Advertisement

3
உன் குரல் செய்யும்
மாயமோ என்னவோ.,
கலங்கிய மனது கூட
தெளிந்த நீரோடையாக
மாறுகிறது.,
இது காதலில் மட்டுமே
சாத்தியம்.,

அன்று வேலை முடிந்து வந்தவளோ மனதிற்குள் சிறு கோபத்தோடு அவனுக்கு அழைக்கவே இல்லை., எப்போதும் வேலை விட்டு வரும்போது ஒரு முறை அழைத்து பேசி விடுவாள்.,

பின்பு இரவு தூங்கப்போகும் முன் அவனிடம் பேசிவிட்டு தான் தூங்க போவாள்., ஆனால் இன்று ஏனோ வரும்போது., அவளுக்கு பேசத் தோன்றவில்லை மனதிற்குள் கோபத்தோடு இருந்து கொண்டாள்.,

‘பொல்லாத காதல் ஊர் உலத்தில் இல்லாத அளவுக்கு காதலிக்கிறேன்., போல கல்யாணம் பற்றி பேச்சை எடுத்தாலே இரண்டு பேருக்கும் சண்டை தான் வருது., எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கா., இல்ல லவ் எல்லோருக்கும் இந்த மாதிரி தானா’., என்று குழம்பிக் கொண்டாள்.,

ஆனாலும் அவளால் அவனை சிறிது கூட விட்டுக் கொடுக்க முடியவில்லை.., அந்த அளவு காதல் அவளைப் போட்டு பாடாய்படுத்தியது.

அவனுக்கும் இன்று அவள் பேசாததை பெரிதாக எடுக்க தோன்ற வில்லை., ஏனென்றால் பகல் முழுவதும் சரியாக வேலை பார்க்காமல் மதியத்திற்கு மேல் தான் அலுவலக வேலையில் கவனத்தை செலுத்த தொடங்கினான்., மொத்தமாக வேலை அவனை உள்வாங்கிக் கொண்டது.,

இதை அறியாத நீதாவோ., “நான் தான் கூப்பிடனும்., அவங்க கூப்பிடவே இல்ல., இதே இது அவங்க கூப்பிடுற டைம்க்கு கூப்பிடலை னா., மட்டும் நான் கூப்பிட்டு கேட்கனும்., கூப்பிடலை னா., ஏன் எனக்கு பேசல ன்னு., கேட்பாங்க பிரணவ்., இப்ப கூப்பிடலையே ன்னு., ஒரு வார்த்தை கேட்டாங்களா., ஏன் நான் ஏன் கூப்பிடலை ன்னு யோசித்தாவது இருப்பாங்களா., நான்னா மட்டும் ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான்.,

ஆனால் நான்னா மட்டும் “ஏன் உனக்கு கூப்பிட முடியாதா., ப்ரீயா தானே இருப்பேன்னு., அப்படியே என்னமோ நான் மட்டும் பேங்க்ல ஊஞ்சலாடிட்டு வர்ற மாதிரியும்., இவன் மட்டும் கம்பெனியில விழுந்து விழுந்து வேலை பாக்குற மாதிரியும்., பில்டப் பண்ணுறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை”., என்று தானாகவே புலம்பிக் கொண்டு வந்தாள்.

வீட்டிற்கு வரும்போதே அம்மா சற்று முகத்தை தூக்கி வைத்தார் போல தான் இருந்தார்., ‘என்ன பிரச்சினையோ’., என்று யோசித்துக் கொண்டு வந்தவள் உடை மாற்றிவிட்டு எப்போதும் கிச்சனில் சாயா (டீ) இருக்கும் என்பதால் உள்ளே சென்றவள் அவளுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.,

அப்போது டைனிங் டேபிளில் இருக்கும் ஸ்நாக்ஸ் எதையாவது எடுத்துக்கொண்டு அமர்வாள் அன்றும் அப்படிதான் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்க., அம்மாவின் முகம் அவ்வப்போது தன்னை ஆராய்ச்சியாக நோக்குவதை பார்த்துக் கொண்டவள்.,

‘எதுக்கு இப்படி பார்க்கிறார்கள்’., என்ற யோசனையோடு அமைதியாகி விட்டாள்.,

சற்று நேரத்தில் வெளியே இருந்து வந்த தம்பியும்., அவள் அக்காவை பார்க்கும்போது திருதிருவென முழித்து விட்டு அவளிடம் பேச வேண்டும்., என்பதை ஜாடை மாடையாக சொல்ல வந்தான்.,

இவளோ புரிந்து கொள்ளாமல் ‘என்ன புதுசா ஜாடை காட்டி பேசுகிறான்., என்னவாக இருக்கும்’., என்று யோசித்தாள்.

