Advertisement

அத்தியாயம் – 10

“நான் சொல்றதைக் கேளு வசந்த்.. அவசரப்படாத… நில்லு!” என்ற அனாமிகாவின் குரல் பின்னிருந்து ஒலிப்பதைக் கொஞ்சமும் செவிமடுக்காது, கதிரின் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று நின்றான் வசந்த்.

நண்பனின் வருகை கொடுத்த சத்தத்தில், அவனை நிமிர்ந்து பார்த்தவனைக் கடுகடுப்புடன் நோக்கியவனின் பார்வையின் அர்த்தம் புரியாது, அவனுக்குப் பின்னே வந்த அனாமிகாவை நோக்கினான் கதிர்.

அவளின் முகத்திலோ ஒருவித சங்கட ரேகைகள். அதைக் கண்டவனுக்கு எப்பொழுதும் போல், ‘இருவருக்குள்ளும் நடக்கும் காதல் சண்டை போல’ என்ற எண்ணம் தோன்றவும், குனிந்து பார்த்துக் கொண்டு இருந்த பைலில் மீண்டும் பார்வையைப் பதித்தபடி, “இந்த முறை என்ன பஞ்சாயத்து உங்களுக்குள்ள?” என்று கேட்டான்.

“பிரச்சனையே நீ தான்!!” என்ற வசந்தின் கோப உச்சரிப்பில் தலை உயர்த்திய கதிர், அவனைப் புரியாத பார்வை பார்க்கவும், “நான் தெரியாம தான் கேட்கிறேன்… உன்னால மட்டும் எப்படி இப்படித் தலையிலே இடியே விழுந்தாலும், இவ்ளோ அமைதியா இருக்க முடியுது?” என்றான். அவனுக்குக் கதிர் பதிலளிக்கும் முன்,

“போதும் வசந்த்! இத்தோடு நிறுத்திக்க… இது என் அண்ணாவோட பர்சனல், அதில் நீ தலையிடாதே!” என்று அவன் முன் வந்து நின்று எச்சரித்தவளிடம், “நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?” என்றபடி எகிற ஆரம்பித்தான் வசந்த்.

“இப்படி நாம அவன் பர்சனல், போர்சனல்ன்னு சொல்லி சொல்லித்தான் அவன் இப்படி இருக்கான்” என்று மீண்டும் வசந்த் அதே வார்த்தைகளை உதிர்க்கவும்,

கதிருக்கு கொஞ்சம் எரிச்சல் மூண்டது, “நாம அப்படி என்ன செய்தோம்?” என்று..

அதனால், “ரெண்டு பேரும் உங்க சண்டையை நிறுத்திட்டு இங்கே எதுக்கு வந்தீங்கன்னு சொல்றீங்களா? இல்ல இங்கிருந்து கிளம்புறீங்களா?” என்றவனின் வார்த்தைகளே அவனின் பொறுமையின்மையை வெளிப்படுத்த போதுமானதாக இருக்கவும்,

அதுவரை துள்ளிக் கொண்டு இருந்த வசந்த் கூட ஒரு நிமிடம் அமைதியாகிப் போனான் நண்பனின் சத்தத்தில்.

அனாமிகாவுக்கோ, ‘இதுக்கே இப்படி டென்ஷன் ஆகுறாங்களே? வசந்த் பேசப் போகும் விஷயம் தெரிந்தால் நான் செத்தேன் இன்னைக்கு!!’ என்ற எண்ணம் கொடுத்த பதைபதைப்பில், அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வேர்க்க ஆரம்பித்தது.

அதன்பொருட்டு அங்கிருந்து ஓட எண்ணியவள் காதலனிடம், “அண்ணாவுக்கு அதிகமா வேலை இருக்கு போல! இந்த விஷயத்தைப் பத்தி  நாம அப்புறம் பேசலாம், இப்போ கிளம்பலாம் வா!” என்று வசந்தின் கைப் பிடித்து இழுத்துப் பார்த்தாள்.

எங்கே அவன் ஒரு அடி நகர்ந்தால் தானே..?

“ஏதோ இவள் சொல்லப் போய் அந்தப் பொண்ணைப் பத்தி தெரிஞ்சது. இல்லைன்னா நானும் உன்னை மாதிரி தான், இன்னமும் அந்தப் பெண்ணை நல்ல பொண்ணுன்னு நினைச்சுட்டு இருந்து இருப்பேன்” என்றவன் ஆத்திரம் அடங்காது மேலும், “உன்னை வேணாம்னு சொல்ல அவளுக்கு என்ன தகுதி இருக்கு?” என்று நண்பனை நிராகரித்ததில் தாமரையைக் குறித்து பொரும ஆரம்பித்தான் வசந்த்.

அடுத்து என்ன என்ன சொல்லி அவளைத் திட்டித் தீர்த்து இருப்பானோ? அதற்குள் “போதும் நிறுத்து!” என்று அவனை அடக்கி இருந்தான் கதிர்.

