Advertisement

14

காலமும் நேரமும் கூடி வந்தால் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்பதற்கிணங்க, அத்தனை நாளும் தள்ளிப் போய்க் கொண்டு இருந்த கதிரவனின் திருமணம், தாமரையின் சம்மதத்துடன், அடுத்து வந்த சுபயோகச் சுபதினத்தில் நடத்திட பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது.

கதிர் மற்றும் தாமரையின் நிச்சயம் முடிந்த கையோடு, அடுத்துக் கல்யாணம் குறித்த ஏற்பாடுகள் பற்றி சபையில் பேச ஆரம்பிக்கவுமே, மிகத் தெளிவாக ‘கல்யாண செலவு முழுவதும் தன்னோடது என்றும், பெண் வீட்டில் இருந்து பெண்ணைத் தவிர தனக்கு வேறு எதுவும் வேண்டாமென்று’ திடமாகச் சொல்லி விட்டான் கதிர்.

அதே போல தங்கள் திருமணம் மிக எளிமையாகக் கோவிலில் நடந்தால் போதும் என்றும் சொல்லியவனின் முதல் பேச்சைக் கேட்ட ராமமூர்த்தி ஒன்றும் பெரிதாக ஆச்சரியப்பட்டுப் போய் விடவில்லை. அது தான் அவனோட கொள்கை என்பதை, இதற்கு முன் அவனுக்காகப் பெண் பார்க்கச் சென்ற போதே அவர் அறிந்து வைத்திருந்தார்.

ஆனால் அவன் பின்னால் சொன்ன விஷயம் ஏன்? என்று புரிபடாததில் “ஏன்பா?” என்றார் அவனிடம்.

அவருக்குப் பதிலளிக்கும் முன், கதிரின் பார்வை ஒரு மூலையில் பாட்டிக்குப் பின் நின்று கொண்டு இருந்த தாமரையைத் தீண்டி மீண்டது.

ஏனென்றால் அவனின் அந்த முடிவுக்குக் காரணகர்த்தாவே அவள் தானே?!

ஆம்! இரண்டு நாட்கள் முன்பு நிச்சயம் குறித்துப் பேச தாமரை வீடு சென்றிருந்த போது, அங்குப் பின்கொல்லையில் துவைத்த துணிகளைக் காயப் போட்டுக் கொண்டு இருந்தாள் தாமரை.

அவளை தேடிக் கொண்டு அங்குச் சென்றவன், தன் வருகை அறியாது முதுகு காட்டி நின்றிருப்பவளின் கவனத்தைத் தன்புறம் திருப்பும் விதமாக, தொண்டையை லேசாகச் செருமி சத்தமிட்டான்.

மிக அருகில் கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவள், மிரண்டு தானாகவே இரண்டு எட்டு பின்னடைந்தாள்.

அவளின் செய்கையைக் கண்டு, “நான் வெளியே நின்னு கூப்பிட்டேன். ஆனா எந்தப் பதிலுமில்லை. அதான் உன்னைத் தேடி உள்ளே வந்தேன்” என்று தன்னிச்சையாக விளக்கம் கொடுக்க ஆரம்பித்தான் கதிர்.

அவன் பேசி முடிப்பதற்குள் தாமரையின் பதட்டம் கொஞ்சம் மட்டுப்பட்டு இருந்ததால், கையில் இருந்த துணியை அப்படியே கொடியில் போட்டவள், தூக்கி சொருகி இருந்த பாவாடையை இறக்கி விட்டபடி “உள்ளே வாங்க!” என்று வீட்டினுள் சென்றாள்.

அவளைப் பின்தொடர்ந்து நடுஅறை வந்தவனுக்கு அமர ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டவள், “நீங்க உட்காருங்க, நான் குடிக்க எதாவது கொண்டு வரேன்” என்று அவனை ஏறிட்டுப் பார்க்காது சொன்னவள், உடனே அடுப்படிக்கு ஓடினாள்.

இருவரினுள்ளுமே சொல்ல முடியா தவிப்புகள், பதட்டங்கள்! அதை வெளிக்காட்டாது இருக்க, இருவருமே மற்றவரிடம் போராடிக் கொண்டு இருந்தனர்.

உள்ளே சென்றவளுக்கு சட்டென்று, “எதற்கு இங்கே வந்தோம்?” என்பதே மட்டுப்படவில்லை. அந்தளவுக்கு அவளின் மூளை கதிரைக் கண்டதில் இருந்து வேலை நிறுத்தம் செய்து கொண்டு இருந்தது.

