Advertisement

15

பறவைகளின் ராகம் எட்டுத் திக்கும் இன்னிசையாய் இசைந்து கொண்டிருக்க,  பனித்துளிகளின்  தழுவலில் குளிர்ந்த மலர்கள்,  நாலாபுறமும்  அசைந்தாடி வீசிய வாசத்துடன் சேர்ந்து தன் சுவாசம் தீண்டிய காற்றின் குளுமையில், இன்முகத்துடன், போர்த்தி இருந்த போர்வையை விலக்கிக் கொண்டு சோம்பல் முறித்தவாறு எழுந்து அமர்ந்தான் கதிர்.

கட்டிலை விட்டு இறங்கி நேராகக் குளியலறை சென்று முகம் கழுவி வெளிவந்தவன், நேராகச் சமையலறை நோக்கிச் சென்றான்.

தன் மனைவி அங்கு இல்லை என்பதைக் கண்டவனின் இதழ்கள் தானாக விரிந்தது, அவள் எங்கு இருப்பாள் என்ற எண்ணத்தில்..

அடுப்பில் இன்னும் சூடாக இருந்த டீயை எடுத்து ஒரு டம்ளரில் தனக்கென ஊற்றிக் கொண்டவன், ‘இப்போ தான் போயிருப்பா போலயே?’ என்று அதன் சூட்டில் இருந்தே அறிந்து கொண்டு, டீயை அருந்தியபடியே, அடுப்பங்கரையை ஒட்டி இருந்த கதவின் வழியாகப் பின்புற தோட்டத்தை நோக்கிச் சென்றான்.

அங்கு மலர்களோடு மலராக அமர்ந்து, ஒவ்வொரு மலரையும் ரசித்து அதன் இதழ்களைக் கையிலேந்தி, அதன் மென்மையில் மெய் மறந்து, கண் மூடி ரசித்துக் கொண்டு இருந்தவளைப் பார்த்தவன், தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் இழந்து கொண்டு இருந்தான்.. அந்த மலராக தான் இருந்திருக்கக் கூடாதா? என்று..

கணவனின் ஏக்கம் தன்னைத் தாக்கியதில் கண் விழித்தாளோ? இல்லை அவனின் ஊடுருவும் பார்வையின் வீரியத்தில் கண் விழித்தாளோ? ஏதோ ஒன்றில், உள்ளுணர்வு உதைத்ததில், இமை திறந்து இதம் கலைந்து திரும்பிப் பார்த்தவளின் விழிகளில் சிறைபட்ட கணவனைக் கண்டு எழுந்து நின்றாள் தாமரை.

“அச்சோ! எப்போ எழுந்தாங்கன்னு தெரியலையே..? எவ்ளோ நேரம் என்னைத் தேடுனாங்கன்னும் தெரியலையே?” என்று ஏதோ தப்பு செய்து விட்ட குழந்தையாகக் கணவனை நோக்கிச் சென்றவள்,

“சாரி! நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. லீவ் தானே, எழுப்ப வேண்டாமேன்னு தான் இங்கே வந்தேன்” என்றவளின் வார்த்தைகளைக் கேட்டபடி, டம்ளரில் மீதி இருந்த டீயை ஒரே மடக்கில் குடித்து முடித்தவன், “நான் இப்போ உன்னை எதுவுமே சொல்லலையே?” என்றான்.

மேலும், “இங்கே பார் தாமரை.. நீ ஒன்னும் என்னோட அடிமையில்லை, எப்பவும் என்னையே கவனிச்சுக்கிட்டு இருக்க. நாம ரெண்டு பேரும் புருஷன் – பொண்டாட்டி. அப்படின்னா எனக்காக நீ உனக்காக நான்னு தான் அதற்கு அர்த்தமே தவிர, எனக்காக மட்டுமே நீன்னு அர்த்தமில்லை. என்ன புரியுதா?” என்று சொன்னவனின் பேச்சு புரிந்ததோ இல்லையோ, எப்பவும் அவன் சொல்லும் அந்தப் பிணைப்பு பிடித்து இருந்ததில், மலர்ந்து சிரித்த முகத்துடன் ‘சரி’ என்பதாகத் தலையாட்டினாள் அவள்.

எங்கே தன்னை எதிலாவது குறை சொல்லி விடுவாரோ? வெறுத்து ஒதுக்கிடுவாரோ? என்ற அச்சம் எப்பொழுதுமே தாமரையிடம் இருந்து கொண்டே  இருந்தது.  அதற்குக் காரணம்.. அவள் அனுபவிக்கும் அளவுக்கு மீறிய கணவனின் அன்பாகக் கூட இருக்கலாம்!

அதை அறியாத கதிரோ, மனைவியின் அறியாமையைப் போக்க எப்பவும் முயற்சித்துக் கொண்டு இருந்தான். அதன் பலன் என்னவோ பூஜ்ஜியமாகத்தான் இன்று வரை இருக்கிறது.

தாமரையைப் பொறுத்தவரை, அவள் தன் கணவனை தனக்கு வாழ்வு கொடுத்த கடவுளாக மனதில் மானசீகமாக பூஜிக்கிறாள். அதனால் கடவுளிடம் காட்டும் பக்தியைக் கணவனிடம் காட்டினால்?? பாவம்! அவனும் தான் என்ன செய்வான்??

