Advertisement

அத்தியாயம் – 2

தள்ளாத வயதிலிருக்கும் அவரை அதிகம் நடக்கவிட விரும்பாதவனாக வேகமாக அவரருகில் சென்று “என்ன பாட்டி?” என்றான் வசந்த்.

“அவன்கிட்ட பேசுனியாப்பா..? கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டானா..?” என்று ஆவலாகக் கேட்ட பாட்டியைப் பார்த்தவனுக்கு நண்பன்மேல் கோபமுண்டானது.

அந்த கோபத்தை முகத்தில் பிரதிபலித்துவிடாமல் காத்து “இல்லை பாட்டி  இப்போதைக்கு அதைப்பற்றி பேச வேண்டாமென்று சொல்லிவிட்டான்” என்றான்.

“அவன் வாழ்க்கை…” என்று பாட்டி தொடங்க¸ “வருத்தப்படாதீங்க பாட்டி… நான் இதை இப்படியே விட்டுவிட மாட்டேன். எனக்கும் அவன் வாழ்க்கை ரொம்ப முக்கியம். அதனால் நான் சீக்கிரமே பேசி… அவனை சம்மதிக்க வைத்துவிடுவேன்” என்றான் நம்பிக்கையோடு.

“செய்யப்பா… பக்குவமாயப் பேசி சம்மதிக்க வை. அந்த மகராசிக்குத்தான் அவனுடன் வாழ குடுத்து வைக்கலை… பக்கவாதம் வந்து போயிட்டா… இப்படி ஒரு அன்பான கணவனையும்¸ பச்சைக் குழந்தையையும் விட்டுட்டுப் போக எப்படித்தான் முடிந்ததோ தெரியலையே..!” என்று புலம்பியவாறே உள்ளே சென்றார்.

அங்கலாய்த்தவாறே சென்ற பாட்டியைப் பார்த்தவாறு சற்றுநேரம் நின்றவன் கிளம்பினான்.

ஆபீஸ் சென்ற பின்னரும் விக்ரமுக்கு வேலை ஓடவில்லை ‘ஏன் இப்படி செய்தாய்?’ என்று மனதிற்குள்ளே மறுகினான்.

அவன் மனைவி காவேரி பேரழகி என்று சொல்ல முடியவில்லையென்றாலும் பார்வைக்கு அழகானவளே! ஒல்லியான உடல்வாகு¸ மாநிறத்தைவிட சிவப்பு¸ பணிவும் பழகும் குணமும் பெரியவர்களிடம் மரியாதையும் கொண்டவள்.

சொந்த அத்தை மகள்.விக்ரமைப் போலவே பெற்றோருக்கு ஒரே வாரிசு.

அவனை விட ஐந்து வயது இளையவள். சிறுவயது முதலே விக்ரமுக்கு காவேரி என்று இணைத்துப் பேசியே வளர்த்திருந்தனர்.

விக்ரம் அவனது தாயாரின் நிறம், தந்தையின் உயரம் கொண்டு அவரையும் தாண்டி வளர்ந்திருந்தான்.

மாநிறத்தில் உயரத்திற்கேற்ற உடல்வாகோடு ஹேன்ட்சம்மாக இருந்தவன் கல்லூரி நாட்களில் அந்த வயதிற்கே உண்டான கலாட்டா¸ பார்ட்டி, சிகரெட்  என்று பெண்களைத் தவிர அத்தனை பழக்கங்களையும் குத்தகைக்கு எடுத்திருந்தான்.

அவனது தாத்தா காலத்திலிருந்தே கோரைப் பாய் உற்பத்தி செய்து வந்தவர்கள் நல்ல வருமானத்துடன் வசதியாகவே வாழ்ந்திருந்ததால் நண்பர்களுக்கு அவர்கள் கேட்காமலே நிறைய செய்வான்.

