ஒட்டுமொத்த வீடும் ஆர்வமாக இளையவர்களையே பார்த்தது. தன் சில்வண்டு கண்களை அங்குமிங்கும் உருட்டிய அவர்களின் குட்டி இளவரசி, “ம்ம்… த்த்த…” என்று வாய்கொள்ளா சிரிப்போடு சொல்லியே விட்டாள்.
அவ்வளவு தான்… வானத்துக்கும் பூமிக்குமாக சந்தோஷத்தில் குதித்த மங்கை, ராகுலின் மடியிலிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு முத்தமாரி பொழிய, ராகுல், “க்ரேட் இன்சல்ட் பட்டூ… ஆனாலும் நாங்க தொடச்சிப்போம்” என்றான். இளையவர்கள் நடத்திய நாடகத்தில் வீடே கலகலத்து சிரித்தது.
மதிய உணவுக்கு பிறகு, முன்பு தாங்கள் கீழே தங்கியிருந்த அறையில் மகளுக்கு உடல் கழுவி தூங்க வைத்த சுபாஷிணி, இரவும் மகளோடு அந்த அறைக்குள் நுழைய முயன்றாள். மனைவியைத் தடுத்த சேனாதிபதி, மகளை தன் கையில் வாங்கிக் கொண்டு, மேலே என்று கண்களால் மாடியைக் காட்டினான்.
அவ்வளவு தான்… வயிற்றுக்கும், தொண்டைக்கும் இடையே உருவமில்லா உருளை ஒன்று உருளத் தொடங்கியது சுபாஷிணிக்கு. கூடவே, ‘தங்கள் விரதம் முடித்த அன்றுகூட இத்தனை பதட்டம் தனக்கில்லை’ என்பது ஞாபகத்துக்கு வர, இதழ்கள் தானாக மலர்ந்தது பெண்ணுக்கு.
கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு பிறகு தங்கள் அறைக்குள் நுழைந்த சுபாஷிணியின் கண்கள் படுக்கை கிடந்த பக்கமாக தூழாவ, குழந்தையோடு இரண்டுபேர் தாராளமாக படுக்கும் அளவிற்கு கிடந்த புது கட்டில் அவளை வரவேற்றது.
கூடவே, கட்டிலுக்கு அருகில் பலவண்ண பலூன்களால் அலங்காரம் செய்யப்பட்டு, நான்குபுறம் மரச்சட்டங்களால் அடைக்கப்பட்ட குழந்தைகளுக்கான கட்டிலும் கண்ணில் விழ, சுபாஷிணியின் மனம் கொண்ட ஆசுவாசம், ஒன்றுமில்லை என்றாகிப் போனது.
அவர்களின் பெண்ணரசியோ பலூன்களை கண்ட உற்சாகத்தில் ஆரவாரக்குரல் எழுப்பினாள். அவளை படுக்கையில் விட்டு மரச்சட்டத்தை பிடித்து நிற்கும்படி வைத்த சேனாதிபதி,
“இப்பிடியே நிக்குறதா வேண்டுதலா சுபா?” என்று கேட்க, நைட்டியை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.
உடல்கழுவி நைட்டி அணிந்து சுபாஷிணி வெளியே வந்த நேரம், சரியாக யாழினியின் கை பட்டு பலூன் ஒன்று வெடித்தது. லேசாக உடல் அதிர, அனிச்சை செயலாக கணவனை நோக்கி வேகமாக நகர்ந்தவளுக்கு, வெடித்தது பலூன் என்பது புரியவும், வெட்கம் மேலிட, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து லேசாக சிரித்து வைத்தாள்.
“ஹைய்யோ… பச்சபிள்ளை தோத்துபோயிடும் சுபா உங்கிட்ட…” என்றவன், கேட்ட சத்தத்தில் உதடு பிதுக்கி அழத்தயாரான குழந்தையை கையில் தூக்கி, “ஒன்னுமில்ல டா செல்லம்” என்று தட்டிக் கொடுத்தபடியே, மனைவியையும் ஆதரவாக தோளோடு அணைத்துக் கொண்டான்.
கணவனை இடையோடு கட்டிக்கொண்டு, “நான் ஏன் இப்பிடி இருக்கேன் த்தான்?” என்று கணவனிடமே கேட்டாள் சுபாஷிணி.