“நான் கடவுள் இல்லை. உன்னைப் பூஜிக்கக் காத்துக் கொண்டு இருக்கும் உன் கணவன்” என்று எவ்வளோ முறை மனைவியைத் தன்னிடம் பிடித்து இழுத்துக் கத்தி சொல்லத் தோன்றிய போதும், இப்பொழுது போலவே, பெரும்பாடு பட்டு அதை அடக்கிக் கொண்டு, அடுத்து என்ன செய்து மனைவியை மாற்றுவது என்று எண்ண ஆரம்பிப்பான்.

இப்படியே இருவரும் ஒதுங்கி இருந்தால், தங்களின் உறவில் எந்தவித மாற்றமும் உருவாகாது என்பதை, இந்த இருமாத கல்யாண வாழ்வில் புரிந்து கொண்டான் கதிர்.

அதன்பின் தான் எப்படித் தாமரையிடம் மனதளவில் நெருங்குவது என்று சிந்திக்க ஆரம்பித்து, அதன் பலனாக எடுத்த முதல் படி தான், இன்று டவுனுக்கு இருவரும் சேர்ந்து சென்று வருவோம் என்பது.

அவன் சொன்னது முதல் மனைவியிடம் உண்டாகிய மாற்றங்களை, இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் கதிருக்கு இனித்தது.

நேற்றைய இரவு உணவு முடித்து, “உன்னிடம் பேசணும்” என்றவுடன் வந்து நின்ற மனைவியிடம், “நாளை டவுனுக்குப் போகலாமா?” என்று சாதாரணமாகத்தான் கேட்டான் கதிர்.

“டவுனுக்கா?” என்று ஆச்சரியம் கலந்த இன்பத்தில் மூழ்கிப் போய்க் கேட்டவளிடம், “ஆம்!” என்றான் அவன்.

“எதுக்குப் போறோம்?” என்றவளிடம், “வீட்டுக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். அப்படியே உனக்கு ஒரு போனும் வாங்கிட்டு வரலாம்” என்றவனிடம், “எனக்கா போனா?” என்று அடுத்தடுத்து முகம் மலர்ந்து கேட்டவளின்  மலர்ச்சி கதிரையும் பற்றிக் கொண்டதில், இன்முகமாகவே, “ஆம்!” என்றான் அவனும். அதில் கரைபுரண்ட உற்சாகத் துள்ளலுடன் தங்களறைக்குள் சென்றவள்,

போன சிறிது நேரத்திலேயே திரும்பி வந்து, “நான் ஒன்னு கேட்கவா?” என்றாள்.

“என்ன?” என்று ஆசையாகவே கேட்டான் கதிர்.

“நாளைக்கு நான் சாரி கட்டிக்கவா??? இல்லை சுடிதார் போட்டுக்கவா? நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்பணும்??? எதுல போறோம்??? அங்கே எங்கே போறோம்???”  இப்படி ஆயிரம் கேள்வி கேட்டு விட்டாள். அவனும் சிரித்துக் கொண்டே அனைத்துக்கும் பதிலும் சொல்லி விட்டான்.

முதல் முறை சுற்றுலா செல்லும் குழந்தையின் குதூகலத்துடன், அங்கேயும் இங்கேயுமாகத் தன்னைச் சுற்றியே சுற்றுபவளைக் கண்டவனுக்குமே, ஏன் என்றே தெரியாத துள்ளல் உள்ளத்தினுள் பிறந்தது.

“நைட்டு ஒழுங்கா தூங்குனியா?” என்ற கணவனின் கேலியில், அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, தன்னைக் கண்டுகொண்டானே என்ற எண்ணம் எழுந்து வெட்கப்பட வைத்தது. அதில் மௌனமாகிப் போனவளையே இன்னும் அதிகமாக ரசித்தவன், “டென் மினிட்ஸ் கொடு. நான் குளிச்சுட்டு வந்திடுறேன். சாப்பிட்டுக் கிளம்பிடலாம்” என்றான்.

“ம்ம்ம்ம்.. சரி” என்று தலை நிமிர்ந்து தலையசைத்தவளின் வேகத்தைக் கண்டவனின் தலையும் தானாக அசைந்தது, “சரி சரி” என்பது போல.. அதனூடே சிரித்தபடி தங்களறை சென்றவனைப் பார்த்தவளுக்கோ, “இப்படிச் சொதப்புறோமே?” என்று அச்சோவென்று இருந்தது.

அவளும் தான் என்ன பண்ணுவாள்? கிராமத்து வாழ்க்கை மட்டுமே வாழ்ந்திருந்த தாமரைக்கு, மலையடிவார கடைக்குச் செல்வதே என்னமோ ஜெர்மனிக்குச் சென்று வந்தது போன்ற சந்தோஷத்தைத் தரும். அப்படி  இருக்கும் போது,  அதையும் தாண்டி டவுனுக்குச் செல்வது என்பது எல்லாம், அவளுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.

