Advertisement

அத்தியாயம் 11

“அத்த….”, காரில் இருந்து இறங்கி ஓடி வந்த பரத்தை சிறு புன்னகையுடன் நெருங்கி அவன் கையில் இருந்த புத்தகப் பையை வாங்கிகொண்டாள் மாயா.

அவளிடம் தன் சுமையைக் குடுத்த பரத், வாசலில் காலனியை கழட்டிவிட்டு உள்ளே கூடத்தில் கிடந்த சோஃபாவில் அமர்ந்து கார்ட்டூன் நெட்வொர்க் பார்க்க ரிமோட்டில் பட்டனை தட்டினான். அடுத்ததாக, “அத்த ஸ்னாக்ஸ்…”, கேட்டான்.

மாயவிற்கு புன்னகை விரிந்தது. அடுக்களை சென்று ஒரு சிறிய தட்டில் அவனுக்கான சிற்றுண்டியை வைத்து, எடுத்துக் கொண்டு வந்து “டடாங்”, என்று பரத்திற்கு தெரியுமாறு காண்பித்தாள்.

“என்னனு சொல்லு பாப்போம்”

கிஸ்மிஸ் தூவி அலங்காரமாக இருந்த அந்த கேக் துண்டைப் பார்த்து, “ஹை கேக்”, என்று பரத் மகிழ, மாயா கேக்கில் ஒரு விள்ளலை எடுத்து அவனது வாயில் ஊட்டி விட்டாள்.

“ஹா.. இது பிஸ்கெட் கேக் அன்னிக்கு ரெசிபி பாத்து நாங்களே பண்ணினோமே அதுதான?”, அவன் கவனம் முழுவதுமாக சிறுதீனியில். தட்டை மாயாவிடம் இருந்து வாங்க கை நீட்ட..

தட்டை பின்னுக்கு இழுத்து, “நோ போ போய் ஹாண்ட் வாஷ் பண்ணிட்டு வா”

ஒரு காலை தரையில் உதைத்து எழுந்து நின்ற பரத்திடம், “ஹும்..”, சின்னதாய் மறுதலிப்பு. ஆனால் அத்தையின் குணம்தான் அவனுக்கு தெரியுமே? செய் என்றால் அதை முடித்தால்தான் அடுத்த பேச்சே அவளிடம் வரும். வேறு மார்க்கமில்லை. முகத்தை சுருக்கி, “மாம் தான் பெஸ்ட். எனக்கு அப்டியே ஊட்டி விட்டுடுங்க தெரியுமா?”, அத்தைக்கு கேட்கும்படி முணுமுணுத்து சிங்க் சென்றான்.

தலையை சிலிப்பி சென்ற பரத்திடம் அப்படியே தம்பியின் சாயல். சிறு புன்னைகையோடு, அருகே வந்த பிள்ளையை தலை கோதி, “ஏன்னா அது அம்மா, நா அத்தை”, என்றாள் மாயா.

தட்டத்தை கையில் வாங்கிய பரத் சட்டென நினைவு வந்தவனாக, “அத்தை, அம்மா உங்க கிட்ட ஒரு கவர் குடுக்க சொன்னாங்க என் பாக்-ல இருக்கு.”, என்றான்.

நேற்று ஷானு வந்தபோது மாமாவும் அத்தையும் இருந்ததால் மாயாவால் அவளுடன் தனித்துப் பேச முடியவில்லை, என்பதை மாயா நினைவு கூர்ந்தாள். அப்படி இருந்தும் ‘ஒரு மிரட்டல் வந்தது’ என ஷானு கோடி காட்டி இருந்தாள். ஒரு வேளை அது சம்பந்தமாக இருக்குமோ? என்ற யோசனையோடு புத்தகப்பையை பிரித்து, உள் உள்ளறையில் இருந்த கவரைப் பிரித்து பார்த்தாள். பார்த்து விழித்தாள். அது வெறும் வெள்ளைத்தாள்.

சரியாக அதே நேரம், ஷானுவிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக அழைப்பை எடுத்த மாயா, “என்ன ஷானு.. என்ன குடு..”

