Advertisement

அத்தியாயம் 2

கணவனை பின்தொடர்ந்த உதிதா அவனிடம் ஏதும் பேச முயற்சி செய்யவில்லை…..

இப்போது நிலைமை சரி இல்லை என்பதை அறிவாள்.. 

அதுமட்டுமின்றி அவளுக்குமே என்ன பேசுவது???? எப்படி  ஆரம்பிப்பது என்று தெரியவில்லை …..

யுகன் அவன் தந்தை கார்த்திகேயனின் முன் சென்று நிற்கவும் உதிதாவும் தன் மாமனாரை பார்த்தபடி வந்து நின்றாள்….

“இருவரும் வீட்டிற்கு புறப்படுங்கள் …. இரவு ஒரு நபர் மட்டுமே இங்கு மருத்துவமனையில் தங்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள்…..

 நான் இருந்து நாளை காலை அம்மாவை

அழைத்து

வருகிறேன்!!!! ” என்றார் கார்த்திகேயன் .

“அப்பா நான் …..” என்று ஆரம்பித்தவனிடம்

 “இது உன் அம்மாவின் விருப்பம் …. கேட்பதும் கேளாததும் உன் இஷ்டம் யுகா” என்று மடக்கினார்.

“என்னமோ செய்யுங்க !!!!” என்று கோபத்துடன் சென்றவனின் பின்னால் செல்வதா இல்லை தன் பெற்றோரோடு செல்வதா என்று குழம்பி நின்றவளிடம்

“அப்பா அம்மாவிடம் பேசிவிட்டேன்மா …. அவர்கள் உன்னை நம் வீட்டிற்கு அழைத்து செல்வார்கள்!!! ” என்றார் மாமனார் .

“சரிங்க சார் …”என்று கூற வாயெடுத்த உதிதா “சரிங்க மாமா ” என்று சிரிக்கவும்

 “குட் மருமகளே… உங்க அத்தை சொன்னதும் அப்படியே கேட்டுகிட்டியே …..

என்ற பாராட்டு பத்திரத்தோடு அவள் தலையில் கை வைத்து ஆசி வழங்கிவிட்டு சென்றார்.

      இரவு சம்பிரதாயத்திற்கு உதிதாவை பார்த்து பார்த்து அலங்கரித்தார் அவள் பெரியன்னை காஞ்சனா .

 பெரியம்மாவின் மனம் பொருமி கொண்டிருந்தபோதும் வெளியே காட்டி கொள்ளாமல்  தனக்காக இத்தனை செய்யும் அவரிடம் எதுவும் சொல்ல முடியாமல் அமைதி காத்து அமர்ந்திருந்தாள்  .

“உதி திரும்பு….. இதை வைத்து விடணும்” என்று கூறிய யசோதாவிடம்

 “இவ்வளவு பூ வேணாம் யசோம்மா .கொஞ்சம் போதும்!!!! ” என்று உதிதா சிணுங்க

“பொம்பள புள்ள பூ வேண்டாம்னு சொல்ல

கூடாது உதிமா” என்று மகளை செல்லமாக அதட்டினார் .

மகள் அணிந்திருந்த வைர மாலையும் காதணிகளும் அவளது கன்னங்களின் ஜ்வாலைக்கு தோற்று கொண்டிருக்க பச்சை வண்ண பட்டுடுத்தி கொடி போல் மின்னும் மங்கையின் கழுத்தில் மஞ்சள் கயிறு எவ்வளவு அழகை கூட்டுகிறது  என்று வியந்து திருஷ்டி சுத்தினார் அன்னையான யசோதா .

“உங்க பொம்பள புள்ளைய நீங்க தான் கொஞ்சிக்கணும்!!!” என்று தன் உதட்டை பிதுக்கி அழகு காட்டியவளிடம்

 “அதற்கு தான் இப்போது உன் ஆள் வந்தாயிற்றே !! ஆல் தி பெஸ்ட் உதிம்மா ” என்று

அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் அனுப்பி வைத்தனர் அன்னையும் பெரியன்னையும்.

       அதுவரை யுகனை பற்றி தனித்து எதுவும் நினைக்க நேரமில்லாமையால் மனதில் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை …..