“உனக்கென்ன? சும்மா கும்முன்னு தானே இருக்க சுபா” என்றவன், அவள் முகவாட்டத்தைக் காணப் பொறுக்காமல், “எல்லா மாற்றமும் உடனே வரணும்னு நினைக்க வேண்டாம் சுபா ம்மா. நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமா மாறும், மாறுனாப் போதும்” என்றான் அழுத்தமாக.
கணவனின் அனுசரணையில் முகம் மலர்ந்தவளின் கைகளில் யாழினியைக் கொடுத்து, “பேபிக்கு பசிக்குதுன்னு நினைக்கிறேன், ஃபீட் பண்ணு, நான் ஃப்ரெஷ்ஷப் பண்ணிட்டு வரேன்” என்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
சேனாதிபதி குளியலறையை விட்டு வெளியே வரும் போது, அறையில் மெல்லிய இரவு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. மகளை தன்மீது போட்டுக் கொண்டு தட்டிக்கொடுத்து கொண்டிருந்தாள் சுபாஷிணி. ம்ம்… ம்ம்… ம்ம்… என்று, தூக்கத்திற்காக ராகம் இசைத்துக் கொண்டிருந்தாள் யாழினி.
சில வினாடிகள் நின்று அதை ரசனையாக பார்த்தவன், மனைவிக்கு அருகே படுத்து, மகளை தூக்கி தன்மீது போட்டுக்கொண்டு தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான். இடம் மாறியதும் தலையை தூக்கி பார்த்த குழந்தை மறுபடியும் விட்ட இடத்திலிருந்து தன் இராகத்தை இசைக்கத் தொடங்கியது.
சேனாதிபதியின் செயலே, இப்படி ஒரு தருணத்திற்காக அவன் ஆவலாக காத்திருந்திருக்கிறான் என்று சொல்ல, தன்னால் தானே இந்த பிரிவு என்று தோன்றியது சுபாஷிணிக்கு. அவளுமே கணவனும் குழந்தையுமாய் தனித்திருக்கும் பொழுதுகளுக்காக ஏங்கியது உண்டு.
ஆனால் எல்லாவற்றையும் விட கணவனின் ஆரோக்கியமே பிரதானமாகப்பட, தன் ஆசைகளை மூட்டைகட்டி மனதின் ஓரத்தில் வைத்துக்கொண்டாள்.
சுபாஷிணியின் செயல் பார்ப்பதற்கு வேண்டுமானால் பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அது காதல்… கணவன் மீதான அதீதமான காதல்.
அந்த காதல் இப்போது கரையுடைக்க, மெதுவாக கணவனை நெருங்கிப் படுத்து, கையை அவன் மீது போட்டுக் கொண்டாள்.
யாழினி இசைத்த ராகம் மெதுவாக தேய்ந்து ஒருகட்டத்தில் நின்றுபோக, குழந்தையை அவளுக்கான படுக்கையில் விடுவதற்காக எழும்பினான் சேனாதிபதி.
“பேபி கட்டில், நம்ம பக்கத்துல இல்லாம, லண்டன்லயா இருக்குது?” கிண்டலடித்த சேனாதிபதி, மகளை படுக்கையில் விட்டு பெட்ஷீட்டால் போர்த்தியவன், சில வினாடிகள் மகள் தூங்கும் அழகை கண்களில் நிரப்பிக் கொண்டு படுக்கைக்கு திரும்பினான்.
படுக்கையில் படுத்தவினாடி, அப்படியே மனைவியை அள்ளி தன்மீது போட்டுக்கொண்ட சேனாதிபதி, “ம்ம்… சொல்லுங்க மேடம்… இந்த குட்டி மூளைக்குள்ள என்ன ஓடுது?” என்றான் கேலியாக. ஆனால் கேலியையும் தாண்டிய அக்கறை அதில் இருந்தது.
அவன் அதிரடியை எதிர்பாராத அவன் மனைவியோ, “ஐயோ.. கை.. உங்க கை த்தான்” என்றாள் பதறியபடி.
“கேட்டதுக்கு பதில் சொல்லாம கை, கால் ன்னு சொல்லிகிட்டு. என்னதான் டி உன் பிரச்சனை?” என்றான் சேனாதிபதி.