அவளை இடைவெட்டி, “அண்ணீ, பரத்தோட லன்ச் பாக்ஸ் திறந்து இருந்ததா அண்ணீ?”, ஷானு.

அவள் மதிய உணவினை சொல்லவில்லை என்பது மாயாவுக்கு புரிந்தது. “இல்லையே ஷானு கரெக்ட்டா டைட்டா தான் மூடி இருக்கு”, வந்த அலுவலக கவர் சீலிடப்பட்டு பிரிக்காமல் தான் வந்தது என்பதை தெரிவித்தாள்.

“இல்ல.. காலைலே கொஞ்சம் அவசரவசரமா கிளம்பினோம், சரியா மூடினேனா, யாராவது தட்டி கொட்டி விட்டுட்டாங்களோன்னு திடீர்னு சந்தேகம் வந்தது அதான் போன் பண்ணேன்.”

“ஹ்ம்ம். ஒன்னும் பிரச்சினையில்ல, எதுவும் கொட்டல”

“அப்பறம் அண்ணீ.. அவன் ஸ்கூல் ஐ டீ கார்ட் கொண்டு வந்துட்டானா? ஏற்கனவே ரெண்டு முறை தொலைச்சிட்டான்”

“ஹ்ம்ம். பாத்துட்டு போன் பண்ணட்டுமா?”

“வேணாம் அண்ணீ, ஒரு மெசேஜ் அனுப்புங்க போதும்”, என்று வைத்து விட்டாள்.

பரத்தின் அடையாள அட்டையில் என்னவோ குறிப்பு இருக்கிறது, என்பது மாயாவுக்கு புரிய அதிக வினாடிகள் தேவைப்படவில்லை. ஆனால், கவலை வந்தது.

‘பரத்தோட ஸ்கூல் பேக்-கைக் கூட சோதனை செய்யும் அளவிற்கு போற எதிரி வேற என்னதான் செய்ய மாட்டான்? இவ ஏன் ஆபத்தை விலைக்கு வாங்கறா?’, என நினைத்து,  ‘சரிதான், நானும் அவரேஜா யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். அவ வேலையே அதுதானே?’, வாய்விட்டு சொல்லியவாறே பரத்தின் அடையாள அட்டையை எடுத்து பார்த்தாள். ஏதும் வித்தியாசம் தெரியவில்லை. பின் அதன் ஹோல்டரில் இருந்து ஐடி கார்டை உருவி தனியே எடுத்தாள்.

ஹோல்டரின் உள் பகுதியில் ஒரு காகிதம் ஒட்டி இருந்தது. அதன் மேலே ஐ டி கார்ட் செருகி இருந்ததால் இது வெளியே தெரியவில்லை. “அண்ணீ, என் போன் ஆபிஸ்-ன்னு  எல்லாமே டாப் (tap) பண்ணி இருக்காங்க. அது யாருன்னு கண்டுபிடிக்கணும். நா, சூர்யா, சிவராமன், துல்கர் இந்த நாலு பேரையும் ஃபாலோ பண்றவங்க யாரு-ன்னு தெரியணும். *** டிடெக்டிவ் ஏஜென்சி-யை காண்டாக்ட் பண்ணி இந்த வேலைய குடுங்க. அன்ட், அந்த ஏஜென்சியோட பேசும்போது உங்க ஆபிஸ் மெயில் இல்ல மெசஞ்சர் யூஸ் பண்ணுங்க.”, என்று ஷானு அதில் எழுதி இருந்தாள். அவசரமாக எழுதி இருப்பாள் என்று தோன்றியது.