இன்று அந்தக் கனியை கணவனுடன் சேர்ந்து ருசிக்கப் போகிறாள் என்றால், அவளுள் எழும் ஆர்வ அலைகளுக்கு அணை கட்ட யாரால் தான் முடியும்?

நைட் முழுவதும் கணவன் சொன்ன செய்தியில், தூக்கமே வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தவளுக்கு, ‘எப்பொழுதுடா விடியும்?’ என்று இருந்தது.

விடிந்து  விடியாது  ஐந்து மணிக்கே துள்ளி எழுந்தவள், குளித்து முடித்துக் காலை டிபன் வேலைகளைச் சரசரவென்று செய்து முடித்து, கணவன் எழுந்து விட்டானா என்று அறை வந்து பார்த்த போது, அவன் இன்னமும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு ஒரு கணம் சோர்ந்து போனாள்.

“என்ன.. இன்னைக்கு டவுன் போலாம்னு சொல்லிட்டு இன்னமும் தூங்கிக்கிட்டு இருக்காங்க? ஒருவேளை மறந்துட்டாங்களா?” என்று எண்ணியவளுக்குச் சட்டென்று ஒருவித ஏமாற்றம் கவ்விய போதும், ஜன்னலின் வெளியே புலர்ந்தும் புலராத காலையைக் கண்டவளுக்கு ஏதோ ஒரு மின்னல் வெட்ட, சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தை உற்று நோக்கினாள்.

அது மணி ஏழு என்று காட்டவும், அப்பொழுது தான் அவளுக்கு உயிர்ப்பே வந்தது போல இருந்தது.

பின்னே? லீவ் நாளில் ஒன்பது மணிக்கு எழுவது தான் கதிரின் வழக்கம். அது தெரிந்தும், அவன் இன்னும் எழவில்லை என்று எண்ணி மருகும் தன்னை நினைத்து என்னவென்று சொல்ல? என்று தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டவளுக்கு, அடுத்துக் கணவன் எழும் வரை நேரத்தை எப்படி நெட்டித் தள்ளுவது என்ற போராட்டம் எழவும், அவளின் கண் முன்னே வந்து போனது தோட்டம் தான்.

‘அது தான் சரி!’ என்று எண்ணியவள், நொடியும் தாமதிக்காது, அங்குச் சென்று, கணவன் எழுந்தது கூடத் தெரியாது நேரத்தைக் கழிக்க ஆரம்பித்தாள்.

அவனே எழுந்து வந்து, இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பலாம் என்று சொல்லவும், அதுவரை அடக்கி வைக்கப்பட்டு இருந்த தாமரையின் இறக்கைகள், மீண்டும் சிறகடித்துப் பறக்கத் தொடங்கி விட்டன.

அந்த உற்சாகத்துடனே கணவனைத் தொடர்ந்து வீட்டினுள்  துள்ளிக் கொண்டு சென்றவள், தோசை ஊற்றி ஹாட்பாக்ஸில் அடுக்கி, ஏற்கனவே அரைத்து வைத்திருந்த புதினா சட்னியுடன் சேர்த்து, நேற்று இரவு மீந்து போய் எடுத்து வைத்திருந்த காரக்குழம்பையும் சூடு பண்ணி, ஹாலில் ஒரு ஓரமாய் கொண்டு போய் வைத்தாள்.

கணவன் வரவும் அவனுடன் சேர்ந்து டிபன் உண்டவள், அதுவரை போட்டிருந்த நைட்டியைப் போய் மாற்றிக் கொண்டு கிளம்பி சுடிதாரில் தன் முன் வந்து நிற்கவும், கண் இமைக்க மறந்து உறைந்து போனான் கதிர்.

கல்யாண நாளை தவிர்த்து அதிகம் தாமரையை நைட்டியில் பார்த்திருந்தவன், இப்பொழுது தான் முதல் முறையாக அவளைச் சல்வாரில் காண்கிறான். அதுவும் புது மஞ்சள் தாலி கழுத்தை அலங்கரிக்க, மாசு மருவில்லாத முகத்தில் வில்லாக வளைந்து இருந்த புருவங்களுக்கு இடையில் இருந்த அந்தச் சாந்து பொட்டும், வகிட்டில் வைத்து இருந்த குங்குமமும், மீன் வழிகளில் தீட்டப்பட்டு இருந்த மையும், கார்கூந்தல் பின்னி முடித்து, இருபுற தோளில் தவழ்ந்த மல்லிகை சரத்துடன் சேர்ந்து, புது மணப்பெண்ணுக்கேயான ஜொலி ஜொலிப்புடன் தேவலோக மங்கையாக, தன் முன் நிற்கும் மனைவியின் அந்த அமைதியான அழகில் மதி மயங்கித்தான் போனான் கதிர்.

“என்ன இப்படிப் பார்க்கிறாங்க? பார்க்க அவ்ளோ மோசமாவா இருக்கேன்?” என்று தன்னைத்தானே குனிந்து பார்த்துக் கொண்டவள் நிமிர்ந்து, “நல்லா இல்லையா?” என்று தயக்கம் தேங்கிய குரலில் கணவனிடம் கேட்கவும்,

தன்னிலை அடைந்தவன், “இல்லை இல்லை.. நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு!” என்றான் அவசர அவசரமாகக் கதிர்.

