Advertisement

ஆதனும் சாத்விகாவும் சென்னையின் நுழைவாயில் வரும் போதே மணி ஏழு. பின்னர் சென்னையின் போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு சாத்விகா வீடு வரும் போது எட்டு மணியாகி விட்டது. பிரபு, சக்தி, ரவி, ஜெசிக்கா என்று நால்வரும் இவர்களுக்காக சாத்விகாவின் வீட்டில் காத்திருந்தவர்கள் ஜெசிக்காவின் அம்மா அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லிச் சொல்ல, வேறு வழியில்லாமல் அவள் மட்டும் காத்திருக்க முடியாமல் கிளம்பிச் சென்றாள்.

ஜெசிக்கா சென்ற அரை மணிநேரத்தில் அங்கு வந்தனர் ஆதனும் சாத்விகாவும். அவளுக்காக அவர்கள் காத்திருப்பதைப் பார்த்து உண்மையிலே அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

“வா ராக்கி. வாங்க சார். நீங்க போன வேலை நல்லபடியா முடிஞ்சதா? என்று ரவி கேட்க,

“ப்ச் இல்லை. ஆனால் வேற ஒரு நல்ல தகவல் கிடைச்சுருக்கு. சரி சாத்விகா வீட்டுல வேற திங்க்ஸ் எதுவும் காணாமல் போயிருக்கானு பார்.” என்று ஆதன் கூற, சாத்விகா தலையசைத்து விட்டு வீடு முழுக்க அனைத்தும் இருக்கிறதா என்று பார்த்தாள். அவளது அறையில் மட்டும் பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடந்ததே ஒளிய வேறு எதையும் அவர்கள் எடுத்துப் போகவில்லை என்று புரிந்தது.

அறையிலிருந்து வெளியே வந்த சாத்விகா ஆதனிடம் சென்று,”நிவாஸ் வேற எந்தப் பொருளும் மிஸ்ஸாகலை. சரியா லேப்டாப் மட்டும் எடுத்துட்டு போயிருக்காங்க.” என்று அவள் கூற,

“எப்படி அவங்களுக்கு நம்மகிட்ட தான் லேப்டாப் இருக்குனு தெரியும்?” என்று சக்தி கேட்க,

“நாங்க லேப்டாப்ப எடுத்துட்டு வந்த மறுநாளே அந்த கல்யாண் என் ஸ்டேஷன் வந்து என்கிட்ட கேட்டான். ஆனால் சாத்விகா கிட்டத் தான் இருக்குனு எப்படித் தெரிஞ்சதுனு தெரியலை. என்னை ஃபாலோ பண்றாங்கனு நினைக்கிறேன். நீங்களும் இனிமேல் கொஞ்சம் கவனமா இருங்க.” என்று ஆதன் கூற,

“ம் ஓகே சார். அந்த லேப்டாப்ல இருக்கிற கண்டென்ட்ட நீங்க எதுவும் காப்பி பண்ணீங்களா?” என்று பிரபு கேட்க,

“ப்ச் இல்லை. எங்க போயிட போகுதுனு நினைச்சு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்.” ஆதன் சலித்தபடி கூற,

“நிவாஸ் அந்த வீடியோ எப்படி இருந்தாலும் யூஸ் இல்லை. விடுங்க லேப்டாப் போனால் போயிட்டு போகுது. உங்களுக்குத் தான் இன்னொரு வழி கிடைச்சுருக்கு தான? அப்புறம் என்ன கவலையை விடுங்க. பீ கூல் நிவாஸ். கண்டிப்பா இந்த கேஸ்ல அந்த தேவிகாவை தகுந்த ஆதாரத்தோட அரெஸ்ட் பண்ணத் தான் போறீங்க. சியர் அப்.” என்று சாத்விகா கூற,

“யார் தேவிகா? குற்றவாளி யாருனு தெரிஞ்சதா?” ஆர்வமாகப் பிரபு கேட்க, அப்போது தான சாத்விகா உளறியதே தெரிந்தது. தப்புப் பண்ணிட்ட குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு ஆதனை அவள் பார்க்க, அவளது முகபாவனை அவனுக்கு அந்த நேரத்திலும் சிரிப்பைத் தான் தந்தது.