இப்போது சிங்கத்தின் குகைக்குள்

நுழைவதாய் கற்பனை எழுந்தவளுக்கு

 “இந்த அறைக்கு சிங்கத்தின் குகை எவ்வளவோ மேலாக தான் இருக்கக்கூடும் ” என்று வாய் விட்டே சொல்லலானாள் .

பின் ஏன் உதி நீயே எதையோ கற்பனை செய்து கொள்கிறாய்?????

 அவன் ஒரு சதவீதம் கூடவா நல்லவனாக இருக்க மாட்டான் ?????

 ப்ரணிதா செய்த தப்பிற்கு என்னை ஏன் தண்டிக்க போகிறான்????? என்றெல்லாம் மனக்குதிரையை ஓடவிட்டவளின் நம்பிக்கையை சுக்குநூறாய் கிழித்திருந்தான் அவள் கணவன் …..

நீ நினைப்பதை விட நூறு மடங்கு நான் கெட்டவன்!!!! என்பதை நிரூபிக்கும் விதமாய் வேங்கையாய் உள்ளே நுழைந்த யுகன்

அவனறையில் நின்றவளை கண்டு “பிரமாதம் !!!! ” என்று கை தட்டி  சிரிக்க ஆரம்பித்தான் .

எதற்காக இப்படி செய்கிறான்????? என்று மலங்க மலங்க விழித்தவளின் அருகில் சென்று

“இந்த நடிப்பெல்லாம் என்னிடம் வேண்டாம் ….. அன்றே நீ சொன்னாய் ….. உன் திருமணம் எப்படி நடக்கும் என்று பார்க்கிறேன் என்று சவால் எல்லாம் வேறு விட்டாய்…..

நான் தான் மடத்தனமாக அதை பொருட்படுத்தாமல் இருந்து விட்டேன் ….. இன்று அதையே உண்மையாக்கி என் வாழ்வில் விளையாட உனக்கு எவ்வளவு தைரியம் ????????” என்று அடுத்தபடியாக சீறினான்.

 எதற்காக இப்படி உளறுகிறான்????? என்று ஒரு கணம் குழம்பி பின் அன்றைய நிகழ்வை நினைவு கூர்ந்து

“ஐயோ நான் விளையாட்டிற்கு சொன்னதை நீங்கள் ….” என்றவளின் பேச்சை கையுயர்த்தி நிறுத்தினான் யுகன்.

“நீ என்ன பேசினாலும் அதை நம்பும் முட்டாள் நானில்லை ……

 என் அம்மாவையும் அப்பாவையும் உன் நடிப்பில் மயக்கலாம் …

 ஆனால் ஒரு நாளும் என்னிடம் உன் வேலையெல்லாம் பலிக்காது.

நீ இங்கே நிற்பதற்கு காரணம் என் அம்மா  . என் அம்மா மட்டுமே !!!!!

அவர்களுக்காக உன்னை ஆறு மாதங்கள் சகித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் …..

அதன் பிறகு சட்டப்படி உன்னை விவாகரத்து செய்து விடுவேன் …..

 நீ செய்த காரியத்திற்கு உனக்கு இந்த தண்டனை குறைவு தான் .

இது என்னுடைய ரூம்!!!!

இங்கே மனைவி என்ற பெயரில் உனக்கு எந்த உரிமையும் என்றைக்குமே கிடைக்க போவதில்லை ……

அங்கிருக்கும் டிரெஸ்ஸிங் ரூமை பயன்படுத்திக்கொள். நான் மீண்டும் வரும் போது நீ  என் கண்ணில் பட  கூடாது ” என்று பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியேறி விட்டான் .

 புயலுக்கு பின் அமைதி என்று இதை தான் கூறியிருப்பார்களோ என்று உணர்ந்த உதிதா தன் தலையை பலமாக இரு கைகளையும் துணைக்கு அழைத்து ஆட்டலானாள் .

 எதற்கும் சட்டென்று அழுதுவிடும் பழக்கம் இல்லாததால் ஒரு துளி நீர் கூட அவள் விழிகளில் எட்டி பார்க்கவில்லை….