அதைக் கேட்டு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டவள், “அப்போ ஓகே!” என்றபடி வெளிவாயிலை நோக்கி நடக்கவும், கதிருக்குத்தான் ஐயோவென்று இருந்தது.

“என்ன இப்படி இருக்கா? அவள் என்னை இவ்வளவு பாதிக்கிறதைக் கொஞ்சமாவது உணர்றாளா பார்???” என்று தனக்குள் எண்ணிய நொடி, வெளியில் இருந்து அழைத்த தாமரையின் குரலில், வீட்டைப் பூட்டி விட்டு அங்கிருந்து ஜீப்பில் புறப்பட்டான்.

கணவனின் அருகாமையில் அவனுடன் சேர்ந்து செல்லும் பயணத்தை தாமரை அதிகம் விரும்பினாள். ஜில்லென்ற காற்று முகத்தைத் தழுவி செல்ல, இயற்கை அழகை உள்வாங்கி ரசித்துக் கொண்டு இருந்தவள், ஏதோ தோன்ற உடனே கணவனின் புறம் திரும்பியவள், “விஜயாம்மா நேத்து வீட்டுக்கு வந்து இருந்தாங்க” என்றாள்.

“ஓஹ்ஹ..” என்றவனுக்கு அவரின் வருகை ஏன் என்று தெரியாதா என்ன? கடந்த சில வாரங்களாகவே அவனிடம் சொன்ன விஷயத்தைத்தான் இவளிடமும் சொல்ல வந்து இருப்பார் என்று எண்ணியவன், அதற்கு மேல் அவரின் வருகை குறித்து மனைவியிடம் எதுவும் கேட்கவில்லை.

“எதுக்கு வந்தாங்கன்னு நீங்க கேட்கவே இல்லையே?” என்று அவள் விடாது கேட்கவும், “தெரியும்!” என்று மட்டும் சொன்னான் கதிர்.

“என்ன தெரியுமா?” என்று எண்ணிக் கொண்டவள்,

“அவுங்க வீட்டுக்கு எப்போ போறோம்?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

“இல்லை, போகலை” என்றவனின் பேச்சு விளங்காது ஏன் என்றவளிடம், “ஏன்னா.. என்ன சொல்வது?” என்று எண்ணியபடி, மனைவியை ஒருபுறம் திரும்பிப் பார்த்தவன், “எதுக்கு அவுங்களுக்கு வீண் சிரமம்?” என்று அவளிடம் சொன்னான்.

“அன்பா விருந்துக்குக் கூப்பிடுறது எப்படி வீண் சிரமமாகும்?” என்பது தாமரையின் கூற்றாக இருந்தாலும், அதைக் கணவனிடம் கேட்கும் தைரியமில்லாதவளாக, தன் முன் இருந்த ஜீப்பின் டேஷ் போர்டில் அடித்திருந்த பெயிண்டை தன் நகம் கொண்டு சுரண்டி கொண்டு இருந்தாள். அவளிடமிருந்து எந்தவித பதிலும் வராததில், அவளை ஓரக்கண்ணில் கண்டவனுக்கு அவளின் செய்கை சிரிப்பைக் கொடுத்தது.

“வண்டி கம்பெனியோடது.. அதனால் கொஞ்சம் பார்த்து சுரண்டு..” என்ற கணவனின் கேலிப்பேச்சு காதில் விழவுமே, பட்டென்று தன் கையை இழுத்துக் கொண்டாள் தாமரை.

“ஏதாவது என்கிட்டே சொல்லணுமா?” என்று மனைவியின் புறம் திரும்பாமல் கேட்டவனின் கேள்விக்கு, முன்பிருந்த தடுமாற்றம் விலக, “ஏன் அப்படிச் சொன்னீங்க?” என்றாள் அவள்.

அதற்கு அவனும், “என்ன சொன்னேன்?” என்று கேட்டான்.

“அதான்.. அவுங்க வீட்டுக்குப் போக வேண்டாம்ன்னு..” என்று இழுத்தவளின் வார்த்தையை அவள் முடிக்கும் முன்பே, “அதான் சொன்னேனே? அவுங்களுக்கு வீண் சிரமம் வேண்டாம்ன்னு..”

“அதைத்தான் நானும் கேட்கிறேன். அவுங்க அன்பா கூப்பிடுறது உங்களுக்கு ஏன் அப்படித்(சிரமமா) தோணுது?” என்று விடாது  கேட்டாள் தாமரை. இதுக்கு என்னவென்று பதில் சொல்லுவான் கதிர்?

அவனைப் பொறுத்தவரை ‘அடுத்தவர்களிடம் எது வாங்கினாலும், அது கடன்! அடுத்தவரிடம் எது பேசினாலும் அது வீண் பேச்சு!’ என்று எண்ணித் தனித்து மற்றவரிடத்து இருந்து ஒதுங்கியே வாழ்ந்து விட்டனுக்கு, அப்படித் தோன்றியதில் ஆச்சரியமில்லையே!? இருந்தும் மனைவியின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதவன், அதையே மனைவியிடமே கேட்டான், “வேற எப்படி தோணனும்ன்னு சொல்ற?” என்று..

