியை அவனும் ரசித்துக் கொண்டு தானே இருக்கிறான்?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இப்பொழுது எல்லாம் மனைவியின் அந்தப் பார்வைக்காகவே, கதிர் தன் உடைகளில் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறான் தான்.

“நீ இன்னும் கிளம்பலையா?” என்று நைட்டியில் இருக்கும் மனைவியைப் பார்த்து அவன் கேட்கவும். தன்னிலை அடைந்து சுதாரித்தவள், “சாப்பிட்டு கிளம்பலாம்ன்னு இருந்தேன்” என்று சொல்லி விட்டு, “சாப்டுறீங்களா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம்..” என்று அவன் சொல்லவும் அவனுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டு முடித்து, அனைத்தையும் எடுத்து வைக்க எழுந்த போது, அவளைத் தடுத்து, “நான் இதை ஒதுக்கி வைக்கிறேன். நீ போய்க் கிளம்பு!” என்றான் கதிர்.

“சரி” என்றவள் தங்களறை சென்று கிளம்ப ஆரம்பித்தாள்.

அரைமணி நேரம் கடந்த நிலையில் கதவைத் திறந்து கொண்டு, பச்சை சில்க் காட்டனில் சிறிய தங்க ஜரி உடலெங்கும் கொடியாகப் பின்னி இருக்க, தலை பின்னி, பொட்டிட்டு வந்து நின்றவளைக் கண்டு அதிசயித்தவன், “எந்தவித ஒப்பனையும் இல்லாமலே என் பொண்டாட்டி இவ்ளோ அழகா இருக்காளே?” என்று அதிசயித்துப் போனான்.

“இது ஓகேவா?” என்று கேட்டு நின்ற மனைவியிடம்,

“ஏன் இன்னைக்குப் புடவை? நேத்து வெளில போகும் போது சுடிதார் தானே போட்டுட்டு வந்த?” என்று சந்தேகம் கேட்டான் கதிர்.

“அந்த டிரஸ் வெளில போக கொஞ்சம் வசதியா இருக்கும்ன்னு போட்டேன். ஆனா இன்னிக்கு விருந்துக்கு போறோம்ல, அதுக்குப் புடவை கட்டிட்டு போனாத்தானே நல்லா இருக்கும்” என்று விளக்கம் சொன்னாள் தாமரை.

மனைவியின் பேச்சைக் கேட்டு “ஓஹ்ஹ.. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?” என்று எண்ணிக் கொண்டவன், ஏதோ ஒன்று மனைவியிடம் குறைகிறதே என்ற எண்ணத்துடன், அவளை மீண்டும் முழுவதுமாக ஆராய்ந்து பார்த்து, அவள் தலையில் பூவில்லாததைக் கண்டு, “பூ வைக்கலையா?” என்று கேட்டான்.

அப்பொழுது தான் அதைக் கவனித்தவள், “ஸ்ஷ்… மறந்துட்டேன்” என்று சொல்லி, ஓடிப் போய் அதை எடுத்துத் தலையில் சூடிக் கொண்டு இருபுற தோள்களில் தவழ விட்டு, “இப்போ ஓகேவா?” என்று கணவனிடம் கண் சிமிட்டிக் கேட்டாள்.

“ம்ம்ம்ம்… ம்ம்ம்..” என்று தலையாட்டி இதழ் விரியா மோகனப் புன்னகை புரிந்தான் கதிர். அதைக் கண்டவளின் முகம் செவ்வனமாகச் சிவந்து போனது. அதை மறைக்க எண்ணியவள், அனாமிகா வீட்டுக்கு வாங்கிய பொருட்களை எடுத்து வருவதாகச் சொல்லி உள்ளே ஓடினாள்.

எல்லாவற்றையும்  ஒரு கட்டைப்பையில்  எடுத்துக் கொண்டு வந்தவள், “போகலாம்..” என்று சொன்னதும், அவளின் கையில் இருந்த பையைத் தன் கைக்குள் கொண்டு வந்தவன், அதை எடுத்துச் சென்று ஜீப்பில் வைத்து விட்டு, மனைவியுடன் ராமமூர்த்தி வீட்டுக்கு வண்டியைச் செலுத்தினான்.

