Advertisement

13

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க!” என்ற தாமரையின் தயக்கமில்லாத குரலில் திடுக்கிட்டு, அவளை ஆச்சரியம் விலகாது பார்த்தான் கதிர்.

“ஓஹ்ஹ.. அப்ப சரி.. இங்கே சைன் பண்ணுங்க” என்ற நர்ஸ்சின் புறம் திரும்பி, தன்னிச்சையாக அவர் நீட்டிய தாளில் கையெழுத்துயிட்டவனின் மனம் என்னவோ, சற்று முன் கேட்ட வார்த்தைகளில் தான் ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்தது.

‘தாமரை சொன்னதும், தான் கேட்டதும் உண்மையா? பொய்யா?’ என்று விளங்காத கேள்வி அவனைச் செல்லாக அரித்த போதும், தாங்கள் இருக்கும் சூழ்நிலை கருதி, அதை ஓரங்கட்டி விட்டு, பாட்டியின் உடல்நிலையில் தன் கவனத்தைச் செலுத்தினான் கதிர்.

ராஜம்மா சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த ரூமுக்கு வெளியே போடப்பட்டு இருந்த பெஞ்சில், இரண்டு கைகளையும் நெற்றிக்கு முட்டுக் கொடுத்தவாக்கில் குனிந்து கண் மூடி இருந்தவள், அழுகிறாளா? இல்லை கடவுளிடம் மன்றாடிக் கொண்டு இருக்கிறாளா? என்று தெரியாத போதும், அவளை நெருங்கி ஆறுதல் படுத்த துடித்த மனதை அடக்கியவன், அவளைப் பார்த்தபடியே எதிராக இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான்.

திடீரென ஒலித்த அலைபேசியில் சிந்தனை கலைந்தவன், அதை அதிகம் சத்தமிட விடாத வண்ணம் உடனே ஆன் செய்தான்.

“பாட்டி எப்படி இருக்காங்க? எல்லாம் ஓகேவா?” என்ற வசந்திடம்,

“வைரஸ் காய்ச்சல்.. ரொம்ப சீரியஸ் இல்லைன்னாலும், வயசனாவங்கங்கிறதுனால மருந்தோட வீரியத்தைத் தாங்குற சக்தி எந்தளவுக்கு இருக்குன்றது தெரியலை. அதனால அவுங்க நார்மல் கண்டிஷன் வர வரைக்கும், இங்கேயே ஃபுல் அப்ஸ்ர்வேஷன்ல தான் இருக்கணும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க” என்றான் கதிர்.

“தாமரை அவுங்க..” என்று வசந்த் கேட்கவுமே, தானாக கதிரின் கண்கள் தனக்கு முன் இருப்பவளின் மீது பாய்ந்தது.

“ம்ம்ம்.. ஓகே..” என்றவனின் சுருதி இறக்கத்தில் இருந்தே தாமரையின் நிலை என்னவாக இருக்கும் என்று புரிந்து கொண்டவனுக்கு, தானாகவே, ‘பாவம் அந்தப் பெண்!’ என்ற எண்ணமே தோன்றியது.

தாயும் தந்தையுமின்றி நிராதரவாகிப் போனவளுக்கு இருந்த ஒரே ஆறுதலும், அடைக்கலமும் அந்தப் பாட்டி தான். இப்பொழுது அவருக்கும் இப்படி என்றால், அந்தப் பெண் எப்படி அதைத் தாங்குவாள்? என்று எண்ணி வருந்தியவன், “ஏதாவது உதவி வேணுமா..? நான் வேணா அங்கே வரவா?” என்று கேட்டான்.

“இல்லை, நீ வர வேண்டாம். வேணும்ன்னா நானே கால் செய்றேன்” என்றவன், மேலும், “நாளைக்கு எனக்கு லீவ் மட்டும் சொல்லிடுறியா?” என்று கேட்டான்.

“ம்ம்ம்.. அதை நான் பார்த்துக்குறேன்” என்று வசந்த் சொல்லவும், மேலும் சில ஆபீஸ் வேலைகள் பற்றி அவனிடம் பேசி விட்டு போனை வைத்த கதிருக்கு, அதற்குப் பிறகான நேரங்கள் நத்தையாகவே ஊர்ந்தன.

மனப் போராட்டங்களில் ஓய்ந்து ஒடிந்து போன தாமரை, தன்னை மறந்து கண்ணசந்த நேரம், யாரோ அவளைத் தொட்டும் தொடாமல் தீண்டியதில், சட்டென இமை திறந்து பார்த்தவளின் எதிரே நின்று இருந்தவனைக் கண்டவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

“இவுங்க எங்கே இங்கே?” என்ற எண்ணம் தான் முதலில் தோன்றியது. அதில் திருதிருத்தவளின் கண்கள் நாலாபுறமும் சுற்றிச் சுழன்றதில், நேற்றைய போராட்டங்கள் கண் முன் வந்து படமாக ஓடியதைத் தொடர்ந்து, கதிர் ஏன் இங்கு இருக்கிறான்? என்ற விடையும் தானாக அவளுக்குக் கிடைத்திருந்தது.

