அமைதியாக அடுத்த ஸ்பூன் கேசரியை எடுத்து அவன் வாயருகே சுபாஷிணி கொண்டு செல்ல, அவளது கையை தனது இடது கையால் பற்றி அவளுக்கே அந்த ஸ்பூன் கேசரியை ஊட்டிவிட்டான்.
கணவனின் செயலில் இனிப்போடு, அவள் விழிநீரின் உவர்ப்பையும் சேர்த்து உண்டாள் சுபாஷிணி.
அடுத்த வாய் உணவை எடுத்து சுபாஷிணி கணவனுக்கு ஊட்ட, அவள் விழிநீரை தன் இடது கையால் துடைத்து விட்டபடியே வாங்கிக் கொண்டவன், “நான் லவ் சொன்னதும், என் லட்டுக்குட்டி, நானும் லவ் பண்ணுறேன் அத்தான்னு சிரிச்சிக்கிட்டே பதில் சொல்லுவான்னு ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தேன். ஆனா… “
திடீரென்று பேச ஆரம்பித்த சேனாதிபதி அதற்குமேல் எதுவும் சொல்லாமல், கண்மூடி லேசாக அண்ணார்ந்து பார்த்தான். அவன் தொண்டைக்குழி ஏறி இறங்கிய வேகத்திலேயே அன்றைய தன் பேச்சை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இப்போதும் தடுமாறுகிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது சுபாஷிணியால்.
“என் லட்டுக்குட்டியா என்னை அப்பிடி பேசியதுன்னு ரொம்ப அதிர்ச்சியா போச்சு. ரொம்ப நாள் அந்த ஏமாற்றத்துலயிருந்து என்னால வெளிய வரவே முடியல” என்று தன் பேச்சை முடித்தான் சேனாதிபதி.
கணவனின் வார்த்தைகள் மெல்லிய அதிர்வலைகளை சுபாஷிணியின் உடலில் ஏற்படுத்தினாலும், எல்லாவற்றையும் அப்போதே பேசி தீர்த்துவிடும் முடிவோடு, “ஒருவேளை எப்பவும் போல அத்தான் கூடவே சுத்திட்டு அலைஞ்சிருந்தேனா, நீங்க எதிர்பார்த்த பதிலை சொல்லியிருப்பேனோ என்னவோ? ஆனா, அம்மா ஊருக்கு வரும்போதே உங்ககூட வெளிய போகக் கூடாதுன்னு ரூல்ஸ் போட்டுத் தான் கூட்டிட்டே வந்தாங்க. எப்பவும் போல இல்லாம வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்ததால எனக்கு ஊர் ரொம்ப போர் அடிச்சுது” என்றவள், நிமிர்ந்து கணவனின் முகத்தைப் பார்த்துவிட்டு,
“உண்மையைச் சொன்னா, டீன் ஏஜ்ல நான் பார்த்த அத்தானுக்கும், அப்போ நான் பார்த்த அத்தானுக்கும், மெலிஞ்சு, நெடுநெடுன்னு வளர்ந்து, ரொம்ப டார்க் கலராகி… இப்பிடி ரொம்ப வித்தியாசம் இருந்தது. ஏன் இப்பிடின்னு நானே குழம்பி போயிருக்கும் போது, ரம்யா வேற…” என்று அன்றைய தன் மனநிலையைச் சொல்லி, ரம்யாவின் பேச்சையும் மறைக்காமல் சொன்னாள்.
தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காக ரம்யா மீது மொத்த பழியையும் தூக்கிப்போட்டு தப்பித்துக் கொள்ளப் பார்க்காமல், அன்றைய தன் மனநிலையை மறைக்காமல் சொன்ன மனைவி மீது, இப்போது காதல் பெருகியது சேனாதிபதிக்கு.
‘சுபாஷிணியின் அன்றைய பேச்சுக்கு, ரம்யாவின் தூண்டுதலும் காரணமாக இருக்கும்’ என்று எப்போதோ யூகித்திருந்தான் சேனாதிபதி. ‘என்னைவிட அந்த ரம்யாவின் வார்த்தைகள் தான் பெரிதா?’ என்று, எத்தனையோ நாட்கள் நேசம் கொண்ட அவன் நெஞ்சம் கோபத்தில் பற்றி எரிந்திருக்கிறது.
அதனால் தான், திருமணத்திற்கு பிறகு சுபாஷிணி எல்லாவற்றையும் ஒருநாள் சொல்ல முயன்ற போது கூட, இடையிட்டு அவளைப் பேசவிடாமல் சேனாதிபதி தடுத்தது.