நேற்று கதிர் வருவதாகச் சொல்லும் போதே பேரானந்தம் கொண்ட ராமமூர்த்தி, அந்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொன்ன போது, அனைவருக்கும் மயக்கம் வராத குறை தான்!

அப்பொழுது இருந்தே பம்பரமாகச் சுற்றி சுழன்று, இன்று வருவோருக்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கு என்ன என்ன வாங்க வேண்டுமென்று மொத்த குடும்பமுமே திட்டம் போட்டுச் செயல்பட ஆரம்பித்து விட்டனர்.

காலையில் இருந்து “ஏங்க.. இன்னைக்குத்தானே வரேன்னு சொன்னாங்க. ஏன் இன்னும் காணலை..? காணலை..?” என்று பத்தவாது முறையாகக் கேட்டு வந்து நிற்கும் மனைவியைக் கண்டு, சிரிப்பதா அழுவதா என்று தெரியாது முழித்த தந்தையைக் காப்பாற்றவே அங்கு வந்தாள் அனாமிகா.

“அம்மா! இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? விடிந்தும் விடியாமலே வந்து நிக்க அவுங்க என்ன கடன்காரங்களா..? விருந்துக்கு வர்றவங்க எழுந்து குளித்து வர வேண்டாமா?” என்று தாயிடம் அவள் நியாயம் பேசவும், “இல்லடி, இன்னும் காணுமே? அதான் கேட்டேன்” என்றார் விஜயா.

அதில் பொறுமையைப் பிடித்துக் கொண்டு “வருவாங்க, போம்மா.. போய் அந்த வடையைச் சுட்டு முடி!” என்று சொல்லித் துரத்த பார்த்தவளிடம், “நீ மாவை அரைச்சுட்டியா?” என்று கேட்டார் விஜயா.

“ம்ம்ம்.. அரைச்சுட்டேன்.. வெங்காயத்தையும் நறுக்கி வச்சுட்டேன். நீங்க போய்ச் சுடுங்க!” என்று மகள் பதில் கொடுக்கவும், சமையலறை நோக்கிச் சென்றார் அவர்.

கதிர் வேண்டுமென்றால் ராமமூர்த்தியின் குடும்பத்தை அவன் குடும்பமாக எண்ணாமல் இருக்கலாம். ஆனால் விஜயாவைப் பொறுத்தவரை, அவனைத் தான் பெறாத மகனாகவே அவர் நினைத்தார். அதற்குக் காரணம், அவர் பெற்ற மகன் சிறு வயதில் மூளைக்காய்ச்சலால் இறந்து போனதால் கூட இருக்கலாம்.

இறந்த மகனை கதிரிடம் அவர் மட்டுமில்லாது அந்த மொத்த குடும்பமும் காணுவதால் தான், அவனின் மீது இந்தளவுக்குப் பாசத்தைக் காட்டுகிறார்களோ என்னவோ??

அரைமணி நேரம் நடந்து சென்றால் ராமமூர்த்தி வீட்டுக்குச் சென்று விடலாம் தான்! ஆனால் பைகளை தூக்கிக் கொண்டு அங்குச் செல்ல கதிருக்கு ஒருமாதிரி இருந்ததால், ஜீப்பில் அங்குச் சென்றவனின் வருகையைக் கண்டு வாசலிற்கே வந்து வரவேற்றார் ராமமூர்த்தி.

மகளின் சத்தம் கேட்டு, கதிரின் வரவு அறிந்து, வாசல் வந்த விஜயா முகம் கொள்ளா மகிழ்ச்சியில், “வா வா கதிர்! வாம்மா தாமரை!” என்று இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்து அமர வைத்தவர், இருவருக்கும் முதலில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.