கணவனின் பிடிவாதத்தில் தான் கொண்ட பயத்தை கடகடவென சுபாஷிணி ஒப்பிக்க, “அடிப்பாவி… இதுக்காகவா இத்தனை மாசம் என்னை பட்டினி போட்ட?” என்று கேட்டு, உடல்குலுங்க சிரித்தான் சேனாதிபதி.
அவன் சிரிப்பில் சுபாஷிணியின் உடலும் சேர்ந்து குலுங்க, “என்னோட பயம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா த்தான்” என்று உதடுபிதுக்கினாள் சுபாஷிணி.
அந்த உதடுகளில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்து, “ஆனாலும் உன் புத்திசாலிதனத்துக்கு அளவே இல்லாமப் போச்சு டி, எம்பொண்டாட்டி” என்றவன், “தப்பு எம்மேலயும் இருக்கு” என்றான் வாய்கொள்ளா சிரிப்போடு.
“என்ன தப்பு?” என்பது போல சுபாஷிணி முகம் சுருக்க, “டிப்பார்ட்மெண்ட்ல என்னோட பாடி ஃபிட்னெஸ்ஸை ப்ரூஃப் பண்ணுறதுக்கு முன்னாடி, உங்கிட்ட ஃப்ரூஃப் பண்ணிருக்கணும். அப்பிடி பண்ணாதது என் தப்பு தான?”
கண்களை சிமிட்டியபடி கேட்டவன் தன் மொத்த ஆளுகைக்கு கீழ் மனைவியை கொண்டு வர, “த்தான்… பாத்து த்தான்…” பயத்தோடு ஆவலும் சேர்ந்து கொள்ள மிழற்றினாள் சுபாஷிணி.
“பாத்துட்டா போச்சு…” என்றவனின் பேச்சில், எல்லாம் மறந்தவளாக, “ஹையோ… எப்பிடி பேசுறீங்க நீங்க?” என்று தன் கையால் கணவனின் வாய்மூடினாள்.
“புருஷன் வாயை எப்படி மூடணும் ங்குற அடிப்படை விதி கூட மறந்து போச்சே உனக்கு” என்றவன், எப்படி மூட வேண்டும் என்று மனைவிக்கு கற்றுக் கொடுத்ததில், பெண்ணவள் கொண்ட பயம் பின்னங்கால் பிடறியில் பட தெறித்தோட, தன் உடல்தகுதியை மனைவிக்கு நிரூபிக்கும் பணியில் திவ்யமாக இறங்கினான் சேனாதிபதி.
**************
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி யாக பொறுப்பேற்று, கமிஷ்னர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சேனாதிபதி, “எக்ஸ்க்யூஸ்மி சார்” என்ற குரலில் நின்று, திரும்பி பார்த்தான். கடந்திருந்த ஐந்து வருடங்கள் அவனை இன்னும் கம்பீரமாகவும், வசீகரனாகவும் மாற்றியிருந்தது.
முகம் முழுவதும் ஒருவிதமான பரவசத்தோடு, தன் முன்னே, காக்கி சீருடை அணிந்து நின்ற இளம்பெண்ணைப் பார்த்த சேனாதிபதி, “யெஸ்… சொல்லுங்க” என்றான் யோசனையோடு.
“சார்… என்னை அடையாளம் தெரியுதா?” எத்தனை முயன்றும் குரலில் தெறித்த உற்சாகத்தை மறைக்க முடியவில்லை அந்த பெண்ணால்.
கமலி வேறுயாரும் அல்ல. இராஜபூபதியின் அடியாள் தாஸால் கொலை முயற்சிக்கு உட்படுத்தப்பட்ட கல்லூரிப் பெண் தான்.
கமலியின் தோழி, தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து, “படிப்பு மட்டுமே எங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும்னு நினைச்சு படிக்கிற என்னைப்போல, கமலியைப் போல பொண்ணுங்களை முடக்கிப் போடுற தாஸ் மாதிரி ஆண்களுக்கு தண்டனையே கிடையாதா?” என்று கேட்ட வார்த்தைகள், இப்போதும் கூட காதுகளில் ஒலித்துக் கொண்டிக்கும் போது, எப்படி இந்த முகத்தை மறந்து போவான்?