அப்புறம் பார்த்துக்கலாம் என்று அமைதியாகி விட்டாள்.,

அதன்பிறகு அவள் அம்மா இரவு உணவு செய்ய போக., இவளும் எப்போதும் போல உதவி செய்தாள்.,

அம்மாவிடம் சாதாரணமாக பேச்சிக் கொடுத்தாலும்., இன்று ஏனோ அவர் சரியாகப் பேசவில்லை., ‘சரி ஏதாவது அப்பா அம்மாவுக்கும் பிரச்சினை இருக்கும்’., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

இரவு உணவை எப்போதும் போல முடித்துக் கொண்டவர்கள்., எப்போதும் உறங்கப் போவதற்கு முன் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து ஜெபம் செய்து விட்டு படுப்பது அவர்கள் குடும்ப வழக்கம்.,

அது போலவே அன்று ஹாலில் பைபிள் எடுத்து அனைவரும் அமர்ந்தனர்.,

முதலில் யாராவது ஒருவர் பைபிள் வாசித்து., வசனம் சொல்லி அன்றைய ஜெபத்தை முடித்து விட்டு படுக்கச் செல்வர்.,

அது போலவே அன்றும் நடந்தது., எப்போதும் நடப்பது போல ஜெபம் இருந்தாலும்., ஏதோ ஒரு வித்தியாசம் உணர்ந்து கொண்டே இருந்தாள்.,

அவள் தம்பியும் அவ்வப்போது அவளைப் பார்த்தாலும்., தனியே அழைத்துச் சென்று பேச முடியாத சூழ்நிலை என்ன செய்வது என்று அமைதி காத்தான்.

குடும்ப ஜெபம் முடிந்து படுக்கப் போவதற்காக அவள் அறைக்கு திரும்பும் நேரம்., அவள் அப்பாவும் அம்மாவும் ஹாலில் அமர்ந்து விட்டனர்.,

தம்பி சற்று தள்ளி நின்றான்., அவள் அப்பா தான்., “நீதா இங்க வந்து உட்காரு”., என்று அழைத்தார்.,

என்னவென்று தெரியாமல் அமைதியாக சென்று அமர்ந்தாள்.,

அவள் தந்தையோ “உனக்கு நம்ம குடும்பத்தைப் பற்றியும்., நம்ம மதத்தைப் பற்றியும்., அப்பா மதத்தின் மேல் கொண்ட நம்பிக்கை பற்றியும்., உனக்கு தெரியும் ன்னு நினைக்கிறேன்.,

ஒரு கிறிஸ்தவ பொண்ணா பிறந்துட்டு உன்னால எப்படி இப்படி இருக்க முடியும்”., என்று கேட்டார்.,

அவளோ அமைதியாக இருந்தாள்., ‘அப்பா ஏதோ சொல்ல நினைக்கிறார்’., அவரே சொல்லட்டும் என்று இருந்தாள்.

“தினமும் பிரேயர் பண்றோம்., அப்படி இருக்கும் போது உன்னால கடவுளுக்கு விரோதமா நடந்துக்க முடியுது” என்று கேட்டார்.

“நான் எப்ப கடவுளுக்கு விரோதமா நடந்தேன்”., என்று கேட்டாள்.,

“விரோதமான காரியம் னா என்ன., கடவுளுக்கு பிரியம் இல்லாத காரியத்தில் ஈடுபடுவது தான்”.,என்று சொன்னார்.,

அவள் நிமிர்ந்து பார்த்து “இன்னும் என்னன்னு சொல்லவே இல்ல பா”., என்று தைரியமாகவே கேட்டாள்., ‘ஏதோ வரப்போகிறது என்று தெரிந்தாலும்., எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்’., என்று கேட்டாள்.