அதை வாங்கிக் குடித்த கதிருக்கு, அதன்பின் எப்படி, என்ன பேசுவது என்று தெரியாது கொஞ்சம் திணறி, கைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கொண்டு அமர்ந்து இருப்பதைக் கண்ட ராமமூர்த்தி, அவனைக் கொஞ்சம் இலகுவாக்கும் முயற்சியில், அவனிடம் பேச்சு கொடுத்தார்.

அவர் பேசவும், அவருக்குப் பதில் கொடுப்பதில் கொஞ்சம் இலகுவாகி, கதிர் பேச ஆரம்பித்தான்.

இப்பொழுது தாமரைக்கு அங்கே தனிமையாகத் தோன்றியது. அதற்குக் காரணம்.. என்னதான் ராமமூர்த்தி குடும்பம் முன்னமே பழக்கம் என்றாலும், கணவனின் ஒதுக்கத்தால், அதிகம் அவர்களுடன் ஒட்டி உறவாடும் வாய்ப்பு தாமரைக்குக் கிடைக்காததால் வந்த தயக்க எண்ணமாக கூட அது இருக்கலாம்.

அவளின் முகத்தில் இருந்தே அவளின் மனம் படித்தவராக, “அவர்கள் பேசட்டும். நீ வாம்மா, நாம உள்ளே போகலாம்” என்ற விஜயாவின் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து அவரைப் பார்த்தவள், நொடியும் தாமதிக்காது எழுந்து அவருடன் கிச்சன் சென்றாள்.

அங்கே அனாமிகா தாய் கொடுத்த காயை நறுக்கப் போராடிக் கொண்டு இருப்பதைக் கண்டு, “நான் நறுக்கவா?” என்று கேட்டு வந்து நின்றவளிடம்,

“ஹப்பா! நான் தப்பிச்சேன்.. இந்தா செல்லம்!” என்று கட்டருடன் சேர்த்து காய்கறி இருந்த தட்டையும் அவளின் புறம் தள்ளிய அனாமிகா, ஒரு ஓரமாக மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு, தாமரை தோலுரித்து வைத்த கேரட்டில் ஒன்றை எடுத்துக் கடித்துக் கொறிக்க ஆரம்பித்தாள்

அதைக் கண்ட விஜயா அவளைக் கண்டிக்க, அதைக் கண்டு தாமரை சிரிப்பதைக் கண்டவள், “மம்மி! இன்சல்ட் பண்ணாதீங்க. அப்புறம் நான் கோபிச்சுக்கிட்டுப் போய்டுவேன்” என்று சொல்லவும்,

“போய்த் தொலை!” என்றார் விஜயா.

“என்ன.. புள்ளையும் மருமகளும் வந்த ஜோரில் மகளைக் கழட்டி விடுறீங்களா?” என்று அனாமிகா போர்க்கொடி தூக்க, அதைக் கொஞ்சமும் காதில் வாங்காதவர், “ஆரஞ்சு ஜூஸ் போடவாமா? குடிக்குறியா?” என்று பாசமாகத் தாமரையிடம் கேட்டார்.

“ஓஹ்ஹ.. இது வேறயா?” என்று எண்ணிப் பொருமிய அனாமிகா, “ஏன்.. அதை நாங்க எல்லாம் குடிக்க மாட்டோமா?” என்று கேட்டு நக்கலடித்தாள்.

அவளைத் திரும்பி முறைத்தவர், மீண்டும் தாமரையிடம் முன்னே கேட்டதையே திரும்பிக் கேட்க, இப்பொழுது தாமரை அனாமிகாவைப் பார்த்தாள். “ம்ம்ம்.. போட சொல்லு… போட சொல்லு..” என்று அவள் செய்கையில் சொல்லவும், “சரி” என்று தலையாட்டினாள் தாமரை.

நாலு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கழுவி, அதை மேடையில் அமர்ந்து இருந்த அனாமிகாவிடம் கொடுத்தவர், “சும்மா தானே உட்கார்ந்துட்டு இருக்க? இதை ஜூஸ் போடு!” என்று கொடுக்கவும் காண்டாகிப் போனாள் அவள்.