இருந்தாலும் கல்லூரி நண்பர்கள் யாரும் அவனுடன் நிலைக்கவில்லை. பள்ளித் தோழனான வசந்த் மட்டுமே நிரந்தர நண்பனாகிப்போனான். அதற்குக் காரணம் வசந்த் மட்டுமே!

மற்றவர்கள் அனைவரும் விக்ரமின் பணத்தின் மீதும்¸ அவனுடன் உல்லாசமாகச் சுற்றுவதிலும் மட்டும் அக்கறை காட்ட… அவனது உடல்நலன் மீதும் வாழ்க்கை மீதும் அக்கறை கொள்பவன்¸ அன்பையும் காட்டுபவன் என்பதால் உற்ற நண்பனாக நிலைத்துவிட்டான்.

படிப்பு முடிந்த பின்னரும் கல்லூரித் தோழர்களில் ஓரிருவர் சில சமயம் பார்ட்டி என்று அழைப்பதுண்டு… அது விடுமுறை நாட்களாக அமைந்தால் வசந்தையும் உடன் அழைத்துச் சென்றுவிடுவான். இவன் உடன் வருவது மற்றவர்களுக்கு அறவே பிடிக்காது.

பார்ட்டி என்று அழைத்தவர்கள் யாரும் ஒரு ரூபாய்கூட செலவு செய்ய மாட்டார்கள்… விக்ரம்தான் எல்லாவற்றுக்கும் பணம் கொடுக்க வேண்டும். இது வசந்துக்குப் பிடிக்காது. மற்றவர்கள் முன்னிலையிலேயே நண்பனிடம் அதைச் சொல்லியும் விடுவான்.

“இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே” என்று விக்ரம் சொன்னாலும்¸ அவன் தொடர்ந்து சொல்லி வந்ததால் கல்லூரி நண்பர்கள் “அவன் நம்மை என்ஜாய் பண்ண விடமாட்டான்… அவனை உன்னுடன் அழைத்து வராதே” என்றதோடு மட்டுமல்லாமல் அவனைப் பற்றி தரக்குறைவாகப் பேசவும் ஆரம்பித்தனர்.

இது விக்ரமுக்குப் பிடிக்காததால் அவர்களது தொடர்பு குறைக்கப்பட்டு, முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டது. வசந்த் மட்டும் இன்றுவரை அவன் மீது உண்மையான அன்பு கொண்ட அதே நண்பனாக இருக்கிறான்.

அப்படி உண்மையான அன்பு கொண்டவனாக இருக்கவில்லையென்றால் அவனை இன்னொரு திருமணம் செய்யச் சொல்வானா? அதுவும் மனைவி இறந்த இரண்டே மாதங்களில்…?

“ப்ச்..!” என்றபடி தலையை உலுக்கிக் கொண்டவன்¸ கடிகாரத்தைப் பார்த்தான்… மணி ஐந்தைக் கடந்திருந்தது.

மேனேஜரை அழைத்தவன் “ஏன் இன்னமும் லோடு வரவில்லை?” என்று கேட்டான்.

தயங்கியபடியே “சார்… லோடு வந்து ஒரு மணிநேரம் ஆயிடிச்சு. இறக்கி வைக்கிறாங்க சார்” என்று அவன் சொல்ல “லோடு வந்தவுடனே என்னிடம் சொல்வதற்கென்ன?” என்றான் சற்றே கோபமாக… ஆனால் தாழ்ந்த குரலில்.

“நான் உங்ககிட்ட சொல்றதுக்காக ரூமுக்கு வந்தேன் சார்… நீங்க ரொம்ப கவலையோட எதையோ யோசிச்சிட்டு இருந்தீங்க… பொருள் இறக்கி முடிக்கிறதுக்கு எப்படியும் நேரம் எடுக்குமே… முடியும் முன்னால் உங்களிடம் சொல்லிவிடலாமென்று நினைத்திருந்தேன். அதற்குள் நீங்களே கூப்பிட்டுட்டீங்க..” என்றான்.