“அதான் சொல்லிட்டியே!! என்ன விஷயம்னு நீயே அவங்ககிட்ட சொல்லிடு.” என்று சிரித்துக் கொண்டே அவன் கூற, சாத்விகா அந்த காணொளியில் ரம்யா கூறிய அனைத்தையும் கூற, கேட்டவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன சார் இது? அவங்க சாக்லேட் தான் எக்ஸ்போர்ட் பண்றாங்கனு நம்ம அரசாங்கமும் நினைச்சுருக்கும். ஆனால் அவங்க சாக்லேட்னு தங்கத்தைக் கடத்துராங்க!! எப்படி சார் இத்தனை நாள் மாட்டாமல் இருந்துருப்பாங்க?” கோபமாக ரவி கேட்க,

“பணம் பாதாளம் வரை பாயும், பணம் பத்தும் செய்யும்னு பழமொழிலாம் தெரியும்ல? அது தான் வேலை செஞ்சுருக்கு. நமக்குத் தெரிஞ்சு மூணு உசிரு போயிருக்கு. தெரியாமல் எத்தனை போயிருக்கோ? யாருக்குத் தெரியும். எல்லாம் விசாரிக்கனும். அதுக்கான அடி நூல் ஒன்னு கிடைச்சுருக்கு. அந்த அடி நூல்ல வைச்சு தான் மெல்ல மேல ஏறனும். பார்க்கலாம்.”

“சார் நீங்க கண்டிப்பா குற்றவாளிகளைப் பிடிச்சுருவீங்கனு நம்பிக்கை இருக்கு சார். இந்த கேஸ் ஆரம்பிக்கும் போது எதுவுமே தெரியாது. ஆனால் இப்போ குற்றவாளி யாருனு தெரிஞ்சுடுச்சு. மெல்ல அவங்களுக்கு எதிரா ஆதாரமும் கிடைக்கும் சான். அதுக்கு நீங்க முதல்ல தெம்பா இருக்கனும். உங்க இரண்டு பேரும் முகமும் ரொம்ப சோர்வா இருக்கு. முதல்ல வாங்கச் சாப்பிடலாம்.” என்று சக்தி கூற,

“ஆமா நிவாஸ். சக்தி சொல்றது ரொம்ப ரொம்ப சரி. எதுவுமே தெரியாமல் நாம முழிச்சுட்டு இருந்தோம். இப்போ நமக்கு குற்றவாளி யாருனு தெரிஞ்சுடுச்சு. அவங்களுக்கு எதிரா ஆதாரம் கிடைக்காமலா போகும்? அதெல்லாம் கண்டிப்பா கிடைக்கும் நிவாஸ். நீங்க வேற யாரையோ பார்க்கப் போகனும்னு சொன்னீங்கள? அதுக்கு முன்னாடி வாங்க சாப்பிட்டுப் போங்க.” என்று சாத்விகா கூற, ஆதனும் அவள் கூறியபடியே கை கழுவிச் சாப்பிடச் சென்றான்.

அனைவரும் சாப்பிட அமர, தங்களுக்கு எது தேவையோ அவர்களே எடுத்துக் கொண்டு சாப்பிட்டார்கள். சாத்விகா அன்று அவர்களது அலுவலகத்தில் நடந்த விஷயத்தைப் பற்றிப் பேச, ஆதன் அமைதியாகச் சாப்பிட்டான். பின்னர் அனைவரும் சாப்பிட்டு விட்டு வர, ஆதன் அனைவரிடமும்,”ஓகே கையிஸ் நான் கிளம்புறேன். தாங்க்ஸ் ஃபார் யுயர் சப்போர்ட்.”என்று அவர்களிடம் கூறிவிட்டு,”நான் உனக்கு கால் பண்றேன் சாத்விகா.” என்று அவளிடம் கூறிவிட்டு கிளம்பிச் சென்றான் ஆதன்.

