Advertisement

அத்தியாயம் – 1

“வீல்..! வீல்..!” என்ற சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.

குழந்தையின் அழுகுரல் அது… பிறந்து முழுதாக மூன்று மாதங்களே ஆன பச்சிளங்குழந்தை… அழுதழுது முகம் வீங்கி¸ சிவந்து¸ கண் நிலைக்குத்தி என்பார்களே அதுபோலவே இருந்தது.

குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் பாட்டி செண்பகம்.

பேரன் விக்ரமுக்கு போன் செய்து அரைமணி நேரத்திற்கு மேலாகியிருந்தது… அவன் இன்னும் வந்து சேரவில்லை.

“ஐயோ! இந்தக் குழந்தை இப்படி நிறுத்தாம அழுதுக்கிட்டிருக்கே..! நான் என்ன பண்ணுவேன்? இந்த பய இன்னும் வந்து சேரவில்லையே!” என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது போர்டிகோவில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

செண்பகம்  கையோடு குழந்தையை தூக்கிக் கொண்டு வாசலை நோக்கிச் செல்லவும் விக்ரம் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

வந்தவன் “என்ன பாட்டி? என்னாச்சு…? ஏன் இவள் இப்படி அழுதுட்டு இருக்கா?” என்று குழுந்தையைக் கையில் வாங்கியவாறே கேட்டான்.

“தெரியலையேப்பா… பசிக்குதான் அழறதா நினைச்சி பால் சூடு பண்ணி கொடுத்தால் வாயில வாங்கவே மாட்டேங்குறா… உடம்பு வேற நெருப்பு மாதிரி கொதிக்குது… நீ சீக்கிரம் டாக்டருக்கு போன் பண்ணு… இல்லை நாம ஆஸ்பத்திரிக்கு போயிடலாமா?” என்று பதற்றமாகக் கேட்டவரிடம்¸ குழந்தையின் தோளில் தட்டியவாறே பேசலானான்.

“பாட்டி… நீங்க அவ்வளவு பதற்றமா பேசினதுமே வசந்துக்கு போன் செய்து சொல்லிட்டேன். உடனே வர்றதா சொன்னான்…” என்றவன்¸ பாட்டியின் பயம் தோய்ந்த முகத்தைப் பார்த்துவிட்டு “இப்போ வந்துடுவான் பாட்டி… நீங்க வாங்க… வந்து இப்படி உட்காருங்க” என்றபடி செண்பகத்தை சோபாவை நோக்கி அழைத்துச் சென்றான்.

தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்ததில் குழந்தை தூங்கிவிட்டாள். தூக்கத்திலிருப்பவளை வருடியபடி இருந்தவனது முகம் கவலையோடு இருந்தது.

பதினைந்து நிமிடம் காத்திருந்த செண்பகம் “இன்னும் வசந்த் தம்பி வரவில்லையே விக்ரம்? நீ இன்னொரு முறை போன் செய்து பாரேன்…” என்று சொல்ல¸ “சரி பாட்டி” என்றவன் எழுந்து தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த செல்போனை எடுத்துக் கொண்டிருந்தபோது “ஹாய் விக்ரம்…” என்று வசந்தின் குரல் கேட்டது.

வசந்த் விக்ரமின் பள்ளிக்கால நண்பன். தற்போது சுற்றுவட்டாரத்தில் பிரபலமான குழந்தைகள் நல மருத்துவர்.

“வா வசந்த்… உனக்குத்தான் போன் பண்ணலாமென்று எடுத்தேன்” என்று சொல்ல¸ நண்பனிடம் புன்னகையொன்றை உதிர்த்தவன் “குழந்தைக்கு என்ன செய்யுது பாட்டி?” என்று செண்பகத்திடம் கேட்டான்.

தன் பேரனிடம் போனில் சொன்ன விவரத்தை அப்படியே டாக்டரிடம் சொன்னதும்¸ குழந்தையை சோபாவில் படுக்க வைக்கச் சொன்னான்.