வேலையில் தன் கவனமின்மையை நினைத்து வெட்கியவனாக சில நொடி அமைதியானவன் “எல்லாம் இறக்கியாச்சா..? நாம அனுப்ப வேண்டியதெல்லாம் பண்டல் போட்டாச்சா..?” என்று கேட்டவாறே எழுந்து வாசலை நோக்கி நடந்தான்.

“இன்னும் அஞ்சி நிமிஷத்துல இறக்கிடுவாங்க சார்… அனுப்ப வேண்டிய பண்டலெல்லாம் லாரி பக்கத்துல கொண்டு வைச்சாச்சு…” என்றபடியே விக்ரமைத் தொடர்ந்தான்.

அவர்களது தயாரிப்புகளில் விதவிதமான கோரைப் பாய்கள் இடம் பிடித்திருந்தன. திருமணப்பாய்¸ முகூர்த்தப்பாய்¸ சமபந்திபாய்¸ சாதாரணமாக பயன்படுத்தும் பாய் என அனைத்தும் அவர்களது தொழிற்சாலையில் தயாராகும்.

திருமணப் பாய்களில் விளக்கு¸ மயில்¸ யானை போன்ற விலங்குகளின் உருவங்களோ அல்லது கிருஷ்ணர்¸ தேர்¸ விளக்கு உருவங்களோ இடம் பெற்றிருக்கும். சமபந்தி பாய் நீளமாகவும் ஒன்றரை அல்லது இரண்டடி அகலம் கொண்டதாகவும் இருக்கும்.

நல்ல தரமான கோரைகளை தமிழ்நாட்டில் கோரைப்புற்கள் அதிகமாக கிடைக்கும் மாவட்டங்கிலிருந்து நாகர்கோவிலுக்கு இறக்குமதி செய்து… அவற்றை சுத்தம் செய்து¸ உயரத்தைப் பொருத்து எந்தெந்த பாய் தயாரிப்புக்கு பயன்படுத்துவதென பிரித்தெடுக்கப்படும். பல அளவுகளில் பாய்கள் தயாரிக்கப்படுவதால் இப்படி பிரித்தெடுப்பார்கள்.

சாதாரண கோரையை சாயமேற்றி பல வண்ணங்களுக்கு மாற்றியபின், மெஷினில் வெள்ளை மற்றும் மற்ற நிறமுடைய கோரைகளை சரியான விகிதத்தில் சரியான சமயத்தில் செலுத்தி விதவிதமான உருவங்கள் பதிந்த பாய்கள் தயாரிக்கப்படும்.

அதன்பின்னர் பாயின் ஓரங்களில் நீண்டிருக்கும் கோரையை கத்தரித்து¸ துணியால் தைப்பதற்கும் தனித்தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். கடைசியாக பாய்களின் அகலப் பகுதியில் நீண்டிருக்கும் நூலை முடிச்சிடும் பணி அதற்கான வேலையாட்களால் செய்யப்பட்டு¸ பாய் முழுமையடையும்.

தொழிற்சாலையின் அலுவலகப் பகுதியைத் தவிர்த்து ஒவ்வொரு கட்டிடமும் வேலை எளிதாக நடப்பதற்கு அதிக நீளமுடையதாக இருக்கும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெறும்.

அலுவலகப்பகுதியை ஒட்டி ஒரு ஷோரூமும் சற்று பெரிய அளவில் அமைத்திருந்தான். சுற்றுவட்டாரப் பகுதியிலிருக்கும் சில்லறை வியாபாரிகளுக்கும்¸ கடைகளுக்கும் சப்ளை செய்வது மட்டுமில்லாமல்¸ வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்தான். மற்ற மாநிலங்களுக்கு கோரைப் பாய்களை ஏற்றுமதி செய்துவிட்டு¸ அங்கிருக்கும் பிளாஸ்டிக் பாய்¸ கண்ணாடி இழைப் பாய்¸ ஜீஎஸ்எம் பாய்¸ ஜீசீஎஸ் பாய்¸ கிளாஸ் சில்க்கி பாய் போன்றவற்றை இறக்குமதி செய்து அதை இங்கு விளம்பரப்படுத்தி விற்பனையும் செய்தான்.