‘அடக் கடவுளே!’ என்று தாயின் செயலில் நொந்து போனவள், “சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி!!” என்று பாடியபடியே பழத்தை நறுக்கி ஜுஸ் போடுவதைக் கண்டு வாய் விட்டுச் சிரித்தாள் தாமரை.

அவளைக் கண்டு, “ஏன்மா.. ஏன் உனக்கு இந்தக் கொலைவெறி? என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?” என்று அனாமிகா பாவமாக அவளிடம் கத்தியை நீட்டிக் கேட்கவும், இப்பொழுது அவளின் பாவனையில் சற்றுச் சத்தமாகவே சிரித்து விட்டாள் தாமரை.

அவளின் சிரிப்பைக் கண்டு மனம் நிறைந்து போன விஜயா, “என்னைப் பத்தி ஏதாவது கதிர் சொல்லி இருக்கானா?” என்று அவளிடம் ஆர்வம் பொங்கக் கேட்டார்.

அவனைப் பற்றியே இதுவரை அதிகம் தன்னிடம் சொல்லாத போது, இவர்களைப் பற்றி என்ன சொல்லுவான்? என்று எண்ணியவள், விஜயாவின் முகத்தில் துள்ளிய ஆர்வத்தைக் கண்டு அவரின் மனம் நோகக் கூடாது என்று எண்ணி, “ம்ம்ம்.. சொல்லி இருக்காங்க” என்றாள்.

அதைக் கேட்டு அம்மாவும், பொண்ணும் நம்பாது புன்னகைக்கவும், புரியாது திருதிருத்தாள் தாமரை. அதைக் கண்டு விஜயா, “அவனைப் பத்தி உனக்கு முன்னாடி எங்களுக்கு நல்லாவே தெரியும். அவனாவது எங்களைப் பற்றிச் சொல்லுவதாவது!!” என்று உண்மையைப் போட்டு உடைக்கவும், தாமரை வெட்கி லேசாக இதழ் விரித்தாள்.

“மம்மி! இது எல்லாம் ஓவர்! எல்லாம் தெரிந்தும் அப்புறம் எதுக்குத் தாமரைகிட்ட இப்படிக் கேட்குறீங்க?” என்ற மகளிடம், “எல்லாம் ஒரு நப்பாசை தான்!” என்று அசால்ட்டாகப் பதில் கொடுத்தார் அவர்.

“தேறிட்டீங்க விஜயா.. நல்லா தேறிட்டீங்க..” என்று மகள் பேர் சொல்லி சர்ட்டிபிகேட் கொடுக்கவும்,

“ஒழுங்கா ஜூசை பிழிடி!” என்றவர், “அவன் சொல்லலைன்னா என்ன? நானே சொல்றேன், கேட்டுக்கோ! நான் தான் உன்னோட மாமியார். இவள் தான் உன்னுடைய நாத்தனார்” என்று சொல்ல ஆரம்பித்தவர், கதிருக்கும் அவருக்குமான அம்மா – மகன் பிணைப்புக்கான காரணத்தைச் சொல்லி முடித்த போது, தாமரைக்கு இப்படியும் ஒரு பாசமான குடும்பமா? என்று தான் தோன்றியது.

அதே நேரம், இவர்களின் பாசம் கிடைக்க, தன் கணவன் கொடுத்து வைத்து இருக்கணும் என்றும் சேர்ந்தே தோன்றியது.

“என்னமோ தெரியலைமா.. கதிரை என்னைக்கு நான் முதல்ல பார்த்தேனோ, அப்போவே அவன் எனக்கு என் மகனாத்தான் தெரிந்தான்.

என் மகன் உயிரோடு இருந்து இருந்தா அவனுக்குக் கதிர் வயசு தான் இருந்து இருக்கும்” என்று லேசாகக் குரல் பிசிற பேசியவரின் நிலையறிந்து, அவரை நெருங்கிய அனாமிகா அவரின் தோள் தொட்டுத் தேற்றினாள்.