ஆனாலும் அவனை விடுத்து, “பாட்டி!” என்று பதறியபடி எழுந்து செல்ல போனவளைத் தடுத்து நிறுத்தி இருந்தான் கதிர்.

“அவுங்களுக்கு ஒண்ணுமில்லை.. இப்போ நல்லா இருக்காங்க” என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் கலக்கம் இன்னும் மறையாததைக் கண்டவன்..

“இனி பயப்பட ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க. காய்ச்சல் குறைஞ்சு இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்ணு முழிச்சுடுவாங்கன்னு இப்போ தான் டாக்டர் சொல்லிட்டுப் போனாங்க” என்றவனின் கூற்றில் கொஞ்சம் சங்கடப்பட்டுப் போனாள் தாமரை.

‘பாட்டி இப்படி இருக்கும் போது, அவரைக் கவனிக்காது, தான் இப்படி அசந்து தூங்கி விட்டோமே?’ என்று நினைக்கும் பொழுதே, தன் கையில் இறுக பற்றியிருந்த கம்பளி போர்வையைக் கவனித்து, அதைத் தூக்கிப் பார்த்தவளுக்கு, “இது எப்படித் தன்னிடம்?” என்ற கேள்வி எழ, அதற்கான விடை தேடி எதிரே இருந்தவனை நிமர்ந்து பார்த்தாள் தாமரை.

தன்னவளின் விழி விரிப்பின் அர்த்தம் புரிந்தவன், “நான் தான் நர்ஸ்கிட்ட கேட்டு வாங்கி உனக்குப் போர்த்தி விட்டேன்” என்றவன், மறந்தும் அவள் தூக்கக் கலக்கத்தில் கீழே விழப் போனதைச் சொல்லவில்லை.

ஏனென்றால், அது கூட எங்கே அவளைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விடுமோ? என்ற பயம் அவனுக்கு.

முன்னே பின்னே எந்தவொரு பெண்ணிடமும் உறவாடிப் பழக்கமில்லாதவனுக்கு, தாமரையின் உறவு, ஒரு மலர் மலர்வது போன்று இருந்தது.

‘எங்கே கொஞ்சம் நாம் கடினப்படுத்தினாலும், அவள் கசங்கி விடுவளோ?’ என்று எண்ணி எண்ணியே, மிக மிக நிதானமாக அவளைக் கையாண்டு கொண்டு இருந்தான் கதிர்.

அவன் சொல்லாவிட்டாலும் உண்மை என்னவென்று யூகிக்க முடியாதவளா தாமரை?

அயர்வில் தன்னை மறந்து தூங்கி விட்டோம் போல! என்று எண்ணியவளுக்கு, முன்பு இருந்த குற்றவுணர்வு இப்பொழுது சிறிதுமில்லை. அதற்குப் பதிலாக அவளுள் ஒருவித இதம் மட்டுமே சில்லென பரவியது.

அதன் குளிர்வில் முகம் மலர்ந்தவளைக் கண்டுகொண்டு இருந்தவனுக்குத்தான், “ஏன் இந்த மாற்றம்?” என்று கொஞ்சமும் மட்டுப்படவில்லை.

கையில் இருந்த காப்பி மற்றும் உணவு பொட்டலம் அடங்கிய பையை அவளின் புறம் நீட்டியவன், “அறையினுள் பேஸ்ட், ப்ரெஷ் இருக்கு. நீ ப்ரெஷ் அப் ஆகிட்டு இதைச் சாப்பிடு!” என்றான்.

அவன் கையில் இருந்து அதை வாங்கியவள், ஏதோ அவனிடம் கேட்கும் முன், அங்கே வந்த நர்ஸ் கதிரை அழைத்திருந்தாள்.

என்னெவன்று கேட்டவனிடம், “நைட் போட்ட இன்ஜெக்ஷனையே இன்னைக்கு மூணு வேளைக்கும் போட சொல்லி டாக்டர் சொல்லி இருக்காங்க. சோ இதை மட்டும் வாங்கி வச்சுடுங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து மார்னிங் டோசை போட்டு விட்டுடுறேன்” என்று சொன்னாள் அவள்.

“ம்ம்ம்.. சரி..” என்று பாட்டியின் அறையினுள் சென்றவன், திரும்பி வரும் போது அவன் கையில் ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் தாள் இருந்தது.