வெளியே நின்றிருந்த லாரியிலிருந்து இறக்கப்பட்ட பொருட்களை மேலோட்டமாக பார்வையிட்டவாறு “எல்லாத்தையும் குடோனுக்கு அனுப்பி வைச்சிடுங்க… நாளைக்கு காலையில நாலு பேரை அனுப்பி டேமேஜ் ஐட்டம்ஸை தனியா வைக்கச் சொல்லிடுங்க…” என்று பணித்தவன்¸ “ஓ.கே. சார்…” என்ற மேனேஜரின் குரலைக் கேட்டவாறே அலைபேசியை எடுத்து மும்பையில் வசிக்கும் தொழில்முறை நண்பனான சம்பத்துக்கு அழைத்தபடி தன்னறை நோக்கி நடந்தான்.

அழைப்பை ஏற்று “ஹலோ..!” என்றது ஒரு பெண் குரல்.

“கன்னியாகுமரியிலிருந்து விக்ரம் பேசுகிறேன்… மிஸ்டர் சம்பத்திடம் பேச முடியுமா..?” என்று இவன் தெளிவான ஆங்கிலத்தில் கேட்க¸ “நான் சம்பத்தோட சிஸ்டர் ஷர்மிளா பேசுறேன்… விக்ரம் எப்படி இருக்கீங்க?” என்று தமிழில் பேசினாள் அவள்.

அவளுக்கு பதிலளித்து தானும் நலம் விசாரித்தவன்¸ தமையனிடம் போனை கொடுக்க சொன்னான்.

“சம்பத் லோடு இங்கே வந்தாச்சு… இங்கிருந்து வண்டி நாளைக்கு காலையில கிளம்பிடும்” என்றவன்¸ “அமௌண்டை ஆன்லைனில் டிரான்ஸ்பர் பண்ணிடட்டுமா?” என்று கேட்டான்.

வேண்டாமென்று மறுத்தவன்¸ “இங்கே டி.டி.யாகத்தான் வாங்கும் பழக்கம் இருக்குது… நீ அப்படியே அனுப்பிடு” என்றான்.

டி.டி.யை யார் பெயருக்கு எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று கேட்டு குறித்துக் கொண்டவன் அழைப்பை துண்டித்தான்.

மறுபடியும் மேனேஜரை அழைத்து “லோடு ஏற்றி முடித்துவிட்டால் டிரான்ஸ்போர்ட்டுக்கான பணத்தை அக்கௌண்டட்கிட்ட வாங்கி செட்டில் பண்ணிட்டு நீங்களும் கிளம்பிடுங்க” என்றவன்¸ டி.டி. தொடர்பாக தான் குறித்து வைத்திருந்ததை அவரிடம் கொடுத்து “இதை நாளைக்கு எடுத்து அனுப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு கடிகாரத்தை நோக்கினான்.

மாலை ஆறு மணி.

ஐந்து மணிக்கே தயாரிப்பில் ஈடுபடும் பணியாட்களும்¸ ஐந்தரைக்கு துப்புரவுத் தொழிலாளர்களும் கிளம்பிவிடுவதால் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஐந்தரைக்கு கிளம்பிவிடும் மேனேஜரும் அக்கௌண்டன்ட்டும் கூட லோடு ஏற்றிக் கொண்டிருப்பதாலேயே தாமதம்… கூடவே ஏற்றி இறக்குவதற்கான தொழிலாளர்கள். அந்த வேலையும்கூட பின்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இவனுக்கு இடம் வெறிச்சென்றுதான் தோன்றியது.

இனி வீட்டுக்குப் போக வேண்டும்.