குழந்தையின் வயிற்றில் கை வைத்து அழுத்திப் பார்த்தான்¸ கண் இமைகளை பிரித்துப் பார்த்தான்¸ காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்து… ஒவ்வொன்றாக செய்தவன் விக்ரமிடம் “குழந்தைக்கு சாப்பிட என்ன கொடுப்பீங்க?” என்று கேட்டான்.

“சாப்பாடு கொடுக்கறதெல்லாம் பாட்டிதான்டா…” என்றபடி அவன் பாட்டியைப் பார்க்க¸ “பசும்பால் காய்ச்சி கொடுப்பேன்” என்றார் செண்பகம்.

எதுவும் பேசாமல் வசந்த் அமைதியாக குழந்தையைப் பார்த்தபடி நிற்க “என்ன வசந்த்? குழந்தைக்கு என்ன பிரச்சினை? பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லையே..? ஹாஸ்பிட்டல் போகணுமா? இல்லை வேற ஏதாவது…” என்று கேள்விமேல் கேள்வியாக பதற்றத்தோடு கேட்க¸ “இல்லை விக்ரம் உன் மகளுக்கு பெரிய பிரச்சினை ஒன்னும் இல்லை” என்றான் நண்பனின் பயத்தைத் தணிக்கும் பொருட்டு.

“பாட்டி… இவளுக்கு சிறுநீர்¸ பேதி எல்லாம் எப்படி போகிறது? எப்போதும் போலதானா இல்லை ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?” என்று கேட்டான்.

“ரெண்டு நாளா சிறுநீர் நல்லா போகுது… ஆனால் பேதி போகவில்லை” என்றார்.

வசந்த் பேசும் முன்பாகவே “ஏன் பாட்டி என்கிட்ட நீங்க இதைப் பத்தி சொல்லவில்லை?” என்று சாடினான் விக்ரம்.

“சாதாரண மலச்சிக்கல்… இல்லைன்னா உப்புசமா இருக்கும் சீக்கிரம் சரியாகிடும்னு நினைச்சேன். நேற்றுகூட ஒரு சங்கு தேங்காய் எண்ணெய் கொடுத்தேன்… உனக்கும் சின்ன வயசுல இந்த மாதிரி பிரச்சினை வந்தால் அதுபோல கொடுப்பேன். அதனால குழந்தைக்கு ஒன்னுமில்லைனு நினைச்சிட்டேன்…” என்று பேரனிடம் சொன்னவர்¸ “ஏம்பா டாக்டர் இந்த மாதிரி கொடுக்கக்கூடாதா..?” என்று கேட்டார்.

அவன் மறுப்பது போலத் தலையசைக்கவும் “எப்பவும்போல கொடுத்துட்டேனே…” என்றார் கவலையுடனே.

“சொல்லு வசந்த்… என் மகளுக்கு என்னாச்சு?” என்று நிதானமாகக் கேட்டான் விக்ரம்.

“நான்தான் பெரிசா பிரச்சினை ஒன்னும் இல்லை என்றேனே…” என்றவன் “அவளுக்கு சாப்பாடு ஜீரணம் ஆகாமல் இருந்து அது வயிற்று வலியை வரவைத்திருக்கும். பேதியும் சரியா போகததால் கஷ்டமாகி அழத் தொடங்கியிருப்பா” என்றவனிடம்¸ மகளுக்கு எந்த நேரத்தில் என்ன மாதிரி உணவளிக்க வேண்டும் என்பதை பாட்டியிடம் கூறுமாறு கேட்டுக் கொள்ள… குழந்தைக்கு சிகிச்சையளித்தவாறே சில குறிப்புகளைக் கூறினான்.

போகும்போது நண்பனிடம் “கிளம்புறேன்டா…” என்றவன்¸ பாட்டியிடம் “சரி பாட்டி… நல்லா பார்த்துக்கங்க… நான் வர்றேன்.. இல்லையில்லை.. போறேன்” என்று தன்னைத்தானே திருத்திக் கொண்டான்.