வெட்கப் புன்னகையுடன் தன்னைத்தானே லேசாக தலையில் தட்டி சுயநினைவுக்குக் கொண்டு வந்தவள், ஒரு டம்ளரில் தண்ணீரை மோந்து கொண்டு கதிரை நோக்கிச் சென்றாள்.

“இந்தாங்க..” என்று நீட்டியவள் என்ன கொடுக்கிறாள் என்று தெரியாமலேயே அதை வாங்க கை நீட்டியவனிடம் டம்ளரைக் கொடுக்கும் போது, தீண்டிய விரல்களின் உரசலில், தன் கையைச் சரக்கென்று இறக்கிக் கொண்டு, சுவரை ஒட்டிக் கொண்டு நின்று கொண்டாள் தாமரை.  அப்போதும் வந்தவன் முகம் பார்க்கவில்லை அவள்.

ஆனால் அவளையே பார்த்தவாறு நீர் அருந்தியவன், குடித்த தம்ளரை அவளின் புறம் நீட்டவும், தானாக முன்வந்து அதைக் கை நீட்டி வாங்கிக் கொண்டவளிடம், “பாட்டி எங்கே?” என்று கேட்டான் கதிர்.

“அவுங்க இப்போதான் கடைக்குப் போயிட்டு வர்றதா ஊருக்குள்ள போனாங்க. இருங்க, நான் போய்க் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லிப் புள்ளிமானாக அங்கிருந்து ஓடப் பார்த்தவளிடம், “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் கதிர்.

அவனின் பேச்சைக் கேட்டுச் சிலையாகிப் போய் நின்றவளில், “என்ன பேசப் போறாங்க?” என்ற மத்தளம் கொட்ட ஆரம்பித்து இருந்தது.

மீன் விழி அலைபாய, அவனை அவள் என்னெவென்று  பார்த்த நொடி, “இன்னும் இரண்டு நாளில் நமக்கு நிச்சயம். உனக்குத் தெரியும் தானே?” என்று கேட்டான் கதிர்.

அதில் “ஊப்ப்ப்ப்.. இது தானா?” என்று நினைத்தவள், தலை ஆட்டி, “ம்ம்ம்.. பாட்டி சொன்னாங்க” என்றாள், முகத்தில் பூத்த வெட்கப் பூக்களை அவனுக்குக் காட்டாது.

அவளின் முகம் சொல்லும் செய்தி அறிய முடியாதவனுக்கு, அது மேலும் சங்கடத்தைக் கொடுக்க, “உனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டம் தானே? நான் வற்புறுத்திக் கேட்டேன்னு ஒன்னும் நீ இதற்குச் சம்மதிக்கலையே? ஒருவேளை அப்படி எதுவுமிருந்தா  இப்பவே சொல்லிடு! நான் உடனே இதையெல்லாம் நிறுத்திடுறேன்” என்று தடாலடியாகச் சொன்னான் கதிர்.

அதைக் கேட்டு அதிர்ந்து போனவள், “என்ன பேச்சு பேசுறாங்க இவுங்க?” என்ற ரீதியில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் தாமரை.

அதைக் கண்டு இன்னமும் குழம்பிப் போனவன் நேரடியாகவே, “எனக்கு உன் முகம் பார்த்து உன்னைப் புரிஞ்சுக்க முடியலை. அதனால ப்ளீஸ் கொஞ்சம் என்கிட்டே கொஞ்சம் வாய் திறந்து பேசு!” என்று கேட்டவன்,

தான் அவ்வாறு கேட்க என்ன காரணம் என்பதையும் சேர்த்துச்  சொன்னான். அதாவது சில தினங்களுக்கு முன் வசந்துடன் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, ‘கல்யாணம் செய்ய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் போதும்! ஆனால் அதன் பின்னான வாழ்க்கை வாழ கட்டாயம் அவர்களுக்குள் நேசம் வேண்டும்’ என்று அவன் சொன்னதாகச் சொன்னவனின் பேச்சைக் கேட்டவள், “அது உண்மை தானே? இதில் இவுங்க இப்படிக் குழம்ப என்ன இருக்கு?” என்று நினைத்தாளே ஒழிய, அதை அவனிடம் கேட்கவில்லை.