நண்பனின் குரல் உயர்வில் இருந்தே அவனின் குணம் அறிந்தவனுக்கோ, இன்னமும் தாமரையின் மீதான கோபம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

பின்ன.. ‘எந்தச் சூழ்நிலையிலும் ஒரு பெண்ணையும் இழிவாக பேசக் கூடாது என்று நினைக்கும் இவனைப் போய் வேண்டாம் என்று சொல்லி விட்டாளே அவள்?’ என்ற ஆதங்கம் அவனுக்கு.

வசந்தின் பேச்சுக்கள் அனைத்தும் தன் மீதான அன்பின் வெளிப்பாடே என்று புரிந்து, ஒரு நிமிடம் கண் மூடி  தன்னைத்தானே கட்டுக்குள் கொண்டு வந்த கதிர்,

“என் மேல இருக்கிற அன்பில் அந்தப் பொண்ணை எதுக்கு இழிவா பேசுற வசந்த்? எந்தப் பெண்ணுக்கும் அவர்கள் வாழ்க்கை குறித்து முடிவு எடுக்கும் முழு சுதந்திரம் உண்டு.

அதை வைத்து அந்தப் பெண்ணைப் பற்றி விமர்சிப்பது தவறு… அதை நீ செய்யாத!” என்று அழுத்தமாக நண்பனிடம் சொன்னவன், அனாமிகாவை முறைத்தான்.

“இவனிடம் ஏன் சொன்னாய்?” என்பதாக..

“சாரி!” என்று அவள் கண்களால் கெஞ்சவும், மனம் இரங்கிப் போனவனிடம், அப்போதும் விடாது பேசிக் கொண்டு இருந்தான் வசந்த்.

“நீ என்ன சொன்னாலும்… உன்னோட தகுதிக்கு எல்லாம் நீ அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதே பெரிய விஷயம்! அதை கூடப் புரிஞ்சுக்க தெரியலை. அவ்ளோ முட்டாளா என்ன அந்தப் பெண்?” என்ற நண்பனை உற்றுப் பார்த்த கதிர்,

“என் தகுதி என்னன்னு உனக்குத்தான் மறந்து போச்சு வசந்த்” என்றான் ஆழ்ந்த குரலில்.

அதைக் கேட்டவன் சற்று நிமிர்வாகவே, “உன் தகுதிக்கு என்ன குறைச்சல்டா? பார்க்க ராஜாவாட்டம் இருக்க… கைநிறைய சம்பாதிக்குற… ஒரு கெட்ட பழக்கமும் இல்லை… இதை விட ஒரு பெண்ணைக் கட்டிக்க என்ன தகுதி வேணுமாம்?” என்றான்.

அதைக் கேட்டு விரக்தி புன்னகை ஒன்றைச் சிந்தியவன், “அதையெல்லாம் விடப் பெத்தவங்க யாருன்னு தெரிஞ்சு இருக்கணும் போல!” என்றவனின் வார்த்தைகளில் மற்ற இருவரும் சங்கடப்பட்டுப் போயினர்.

சாதாரணமாகக் கதிர் எதற்கும் உணர்ச்சி வசப்படுபவன் இல்லை. அப்படிப்பட்டவன் இன்று இவ்வாறு பேசுகிறான் என்றால், அதற்குக் காரணம் அவனின் கல்யாணம் குறித்த பெண் வீட்டாரின் தொடர் மறுப்புகளா? அல்லது தாமரை மீதான அவனின் நம்பிக்கை பொய்த்துப் போனதாலா? என்று நண்பன் குறித்து வேதனை கொண்ட வசந்த்,

‘அது எதுவா வேணா இருந்து விட்டுப் போகட்டும். நான் இருக்கேன்டா உனக்கு!’ என்ற விதமாக எழுந்து கதிரின் அருகில் வந்து அவன் தோள் அணைத்துக் கொண்டவன், “லூசு மாதிரி பேசாதே! இது எல்லாமா ஒரு தகுதி?” என்றான்.

“பின்ன இல்லையா?” என்று தலை நிமிர்த்தி நண்பனைப் பார்த்துக் கேட்ட கதிர்,

“அந்தத் தகுதி இல்லைன்னுதானே, இதுக்கு முன்னாடி பார்த்த ஏழு பெண்களின் பெற்றோர் என்னை வேண்டாம்ன்னு சொன்னாங்க. அதை நீ தான் மறந்துட்ட போல!” என்றான்.

“அதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்?”

“எல்லாத்துக்கும் ஒரே சம்மந்தம் தான்டா. நான் அனாதை! என்னை நம்பிப் பெண் கொடுக்கவோ, என்னோட வாழவோ யாருக்கும் இஷ்டமில்லை” என்றவனின் அழுத்தங்களே அவனின் மன இறுக்கத்தை  வெளிப்படுத்துவதாக இருந்தது.

இந்த முறை அனாமிகா மனம் தாளாது, “முன்ன சொன்னவங்களைப் பற்றி எனக்குத் தெரியாது அண்ணா. ஆனா தாமரை அப்படி நினைக்கக் கூடிய ஆள் இல்லை” என்று அடித்துச் சொன்னதில், கதிர் அவளை ஆழ்ந்து பார்த்தான் என்றால்..