“பாட்டியைப் பார்த்துக்கோ! நான் போய் மருந்து வாங்கிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிச் சென்றவனையே தலையசைத்துப் பார்த்து நின்று இருந்தவளின் அசையா தன்மையைக் கண்டு, அவளைத் தாண்டிச் செல்ல போன நர்ஸ் என்ன நினைத்தாரோ? தன் நடையை நிறுத்தி அவளிடம்,  “நீ ரொம்பக் கொடுத்து வைத்தவள்!” என்றார்.

அதைக் கேட்டு, “என்ன சொல்றீங்க?” என்றவாறு தன் பார்வையைத் திருப்பி அவரைப் பார்த்தாள் தாமரை.

“நைட் புல்லா உன்னோட வருங்கால கணவர் உன்னை என்னமா கவனிச்சுகிட்டு இருந்தார்ன்னு நான் தான் பார்த்தேனே..? இரவு ட்ரிப்ஸ் குறைஞ்சா என்னைக் கூப்பிடுங்கன்னு உன்கிட்ட சொல்ல, உன்னை எழுப்ப வந்துட்டேன்.

அவ்ளோ தான்!! எங்கே இருந்தோ ஓடி வந்தவர், ‘அவளை எழுப்பாதீங்க, எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க, நான் செய்றேன்’னு சொன்னது மட்டுமில்லாம, நைட் புல்லா கண் முழிச்சு இருந்து  பாட்டியை ரொம்பக் கவனமா பார்த்துக்கிட்டார். இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனுஷன்..!! உன்னை மட்டுமில்லாம, உன் குடும்பத்தையும் பார்த்துக்கணும்ன்னு நினைக்குறாரே?” என்று கதிரை மெச்சி பேசியவர்,

இறுதியாக, “அதனால தான் சொல்றேன். நீ வெரி லக்கி கேர்ள்!” என்றவரின் புன்னகை தாமரையையும் தொற்றிக் கொண்டதில், அவளின் இதழ்கள் வெட்கத்தில் லேசாக மலர்ந்து புன்னகைத்தது.

கதிர் திரும்பி வரும் முன் பல் விளக்கி, முகம் கழுவி, காபி அருந்தி முடித்திருந்தவளிடம் ஒரு கவரை கொடுத்தவன், அதிலுள்ளவற்றை எப்பொழுது, எப்படி பாட்டிக்குக் கொடுக்கணும் என்று ஒரு சிறு விளக்கமும் சேர்த்துச் சொன்னான்

அதைக் கவனமாகக் கேட்டு மனப்பாடம் செய்து கொண்டவள், அதை வாங்கி அருகில் இருந்த டேபிளின் மீது வைத்து விட்டு கதிரைப் பார்த்த போது, அவனின் சோர்வு அவனின் முகத்தில் அப்பட்டமாகப் பிரதிபலிப்பதைக் கண்டவளுக்கு மனம் பிசைந்தது.

அதன்  பிரதிபலிப்பாக,  “நான் பாட்டியைப் பார்த்துக்குறேன். நீங்க வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. வேலைக்கு வேற போகணுமே?” என்றாள் தாமரை.

அந்தச் சாதாரண வார்த்தைகள் கதிரை அதிகம் தாக்கியதை, பாவம் அவள் அறியவில்லை!

“போ!” என்று சொன்ன பின், அங்கே நிற்க கதிரின் தன்மானம் இடம் கொடுக்காததால், ஒரு வார்த்தை பேசாது உடனே அவ்விடத்தை விட்டுக் கிளம்பி இருந்தான் அவன்.

கிளம்பச் சொன்னவளோ, ‘என்ன.. போயிட்டு வரேன்னு கூடச் சொல்லாம போறாங்க?’ என்று அவன் படாரென சாத்தி சென்ற கதவையே இமைக்க மறந்து சில நிமிடங்கள் பார்த்து இருந்தாள்.

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கா..? இவ வான்னு சொன்னா வரவும், போன்னு சொன்னா போகவும், நான் என்ன இவ வீட்டு வேலைக்காரனா?” என்று தாமரையின் பேச்சை நினைத்துத் தனக்குள்ளேயே பொரும ஆரம்பித்தவன், வீடு வந்து சேரும் வரை அதைத் தொடர்ந்தான்.

அது விடிந்தும் விடியாத நேரம் என்பதாலும், இன்னும் ஆபீஸ் செல்ல நேரம் இருப்பதாலும், கொஞ்சம் ரெப்ரெஷ்ஷாகி குளித்து உடை மாற்றி வந்தவனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனாலும் தாமரை மீது இருந்த கோபத்தில் அப்படியே கட்டிலில் போய் படுத்தவன், போனில் வைத்திருந்த அலாரம் அடிக்கவும் உடனே எழுந்தான்.

