Advertisement

4

மடிசாய்த்து கொள்ள
ஒற்றை உறவு
இருந்தால் போதும்.,
பஞ்சாக பறந்து விடும்
கலக்கங்களும்
பிரச்சனைகளும்.,

காலையில் எப்போதும் போல எழுந்தவளுக்கு வீட்டில் தன் அப்பா அம்மாவை சத்தம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.,

“என்ன லட்சணத்தில் புள்ள வளத்திருக்க ன்னு தெரியுதா., அவ இப்படி பண்ணிருக்கா., இப்ப வரைக்கும் நீ ஒரு வார்த்தை கேட்கல”., என்று சொன்னார்.,

“தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைக் கேட்க சொல்றீங்க., கேட்டு ஆமா ன்னு சொல்லிட்டா னா என்ன பண்ணங்க., நேத்து அவ ஏதும் பதில் சொல்லி விடுவாளோ ன்னு பயந்து போய் நான் அவளை பார்த்து கிட்டு இருந்தேன்.,

ஆனா அவ என்னமோ அமைதியா எந்திரிச்சு போயிட்டா., நானே கடவுளே அவ எதுவும் அப்படி சொல்ல கூடாது., நம்ம பேச்சை கேட்டு நடக்கிற மாதிரி இருக்கணும் பிரேயர் வச்சுட்டு இருக்கேன்., நீங்க என்னன்னா அவளை அப்படி இப்படி பேசுறீங்க.,

பிள்ளைகளை எப்பவும் ஒரு அளவுக்கு மேல கண்டிக்கக் கூடாது., தப்பு பண்றாங்கன்னு ஸ்டார்டிங் ல தெரியும் போதே., தெரிஞ்சா அட்வைஸ் பண்ணி திருத்தலாம்., இது எத்தனை நாளா., இல்லை எத்தனை வருஷமா பழக்கம்., ரெண்டு பேருக்கும் எப்படி தெரியும்., இதெல்லாம் யோசிக்கனும்.,

உங்க கிட்ட சொன்ன பாதர் ரெண்டு பேரையும் சேர்த்து அங்க பார்த்தேன் மட்டும் தான் சொல்லி இருக்காரு., வேறு மதத்தில் உள்ள பையன் பார்த்தாலே தெரியுது., உங்க மலையாள பையன் கிடையாதுன்னு சொல்லி இருக்காரு., அதை மட்டும் வச்சி நீங்களா முடிவு பண்ணிட்டீங்களா., இப்ப வரைக்கும் நீங்க பாக்கல இல்ல”., என்று சொன்னார்.

“ஆமா நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற மாதிரி பேசு., நான் பாக்கல தான்., ஆனா பாதர் பார்த்திருக்கார் இல்ல., ரெண்டு தடவை பார்த்து இருக்காரு., ஒரு தடவ அவ பேங்க் பக்கத்துல உள்ள காபி ஷாப்ல., இன்னொரு தடவ அவ இறங்குகிற ரயில்வே ஸ்டேஷன் பக்கம்., ரெண்டு தடவையும் அந்த பையன் கூட நிதாமான பேசிகிட்டு இருந்திருக்கா., அந்த பையன் கண்டிப்பா கிறிஸ்தவ பையன் கிடையாது ன்னு அவர் சொல்றாரு., கூட இருந்த பையன் எதோ ஹிந்து பெயரைச் சொல்லி கூப்பிட்டான் அப்படின்னு சொல்லி சொல்றாரு.,

அதுமட்டுமில்லாம தமிழ் பையன் சொல்றாரு., பார்த்தாலே தெரியுது இதுக்கு மேல எப்படி நம்பாமல் இருக்க சொல்ற”., என்று கேட்டார்.

“சரி அவசரப்படாதீங்க., பொறுமையா இருங்க”., என்று சொன்னார்.

“பொறுமை எல்லாம் காத்துல் பறந்துருச்சி., ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில் வைத்து பார்க்கிறோம்., அடுத்த வாரத்தில் பேசி முடிச்சு., எவ்வளவு சீக்கிரத்தில் கல்யாணம் வைக்கமுடியுமா., கல்யாணத்தை வச்சாகனும்”., என்று கோபமாக சொன்னார்.