 மாறாக நீ என்ன என்னை போக சொல்வது நானே போய்கொள்வேன் என்று வீறாப்பாய் கதவை நோக்கி நடந்தவளுக்கு தன் பெண்ணிற்கு நிகழ போகும் சுப நிகழ்ச்சிக்காக ஆவலோடு

வழியனுப்பி வைத்த யசோம்மாவும் பெரியம்மா காஞ்சனாவும் மனதில் நிறைந்தனர் .

இப்போது வெளியேறினால் அனைவருக்கும் வீண் கவலை அதுவும் பெரியப்பாவுக்கு???? என்று பலவாறு யோசித்த உதிதா அவன் காட்டி சென்ற அறைக்குள் புகுந்து கொண்டாள்.

    டிரெஸ்ஸிங் ரூம் என்று சொன்னானே ஒழிய அறை மிகவும் விஸ்தாரமாக காட்சியளித்தது . கட்டில் மெத்தை இரண்டு முரட்டு சோபாக்கள் கணினி மேஜை டீபாய் என்று அடங்கிய அந்த அறையை பார்த்து சற்றே பிரமித்து நின்றாள் உதிதா….

 இவனென்ன வர போகும் பொண்டாட்டிக்கு என்றே இந்த அறையை கட்டியிருப்பானோ?????

 என்று ஏளன சிரிப்பு ஒன்றை உதிர்த்தவள்

 அடுத்த நொடியே

ஒரு  வாய்ப்பு கூட கொடுக்காமல்

என்னமாய் பேசுகிறான்???? பிரணாவ் கூறுவது போல் இவன் கொடுங்கோல் ஆட்சியாளரே தான்!!! அதில் துளியும் சந்தேகமில்லை என்று வெகுமதியாக பாராட்டினாள்….

கூடவே

” இந்த ஆறு மாதங்களையும் சீக்கிரம் ஃபார்வேட் பண்ணிவிடேன்” என்று கடவுளிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தாள் …..

 பின் தப்பே செய்யாமல் இன்று எனக்கு நீ வழங்கியதை உனக்கு திருப்பி கொடுக்காவிட்டால் என் பெயர் உதிதாவே இல்லையே…. இங்கிருந்து போவதற்குள்  உனக்கு  ஏதாவது மறக்கவே முடியாதபடி ஒன்றை  செய்தே ஆக வேண்டும்   என்றொரு சபதத்தையும் மேற்கொண்டாள்.

 மனம் சற்று லேசாகவும் இனி என் கனவில் கூட நீ வர கூடாது என்று கணவனுக்கு  கட்டளை ஒன்றை

பிறப்பித்து விட்டு அங்கிருந்த கட்டிலில் சரிந்தவளுக்கு புயலென மறக்க நினைத்தவனின் நினைவுகளே தடம்புரண்டு ஓடியது……

கடந்த கால எண்ணங்களை அதன் போக்கில் ஓட விட்டு கண்களை இறுக்க  மூடி கொண்டாள் உதிதா …

லோட்டஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் வெள்ளி விழா கொண்டாட்டம் . விழாவிற்கான நடன நிகழ்ச்சியின் ஒத்திகையை பார்வையிட்ட உதிதா திருப்தியோடு “குட் ” என்று கை தட்டினாள்.

“இதற்கு மேல் முடியாது மேம் . இனியொரு முறை ஆட  சொன்னீர்களானால் என் கை கால்கள் எல்லாம் ஸ்டேஜில் தனி தனியாக கழன்று ஆடி விடும் “

என்று ஒரு மாணவி நிவிஷா சலித்து கொள்ளவும்

“சரி கிழவி நீ ரெஸ்ட் எடு” என்று உதிதா

உரைக்க மற்ற மாணவிகளிடையே சிரிப்பலை எழுந்தது .

“வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக திவ்யா மேமிடம் பேசி கொண்டிருந்தீர்களே உதி மேம்…… திருமணம் முடிந்ததும் இங்கு வொர்க் பண்ணுவீர்களா ???? ” என்று கவலையுடன் கேட்டாள் மிருதுளா .