எதுவாக இருந்தாலும் அவர்களே சொல்லட்டுமென்று, அமைதியாக அவனைப் பேச விட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

“வசந்த் சொன்னதை மேலோட்டமாகப் பார்த்தால், அது ஒரு சாதாரண வார்த்தைகள் தான்! ஆனால் கொஞ்சம் அதை ஆராய்ந்து பார்த்தால் தான், அதில் அடங்கி இருக்கும் வாழ்க்கையின் ஆதாரமே நமக்குப் புரியும்.

அது புரியாமல் வாழும் போது தான், இங்கே பல விவாகரத்துக்கள், பலவித சண்டைகள், பல அனாதைகள் உருவாகிறார்கள்” என்று குரல் இறுக சொன்னவனின் பேச்சைக் கேட்டவளுக்கு, அதன்பின் இருக்கும் அவனின் வலி புரிந்து நெஞ்சம் அடைத்தது.

முகம் கனிய தன் முன் இருப்பவனை நிமிர்ந்து பார்த்து, “அன்னைக்குப் பாட்டி உடம்பு முடியாம கஷ்டப்பட்டப்போ, அவுங்களை விட அதிகமா துடித்தவள் நான் தான். அது ஏன்னு உங்களுக்குத் தெரியுமா??” என்றவளின் பேச்சில் முகம் தளர, ஏன் என்ற விதமாக, அவளை ஏறிட்டுப் பார்த்தான் கதிர்.

“ஏன்னா.. எங்கே அவுங்களும் என்னை விட்டுட்டுப் போய்டுவாங்களோன்னு தான் ரொம்பப் பயந்தேன்” என்று சொல்லிச் சில நிமிடங்கள் அமைதி காத்தாள்.

பின் அவளாகவே பேச ஆரம்பித்தாள். “அந்த நிமிஷம் தான் என மண்டையில் ஒன்று உரைத்தது. தனிமையில் வாழ்வது என்பது எவ்ளோ பெரிய கொடுமை! என்று.

அப்போ முடிவு பண்ணேன்.. எனக்கு நீங்க, உங்களுக்கு நான்னு.. அதனால தான் நம்ம கல்யாணத்துக்கு உடனே சம்மதிச்சேன்” என்றவளின்  விழிகளும் சரி, அவளின் வார்த்தைகளும் சரி, கதிரை விட்டுக் கொஞ்சமும் அகலவில்லை.

“உங்களை நான் நேசிக்குறேனான்னு எனக்குத் தெரியாது. ஆனா ஒரு விஷயம் மட்டும் எனக்கு உறுதியா தெரியும். நம்ம வாழ்க்கையை நாம சந்தோஷமா வாழ்வோம்” என்றவளின் பேச்சைக் கேட்டவனுக்கு, சொல்ல முடியாத இன்பம் உள்ளுக்குள் ஊடுருவி உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தது.

அதில் தெளிந்து பிரகாசித்த முகத்தைக் கண்டவளுள்ளும் ஒருவித நிம்மதி பிறந்தது.

“உனக்கு எப்போதும் நான் ஒரு நல்ல துணையா இருப்பேன்!!” என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னவனின் குரலே, அவனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இருக்கவும், தாமரையின் முகமும் தானாக மலர்ந்து சிரித்தது.

இருவருமே ஒருவரின் நேசத்தை மற்றவரிடம் வெளிப்படையாகச் சொல்லாத போதும், “எனக்கென நீ உனக்கென நானென்று எப்போழுதும் வாழ்வோம்!”  என்பதை  மட்டும் ஆணித்தரமாக, ஒருவர் மற்றவருக்கு அழுத்தமாகப் புரிய வைத்து இருந்தனர்.

அதனால் தானோ என்னவோ, அவர்களிருவருக்கான நேச விதை அந்நேரமே இருவருள்ளுமே முளைக்க ஆரம்பித்து விட்டது, அவர்களே அறியாது!

“நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்று தயங்கிய குரலில் கேட்ட தாமரையிடம், “என்ன சொல்லு?” என்றான் கதிர்.

“நாம கல்யாணத்தை எளிமையாகப் பண்ணிக்கலாமா, கோவிலில்?” என்றவளைச் சில நிமிடம் ஊடுறுவி பார்த்தவன், ஏன்? எதற்கு? என்று அவளிடம் மறுகேள்வி கேட்கவில்லை. ஆனால் அவன் பதில் கொடுக்கும் முன் ராஜம்மா அங்கே வந்து விட்டதால், அந்தப் பேச்சு அன்று அப்படியே அந்தரத்தில் நின்று போயிருந்தது.