ஆக, எந்த இடத்தில் பிரச்சினையை முடிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் முடித்துக் கொள்ளாமல், நீட்டிக்கொண்டே சென்றதில் வீணான மனக்காயங்கள் தான் இருவருக்கும் மிச்சமாகிப் போனது.
“உண்மையிலேயே இன்னொருத்தரோட தூண்டுதல் என்னை அப்பிடி பேசவச்சதுன்னு சொல்ல ரொம்ப வெக்கப்படுறேன் த்தான். அன்னைக்கு தொடங்கி, இப்போ வரைக்கும் அடுத்தவங்க வார்த்தை தான் என்னை ஆட்டிவைக்குது ல்ல?” குற்ற உணர்ச்சியோடு பேச்சைத் தொடர்ந்த சுபாஷிணி,
“எப்படின்னாலும், அவ்வளவு ஹார்ஷ்ஸா உங்களை நான் பேசியிருக்கவே கூடாது த்தான். அதுக்கு, மொதல்ல என்னை நீங்க மன்னிச்சிடுங்க. காலம் தாழ்ந்த மன்னிப்பு கேட்பு ன்னாலும், பெரிய மனசு பண்ணி நீங்க என்னை மன்னிச்சிடுங்க த்தான். எத்தனையோ தடவை உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்னு நினைச்சிருக்கேன். ஆனா, உங்க கோபமான முகத்தைப் பார்த்து பயந்து போய் பேசாமலேயே இருந்துருக்கேன்” என்றவள், வார்த்தையால் மட்டுமன்றி கண்களாலும் கணவனிடம் மன்னிப்பை யாசித்தாள்.
‘இத்தனை வயதுக்கு, சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தன்னையே மோசமாக பேசத் தூண்டியிருக்கிறது என்றால், இரண்டுங்கெட்டான் வயதில் சுபாஷிணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்’ என்று இப்போது புரிந்து கொள்ள முடிந்தது சேனாதிபதியால்.
எப்போதும், எல்லா நேரங்களிலும் முற்றும் துறந்தவர்களைப் போல எல்லோராலும் மனதை கட்டி ஆளமுடியாது. எல்லோருமே, ஏதாவது ஒரு சூழ்நிலையில் உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொள்ளும் சாதாரண மனிதர்கள் தான் என்ற பேருண்மையை விளங்கிக் கொண்டவனுள், மனைவி மீதிருந்த கோபம், ஆதங்கம் எல்லாம் மெதுவாக கரையத் தொடங்க, “இப்போது உன் முறை, நீ பேசு” என்பது போல கணவனைப் பார்த்து வைத்தாள் சுபாஷிணி.
ஒரு கணவன் எந்த ஒரு சூழ்நிலையிலும் மனைவியிடம் பேசக்கூடாத வார்த்தையை பேசிவிட்டு, எப்படி சுயவிளக்கம் கொடுப்பது என்று தெரியாமல் கண்மூடி கட்டிலில் சாய்ந்தமர்ந்தவனின் முகமெங்கும் வேதனையின் சாயல்.
பேச்சினூடே கணவனுக்கு உணவையும் கொடுத்து முடித்திருந்த சுபாஷிணி, காலியான தட்டை பக்கத்திலிருந்த நாற்காலியில் வைத்து விட்டு, கணவனின் வார்த்தைகளுக்காக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அங்கோ பேரமைதி மட்டுமே.
தன்னுடைய செயல்கள் தான் கணவனின் இத்தகைய பேச்சுக்கு காரணம் என்று தன்னைத்தானே சுபாஷிணி சமாதானம் செய்துகொள்ள முயன்றாலும், கணவனின் மௌனம் அவளை என்னவோ செய்ய,
“கல்யாணமாகி இத்தனை மாசத்துல, எங்கழுத்துல தாலி கட்டும் போது என்னைப் பற்றி என்ன மனநிலையில் இருந்தீங்களோ, அதே மனநிலையிலத் தான் இப்பவும் இருக்கீங்களா த்தான்? ஒருநாள், ஒரு பொழுது கூட என்னோட லவ்வை நீங்க புரிஞ்சிக்கவே இல்லையா? ஆஃப்டர்ஆல், அழிஞ்சு போற அழகுக்காக வாழ்க்கைத் துணையை மாத்திக்கிற பொண்ணாவா உங்க மனசுல நான் பதிஞ்சு போயிருக்கேன்? வலிக்குது த்தான்… என்னாலத் தான் நீங்க இப்படி பேசுனீங்கன்னு புரிஞ்சாலும், இங்க ரொம்ப வலிக்குது த்தான்…” இதயம் இருக்கும் இடது பக்கத்தை கையால் தடவிவிட்டுக் கொண்டவள், எத்தனை முயன்றும் தன் அழுகையை அடக்க முடியாமல் வெடித்து அழுது விட்டாள்.