“இது தான் சொல்றேன்., இவ்வளவு அவசரப்படாதீங்க ன்னு சொல்றேன்., ஒருவேளை அவளுக்கு அப்படி ஒரு நினைப்பு இருந்துச்சினா., உடனே எல்லாம் அவளை நம்ம வழிக்கு மாற்ற முடியாது., கொஞ்சம் கொஞ்சமா தான் மாத்தணும்”., என்று சொல்லிக் கொண்டிருந்தார் நீதாவின் அம்மா.,

ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக நீதாவின் அப்பாவோ உடனடியாக கல்யாணம் ஏற்பாடு செய்ய வேண்டும் என குதித்துக் கொண்டு நின்றார்.,

இதைக் கேட்டுக் கொண்டிருந்தவள்., அமைதியாக தன் அறைக்கு சென்று விட்டு சற்று நேரம் கழித்து அப்போது தான் எழுந்து வருபவள் போல வந்து கிச்சனுக்குள் நுழைந்தாள்., நீதா அம்மா அவளை பார்க்க.,

அவளோ எதுவுமே நடக்காதது போல வந்து நின்றாள்., காலை நேரத்திற்கு ஏற்கனவே சூடாக பாலை வைத்த இருந்தாலும்., அவள் தனக்கென மீண்டும் பாலை சூடு செய்து காபி கலந்து குடிப்பதற்கு எடுத்துக்கொண்டு சென்றாள்.,

பின்பு காலை சமையல் அவர் ஈடுபட்டிருக்க., வேலைக்கு உதவிக்கு வரும் பெண்மணி வந்து மற்ற பிற வேலைகளை செய்து கொண்டிருக்கும் போதே., இவளும் எப்பொழுதும் போல தன் தாய்க்கு உதவுவது போல் உதவி செய்து கொண்டிருந்தாள்.,

நீதாவின் அம்மாவோ., இவள் ஏதாவது சொல்வாளா என்று அவள் முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தார்.

அவளோ வாயை திறந்து ஒரு வார்த்தை கூட எதுவும் சொல்லவில்லை., ‘ஏன் என்னை பார்த்து எப்படி நீங்க சந்தேகப்படுற மாதிரி கேட்கலாம் அப்படின்னு சொல்லல., நான் அப்படியெல்லாம் எதுவும் லவ் பண்ணலைன்னு மறுத்தும் பேசல., ஆமா நான் லவ் பண்றேன் அப்படின்னும் சொல்லல., அப்போ இவ என்னதான் நெனச்சிட்டு இருக்கா., எதுவுமே சொல்ல மாட்டேன்னு அமைதியா இருந்தா., நான் என்னன்னு நினைக்கட்டும்’., என்று அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.,

‘எல்லா பிள்ளைகளுக்கும் இந்த அப்பாவினால் தான்., அம்மா என்பவள் எதிரியாக நினைக்க படுகிறாள்., பிள்ளையின் வாழ்க்கை நல்லா இருக்கணும் ன்னு., நம்ம மனசுக்குள்ள நினைச்சாலும் அப்பா ங்க முன்னாடி காட்டக் கூட முடியாது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவர்.,

‘இவ அப்பாவை எப்படி மலை இறக்குறது ன்னு தெரியலையே., அந்த சர்ச் பாதர் சரியான ஆள் இல்லயே., அவரே டென்ஷன் பார்ட்டி எல்லாத்தையும் பார்த்த உடனே உடனே சொல்லிக் கொடுத்திருப்பார்’., என்று நினைத்துக் கொண்டவர்.,

தாங்கள் எப்பொழுதும் செல்லும் சர்ச் பாதர் அப்படிப்பட்டவர் கிடையாது., இது முன்னாலுள்ள பாதர்., அவருக்கு ஏற்கனவே நீதா சற்று எதிர்த்து பேசுவாள் என்பதால் புடிக்காது., பிள்ளையே கண்டிச்சு வையுங்க., என்று சொல்லிக்கொண்டே இருப்பார்., அதனால் அப்படிச் சொல்கிறாரோ., என்று கூட நினைத்து கொண்டார்.,

ஆனால் நீதாவின் போக்கு., மறுத்தும் பேசாமல்., ஆமா., இல்லை என்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்தவருக்கு அப்படி எதுவும் இருக்குமோ என்ற எண்ணமும் வந்தது.,

சரி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்., போதே அவள் காலை உணவிற்கான வேலைக்கு தாய்க்கு உதவுவதை செய்து விட்டு., மதிய உணவிற்கு சமையலுக்கான காய்கறி எல்லாம் கட் பண்ணி எடுத்து வைத்தாள்.,

“நான் போய் குளிச்சிட்டு கிளம்புறேன் ம்மா”., என்று சொல்லி விட்டு வேக வேகமாக தன் அறைக்குள் சென்றவளுக்கு ‘ஆஹா நம்மளை ரொம்ப ஆராய்ச்சியா பாக்குறாங்க., இனிமேல் ஜாக்கிரதையா இருக்கனும்’., என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் போனை எடுத்து சார்ஜரில் போட்டவள்., போனை ஆப் பண்ணி வைத்துவிட்டு குளிக்க சென்றாள்.