அதன்பின் பெரியவரிடம் நிச்சயம் குறித்துப் பேசி முடித்தவன், அவர் சாப்பிட சொன்ன போதும், வேலை இருக்கு என்று சொல்லி மறுத்து விட்டு, அங்கிருந்து உடனே கிளம்பிச் சென்று விட்டான்.

அவன் போனதிலிருந்து இதோ இப்பொழுது வரை, ‘தான் அப்படி அவரிடம் அவசரப்பட்டு கேட்டு இருக்கக் கூடாதோ? தன்னைப் பற்றி என்ன நினைத்தாரோ? அவருடைய கல்யாணம் குறித்து அவருக்கும் பல ஆசைகள்  இருக்கும்  தானே? அதைக் கூடப் புரிந்து கொள்ளாத நான் எப்படி அவர் கூடக் குடும்பம் நடத்த போறேன்?’ என்று இப்படி ஆயிரம் கேள்விகளைத் தனக்குத்தானே கேட்டுத் திண்டாடிக் கொண்டு இருந்தவளுக்கு.. இன்று, இந்த நொடி, தன்னுடைய வார்த்தைகள் மூலம் விமோசனம் கொடுத்து இருந்தான் கதிர்.

சற்று முன் கதிர் தன்னைப் பார்த்த பார்வையின் அர்த்தம் புரியாது அவள் விழித்திருக்கும் போதே, அவளின் காதில் வந்து விழுந்த தன்னவனின் வார்த்தைகளைக் கேட்டு, இமயத்தின் குளிர்ச்சியை உணர்ந்தாள் தாமரை.

தன்னவளின் பூரிப்பை அவளின் கெண்டை மீன் விழிகளின் துள்ளலில் கண்டுகொண்டவனுள்ளும், ஒருவித உற்சாகம் தானாகவே வந்து ஒட்டிக் கொண்டது.

தன் பதிலுக்காக ராமமூர்த்தி காத்திருப்பதைக் கண்டுகொண்டவன், நிதானமாக, அதே சமயம் அழுத்தமாக, “எந்தவித ஆடம்பரமும் வேண்டாம்ன்னு நினைக்கிறேன், அவளோ தான்!!” என்றான் சாதாரணமாக..

‘இறந்த வீட்டில் ஆடம்பரமா கல்யாணம் பண்ண அவன் விரும்பவில்லை போல!’ என்று அவனின் எண்ணம் புரிந்து கொண்டவர்களும், மேற்கொண்டு அதைப் பற்றி எதுவும் பேசாது, கல்யாண தேதி வாசித்து இருவரின் நிச்சயத்தையும் முடித்தனர்.

இன்னும் இரு வாரங்களில் கல்யாணம் என்ற நிலையில், கதிர் மட்டுமில்லாது, ராமமூர்த்தியின் குடும்பம் மற்றும், வசந்த் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையைத் தானாகவே முன்வந்து பொறுப்பெடுத்துக் கொண்டு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

தாமரையின் முகூர்த்த சேலை முதல் பெண்களுக்கான வேலை முழுவதையும் அனாமிகாவும், அவள் தாயும் பார்த்துக் கொண்டனர். வெளிவேலைகள் அனைத்தையும் ஆண்கள் பிரித்துப் பார்த்ததால், அதிகச் சிரமமின்றி எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டு இருந்தது.

அதோ இதோ என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த  கதிர் – தாமரை கல்யாண நாளும் அழகாக விடிந்தது.

அதிகாலை ஐந்து மணிக்கு வழிவிடுமுருகன் கோவில்  மண்டபம் வாழைமர தோரணைகள் கட்டப்பட்டு, சதுர வடிவில் பூக்களால் எளிமையாக, அதே நேரம், மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பட்டு வேஷ்டி, சட்டையில் சூரியனின் தேஜஸுடன் அமர்ந்து இருந்தவனின் அருகில், நிலவு பெண்ணாக, கூரைப்பட்டுச் சேலையில் மிதமான ஒப்பனையில், குனிந்த தலை நிமிராது, அழகு சிலையாக அமர்ந்து இருந்தாள் தாமரை.

ஐயர் மந்திரம் சொல்ல சொல்ல, கதிரும் தாமரையும் எரியும் ஹோமத்தில் அவர் சொல்வதைத் திருப்பிச் சொன்னபடி, அவர் கொடுப்பதைப் போட்டுக் கொண்டு இருந்தனர்.