“டேய்! என்னடா இப்படி… போறேன்னு சொல்றே?” என்று விக்ரம் கேட்க¸ “ஒன்னுமில்லை விக்ரம் பொதுவா ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பும்போது வர்றேன்னு சொல்லக்கூடாது சொல்லுவாங்க… நான் இப்போ வந்தது ஒரு டாக்டராகத்தானே..! அதான் மறுபடியும் அப்படி வரக்கூடாதுன்றதுக்காக சொன்னேன்” என்று விளக்கமளித்தான் நண்பன்.

“சரிதான்டா… ஆனால்… நோயாளிங்க யாருமே வரலைன்னா உன்னை மாதிரி டாக்டரோட நிலைமை என்னவாகும்?” என்று கேட்டு சிரித்தான் விக்ரம்.

“மத்தவங்க எப்படியோ எனக்குத் தெரியாதுப்பா… ஆனால் நான் மறுபடி உன் வீட்டுக்கு இப்படி நோயாளியைப் பார்க்க வர்றது எனக்கு விருப்பமில்லைடா… எனக்கு நீங்க மூணுபேரும் எப்பவும் நல்லா இருக்கணும். முக்கியமா… இந்த குட்டி இளவரசி எப்பவும் சுகமாக இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்” என்று மனமாரப் பேசியவன் தன் பையை எடுத்துக் கொண்டு எழும்பினான்.

குழந்தை அழுகை குறைந்து உறங்கத் தொடங்கிவிட்டதால்… எந்த சிரமமுமின்றியே வசந்த் சிகிச்சையை முடித்திருந்தான்.

இப்போதும் அவள் தூக்கத்திலே இருக்க… விக்ரமும் குழந்தையை பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு நண்பனுடன் கிளம்பினான்.

திடீரென நினைவிற்கு வந்தவனாக பேண்ட் பாக்கெட்டிலிருந்த வேலட்டை எடுத்து இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து நண்பனிடம் நீட்ட… “என்னடா விக்ரம் இது? நீ எனக்குத் தரணுமா?” என்று கேட்டவன் “அவள் எனக்கும் மகதான்டா…” என்று குழந்தையின் தலையை வருடியவாறு நடையைத் தொடர்ந்தான்.

“இருக்கட்டும் வசந்த்… இது நான் உனக்கு தர்ற பீஸ் இல்லை. நீ மருந்து வாங்குறதுக்கு செலவு செய்திருப்பாய்தானே! அதோட இவ்வளவு தூரம் கார்ல வந்தது… டீசல் ஒன்னும் சும்மா கிடைக்காதே..! அதுக்காக வைத்துக்கொள்” என்று கையில் திணித்தவன்¸ “நீயே கேட்டாலும்கூட நான் உனக்கு பீஸ் தரமாட்டேன்டா…” என்றான் சிரித்தபடி. தான் கொடுத்தது டாக்டர் பீஸ் இல்லை என்று தெரிவிக்கும் விதமாக.

“வர்றேன் பாட்டி…” என்று குனிந்து குழந்தையை முத்தமிட்டு நிமிர்ந்தவன்¸ “வா வசந்த்… பாட்டி போன் செய்ததும் வேலையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு வந்தேன்…” என்று பேசியபடியே நடந்தான்.

தன்னுடைய காரில் ஏறியவனிடம் வந்த வசந்த் “என்னடா விக்ரம்… பாட்டியைப் பார்த்தால் பாவமாயில்லையா? குழந்தையை வைச்சிக்கிட்டு எவ்வளவு கஷ்டப்படுறாங்க…” என்றான்.