வசந்தோ “வெட்டவா குத்தவா” என்று அவளைப் பார்த்து வவிட்டு “என்ன அப்படியில்லை? எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான்!” என்று வெறுப்பாகச் சொல்லி விட்டு மீண்டும் நண்பனின் புறம் திரும்பியவன், “இதை இப்படியே விடக் கூடாது… முதலில் நீ கொடுத்த பணத்தை திருப்பிக் கேளுடா! அப்போதுதான் உனக்குத் தகுதி இல்லைன்னு நினைச்சவங்களோட தகுதி என்னன்னு இந்த ஊருக்கே தெரிய வரும்” என்றான் நெஞ்சம் பொறுக்காதவனாக.

அவனின் அவசர உளறலைக் கேட்டு, “என்ன பணம் அது?” என்று வினவினாள் அனாமிகா.

வசந்தை முறைத்த கதிர், “அது ஒன்னுமில்லை.. அவன் ஏதோ உளறிக்கிட்டு இருக்கான், விட்டுத் தள்ளு!” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டு, “யாரு நானு?” என்று அவனிடமே அப்பாவியாகக் கேட்டு வைத்தவன்,

காதலியைப் பார்த்து, “ஆமா.. ஆமா.. சாரு சொல்றதை மட்டும் கேளு…

ஏன்னா சார் யார் தெரியுமா???” என்று விடுகதை போட்டவன், பின் அவனாகவே அதன் விடைகளையும் ஒவ்வொன்றாக அவிழ்க்க ஆரம்பித்தான்.

“யாரு என்னன்னே தெரியாத ஒரு பொண்ணு அனாதையாகிப் போனான்னு தெரிஞ்சு, அவள் மானம் காக்க, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொடுத்த வள்ளல் ஆச்சே..??

அது மட்டுமா? எங்கே தான் கொடுத்தால் அவள் சங்கடப்பட்டு வாங்காமல் போய்டுவாளோ? இல்லை கொடுத்தது தான் தான் என்று தெரிந்தால், இந்த ஊர் உலகம் தங்கள் இருவரையும் முடிச்சு போட்டுப் பேசி அந்தப் பெண்ணை வதைத்து விடுமோ? என்ற எண்ணத்தில்..

ஆபீஸ்ல இருந்து கடனா கொடுத்தாங்கன்னு சொல்லி, உங்க அப்பா மூலம் அந்தப் பெண்ணுக்கு உதவிய உத்தமராச்சே இவர்!!” என்று நண்பனை சுட்டிக் காட்டி எகத்தாளமாகச் சொன்னான் வசந்த்.

அவனின் பேச்சைக் கேட்டு விழிகள் விரிய அதிர்ந்து போனாள் அனாமிகா.

ஏனென்றால் அவளிடம் இந்த விஷயங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு இருந்தன. அதற்குக் காரணமும்  கதிர் தான்.

அவனைப் பொறுத்தவரை ‘தான் ஒருவருக்கு உதவுவது யாருக்கும் தெரிய வேண்டாம். முக்கியமாகத் தான் உதவும் அந்தப் பெண்ணிற்கு கூட’ என்று எண்ணியவன், அதையே தான் ராமமூர்த்தியிடம் சொல்லியிருந்தான்.

அதனால் தான் அவரும் தன் மகள் மனைவியிடம் கூட அதுபற்றி மூச்சு விடாது இருந்தார்.

வசந்திற்கு கூடக் கதிர் தெரியப்படுத்த எண்ணவில்லை. சூழ்நிலை தான் அவனுக்குத் தெரியும்படி செய்திருந்தது.

ஆம்! அன்று பாட்டியும் தாமரையும் நாளையுடன் பணத்தை திருப்பிக் கட்ட வேண்டிய கெடு முடிகிறது என்ற அச்சத்தில், கதிரைத் தேடி அவனின் அறை வந்த நேரம், அங்கே வசந்தைச் சந்தித்துத் திரும்பி இருந்தனர்.

இவர்களுக்கும் கதிருக்கும் இடையில் என்ன ஓடுகிறது? ‘அதுவும் அந்தப் பாட்டி மற்றும் அந்தப் பெண்ணின் முகமே சரியில்லையே?’ என்று எண்ணியவாறு, அன்று இரவு கதிரிடம் அவர்கள் வந்து சென்ற விஷயத்தைப் பற்றிச் சொல்ல, அவனின் வீட்டிற்குச் சென்றான் வசந்த்.

அங்கே ஹாலில் பேங்கில் இருந்து எடுத்து வந்திருந்த பணத்தை, மீண்டும் ஒரு முறை எண்ணி வேறு ஒரு பையில் கதிர் அடுக்கிக் கொண்டு இருந்த நேரம் தான், வசந்த் அங்கே வந்தது.

அவ்வளவு பணத்தை கதிர் பையில் வைப்பதைப் பார்த்தவன்,

“இந்தப் பணம் எடுக்கத்தான் ஆபிஸுக்கு லீவ் போட்டுட்டுப் போய் வந்தியா?” என்று கேட்டான் அவனிடம்.