‘நான்கு மணி நேர தூக்கம் எந்த மூலைக்கு?’ என்பது போல, அவனின் கண்கள் கோவைப்பழமாகச் சிவந்து இருந்தது அசதியில். அதைப் பொருட்படுத்தாது, யார் மீதோ இருந்த கடுப்பில் இருந்து இன்னும் மீளாதவன், கொஞ்சம்  கடுகடுப்புடனே  ஆபீஸ் கிளம்பிச் சென்றான்.

‘என்ன.. நேத்து என்கிட்ட லீவ் சொல்லிட்டு, இன்னைக்கு எனக்கு முன்னே ஆபீஸ்ல வந்து உட்கார்ந்துட்டு இருக்கான்?’ என்று நண்பனைக் கண்டு எண்ணிக் குழம்பிய வசந்த், அவனின் அறை கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

“என்னடா இங்கே இருக்க?” என்றவனின் பேச்சில் அவனை நிமிர்ந்து பார்த்தவன்,

“இங்கே இருக்காம வேற எங்கே இருக்கணும்ன்னு சொல்ற?” என்று எடக்காகக் கேட்டான்.

நண்பனின் பதிலில் மேலும் குழம்பிப் போனான் வசந்த்.

‘நேத்து இவன் நம்ம வீட்ல இருந்து கிளம்பும் போது தாமரை இவனுக்கு போன் பண்ணது உண்மை தானே? அது வந்ததும் இவன் அரக்கபறக்க ஹாஸ்பிடல் போனதும் உண்மை தானே? இன்னைக்கு அபீஸ் வர மாட்டேன் சொன்னதும் உண்மை தானே?’ என்று தனக்குள்ளயே ஆயிரம் ‘தானேன்னு’ கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு, அதெல்லாம் இல்லை என்பது போல இப்பொழுது பேசுவதில் தலையே வெடிப்பது போல இருந்தது.

ஏதோ பைலை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தவனிடமிருந்து, அதைப் பிடுங்காத குறையாக பிடுங்கி மூடி வைத்த வசந்த், “என்ன நடந்துச்சு? எதுக்கு இவ்ளோ கோபம் உனக்கு?” என்று கேட்டான், எதுவோ நடந்து இருக்கு என்ற எண்ணத்தில்..

“ம்ச்.. என்ன சொல்ல சொல்ற? எதுவும் நடக்கலை” என்று கையை உதறிக் கொண்டு எழுந்தவனுக்கு, எதையும் உடனே நண்பனிடம் சொல்ல விருப்பமில்லை போல.

கண்ணாடி ஜன்னலின் அருகே சென்று வெளியே வெறித்து நின்றவனிடம் அடுத்து வசந்த் கேள்வி கேட்கும் முன், ஆர்ப்பாட்டமாக அங்கே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த அனாமிகா, “என்ன அண்ணா இங்கே இருக்க..? நீ லீவ்ன்னு இவன் சொன்னான்” என்று கேட்கவும், அவளை விடுத்து, ‘நீ தான் சொன்னியா?’ என்ற ரீதியில் கதிர் வசந்தை முறைத்தான்.

நண்பனின் ஊடுருவும் பார்வையை எதிர்கொண்டவனோ, பயத்தில் இறங்கிய குரலில், “ஒரு சந்தோஷத்தில் சொல்லிட்டேன்” என்று இழுத்துச் சொன்னான்.

அதைக் கேட்டு “ஏன்? ஏன்? என்கிட்டே சொன்னா என்ன தப்பு?” என்று இருவரிடமும் எகிறினாள் அனாமிகா.

அவளின் செயலில், “இவ வேற!!” என்று எண்ணிய வசந்த், “கொஞ்சம் சும்மா இரு!” என்று காதலிக்குக் கண் ஜாடை காட்டியதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாதவள்..

“அது என்ன என்கிட்டே சொல்லக் கூடாது?” என்று பாசப் போராட்டத்தில் குதித்து கதிரிடம் சண்டை போட ஆரம்பித்தாள்.

“ஏதாவது இருந்தா தானே உன்கிட்ட சொல்ல? அப்படி எதுவுமில்லை” என்றான் கதிர் கொஞ்சம் எரிச்சலுடன்.

“என்னது எதுவுமில்லையா?” என்றார்கள் அங்கிருந்த மற்ற இருவருமே கோரசாக.

“எதுவுமே இல்லைன்னா உன்னை எதுக்குக் கூப்பிட்டாளாம்?” என்றாள் அனாமிகா. அதற்குக் கொஞ்சம் ஆவேசமாகவே, “ம்ம்ம்.. நடுராத்திரி டிரைவர் கிடைக்காததால் என்னைக் கூப்பிட்டு இருப்பா. போதுமா??” என்றான் கதிர் .

