Advertisement

அத்தியாயம் 12

தாமரையிடம் பேசி இரு நாட்கள் கடந்திருந்த நிலையில், எந்தவொரு பதிலும் இதுவரை அவளிடமிருந்து கதிருக்குக் கிடைக்கவில்லை.

‘இது தான் அவளின் முடிவு போல!’ என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தவனின் மனம், அந்நேரம் லேசாகக் கடினப்பட்டாலும், அதிலிருந்து தன்னைத்தானே மீட்டுக் கொண்டவன், அந்தப் பெண்ணிற்குக் கொடுத்த வாக்கினை செயல்படுத்துபவனாக, எதுவுமே நடக்காதது போல தன் வேலைகளில் கவனத்தைச் செலுத்திட முயன்றான்.

அவனறியாதது என்னவென்றால், தாமரையால், அவன் குறித்த எந்தவொரு முடிவையும் உறுதியாக எடுக்க முடியவில்லை என்பது தான் அது!

ஆம்! கதிரை மணக்க அவளின் ஒரு மனம் அலையாக அடித்தது என்றால், மறுமனமோ ‘வேண்டாம்’ என்று சூறாவளியாய் சுழன்று கொண்டு இருந்தது.

இவ்விரு போராட்டத்திற்கு இடையில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தவள், தீர்வு வேண்டி நாடியது, ராஜம்மாவைத் தான்.

இளையவளின் தடுமாற்றத்தைப் புரிந்து கொண்டவர், “எப்பவும் நான் உனக்கு வழிகாட்டிக்கிட்டே இருக்க முடியாதுல தாமரை? அதனால் இனி உன் வாழ்க்கைக்கான எல்லா முடிவையும் நீயே தான் எடுத்துப் பழகணும்” என்றவர்,

மேலும், “அதற்கான பக்குவம் உனக்கு எப்பவோ வந்திடுச்சு!” என்று தீர்மானமாகச் சொல்லி முடித்தார்.

அந்த வார்த்தையின் அர்த்தம் புரியாது பார்த்தவளிடம், “எப்போ உன் நலனை மட்டும் கருத்தில் கொள்ளாம அடுத்தவங்க நலனையும் சேர்த்து யோசிச்சு, நீ கதிரை வேணாம்ன்னு சொன்னியோ, அப்போவே உன்னோட எண்ண முதிர்ச்சியை என்னால உணர முடிந்தது. அதனால தான் நான் உறுதியா சொல்றேன். உன்னால இந்த விஷயத்துக்கும் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியும். சஞ்சலப்படாம நிதானமா யோசிமா! உனக்கான விடை தானா கிடைக்கும்” என்றார் ராஜம்மா.

இவர்கள் இருவரும் ஒருவரின் மனம் மற்றவர் அறியாத போதும், தங்களின் இயல்பை இழக்காது, அன்றாடம் நடமாடிக் கொண்டு இருப்பதைக் கண்ட வசந்த் –  அனாமிகாவுக்குத் தான் மண்டை வெடித்தது..

‘என்னங்கடா நடக்குது இங்கே?’ என்று..

“இன்னைக்காவது ஏதாவது விஷயம் தெரிந்ததா?” என்று தினமும் காலையில் ஆபீஸ் வந்தவுடன், ஆர்வம் தாங்காது தன்னறை வந்து நிற்கும் வசந்திடம், எப்பொழுதும் போல இன்றும் அனாமிகா, ‘இல்லை’ என்பதாகவே தலையை ஆட்டிக் காண்பித்தாள்.

அதைக் கண்டு “இல்லையா?” என்று இறங்கிய குரலில் சொன்னவன், “நான் தெரியாம தான் கேட்கிறேன்.. இவன் எல்லாம் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறான்?” என்றான் காண்டுடன். அதைக் கேட்டு அவனை முறைத்தாள் அனாமிகா.

‘ஹாஹா… ஆத்திரத்தில் கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம்  போலயே!’ என்று எண்ணிக் கொண்டவன், வெளியில், “இல்ல, இவுங்க படுத்துற பாட்டில் நமக்கு பிபி ஏறுதுல செல்லம்..” என்று தன்னவளின் முகவாயைப் பிடித்து ஆட்டிக் கொஞ்சலாகச் சொன்னான் வசந்த்.

காதலனின் கையை உதறி தள்ளியவளோ, “இது ஆபீஸ்!” என்று எகிறினாள்.

“ம்கூம்.. இதுல எல்லாம் அண்ணாவும், தங்கச்சியும் எப்பவும் தெளிவா இருங்க” என்று தனக்குள் முறுக்கிக் கொண்டவன், அதன் வெளிப்பாடாக, “நான் போய் என் வேலையைப் பார்க்கிறேன்” என்று சொல்லி அங்கிருந்து செல்ல முயன்ற நேரம், “வசந்த்த்…” என்று ராகம் பாடி அழைத்தாள் அனாமிகா.