நண்பனின் திடீர் வருகையையும், அவனின் கேள்வியையும் கேட்டு கொஞ்சம் ஜெர்க் ஆனவன், பின் சமாளித்து, பையை மூடி எடுத்துக் கொண்டு, “அப்புறம் உன்கிட்ட பேசுறேன்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து  வெளியேற முயன்ற நேரம்..

“டேய் நில்லுடா… இவ்ளோ பணத்தை எடுத்துட்டுத் தனியா இந்த அர்த்தராத்திரி எங்கே போற?” என்று கேட்க,

“ஒரு முக்கியமான விஷயமா வெளியே போகணும். நீ எதுக்கு வந்த? அதைச் சொல்லு!” என்றவனின் குரலிலேயே ‘சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பு!’ என்ற அவசரம் இருக்கவும்,

தாமரையும், பாட்டியும் அவனைத் தேடி வந்த விஷயத்தைக் கதிரிடம் சொன்ன நொடி, நண்பனின் முகத்தில் வந்த மாற்றங்களை வசந்த் நன்றாகவே கவனித்து இருந்தான்.

“ஓஹ்ஹ் அப்படியா?” என்று கூறி விட்டு மீண்டும் அங்கிருந்து நகர முயன்ற நண்பனை மீண்டும் தடுத்த வசந்த்,

“என்கிட்ட உண்மையைச் சொல்லு! இவ்ளோ பணத்தை எதுக்கு பேங்கில் இருந்து எடுத்துட்டு வந்து இருக்க? அந்தப் பாட்டிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று ‘ஒன்றும் ஒன்றும் ரெண்டு’ என்று முடிவு பண்ணிக் கேட்டவனின் புத்திசாலித்தனத்தில் ஒரு நிமிடம் சமைந்து போனான் கதிர்.

இந்த விஷயம் பற்றி யாரிடமும் சொல்ல கதிருக்கு விருப்பமில்லாத போதும், இப்பொழுது சொல்ல வேண்டிய சூழ்நிலையில் அவன் மாட்டி இருப்பதை புரிந்து கொண்டு, வேறுவழியின்றியே வசந்திடம் உண்மையை உரைத்தான் கதிர்.

அதைக் கேட்ட வசந்த், “இதை எதுக்கு ஆபீஸ் லோன்னு சொல்ற? உன்னோட பணம்ண்ணே அந்தப் பொண்ணுகிட்ட சொல்லலாமே?” என்று தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.

“இந்த விஷயத்தை அவளிடம் தான் மறைக்க நினைப்பதே அவளுக்காகத்தான்டா” என்று மனதின் ஆழத்தில் நினைத்துக் கொண்டவன், அதை அப்பொழுது வெளிப்படுத்த நினையாது,

“நான் கொடுத்தா அந்தப் பெண் வாங்க ரொம்பத் தயங்குவா. எனக்குத் தெரிஞ்சு அந்தப் பொண்ணுக்குத் தன்மானம் அதிகம்டா…” என்றான்.

அதைக் கேட்டு அதிசயித்துப் போனவனோ, “என்ன ஒரு ஆச்சரியம்?!! ஒரு  பெண்ணைப் பற்றி இவ்ளோ கெஸ் பண்ணி வச்சு இருக்கியே? தேறிட்ட நண்பா நீ…” என்றான் கிண்டலாகச் சிரித்தபடி. அந்தப் புன்னகை கதிரையும் கொஞ்சம் தொற்றி இருந்ததில் அவனின் முகமும் பிரகாசம் கொண்டது.

“சரிடா, பணத்தைத்தான் உன்னோடதுன்னு தெரியப்படுத்த விரும்பலை. ஆனா இதை நீயே அங்கே கொண்டு போய்க் கொடுக்கலாமே? எதற்கு அங்கிள்கிட்ட கொடுத்து அனுப்புற?” என்றவனின் அடுத்த கேள்விக்கு,

“நான் அங்கே போறது சரியா வரும்ன்னு எனக்குத் தோணலைடா” என்றவன்,

“நீ யோசிச்சு பாரு.. ஒரு வயசு பையன், வீடு தேடிப் போய் பணம் கொடுத்தா, அதை இந்த ஊரும் உலகமும் முடிச்சுப் போட்டுப் பேசுமா பேசாதா?

ஊரை கூட விடு! நம்ம பாக்டரியிலேயே இந்தப் பணம் விஷயம் தெரிந்தா, உடனே எங்க ரெண்டு பேரையும் இணைச்சுத் தப்பா பேச மாட்டாங்களா?” என்றவனின் கூற்றில் இருக்கும் அர்த்தம் விளங்கியதால், “நீ சொல்றதும் எல்லாம் சரி தான்டா” என்றான் வசந்த்.