கணவனின் கேள்வியில் “இவுங்க நம்மளைக் கலாய்க்குறாங்களோ?” என்று அவன் முகம் உற்றுப் பார்த்தவளுக்கு, அவனின் முகபாவனை  அப்படியில்லை என்று எடுத்துச் சொல்லியது.

அவனின் புறம் லேசாகத் திரும்பி அமர்ந்தவள், “அவுங்க உங்க மேல வச்சு இருக்கிற பாசம் தானே உங்களுக்கு முதலில் தோன்றணும்? அதை விட்டு வேற என்ன என்னவோ சொல்றீங்களே?” என்றவளின் பேச்சைக் கேட்டு வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான் கதிர்.

அந்தச் செய்கையில் “அதிகம் பேசிட்டோமே?” என்று அரண்டு தான் போனாள் தாமரை.

மான் விழிகள் இரண்டும் மிரண்டு விழிப்பதைக் கண்டவன், “முதல்ல என்னைப் பார்த்து இப்படிப் பயப்படுறதை நிப்பாட்டுறியா?” என்று அதட்டினான்  சற்று உரிமை குரலிலேயே.

“சாதாரணமா தானே பேசிட்டு இருக்கோம். இதுல நீ பயப்படுற மாதிரி நான் என்ன செஞ்சேன்?” என்றவன், இப்பொழுது அவளைப் பார்த்தபடி கொஞ்சம் திரும்பி அமர்ந்திருந்தான்.

“இல்ல இல்ல.. சட்டுன்னு  நீங்க வண்டியை ஓரம் கட்டவும், என் பேச்சு பிடிக்கலையோன்னு நினைச்சுட்டேன்” என்றபடி தலை தாழ்ந்து உள்ளே போன குரலில் சொன்னவளிடம், “ஏன் அப்படி நினைக்குற? உன்கிட்ட பேச விருப்பப்பட்டு கூட நான் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி இருக்கலாம் தானே?” என்று சொல்லி மனைவிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தான் கதிர்.

கணவனின் வெளிப்படை பேச்சில் சட்டென்று அவனை நிமர்ந்து பார்த்தாள் தாமரை. “என்ன பார்க்குற..? இந்த ரெண்டு மாசத்தில் நாம எவ்ளோ பேசி இருக்கோம்ன்னு விரல் விட்டே எண்ணிடலாம்.

அப்படி இருக்கும் போது இது தான் நாம பேசிக்கிற பெரிய உரையாடல்ன்னு நினைக்கிறேன். அதை வண்டி ஓட்டிக்கிட்டே தொடர எனக்கு விருப்பமில்லை” என்றவனிடமிருந்து அப்படி ஒரு பேச்சைக் கொஞ்சமும் எதிர்பார்க்காதவள், அவனின் விழிகளில் தன் விழிகளைக் கலக்க விட்டு, இன்னமும் அப்படியே உறைந்து போயிருந்தாள்.

“சரி சொல்லு! நான் எப்படி நடந்துக்கணும்ன்னு நீ நினைக்கிற?” என்ற கணவனின் பேச்சில் தன்னிலை அடைந்தவளுக்கு, இதற்குத் தான் என்ன பதில் சொல்வது? என்றே தோன்றியது.

பின்னே? ஊர் நடப்பு முதல் உலக நடப்புகள் அனைத்தும் அறிந்தவன், வீட்டையும் பாட்டியையும் தவிர வேறு எதுவும் தெரியாத தன்னிடம் வந்து இப்படிக் கேட்டால், அவள் என்னெவென்று பதில் தருவாள்?

ஆனால் தாமரை அறியாதது என்னவென்றால், உலகத்தைப் பற்றி அறிந்து இருந்தவன், இன்னமும் அந்த உலகத்தில் வாழும் மனிதர்களுடன் எவ்வாறு சேர்ந்து வாழ வேண்டுமென்ற முறைமையை மட்டும் அறிந்து இருக்கவில்லை என்பது தான் அது.

“நிஜாமவே எனக்கு மத்தவங்ககிட்ட எப்படி பழகணும்ன்னு தெரியாது தாமரை. இதுவரை அதைத் தெரிந்து கொள்ளவும் நான் விரும்பவில்லை. இப்படியே பழகிட்டதால் யார் எனக்கு எது செய்ய முன்வந்தாலும், என்னுடைய முதல் செயல், அவர்களிடமிருந்து ஒதுங்குவதாக மட்டும் தான் இருக்கும்” என்றவனின் பேச்சில்..

என்னதான் பிறந்ததிலிருந்து கஷ்டத்திலே வளர்ந்து இருந்தாலும், நல்லது கெட்டது சொல்லித் தர தந்தையும், அரவணைத்துப் பாசம் புகட்ட தாயில்லாத போதும், அதைப் பாட்டியிடம் பெற்றவளுக்கு, தன் கணவனின் சுயம்பு வாழ்க்கையைக் கேட்டு ஒருபுறம் பிரமிப்பாக இருந்தாலும், மறுபுறம் அவனின் தனிமையின் கொடுமையை நினைக்கும் பொழுது நெஞ்சம் மருகியது.

அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக, “இனி உங்களுக்கு எல்லாமா நான் இருப்பேன்!” என்று உள்ளுக்குள் சபதமெடுத்துக் கொண்டவள்,  “இதுவரை நீங்க அப்படி  இருந்தது  போதும்!  இனி அப்படி இருக்க வேண்டாமே?” என்றாள்.

மேலும், “யாருமே இல்லைங்கறதை விட, யார் யார் நம்முடன் உறவு பாராட்ட விரும்புகிறாங்களோ, அவுங்களோட சேர்ந்து வாழ்வது தப்பு இல்லையே?

இந்த உலகத்தில் பணத்தால் வாங்க முடியாதது உண்மையான அன்பும், பாசமும் தாங்க. அது உங்களைத் தேடி வரும் போது அதை ஒதுக்காதீங்க!

மத்தவங்ககிட்ட இருந்து பாசத்தைச் சும்மா வாங்க உங்களுக்கு அசௌகரியமா இருந்தா, ஒன்னும் பிரச்சனையில்லை. ஒன்னுக்கு நாலா வட்டி போட்டு, அவுங்க காட்டுன பாசத்தை விட அதிகமான பாசத்தை அவுங்க மேல திருப்பிக் காட்டிடுங்க, அவ்ளோதான்!! வாழ்க்கை சூப்பராகிடும்” என்றவளின் பேச்சைத் தன்னை மறந்து கேட்டுக் கொண்டு இருந்தான் கதிர்.

“கொஞ்சம் அதிகமாவே பதில் கொடுத்துட்டோமோ??” என்று எண்ணிய தாமரை, “எனக்குத் தோணுனதைச் சொன்னேன். தவறா இருந்தா மன்னிச்சுக்கோங்க!” என்றாள்.

“ம்ம்ம்ச்… இல்ல..” என்று மறுத்துத் தலையசைத்தவன்,

“இப்படி யாரும் இதுவரை எனக்குப் பொறுமையா எதையும் சொல்லித் தந்தது இல்லை. அதனால எனக்குத் தோணினதை இதுவரை செஞ்சுட்டு வாழ்ந்துட்டேன்.  இனி கொஞ்சம் கொஞ்சமா அதையெல்லாம் மாத்திக்க ட்ரை பண்ணுறேன்” என்றவனின் எந்தவித ஈகோவும் இல்லாத பேச்சைக் கேட்ட தாமரைக்கு, அவள் கணவனை அந்நேரம் மிகவும் பிடித்தது.

சொன்னது மட்டுமில்லாது, அதைச் செயலிலும் காட்டும் விதமாக, உடனே தன்னுடைய போனை எடுத்து ராமமூர்த்திக்கு அழைத்தவன், அவர் மறுபுறம் போனை எடுக்கவும்,

“நாளைக்கு நானும், தாமரையும் உங்க வீட்டுக்கு விருந்துக்கு வரோம்” என்றான்.

அவனின் பேச்சைக் கேட்டு ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்தவர், பேசுவது கதிர் தானா? என்று அதிர்ந்து விழிக்கும் பொழுதே, மீண்டும் அவனின் குரல் அவரை அழைத்திருந்தது.

“ம்ம்ம்.. இருக்கேன்பா..” என்றவர்..

“சரி! சரிப்பா.. காலைலயே கிளம்பி வந்திடுங்க” என்று சந்தோஷக் குரலில் சொல்லி போனை வைக்கவும், அந்தச் சந்தோஷத்தை தன்னிலும் அனுபவித்தவன், அதைத் தனக்குக் கொடுத்த மனைவியை ஆதூரமாகத் திரும்பிப் பார்த்தான்.

கணவன் தன் பேச்சுக்கு இவ்வளவு சீக்கிரம் மதிப்பு கொடுப்பான் என்று எண்ணியிராதவளுக்கு, அவனின் இந்தச் செயல் அவளை அதிகம் குதூகலிக்கச் செய்ததில், வழக்கத்தை விட அதிகமாகவே கணவனைப் பார்த்து மலர்ந்தாள்.

இருவரின் மன அழகு அவர்களின் முகத்தில் ஜொலிக்க, “சரி, கிளம்புவோமா?” என்று கேட்ட கதிரிடம், “ம்ம்ம்..” என்று முத்துப் பற்கள் ஒளிர மென்னகையுடன் தலையசைத்துச்  சம்மதம் சொன்னாள் தாமரை.

நேராக நான்கு அடுக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்கு மனைவியை அழைத்துச் சென்று இருந்தான்.

ஒவ்வொரு தளத்திலும் என்ன என்ன இருக்கு என்பதை அவளிடம் விளக்கிக் கூறி விட்டு, இரண்டாம் தளத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.

அங்கு ஸ்மார்ட் போன் செக்ஷனில் லேட்டஸ்ட் போன் மாடல்களைக் காட்ட சொல்லி, அதில் இருந்து இரண்டை தேர்ந்தெடுத்து, “இதில் உனக்கு எது பிடித்து இருக்கு?” என்று மனைவியிடம் அவன் கேட்டான்.