அனைவரின் ஆசீர்வாதமும் வாங்கப்பட்டு தன் முன் எடுத்து வந்து வைக்கப்பட்ட திருமாங்கல்யத்தின் மீது பூக்களும் அரிசியும் தூவி, கடவுள் துணை அழைத்து, அதற்கு உருவேற்றி, முக்கோடி தேவர்களைச் சாட்சியாகக் கொண்டு உயிர் கொடுத்து, கதிரின் கையில் ஐயர் தாலியை எடுத்துக் கொடுத்தார்.

கைகள் நடுங்க, மனம் அலைப்புற திருமாங்கல்யத்தையே கதிர் பார்த்திருந்த நேரம், அவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்திருந்த தாமரையினுள் ஒருவித பதற்றம் ஊடுருவ ஆரம்பித்தது.

திருமாங்கல்யத்துடன் தாமரையின் புறம் கதிர் திரும்பவுமே, அனாமிகா தாமரையின் கூந்தலை லேசாகக் கழுத்தில் இருந்து பின்னோக்கித் தூக்கிப் பிடித்துக் கொண்டாள். தன்னவளின் கழுத்தை இருபுறமாகச் சுற்றி வளைத்துச் சென்று, திருமாங்கல்யத்தை இணைத்து மூன்று முடிச்சிட்டான் கதிர்.

ஆசீர்வாத பூக்கள் எங்கும் மழையாகப் பெய்ந்து தங்களை நனைத்துக் கொண்டு இருந்த நேரம், குனிந்து இருந்தவளின் நெஞ்சில் தவழும் மஞ்சளும், குங்குமமும் பூசிய மாங்கல்யத்தைக் கண்டவளின் கண்கள் கலங்கின.

அந்த தளும்பலுடனே திரும்பி தாமரை கணவனைக் கண்ட நொடி, இன்முகத்துடனே அவளை உள்வாங்கியபடியே, அவள் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்தான் கதிர்.

மனையாளின் விழி வழி அவள் மொழி அறிந்தவனாக, அவளின் கைப்பிடித்து அக்னி வலம் வர எழுந்தவன், பற்றிய அவளின் கைகளின் பற்றுதலில் தன் நேசத்தை அவளுக்கு உணர்த்தினான்.

அதில் நிஜமாகவே அவன்பால் ஈர்க்கப்பட்டவள், சுற்றி முடித்து நின்ற போதும், கணவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தாள். அதைக் கண்டவனுக்கு, ‘இந்தப் புன்னகை ஒன்றே போதுமே, என் ஜென்மம் ஈடேற!’ என்பது போல தோன்றியதில், அவனின் இதழ்களுமே தானாக விரிந்தது.

அதன்பின்னான சடங்குகள், சம்பிரதாயங்கள் முடிந்து, மலையடிவாரத்தில் இருந்த ஒரு பிரபல ஹோட்டலில் வந்திருந்து வாழ்த்திய அனைவரும் வயிறார உண்டு விட்டுச் சென்ற பின், மணமக்களும் அவர்கள் வீட்டுக்குக் கிளம்பினர்.

அனாமிகாவும், விஜயாவும் ஆரத்தி சுற்ற, தன் புகுந்த வீட்டில் கணவனின் கைக் கோர்த்தபடி, வலது கால் எடுத்து வைத்து நுழைந்தாள் தாமரை.

நேராகப் பூஜை அறை சென்று காமாட்சி விளக்கு ஏற்றி, அன்று ஆரம்பித்து இருக்கும் தங்களின் வாழ்வு இன்று போல் என்றும் சந்தோஷமாக அமைய, எல்லாம் வல்ல இறைவனுடன் தன் பெற்றோரின் ஆசியையும் மனமுருகி வேண்டிக் கொண்டாள் தாமரை.

அவளைப் போல இல்லையென்றாலும், ‘தன் மனைவியுடனான தன் வாழ்க்கை நல்லா இருக்கணும்’ என்று முதல்முறையாக எண்ணிக் கொண்டான் கதிர்.

பெரியவர்கள் சொல்ல சொல்ல, இன்னும் சில சம்பிரதாயங்களை எல்லாம் முதலில் தனித்துச் செய்த தாமரை, அதன்பின் தம்பதி சகிதமாக அனைத்தையும் செய்து முடித்தாள்.

மாலை வரை தாமரையுடன் இருந்து, சிலபல விஷயங்களை அவளுக்குச் சொல்லிக் கொடுத்த விஜயா, “நாளை வருகிறேன்” என்று சொல்லி விட்டு, தன் வீட்டிற்குக் குடும்பத்தினருடன் கிளம்பவும், அவர்களைத் தொடர்ந்து வசந்தும் கிளம்பி விட்டான்.