“நான் என்னடா பண்றது? எனக்கு ஆபீஸ்¸ பேக்டரி ரெண்டுலயும் இருக்குற வேலையை எவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டு வந்தாலும் ராத்திரி ஒன்பதுக்கு மேல ஆயிடுது… அதுக்காக நான் ஒருநாள் போகமால் இருந்தாலும் வேலை ஒழுங்கா நடக்காது”

“ஏன்..? மேனேஜர் பார்த்துக்க மாட்டானா..? நம்பிக்கையான ஆள் இல்லையா..?” என்று கேட்டான் வசந்த்.

“மேனேஜர் நல்லவன்தான்… அவனே எல்லாத்தையும் பார்த்துப்பான்தான். ஆனால் அப்படி மற்றவர்களை நம்பி நான் போகாமலிருந்தால் எல்லாருக்கும் மெத்தனம் வந்துவிடும். அப்பா¸ தாத்தா கஷ்டப்பட்டு வளர்த்து வந்த தொழிலை எப்படியோ போகட்டும்னு விட்டுட்டு என்னால இருக்க முடியாதுடா…” என்று ஆதங்கமாகப் பேசியவன் “குழந்தைக்காகப் பார்த்து அவளருகிலே இருந்தால் போதுமா…? அவளது எதிர்காலப் படிப்பு¸ வாழ்க்கை¸ ஆசை¸ கனவு எல்லாவற்றையும் நான் நிறைவேற்ற வேண்டாமா..?” என்று கேட்டு முடித்தான்.

“விக்ரம் நீ சொல்றது எல்லாமே சரிதான்டா… ஆனால் நான் உன்னை குழந்தை பக்கத்துலே இருந்து பார்க்கச் சொல்லவில்லையே!” என்றான்.

“அப்போ என்ன செய்ய சொல்கிறாய்?” என்று கேட்டான்.

“பாட்டி கஷ்டப்படுறாங்களே குழந்தையைப் பார்த்துக்க ஒரு ஆளை ஏற்பாடு செய் என்றால்… நீ என்னென்னவோ பேசிக் கொண்டிருக்கிறாய்” என்று குறைப்பட்டான் அவன்.

“எப்படி முடியும்..? வளர்ந்த குழந்தை என்றால் காலையிலிருந்து மாலை வரை பார்த்துக் கொண்டால் போதும்… இவள் பிறந்து மூணு மாசம்தான் ஆகிறது. யாரையாவது அரேன்ஞ் பண்றதா இருந்தாலும் வீட்டோடு தங்குற மாதிரிதான் பார்க்க வேண்டும். அதற்கு யாருமே சம்மதிக்க மாட்டாங்களே..!!” என்று தனக்குத் தெரிந்ததை அப்படியே கூறிவிட்டாலும்¸ அவனுக்கும் ‘அது முடியாதே!’ என்ற வருத்தம் இருப்பது குரலில் தெரிந்தது.

“அப்படியென்றால் திருமணம் செய்துகொள்… உன் மனைவி பார்த்துக் கொள்வாள்” என்றான் வசந்த் உடனடி தீர்வாக.

“என்ன வசந்த் விளையாடுறியா..? எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பதை மறந்துவிட்டாயா..?” என்று கேட்டு நிறுத்தினான்.

தனக்குத் திருமணமாகிவிட்டதைக் கூறி நண்பனிடமிருந்து பார்வையை விலக்கியவனது முகமும் ஸ்டீயரிங்கில் பதிந்திருந்த கரங்களும் வெகுவாக இறுகியிருந்தது.

மெதுவாக “விக்ரம்…” என்றழைத்தவன் “நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுடா..” என்றான்.