ஸ்மார்ட் போனையே அப்பொழுது தான் பார்க்கும் தாமரைக்கு, அதில் எது பிடித்து இருக்கு? என்று கேட்டால் என்ன சொல்வாள்? எது வாங்கிக் கொடுத்தாலும் அவளைக் கையில் பிடிக்க முடியாது என்பதில், “ரெண்டுமே நல்லா இருக்கு” என்றாள் அவள்.

இரண்டு போன்களையும் ஆராய்ந்து, அதில் உள்ள வசதிகளின் அடிப்படையில், ஒரு போனைத் தேர்ந்தெடுத்த கதிர் அதையே பில் போட்டு வாங்கினான்.

அங்கேயே தன் அடையாள அட்டை நகலைக் கொடுத்து தன் பெயரிலேயே புது சிம் ஒன்றை வாங்கியவன், அதையும் போனில் பொருத்தினான். வெரிபிகேஷன் முடிந்து தான் சிம் ஆக்டிவ் ஆகும் என்பதால், போனை பாக்சிலேயே வைத்து மூடி, அதை மனைவியிடம் கொடுத்தான்.

தாமரைக்குச் சந்தோஷத்தில் கால்கள் தரையில் இல்லை. கணவன் கொடுத்த போனை வாங்கியவளுக்கு அப்பொழுது தான் ஒரு எண்ணம் தோன்றியது. தனக்கு இதைச் சரியாக உபயோகப் படுத்தவே தெரியாதே? என்று.. அதை உடனே அவளும் கணவனிடம் சொல்லி விட்டாள்.

“அது ரொம்ப ஈசி தான்.. சிம் ஆக்டிவ் ஆகவும் நானே எல்லாம் சொல்லித் தரேன்” என்று அவன் சொன்ன பின் தான் தாமரையின் முகம் தெளிந்து, அங்கே வடிந்த உற்சாகம் கரை புரள ஆரம்பித்தது.

அதன்பின் வீட்டுக்குத் தேவையான சில எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் சாமான்கள் சிலவற்றை ஆர்டர் செய்தவன், அவை அனைத்தையும் அவர்களே வீட்டுக்கு ஒட்டுமொத்தமாக டெலிவரி செய்து விடுவதாகச் சொன்னதால், வீட்டு முகவரியை மட்டும் அவர்களிடம் எழுதிக் கொடுத்து விட்டு, அதற்கான பணத்தையும் செலுத்தி விட்டு  ரெசிப்டை பெற்றுக் கொண்டான். நேரத்தைப் பார்க்க அது மணி இரண்டு என்று காண்பிக்கவும், நேராக மனைவியை அழைத்துக் கொண்டு நான்காம் தளத்தில் இருந்த புட் கோர்ட்டிற்குச் சாப்பிடச் சென்றான்.

அங்கு இருக்கும் சாப்பாடு ஐட்டங்கள் என்ன என்னென்று மனைவியிடம் சொன்னவன், “உனக்கு இதில் சாப்பிட என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

தாமரைக்கோ, அங்கிருக்கும் மொத்தத்தையும் சாப்பிட்டு ருசிக்கும் ஆசை  எழுந்த போதும்,  அது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று எண்ணியவள், “நீங்களே ஏதாவது நல்லதா சொல்லுங்க” என்று சொல்லி விட்டாள்.

உணவு வரும் வரை சுற்றி இருந்த கடைகளில் கண்களை ஓட்டிக் கொண்டு இருந்தவளுக்கு, அங்கே ஒரு கடையைத் தாண்டி அவள் கண்கள் அகலுவேனா? என்று அடம்பிடித்துக் கொண்டு இருந்தது.

கணவனிடம் அதைக் கேட்கலாமா வேண்டாமா? என்று அவளுக்குள் அவளே போராட்டம் பண்ணிக் கொண்டு இருந்தாள். அப்பொழுது அவர்களுக்கான உணவு தாயாராகி மேசைக்கு வரவும், மற்றது மறந்து, தன் முன் வைக்கப்பட்ட மட்டன் பிரியாணியையும், அதற்கு சைட் டிஷ்ஷாக வைத்திருந்த வெங்காயப் பச்சடி மற்றும் செட்டிநாட்டு சிக்கன் கிரேவியையும் சாப்பிட ஆரம்பித்தவள், அதன் சுவையில் வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே சாப்பிட்டு முடித்திருந்தாள்.

சாப்பிட்டு முடித்து கைக் கழுவி வந்தவளின் முன் இருந்த குளுகுளு ஐஸ் குவளையைக் கண்டவளின் கண்கள் ஆசையில் ஆகாயமாக விரிந்தது. இதைத்தானே சற்று முன் அவள் சாப்பிட ஆசைப்பட்டாள்? அதையே அவளுக்கு வாங்கிக் கொடுத்த கணவனைக் கண்கள் மின்ன, ‘எப்படித் தெரிந்தது இவருக்கு?’ என்று அவள் பார்த்தாள்.

