Advertisement

அத்தியாயம் 11

‘தாங்கள் கேட்டது நிஜமா?’ என்ற ரீதியில் உறைந்து போய் இருப்பவர்களைக் கண்டுகொள்ளாதவனாக அனாமிகாவிடம், “எனக்கு அந்தப் பொண்ணுகிட்ட தனியா பேசணும். உன்னால அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா முடியாதா?” என்று தான் முன்னே சொன்னதையே மீண்டும் ஒருமுறை அழுத்தம் கொடுத்துக் கேட்டான் கதிர்.

அவனின் அழுத்தத்தில் உணர்வு பெற்றவள், “கண்டிப்பா.. கண்டிப்பா அண்ணா.. உடனே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றாள்.

“என்னது? ஏற்பாடு செய்றியா?” என்று அவள் புறம் திரும்பி வசந்த் அதிர்ச்சியாகக் கேட்கவும், அவனை முறைத்தவள், “சும்மாவே இருக்க மாட்டியா எருமை?” என்று கொட்டினாள்.

வலியில் “ஐயோ அம்மா!” என்று வசந்த் அலறினான்.

அதில் அவனைப் பார்த்த மற்ற இருவரும் கண்களால் சுடவும், உஷாராகிப் போனவன், ‘ஹீ ஹீ’ என்று அசடு வழிந்து விட்டு, “ப்ளீஸ்! யூ கன்டினியூ கன்டினியூ” என்றான்.

ஆர்வக்கோளாறில், “நான் இப்போவே போய் தாமரையைப் பார்த்து உங்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்றேன் அண்ணா” என்றவாறு அங்கிருந்து கிளம்ப, அனாமிகாவைத் தடுத்து நிறுத்தினான் கதிர்.

“இல்ல, இப்போ வேண்டாம். அல்ரெடி லன்ச் டைம் முடிய போகுது. அதுமட்டுமில்லாம வொர்க்கிங் ஹவர்ஸ்ல பெர்சனலா பேசுறது, எனக்குச் சரியா படலை. சோ பெட்டெர் வேலை முடிந்ததும் நாங்க சந்திக்க ஏற்பாடு பண்ணு. அதுவும் உன்னோட கேபின்ல..” என்றவனின் நொடி நேர சிந்தனையைக் கண்டு வசந்த் வாயடைத்துப் போனான்.

“யப்பா! என்னாமா சிந்திக்குறான்யா இவன்..?! நாம கூட இப்படியெல்லாம் இதுவரை யோசிச்சதே கிடையாதே!” என்று எண்ணியவன், ‘அது சரி! அந்தளவுக்கு மூளை இருந்தா, நாம ஏன் இன்னும் இவுங்க அப்பனைப் பார்த்து பம்மிக்கிட்டு இருக்கப் போறோம்?” என்று எண்ணிக் கொண்டு சைடு வாக்கில் அனாமிகாவை ஒரு லுக் விட, கதிரிடம் ஓகே சொல்லி விட்டுத் திரும்பியவளின் பார்வையும் அதைக் கண்டு விட்டதில், என்னவென்று கேட்டாள் அவள் கண்ணசைவில்.

“ம்ம்ம்கூ..ம் அப்படியே என்னனு சொல்லிட்டா மட்டும் உடனே என் கூட டூயட் பாட ஓடி வந்துடுவ பாரு!” என்று உள்ளுக்குள் கடுப்பாகிப் போனவன், வெளியில், “ஒண்ணுமில்லை டார்லிங்.. ஒண்ணுமே இல்லை” என்று சமாளித்துச் சொன்னான்.

“இவன் முழிக்கிற முழியே சரியில்லையே? ஏதோ நம்மளைத் திட்டி இருக்கான். இல்லைன்னா இப்படிப் பம்ம மாட்டானே?!” என்று எண்ணியவள், “வெளியே வாடா.. உனக்கு இருக்கு..” என்று சத்தமில்லாமல் வாயசைத்து எச்சரித்தாள்.

அதைப் பார்த்துத் திருட்டு முழி முழித்த வசந்த், “ஆஹா.. கண்டுபிடிச்சுட்டா போலயே? அய்யய்யோ! இனி இதை வச்சே இன்னும் ஒரு வருஷத்துக்குக் கல்யாணத்தைத் தள்ளிப் போடுவாளே?” என்று நினைத்து நொந்து போனான்.
எப்படியாவது அந்நேரம் காதலியை டைவர்ட் பண்ண எண்ணியவன், நண்பனின் புறம் திரும்பி, “அந்தப் பொண்ணுகிட்ட என்ன பேசப் போற?” என்றான் வசந்த்.