எந்தளவுக்கு ஒரு தாய் தன் மகனின் பிரிவுக்காக இன்னமும் ஏங்கித் தவிக்கிறார் என்று அந்நேரம் புரிந்து கொண்ட தாமரைக்கு நெஞ்சம் விம்மியது, அவரின் வேதனையை எண்ணி. அதன் பொருட்டு இவர்களுக்காகவது, “தன் கணவனைக் கொஞ்சம் மாற்ற வேண்டும்” என்று அந்நேரம் சபதமே எடுத்துக் கொண்டாள் தாமரை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

சூழ்நிலையின் வீரியத்தை மாற்ற நினைத்த தாமரை, “உங்க மகன் மீது மட்டும் தான் பாசம் போல.. என் மீது எல்லாம் கொஞ்சமும் இல்லை போல..” என்று விஜயாவிடம் வேண்டுமென்றே குறை பாடவும்…

“அடிப்பாவி!” என்று அனாமிகா அவளைப் பார்த்திருக்கும் போதே, “எப்போ அவன் உன்னைக் கட்டிக் கொண்டானோ, அப்பவே நீயும் எனக்குச் சொந்தமாகிட்டடா செல்லம்!” என்று தாமரையின் உச்சியில் முத்தம் வைத்து வாஞ்சையாக விஜயா சொல்லவும், அந்த அன்பில் ஒருநிமிடம் கரைந்து நெகிழ்ந்து போன தாமரை, அடுத்துச் சொன்ன வார்த்தையில் விஜயா மட்டுமில்லை அனாமிகாவே ஒரு நிமிடம் ஆடிப் போனாள்.

“நான் உங்களை அம்மான்னு கூப்பிடவா?” என்று தாமரை கேட்கவும்,

அங்கு ஒரு அமைதி நிலவியதில், தான் கேட்டது இவர்களுக்குப் பிடிக்கவில்லை போல என்று எண்ணியவள்,

“தப்பா நினைத்துக்காதீங்க.. எனக்கு நினைவு தெரியுறதுக்கு முன்னாடியே எங்க அம்மா இறந்துட்டதுனால, நான் அம்மான்னு யாரையும் கூப்பிட்டதில்லை. என் உலகமே என் அப்பாவும் என் பாட்டியும் தான். அவுங்களைத் தாண்டி எனக்கு வேற யாருமே இல்லை.

இப்போ உங்களை, உங்க பாசத்தைக் கேட்கவும், எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்திடுச்சு. அதான் சட்டுன்னு அப்படிக் கேட்டுட்டேன்” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தவளை, அதற்கு மேல் பேச விடாது அணைத்துக் கொண்டார் விஜயா.

அவரின் செயலில் சிலையாகிப் போனவளை விட்டு விலகியவர், அவளின் உச்சி முகர்ந்து மீண்டும் முத்தம் வைத்தவர், “தாராளமா கூப்பிடுடா!” என்றார் நெகிழும் குரலில்.

அனாமிகாவும் தாயுடன் சேர்ந்து தாமரையை அணைத்துக் கொண்டாள், தன் அன்பை அவளுக்குக் காட்டும் பொருட்டு.

ஒருவழியாகப் பாச மழை நின்று, பிரிந்து நின்ற தாயை வம்பு இழுக்கும் நோக்கில், “மம்மி! எனக்கு ஒரு சந்தேகம்” என்றவளிடம் “என்னடி?” என்றார் விஜயா.

“இல்ல.. இவ உங்க பொண்ணுன்னா அப்போ கதிர் அண்ணா முறை மாறிடாது?” என்று கேட்டவளை ‘வெட்டா குத்தவா’ என்று விஜயா பார்த்தார்.

“ரைட்டு! நான் என் வேலையைப் பார்க்கிறேன்” என்று பழத்தை பிழியோ பிழி என்று பிழிய ஆரம்பித்தாள்.