அவள் குளித்து கிளம்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நீதா வின் அப்பா., நீதா வின் அம்மாவிடம் ஜாடைமாடையாக கல்யாண வேலைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.,

நீதா எதையும் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு விட்டு எப்பொழுதும் போல., டிபன் பாக்சை எடுத்து பேக்கில் வைத்தவள் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு இறங்கினாள்., கூடவே தம்பியும் இறங்க.,

” நீ எங்கடா வர்ற”., என்று கேட்டாள்.

” உன் கூட ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும்”., என்று சொன்னான்.

இது அப்பாவின் வேலை என்று தெரிந்து கொண்டவள்., “வா போகலாம்”., என்று சொல்லிவிட்டு அவனோடு நடக்கத் தொடங்கியிருந்தாள்.

அதே நேரம் பிரணவ் இன் வீட்டில் பிரணவ் குளித்து கிளம்பியிருந்தான்.,

தனக்கு தேவையான உணவு கிளம்பும் முன்பே செய்து வைத்திருந்ததால்., அவற்றை சாப்பிட்டு விட்டு அனைத்தையும் ஒதுக்கி போட்டு விட்டு மதிய உணவை இன்று கேன்டீனில் முடித்துக் கொள்ளலாம் என்ற நினைப்போடு எப்போதும் போல சுத்தப்படுத்தி விட்டு கிளம்ப பேக்கை எடுத்து கொண்டு கதவை திறக்க போனான்.,

அதேநேரம் காலிங் பெல் சத்தம் கேட்டது., இந்த நேரத்தில் யார் என்ற யோசனையோடு கதவை திறந்தவனுக்கு., அதிர்ச்சி காத்திருந்தது.,

அவன் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் கிளம்பி வந்திருந்தனர்., அதிர்ச்சியாக பார்த்தவன்.

“என்ன ஆச்சு திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறீங்க” என்று கேட்டான்.,

“ஏன்டா வரக்கூடாதா”., என்றார் தாத்தா.

“அய்யோ அப்படி சொல்லலை தாத்தா., வாங்க”., என்றான்.

“சும்மா தாண்டா., என்று சொன்னபடி உள்ளே வந்தார் தாத்தா.,

“நீங்க வெள்ளிக்கிழமை தானே வர்றதா சொன்னீங்க”., என்று கேட்டான்.,

“ஏன்டா வெள்ளிக்கிழமை னா., வெள்ளிக்கிழமை தான் வரணுமா., கூட ரெண்டு நாள் முன்னாடி வரக்கூடாதா”., என்று சொன்னார்.

பாட்டி தான் அவன் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தார்., அவனும் “வரகூடாது ன்னு யாரு சொன்னா”., என்று சொல்லி விட்டு “எல்லாமே இருக்கு நீங்க சமைச்சுப்பீங்களா., இல்லன்னா ஆர்டர் போட வா”., என்று கேட்டான்.,

அவனுடைய அம்மா தான் “காலை சாப்பாடு ஆர்டர் போட்டுருடா., மத்தியான சாப்பாடு நாங்க சமைச்சுடுவோம்”., என்று சொன்னவர்.,

அவன் அப்பாவிடம் “இனி நீங்க சொல்லுங்க”., என்று சொல்லிவிட்டு அவ்வீட்டின் மற்றொரு படுக்கையறைக்குள் அனைவரும் பேக்கை எடுத்து வைக்க சென்றனர்.,

இவன் அமைதியாக பார்த்துக் கொண்டே நின்றான்.,

அவனுடைய அப்பா தான் “ஞாயிற்றுக்கிழமை நாம பொண்ணு பார்க்க போறோம்., பொண்ணு வீட்ல சொல்லியாச்சு., ஞாயிற்றுக்கிழமை ஈவ்னிங் நாங்க இங்க இருந்து கிளம்பிடுவோம்., சில விஷயங்கள் நாங்க பேசணும் அதுக்காக தான் கூட ரெண்டு நாள் முன்னாடியே வந்து விட்டோம்”., என்று சொன்னார்கள்.,