“என்ன சிறுத்தை சிணுங்குது?” என்று சந்தேகத்துடன் திரும்பியவனைக் கண்டு, “கோச்சுக்கிட்டியா?” என்று கண் சிமிட்டிக் கேட்டவளின் சிமிட்டலில், சில்லு சில்லாகிப் போனான் வசந்த்.

“ஈஹ்ஹ்ஹி நெவெர் பேபி!” என்று அவளிடம் பாய முயன்றவனை ஒரு கையை நீட்டி, “அங்கே.. அங்கேயே நின்னு பேசு!” என்று அணை கட்டி நிற்க வைத்தாள் அனாமிகா.

“இதுக்குத்தான் அந்த இழு இழுத்தியா?” என்று அலுத்துச் சொன்னவனின் பேச்சைக் கேட்டு, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள், “எனக்காக ஒரு உதவி செய்றியா?” என்று கேட்டாள்.

“என்ன?” என்றான் அவன்.

“எங்க அண்ணாகிட்ட போய்ப் பேச்சு கொடுத்து, தாமரை ஏதாவது சொன்னாளா இல்லையான்னு தெரிஞ்சுகிட்டு வரியா?” என்றவளைக் கொலைவெறியுடன் பார்த்தான் வசந்த்.

“என்னது தெரிஞ்சுகிட்டு வரவா??” என்று அதிர்ந்து கேட்டவன், “ஏய்! ஏய்! உனக்கு எல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இல்லையா? அவன்கிட்ட எல்லாம் போயிட்டு முழுசா திரும்ப வர முடியுமா?“ என்றவனின் பேச்சு புரியாதவள், “என்ன சொல்ற?” என்று கேட்டு வைத்தாள்.

“ம்ம்ம்.. சொல்றாங்க.. சுரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு..

இங்கே பார்.. உங்க அண்ணன்கிட்ட மட்டும் போய் நீ சொன்னதை நான் கேட்டேன்னு வை.. அவன் என்னவோ அட்லருக்குப் பிறந்த ஹிட்லராட்டம், என்னை ஒரே போடா போட்டு நேரா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சுடுவான். அப்புறம் எங்கே இருந்து நான் திரும்பி வர்றது?” என்றவனின் பேச்சின் உண்மையில் அனாமிகாவுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தாலும், அதை உதட்டை கடித்து அடக்கிக் கொண்டு நின்றாள்.

அவளையும் மீறி அவளின் கண்கள் சிரிப்பதைக் கண்டுகொண்டவன், “ஓஹ்ஹ.. மேடமுக்கு என் நிலைமையை நினைத்துப் சிரிப்பா இருக்கோ?” என்றவன், “எல்லாம் என் தலைவிதி!” என்று நொந்தபடியே அங்கிருந்து நடையைக் கட்டினான்.

ஆழத்திலும் ஆழம் பெண்களின் மனது என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் அதைப் பொய்ப்பிப்பது போல இருந்தது, கதிரின் வாழ்க்கையும், அவனின் மனமும்.

அந்த அளவுக்கு எப்பொழுதும் தன்னைச் சுற்றி ஒருவித வளையத்தைப் போட்டுக் கொண்டு அதற்குள்ளே வாழ்கிறான் அவன்.

அந்த வளையத்தை விட்டு அபூர்வமாக அவனே வெளிவந்து பேசினால் தான் உண்டு. நாம் எதாவது உள்ளே சென்று அவனை ஆராய முயன்றால், அவ்வளவு தான்! ஒன்று வெடிப்பான், இல்லையேல் அமைதியாகி விடுவான்.

அதனாலயே அவனைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் யாரும் அவனிடம் அவ்வளவு சீக்கிரம் நெருங்கி, அவன் குறித்த எந்த ஒரு கேள்வியும் கேட்க மாட்டார்கள்.

அதை அறிந்து இருந்ததனால் தான் அனாமிகாவும் இறுதியாக, “கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்?” என்ற எண்ணத்தை மனதில் நிறுத்தி, மற்றதை ஒதுக்கி வைத்து விட்டு, அன்றைய வேலைகளில் தன் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தாள்.

மாலையில் வேலை முடிந்து கதிருடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்த வசந்த், ஆர்வம் தங்காது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, நண்பனிடம் நேரடியாகக் கேட்காது மறைமுகமாகத் தாமரையின் பதில் குறித்து தூண்டில் போட்டுப் பார்த்தான்.

அதைக் கேட்டு அவனை ஊருடுவி பார்த்த கதிரைக் கண்டவனுக்கு அல்லு விட்டது.. “ஐயோ! கண்டுபிடிச்சுட்டானோ?” என்று..