தனக்கே தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் என்னவென்று பதிலளிப்பான் கதிர்? அதன் பொருட்டு, “ம்ச்! தெரியலை!” என்றான் உண்மையை மறைக்காது.

“என்னது தெரியலையா? அப்புறம் எதுக்கு இந்த மீட்டிங்?” என்று கேட்டான் வசந்த்.

அதே கேள்வி அனாமிகாவினுள்ளும் எழுந்து இருந்ததால், கதிரின் பதிலை வேண்டி, அவளும் அவனையே தான் பார்த்து இருந்தாள்.

“எனக்கு அந்தப் பொண்ணுகிட்ட பேசணும்ன்னு தோணுது. அது ஏன்னு எல்லாம் தெரியலை. ஆனா பேசணும், அவ்ளோதான்!” என்றவனின் பேச்சைக் கேட்ட வசந்துக்கோ, “என்ன மாதிரி பதில் இது?” என்ற எண்ணமே மேலோங்கியது.

அதில் அவன் மேற்கொண்டு ஏதோ கேட்க வாயைத் திறக்கும் முன், அவனின் கையைப் பிடித்து அழுத்தி, அவனை நிறுத்தி இருந்தாள் அனாமிகா.

‘ஏன்?’ என்றவாறு வசந்த் அவளைத் திரும்பி ஏறிடவும், ‘வேண்டாம் கேட்காதே!’ என்றவாறே மறுத்துக் கண்ணசைத்தாள் அனாமிகா.

“சரி, நாங்க கிளம்புறோம். ஈவனிங் உங்களுக்கு கால் செய்றேன்” என்று சொல்லிக் கிளம்பியவள், கையோடு வசந்தை அழைத்துக் கொண்டு சென்றாள்.

கதிரின் அறையை விட்டு வெளியேறியவுடன், “ஏய்! இப்போ எதுக்கு என்னைப் பேச விடாம இப்படி இழுத்துட்டு வர?” என்றான் கதிர்.

காதலனின் கையை விடுவித்தவள், ”நீ அவரைக் கேள்வி கேட்கிறது இருக்கட்டும்.. முதலில் எனக்கு ஒரு பதில் சொல்லு! உள்ளே என்னைப் பார்த்து எதுக்கு இளிச்ச?” என்றவளின் கேள்வியில் திடுக்கிட்டுப் போனவன், பேந்த பேந்த முழித்தான்.

அவனின் மாட்டிக் கொண்ட பாவனையைக் கண்டவள், “அப்போ என்னை ஏதோ திட்டி இருக்க, அப்படித்தானே?” என்று உறுதி குரலில் கண்களைச் சுருக்கிப் பொசுக்கவும், அந்த அனலில் அரண்டவன் அமைதியாக விழிப்பதைக் கண்டவள், “என்னை மட்டும் தான் திட்டுனியா இல்லை எங்க அப்பாவையுமா?” என்று இழுக்கவுமே..

“ஏய்! ஏய்! ஸ்டாப்.. ஸ்டாப்.. என்ன பேச்சுப் பேசுற..? உங்க அப்பாவைத் திட்ட நான் என்ன முட்டாளா? அவர் எவ்ளோ நல்லவர்!” என்று பேச்சுக்கும், பாவத்துக்கும் சம்மந்தமே இல்லாது பேசியவனைக் கண்டு முறைத்தவள்,

“அப்போ என்னைத் திட்டினதை ஒத்துக்குற, அப்படித்தானே?” என்றதும் தான் தாமதம்! ”ஹா.. ஹா.. வகையா மாட்டிக்கிட்டோம் போலயே.. இப்போ எப்படி எஸ்கேப்பாவது?” என்று வசந்த் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே, அவனைக் கடந்து ஒருவர் செல்வதைக் கண்டவன், உடனே பாய்ந்து அவரைப் பிடித்து நிறுத்தி, “ஹலோ கோபால்! எப்படி இருக்கீங்க?” என்று அவரின் முதுகைத் தட்டி நிறுத்திக் கேட்டான்.