அங்கு வந்தததில் இருந்து தாமரை அங்கிருந்த கடைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் என்றால், கதிர் அவன் மனைவியை மட்டும் தானே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அப்படி இருக்கும் பொழுது அவளின் ஆசை அவனுக்கு எப்படித் தெரியாமல் போகும்? அதன் விளைவாகவே, மனைவி கைக் கழுவ சென்ற நேரம், அவளுக்குப் பிடித்த ஐஸ்கிரீமை, அவளுக்காக ஆர்டர் செய்து காத்து இருந்தான் அவன்.

ஐஸைப் பார்த்தும் மனைவியின் கண்கள் காட்டிய ஜாலங்களில், தன்னிலை மறந்து, அவளையே பார்த்திருந்தவனைக் கண்டவளின் விழிகள் சொன்ன செய்தியில் லேசாகச் சிரித்தவன், “என்ன உனக்குப் பிடிக்கலையா? வேண்டாமா?” என்று அவளிடம் வேண்டுமென்றே கேட்டான் கதிர்.

“இல்ல இல்ல.. வேணும் வேணும்..” என்று சொன்னவளின் கைகளோ, ஐஸ்க்ரீம் குவளையைத் தாவி எடுத்துத் தன்னோடு இறுக பற்றி இருந்தது.

மனைவியின் சிறுபிள்ளைத்தனமான அந்தச் செயலில், அவளை ஆசையாகப் பார்த்தவன், “சரி, சாப்பிடு!” என்றான்.

ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்கிரீமை எடுத்து, நாவில் சுவைத்து, ரசித்து உண்டு கொண்டு இருந்தவளைக் கண்டவனின் முன் இருந்த  ஐஸ் உருகியதோ இல்லையோ, அவன் அதை விட அதிகமாகவே உருகிக் கொண்டு இருந்தான், கண்களால் மனைவியைப் பருகியபடி.

தான் ஏன் இவ்வளவு சந்தோஷப்படுகிறோம்? என்று புரியாமலே, தாமரையின் ஒவ்வொரு செய்கையையும் கண்டு உள்ளுக்குள் உவகை கொண்டு இருந்தான் கதிர்.

ஒருவழியாக குவளையில் இருந்த மொத்த ஐஸையும் சாப்பிட்டு முடித்தவளுக்கு, “ஐயோ! அதுக்குள்ள தீர்ந்து போச்சே?” என்ற எண்ணம் எழவும், இன்னும் ஒன்று சாப்பிட்டால் நன்றாக இருக்குமே? என்ற ஆசையும் உருவானது.‌ அதில் என்ன செய்வது? எப்படிக் கேட்பது? என்று தெரியாது திருதிருத்து அப்பாவி முகத்துடன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள் தாமரை.

மனைவியின் பாவத்தில் தன்னை அவளிடம் தொலைத்தவன், “என்ன?” என்றான் புருவம் உயர்த்தி மனைவியிடம்.

மனதில் தோன்றியது எல்லாம் கணவனிடம் சொல்லும் தைரியமில்லாதவளோ, “இல்லை, ஒன்றுமில்லை” என்று சொல்லி எழ முயன்ற நேரம், அவளின் கைப் பிடித்து அமர வைத்தவன், எழுந்து சென்று, இன்னொரு ஐஸ்கிரீம் வேறு ப்ளேவரில் வாங்கி வந்து மனைவியிடம் நீட்டினான்.

அவ்வளவு தான்!! கணவன் நீட்டியதைக் கண்டவளுக்கு, முகம் பிரகாசிக்க, உடனே ஐஸ்க்ரீமை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாள்.

ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்து எழுந்தவர்கள், முதல் தளம் சென்று அங்கே வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான், பாத்திரங்கள் மற்றும் இன்னும் இதர வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க ஆரம்பித்தார்கள்.

மற்ற  தளங்களை விட இந்தத் தளம் அளவில் சற்றுப் பெரியதாக இருந்தது மட்டுமில்லாது, கடலளவு பொருட்கள் அங்கே அழகாக நேர்த்தியுடன் அதற்குரிய அடுக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட தாமரைக்கு, ‘இவ்ளோ பொருட்களா?’ என்ற பிரமிப்பே முதலில் உண்டானது

தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேர்ந்தெடுத்து வைக்க ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வந்த கதிர், முதலில் மளிகை பொருட்கள் இருக்கும் பகுதிக்கு மனைவியை அழைத்துச் சென்று, “என்ன என்ன வேணுமோ இதில் எடுத்து வை!” என்றான்.

பொருட்களைத் தேடி தேடி எடுத்து ட்ராலியில் போடுவதே தாமரைக்கு புதுவித இன்பத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்ததில், புள்ளிமானாக இங்கேயும் அங்கேயுமாக ஓடி ஓடி பொருட்களை எடுத்து வந்து கொண்டு இருந்தவளின் துள்ளல், அடுத்து நடந்த நிகழ்வில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அது மட்டுமில்லாது அவளை நிலைகுலையவும் செய்ததில் சர்வமும் ஒடுங்கிப் போனாள் தாமரை.

Advertisement