சந்தேகமே வேண்டாம்! அது தான் உண்மை என்ற விதமாக, உடனே ஜீப்பை நிறுத்தி, வசந்தை நடுரோட்டில் அம்போவென விட்டு விட்டுச் சென்றான் கதிர்.

அவன் விட்டுச் சென்றதுமே தன் போனை எடுத்து அனாமிகாவுக்கு அழைத்து விட்டான் வசந்த்.

எடுத்ததுமே கதிர் குறித்து கத்த ஆரம்பித்தவனை அடக்கி, அவன் பேச்சை நிறுத்தியவள், “என்னாச்சு?” என்று கேட்டாள்.

“என்ன ஆச்சா? உங்க அண்ணன் என்ன என்ன செஞ்சான் தெரியுமா..?”

“என்ன செஞ்சாங்க?”

“அப்படிக் கேளு!” என்றவன், கதிர் தன்னை அம்போ என்று விட்டுட்டுப் போனதை அழுகாத குறையாகச் சொல்லி முடிக்கும் போதே, அனாமிகாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

போனில் அதை வெளிப்படுத்தாது “அச்சோ!” என்றாள் அக்கறை குரலில் காதலனுக்காக.. அதை நம்பியவனும், “அவன் விட்டுட்டுப் போனது கூட எனக்குக் கஷ்டமா இல்லை டார்லிங். ஆனா விட்டுச் சென்றதுக்கு ஒரு காரணம் சொன்னான் பாரு! அதை நினைத்தா தான் இப்போ கூட என்னால தாங்கிக் கொள்ளவே முடியலை டார்லிங்” என்று கூப்பாடு போட்டான் வசந்த்.

“அப்படி என்ன சொன்னாங்க அண்ணா?”

“என்ன சொன்னானா…??? இப்படி என்கிட்டே பேசுறதை விட்டுட்டுப் போய் அனாமிகா அப்பாகிட்ட பேசு! அப்படியாவது உன் கல்யாணம் நடக்குதான்னு பார்க்கிறேன்னு சொல்லிட்டான் டார்லிங் அவன்” என்றவன்,

மேலும், “அதோடு விட்டானா அந்தக் கிராதகன்???”  என்றவன்..

பின் அவனாகவே, “என்ன செஞ்சான் தெரியுமா உங்க நொண்ணன்?” என்று அனாமிகாவிடம் கேட்டான்.

“என்ன செஞ்சாங்க??” என்று அவளும் ஸ்ருதியை ஏற்றிக்  கேட்கவும், “இதுக்கெல்லாம் மட்டும்  உன்னோட சுருதி ஏறுமே?” என்று அவளை வார்த்தைகளில் கொட்டியவன், “உங்க வீட்ல நம்ம விஷயத்தைப் பற்றிப் பேசணும்னு சொன்னா  மட்டும்.. உடனே பே.. பேபே..ன்னு பிறவி ஊமையா என்கிட்டே வேஷம் போடு!” என்று அடங்கமாட்டாது சொன்னான்.

“இப்போ எதுக்குங்க அதைப் பற்றிப் பேசுறீங்க? அண்ணா என்ன செஞ்சாங்க? அதைச் சொல்லுங்க” என்று கருமமே கண்ணாக அனாமிகா கேட்டாள்.

“ம்ம்ம்.. செஞ்சான்.. நல்லா செஞ்சான் வச்சு..” என்று பொருமியவன், “நடுரோட்ல என்னை இறக்கி விட்டுட்டுச் சொல்றான்.. இப்படியே பொடி நடையா நடந்து போய் உன் மாமனார்கிட்ட பொண்ணு கேளு! ஒருவேளை உன்னோட கோலத்தைப் பார்த்துப் பொண்ணு கொடுத்தாலும் கொடுத்துடுவார்ன்னு.. என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உங்க அண்ணனுக்கு?” என்று வசந்த் அழுகாத குறையாகக் கேட்கவும், சிரித்து விட்டாள் அனாமிகா..

ஒருவேளை கதிர் சொன்னது போல, ஏழு கிலோமீட்டர் நடந்து வந்திருந்தால், வசந்தின் கோலம் எப்படி இருக்குமென்று!

காதலியின் சிரிப்பில் கடுப்பானவன், “என்ன? நல்லா நான் நடக்க முடியாம தவழ்ந்து வருவது பார்த்து குதூகலிச்சாச்சா?” என்று கேட்கவும், தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவள், “நீ எங்கே இருக்க சொல்லு? நான் வரேன்” என்றாள் அக்கறையாக.

“பாருடா! என் ஜான்சிராணிக்கு வந்த வீரத்தை..” என்று ஒருபுறம் அவளைக் கிண்டலடித்தாலும், மறுபுறம் மனதிற்குள் குதூகலித்துக் கொண்டான் வசந்த்.