அதற்கு அவர் ஏதோ பதில் சொல்லும் முன், “ஓஹ்ஹ.. மீட்டிங்க்கு கிளம்பிட்டீங்களா? இருங்க, நானும் வரேன்” என்று அவரிடம் சொன்னவன் திரும்பி, “அர்ஜென்ட் மீட்டிங்மா.. நாம அப்புறம் பேசுவோமா?” என்று அங்கிருந்து தப்பித்து ஓட நினைத்தவனின் முதுகை சொறிந்தவர் அங்கேயே, “சார்! நான்.. நீங்க.. கோபால் இல்லை சார்!” என்றார் அப்பாவியாக.

அதைக் கேட்டு அனாமிகாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அதோடு விட்டு இருந்தால் கூடப் பரவாயில்லை! “சார்! நான் அவசரமா போகணும், கிளம்பட்டும்மா?” என்றார் அவர்.

போன மானத்தை எப்படியாவது காதலி முன் காப்பாற்றி விட எண்ணிய வசந்த், “ஓஹ்ஹ.. சாரி! பார்க்கக் கோபால் மாதிரி இருந்தீங்களா? அதான் கொஞ்சம் கன்ப்யூஸ் ஆகிட்டேன். எனிவே நீங்க அவசரமா போற மீட்டிங்குக்குத்தான் நானும் கிளம்பிட்டு இருந்தேன். வாங்க, சேர்ந்தே போகலாம்” என்றான் வசந்த்.

அதைக் கேட்டவரோ, “சார்! என் அவசரம் புரியாமல் இப்படி உளறிக்கிட்டு இருக்கீங்களே? என்னை விடுங்க சார். நான் அவசரமா போகணும்” என்று மீண்டும் வலியுறுத்திச் சொன்னார். அதைக் கேட்டவனும் விடாப்பிடியாக, “என்னைய்யா அவசரம்? இருய்யா.. நானும் வரேன்” என்று அவரை வம்படியாகப் பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தான். 

“சார்! விடுங்க சார்.. இல்லன்னா நிஜமாவே இங்கயே இருந்துடுவேன்” என்று கால்கள் இரண்டையும் பாம்பாக பின்னிக் கொண்டு, போலி கோபால் நெளிவதைக் கண்டவனுக்கு, அப்பொழுது தான் அவனின் உண்மை நிலை புரிய,

“அடக்கடவுளே! பாத்ரூம் போகப் போனவனை நிறுத்தியா நாம மீட்டிங் பேசிக்கிட்டு இருந்தோம்?” என்று எண்ணி, தன்னைத்தானே மானசீகமாகத் தலையில் கொட்டிக் கொண்டவனிடம், “சார்! எப்போ சார் என்னை விடுவீங்க?” என்றவனின் தோளில் இருந்து தன் கையை எடுத்த வசந்த், “முதல்ல கிளம்புயா இங்கே இருந்து..” என்றான் அவரை விட அவசரமாக.

‘தப்பித்தோம் பிழைத்தோமென்று’ அங்கிருந்து ஓடுபவரைக் கண்ட அனாமிகாவுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அதைக் கண்ட வசந்த்துக்குத்தான் ஐயோவென்று இருந்தது.

காதலியை ஓரப்பார்வை பார்த்தவன், “நிஜமாவே எனக்கு ஒரு அர்ஜென்ட் மீட்டிங் இருக்கு” என்று போன மானத்தில் கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும் பொருட்டாக அவன் சொல்ல, “எங்கே பாத்ரூமிலா?” என்று அசால்ட்டாகக் கேட்டு அனாமிகா அவனின் மூக்கை உடைத்தாள்.

“கிரேட் இன்சல்ட்!!” என்று எண்ணியவனோ, “அதான் சொதப்பிடுச்சுன்னு தெரியுதுல.. அதையே சொல்லிக் காட்டணுமா?” என்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வசந்த் கேட்கவும், அவ்வளவு தான்..!! உள்ளுக்குள் உருகி விட்டாள் அனாமிகா.

இந்த இன்னொசன்ட் குணத்தில் தானே அவனிடம் காதல் கொண்டு, அவனை நினைத்து அனுதினமும் கரைந்தும் கொண்டு இருக்கிறாள் அவள்.