“என்னது டிரைவரா??? யாரு நீயா???” என்று அனாமிகா அடுத்து எதோ சொல்ல வரும் முன் அவள் கைப் பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தான் வசந்த்.

“என்னாச்சு? நைட் நார்மலா தானே இருந்தீங்க. அதுக்குள்ள இப்போ என்ன நடந்தது..? தாமரை எதுவும் சொன்னாளா..?” என்று விவரமறிய பொறுமையாகக் கேட்டான் வசந்த்.

“ம்ம்ம்.. சொன்னா சொன்னா… வந்த வேலை முடிஞ்சுடுச்சு, பொட்டியைத் தூக்கிட்டுக் கிளம்புன்னு சொன்னா?” என்றவனின் பேச்சைக் கேட்ட வசந்துக்கு, “அப்படியா சொன்னாள்?” என்ற எண்ணமே தோன்றியது.

ஆனால் அனாமிகாவுக்கோ தாமரையின் குணம் பிடிபட்டு இருந்ததால், “அவள் என்ன சொன்னாளோ, அதை அப்படியே சொல்லுங்க!” என்றாள் கதிரிடம்.

‘இது வேறயா?’ என்று அலுத்துக் கொண்டவனை விடாது, “சொல்லுங்க அண்ணா.. அவள் என்ன சொன்னாள்?” என்று மீண்டும் வற்புறுத்திக் கேட்டவளிடம் வேறுவழியின்றி தாமரை சொன்னதை அப்படியே சொல்லி முடித்தான் கதிர்.

அதைக் கேட்டு புன்னகைத்த அனாமிகா, “அவ சொன்னதில் என்ன தப்பு இருக்குன்னு நீங்க இந்தக் குதி குதிக்குறீங்க?” என்று கதிரிடம் கேட்டாள்.

“என்ன தப்பு இருக்கா? இவ புரிந்துதான் பேசுறாளா?” என்ற விதத்தில் ஆண்கள் இருவரும் அவளைப் பார்த்தனர்.

“என்னைக் கிளம்புங்கன்னு சொன்னது உனக்குச் சரியா இருக்கா?” என்ற கதிரிடம், “அவ அது மட்டுமா சொன்னா?” என்று எதிர்க்கேள்வி கேட்டவள், பின் அவளாகவே அதோடு சேர்த்து, “போய் ரெஸ்ட் எடுங்கன்னு சேர்த்து அக்கறையாவும் தானே சொல்லியிருக்கா. அது உங்களுக்குப் புரியலையா?” என்றவளின் அதிரடி கேள்வி கொடுத்த பதிலில், அப்படியே இன்ப அதிர்வு அடைந்தான் கதிர்.

“அப்போ.. அப்போ.. அவ என் மேல இருக்கிற அக்கறையில் தான் அப்படிச் சொன்னாளா?” என்று ஓராயிரம் முறை தனக்குள்ளே கேட்டுக் குதூகலித்துப் போனவனின் முகமும் அதையே வெளிப்படுத்தியதில், இப்பொழுது காண்டாகிப் போனான் வசந்த்.

“ஹலோ மிஸ்டர்… ஹல்லல்லோ  மிஸ்டர்…” என்றவனின் கத்தலில், அவனின் புறம் திரும்பிய கதிரிடம், “என்ன பீலிங்கா..? இல்ல தெரியாம தான் கேட்கிறேன்.. என்ன பீலிங்கா?” என்றவன்,

“உன்னால நாங்க தான்யா சீலிங் பேன்லயே போய்த் தொங்கணும்” என்றவனை கதிர் முறைத்தான்.

“பின்ன என்னையா? நான் தெரியாம தான் கேட்கிறேன். ஒரு பொண்ணு என்ன சொல்றா ஏது சொல்றான்னே கேட்காம வந்து நீ சோக கீதம் வாசிக்குறது மட்டுமில்லாம, எங்களை வேற நடுவுல இழுத்துப் போட்டுக் கதற கதற மத்தளம் வாசிக்குறியே.. இது எல்லாம் உனக்கே நியாயமா இருக்கா? நீயே சொல்லு!” என்றவனின் அழுகாத பாவனை கண்டு அனாமிகா வந்த சிரிப்பை அடக்கினால் என்றால், கதிரோ வாய் விட்டுச் சிரித்தே விட்டான்.

“உன்கிட்ட போய் நியாயம் கேட்டேன் பாரு! என்னைச் சொல்லணும்” என்று அங்கிருந்து வெளியேற போனவனை தடுத்து நிறுத்தி, அனாமிகா சமாதானப்படுத்தி, பிறகு சிறிது சிறு அரட்டையில் ஈடுபட்டவர்கள், அதன்பின் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

அனாமிகா கொடுத்த தெளிவு, ஏனோ கதிரை அதிகம் பாடாய் படுத்தி எடுத்ததில், வேலைக்கு ஊடே,  அடுத்து தாமரையை எப்பொழுது காணுவோம்? என்ற ஆவல் அவனில் உதிக்க ஆம்பித்து, அவனின் ஆவலைத் தூண்டி விட்டுக் கொண்டு இருந்தது.