அதுவரை லேசாக  பதட்டம் கொண்டு  இருந்தவளுக்கு, ஒவ்வொருவராகத் தன்னை விட்டு விடைபெற்றுச் செல்ல செல்ல, உள்ளுக்குள் புயலடிக்க ஆரம்பித்தது.

கணவன் அறியாவண்ணம் அதை மறைக்க அவள் எவ்வளவோ முயற்சி செய்து கொண்டு இருக்கும் பொழுதே, ராஜம்மாவும் கிளம்புவதாகச் சொல்லவும், அவ்வளவு தான்!! வெடித்து அழ ஆரம்பித்து விட்டாள் தாமரை.

“என் கூடவே இருங்க பாட்டி” என்றவளிடம் தான் ஏற்கனவே சொன்னதையே தான் ராஜம்மா மறுபடியும் சொன்னார். “அப்போ அப்போ வந்து போறேன்மா. அது என் புருஷன் எனக்காக கட்டின வீடு. அதை விட்டு என்னால எங்கயும் இருக்க முடியாதுமா”

இதை இப்போது இல்லை, முன்பு ஒருமுறை, “கல்யாணத்துக்குப் பிறகு நீங்களும் எங்களுடனே வந்து விடுங்கள்” என்று கதிர் சொல்ல, அதற்கு அப்பொழுதே இந்தப் பதிலைப் பிடிவாதமாகக் கொடுத்து இருந்தார் அவர்.

அதனாலயே கதிருக்கு அவரின் இப்போதைய பதில் அதிகம் பாதிப்பைக் கொடுக்கவில்லை போல!

ஆனால் என்னதான் முன்பே சொல்லியது தான் என்றாலும், தாமரையால் ஏனோ அதை இப்பொழுது ஒத்துக் கொள்ள முடியாது, சிறுபிள்ளையாக அழுது தவித்தாள்.

அதைக் கண்டவருக்கும் நெஞ்சம் அடைக்கத்தான் செய்தது. இருந்தும் அவளிடம், “இங்கே தானே பக்கத்தில் இருக்கிறேன். எப்போ வேணாலும் நானும் வரேன், நீயும் வா!” என்று அதையும் இதையும் சொல்லி தாமரையைத் தேற்றிய ராஜம்மா, அவளைப் பார்த்துக் கொள்ளும்படி கதிரிடம் சொல்லி விட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார். மாலை போய் இரவு வந்து விட்டது

ஆனால் மனைவியிடம் தான் எந்தவித மாற்றமுமில்லை என்று எண்ணிய கதிர், ராஜம்மா விட்டுச் சென்ற போது எந்த அறைக்குள் சென்று அடைந்து கொண்டாளோ, அந்த அறைக்கு அவளைத் தேடிச் சென்றான்.

தரையில் ஒருக்களித்துப் படுத்து இருந்தவளின் கண்களில் கண்ணீரின் தடம், கண்ணாடி மீது படிந்த பன்னீர் துளியாகப் பிரதிபலித்துக் கொண்டு இருந்தது.

“தாமரை!” என்றவனின் அழைப்பில் சடாரென்று எழுந்து அமர்ந்தளிடம், “சாப்பிட வா!” என்றான்.

கணவனின் சொல்லைக் கேட்டு எழுந்து, முகம் கழுவி வந்தவளின் முன் இரு தட்டுகளில் இட்டிலியை ஒரு சின்ன ஹாட் பாக்ஸில் இருந்து எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான் கதிர்.

அவனை நெருங்கியவள், “நான் பரிமாறுறேன். நீங்க உட்காருங்க!” என்றாள் தாமரை.

அதைக் கேட்டு அவன் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு தரையில் அமரவும், அங்கே இருந்த இரண்டு பாக்ஸ்களைத் திறந்தவள், அதிலிருந்த சாம்பார், தக்காளி சட்னியை எடுத்துக் கொஞ்சமாகக் கணவனின் தட்டில் ஊற்றியவள், அங்கேயே அவனுக்குக் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டாள்.

மனைவி சாப்பிடாதது கண்டு, “நீயும் சாப்பிடு!” என்றான் கதிர்.

“இல்ல, உங்களுக்குப் பரிமாறிட்டு நான் சாப்பிடுறேன்” என்றவளிடம்,

“இங்கே இருக்கிறதே நாம ரெண்டு பேர் தான். இதுல நீ தனியா நான் தனியா வேற சாப்பிடணுமா? ஒன்னும் வேண்டாம். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறிக்கிட்டே சாப்பிடலாம் வா!” என்றான் கதிர்.