“ஆமா சார்… நானே தான். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஐபிஎஸ் பாஸ் செய்தேன். இப்போ இங்கதான் ட்ரையினிங் போட்டுருக்காங்க. என்னோட ரோல்மாடலான உங்களுக்கு கீழ வேலை செய்யப் போறதை நினைச்சா பெருமையா இருக்கு” என்றாள் கமலி அளவான புன்னகையோடு.
கமலியின் வார்த்தைகள் பேரின்பத்தைக் கொடுத்தது சேனாதிபதிக்கு. “ரொம்ப சந்தோஷம். உங்களை மாதிரி தடைகளை தகர்த்தெறிந்து இன்னும் ஆயிரம், லட்சம் கமலிகள் உருவாகணும்” என்றவன்,
“எப்பவும் யாருக்கும் பயப்படாதீங்க. ஆரம்பத்திலேயே யாருக்கும் வளைஞ்சு குடுக்காம, நான் இப்பிடித்தான்னு உங்களுக்குன்னு ஒரு இமேஜை உண்டாக்கிக்கோங்க. விஷ் யூ ஆல் சக்ஸஸ்” என்றவன் புன்னகையோடு நகர்ந்தான்.
பணிமுடிந்து சேனாதிபதி வீட்டுக்கு திரும்பி வரும்போது இரவு பத்து மணி. கணவனின் கார் சத்தத்தை கேட்டவுடன் கதவைத் திறந்தாள் சுபாஷிணி.
வீட்டுக்குள் நுழைந்த சேனாதிபதி, ஹாலில் டிவி பார்த்தபடி இருந்த தகப்பனிடம், “சாப்பிட்டாச்சா ப்பா” என்று கேட்க, “அதெல்லாம் ஆச்சு ப்பா, நீ வரட்டுமேன்னு தான் உக்காந்திருந்தேன். நீயும் சாப்பிட்டுட்டு தூங்கு” என்றபடியே படுக்கை அறைக்குள் நுழைந்தார்.
அவர் பின்னோடு வந்தவன், “அம்மாவும் பிள்ளைகளும் தூங்கிட்டாங்களா?” என்றபடியே படுக்கை அறையை உற்று பார்க்க, அங்கே தமிழரசியோடு அவன் பெற்ற பெண்ணரசிகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆமாம்… பெண்ணரசிகள் தான்… யசோதா என்ற மூன்று வயது பெண் குழந்தைக்கும் இப்போது அவன் தந்தை.
அதோடு, மங்கைக்கும் திருமணம் முடிந்திருக்க, இப்போது இரண்டு வருடங்களாக மகனோடு தான் இருக்கிறார்கள் அவன் பெற்றோர்கள். தோப்பை குத்தகைக்கு விட்டிருக்கும் வாசு, அவ்வப்போது ஊருக்கு சென்று வருவார்.
“சரி ப்பா… நீங்க தூங்குங்க” என்றபடி சத்தம் எழும்பாமல் அறையின் கதவை மூடியவன், “குளிச்சிட்டு வந்துடுறேன் சுபா” என்று அறைக்குள் நுழைந்து, தன்னை சுத்தப்படுத்தி, வேறு உடை அணிந்து கிச்சனில் கிடந்த டைனிங் செயரில் வந்து அமர்ந்தான்.
எப்போதும் போல ஃப்ரூட் சாலட், பாயில்ட் எக், பால் என்று கணவனுக்கான இரவு உணவை கொடுத்த சுபாஷிணி, “அப்புறம், இன்னைக்கு நாள் எப்பிடி போச்சு த்தான்?” என்றபடியே கணவனுக்கு எதிரே அமர்ந்தாள். ஒரு ஸ்பூன் சாலட்டை மனைவிக்கு ஊட்டி விட்டபடியே, கமலியை சந்தித்ததை சொன்னான் சேனாதிபதி.
“அந்த பொண்ணு க்ரேட் இல்ல த்தான்” என்றவள், அன்றைய செய்தித்தாளை விரித்து, “என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் சேனாதிபதி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி யாக இன்று பதவியேற்பு. பீதியில் ரௌடிகள்…” என்று செய்தியாளர் வாசிப்பது போல ஏற்ற இறக்கத்தோடு வாசித்தாள்.