அதன்பின்பு வசந்த் அங்கிருந்து புறப்படவும், நேராகப் பணத்தை எடுத்துக் கொண்டு ராமமூர்த்தி இல்லம் சென்ற கதிர், நாளை அவனுக்காகச் செய்ய வேண்டிய உதவியை அவரிடம் கேட்டான் சிறு தயக்கத்துடனே. அவனின் பேச்சில் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுப் போனவர்,

அதன்பின் அவன் சற்றுத் தயங்கி தயங்கிச் சொன்ன அடுத்த செய்தி கேட்டு, மயங்கி விழாதது ஒண்ணுதான் குறை!! என்பது போல ஆனார்.

“என்னப்பா சொல்ற? நிஜமாவா? உனக்காக அந்தப் பெண்ணைக் கேட்கணுமா?” என்று முன்னே உயர்ந்த புருவங்கள் இன்னமும் இறக்காது அவர் கேட்டார்.

மிகச் சாதாரணமாக, “ஆமாம்” என்றான் கதிர்.

‘யார் அந்தப் பெண்? இருவருக்குள்ளும் எத்தனை நாள் பழக்கம்?’ என்ற எண்ணங்கள் அலை அலையாக அவருள் எழுத்தாலும், அதை முன்னே இருப்பவனிடம் கேட்க முடியாது தவித்தார் ராமமூர்த்தி.

அவரின் தவிப்புகளைப் படித்தவனோ மிகச் சுருக்கமாக, “அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் எந்த ஒரு சம்மந்தமுமில்லை, பழக்கமுமில்லை. இரண்டு முறை எதேர்ச்சையாக சந்தித்து இருக்கிறேன், அவ்வளவு தான்!” என்றான் அவன்.

“கொஞ்சமும் அறிந்திடாத ஒரு பெண்ணை எதன் அடிப்படையில் உனக்கானவளாகத் தேர்ந்தெடுத்த கதிர்? எப்படி அந்தப் பெண்ணை நம்பி இவ்ளோ பணத்தைக் கொடுக்கிற? ஒருவேளை அந்தப் பெண் உன்னைக் கல்யாணம் செய்துக்க ஒத்துக்கலை என்றால்?” என்றவரின் பேச்சைக் கேட்டவன்,

மிக நிதானமாக, “முதல்ல ஒரு விஷயத்தை உங்களுக்குப்  புரிய வைக்க நினைக்கிறேன். நான் கொடுக்கிற பணத்துக்காக அந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பலை. இதையும் அதையும் தயவு செய்து முடிச்சுப் போடாதீங்க!

இந்தப் பணத்தை அந்தப் பெண்ணின் கஷ்டத்திற்காகக் கொடுக்க நினைக்கிறேன், அவ்வளவு தான்!

அடுத்துத் திருமணம் எனக்காகப் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்” என்று அவரின் எல்லா கேள்விக்கும் அங்கேயே முற்றுப்புள்ளி வைத்தவன்..

“அப்புறம் முக்கியமா இன்னொரு விஷயம்..” என்று சொல்லி நிறுத்தவும், ‘அது என்ன?’ என்ற விதமாக ராமமூர்த்தி அவனையே பார்த்தார்.

“எந்தக் காலத்திலும் இது என்னுடைய பணம்ன்னு அந்தப் பெண்ணுக்கோ, இல்ல வேற யாருக்கோ எந்தச் சூழ்நிலையிலும் தெரியக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்” என்றவனின் பேச்சின் உறுதியில் தானாகவே ராமமூர்த்தியின் தலை, “சரிப்பா” என்ற விதமாக ஆடினாலும், அதையும் மீறி அவரின் முகத்தில் தாண்டவமாடும் குழப்ப ரேகையைக் கண்டான் கதிர்.

அதன் அர்த்தம் அறிந்தவன், “அந்தப் பெண்ணும் அனாதை, நானும் அனாதை. அந்த ஒரு தகுதியே போதும்னு நினைக்கிறேன், நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கவும் சந்தோஷமா வாழவும்” என்றான் மிகத் தெளிவான குரலில். அந்த வார்த்தைகளின் வலிமையில் அவனை நிமிர்ந்து பார்த்தவருக்குள் முந்தைய குழப்பங்கள் நீங்கித் தெளிவு வெளிப்பட்டது.

அதில் முகம் மலர, “நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்குக் கட்டாயம் அமையும் கதிர்” என்று அவனின் தலை தொட்டு ஆசீர்வதித்தவரின் வாக்கைக் கேட்டவனுக்கும் ஒருவித சந்தோஷமே உண்டானது.

இன்முகமாக, “நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தான் கதிர்.

அவன் சென்ற பின் அனாமிகா, “என்ன விஷயம்?” என்று தந்தையிடம் கேட்டதற்கு, “நாளை தாமரை வீட்டுக்குப் பணம் கொடுக்கச் செல்கிறோம்” என்று சொன்னார்.