‘ஒரு நிமிடம் தன்னிடம் தனியாக நின்று பேச யோசிப்பவள், இன்று தனக்கு ஒரு கஷ்டமென்று தெரிந்தவுடன், வீட்டையும் ஊர் உலகத்தையும் எல்லாம் மறந்து, தன்னைக் காக்க வருகிறேன் என்கிறாளே!’ என்ற எண்ணம் கொடுத்த இதமே அதற்குக் காரணம்.

“நீ ஒன்னும் வர வேண்டாம். நான் ஏதாவது வண்டி புடிச்சு வீட்டுக்குப் போய்டுறேன்” என்றவன், அதன்பின் சில மணி நேரங்கள் காதலியுடன் கதை அளந்து விட்டே போனை வைத்தான்.

அவன் சொன்னது போலவே, அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வண்டியில் லிப்ட் கேட்டு வீடு வந்து சேர்ந்தான் வசந்த்.

நண்பன் வீடு வந்து விட்டான் என்று முருகன் மூலம் அறிந்து கொண்டு, அவன் வீடு சென்ற கதிரை, “வா!” என்று சொல்லாமல் கதவைத் திறந்து விட்டு, உள்ளே சென்றவனைப் பின்தொடர்ந்து உள்ளே சென்று அமர்ந்தான் கதிர்.

“என்ன உன் மாமனார் வீட்டுக்குப் போகலையா?” என்று வேண்டுமென்றே நண்பனை வம்பிழுக்கும்படி கேட்டு வைத்தான்.

“டேய்! வேண்டாம்.. என்னை வெறுப்பேத்தாதே! நீயெல்லாம் ஒரு நண்பனாடா..? நான் அப்படி என்ன கேட்டுட்டேன்னு என்னை அம்போன்னு விட்டுட்டு வந்த..?

எவ்ளோ நேரம் தனியா நின்னுட்டு இருந்தேன் தெரியுமா?” என்றவனின் பேச்சைக் கேட்ட கதிர், “சும்மா சீனை போடாதே! இதான் சாக்குன்னு அனாமிகாவுக்கு போனை போட்டு எல்லாத்தையும் சொல்லி, அப்படியே கடலையும் போட்டு இருப்ப. எனக்குத் தெரியாதா உன்னைப் பற்றி?” என்று எகத்தாள பார்வை பார்த்தவனின் பேச்சில் இருந்த உண்மையில் வாயடைத்துப் போனான் வசந்த்.

நண்பனை விட்டு விட்டுச் சென்றபின், ‘தன் மீது இருக்கும் அக்கறை தான், வசந்தை அப்படித் தன்னிடம் பேச வைத்தது’ என்று புரிந்து கொண்ட கதிருக்கு உள்ளுக்குள் ஒருவித குற்றுணர்வு!

அந்த நேரம் ஏதோ ஒரு அவசரத்தில் அதைச் செய்து இருந்தாலும், தான் செய்தது தவறு என்ற எண்ணத்தின் விளைவாகத்தான், அவனைத் தேடி இந்த நேரத்தில் அவன் வீடு வந்து இருந்தான் கதிர்.

“மன்னிச்சுடு!!” என்ற நண்பனின் வார்த்தைகளில் பனியனை  மாட்டிக் கொண்டு இருந்தவன், ஒரு நிமிடம் அதிர்ந்து, பின் நிதானித்து, “எதுக்கு இந்த மன்னிப்பு? என்னை விட்டுட்டு வந்ததுக்கா?” என்று கேட்டபடியே அவனின் முன் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

“அதுக்கும் தான்.. ஆனா அதை விட என் மேல உனக்கு இருக்கிற அக்கறையைப் புரிந்து கொள்ளாது, பல சமயம் நான் நடந்துக்குற விதத்துக்கும் சேர்த்துத்தான் இந்த மன்னிப்பு!” என்றான் கதிர் நேரடியாக, எந்தவித பூசி மொழுகலும் இல்லாது.

சின்ன வயசில் இருந்தே அவன் அனுபவித்த பலவித மனிதர்களின் ஒதுக்கங்களே, ஒரு கட்டத்தில், அவனை மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி வாழச் செய்து இருக்கிறது என்பது விளங்கப் பெற்ற வசந்த்துக்கு தெரியாதா? ‘இதில் தவறு என்பது நண்பனின் பேரில் மட்டுமில்லை, அவனை இவ்வாறு மாற்றி வைத்து இருக்கும் இந்தச் சமூகத்தின் மீது தான்’ என்று..

அது தெரிந்தும் எப்படி அவனால் நண்பனிடம் கோபத்தைக் காட்ட முடியும்?

சூழ்நிலை இறுக்கத்தை மாற்ற நினைத்த வசந்த், “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நீ இறக்கி விட்டுட்டுப் போனதுலயும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்தது” என்று குதர்க்கமாகச்  சொல்ல, அதைக் கேட்டுப் புரியாத கதிர், “என்ன நன்மை அது?” என்பது போல அவனைப் பார்த்து வைத்தான்.