அவன் கிளம்பியதும் பிரபுவும் ரவியும் கிளம்ப, சக்தி சாத்விகாவிடம்,”நான் இன்னைக்கு இங்கத் தான் ஸ்டே பண்ணப் போறேன்.” என்று கூற,

“ஏய் சூப்பர் கிட்டி.” மகிழ்ச்சியாக சாத்விகா கூற, பிரபுவும் ரவியும் இருவரிடமும் விடைபெற்று விட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்றதும் கதவைப் பூட்டி விட்டு சாய்விருக்கையில் பெண்கள் இருவரும் அமர்ந்தனர். சக்தி சாத்விகாவைப் பார்த்து,”அப்புறம் சொல்லுங்க மேடம் எப்படிப் போனது உங்க ட்ரிப்?” என்று கேலியாகக் கேட்க,

“அதான் நிவாஸ் சொன்னாரே நாங்க எதிர்பார்த்துப் போன எதுவும் நடக்கலைனு.”

“நான் அதைக் கேட்கலை. உங்களுக்குள்ள எதுவும் இன்ட்ரெஸ்ட்டிங்கா நடந்ததா?” என்று சக்தி கேட்க, சாத்விகா அவள் கேட்பதுப் புரியாமல் அவளைப் பார்த்து,

“எங்களுக்குள்ள என்ன இன்ட்ரெஸ்ட்டிங்கா நடக்கப் போகுது? நீ என்ன கேட்கிறனு ஒன்னும் புரியலை எனக்கு.” என்று அவள் கூற,

“ஏய் உங்களுக்குள்ள ஏதாவது ரொமான்ஸ் நடந்ததானு கேட்கிறேன்.” என்று வெளிப்படையாக சக்தி கேட்க, அதைக் கேட்ட சாத்விகா தான் அதிர்ந்து விட்டாள்.

“என்ன லூசு மாதிரி பேசுற சக்தி? எனக்கும் நிவாஸுக்கும். சான்ஸே இல்லை. நல்ல வேளை நீ இதை நிவாஸ் முன்னாடி கேட்கலை. எங்களுக்குள்ள எதுவுமில்லை சக்தி. இன்னொரு முறை இப்படிப் பேசாத.”என்று அவள் திட்டவட்டமாகக் கூற,