அதைக் கேட்டவளுக்கோ, ‘அது எப்படி,  புதிதாக அதுவும் இன்னும் நிரந்தர பணியில் அமர்த்தப்படாத ஒருவருக்கு, ஆபீஸில் கடன் கொடுத்தார்கள்?’ என்ற எண்ணம் எழுந்த போதும்… அதையும் மீறி தன் தந்தைக்கும் முதலாளிக்கும் இடையேயான நட்பறிந்தவளுக்கு, ‘அந்த ஏழை பெண்ணுக்காக அப்பா எதுவும் சிபாரிசு பண்ணி இருப்பாராக இருக்கும்’ என்று மட்டுமே நினைத்தாளே தவிர, அப்பொழுது கூட அந்தப் பணம் கதிர் உடையதாக இருக்கும்  என்று அவள் எண்ணவே இல்லை.

இந்த நொடி, அந்தப் பணம் மட்டுமில்லாது கதிரின் குணத்தையும் சேர்த்து  அறிந்தவளுக்கு, என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

வாயடைத்துப் போய் நின்று  இருந்தவளின் மனதினில் அந்நேரம் தாமரை மற்றும் கதிர் குறித்து எழுந்த எண்ணம் ஒன்றே ஒன்று தான்!! ‘எப்படிப்பட்டவர்கள் இவர்கள் இருவரும்?’ என்ற ஆச்சரியம் மட்டுமே..

அவளுக்குத்தானே தெரியும் கதிரைப் போலவே தாமரையும் எவ்வளவு உயர்வானவள் என்று..

அது தெரிந்தும், அந்தப் பேதையின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்துத் தான், அவ்வளவு நேரமும் தன் நாவை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள் அவள்.

வசந்த் சொன்ன விஷயம் கேட்டு, ‘அது உண்மையா?’ என்று  தன்னிடம் அனாமிகா கேட்காத பொழுதே… அதை முழுதாக அவள் நம்பி விட்டாள் என்று தெரிந்து கொண்ட கதிருக்கு நண்பனின் மீது எரிச்சல் தான் உண்டானது.

“நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன் வசந்த், இந்த விஷயம் வெளியே தெரியக் கூடாதுன்னு.. அப்படி இருந்தும் நீ இன்னைக்கு இதைப் பற்றி பேசி இருக்க” என்றவனின் பேச்சுக்கு எல்லாம் அடங்குபவனா அவனின் நண்பன்??

“யப்பா சாமி! நீ வேணா எது நடந்தாலும் புத்தன் போல் அமைதியா  இரு! நானெல்லாம் மனுஷன்பா. என்னால எல்லாம் உன்னை மாதிரி இருக்க முடியாது.

எங்கே உன் நெஞ்சை தொட்டுச் சொல்லு! அந்தப் பொண்ணு மறுத்ததில் உனக்கு வருத்தமில்லைன்னு..” என்று கேட்டவனின் பேச்சுக்குக் கதிரிடம் பதிலில்லை.

அவனைப் பொறுத்தவரை பெண் வீட்டாரின் மறுப்பு ஒன்றும் அவனுக்கு புதிது இல்லை தான். ஆனால் ஏனோ தாமரையின் மறுப்பு அவனைக் கொஞ்சம் அலைக்கழித்ததைப் போல் அவனும் அறிவான் தானே?

அதில் கதிர் பேசாதிருக்கவுமே, இன்னும் அவனிடம் தாமரை குறித்துத் திட்டிப் பேசி எகிற ஆரம்பித்தான் வசந்த்.

அவனை அடக்க அனாமிகாவும், கதிரும் முயற்சித்த போதும் அவன் அடங்கவில்லை.

ஒரு கட்டத்தில் தாமரை குறித்த வசந்தின் பேச்சு எல்லை மீறி போகவும், “உனக்கு என்னடா தெரியும் அந்தப் பெண்ணைப் பற்றி?” என்று அவனின் சட்டையை பற்றிக் கொண்டு உக்கிரமாகக்  கேட்டாள் அனாமிகா.

அவளின் வார்த்தை தடிப்பில் ஆண்கள் இருவரின் பார்வையும் தன் மீது அழுத்தமாகப் பதிவதைக் கண்டு, ‘அச்சோ!’ என்று தன்னைத்தானே மானசீகமாகக் கொட்டிக் கொண்டவள், சுதாரிப்பவளாகத் தான் பற்றி இருந்த வசந்தின் சட்டையை விடுவித்தபடியே, “எந்தப் பெண்ணையும் பற்றித் தப்பா பேசக்கூடாதுல.. அதான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்” என்றாள் சமாளிப்பாக.

‘நீ சொன்னதை நாங்கள் நம்பவில்லை’ என்பதாக முதலில் பேசிய வசந்த், “நான் எல்லா பெண்ணைப் பற்றியும் எதுவும் தப்பா சொல்லலையே? ஒரு பெண்ணைப் பற்றித்தானே சொன்னேன்” என்று இடக்காகக் கேட்டுத் தன் காதலியை விழி பிதுங்க வைத்தான் என்றால்..

இன்னொரு புறமோ, “அவனுக்குத் தெரியலைன்னா அப்போ உனக்கு அந்தப் பெண்ணைப் பற்றி என்ன தெரியும்?” என்று கத்தியாக வார்த்தைகளை அவளை நோக்கி வீசினான் கதிர்.