“சோ ஸ்வீட்!” என்று காதலனின் கன்னத்தைப் பிடித்து அனாமிகா கிள்ளிச் சொல்லவும், அவளை மயக்கும் பார்வை பார்த்தான் வசந்த்.

‘இதுக்கு மேல் இங்கே நின்னா அது சரிவராது!’ என்று காதலனின் பார்வை மாற்றத்தைக் கண்டு சுதாரித்தவள், “எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்” என்று தன் கேபின் நோக்கி நடந்தே ஓடினாள்.

அவள் செல்வதையே கண்டு புன்னகைத்தவன், “எவ்ளோ நாள் இந்த ஓட்டம்னு நானும் பார்க்கிறேன்” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவனும் தன் வேலையைப் பார்க்கச் சென்றான்.

மாலை நேரம் நெருங்க நெருங்க கதிரினுள் லேசாக புயல் அடிக்க ஆரம்பித்து இருந்தது.

“பேசணும்” என்று சொல்லி விட்டான் தான்!

‘ஆனால் என்ன பேசப் போகிறோம்? ஏது பேசப் போகிறோம்?’ என்று எண்ணி எண்ணியே, அவனால் எந்த வேலையிலும் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட முடியாமல் போயிருந்தது.
அதனாலேயே மதியத்தில் இருந்து தன்னறையில் தன்னைத்தானே முடக்கிக் கொண்டு இருந்தான் கதிர்.

‘இப்போ அப்போ’ என்று போராடிக் கொண்டு இருந்தவனின் போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவது போல, மேஜையின் மீது இருந்த அவனின் அலைபேசியில் இருந்து மெசேஜ் டோன் வெளிப்பட்டது.

அதையெடுத்துப் பார்த்தவனுக்கு, “தாமரைகிட்ட பேசிட்டேன். அவளை அழைத்துக் கொண்டு என்னோட கேபினுக்குத்தான் போயிட்டு இருக்கேன்” என்ற குறுந்தகவலை அனுப்பி இருந்தாள் அனாமிகா.

மாலையில் வேலை முடிந்து பெரும்பாலோர் வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்த நேரம், ராஜம்மாவுடன் கிளம்பின தாமரையை நோக்கி அவசர அவசரமாக சென்ற அனாமிகா, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும். என் கூட வரீயா?” என்று அவளிடம் கேட்டாள்.

‘திடீரென்று தன் முன் வந்து நிற்பவள் யார்?’ என்று அலுவலக ரீதியாக அறிந்து இருந்த போதும், ‘தன்னிடம் இவுங்களுக்குப் பேச என்ன இருக்கு?’ என்று எண்ணித் தயங்கி நின்ற தாமரையை, ராஜம்மா தான், ‘போம்மா.. போய்ப் பேசிட்டு வா. நான் வெளியே காத்திருக்கிறேன்” என்று சொல்லி அனுப்பி இருந்தார்.

ஏனென்றால் அவருக்குத்தான் அனாமிகா – கதிரின் பாச உறவு எப்படி என்று தெரியுமே? அதனாலேயே ‘சோழியும் குடுமியும் சும்மா ஆடாதே?’ என்ற எண்ணத்தில், ‘ஏதோ ஒரு விதத்தில்  இந்தச் சந்திப்பு  தாமரைக்கு நல்லதைச் செய்தால் சரி!’ என்று தாமரையிடம் போய்ப் பேசி விட்டு வரும்படி சொன்னார் அவர்.

‘எங்கே ஆயிரம் கேள்வி கேட்டுத் தாமரை தன்னை  சூழ்நிலை கைதியாக்கித் திண்டாட வைத்து விடுவாளோ?’ என்ற எண்ண அலைக்கழிப்புடன் தான் அனாமிகா அவளைச் சந்திக்க வந்தது.

ஆனால் அதிகம் அவளைச் சிரமப்படுத்தாமல் தன்னுடன் அனுப்பி வைத்த ராஜம்மாவுக்கு, அந்நேரம் மனதார ஒரு நன்றியை உரைத்து விட்டு, அங்கிருந்து நடையைக் கட்டியவளுடன் சேர்ந்து நடந்து கொண்டு இருந்தாள் தாமரை.