ஒருவழியாக ஜூஸ் போட்டு முடித்தவள், “இந்தாம்மா.. திடீர் தங்கச்சி! இதை முதலில் குடி!” என்று ஒரு டம்ளர் பழச்சாறைத் தாமரையிடம் நீட்டவும், அதை வாங்கி ஒரே மடக்கில் குடித்து முடித்தவளைக் கண்டு, “இன்னொரு டம்ளர் கேட்பாளோ?” என்று அனாமிகா அரண்டு பார்த்த நேரம்..

டம்ளரை அவளின் புறம் தாமரை நீட்டி, “இன்னும் கொஞ்சம் தரீங்களா?” என்று கேட்கவும், ‘சுத்தம்!’ என்று தலையில் கை வைக்காத குறைக்குச் சென்றவள், மறுபடியும் ஜூஸ் பிழியணுமா? என்று எண்ணிய நேரம்..

“என்னடி? மசமசன்னு நின்னுட்டு இருக்க? குழந்தைக்குப் பிழிந்து கொடுடி!” என்று அதட்டினார் விஜயா.

அதைக் கேட்டு “என்னது? மறுபடியும் முதலில் இருந்தா??” என்று அதிர்ந்த அனாமிகா, “இங்கே பாருங்க மம்மி.. உங்க புதுப் பொண்ணுக்காக இந்தப் பழைய பொண்ணை இப்படி வேலை வாங்குறீங்களே, இது உங்களுக்கே நியாயமா?” என்று கேட்க,

“இன்னைக்காவது கொஞ்சம் வேலை செய்!” என்றவர், தாமரையிடம், “கொஞ்சம் வெய்ட் செய்டா! அவ போட்டுக் கொடுப்பா” என்று சொல்வதைக் கண்டபடி காண்டுடன் அனாமிகா ஜூஸ் பிழிய ஆயத்தமாவதைக் கண்ட தாமரை,

“நான் சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன் அக்கா” என்று சொல்லி அவள் வயிற்றில் பாலை வார்த்தாள்.

“என்னது? விளையாட்டுக்குக் கேட்டியா?” என்று அவளை ஏற இறங்கப் பார்த்தவள், “நீயெல்லாம் நல்லா வருவ தாயி!!” என்று ஒரு பெரிய கும்பிடு போடவும், அவளின் கையைப் பிடித்து இறக்கி தாமரை நகைக்கவும், அனாமிகாவும் அவளுடன் சேர்ந்து புன்னகைத்தாள்.

பேச்சும் அரட்டையுமாக அன்றைய விருந்தைத் தயாரித்து முடித்தார்கள் பெண்கள் மூவருமே.

இதற்கிடையில் கதிருடன் பேசிக் கொண்டு இருந்த ராமமூர்த்தி பேச்சுனூடேயே, “நீ எப்படி இந்த விருந்துக்குச் சம்மதிச்சேன்னு தெரியாதுப்பா. ஆனா நீயும் உன் மனைவியும் இங்கே வந்ததில் எங்களுக்கு எல்லாம் ரொம்பச் சந்தோசம்!” என்று நா தழுதழுக்கும் குரலில் சந்தோசம் வெளிப்பட சொல்ல, அவரின் பாசம் கண்டு ஒரு நிமிடம் மலைத்துப் போனான் கதிர்.. என்ன மாதிரி பாசம் ஒரு என்று..

அதே நேரம் மனைவி சொன்ன “நமக்கு யாருமில்லை என்று சொல்லிக் கொண்டு வாழ்வதை விட, நம்மை நாடி வருபவர்களை அண்டி வாழ்வதில் தவறு ஒன்றுமில்லையே? ஒருமுறை உங்கள் வளையத்தை விட்டுக் கொஞ்சம் வெளியே வந்து பாருங்க. அப்போ தான் எத்தனை பேர் உங்களின் மீது  பாசம் காட்டவும், உங்களின் பாசத்துக்காகவும் ஏங்கி இருக்கிறார்கள் என்பதை நீங்களே புரிஞ்சுப்பீங்க” என்று அன்றே அசரீரியாகச் சொன்னவளின் வாக்கு எந்தளவுக்கு உண்மை என்பதை இப்பொழுது ராமமூர்த்தியின் பேச்சில் இருந்து புரிந்து கொண்டவனுள் ஒருவித மனமாற்றம் நிகழ்ந்தது என்னமோ உண்மை!