அதைப் புரிந்து கொண்டவனும், “இத்தனை நாளா உன் தங்கச்சி எனக்கு ஒண்ணுன்னா ஓடி வருவாளான்னு ஒரு டவுட் இருந்தது. இன்னைக்கு அது கிளியர் ஆகிடுச்சு. நாளைக்கே அவுங்க அப்பா என்னோட மாறு கை மாறு கால் எடுக்க முற்பட்டா, என் செல்லம் ஓடி வந்து என்னைக் காப்பாத்திடிடுவான்ற நம்பிக்கை, இத்தனை வருஷத்தில் இன்னைக்குத்தான் எனக்கு வந்திருக்குன்னா பார்த்துக்கோயேன்!!” என்றவனின் பாவனையில் கதிர் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்து விட்டான்.

“அப்போ இத்தனை வருஷம் அந்த நம்பிக்கை இல்லாமல் தான் அவளைக் காதலிச்சுட்டு இருந்தியாடா?” என்றவனின் நக்கலில், “நீ வேற.. நானெல்லாம் சில வருஷம் உன் தங்கச்சி காதலிக்குறாளான்னு தெரியாமலே, தீவிரமா அவளைக் காதலிச்சவன், தெரியும்ல?” என்று இல்லாத பனியன் காலரை தூக்கி விட்டுச் சொன்னவனின் கெத்தைக் கேட்டவன், நண்பனை துப்பாத குறையாகத் துப்பினான், “இதெல்லாம் ஒரு பொழப்பாடா??” என்று.

“எங்களுக்கு இது தான் பொழப்பே பாஸ்!” என்று அசால்ட்டாக அதுக்கும் பதில் லுக் விட்டவனைக் கண்டு, “உன்னை எல்லாம் திருத்த முடியாதுடா!” என்று சொல்லிச் சிரித்தவனுக்கும், காலையில் இருந்த மன அழுத்தங்கள் எல்லாம் மறைந்து, அப்பொழுது தான் மனம் விட்டு நண்பனுடன் கலாய்த்துப் பேச ஆரம்பித்தான்.

இருவரின் பேச்சும் முடிந்து கதிர் அவனின் வீட்டை நோக்கிச் செல்ல, வாசல் வந்து விடைபெற்றுக் கொண்டு இருந்த நேரம் தான், அவனின் அலைபேசி அடித்தது.

அதை எடுத்துப் பார்த்தவனுக்கு, அதில் மின்னிக் கொண்டு இருந்த அன்னோன் நம்பரைக் கண்டு, ‘யாரா இருக்கும்? அதுவும் இந்த நேரத்தில்..’ என்ற எண்ணம் தோன்றினாலும், அதனை ஆன் பண்ணிக் காதுக்குக் கொடுத்தான் அவன்.

அழைத்தவர் எதுவும் பேசாது இருந்ததில் குழப்பமானவன், “ஹலோ!” என்றான்.

அப்பொழுதும்  மறுபுறமிருந்து எந்தவொரு பிரதிபலிப்பும் அவனுக்குக் கிடைக்காததில் எரிச்சல் கொண்டவன், அழைத்தவர் அழைப்பில் இருக்கிறாரா என்ற சந்தேகத்தில், போனை காதிலிருந்து எடுத்துப் பார்த்தவன், இன்னும் லைனில் தான் அவர் இருக்கிறார் என்பது புரிபடவும், அதை மீண்டும் காதுக்குக் கொடுத்து, “ஹலோ! யாருங்க? என்ன வேணும்? போன் பண்ணிட்டு இப்படிப் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” என்றான்.

அவனின் கறார் குரலைக் கேட்டு அதிர்ந்த மறுபக்கம் வெளிப்படுத்திய மூச்சு காற்றின் வேகத் தீண்டலை இந்தப் பக்கம் உணர்ந்தவனுக்கு,  உள்ளுக்குள் மின்னல் ஒன்று வெட்டியது.

இந்த முறை மிக நிதானமாக, முகம் ஆர்வத்தில் தத்தளிக்க, “ஹலோ யாருங்க?” என்றான் கதிர் மென்மையாக.

அவனின் கூற்றை பொய்யாக்காததைப் போல, “நா.. நான் தாமரை” என்றாள் நங்கை அவள்.

அந்தத் தடுமாற்றத்தில் தடுக்கி விழுந்தவனின் உள்ளத்திலோ, பலவித இடியோசைகள்!! தன் பெயரைச் சொல்லியும் ஒன்றும் பேசாதவனின் அமைதியில் கொஞ்சம் பதைபதைப்புக்கு உள்ளானவள், “ஹலோ! ஹலோ இருக்கீங்களா?” என்றாள் இந்த முறை.

“ம்ம்ம்.. இருக்கேன்.. சொல்லுங்க” என்றான் அவன்.