தாமரையை ஒரு  இருக்கையைக் காட்டி அமரச் சொல்லி விட்டு, தன்னிருக்கையில் வந்து அமர்ந்தவளின் விழிகளோ, வெளிவாயிலிலே சிறைபட்டு இருந்தது.

அதைக் கண்டு “என்ன பேசணும் மேடம்?” என்றாள் தாமரை.

“அது.. அது..” என்று அவளிடம் பதில் சொல்ல முடியாது அனாமிகா கொஞ்சம் திணற ஆரம்பித்த நேரம், அவளைக் காக்கும் ஆபத்பாந்தவனாக அங்கே வந்து சேர்ந்து இருந்தான் கதிர்.

அவனின் வருகையைக் கண்டு தன்னிருக்கையில் இருந்து எழுந்து நின்ற அனாமிகாவைத் தொடர்ந்து தாமரையும் எழுந்து நின்றாள்.

“இல்ல, நீங்க உட்காருங்க” என்று அவளிடம் அனாமிகா சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளின் அருகில் கதிர் வந்து இருந்தான்.

அவனைச் சுட்டிக் காட்டி, “அண்ணா, உங்ககிட்ட ஏதோ பேசணும்ன்னு சொன்னாங்க. அதான் உங்களை இங்கே அழைத்து வந்தேன். நீங்க பேசுங்க, நான் வெளியே இருக்கிறேன்” என்று தாமரை அடுத்து எதுவும் கேட்க வாய்ப்பே கொடுக்காதவாறு, அங்கிருந்து வெளியேறி இருந்தாள் அனாமிகா.

அங்கே கதிரைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்து போனாள் தாமரை.
“என்ன பேசப் போறாங்க..? இனி பேச என்ன இருக்கு எங்களுக்குள்?” என்று பலவித குழப்பங்களுக்கும், கேள்விகளுக்கும் இடையில் தவித்தவளின் முகம் வெளிறி வேர்க்க ஆரம்பித்தது.

“இப்போ எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற? முதலில் உட்கார்!” என்றான் கதிர் மிகச் சாதாரணக் குரலில்.

“இல்ல, நீங்க சொல்லுங்க.. நேரமாச்சு, நான் கிளம்பணும்” என்று வார்த்தைகளில் தந்தி அடித்தாள் தாமரை.

அதற்கு, “கிளம்பலாம்.. கிளம்பலாம்.. பின்ன இங்கேயே இருந்து ரெண்டு பேரும் குடும்பமா நடத்த முடியும்?” என்றவனின் வார்த்தைகள் அவனுக்கே மிகவும் புதிது!

இப்படியெல்லாம் கதிர் இதுவரை யாரிடமும் சகஜமாகப் பேசியது கிடையாது. அவ்வளவு ஏன்? அனாமிகாவிடம் கூடக் கொஞ்சம் அளந்து தான் பேசுவான்.

அவன் தன் இயல்பை மீறி கொஞ்சம் அதிகமாகப் பேசக் கூடிய ஒரே ஆள் வசந்த் மட்டுமே!

அதனால் தானோ என்னவோ, தாமரையிடம் வெளிப்படுத்தி இருந்த இந்த இயல்பான பேச்சு, கதிருக்கே கொஞ்சம் ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. அதை அவனுமே உதிர்த்த பின்னே தான் உணர்ந்தான்.

‘எப்படி இந்தப் பெண்ணிடம் மட்டும் எந்தவித தடைகளுமின்றி என்னால் பேச முடிகிறது?’ என்று தள்ளாடிக் கொண்டு இருந்தவனுக்கு அதற்கான விடை கிட்டாத போதும், அந்நேரம் ஒருவித நிறைவை உணர்ந்தான் கதிர்.

ஏற்கனவே கதிரின் வருகையில் தவித்துப் போய் நின்று இருந்தவளின் இதயம், இப்பொழுது கதிரின் பேச்சைக் கேட்டு, மத்தளம் கொட்டாத குறையாகக் கொட்டித் தீர்த்ததில் தாமரை அதிகமாக அரண்டு போனாள்.

அவளின் மிரட்சியைக் கண்டவன், தன் பேச்சின் தாக்கம் புரிந்து, “மன்னிச்சுடு!” என்றான் எந்தவித ஈகோவுமின்றி.