அவ்வளவு தான்… தன் தயக்கத்தை எல்லாம் நொடியில் உதறிய சேனாதிபதி, தன் இடது கையால் மனைவியின் வலது கையைப் பற்றி, தன் கண்களில் ஒற்றியபடியே, “சுபா, பிளீஸ்… என்னை மன்னிச்சிடு… அந்த வார்த்தையை சொன்ன நேரத்திலயிருந்து எனக்குள்ள நான் செத்துட்டு இருக்கிறேன், நீ மறுபடியும் உன் வார்த்தையால என்னைக் கொல்லாத” என்றான் தழுதழுத்தக் குரலில்.
“அதெப்பிடி த்தான்… உங்களுக்கு நடந்தது, எனக்கு நடந்திருந்தா, நீங்க என்னை விட்டுட்டு போயிருப்பீங்களா? அப்போ நான் மட்டும் எப்பிடி? சொல்லுங்க த்தான்?” சுபாஷிணியின் மனது சமாதானம் கொள்ள மறுக்க,
“இப்போ இருக்குற தெளிவு, உன் அத்தானுக்கு அப்போ இல்லையே சுபா ம்மா… இருந்திருந்தா முட்டாள் மாதிரி பேசியிருக்கமாட்டேனே.” உள்ளார்ந்து சொல்லியவன், “பிளீஸ்… எல்லாத்தையும் மறந்துடலாமே” என்று சமாதான உடன்படிக்கைக்கு வெள்ளைக் கொடியையும் வீச முயன்றான்.
“கண்டிப்பா நடந்ததை எல்லாம் ரெண்டு பேரும் இந்த இடத்துல, இங்கயே மறந்து தான் ஆகணும் த்தான். முடியலையா? நாம பிரிஞ்சிடுறது தான் பெட்டர்” என்று குண்டைத் தூக்கி போட்டாள் சுபாஷிணி.
மனைவியின் பதிலில், “என்ன சொல்லுற சுபா?” என்று அதிர்ந்து போய் கேட்டான் சேனாதிபதி.
“ம்ம்… ஆமா த்தான்… இப்போ நாம தனியாள் இல்ல. நம்மளை நம்பி ஒரு குழந்தை வரப்போகுது. நடந்தைச் சொல்லிச் சொல்லி, ஒருத்தொருக்கொருத்தர் நாம அடிச்சிகிட்டு இருந்தா, பிள்ளையோட மனநிலைமை என்னாகும்? அதனால, நம்ம பாஸ்ட்டை நம்மால கடந்து வரமுடியும்னு உறுதியா நம்ப முடிஞ்சா மட்டும், நம்ம வாழ்க்கையை இப்படியே தெடரலாம். இல்லைன்னா…”
தீவிரமான குரலில் பேசிக்கொண்டே சென்ற மனைவியின் உதடு மீது தன் விரல்களை வைத்து அடுத்து பேசவிடாமல் தடுத்தவனுக்கு, வாழ்க்கை என்பது பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி இல்லை, ஒருவர் முடித்த இடத்திலிருந்து மற்றொருவர் தொடங்கி பாடுவதற்கு என்பது நன்றாகவே புரிந்திருக்க, என்னால் முடியும் என்பது போல அழகாக புன்னகைத்தான்.
“அஃப்கோர்ஸ், எங்கிட்டயும் நிறைய குறை இருக்குது த்தான். ஆனா, எல்லாத்தையும் ஓவர்கம் பண்ணி வந்துடுவேன் ங்குற நம்பிக்கை இப்போ எங்கிட்ட நிறையவே இருக்குது” என்றாள் சுபாஷிணி நம்பிக்கையோடு.
கணவனுக்கு தான் ஏற்றத்துணை இல்லை, அதனால் அவன் வாழ்க்கையிலிருந்து விலகிவிட வேண்டும் என்று நினைத்தது எல்லாம் முற்பிறவியில் நடந்தது போல, பேசிக்கொண்டே சென்ற மனைவியை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்த சேனாதிபதியிடமிருந்து நிம்மதி பெருமூச்சு வந்தது.