“சாத்விகா உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். உன் மனசுல ஆதன் சார் எப்போவோ வந்துட்டார். அது உனக்குத் தான் தெரியலை. ஆனால் பார்க்கிற எங்க எல்லாருக்கும் அது நல்லாவே தெரியும். அவரைப் பார்த்தாலே உன் கண் அவ்ளோ ப்ரைட்டா இருக்கும். நீ யோசிச்சு பார். அவரோட இருக்கும் போது நீ நீயாவே இருக்க மாட்ட. அப்புறம் உன் நிவாஸ் சார் இருக்கும் போது நான் சொல்லிருந்தாலும் ஒன்னும் ஆகிருக்காது. ஏனா அவர் கவுந்து ரொம்ப நாள் ஆகுது. மேடம்கு தான் எதுவும் புரியலை. கொஞ்சம் கேஸ் இது எல்லாத்துல இருந்தும் வெளில வந்து பார். உனக்கே எல்லாம் புரியும். அப்புறம் ஆதன் சார் உண்மையிலே உனக்கு பெஸ்ட் சாய்ஸ்.” என்று சக்தி கூறிவிட்டு தன் வேலை முடிந்தது என அவள் தொலைக்காட்சி போட்டு அதைப் பார்க்க ஆரம்பிக்க, சாத்விகா தான் பலத்த யோசனையில் இருந்தாள்.

~~~~~~~~~~

ஆதன் சாத்விகாவின் வீட்டிலிருந்து முதலில் அவன் வீட்டிற்குச் சென்று ஒரு குளியல் போட்டு விட்டு மாசாணிக்கு அழைத்து அவனைச் சந்திக்க ஒரு இடத்திற்கு வரச் சொல்லிவிட்டு கிளம்பிய போது அவனது கைப்பேசி ஒலி எழுப்பியது. எடுத்துப் பார்த்தான் எட்வின் தான் அழைத்திருந்தான்.

“ஹேய் எட்வின் சொல்லு. என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க?”

“ஏன் நான் கால் பண்ணக் கூடாதா?”

“சை சை நான் அப்படிச் சொல்லவே இல்லை. சரி சொல்லு எதுக்கு கால் பண்ண?”

“இல்லை இன்னைக்கு உன்னைப் பார்க்கலாம்னு உன் வீட்டுக்கு வந்தேன். ஆனால் உன்னை ஆளே காணோம். அதான் எங்க போயிருந்தனு கேட்கக் கூப்பிட்டாலும் உன் ஃபோன் நாட் ரீச்சப்ளே இருந்தது. இப்போ தான லைன் கிடைச்சது.”

“அப்படியா? தெரியலை ஏன்னு? ஒரு வேளை ட்ராவலிங்க்ல இருந்ததால் இருக்கும்.” என்று கூறி அவன் வின்சென்ட் வீட்டிற்குச் சென்றதும் அங்கு எதுவும் தனக்குச் சாதமாகக் கிடைக்கவில்லை என்ற விபரத்தையும் கூற,

“வின்சென்ட் யார் ஆதன்? என்கிட்ட இப்போலாம் நீ எதுவும் சொல்றதே இல்லை.” என்று எட்வின் கூற,

“ப்ச் எட்வின் உன்கிட்ட சொல்லக் கூடாதுனு இல்லை. யார் எப்போ எப்படி ஒட்டுக் கேட்கிறாங்கனு புரியலை. சாத்விகா வீட்டுல இருக்கிற லேப்டாப்ப யாரோ எடுத்துட்டு போயிட்டாங்க. இப்போ இப்படி ஃபோன்ல பேசுறது கூட ஸேஃப் இல்லை எட்வின். அதான் எதுவும் என்னால சொல்ல முடியலை.”

“ஓ சரி அப்போ நான் உன் வீட்டுக்கு இப்போ வரேன். பேசலாம் நாம.” என்று எட்வின் கூற,

ஒரு நிமிடம் யோசித்த ஆதன்,”இல்லை எட்வின் நான் இப்போ தான் வீட்டுக்கே வந்தேன். எனக்கு ட்ராவல் பண்ணது கொஞ்சம் டையர்டா இருக்கு. நாம நாளைக்குப் பேசலாம்.” என்று ஆதன் கூற, எட்வினிற்கும் எந்தச் சந்தேகமும் வரவில்லை.

“ஓகே ஆதன் அப்போ நான் நாளைக்குக் காலையில சீக்கிரம் உன் வீட்டுக்கு வரேன். இப்போ நீ நல்லா தூங்கு.” என்று கூறிவிட்டு வைத்துவிட, ஆதனும் அவனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு யாரும் தன்னைப் பார்க்கிறார்களா என்று ஒரு நிமிடம் நின்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு மாசாணியை சந்திக்கக் கிளம்பி விட்டான்.

~~~~~~~~~~

எட்வின் ஆதனிடம் பேசியதும் உடனே செய்த வேலை பாண்டிக்கு அழைத்தது தான்.

“சொல்லு எட்வின். என்ன இந்த நேரத்துக்குக் கால் பண்ணிருக்க?”

“பாண்டி ஆதன் இன்னைக்கு கோயம்புத்தூர் போயிருக்கான். அதுவும் எதுக்கு தெரியுமா? யாரோ வின்சென்ட்டாமே அவனைப் பார்க்க போயிருக்கான்.” என்று எட்வின் கூறியதும்,

“என்னது வின்சென்ட்டா? அவனை எப்படி ஆதன் பார்க்க முடியும்?”

“ஏன் அவனுக்கு என்ன?”

“அவனைத் தான் நாங்க எப்போவோ பரலோகம் அனுப்பிட்டோமே? அப்புறம் எப்படி அவனால பார்க்க முடியும்?” என்று பாண்டி கூற,

“அப்போ எதுக்கு ஆதன் அப்படிச் சொல்லனும்? சரி நான் நாளைக்கு அவன்கிட்ட பேசப் போறேன். அப்போ தெளிவா எல்லா விஷயத்தையும் கேட்டுச் சொல்றேன்.”