ஷானுவின் திட்டமிடலைப் படித்ததும் மாயவிற்கு ‘ஆர்ட் ஆஃப் வார்’ என்ற  பதம் நினைவில் எழுந்தது. ‘எதிரி எதிர்பார்க்காத இடத்தில் தாக்கு’. எதிரி ஷண்மதியின் அலுவலகத்தை.. வீட்டை கண்காணிக்கலாம். அவளது அனைத்து தொடர்புகளையும் ஒட்டுக்கேட்கலாம். ஆனால், மாயாவின் வீட்டை? அலுவலகத்தை? வாய்ப்பு மிகக் குறைவு. அதிலும் அவளது அலுவலகத்தில் வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அங்கிருந்து குறிப்பாக பொதுவான மின்னஞ்சலில் துப்பறியும் நிறுவனத்திற்கு தன்னைத் தகவல் சொல்லச் சொன்னது, கச்சிதம் என்றே தோன்றியது.

ஷானுவிற்கு தகவல் அனுப்ப அலைபேசியை எடுத்து புலனத்தை (வாட்ஸப்) அணுகினாள். அதில் அவளது முகப்பு படத்தில் தெரிந்த கணேஷ் பரத் மற்றும் ஷானு மூவருமாக சிரித்தபடி நின்ற போட்டோ தெரிய, மாயாவின் முகத்தில் கவலை ரேகை படர்ந்தது. பின் பெருமூச்சுவிட்டு கட்டைவிரல் உயர்த்திய எமோஜியை ஷானுவிற்குத் தகவலாக அனுப்பினாள்.

மறுநாள் மாலையில் இருந்து அந்த துப்பறியும் நிறுவனம் தனது வேலையை சத்தமின்றி துவங்கி இருந்தது.

)))))))))))))))))))))))))))))))))))

“நோ நோ நோ நீங்க என்ன சொன்னாலும், எத்தனை ஆதாரம் தந்தாலும் அவர் மேல நடவடிக்கை எடுத்தது தப்பு. அங்க நடந்த கலவரத்துல ஏழு பேர் இறந்துருக்காங்க. இதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?”

“சார், நாம அரெஸ்ட் பண்ணப்போற விஷயம் முன்னாடியே அவருக்கு தெரிஞ்சிருக்கு. அப்டின்னா என்ன அர்த்தம்? நம்ம டிபார்ட்மெண்ட்-ல அவருக்கு கைக்கூலி இருக்காங்க ன்னுதானே?”

“இருக்கலாம். இல்ல அரெஸ்ட் வாரண்ட் குடுத்த கோர்ட் ஆளுங்க யாராவது அவனுக்கு சாதகமா இருக்கலாம். அந்தாளுக்கு எங்க ஆளுங்க இல்லன்னு சொல்லுங்க பாக்கலாம்?. ஆறு சானல் அவர் கைக்குள்ள இருக்கு. அதுல ரெண்டு நேஷனல் நியூஸ் சானல். தவிர ரெண்டு பத்திரிக்கை கைவசம் வச்சிருக்கான். கவர்ன்மென்ட் என்ன பண்ண போகுதுன்னு நமக்கு தெரியறதுக்கு முன்னாடி அவனுக்குத் தெரியுது. இந்த எல்லாத்துக்கும் மேல கட்சி சப்போர்ட் வேற இருக்கு,”

“சார் இத்தனை ஆதாரங்கள் இருக்கே? அதனாலதான்…”

“அதல்லாம் குப்பை-னு ஆக்கி எனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை ன்னு ஈஸியா வெளியே வந்துடுவான். நாந்தான் அவரை மாதிரி முகமூடி போட்டுட்டு பண்ணினேன்-ன்னு சொல்றதுக்கு நாலு பேரை ரெடியா வச்சிருப்பான்.”

“ஸார், இந்த ஆதாரமெல்லாம் இண்டர்போல்-லேர்ந்து போன வாரம் வந்தது. என்ன ஆக்ஷன் எடுத்தீங்கன்னு கேட்டா என்ன சொல்றது?”

“மேலிடத்துல பேச சொல்லுங்க”, பதில் சொன்னவர் நரை கூடிய நல்ல திடகாத்திரமான மனிதர். பெயர் ரிஷிகுமார் சின்ஹானியா. இன்னும் இரண்டு மாதங்களில் ஒய்வு பெறப்போகும் வயது.