கணவனின் பேச்சைக் கேட்டு அவனருகில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தவள், ஒழுங்காக உண்டாளா என்று கேட்டால், அது கொஞ்சம் சந்தேகம் தான்?

அதைக் கண்டும் அதற்கு மேல் அவளை வற்புறுத்த எண்ணாதவனாக, சாப்பிட்டு முடித்துத் தன் தட்டுடன் எழுந்த கதிர், சிங்க்கில் தட்டை போட்டு விட்டுக் கைக் கழுவிய போதே, அங்கு மீதி பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள் தாமரை.

மொத்த பாத்திரத்தையும் மனைவி அங்கேயே நின்று கழுவ ஆரம்பிப்பதைக் கண்டும் காணாதவன் போல, ஹால் வந்து அமர்ந்து டிவியை ஆன் செய்து, அதைப் பார்க்க ஆரம்பித்து விட்டான் கதிர்.

பாத்திரங்களைக் கழுவி முடித்தவளுக்கு அடுத்து என்னவென்ற பயம் வந்து பிடித்துக் கொண்டதில், நெஞ்ச நடுங்க அங்கேயே சிலையாகிப் போனவளுக்கு, எவ்வளவு நேரம் இங்கேயே நிற்க முடியுமென்று எண்ணம் எழவும், லேசாக ஹாலை எட்டிப் பார்த்தாள்.

அங்கே கணவன் நாற்காலி போட்டு அமர்ந்து இருப்பதைக் கண்டவளுக்கு, அவனைத் தாண்டி வெளித்திண்ணை செல்லவும் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதை விடப் படுக்கையறை செல்ல இன்னும் பதட்டமாக இருந்தது.

‘என்ன செய்வது?’ என்று தெரியாமல் திணறியவள், ஒருவழியாகச் சமயலறையை ஒட்டி இருந்த பின்வாசல் கதவைச் சத்தம் வராது திறந்து பார்த்தாள். அது திறக்கவும், ஜில்லென்ற காற்று இதமாக அவளைத் தழுவி செல்லவும், அப்படியே மெய் மறந்து பின்கட்டுப் படியில் அமர்ந்து விட்டாள்.

சில மணி நேரமாகியும் இன்னும் வராத மனைவியைக் குறித்து எண்ணிய கதிர், “என்ன பண்றா இவ்ளோ நேரமா?” என்ற எண்ணத்துடன்  சமையற்கட்டு வந்து பார்த்தவன், அங்கே அவள் பின்வாசலில் முந்தானையை முதுகை சுற்றிப் போர்த்திக் கொண்டு, வானத்தைப் பார்த்து அமர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, அப்படியே நின்று விட்டான்.

பால் நிலா வெளிச்சம் பட்டு மின்னும் மனைவியின் அழகில், ஒரு நிமிடம் தன்னை மறந்து அவளை ரசித்தவன், நேரம் ஆக ஆக ஊசியாகக் குத்த ஆரம்பித்த குளிரைத் தாங்காது, அவள் முந்தானையை இன்னும் தன்னைச் சுற்றி இறுக்கிக் கொண்டு, தன்னைத்தானே  அதனுள் குறுக்கிக் கொண்டு போராடுவதைக் கண்டவன், “குளிர் அதிகமாகுது, உள்ளே வா!” என்றான்.

கணவனின் குரலில் அவனைத் திரும்பிப் பார்த்தவள், அவன் திரும்பி ஹாலை நோக்கிச் செல்வதைக் கண்டு விட்டு, எழுந்து பின்கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டு அவள் ஹால் வந்த நேரம், டிவியை ஆப் செய்து விட்டு வெளிவிளக்கையும் அணைத்து விட்டு முன்கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டு, அவள் கணவன் அவளை நோக்கி வந்து கொண்டு இருப்பதைக் கண்டவளுக்கு, உள்ளுக்குள் பதற ஆரம்பித்தது.