ஒருநிலைக்கு மேல் தாமரை குறித்த எண்ணங்கள் அவனை முழுதாக ஆக்கிரமிப்பதை உணர்ந்தவன், மிகவும் பிரயத்தனப்பட்டு அதிலிருந்து விடுபட்டுக் கொண்டு, தன் வேலையில் கவனத்தைத் திருப்பினான்.

மாலை எப்பொழுது வரும்? வேலை எப்பொழுது முடியும்? தாமரையை எப்போது பார்ப்போம்? என்றவனின் தவிப்பு அலைகளுக்கு விமோசனமாக, கம்பெனி சங்கு ஊதப்படவுமே, கிளம்பி ஹாஸ்பிடல் போகத் தன் ஜீப்பை நோக்கிச் சென்றவனுக்கு முன் அதில் ஏறி அமர்ந்து இருந்தனர் அனாமிகாவும், வசந்தும்.

அதைக் கண்டவன் என்ன என்று அவர்களிடம் விசாரித்த போது, “இது என்னடா வம்பா இருக்கு? ஹலோ பாஸ்! அவுங்க எங்களுக்கும் பாட்டி தான் தெரியும்ல..? எங்க பாட்டியைப் பார்க்கிற உரிமை எங்களுக்குக் கிடையாதா..? என்ன எங்க பாசத்தைத் தடுக்கப் பார்க்குறீங்களா?! பார்க்குறீங்களா???” என்று இருந்த இருந்த இடத்தில இருந்தே எகிறி கொண்டு இருந்த வசந்தைக் கண்டு நகைத்தான் கதிர்.

ஜீப்பை எடுக்கப் போன முருகனிடம், “நீங்க வீட்டுக்குப் போய்டுங்க. நான் மலையடிவாரம் வரை போக வேண்டி இருக்கு. நானே ஓட்டிட்டுப் போறேன்” என்று சொல்லி அவரிடமிருந்து சாவியை வாங்கியவன், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு வண்டியை எடுத்தவன், போகும் வழியில் பாட்டிக்குப் பழங்கள், ஹார்லிக்ஸ் வாங்கிய பின்பே  ஹாஸ்பிடலைச் சென்று அடைந்தான்.

காலையில் ஒண்ணுமே சொல்லாமல் சென்றவனின் முகமே, அன்று முழுவதும் தாமரையை வாட்டிக் கொண்டு இருந்ததில் வாடிப் போனவளைக் கண்டு, மதியத்திற்கு மேல் கொஞ்சம் உடல் தேறி இருந்த பாட்டி என்னவென்று கேட்டார்.

“ஒன்றுமில்லை பாட்டி” என்று அவரிடம் சொல்லிச் சமாளித்தாலும், அவளின் சுணக்கம் என்னவோ அவளை விட்டு விகலவே இல்லை. அதோடயே சுற்றித் திரிந்து கொண்டு இருந்தவளின் முன் கதிர் வந்து நிற்கவும், அவ்வளவு தான்!! சூரியனைப் பார்த்த தாமரையாக மலர்ந்து விட்டாள் அவள்.

அவளின் மலர்வைக் கண்டவனும் அப்பொழுது தான் புரிந்து கொண்டான், காலையில் அனாமிகா சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்று..

அந்தச் சந்தோஷ தாக்கத்தில் அவளை நோக்கி கதிர் ஒரு எட்டு வைக்கும் முன், அவனை முந்திக் கொண்டு அனாமிகா தாமரையை நெருங்கி, பாட்டியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஆரம்பித்தாள்.

அப்பொழுது தான் அனாமிகா மற்றும் வசந்தின் வருகையை உணர்ந்தவள், “வாங்க!” என்று இருவரையும் சம்பிரதாயமாக அழைத்தாள்.

ஆனாலும் அவளுள் ‘இவுங்க எங்கே இங்கே?’ என்ற கேள்வி எழாமல் இல்லை. இருந்தும் கதிருடனான அவர்கள் இருவரின் பந்தம் குறித்து ஏற்கனவே பாட்டி மூலம் அறிந்து இருந்ததால், அதிகம் சிந்திக்காது, வந்தவர்களை வரவேற்றுப் பேச ஆரம்பித்தாள்.