குற்றம் சாட்டும் குரலில், “ஸார் நீங்கதான் மேலிடம்”, என்ற வீரேந்தர் பாட்டியா, நம் சைலேந்திர பாபு சாயலில் இருந்தார். முகத்தையோ உருவத்தையோ வைத்து கணிக்க முடியாத மார்க்கண்டேய வயது. இருவரும் பேசிக்கொண்டிருப்பது மத்திய புலனாய்வுத்துறை எனப்படும் சிபிஐ யின் தலைமை அலுவலகத்தில்.

மேலதிகாரியான சின்ஹானியாவுடனான உரையாடல் வீரேந்தரைக் கண் சிவக்க வைத்திருந்தது. கோபத்தில் தாடை இறுகி இருக்க,  கைகளை வலுக்கட்டாயமாக பின்னால் கட்டி இருந்தார். முறுக்கிய தசைகளில் பச்சை நரம்பு ‘வெடிக்கவா’ என்று கேட்டது. பின்னே? இன்டர்போல் தகுந்த ஆதாரங்களைக் குடுத்து குற்றவாளி என்று சொல்லப்பட்ட ஒருவனை கைது செய்ய கடந்த ஒரு வாரமாக பகலிரவு பாராமல் வேலை செய்து, அவனது கைதுக்கான வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, கைது செய்ய சென்ற இடத்தில்.. காரணமின்றி  திடீரென ஒரு கலவரம் வெடித்தது. அதிலும் சரியாக இவர்கள் சென்ற நேரத்தில். அக்கலவரத்தில் பொதுமக்கள் ஏழு பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் தேடிச்சென்ற அக்குற்றவாளியோ இப்போது  காணாமல் போனவர்கள் பட்டியலில். கோபம் வராமல் என்ன செய்யும்?

சின்ஹானியா வீரேந்தரின் கேள்விக்கு பதிலளிக்க சில நொடிகள் எடுத்துக் கொண்டார். அவரது முகம் வருத்தம் கோபம் இயலாமை என்று கலவையான பாவம் காண்பித்தது. பின் அழுத்தமாக வீரேந்தரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்து, மேஜையின் இருபுறமும் கைகளை வைத்து விரல்களை கோர்த்தவாறே, “இல்ல, நாம வெறும் பப்பட்ஸ்.”, “மேலிடம்ங்கிறது கவர்ன்மென்ட். அதாவது அரசியல்வாதிங்க.”, டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியபடி.. “அவங்களுக்கும் ஒரு மேலிடம் இருக்கு.”, என்று விட்டு நிறுத்தினார். அது யார் அரசியல்வாதிகளுக்கும் மேலிடம் என்று புரியாமல் விழித்த வீரேந்தரைப் பார்த்து,  “யாருன்னு கேக்கறீங்களா?”

“…”

சுழலும் நாற்காலில் சாய்ந்துகொண்டு, “கார்போரேட்ஸ்.. பிசினெஸ் பண்றாங்கல்ல பெரு முதலாளிகள்.., அவங்க… அவங்க குடுக்கற கட்சி நிதி.. , தேர்தல் நிதி.., நிவாரண நிதி.. இதெல்லாம்தான் மேலிடம்.”, என்று சொல்லி ஆழ்ந்து வீரேந்திரைப் பார்த்தவர், “வீரா.. தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க. நீங்க இப்போ சொல்ற ஆள் மேல ஆளுங்கட்சின்னு இல்ல, எதிர்கட்சி கூட நடவடிக்கை எடுக்க மாட்டாங்க. ரெண்டு கட்சிக்கும்  இவன் மேல சாப்ட் கார்னர் உண்டு. இப்போ லேட்டஸ்ட் நியூஸ்.. அவன் ஜாமீனுக்கு அப்ளை பண்ணியிருக்கான்”

“ஸார், அப்போ ஒண்ணுமே பண்ண முடியாதா ஸார்?”, வீரேந்தர்.