“என் அக்காவிற்கு திருமணம் நடந்தால் நான் இங்கு வொர்க் பண்ணுவதில் என்ன சிரமம் இருக்கும் என்று நீயே கூறேன் ” என்று உதிதா சீரியசாக கேட்கவும்

மிருதுளாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப்.

கூடவே மற்ற மாணவிகள் ஓஓஓஓஓ!!!!!! வென்று கத்தி ஒருவருக்கொருவர் ஹைபைவ் செய்து கொள்ளவும் “என்ன நடக்குது இங்கே ?” என்று பக்கத்திலிருந்த ஸ்கேலை எடுத்து மிரட்டுவது போல் பாவனை செய்தாள் உதிதா .

“இந்த கேரக்டருக்கு எல்லாம் நீங்க செட்டே

ஆக மாட்டீங்க உதிமேம் ” என்று ஸ்கேலை பிடுங்கிய வினயா

“காலையில் மிருதுளா உங்களுக்கு திருமணம் என்றதும் நாங்கள் பதறி போய் விட்டோம் . அதனால் எழுந்த ஆர்பாட்டம் தான் இது ” என்று விளக்கம் தெரிவித்தாள்.

“அடிபாவிகளா என்னை ஔவையாராக்க பார்க்கின்றீர்களா?” என்று செல்லமாக கோபித்து கொள்ள

 “அப்படியெல்லாம் இல்லை மேம் . எங்கே திருமணம் என்றதும் எங்களை பிரிந்து விடுவீர்களோ என்று ஒரு பயம் வந்துவிட்டது . இனி பாருங்கள் உங்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பதே எங்கள் முதல் வேலை…. ஹீரோ எப்படி மேம் இருக்கணும்??? ஹைட்டா வைட்டா… அப்புறம்!!!!” பேசி கொண்டு போன நிவிஷாவிற்கு இரண்டு அடிகளை பரிசாக அளித்திருந்தாள் உதிதா .

“வாய்களா….. சின்ன பிள்ளைகள் பேசுகிற பேச்சா இது ???”

 “நாங்கள் சின்ன பிள்ளைகள் இல்லை மேம் 12த் கேர்ள்ஸ்” என்று மிருதுளா ஆரம்பிக்க

 “இந்த பேச்சை இதோடு விடுவோம் ” என்று மாணவிகளை அடக்கி “ஆபீஸ் ரூமில் நிகழ்ச்சி தொகுப்பிற்கான அட்டவணையை வாங்கி வருகிறேன் அதுவரைக்கும் ப்ராக்டீஸ் செய்யுங்கள் ” என்று எழுந்தாள்.

“ப்ராக்டீஸா…. நாங்களும் வருகிறோம் மேம் ” என்று உதிதா அனுமதி வழங்குமுன் அவளுடன் நடக்க ஆரம்பித்தனர்  மாணவிகள்.

செல்லும் வழியில் வினயா எதோ கேட்டாள் என்பதற்காக அவளிடம் பேசிவிட்டு திரும்பிய உதிதா எதிர்பாராத விதமாக தன் முன்னே வந்தவனின் மேல் நன்றாக முட்டி கொண்டாள் .

இரு ஜோடி விழிகளும் பார்த்து

கொண்டிருந்த நொடியில் “அண்ணலும் நோக்கினார்  அவளும் நோக்கினாள்” என்று கமென்ட் அடித்திருந்தாள் நிவிஷா .

 கூடுதலாக “இந்த ஹீரோ ஓகே தானா… ” என்று வினயா வினவ கடுப்பாகி போனான் புதியவன் .

“எந்த கிளாஸ் நீங்க எல்லோரும் ? உங்க மேம் யாரு? ” என்று சினத்துடன் உதிதாவிடமே பாய நடன நிகழ்ச்சிக்காக மாணவிகள் புடவையிலிருக்க தன்னையும் மாணவியாக பாவித்து அவன் கேட்ட கேள்வியில் நன்றாக சிரித்து விட்டாள் உதிதா .

“உங்களையெல்லாம் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி கண்டிக்கணும். ஸ்கூல் ஸ்டுடண்ஸ் மாதிரியா பேசுகிறீர்கள் ???” என்று ஒரு விரலால் பத்திரம் காட்டி எச்சரித்துவிட்டு ஆபீஸ் ரூம் பக்கம் தன் வேக நடையை தொடர்ந்தான் .