“உன்கிட்ட பிடிச்சதே இது தான் எட்வின். நான் வின்சென்ட்ட பரலோகம் அனுப்பிட்டேன்னு சொல்லியும் அதைப் பத்தித் துருவிக் கேட்காமல் இருக்கியே. நீ எப்படி என் கண்ணுல முன்னாடியே படாமல் போன?”

“அதான் இப்போ பட்டாச்சுல. எனக்குத் தெரியனும்னா நீயே சொல்லிருப்ப. எல்லா விஷயத்தையும் நீ என்கிட்ட சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லையே. எனக்கு என்னோட லிமிட் தெரியும் பாண்டி.”

“ம் சந்தோஷம் எட்வின். நாளைக்கு அந்த ஆதனை பார்த்ததும் எனக்குக் கூப்பிடு.” என்று கூறி வைத்து விட, எட்வின் பாண்டிக்கு அழைப்பதற்கு முன்பு வரை கூட வின்சென்ட் யாரோ என்று தான் நினைத்திருந்தான். ஆனால் பாண்டி சாதாரணமாக அவனைக் கொலை செய்து விட்டதாகக் கூறவும் இவனுக்கு ஒரு நிமிடம் அவன் பாண்டியுடன் கூட்டணி வைத்தது சரியா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான். அது அவனுக்குத் தவறாகத் தெரிந்தது. அப்படி அவன் இப்போது பாண்டியை விட்டு விலகினால் உண்மைத் தெரிந்த தன்னை அவன் சும்மா விட மாட்டான். அதனால் அவன் சுயநலமாக யோசிக்க ஆரம்பித்து விட்டான். எத்தனை கொலை செய்தாலும் தண்டனை என்னவோ ஒன்று தான். அதனால் யார் எப்படியோ போகட்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.

~~~~~~~~~~

ஆதன் சொன்னபடி மாசாணி அந்த இடத்திற்கு வந்து காத்திருந்தான். அந்த இடம் பாதி கட்டி முடித்திருக்க மீதியைக் கட்டிக் கொண்டிருந்தனர். இரவு நேரம் என்பதால் அங்கு ஆட்கள் நடமாட்டம் இருக்காது என்று அந்த இடத்தை அவன் தேர்வு செய்திருந்தான்.

மாசாணி வந்த பத்து நிமிடத்திலே ஆதன் அங்கு வர, மாசாணி அவனை எதிர்கொண்டு,”தல வாங்க வாங்க.” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

“அப்புறம் மாசாணி ஆள் எங்க இருக்கான் இப்போ?”

“தல இப்போ அவன் ரொம்ப ஃசேப்பா இருக்கான். அவனை ஈசியா தூக்கிட முடியாது தல.”

“மாசி அவன் இருக்கிற இடத்தைச் சொல்லு. அவனை எப்படித் தூக்குறதுனு நான் ஸ்கெட்ச் போட்டுக்கிறேன்.” என்று ஆதன் கூற,

“தல அவன் சைதாப்பேட்டைல வவ்வால் குமார் இருக்கான்ல அவன் கூடத் தான் இருக்கான் தல. இவன் பேர் ராஜா. அந்த ஏரியாக்குள்ள போலிஸ் போறது ரொம்ப கஷ்டம் தல. அவனும் அந்த ஏரியா விட்டு வெளில வரது இல்லை தல. அந்தப் பொரம்போக்கும் சாதாரண ஆள் கிடையாது தல. அது செய்யாத குத்தமே இல்லை. ஆறு மாசம் முன்னாடி சின்னக் குழந்தைனு கூடப் பார்க்காமல் பார்க்ல விளையாடிட்டு இருந்த பத்து வயசு பொண்ண ரேப் பண்ணி கொன்னுட்டான் தல. இவனை அரெஸ்ட் பண்ணப் போலிஸ்கிட்ட பணத்தைக் கொடுத்து வெளியே வந்துட்டான் தல. ஊர் வாய் பேசுற வரைக்கும் அவனை உள்ள வைக்கிற மாதிரி வைச்சுட்டு செய்தி எல்லாம் அடங்கி மக்கள் வேறப் பிரச்சனையைப் பத்திப் பேச ஆரம்பிச்சுட்டாங்கனு தெரிஞ்சு அவனை வெளியே விட்டுட்டாங்க தல.” என்று மாசாணி கடும் கோபத்துடன் கூற,