“அந்தாளு விக்கற வீடியோ எல்லாம் டார்க் வெப்-ல இருக்குன்னு தான சொல்லறீங்க? டெக்னிகல் டீம் கிட்ட சொல்லுங்க, இல்ல நீங்களே பிரைவேட்-டா யாரையாவது நம்பகமான ஆளுங்கள கூப்பிட்டுக்கோங்க. ஒரு வீடியோ இல்லாம எல்லாத்தையும் டெலீட் பண்ணுங்க.”

“சார் அதெல்லாம் காப்பி, ஒரிஜினல் அந்த ஆள் கிட்ட இருக்கும். அதை என்ன பண்றது?”

“நிதானமா வேற வழில பேசி வாங்கலாம். நா அதுக்கு ஏற்பாடு பண்றேன்.”, என்று விட்டு, “நடந்த கலவரத்துக்கு உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல-ன்னு சொல்லி உங்க மேல எந்த விசாரணையும் வராம பாத்துக்கறேன்.”, என்று தீர்மானமாக சொல்லிவிட்டு அங்கிருந்த கோப்பை கையில் எடுத்துக்கொண்டார். அதன் பொருள்  ‘பேச்சு முடிந்தது. நீ போகலாம்’.

வீரேந்தருக்கு இனி அங்கு நின்று எந்த ஒரு பயனும் இல்லை என்று தெரிந்தது. “சார் ஒரு விஷயம், டார்க் வெப் ட்ரேஸிங்-க்கு நா வெளி ஆளுங்கள அரேன்ஜ் பண்ணிக்கறேன்.”

கோப்பிலிருந்து தலை நிமிரத்தாமல் “ஓகே, நோ ப்ராப்ளம்”, வந்தது. சின்ஹானியாவின் குற்ற உணர்வு வீரேந்தருக்கு புரிந்தது. நல்ல மனிதர், நேர்மையானவர். ஆனால் அவர் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றது என்ன செய்வது? ஓய்வு பெறும் வயதில் அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளாமல் இருக்கப் பார்க்கிறார். இல்லையென்றால் சின்ஹானியா சாகும்வரை ஏதேனும் வழக்கு போட்டு அவரது பணப் பலன்களை தாமதப்படுத்துவார்கள் என்பது உலகறிந்த ஒன்று.

தனது மேலதிகாரியிடமிருந்து வெளியேறி தனது அறைக்கு வந்த வீரேந்தர் இருக்கையில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு ஆழ மூச்சிழுத்து தன்னை சமன் செய்ய முற்பட்டார். அவரது மனக்கண் முன் பென்சிலால் எழுதப்பட்ட சில கசங்கிய காகிதங்கள்…

“என்ன ஏன் இங்க அனுப்பினீங்கண்ணா? இங்க சாப்பாடு தர்றாங்க. ஆனா நம்ம வீட்ல உப்பு தொட்டு சாப்டாலும் நானு, நீதா அக்கா, நீயி, சம்சு ன்னு எல்லாரோடையும் விளையாட முடிஞ்சது. இங்க யாரும் யாரோடையும் விளையாட கூடாது சொல்றாங்க.”

“வீட்டுக்கு கூட்டிட்டு போ அண்ணா, நா வேணா ஒரு வேளை சாப்பிடாம இருக்கேன். பசிக்குதுன்னு கேக்கவே மாட்டேன். அம்மாகிட்ட சொல்லு அண்ணா.”

“நீ அன்னிக்கு ஹாஸ்பிடல்ல அப்பாகிட்ட சொன்னியே? நான் ரிக்ஷா ஓட்டியாவது எங்களை காப்பாத்தறேன்னு ? இன்னும் அப்பா ஹாஸ்பிடல்ல தான் இருக்காரா? அப்போ ஏன் பக்கத்து வீட்டு மாமா அவர் செத்துப்போயிட்டார்ன்னு சொன்னாரு?”

“இங்க என் ட்ரெஸ்-சை எல்லாம் நானேதான் துவச்சிக்கறேன். என் போர்வை நானே தான் மடிச்சு வைக்கிறேன். இதெல்லாம் எனக்கு கஷ்டமா இல்ல. எனக்கு பால் வேணானு சொன்னா ஆயா அடிக்கிறாங்க. அந்த பால் குடிச்சா மயக்கமா வருது அண்ணா.”