இருபுற தாக்குதலில் சிக்குண்டவள் திக்கித் திணறி, “நான் பொதுவா தான் அப்படிச் சொன்னேன்” என்று சொல்லி இளித்துச் சொன்னாலும், ஆண்களின் பார்வையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

காதலியைப் பார்த்தபடியே, “மச்சான்! உன் தங்கச்சி இவ்ளோ கேவலமா சிரிச்சு இதுக்கு முன்னாடி நீ பார்த்து இருக்க?” என்று வசந்த் கதிரிடம் கேட்க,

அவனோ, “என்னது மச்சானா?” என்று வியந்து அவனைப் பார்க்கவும்,

“இப்போ இதுவா முக்கியம்? நம்ம உறவை அப்புறம் ஒழுங்கு படுத்திப்போம். இப்போ அந்தரத்தில் தொங்குற உன் உறவை பற்றித் தெரிந்து கொள்வோமா??” என்று அவனிடம் சொல்லவும், ‘அதுவும் சரிதான்’ என்று எண்ணியவனுக்குமே தாமரை பற்றி அறிய வேண்டிய உந்துதல் இருந்ததால், அவனின் பார்வை அனாமிகாவைத் துளைத்தது.

“எங்களுக்குத் தெரியாத தாமரை குறித்த விஷயம் எதுவோ ஒன்னு உனக்குத் தெரிந்து இருக்கு. இல்லைன்னா நீ இவ்ளோ கோபமா அவன் சட்டையைப் பிடித்து இருக்க மாட்ட” என்ற கதிரிடம் முடிந்த வரை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்ற விதமாகச் சமாளிக்கப் பார்த்தாள் அனாமிகா.

ஆனால் வசந்த் விடுவானா? “சரி, எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லு!” என்று அவன் கேட்கவும்,

என்னவென்று அவள் பார்த்து வைத்தாள்.

“நீ உங்க அண்ணன் மேல எவ்ளோ பாசம் வைத்து இருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதோட சேர்த்து உன் குணமும் தெரியும்.

சாதாரணமா அவனை வேண்டாம்ன்னு பெண் வீட்டில் சொன்னாவே, சண்டைக்கோழி போல் எகிறி பறந்து பறந்து அந்தக் குடும்பத்தைப் பத்தி கழுவி கழுவி ஊத்துவ.

அப்படியிருக்கும் போது தாமரை விஷயத்தில் மட்டும் ஆரம்பத்தில் இருந்து பெட்டி பாம்பாவே இருக்கியேமா? அது மட்டுமில்லாம இப்பவும் இப்படி ஜகா வாங்குறியேம்மா??? எங்கேயோ இது இடிக்குதே..!!

அது எப்படின்னு மட்டும் எங்களுக்குக் கொஞ்சம் சொல்லு செல்லம்!” என்றவனின் கொஞ்சலில் கண்டாகிப் போனவள்,

‘அச்சோ! நைசா பேசி பவுசா விஷயத்தைக் கறக்கப் பார்க்கிறானே?’ என்றெண்ணியவள், “அது.. அது..” என்று ஜவ்வு போல் இழுத்தாளே தவிர, பதில் எதுவும் சொல்லாமல் இருக்கவும்,

“அதைத்தான் சொல்லுன்னு சொல்றோம்மா” என்று வசந்த் நக்கலடிக்கவும், ‘சொல்ல முடிஞ்சா சொல்ல மாட்டேனாடா? அது முடியாம தானே தவிக்கிறேன்’ என்று எண்ணியவளுக்கு, அந்நேரம் பார்த்துத் தந்தையுடனான உரையாடல் நியாபகத்திற்கு வந்து போனது.

தாமரை வீட்டுக்கு சென்று வந்த பின் அவளின் பதில் குறித்து  ராமமூர்த்தி விஜயாவிடம் சொன்னவுடன், அவர் புலம்பிய புலம்பலில் தான், அனாமிகாவுக்கும் கதிரின் சம்மந்தம் பற்றிய விஷயம் தெரிய வந்தது.

வசந்த் சொன்னது போல, தாமரையின் பதிலில் அனாமிகா அவளை வார்த்தைகளால் உண்டு இல்லை என்று திட்டித் தீர்க்கவும், ஒரு நிலையில் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத ராமமூர்த்தி உண்மையை மகளிடம் போட்டுடைத்து விட்டார்.

அதைக் கேட்டவளுக்கு, தான் பேசிய வார்த்தைகளை நினைத்து மிகவும் சங்கடமாகப் போய் விட்ட அதே சமயம், தாமரையின் மீதான அன்பும் பல மடங்கு பெருகிப் போனது.

அப்படிப்பட்ட பெண்ணின் உயர்ந்த குணம் புரியாது, வசந்த் அவளின் கண் முன்னேயே தாமரையை தரைக்குறைவாகப் பேச முற்படுவதை அனாமிகாவால் எவ்வளவு நேரம் தான் சகித்துக் கொண்டு ஊமையாக நிற்க முடியும்?