“என.. எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” என்றாள் அவள் கொஞ்சம் தயங்கிய குரலிலியே.

“உதவியா..? என்ன சொல்றா இவள்..?” என்று எண்ணிய போதும், கதிரிடமிருந்து, “என்ன செய்யணும்?” என்ற வார்த்தைகளே வெளிவந்தன.

“அது.. பாட்டிக்குக் கொஞ்சம் உடம்புக்கு முடியலை. ஹாஸ்பிடல் போகணும், வண்டி எதுவும் கிடைக்கலை” என்றவளின் குரலில் இருந்த கரகரப்பே, அவளின் துக்கத்துடன் கூடிய தனிமை போராட்டத்தைக் கதிருக்கு எடுத்துரைப்பதாக இருந்தது.

“எங்கே இருக்கீங்க இப்போ?” 

“நாங்க கீழ்ப்பாதை ரோட்ல இருக்கோம்” என்றவளிடம், “அங்கேயே இருங்க.. நான் இன்னும் பதினைந்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்று சொல்லி போனை அணைக்கப் போனவன், என்ன நினைத்தானோ, “நான் வரும் வரை பயப்படாம இருந்துடுவ தானே?” என்றும் கேட்டான் தாமரையிடம்.

அந்த வார்த்தைகள் தாமரையை உடைந்து அழ உந்தினாலும், உதட்டை கடித்து அதை அடக்கியவள், “ம்ம்ம்..” என்று மட்டும் சொல்லி போனை அணைத்து இருந்தாள் அவள்.

போனை வைத்த பின்னும், கதிர் சொன்ன வார்த்தைகள், அவளினுள்ளே ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தன. அதற்குக் காரணம், அவளின் அவ்வளவு நேர போராட்டங்களை, அது ஒரே நிமிடத்தில் களைந்து எறிந்தது போன்று தோன்றியதாலோ என்னவோ..??!!

ஆம்! அன்று வேலை விட்டு வீடு வரும் வரை பாட்டியின் இருமல் ஓயாததைக் கண்டவள், “காலையிலயே சொன்னேன், ‘இன்னைக்கு வேலைக்கு போக வேண்டாம். ஆஸ்பத்திரிக்கு போகலாம்’ன்னு.. கேட்டீங்களா பாட்டி? இப்போ பாருங்க.. இருமல் இன்னமும் அதிகமா இருக்கு” என்றாள். 

“அதெல்லாம் ஒன்னுமில்லடா.. இஞ்சி கசாயம் வச்சு குடிச்சா எல்லாம் சரி ஆகிடும்” என்றவரின் வார்த்தைகளை மறுக்க முடியாதவள், அவருக்கு அதைத் தாயார் செய்து கொடுத்தாள்.

அதை அருந்திய பின்பு இருமல் கொஞ்சம் மட்டுப்படுவது போல இருக்கவும், இருவரும் கொஞ்சம் நிம்மதியாயினர்.

“நான் இரவு உணவைத் தயார் செய்துட்டு உங்களைக் கூப்பிடுறேன். அதுவரை கொஞ்சம் படுத்து எந்திரிங்க பாட்டி” என்ற தாமரையின் பேச்சை மீறாது, அவள் விரித்துக் கொடுத்த பாயில் கட்டையைச் சாய்த்தார் ராஜம்மா.

அவரின் உடலும் அதைத்தான் வேண்டியது போல! படுத்தவர் உடனே கண்ணயர்ந்து விட்டார்.

ஒரு மணி நேரம் கடந்திருந்த வேளையில், லேசாக அவரிடமிருந்து ஒருவித முனகல் சத்தம் கேட்கவும், அவரை நெருங்கி நெற்றியைத் தொட்டுப் பார்த்த தாமரையின் கை சுட்டது.

‘ஐயோ! பாட்டிக்குக் காய்ச்சல் வந்திடுச்சு போலயே?’ என்று பதறிப் போனவளுக்கு, அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடனே பக்கத்துக்கு வீட்டு மல்லிகா அக்காவை அழைத்து வந்து பாட்டியைக் காண்பித்தாள்.

ராஜம்மாவை ஆராய்ந்து பார்த்தவர், “காய்ச்சல் அதிகமா இருக்கும்மா. இதுக்கு வீட்டு வைத்தியமெல்லாம் சரி ஆகாதும்மா. நீ உடனே பாட்டியை  ஆஸ்பத்திரிக்குக்  கூட்டிட்டுப் போறது தான் நல்லது!” என்று அவர் சொல்லவும்,

“நானா?” என்று தான் முதலில் அரண்டாள் தாமரை.