சற்றே அமைதியாக அவர்களை பார்த்தவன் எதுவும் சொல்லாமல்., “நான் ஆபீஸ் கிளம்புகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினான்.,

பாட்டி தான் மெதுவாக தாத்தாவிடம் போய் “பையன் ஏதோ சரி இல்லை பார்த்துக்கோங்க., எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு”., என்று சொன்னார்.

தாத்தா தான் “ஆரம்பிச்சிட்டியா உன் டவுட்டா இருக்கு வேலையை., எப்ப பாரு., ஏதாவது இவன் மேல டவுட்டா இருக்கு ன்னு சொல்லிகிட்டே இரு”.,என்று சொன்னார்.

“இவன் சரி இல்ல., நீங்க வேணா பாருங்க”., என்று சொன்னார்.

“அவன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் விட்டு கொடுத்த மாதிரி இதிலும் கொடுப்போம் ன்னு நினைக்கிறியா”., என்று தாத்தா சொன்னார்.,

“சரி சரி நீங்க என்னமோ பண்ணுங்க., அவன் பண்றது தான் அவன் பண்ண போறான்”., என்று சொல்லி விட்டு பாட்டி டிவியைப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.,

உள்ளே இருந்து பிரணவ் ன் பெரியம்மா., அம்மாவிடம் “அத்தையை பார்த்தியா., வந்த உடனே டிவி போட்டாங்க., என்ன பாட்டு ஓடுது பாரு., இந்த வயசுல பார்க்கக்கூடிய பாட்டா இது., நல்ல குத்து பாட்டு இல்லனா லவ் சாங்கா கேட்க வேண்டியது., கேட்டா நான் இன்னும் யங்க் டி அப்படின்னு சொல்லுறாங்க”., என்று சொல்லி மருமகள் இருவரும் உள்ளே கலாய்த்துக் கொண்டிருந்தனர்.,

அதை அறிந்தும் அறியாதது போல அமர்ந்து டிவியில் காதல் பாடல்களை ஓட விட்டுக் கொண்டிருந்தார் பாட்டி.,

வீட்டில் அதிக கட்டுப்பெட்டியாக இருந்தாலும்., பாட்டி மட்டும் சில விஷயங்களில் பிள்ளைகளை சற்று ப்ரீயாக விடுவார்.,

அப்படி தான் இவன் வெளியூரில் வந்து படிக்க வரும் போதும்., வீட்டில் உள்ளவர்கள் “எல்லோரும் இந்த ஊர்ல தான் இருந்து படித்தாங்க., நீ மட்டும் எதுக்கு சென்னையில் போய் படிக்கணும்”., என்று கேட்கும் போது

பாட்டி தான் “அவனாவது ஊரை சுத்தி பாத்துட்டு வரட்டுமே டா”., என்று அனுப்பி வைத்தார்.,

அப்போதும் எல்லாரும் “படிக்காமல் ஊர் சுத்தி பார்க்க மட்டும் தான் வெளிய போறானா”., என்று கேட்டனர்.,

“சுத்தி பார்த்தா., சுத்தி பாத்துட்டு போறான்., படிச்சா மட்டும் எப்படியும் இந்த பிசினஸ் ல தான் இழுத்து போடுவீங்க”., என்று சொல்லி மற்றவரின் வாயை அடைத்தார்.,

அது போலவே வேலை கிடைத்திருக்கிறது என்று சொல்லும் போதும்., எல்லாரும் பிசினஸ் பாரு வேலைக்கு போக வேண்டாம் ன்னு கன்டிஷன் போட.,

“ஒருத்தனாவது வெளியே வேலைப் பார்க்கட்டும்., நீ போப்பா”., என்று சொல்லி ஆதரவாக வழியனுப்பி வைத்தவர்.,

ஆனால் இனி நடக்கப் போகும் விஷயங்களில் ஆதரவளிப்பாரா என்பது கேள்வியே.

வாழ்க்கையில் கஷ்டங்கள்
வலிமையானது அதை விட
வலிமையானது நீ உன் மீது
வைத்திருக்கும் நம்பிக்கை..!

Advertisement