அதனால் தான் அவள் தன்னையும் மீறி அப்படி வாயை விட்டு விட்டு இப்படி அல்லாடிக் கொண்டு இருக்கிறாள்.

தந்தையின் வாயிலாகத் தாமரையின் கோரிக்கையை அறிந்தவள், எப்படி அவரின் சொல்லையும் மீற முடியும்? என்ற எண்ணத்தில் அமைதியை தன் ஆயுதமாக எடுத்துக் கொண்டு திருதிருத்து நின்றாள்.

வசந்த் அவளிடமிருந்து உண்மையை அறிய ஒருபுறம் பொறுமையாக  போராடிக் கொண்டு இருந்தான் என்றால், மறுபுறமோ அவனின் பொறுமை தன்னிடம் இல்லை என்பது போல், தன் இருக்கையை விட்டு எழுந்து அனாமிகாவைக் குத்திக் கிழிக்கும் பார்வையுடன் அவள் முன் வந்து நின்றான் கதிர்.

அவனின் செயலில் ஆடிப் போனவள், அவன் கண் பார்க்க முடியாது குனிய முற்படவும், “எனக்கு உண்மையை நீ சொல்றியா இல்லை நானே தெரிஞ்சுக்கட்டுமா?” என்று அவளிடம் அதிரடியாகக் கேட்கவும்.

அதிர்ந்து அவனை நோக்கியவள், ‘அவன் தெரிஞ்சுக்கட்டுமா?’ என்று சொல்வதிலிருந்தே விஷயம் தன் தந்தையிடம் செல்ல போகிறது என்று புரிந்து, அவளின் நெஞ்சுக்குழி ஏறி இறங்கியது பயத்தில்.

கதிரை தந்தையிடம் அனுப்பி அவரை சங்கப்படுத்துவதை விட, ‘நாமே உண்மையை சொல்லி விட்டால் இந்த விவாதம் இங்கேயே முடிந்து விடும். தாமரையின் குணமும் இவர்களுக்குத் தெரிந்து விடும்’ என்று எண்ணியவள்,

தொண்டையைச் செருமிக் கொண்டுஃ ஆண்களை அதிகம் காக்க வைக்காது அவர்களின் கேள்விக்கான பதிலைக் கொடுக்க ஆரம்பித்தாள்

“நீங்க நினைக்கிற மாதிரி அந்தப் பொண்ணு ஒன்னும் அண்ணாவை வேணும்ண்ணே வேண்டாம்ன்னு சொல்லலை.

தன்னால், தன்னுடைய சூழ்நிலையால் எந்த விதத்திலும் அண்ணாக்கு ஒரு கெட்ட பெயரோ இழிவோ வந்திட கூடாதுன்னு தான் இந்த கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லி இருக்கா” என்று கூறியதோடு, அன்று தாமரைக்கும் தன் தந்தைக்குமிடையே நடந்த உரையாடலை ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

அனாமிகாவின் பேச்சைக் கேட்டு முடித்த ஆண்கள் இருவரினாலுமே, தாமரையின் குணமான, ‘பிறருக்குத் தன்னால் ஒரு சிறு துன்பமும் வந்து விடக் கூடாது!’ என்ற தன்னலமில்லாத எண்ணத்தை அறிந்து, அதிலிருந்து மீண்டு வரவே சிரமப்பட்டார்கள்.

வசந்த் தன் வார்த்தைகள் குறித்து தனக்குள் வெட்கித் தள்ளாடிப் போன நேரம், கதிரோ தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்றே புரியாது, தாமரையைச் சுற்றியே அவனின் எண்ணவோட்டங்களை அலைய விட்டுக் கொண்டு இருந்தான்.

ஆண்களின் முக பாவத்தில் இருந்தே அவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று அறிந்து இருந்தவள், ”இதுக்குத்தான் முன்னாடியே என் பேச்சைக் கேட்டு அடக்கி வாசிச்சு இருக்கணும் தம்பி!!” என்று வசந்தின் முகத் தொங்கலைக் கண்டு அனாமிகா அவனைக் கலாய்த்து விட்டுக் கதிரைப் பார்த்தாள்.

இன்னமும் அவன் அவளின் தாக்கத்தில் இருந்து மீளவில்லை என்று புரிந்து, அவனை நார்மல் நிலைக்கு கொண்டு வர எண்ணி, வசந்திடம் அவனைக் கண்ஜாடைக் காட்டி, ‘ஏதாவது செய்!’ என்று சொன்னாள்.

காதலியின் சமிக்கையில் ‘சரியென்று’ தலையாட்டியவன், கதிரின் புறம் திரும்பி அவனைச் சமாதானப்படுத்த வாயைத் திறந்த நேரம்..

கதிர் சொன்ன வார்த்தைகளில் அப்படியே வாயைப் பிளந்து நின்று விட்டான் என்றால், அனாமிகாவோ அவனுக்கும் ஒரு படி மேல சென்று, தலையில் இடி விழுந்த கணக்காக ‘என்னது?’ என்று விரிந்த இமைகள் விரிந்தபடி சிலையாகிப் போனாள்.

Advertisement