அவரோ “நான் வேற மதத்துக்கோ., வேற ஜாதி பையனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்., அதில் எந்த நேரமும் நான் உறுதியா சொல்றேன்., இன்னொரு விஷயம்., நீ மதம் மொழி ஜாதி எல்லாம் மாறி கல்யாணம் பண்றதுக்கு., நான் சம்மதிக்க மாட்டேன்., நான் எதுக்கு சொல்றேன் ன்னு உனக்கு புரிஞ்சிருக்கும்.,

ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில் வைத்து பொண்ணு பாக்க வர்றாங்க., எங்களுக்கு எல்லாம் புடிச்சிருக்கு., இது பார்மாலிட்டி க்கு தான் பார்க்க வர்றாங்க”., என்று சொன்னார்.,

உடனே அவளுக்குப் புரிந்து விட்டது., ‘தந்தைக்கு தன்னுடைய காதல் விஷயம் தெரிந்து விட்டது’ என்று., அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அமைதியாக எழுந்து நின்றவள்., பைபிளை கையில் எடுத்துக்கொண்டு அவரை நிமிர்ந்து நேராக பார்த்தாள்.

அதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல்., தான் காதலிப்பது அப்பாவுக்கு தெரியும் என்பது புரிந்த பிறகும்., அவரிடம் அதைப்பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து அறைக்குள் சென்றாள்.

அவள் தம்பியும் அவனுடைய அறைக்கு சென்றான்., பிறகு அங்கிருந்து அவசரமாக தன் அக்காவிற்கு போன் செய்து., “உன் கிட்ட இத சொல்லனும்., எவ்வளவோ ட்ரை பண்ணேன்., நான் இன்னைக்கு அதுக்காகவே உன்கிட்ட வழியில் பார்த்து சொல்ல தான் வெளியே வந்தேன்., ஆனா ஏன் நேரமா இல்ல., உன் நேரமா ன்னு தெரியல., வழியில் ஒரு ப்ரண்ட் பிடிச்சுட்டான்., உன்ன பாக்க முடியாம போயிருச்சு., நீ அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்ட.,

வீட்ல வச்சு சொல்லலாம்னு பார்த்தேன்., அம்மா சுத்தி சுத்தி பார்த்துட்டு இருந்தாங்க., அதனால தான் சொல்ல முடியல., சாரி எப்படி தெரிஞ்சுச்சு., ன்னு தெரியல., என்கிட்ட வந்து கேட்டாரு., எனக்கு தெரியவே தெரியாது ன்னு சொல்லிட்டேன்.,

ஆனா யார் சொன்னா ன்னு., தெரியல”., என்று சொன்னான்.,

“சரி நான் பாத்துக்குறேன் டா., நீ விடு” என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.,

அவனுக்கும் ‘காதல் என்பது அப்பாவிற்கு பிடிக்கவில்லை., என்று தெரிந்தாலும்., தன் அக்கா அவள் மனதிற்கு பிடித்தவனோடு வாழ வேண்டும்’ என்ற எண்ணம் மட்டுமே அவள் தம்பிக்கு இருந்தது.,

அதுவரை அவனிடம் இருந்து ஒரு அழைப்பு கூட இல்லாமல் இருப்பதை பார்த்தவள்., ‘தானும் போன் செய்ய வேண்டாம்’., என்று தான் முதலில் நினைத்தாள்.,

பின்பு ‘தன் அப்பாவிற்கு தெரியும் என்பதை எப்படியும் தெரியப்படுத்த வேண்டும்’., என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.,

ஆனால் அவனிடமிருந்து மெசேஜும் இல்லை., என்றவுடன் சற்று வருத்தமாகத்தான் இருந்தது.

காதல் கொண்ட மனதிற்க்கு ஈகோ அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை., நீயா நானா என்னும் போட்டியை பிடித்துக் கொண்டு தொங்க முடியவில்லை., தன் அறையின் கதவு சாத்தி இருந்ததால் யாரும் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு அவனுக்கு அழைத்தாள்.,

எப்போதும் சாதாரணமாக பேசுவது அவன் இரண்டாவது ரிங்கில் எடுத்தான்.,

“சொல்லுடா நீத்து”., என்ற அவனது குரலிலேயே மனதில் இருந்த பாரங்கள் அனைத்தும் விலகுவது போல உணர்ந்தாள்.,

அமைதியாக இருக்கவும் “அவனோ கோபமா”., என்று கேட்டாள்.,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல”., என்று சொன்னாள்.,

“சாரிடா., ஈவ்னிங் போன் பண்ண முடியல., நீ ட்ரை பண்ணியிருந்தீயா., என் போன்ல சார்ஜ் இல்ல பாத்துக்கோ., சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு”., என்று சொன்னான்.