முந்தைய பேச்சில் இருந்து இன்னமும் விடுபட முடியாதிருந்தவளுக்கு, கதிரின் தற்பொழுதைய வார்த்தைகள், இன்னும் அவளுக்கு அழுத்தம் கொடுக்கவும், “ஐயோ! எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்குறீங்க?” என்றாள் தன்னிச்சையாகவே தாமரை.

அவளுக்கு அந்நேரம் ஒரு விஷயம் மட்டும் மிக நன்றாகப் புரிந்தது, தனக்கு முன்னால் இருப்பவன் ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு விதத்தில், தன்னைப் பாதிக்கிறான் என்று.

தாமரையின் அவசர அவசரமான வார்த்தைகளைக் கேட்டவனின் இதழோ, மின்னல் கீற்றாக, புன்னகைத்துக் கொண்டது. அது மறையாமலேயே “உட்காரு!” என்றவனின் வார்த்தையை மறுக்க முடியாதவளாக, இம்முறை இருக்கையின் ஓரத்தில் அமர்ந்தவளின் சங்கடம் புரிந்த போதும், அதைக் குறித்து கேள்வி எழுப்பாது நேராக விஷயத்துக்கு வந்தான் கதிர்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுக்கான காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றவனிடமிருந்து, இப்படி ஒரு கேள்வியை முன்னமே எதிர்பார்த்து இருந்தவளுக்கு, அது ஒன்றும் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்து விடவில்லை போல..!! உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முன்னமே இதை எதிர்பார்த்தாள் தாமரை.

ஆனால் அப்படி ஒன்று நடக்காததை விட, இப்படி ஒரு விஷயம் தங்களுக்குள் நிகழ்ந்தது போன்றே காட்டாது, தன்னைப் பார்க்க நேர்ந்த சில நேரங்களில் கதிர்  நடந்து கொண்ட போது தான், தாமரைக்கு மண்டையே வெடித்தது. ‘இவுங்க தான் தன்னை மணக்கக் கேட்டார்களா?’ என்று..

இருந்தும் அதை அவனிடம் கேட்கும் துணிவு இல்லாதவளுக்கு, அந்தச் சூழ்நிலையே பெருத்த நிம்மதியைக் கொடுக்கவும், தொடர்ந்து எந்தவித சங்கடமுமின்றி அங்கு வேலை செய்ய ஆரம்பித்து இருந்தாள் தாமரை.

அவள் அறியாதது என்னவென்றால், எந்த விதத்திலும் தன்னைக் கண்டு தாமரை சங்கடப்பட்டு விடக் கூடாது என்றெண்ணியே, மிகப் பிரயத்தனப்பட்டு, கதிர் அவளிடம் இயல்பாக நடந்து கொள்ள போராடினான் என்று..

இன்றும் கூட அவன் அவனுக்காக அவளிடம் பேச முயலவில்லையே? அவளுக்காகவும் சேர்த்துத்தானே பேச நினைத்தான்?!

கதிரின் கேள்வியை உள்வாங்கியவள், எந்தவித தடுமாற்றமும் இன்றி, “உங்களைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், வேண்டாம்ன்னு நான் சொல்லவே இல்லையே? எனக்கு இப்போ  கல்யாணம் வேண்டாம்ன்னு மட்டும் தான் நான் சொன்னேன்” என்றவளின் வார்த்தைகளில் தெரிந்த தெளிவைக் கண்டு ஒரு நிமிடம் கதிரே ஆச்சரியப்பட்டுப் போனான்.

தாமரையின் பதிலில் நெஞ்சத்தில் குற்றாலச் சாரலை உணர்ந்தவன், “அப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதம், அப்படித்தானே?” என்றான் குளிர்ந்த குரலில்.

அதைக் கேட்டு பேய் முழி முழித்தவள், “இல்லை.. அப்படியில்லை..” என்ற மறுப்புடன் அங்கிருந்து ஓடத் துடித்தவளாக, இருக்கையை விட்டு எழ முயன்றதைக் கண்டவன், “உட்காரு!” என்றான் தீர்க்கமாக.

சொல் பேச்சு கேட்டு அமர்ந்தவளிடம், “சரி, கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றதுக்கு உனக்கு ஒரு காரணம் இருக்கும் தானே? அதையாவது என்கிட்ட சொல்லலாமே?” என்று கொஞ்சமும் கட்டளையிடாது கேட்டவனின் மென்மையில் பெண்ணவள் கரைந்து தான் போனாள்.