விஜயா வந்து சாப்பிட கூப்பிடவும் அனைவரும் ஒன்றாக ஒரு குடும்பமும் போல அமர்ந்து சாப்பிட்டது, அங்கிருந்த அனைவரின் மனதையுமே நிறையச் செய்து இருந்தது.

விருந்து முடித்துக் கிளம்பியவர்களிடம் புதுத்துணிகள் மற்றும் பூ, பழம் நிறைந்த பையைக் கொடுத்த விஜயாவிடம், அதை வேண்டாமென்று தன்னிச்சையாக மறுக்கத்தான் போனான் கதிர். ஆனால் அதற்கு முன், அவனின் வாயை அடைப்பது போல், அவனின் கையைப் பிடித்து அடக்கிப் பெரியவர்களின் முன் வந்து நின்ற தாமரை, “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க!” என்று தம்பதி சகிதமாகக் கணவனுடன் பெரியவர்களின் காலில் மண்டியிட்டுக் கும்பிட்டாள்.

அந்தச் செயலில் பூரித்துப் போன ராமமூர்த்தியும் விஜயாவும் மனதார, “எல்லா செல்வமும் பெற்று, நூறாண்டு இதே போல எப்பவும் இணை பிரியாது, சகல சௌபாக்கியங்களுடன் வாழணும்!!” என்று வாழ்த்தி, இருவருக்கும் திருநீறு வைத்து விட்டுத் துணி பையை அவர்களிடம் கொடுத்தனர்.

தாமரையின் நெற்றியில் குங்குமம் வைத்த விஜயா, “என்றும் தீர்க்க சுமங்கலியா இருடா!” என்று கூடுதல் வாழ்த்து சொல்லி அவளை அணைத்து விடுவித்தவர், “அடிக்கடி வீட்டுக்கு வந்து போம்மா” என்று சொல்ல, “சரிம்மா” என்று தலையாட்டினாள் தாமரை.

“ஏதாவது தேவைன்னா உடனே எனக்கோ இல்லை அம்மாவுக்கு கால் செய்!” என்ற அனாமிகாவின் அன்பு கட்டளையை ஏற்றவள், அவளுக்கும் தலையாட்டி விட்டு, ராமமூர்த்தியிடம் விடைபெற்று, அங்கிருந்து கணவனுடன் தங்கள் வீட்டுக்குக் கிளம்பினாள்.

வந்த ஒரே நாளில், இந்த அளவுக்கு மனைவி, அனாமிகா வீட்டினர் அனைவரிடமும் ஒன்றிப் போனதைக் கண்ட கதிருக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது என்று சொல்லலாம். அதை அறிய நினைத்து, “எப்படி?” என்று அவன் மனைவியிடம் கேட்க,

“என்னது? எப்படி? இதெல்லாம் ட்யூஷன் வைத்தா வரவைக்க முடியும்?” என்று சாதாரணமாகச் சொன்னவள்,

“அவுங்க பாசம் காட்டினாங்க. நானும் திருப்பிக் காமிச்சேன். அவ்ளோ தான்!”  என்று சொல்வதைக் கேட்ட கதிருக்குத்தான், தன் மனைவி மீதான மற்றவர்களின் பாசம் கண்டு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

தன்னால் ஏன் இவளைப் போல இப்படி வெளிப்படையாக யாரிடமும் பாசம் காண்பிக்க முடியவில்லை என்று?

எல்லாவற்றிற்கும் நேரம் காலம் என்று ஒன்று வர வேண்டும் தானே? அந்த நாள் வந்த போது, கதிரின் நேசம் கண்டு அனாமிகா – வசந்தே ஆடிப் போனார்கள் என்றால், தாமரையின் நிலையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்??

Advertisement