“நீங்களும் கூட வர்றீங்களா அக்கா?” என்றவளின் நிலை அறிந்த போதும், “பசங்க இன்னும் சாப்பிடலைமா. இப்போ தான் உலையே வைத்து இருக்கிறேன். அந்த மனுஷனும் இன்னும் வீடு வரலை. பசங்களைத் தனியா விட்டுட்டு என்னால எப்படிமா வர முடியும்?” என்று சொன்னவர், மேலும், “ஒன்னு பண்ணு.. சந்திரா அக்காவை வேணா கேட்டுப் பாரு!” என்றார்.

அவர் சொன்னவரிடம் கேட்க ஒரே ஓட்டமாக ஓடிச் சென்று அவர் வீடு சென்றவள், அவரைத் துணைக்கு அழைத்த போது, அவருக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவராலும் வர முடியாத சூழ்நிலை என்பதைப் புரிந்து கொண்டவள், அடுத்து அவர் சொன்ன இன்னொருத்தர் வீட்டுக்கும் சென்று பார்த்தாள். அவர் வீடோ பூட்டி இருந்தது.

அதைக் கண்டவுடனே தாமரைக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது. பகல் நேரமென்றால் கூடப் பரவாயில்லை! வெள்ளனமே எழுந்து காடு கரைக்கு வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், இரவு ஒன்பது மணிக்கெல்லாம், அந்த மொத்த ஊருமே, இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டுக்குள் அடைந்து விடும்.

அப்படி இருக்கும் பொழுது யாரைப் போய் எழுப்பி உதவி கேட்பது? என்று தெரியாது தள்ளாடிப் போனவளுக்கு தலையே சுற்றியது, தன்னுடைய கையாலாகாத நிலையை நினைத்தும், தனக்கென இல்லாது போன ஒரு துணையை நினைத்தும்..

குடிகாரனாக இருந்த போதும், தந்தை என்ற ஆண் துணை, தனக்கு எந்த அளவுக்குப் பக்கபலமாக இருந்தது என்பது அந்த நொடியில் தாமரைக்கு விளங்கியது.

அவர் இருந்த வரை, இது போல் ஒரு நாளும் அவள் யார் வீட்டு வாசலுக்கும் உதவி என்று சென்று நின்றதுமில்லை! இந்த அளவுக்குத் தனிமை பயத்தை உணர்ந்ததுமில்லை!

இன்று, அது இரண்டுமே, அவளை எந்தளவுக்கு அல்லாட வைக்கிறது என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

இப்படிக் கடந்த காலத்தில் மூழ்குவதால், நிகழ்காலத்தில் தனக்கு  ஆகப் போவது எதுவுமில்லை என்பது உணர பெற்றவள்,

கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்றவள், மல்லிகா அக்காவின் உதவியுடன், ரோட்டு பாதைக்குப் பாட்டியை கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தாள். அங்கிருந்து எப்படியாவது வண்டி ஏறி ஹாஸ்பிடலுக்குச் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாள்.

தன்னைச் சுற்றிச் சூழ்ந்திருந்த இருட்டும், ஆள் நடமாட்டமில்லாத மலை பாதையும் தாமரையை அதிகம் பயமுறுத்துவதாக இருந்தது. மிகப் பிரயேத்தனப்பட்டு ஏதாவது வண்டி வந்து விடாதா? என்று ரோட்டையே பார்த்து இருந்தவளுக்கு, கண்கள் பூத்துப் போனது தான் மிச்சம்! என்பது போல, ஒரு வண்டியும் அந்த நேரத்தில் அவள் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.

வந்த ஒன்றிரண்டு வண்டிகளை நிறுத்தி விசாரித்த போதும், அவளுக்குத் தோல்வியே கிட்டியது.

அப்படியும் அதில் ஒருத்தன் கூட்டிச் செல்வதாகச் சொல்லத்தான் செய்தான். ஆனால் அவன் சொன்ன விதத்திலும், அவன் அவளைப் பார்த்த காமப் பார்வையிலும் தாமரைக்குக் குலை நடுங்கிப் போனது.

இப்படி வண்டி கிடைக்காது தவித்தவளுக்குப் பாட்டியின் உடல்நிலை குறித்த கவலை அதிகமாகவும், “இன்னும் கொஞ்ச நேரம் பாட்டி.. இன்னும் கொஞ்ச நேரம் ஹாஸ்பிட்டல் போய்டலாம்” என்று அவருக்கு ஆறுதல் சொன்னவளைத் தேற்றத்தான் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லாது போயினர்.

ஒருவரும் இல்லாது நிர்க்கதியாக நடுரோட்டில் நின்று தவித்தவளுக்கு, அப்பொழுது தான், கதிர் சொன்ன வார்த்தைகள் அசரீரியாக வந்து காதிலும், மனதிலும் சேர்ந்து  ஒலித்தது.

“உனக்கென நான் இருப்பேன்!” என்று..