“எனக்கு.. எனக்குச் சில பிரச்சனைகள் இருக்கு. அதையெல்லாம் சரி பண்ணிட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்” என்று தலை நிமிராது சொன்னவளின் பேச்சைக் கேட்டவன்..

“அதை நான் சரி பண்றேன்” என்றான் அதிரடியாக. அதில் ஆடிப் போனவள், கண்கள் விரிய ஒரு முறை கதிரை உள்ளார்ந்து பார்த்தவள், மீண்டும் தரை தாழ்ந்து, “நீங்க எதுக்குப் பண்ணனும்? இது என்னோட பிரச்சனை! அதை நானே பார்த்துக்குறேன். உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்?” என்றாள்.

“அது சிரமமா இல்லையான்னு நான் தான் சொல்லணும்.. நீயில்லை..” என்றவனின் பேச்சில் ஒருவித அழுத்தம் இருந்தது. அது தாமரைக்குக் கொஞ்சம் இதத்தைக் கொடுத்தது போல! ஒரு நிமிடம் அதில் மூழ்கிப் போனவள், தானாகவே தன்னை மீட்டுக் கொண்டு. “இது விதண்டாவாதம்! நான் போறேன்” என்றாள், அவனுக்காகவே அவனை வேண்டாம் என்ற விதமாக.

“நில்! இன்னும் நான் பேசி முடிக்கலை” என்றான் கதிர்.

அவள் நின்ற போதும் திரும்பவில்லை. “நீ உன் பிரச்சனைக்காக, கடனுக்காக என்னை வேண்டாம்ன்னு சொல்றதா இருந்தா, அப்படிச் செய்யாதே!” என்றான்.

“பின்ன.. வேறு எதற்காக இவ்வளவு நல்லவரை நான் வேண்டாமென சொல்ல முடியும்?” என்று எண்ணி ஆயாசமடைந்தவள்..

“அதைத் தவிர என்னிடம் வேற காரணமில்லை” என்றாள் தாமரை.

“அது எல்லாம் ஒரு காரணமே இல்லை!!” என்றவனின் தொடர் வாதத்தைக் கேட்டவள்,

“எனக்காக நீங்க எதுக்குக் கஷ்டப்படணும்? அதுக்காகத்தான் சொல்றேன்.. இந்தக் கல்யாணப் பேச்சைப் பற்றி இனியும் நாம பேச வேண்டாம்” என்றாள் கெஞ்சல் குரலில்.

‘சின்ன வயசில் இருந்தே எதுக்காகக் கஷ்டப்படுறோம் என்று தெரியாமலேயே நான் நிறையக் கஷ்டப்பட்டு இருக்கேன். அதனால கஷ்டம் ஒன்னும் எனக்குப் புதிது இல்லை!” என்றவனின் குரலில் இருந்த ஏற்ற இறக்கத்தில் தவித்துப் போனாள் தாமரை.

கதிர் யாருமில்லாத அனாதை என்று அவள் அறிவாள் தான்! ஆனால் அதை அவன் வாயால் கூறும் பொழுது, ஏனோ, அவனை விட அவளுக்கு அதிகமாக வலித்தது.

“அதனால தான் நானும் சொல்றேன். இனியாவது சந்தோஷமா இருங்க. என்னைக் கல்யாணம் செய்துகிட்டு ஏன் இன்னமும் கஷ்டப்படணும்ன்னு நினைக்குறீங்க?” என்றவளின் அக்கறை அவனுக்கு இனித்தது.

“இந்தக் குணத்தால் கூட இருக்கலாம்..?!” என்றவனின் உண்மையில், அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் தன் விழிகளை அசராது கலக்க விட்டான் கதிர்.

அவனின் விழி வீச்சைத் தாங்காது வேறு புறம் பார்வையை வீசியவள், “நீங்க என் மேல பரிதாபப்பட்டு எனக்கு வாழ்க்கை கொடுக்க நினைக்கிறீங்க. அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டாம். வேற யாருக்காவது அதைக் கொடுங்க!” என்றவளின் பிடிவாதத்தைக் கண்டு சற்றுச் சினம் கொண்டான்.