“பொதுமக்கள் பீதியானா தான் கஷ்டம். ரௌடிகள் தானே? ஆகட்டும்… ஆகட்டும்” என்று சிரித்தான் சேனாதிபதி. உடன் சிரித்தாள் சுபாஷிணி.
இப்போதெல்லாம் கணவனின் பணியில் என்ன நடந்தாலும், ஏன்? எதற்கு? என்ற கேள்வியே சுபாஷிணியிடமிருந்து வருவதில்லை.
‘காவல்துறை எதைச் செய்தாலும், அதிலும் தன் கணவன் எதைச் செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும்’ என்ற நம்பிக்கை விதை அவள் மனதில் விழுந்து, விருட்சமாக வளர்ந்து நிற்பதாலேயே இந்த மாற்றம்.
என்றாலும், கணவனின் பாதுகாப்பு குறித்த அச்சம் இன்னமும் அவள் மனதில் மிச்ச சொச்சம் இருக்கத்தான் செய்கிறது.
அதனாலேயே இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிஏ படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னரும் தனியாக அலுவலகம் தொடங்காமல், ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அப்போதுதான் கணவனின் பணி இடமாறுதலின் போது தாமதமின்றி அவனோடு செல்ல முடியுமாம்.
இரவு உணவை முடித்த சேனாதிபதி சாவகாசமாக படுக்கையில் கால்நீட்டி சாய்ந்து அமர்ந்தான். அருகில் அமர்ந்து, அவன் மார்பில் சாய்ந்த சுபாஷிணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,
“என்ன விஷயம், பம்முது என் லட்டுக்குட்டி?” என்றான் கேலியாக.
“இல்ல… நான் ஒன்னு கேட்பேன். நீங்க வேண்டாம்னு சொல்லக்கூடாது த்தான்.” பயங்கர முஸ்தீப்போடு பேச்சைத் தொடங்கிய சுபாஷிணி, “எனக்கு உங்களைப் போலவே ஒரு பையனைப் பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு த்தான்” என்று தன் ஆசையை சொல்லிவிட்டாள்.
ஆணோ, பெண்ணோ, இரண்டு குழந்தைகள் போதும் என்று தம்பதியர் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். அதனாலேயே அவளிடம் சிறு தயக்கம்.
“என்னைப் போலன்னா… எங்கலர்லயேவா?”
“ஹ்ம்ம்… ஆமா. அச்சு அசலா உங்க ஜெராக்ஸ் போலவே.” அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னாள் சுபாஷிணி.
“அப்போ ஃப்யூச்சர்ல உன்னைப் போல ஒரு பொண்ணு வந்து நம்ம மகனை கறுப்புன்னு சொல்லுமே… உனக்கு பரவாயில்லையா?”
“இதோ… ஒரேயொரு நிமிஷம் த்தான், அத்தையை எழுப்பி கேட்டுட்டு வந்துடுறேன்” என்றபடி கணவனிடமிருந்து சுபாஷிணி விலக முயல, சட்டென்று இழுத்து தன் மடிமீது போட்டுக் கொண்டான்.
கணவனின் மடியிலிருந்தே நேருக்கு நேராக சுபாஷிணி அவன் கண்களைப் பார்க்க, சளைக்காமல் சேனாதிபதியும் பதில் பார்வை பார்த்தான்.
சிலப்பல வினாடிகள் இருவர் பார்வையும் கவ்வி நிற்க, ஒரே நேரத்தில் இருவரும் வெடித்து சிரித்தார்கள்.
ஆமாம்… அவர்கள் வாழ்க்கையில் மறந்துவிட வேண்டும் என்று நினைத்த வார்த்தைகளை, கேலியும் கிண்டலுமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை இருவருமே பெற்றிருந்தார்கள். அந்த மனப்பக்குவத்தை அவர்களுக்கு தந்தது, ஒருவர் மீது மற்றவருக்கு இருந்த மாறாத அன்பு என்று சொல்லவும் வேண்டுமோ?
அந்த பேரன்பின் பெருவெள்ளம், அவர்கள் மனதிலிருந்த கோபம், ஏமாற்றம், ஆதங்கம் என்ற கசடுகளை அடித்துச் சென்றதில், இருவரின் உள்மனதின் நினைவுகளில் இப்போது நிறைந்திருப்பது, மாசுமருவில்லாத காதல்… காதல்… காதல் மட்டுமே.