இதயம் எகிறிக் குதித்து வெளிவந்து விடுமோ? என்ற நிலையில் நின்று இருந்தவளைப் பார்த்தபடியே படுக்கையறை சென்றவனைப் பின்தொடர்ந்து சென்றவளுக்கு, அங்கே, முதலிரவுக்கான எந்தவித ஏற்பாடுகளும் இல்லாததில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அதற்குக் காரணம் கதிர் தான்! ‘எங்கள் வாழ்க்கையை எந்த நொடியில் ஆரம்பிக்கணும்ன்னு நாங்க தான் முடிவு பண்ணனும்’ என்பதில் தீர்மானமாக இருந்தவன், வசந்த் மற்றும் அனாமிகா எவ்வளவோ சொல்லியும், தங்களின் அறையை அலங்கரிக்க அவன் அனுமதிக்கவில்லை.

அறை கதவின் அருகிலேயே நின்று இருந்தவளைக் கண்டவன், “வா, வந்து படு!” என்று சொல்லவும், கொஞ்சம் திடுக்கிட்டுப் போனவளைக் கண்டவன்..

“என்ன தூக்கம் வரலையா?” என்று கேட்டான்.

“ம்ம்ம்.. ஹா..” என்று இதுக்கு என்னவென்று பதில் சொல்வது என்று புரியாமல் குழம்பி நின்றவளைப் பார்த்து,

“காலையில் இருந்து பயங்கர அலைச்சல்! ரொம்ப டையர்டா இருக்கு. உனக்கும் அப்படித்தானே இருக்கும். வா, வந்து படு!” என்றவன் அவளுக்கு ஒருபுறமாக இடம் விட்டு விட்டு, கட்டிலின் மறுபக்கமாகச் சென்று படுத்துக் கொண்டான்.

“எவ்வளவு நேரம் இப்படி நிற்க முடியும்?” என்று எண்ணியவளும், அன்ன நடை நடந்து சென்று, கட்டிலின் ஓரத்தில், லேசாகப் புரண்டாலும் கீழே விழுந்து விடுவது போல, கணவனுக்கு முதுகு காட்டிப் படுப்பதைக் கண்டவன், மனைவியை அழைத்தான்.

“இப்போ எதுக்குக் கூப்பிடுறாங்க?” என்று அடிவயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க, அதன் குறுகுறுப்பில் கூசி சிலிர்த்த உடலை கடினப்பட்டுத் திருப்பிக் கொண்டு, கணவனை நோக்கிப் படுத்து விழி தாழ்த்தியவளைக் கண்டவன்,

“குட் நைட்!” என்றான்.

அதைக் கேட்டு வாய் பிளாக்காத குறையாகக் கண்கள் விரிய, “இதைச் சொல்லவா கூப்பிட்டாங்க?” என்று சப்பென்று ஆகி விட்டது தாமரைக்கு.

அதை விட ‘இவ்வளவு தானா எங்க முதலிரவு?’ என்று எண்ணும் போதே, ‘இதுக்கா நாம இவ்ளோ பயந்தோம்?’ என்று எண்ணியவளுக்கு, தானாகவே ஓர் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அதனுடனே தூங்கிக் கொண்டு இருந்த கணவனையே பார்க்க ஆரம்பித்தாள் அவள்.

விரல் நுனி தீண்டாத போதும், அவனின் சுவாசம் தீண்டியதிலேயே உருகி மருகிப் போனவள், கணவனையே ஆசையாக எவ்வளவு நேரம் பார்த்திருந்து தூங்கினாளோ? அவளே அறியாள்!

****************

இன்றுடன் கதிர் – தாமரை திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்து இருந்தது. இருவரின் தாம்பத்திய வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லையென்றாலும், இருவரின் மன நெருக்கத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

கல்யாண வாழ்க்கை இவ்வளவு இன்பமானதா? என்று தாமரைக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் கணவனின் அன்பில் கடந்து கொண்டு இருந்தது என்றால்..

கதிருக்கோ, தனக்கென ஒருத்தி இருக்கிறாள் என்பதே அவனை அனுதினமும் பேரின்பத்தில் ஆழ்த்திக் கொண்டு இருந்தது. மனைவியின் முகம் பார்த்து விடியும் விடியலையும், அவளின் முகம் பார்த்து முடியும் பொழுதையும், மிக மிக அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருந்தான் அவன்.

கதிரைப் பொறுத்தவரை தாம்பத்தியம் என்பது கணவன் – மனைவி இடையே மலரும் ஒரு நேசப் பூவாகவே அவன் கருதினான். அதனாலேயே என்னவோ, அது அதுவாகவே தங்களுக்குள் மலரும் தருணத்திற்காக, பொறுமையாகக் காத்திருந்தான் அவன்.

இப்படிச் சென்று கொண்டு இருந்த வாழ்க்கையில் தான் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.

Advertisement