“இவனுங்களை எல்லாம் ஒரு வழி பண்ணனும் மாசி. பண்றேன், இந்த ஆதன் யாருனு அவனுங்களுக்கு நான் காட்டுறேன். நீ சொல்லிட்டல இனிமேல் என் ஆட்டத்தை அவன் பார்க்கத் தான் போறான். இப்போ எப்படி அவன் வெளில வரான்னு நானும் பார்க்கிறேன். இவனால எனக்குக் காரியம் ஆக வேண்டியது இருக்கு. இல்லாட்டி இவனைப் பிடிக்காமல் அப்படியே என்கவுண்டர்ல சாக அடிச்சுருப்பேன்.” ஆதனும் குறையாத கோபத்துடன் கூற,

“என்ன தல நீ அவன் எல்லாம் பொறம்போக்கு. அந்தப் பொண்ணு மட்டும் தான்னு நினைச்சுடாத. அவன் எந்தப் பொண்ணை பார்த்தாலும் இடம் சரியா இருந்தா தூக்கிடுவான். சரியான பொறுக்கி தல அவன். எனக்குத் தெரிஞ்சே நிறையே பொண்ண சீர் அழிச்சுருக்கான் தல. அவனைச் சாதாரணமா என்கவுண்டர்ல போட்டா சரியா வருமா? அவன் எல்லாம் துடிதுடிச்சு சாகனும் தல. எனக்கு வர்ற கோபத்துக்குக் கத்திய எடுத்துட்டு போய் அவனைச் சதக் சதக்குனு குத்தி குடலை வெளியே எடுக்கனும்னு வெறியே வருது தல.”

“மாசி உன்னோட உணர்வுகள் எனக்குப் புரியுது. உன்னை விடக் கோபத்துல தான் நான் இருக்கேன். கண்டிப்பா அவனைப் பிடிச்சு என்ன பண்ண முடியுமோ அதை நான் பண்றேன். அப்புறம் உனக்கு இன்னொரு வேலை இருக்கு.” என்று கூறி வின்சென்ட் இறந்த போது செய்தியில் காட்டிய காணொளியை மாசாணியிடம் காட்டி,

“இதையும் யார் செஞ்சானு கண்டுபிடிச்சு கொடு மாசி. ஆள் யார்னு தெரியலை, ஆனால் இதுலயே இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சுருக்கும். அதனால நீ உன் சைட்ல விசாரிச்சு எனக்குச் சொல்லு.” என்று ஆதன் கூற,

“தல கண்டிப்பா நான் விசாரிச்சுட்டு சீக்கிரமே சொல்றேன்.” என்று மாசாணி கூற, ஆதன் அவனிடம் விடைபெற்று அவனது வீட்டிற்கு வந்தான்.

வீட்டிற்கு வந்த ஆதனிற்கு ஏனோ மனம் கணத்தது. மாசாணி கூறியதைக் கேட்டதிலிருந்து அவன் மனம் ஆராவில்லை. சிறு குழந்தைகள் எதுவும் தெரியாத அவர்களை இவர்களுடைய சுகத்திற்காக அவர்களது வாழ்க்கையைக் கெடுக்க யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது. இது போல் நிறைய நிறையக் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கடுமையாக எந்தத் தண்டனையும் இந்தியச் சட்டத்தால் தர முடியவில்லை. இந்த ராஜாவிற்கு கடுமையான தண்டனை ஏதாவது கொடுக்க வேண்டுமென யோசித்தான். அவன் மூளையில் ஒரு சிந்தனை உதயமாக, அது தான் சரியாக இருக்கும் என்று தோன்ற உடனே அதற்கான வேலையைச் செய்து விட்டான்.

Advertisement