அனாமிகா மற்றும் வசந்தின் பாட்டி உடல்நிலை குறித்த கேள்விகளுக்கு ஒருபுறம் தாமரை தன்னிச்சையாகப் பதிலளித்துக் கொண்டு இருந்தாலும், மறுபுறம் அவளின் மனம் என்னவோ, கதிரிடமிருந்து வெளிப்பட போகும் வார்த்தைகளுக்காகத்தான் செவியைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தது.

அறையில் கேட்ட பேச்சுக் குரலில் கண் விழித்த பாட்டியைக் கண்டு, அவரை நெருங்கிய கதிர், நேராக அவரிடம் சென்று பேச ஆரம்பித்ததைக் கண்டு மனம் சிணுங்கினாள் தாமரை.. “தன்னிடம் மட்டும் பேச இவுங்களுக்கு எதுவுமே இல்லையா?” என்று..

மற்றவர்களும் பாட்டி எழுந்ததைக் கண்டு அவரிடம் பேச ஆரம்பிக்கவும், “நான் பாட்டிக்குச் சுடு தண்ணீர் பிடிச்சுட்டு வந்துடுறேன். நீங்க பேசிட்டு இருங்க” என்று பொதுவாகச் சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினாள் தாமரை.

அவள் சென்று திரும்பிய நேரம் வசந்த் மற்றும் அனாமிகா அங்கிருக்க, கதிரை மட்டும் அங்கே காணவில்லை. அதைக் கண்டவுடன் மீண்டும் சொல்லாமலே சென்று விட்டார்களா? என்று எண்ணியவளுக்கு, தானாகவே காலை நிகழ்வு மனதில் நிழலாக வந்து போனது. 

அதில், “அப்போ அவுங்க பாட்டிக்காகத் தான் இங்கே வந்தாங்களா? அதான் விசாரிச்சுட்டு உடனே கிளம்பிப் போய்ட்டாங்களா? எனக்காக வரலையா? என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகணும்ன்னு கூட அவுங்களுக்குத் தோணலையா?” என்று எண்ணி மனம் வாடிப் போனாள் தாமரை.

மருந்தின் வீரியத்தால் சிறிய உரையாடலுக்குப் பின் பாட்டி கண்ணயரவும், “சரி, அப்போ நாங்க கிளம்புறோம்” என்று வசந்தும் அனாமிகாவும் அங்கிருந்து எழுந்து விடைபெற முயலவும், “பார்த்துப் போங்க!” என்று சொல்லி அவர்களை வழி அனுப்பி வைத்தாள் தாமரை.

அவர்கள் சென்ற பின், கதவை அடைத்து விட்டு வந்து பாட்டியின் கட்டிலுக்கு அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு, பெட்டின் ஓரத்தில் தலை சாய்த்துப் படுத்தவளைத் தாக்கிய தனிமையின் உணர்வில், அவளுள் கிளர்ந்த எண்ணங்களின் வாயிலாக, தாமரையில் விழிகள் கண்ணீரைச் சுரந்தது.

“எங்கே தன்னைக் கல்யாணம் செய்து கொண்டால் உங்களுக்குப் பிரச்சனை மட்டுமே மிஞ்சும்! என்று அன்று  நான் சொன்னதை இன்று கண்கூடாகக் கண்டதில், தன்னை வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்களோ? அதான் என்னிடம் சொல்லிச் செல்ல கூட அவர்களுக்கு விருப்பமில்லையோ?” என்று கதிரை குறித்த எண்ணங்களின் ஆர்ப்பரிப்பில் தள்ளாடிக் கொண்டு இருந்தவள், ‘இது  தான் என் சாபம் போல! நான் நேசிக்கும் யாரும் என் கூட இருக்க மாட்டார்கள் போல!’ என்று விரக்தியில் துடித்தவள், தூங்கிக் கொண்டு இருந்த பாட்டியின் கையை அவர் எழுந்து விடாதவாறு லேசாக எடுத்துத் தன் கைக்குள் கொண்டு வந்தாள்.

அவரின் கதகதப்பை உள்ளங்கையில் உணர்ந்து நிம்மதி கொண்டவள், “நீங்களாவது கடைசி வரை என் கூடவே இருங்க பாட்டி. நீங்களும் இல்லைன்னா  நான்  இந்த உலகத்தில் உயிர் வாழ்றதில் அர்த்தமே இல்லாம போய்டும்” என்று உறங்கிக் கொண்டு இருந்தவரிடம் மானசீகமாக மன்றாடிக் கொண்டு இருந்தாள்.

தன்னை மறந்து தாமரை தனக்குள்ளேயே போராடிக் கொண்டு இருந்த நேரம், செவி வழி இதயம் நுழைந்த வார்த்தைகளைக் கேட்டு, திடுக்கிட்டுப் போய் விழி திறந்து திரும்பிப் பார்த்தாள் தாமரை.