“ஓஓ ஓகே”., என்றாள்., ‘தான் போன் பண்ணாதது கூட அவனுக்கு தெரியாது’ என்பதை நினைத்த போது வருத்தமாக தான் இருந்தது.,

“ஆனாலும் இந்த டைம் தாண்டினா நீங்க கூப்பிடுவீங்க தானே., இன்னைக்கு ஏன் கூப்பிடல”., என்று அவள் கேட்டாள்.,

அவனும் “கூப்பிடக்கூடாது ன்னு இல்லடா., நான் ஆபிசில் இருந்து வந்ததே லேட்டு., இப்பதான் வர்றேன்., வழியிலேயே டிபன் வாங்கிட்டு வந்துட்டேன்., தோசை மாவு இருக்கு ஆனா செய்ய டைம் இல்ல., அதனால வாங்கிட்டு வந்துட்டேன்., இப்ப தான் சாப்பிட்டு எல்லாம் க்ளீன் பண்ணினேன்., காலைல எழுந்து தான் மத்ததெல்லாம் பார்க்கணும்.,

இப்ப தான் தூங்க ரெடியாகிட்டு உனக்கு கூப்பிட்டா கரெக்டா இருக்கும் அப்படின்னு தான் நினைச்சேன்., ஆனா அதுக்குள்ள நீ கூப்பிட்ட”., என்று சொன்னான்.,

இவள் சாதாரணமாக பேசினாலும் குரலில் ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்தவன்., “என்னடா நீத்து இன்னும் கோபம் போகலையா”. என்றான்.,

“அது இது கோபம் இல்ல., இன்னொரு விஷயம்”., என்று சொன்னாள்.,

“என்ன ஆச்சு”., என்று கேட்டான்.

“காலையில சொல்லட்டா”., என்று கேட்டாள்.,

“நீ இப்படி சஸ்பென்ஸ் வைச்சா., எனக்கு நைட் எப்படி தூக்கம் வரும் சொல்லு”., என்று சொன்னான்.,

” அது” என்று தொடங்கி அவள் வீட்டில் நடந்த அனைத்தையும் சொன்னாள்.,

“எப்படி”., என்று கேட்டான்.,

“எனக்கும் புரியல., எப்படி தெரிந்தது ன்னு”., என்று சொன்னாள்.,

“ஒஒ., என்றவன் சிறிது யோசனைக்கு பிறகு., “சரி அமைதியாக இரு., இப்போதைக்கு எதுவும் எதிர்த்து பேசாதே., நான் நாளைக்கு உனக்கு ஆபிஸ்க்கு போயிட்டு போன் பண்றேன்”., என்று சொன்னான்.,

அவளும் “சரி” என்று சொல்லி அலைபேசியை அணைத்தாள்.

அங்கு போனை வைத்தவனுக்கு ‘எப்படி சமாளிப்பது., எப்படி அவள் வீட்டிற்கு விஷயம் தெரிந்தது’ என்று யோசித்துக் கொண்டே இருந்தான்.,

அதே யோசனையில் தான் நீதாவும் இருந்தாள்., ‘சரி பார்த்துக்கொள்ளலாம்., கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்து தானே ஆகணும்., இந்த காதலையும் எத்தனை வருஷமா மறைக்க முடியும்.,

அந்த பாலாப் போன காதல் எப்படியும் ஒருநாள் காட்டிக்கொடுக்கத் தான் செய்யும்., எட்டப்பனை விட மோசமானது தான் இந்த காதல்., என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவள்.., அவன் நினைவுகளோடு உறங்கி போனாள்.,

அவனும் ‘அவங்க வீட்டுக்கு தெரிஞ்சிருச்சு., சோ இப்ப நம்ம வீட்ல பேச வேண்டிய நேரம் வந்துருச்சு., என்று யோசித்தவன்., சரி எது நடந்தாலும் நன்மைக்கே’ என்று நினைத்துக் கொண்டு மனதிற்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டான்.,

அவள் இத்தனை தெளிவாக பேசுவதை நினைத்து சிரித்துக்கொண்டே உறங்கிப் போனான்.

மலையை பார்த்து
மலைத்து விடாதே மலை மீது
ஏறினால் அதுவும் உன்
காலடியில் கீழ்..!

Advertisement