அவனுக்கு வீடு செல்லவே மனமில்லை… இங்கே ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருப்பவனின் மனம் வீடு சென்றதும் சோர்ந்துவிடும். பரிவான பார்வையைக் காட்டும் பாட்டி¸ குழந்தை… அவளைப் பார்த்தாலும் மனம் வலிக்கத்தான் செய்யும். ஆனாலும் இன்று அவளுக்கு உடல்நிலை சரியில்லாததால் சீக்கிரமே போகத்தான் வேண்டும். அத்தோடு… ‘இங்கும்தான் செய்வதற்கு ஒன்றுமில்லையே’ என்றெண்ணியவன் வீட்டுக்குச் செல்ல தயாரானான்.

நேரத்தை சற்று கடத்த விரும்பி எல்லாப் பொருட்களும் அதனதன் இடத்தில் இருக்கிறதா என்று அறையை மேலோட்டமாகப் பார்த்தவன், சீட்டிலிருந்து எழுந்தபோது செல்போன் ஒலித்தது.

பாக்கெட்டிலிருந்ததை எடுத்துப் பார்த்தவன்¸ விரக்தியாய் சிரித்துவிட்டு மீண்டும் தன் இடத்திலே அமர்ந்துகொண்டான்.

போனை ஆன் செய்து “சொல்லுடா…” என்றவனிடம் “வீட்டுக்கு கிளம்பிட்டியா விக்ரம்?” என்று கேட்டான் வசந்த்.

“ஆமாடா..! ஏன் கேட்கிற?” என்றான் இவன் கேள்வியாக.

நண்பனிடம் தயக்கமின்றி பேசிப் பழகியவனாதலால் காலையில் நண்பன் கோபம் கொண்டதை மறந்தவனாகப் பேசினான் வசந்த்.

“நான் சொன்னதை கொஞ்சம் யோசிச்சிப் பாருடா… உனக்காக இல்லை குழந்தைக்காக! அவ முகத்தைப் பார்த்துட்டு யோசிடா..! அது ஏன்டா அம்மா இல்லாமல் தவிக்கணும்…” என்று பேசிக் கொண்டிருந்தவன் மறுமுனை சத்தமில்லாமல் அமைதியாக இருக்க¸ “ஹலோ!! விக்ரம் லைன்ல இருக்கியா..?” என்றான் பதற்றமாக.

“ம்ம்… இருக்கேன்¸ சொல்லு…” என்று தான் லைனில் இருப்பதை உறுதிபடுத்தியதும் “அதான் சொல்லிட்டேனே..!” என்றான் அவன்.

“வீட்ல போய் கொஞ்சம் நிதானமா யோசி… தாய் இல்லாம ஒரு பச்சைக் குழந்தையை… அதுவும் பெண் குழந்தையை வளர்க்குறது முடியாதுன்றது உனக்கே புரியும்! ப்ளீஸ்டா.. நல்லா யோசி..! உன் சிஸ்டர் கூட அப்படித்தான் பீல் பண்றா…” என்றான். தான் மட்டுமல்ல தன் மனைவியின் கருத்தும்கூட அதுதான் என்பதை அறிவுறுத்தும்படி.

பலர் சொல்லும்போது சரிதான் என்று ஏற்றுக் கொள்ள மாட்டானா என்ற எண்ணம் அவனுக்கு.

“சரிடா… நான் போனை வைச்சிடுறேன்” என்றான் விக்ரம் நண்பனின் பேச்சுக்குப் பதில் பேசாமல்.

“கோவமாடா…?” என்று வசந்த் கேட்க¸ “ச்சே..! உன்கிட்ட நான் கோவப்படுவேனாடா..? நீ என் நல்லதுக்குதான் சொல்றேன்னு எனக்குத் தெரியாதா..?” என்று நண்பன் மேல் தனக்கிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியவன்¸ “ஆனா…” என்று இழுத்தவாறே பேசினான்.