அது தோன்றிய மறுநிமிடம், மின்னல் வேகத்தில், எதைப் பற்றியும் யோசிக்காது, தன் பர்சில் வைத்திருந்த அவனின் அழைப்பேசி எண் எழுதி தந்திருந்த காகிதத்தைத் தேட ஆரம்பித்தாள் தாமரை.

அதைத் தேடி எடுத்தவள், பாட்டியின் போனில் இருந்து, நேரம் காலம் என்று எதைப் பற்றியும் யோசிக்காது, அவனுக்கு உடனே அழைப்பு விடுத்து விட்டாள்.

ஏதோ ஒரு உந்துதலில் கதிரை அழைத்து விட்டாள். ஆனால் அவனிடம் என்ன பேசுவது? எப்படி உதவி கேட்பது? என்று தடுமாறிப் போனவளுக்கு, அவன் அழைப்பை ஏற்கவுமே, அச்சத்தில் குப்பென உள்ளுக்குள் வேர்க்க ஆரம்பித்து விட்டது.

“யார் பேசுறது?” என்று குரலை உயர்த்திக் கதிர் கேட்கவும்,

“எங்கே தான் பேசாது போனால் போனை அணைத்து விடுவானோ?” என்ற எண்ணத்திலும், பாட்டியின் உடல்நிலை குறித்த கவலையிலும், தன் அச்சம் கடந்து, அவனிடம் உதவி கேட்டாள் தாமரை.

“உடனே வருகிறேன்!” என்றவனின் வார்த்தைகளை விட “பயப்படாம இரு!” என்று அவன் சொன்ன போது தான், தாமரைக்கு அவன் மீது என்னவென்று சொல்லவே முடியாத ஒரு உணர்வு, முதல் முதலில் தோன்றி அவளை அதனுள் கரைக்கவும் செய்தது.

தன் உணர்வில் அவள் கரைந்து கரையேரும் முன், அந்த இடத்திற்குத் தன் ஜீப்புடன் வந்து நின்றான் கதிர்.

தாமரையிடம் எந்தவித உரையாடலுமின்றி, கடமையே கண்ணாக, முதலில் பாட்டியைத் தூக்கி ஜீப்பின் பின்புறம் அமர வைத்தவன், கூடவே தாமரையையும் ஏற சொல்லி வண்டியை எடுத்தான்.

ஆஸ்பத்திரிக்கு அரைமணி நேரத்தில் சென்று சேர்த்தான். அங்கே பலவித செக்-அப்புக்களுக்குப் பின், பாட்டியின் நிலை குறித்துத் தாமரையிடம் ஒரு அறிக்கையைக் கொடுக்காத குறையாகக் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, “அதைச் செய்துடுங்க, இதை வாங்கிட்டு வாங்க” என்று அடுக்கடுக்காக அவளிடம் உரைக்கவும், பதட்டத்தில் அவள் கொஞ்சம் உறைய ஆரம்பித்தாள்.

அதில் என்ன செய்வது? என்று தடுமாறியவளின் விழிகள் கதிரைப் பார்க்கவுமே, அந்த விழிகளின் மொழி அறிந்தவன், உடனே அவள் அருகில் வந்து நின்றது மட்டுமில்லாது மருத்துவர்களிடமும், “இனி எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்” என்று கூறினான்.

“நீங்கள் யார்?” என்று மருத்துவர் அவனிடம் கேட்டார்.

ஏனென்றால் ராஜம்மாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்த போது, தான் அவருக்குப் பேத்தி என்று தாமரை சொல்லி இருந்தாள். அதன் பொருட்டுத்தான், அவளிடம் அனைத்தையும் மருத்துவர் கூறியதோடு சேர்த்துச் சில காகிதிங்களை நீட்டி, அதில் அவளைக் கையெழுத்துப் போட சொல்லியது.

மருத்துவர் நீட்டிய காகிதங்களைப் பார்க்கவுமே தாமரைக்கு உதறல் எடுப்பதைப் பார்த்துத்தான், கதிர் அவளுக்கு உதவ முன்வந்தது.

ஆனால் தன்னை யார் என்றும், நீங்கள் அவருக்கு என்ன உறவு? என்றும் மருத்துவர் அவனிடம் கேட்ட பொழுது, எங்கேயோ கதிருக்கு வலித்தது.

இந்த உலகத்தில், யாரிடமும் எந்தவித உறவு அடையாளமும் இல்லாதவன், அந்த இடத்தில் தன்னை எவ்வாறு அடையாளப்படுத்த முடியும் என்ற உணர்வில், கதிர் திண்டாடி வாய் திறவாது நின்ற நொடி..

அவனுக்கான பதிலை தன் பதிலாக, அவனுக்கும் சேர்த்து, மருத்துவரிடம் தாமரை தீர்க்கமாகக் கொடுத்தாள்.

அவளின் பதிலில் அப்படியே ஆடிப் போய் நின்று விட்டான் கதிர்!!

 

Advertisement