“காலைல ஏந்திரிச்சா உடம்பெல்லாம் வலிக்குது. உச்சா போற இடத்துல ரத்தம் வருது. ரொம்ப எரியுது. ஏன்னு தெரியலண்ணா. நா செத்துபோயிடுவேனா? பயமா இருக்கு அண்ணா”

“வயிறு வலிக்கிது. என்ன இங்கிருந்து கூட்டிட்டு போண்ணா”  

வீரேந்தரின் மூடியிருந்த கண்களில் நீர் திரையிட்டது. அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு சொல்லி வீட்டிற்கு வந்தார். ஆடையை களைந்து இலகு உடை அணிந்து  கொண்டார். சமையலாள் செய்து வைத்திருந்த உணவினை சாப்பிட்டு, அங்கிருந்த பணியாட்களுக்கு வேறு வேறு வேலைகள் தந்து வெளியே அனுப்பினார்.

பின் அவரது படுக்கையறை சென்று கணினியை உயிர்ப்பித்து, டார்க் வெப் எனப்படும் இணையத்தின் கருப்பு பக்கத்தை அணுகினார். அதில் “KILL”, என்ற பெயரைக் கொண்ட குழுவிற்கான பிரத்தயேக உரலியை இடுகையிட்டு காத்திருந்தார். கணினியின் திரை கடவுச்சொல் கேட்டது. உள்ளிட்டார். பின் அக்குழுவினருக்கான வாட்சப் பக்கத்தை திறந்தார்.

இவரது மத்திய புலனாய்வு நிறுவனம் கைது செய்ய சென்றபோது கலவரத்தை தூண்டி ஏழு பேர் மரணத்திற்கு காரணமான அந்த சம்மந்தப்பட்ட நபரின் தகவல்களை அதில் ஏற்றினார்.

)))))))))))))))))))))))))))))))))))

இடம் : சூர்யா ஷானு அலுவலகம்

இப்போதும் இருவரின் முக்கியமான பேச்சுக்கள் எழுத்து மூலமே. “மேம், ஒரு விஷயம் கவனிச்சீங்களா? இந்த கொலைகளை செய்தவங்க எல்லாருக்குமே குடும்பம்னு ஒன்னு கிடையாது. அம்மா அப்பா, தாத்தா, பாட்டி னு எந்த ஒரு உறவும் அவங்க பாடிய க்ளைம் பண்ணல. ரெண்டு கேஸ்-ல..  இந்த கேஸயும் சேர்த்து சொல்றேன். தம்பி இருக்கான்-னு ரெக்கார்ட் இருக்கு. ஆனா, ரெண்டு பேரும் அடாப்டட் கிட்ஸ். அதுவும் லீகலா தத்து எடுக்கப்பட்டவங்க கிடையாது, ரோட்ல சுத்திட்டு இருந்தான்-ன்னு இந்த பொண்ணுங்களா பாத்து அடைக்கலம் குடுத்து இருக்காங்க-ன்னு அக்கம் பக்கத்துல இருக்கறவங்க சொல்லி இருக்காங்க. அப்டின்னா…”

“கொலை பண்ணினவங்க எல்லாருமே தனி ஆளுங்க, அவங்களுக்கு ஃபாமிலி கிடையாது. அதாவது ஆர்ஃபன்ஸ் ரைட்?”

“எஸ்.”

)))))))))))))))))))))))

ஜ்வாலாமுகி – சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயர் பலகையோடு உத்தர பிரதேசத்தின் ஒரு மூலையில் இருந்த அந்த பெரிய வீட்டின் உள்ளறை. அதில் இருந்த கணினி திரையில் மிர்சாபூர்-ரில் கலவரத்தைத் தூண்டி விட்டு தப்பிச்சென்றவனின் புகைப்படம் ஒளிர்ந்தது.

Advertisement