 “மேமிடமே மேம் யாருன்னு கேட்கின்ற இவரு யாரோ?” என்று அவர்கள் சிரித்து கொண்டிருக்கும் போது உதிதாவிற்கு

காலையில் பள்ளி முதல்வர் தன் மகன் யுகன் மும்பையில் கலெக்டராக இருக்கிறான் என்றும் அவனையே விழா விருந்தினராக அழைத்திருப்பது சந்தோஷமாக இருப்பதாகவும் கூறியது

நினைவிலாடியது.

வந்தவனின் அதட்டலான பேச்சும் அதையே பறை சாற்ற “ஓ மை காட் ” என்று தன் தலையில் கை வைத்து கொண்டாள்.

“என்னவாயிற்று மேம்?” என்ற கேள்விக்கு “நீங்கள் ஆடிட்டோரியத்திற்கு போங்கள். இனி இது போல் புதியவரிடம் எல்லாம் பேச கூடாது புரிகிறதா?” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு ஆபீஸ் ரூமிற்கு பாய்ந்தாள்.

        அங்கு யுகன் ஏதோ தீவிரமாக அவன் அம்மா தேவகியிடம் புகார் வாசிக்க அவரும் “சரி யுகா” என்று ஆமோதித்து கொண்டிருந்தார் .

 இந்நிலையில் உள்ளே

போகலாமா அல்லது மேடம் கூப்பிட்டவுடன் சென்று கொள்ளலாமா என்று குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தவளை “என்னம்மா உதிதா ? உள்ளே வா ” என்று அழைத்தார் தேவகி .

“சார் … “என்று யுகனை பார்த்து தயக்கத்துடன் இழுத்தவளிடம் “என் பையன் யுகன் . காலையில் சொன்னேனில்லையா ? நமது சீஃப் கெஸ்ட்” என்று

புன்னகைத்தவாறே பதிலளித்தார் .

மேலும் “இவங்க  உதிதா மேம்….நம்ம ஸ்கூலிலேயே படித்து இப்போது இங்கேயே வொர்க் பண்றாங்க …… மை எவர் பெஸ்ட் ஸ்டூடண்ட் ” என்றதும் யுகனின் முகத்தில் அசடு வழிந்ததை அவனாலே மறுக்க முடியவில்லை .

“நம் ஆசிரியர்கள் கண்டிப்புடன் இல்லையாம் . கலெக்டர் சார் கம்ப்ளைன்ட் பண்ணுகிறார் ” என்று உதிதாவிடம் மொழிந்தவர்

” 12த் ஸ்டாஃப்ஸ் கிட்டே ஏதோ சொல்லணும் என்று சொன்னாயே? இதோ அவளே வந்துவிட்டாள்….. 12 பி கிளாஸ் மேம்… நீ பேசிகொண்டிரு யுகா…. இதோ வருகிறேன் ” என்று மகனிடம் கூறியபடி வெளியில் சென்றார் .

அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை வெளியிட்ட உதிதா “என்ன சார் என்னிடம் என்ன சொல்ல வேண்டும் ????” என்றாள் தெத்துப்பல் உட்பட முப்பத்து மூன்று பற்களையும் காட்டியவாறு.

யுகன் மௌனிக்கவும் தனது மணிக்கட்டை ஒரு தரம் பார்த்துவிட்டு “எனக்கு நேரம் ஆகிறது சார் . நீங்கள் சொல்ல வந்ததை யோசித்து வைத்தீர்களானால் நாம்

பிறகு சந்திக்கும் போது அதை மறக்காமல் சொல்லி விடுங்கள் சரியா???” என்று கூறிவிட்டு சென்றாள் .

கதவருகில் சென்றதும் அவனை பார்க்க எண்ணி திரும்பியவள் அவனும்

அவளையே பார்த்து கொண்டிருப்பதை கண்டு பிறர் பார்க்காத வண்ணம் தன் இதழ்களை குவித்து ‘ஐயோ பாவம்’ என்பது போல் கண்களை சுருக்கி உதடுகளில் உச்சு கொட்டி விட்டு மறைந்தாள்.

Advertisement