அங்கே தன்னையே விழுங்கும் பார்வை பார்த்து நின்றிருந்தவனைக் கண்டு, ‘தான் காண்பது கனவா? நிஜமா? இவுங்க இப்போ சொன்னது உண்மையா?’ என்று தனக்குள் சிலையாக நின்று கேட்டுக் கொண்டு இருந்தவளிடம், ‘நீ கேட்டது உண்மைதான் பெண்ணே!’ என்பது போல மீண்டும் அந்த வார்த்தைகளை உறுதியுடன் உரைத்தான் கதிர்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்குறியா?” என்று..!!

தாமரை வெளியே சென்று இருந்த நேரம் அங்கு வந்த நர்ஸ், “பாட்டி உடம்பு இப்போ நார்மலுக்கு வந்திடுச்சு. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டாங்க” என்று சொல்லிச் செல்லவும், “நான் டாக்டரைப் போய்ப் பார்த்துட்டு வரேன்” என்று கதிர் உடனே கிளம்பினான்.

“நானும் கூட வரேன்” என்று வசந்த் எழவும், “இல்ல, நீ இங்கே இரு! தாமரை வந்ததும் அவளிடம் சொல்லிட்டு, அனாமிகாவைக் கூட்டிட்டுக் கிளம்பு, நேரமாகிடுச்சு!” என்று சொல்லி அவனைத் தடுத்து நிறுத்தி இருந்தான் கதிர்.

டாக்டரைக் காணச் சென்ற கதிர், அவரிடம் பாட்டியின் உடல்நிலை குறித்த முழுவிவரமும் தெரிந்து கொண்டு வெளிவந்த போது தான், அவனுக்கு பர்சில் பணம் குறைவாக இருப்பது நினைவு வந்தது. உடனே மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஏடிஎம் நோக்கிச் சென்றவன், அங்கே தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் பாட்டியின் அறை வந்த போது தான், அங்கே துவண்ட கொடியாகத் தலை சாய்த்துத் தாமரை கண்ணீரில் கரைவதைக் கண்டான்.

தன்னவளை அந்த நிலையில் கண்டவனுக்கு நெஞ்சம் பொறுக்கவில்லை. ‘உனக்கு நான் இருக்கிறேன். பின் எதற்கு இந்த அழுகை?’ என்ற எண்ணம் கொடுத்த உந்துதலில் அவளை நெருங்கியவன், அதையே வார்த்தைகளாக்கி, “என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா? நான் உன்னைக் கண் கலங்காம பார்த்துக்கிறேன்” என்று உடனே கேட்டு விட்டான்.

“என்னைப் பிடிக்காது ஒதுக்கி விட்டுச் சென்று விட்டான்” என்று எவனை நினைத்து அவ்வளவு நேரமும் தவித்துக் கொண்டு இருந்தாளோ, அவனே வந்து, “என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?” என்று கேட்டு நிற்பதைக் கண்டவளுக்கு, சந்தோஷத்தில் நெஞ்சம் வெடிப்பது போன்று இருந்தது.

‘இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?’ என்று நெகிழ்ந்து போய், தனக்குள் அதைச் சொல்ல எடுத்துக் கொண்ட சில நிமிடம் காத்திருப்புக் கூட, கதிரைப் பலமுறை செத்துப் பிழைக்க வைத்ததில், அதன் பாரம் தாங்காதவன் அவளுக்கு முன் பேசினான்.

“உனக்கு இப்போதைக்கு தேவை ஒரு துணை. அந்தத் துணையா எப்பவும் நான் இருப்பேன். உன்னைச் சந்தோஷமா வச்சுப்பேன். என்ன சொல்ற?” என்று ‘எப்படியாவது என்னை ஏற்றுக் கொள்!’ என்று கேட்டு நிற்பவனின்  வார்த்தைகள் ஒவ்வொன்றும், தாமரையை கதிரை நோக்கி இழுக்கும் காந்தமாக மாறியதில், அவன் பால் இழுக்கபட்டவள், அவன் விழியோடு தன் விழியைக் கலக்க விட்டபடி, அவனை நெருங்கி நின்று சொன்னாள், “சம்மதம்!!” என்று முகப் பூரிப்புடன்..

அந்நேரம் அவளும் தன் பின்னால் இருக்கும் பிரச்சனை குறித்து யோசிக்கவில்லை. அவனும் ‘யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் இறங்கிப் போகாத தான், இவளிடம் மட்டும் ஏன் இந்த அளவுக்கு இறங்கிப் போய்ப் பேசுகிறோம்?’ என்று நினைக்கவில்லை.

ஆனால் அவர்கள் அறியாதது என்னவென்றால், இருவருமே ஒருவரைப் பற்றி மட்டும் மற்றவர் நினைத்ததுனாலேயே இப்படி மாறிப் போயிருந்தனர்.

Advertisement