“எனக்கு வருத்தம் என்னன்னா… ஒரு பிசினஸ்மேன் மனைவி இறந்த ரெண்டே மாசத்துல அடுத்த கல்யாணம் பண்ணிக்கிட்டா… என் ஒர்க்கர்ஸ்¸ அக்கம் பக்கம் உள்ளவங்க எல்லாரும் என்னைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக நினைப்பாங்க… இதை யோசிக்காமலே பேசுகிறாயே..!!” என்றான் வருத்தத்தோடு.

“ஏன் விக்ரம்..? நீ சொல்லும் இந்த உன்னோட எம்பிளாயிஸ்¸ அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு உன்னோட கஷ்டம் தெரியுமாடா..? அப்படி யாராவது எதையாவது சொன்னாங்கன்னா… அவங்களை உன் வீட்டிலிருந்து ரெண்டுநாள் குழந்தையை பார்த்துக்க சொல்லு! அதற்குத் தயாராக யாராவது இருந்தால் எனக்கு அதுவே போதும்… நானும் உன்னை இன்னொரு திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தமாட்டேன்” என்றான் கோபத்துடன்.

“ஏன் வசந்த் கோவப்படுறே?” என்று கேட்க “பின்னே என்னடா..? உனக்காக… உன் குடும்பத்துக்காக வாழுன்னு நான் சொல்றேன்… நீ என்னடான்னா ஊரும் உலகமும் என்ன பேசும்னு கவலைப்படுறே…” என்றான் எரிச்சலடைந்தவனாக.

விக்ரம் பேசாமல் அமைதியை கடைபிடிக்க “அப்படி அந்த ஊரும் உலகமும் உன்னைப் பற்றியே பேசிட்டு இருக்கிறதுக்கு… இந்த உலகத்துல நீ ஒருத்தன்தான் மனுஷனா இருக்கியா என்ன?” என்று கேட்டான் கோபம் தீராமல்.

“கோவப்படாதே வசந்த்..!” என்று சொல்லி நண்பனை அமைதிப்படுத்தியும் அமைதியாகாமல் தொடர்ந்தான் அவன்.

“அதோட இந்த ரெண்டும் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்… பண்ணலன்னாலும் தான் பேசுறதை பேசத்தான் செய்யும்…” என்று யதார்த்தத்தை எடுத்துக் கூறவும்¸ “நீ என்ன சொன்னாலும் எனக்கு மனைவியா ஒருத்தி தேவையில்லை” என்றான் தன் முடிவில் பிடிவாதமாக. வேலைக்கு வேண்டுமானால் ஆள் எடுத்துக் கொள்ளலாம் என்னும்விதமாக அவன் சொல்ல அதைப் புரிந்துகொள்ளாமல் பேசினான் வசந்த்.

“டேய் முட்டாள்… நான் சொல்றது உனக்குப் புரியுதா… இல்லையா..? நீதான் உனக்கு மனைவி தேவையில்லைன்னு ஆயிரம் தடவை சொல்லிட்டியே! ஏன்னா… நீ பெரிய கர்மயோகி… முற்றும் துறந்த மகாமுனிவன் என்பதை நான் ஏத்துக்குறேன். ஆனால்… நான் சொன்னது உன் குழந்தைக்கு ஒரு அம்மா… கேட்டுதா..? அ..! ம்..! மா..! உன் குழந்தைக்கு ஒரு அம்மா தேவை. அதுவும் ரொம்ப சீக்கிரமே..!” என்று அழுத்திச் சொன்னவன் “நல்லா யோசி விக்ரம்… நான் இப்போ போனை வைச்சிடுறேன். நீ வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு யோசி..!” என்றவன் வைத்துவிட்டான்.

செல்போனை வெறித்தவாறு அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தவன்¸ ஒரு பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டுத் தன் பிரீப்கேஸை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

எழுந்த நிமிடத்தில் மீண்டும் செல்போன் ஒலித்தது.

Advertisement