‘சொல்லு…’ என்பது போல அவன் பார்க்க¸ “குழந்தைக்கு மூணுமாசம்தான்டா ஆகுது. அந்த பிஞ்சு குழந்தை என்ன பாவம்டா செய்தது… அம்மா இல்லாமல் வளர்வதற்கு? பாட்டியாலயும் எத்தனை நாள்தான் பார்க்க முடியும்..? தன் பிள்ளைகளையும் இழந்திருக்கும் வயதான அவங்களையும் சேர்த்து பார்த்துக் கொள்வதற்கு கட்டாயம் இந்த வீட்டிற்கு ஒரு பெண் தேவை. அத்தோடு நீ…  கைக்குழந்தையையும் வைத்துக் கொண்டு பாட்டியைப் பற்றி யோசிக்காமல் தொழில்… தொழில்… என்று அலைந்து கொண்டிருந்தால் அவங்களுக்கு கஷ்டமாக இராதா..? பாட்டி நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் சீக்கிரமே கல்யாணத்தை பண்ணிக்கொள்” என்றான்.

“ஏன் வசந்த் இப்படி பேசுகிறாய்? நான் பாட்டியையும்¸ குழந்தையையும் பற்றி யோசிக்காமல் இருப்பேன் என்றா நினைத்தாய்…?” என்றான் வருத்தமான குரலில்.

“அப்படி இல்லை…” என்று வசந்த் மேலே பேசுவதற்குள்¸ “என்ன அப்படி இல்லை… கல்யாணம் என்ன சின்ன விஷயமாடா?” என்றான் இவன்.

அப்போதும் அவன் ஏதோ சொல்ல வர அவனைப் பேசவிடாமல் தடுத்து “டேய்…! நான் காவேரிகூட அஞ்சி வருஷம் வாழ்ந்திருக்கேன். எனக்கு இன்னும் அது நினைவுலதான் இருக்குது… அப்புறம் இது என்னடா..? மனைவி இறந்துட்டா உடனே அடுத்த மனைவி தேடுறதுன்னா… நான் என்ன பெண்களுக்கு அலையுறவனா..?” என்று கோபமாகக் கேட்டவன் நண்பனைப் பேசவிடாமலே தொடர்ந்தான்.

“சாதாரணமாக மனைவி இறந்துவிட்டால் ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் அடுத்த திருமணம் பற்றிப் பேசுவதைப் பார்த்திருக்கேன்… நீ என்னடாவென்றால் ரெண்டு மாசம் முடியும் முன்பே… ச்சு… ஏன்டா அப்படிச் சொன்னாய்?” என்று வருத்தத்துடன் வினவினான்.

“இல்லை விக்ரம்… நான் சொன்னதை நீ தவறாக புரிந்துகொண்டாய்..” என்றவனிடம் “என்ன தவறாகப் புரிந்து கொண்டேன்?” என்று வெடித்தவன்¸ “என்னை என்ன மனைவி இறந்ததும் அடுத்த பெண்ணின் பின்னால் அலைபவன் என்று நினைத்தாயா?” என்று ஆத்திரம் குறையாமலே பேசினான்.

“ஏய்..! இல்லைப்பா…! என்னையும் கொஞ்சம் பேசவிடுடா” என்று தாழ்ந்த குரலில் கேட்டபோதும்¸ “இந்த கல்யாணப் பேச்சைத் தவிர வேற எதையாவது பேசு” என்றான்.

“குழந்தைக்காகத்தான்…” என்று மீண்டும் அவன் அதையே வேறு கோணத்தில் தொடங்க முயல¸ “குழந்தைக்காகவே என்றாலும் என்னைக்கு எனக்கு இனியொரு கல்யாணம் தேவையென்ற நிலை ஏற்படுகிறதோ… அப்போது நானே உன்னிடம் சொல்கிறேன். அதுவரை இதைப்பற்றிப் பேசாதே..!” என்றவன் “எனக்கு ஆபீசுக்கு நேரமாகிவிட்டது… நீயும் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பு…” என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்டு காரை கிளப்பிச் சென்றுவிட்டான்.

நண்பனை சம்மதிக்க வைக்க இயலவில்லையே என்ற வருத்தத்துடனும் அவனுடனான வாக்குவாதத்தில் சலிப்புற்றவனுமாக காரை நோக்கிச் சென்றவனை அழைத்தபடி வந்தார் பாட்டி.

Advertisement