அவளைப் பிடித்து இழுத்து, தனக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தி, அவளின் விழியோடு விழி கலந்து, “என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு??? போற வர்றவங்களுக்கு எல்லாம் வாழ்க்கை கொடுக்கிறது தான் என் வேலையா?” என்றவனின் கடுகடுப்பில் ஜெர்க்காகிப் போனவள்,

“இல்ல, நான் அப்படிச் சொல்ல வரலை” என்றவளின் உள்ளே போன குரலிலும், அவளின் மேனி தடதடப்பில் இருந்தும், அவளின் அச்சத்தை உணர்ந்தவன், அவளைச் சட்டென்று தன்னிடமிருந்து விடுவித்து விட்டு, “இங்கே பாரு!” என்றான்.
அதில் அவனின் முகத்தை அவள் காணவும்,

“உனக்கு வாழ்க்கை கொடுக்க நான் ஒன்னும் கடவுள் இல்லை.
அப்படியே கொடுக்குறதா இருந்தா, நீ தான் எனக்கு வாழ்க்கை கொடுக்கணும்” என்றவனின் பேச்சு விளங்காது பார்த்தவளிடம், “என்ன புரியலையா? உன்னையாவது கல்யாணம் பண்ணிக்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா பாரு! என்னைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் இங்கே யாருமில்லை!

அப்படிப் பார்த்தா நீ தான் எனக்கு வாழ்க்கை கொடுக்கணும்” என்றவன் விடாது, “கொடுப்பியா??” என்றான் ஆர்வமும், ஆசையும் நிறைந்த குரலில். அதைக் கேட்டு விக்கித்துப் போனவளுக்கு அந்நேரம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

கதிரை மணக்க ஒரு மனம் துள்ளுகிறது என்றால், மறுமனமோ, ‘வேண்டாம்! அவனுக்கு உன்னால் கஷ்டம் வேண்டாமெ’ன்று அதை அடக்குகிறது. இதில் எதைக் கேட்டு அவள் முடிவெடுப்பாள்?

தன் முன் இருப்பவளின் கண்ணாடி முகத்தில் இருந்தே அவளின் போராட்டம் அறிந்தவன்,

“ஒன்னும் அவசரமில்லை.. கொஞ்சம் யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லு!” என்றவன், “ஒருவேளை உன் முடிவு மாறலைன்னா.. நான் என்னை மாத்திக்குறேன். உன்னை எந்தவிதத்திலும் இனி தொந்திரவு பண்ண மாட்டேன்!” என்றவனின் வாக்கில் அவனை வாஞ்சையாகப் பார்த்தவள், பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்று போனாள், அங்கிருந்து செல்ல வேண்டும் என்பதையே மறந்து..

அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டவன், கொஞ்சமாக அவளை நெருங்கி, “உனக்கு எப்பவும், எந்த நேரத்திலும் முழுத் துணையா நான் இருப்பேன். அது எனக்குச் சுமை இல்லை, சுகம் தான்! ஏன்னா என்னுடைய உலகத்தில், எனக்கான முதல் உறவே, நீ தான்!!” என்றான் உருக்கும் குரலில்.

“உன்னுடைய பதிலுக்காக நான் காத்திருப்பேன்!” என்றவனின் வார்த்தைகளில் உருகிப் போனவள்,

தன்னுடைய மாற்றங்களை அவன் கண்டு விடும் முன், அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவளின் இதயம் நுழைந்த அவனின் வார்த்தைகள், அவள் வீடு செல்லும் வரை அவளினுள் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருந்தது.

‘சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு. இனி முடிவு அவள் கையில்!’ என்று எண்ணினாலும், ஏனோ கதிரின் மனம் தாமரையின் முடிவு என்னவாக இருக்கும் என்பதிலே தான் சுற்றிச் சுழன்று கொண்டு இருந்தது.

இரவு உணவினை கூடச் சரியாக உண்ணாது, ஒரு தோசையுடன் எழுந்து கைக் கழுவி விட்டு நேராக படுக்கைக்குச் சென்று படுத்தவனை, உறக்கம் தான் வந்து தழுவுவேனா? என்று சத்திராவி பண்ணிக் கொண்டு இருந்தது. நெடு நேர அலைக்கழிப்புகளுக்குப் பின், எப்பொழுது தூங்கினோம் என்று தெரியாத நிலையிலேயே தான் அன்று கதிர் உறங்கி இருந்தான்

Advertisement