அதன் பிறகு வந்த நாட்களில் அந்தவீடு தன் இறுக்கத்தை தொலைத்திருந்தது. சுபாஷிணியை ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்று வந்திருந்தார் தமிழரசி. பெரிய அளவிற்கு காலைநேர தொந்தரவுகள் இல்லாததால் இயல்பாகவே நடமாடிக் கொண்டிருந்தாள் சுபாஷிணி. ஆனால், வேலைக்கு செல்வதை தள்ளி வைத்திருந்தாள்.
இப்போதெல்லாம் தினசரி மூன்று வேளையும் கணவனுக்கு உணவு கொடுப்பது சுபாஷிணி தான். இருவருமே மெல்ல மெல்ல தங்கள் இயல்பிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
சேனாதிபதியின் நண்பர்கள் மாதவனும், கார்த்திக்கும் நண்பனை நேரில் வந்து பார்த்து தைரியம் சொல்லிவிட்டு சென்றிருந்தார்கள். கைலாஷூக்கு விடுமுறை கிடைக்காததால் அவ்வப்போது நண்பனிடம் தொலைபேசியில் நலன் விசாரித்துக் கொண்டான்.
நாட்கள் செல்ல சேனாதிபதியின் கை நன்றாக ஊறிவிடவே, மருத்துவர் சொல்லிக் கொடுத்தபடி கைக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான் சேனாதிபதி.
நாளடைவில் கை பலம் பெற்றுவிட, வாக்கர் உதவியோடு வீட்டுக்குள் மெதுவாக நடக்கவும் ஆரம்பித்து விட்டான். கூடவே மருத்துவரின் அறிவுரைப்படி கால்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்து விட்டான். வலி நிறைந்த அந்த பயிற்சிப் பொழுதுகளை கடக்க, கணவனுக்கு உறுதுணையாக நின்றாள் சுபாஷிணி.
சர்ஜரி நடந்து நான்கு மாதங்கள் முடிவடைந்திருந்த நிலையில், “நாம ஊருக்கு போவோமா ப்பா?” என்று சேனாதிபதி கேட்க, அவனுடைய மருத்துவரையும், சுபாஷிணியின் மருத்துவரையும் கலந்தாலோசித்து விட்டு அந்த குடும்பம் விமானம் மூலமாக மாதவபுரத்துக்கு வந்து சேர்ந்தது.
ஊருக்கு கிளம்பும் முன், அனுவையும் அவள் தாயாரையும் சந்தித்து, முறையாக நன்றி சொல்லி விடைபெற்றுக் கொண்டாள் சுபாஷிணி.
இப்போதெல்லாம் பெரிய அளவில் சேனாதிபதிக்கு தகப்பனின் உதவி தேவைப்படாததால், மாதவபுரத்தில் கணவனோடு ஒரே அறையில் சுபாஷிணியே தங்கிக் கொண்டாள்.
ஆனால், சேனாதிபதியின் வசதிக்காக தற்காலிகமாக அவர்களது அறையை தரைத்தளத்திற்கு மாற்றியிருந்தார்கள்.
உடனடியாக தன் உடல்தகுதியை நிரூபித்து, பணியில் மீண்டும் சேர்ந்துவிடும் துடிப்பில் இருந்த சேனாதிபதி,
பிறந்த ஊரின் மண்ணை மிதித்ததுமே உற்சாகமாகிப் போனான்.
கடல்காற்றும், நீண்ட நாட்களுக்கு பிறகு மனைவியுடனான ஒரே அறையின் வாசமும் மனதளவில் அவனை உற்சாகமாக வைத்திருக்க, சீராக உடற்பயிற்சி செய்து வந்தவனின் உடம்பிலும் நல்ல மாற்றமே.
சுபாஷிணிக்கும் அது ஐந்தாவது மாதம். பூசினாற்போல அவள் மணிவயிறு லேசாக வெளியே தெரியத் தொடங்கியிருந்தது. மனைவி தன்னோடு தங்கத் தொடங்கிய நாளிலிருந்து, தினமும் இரவில் அவள் வயிற்றின் மீது கையை போட்டுக்கொண்டு, குழந்தையோடு கதைபேசத் தொடங்கி விட்டான் சேனாதிபதி.
“குட்டிப் பாப்பூ, அப்பா பேசுறேன்டா” என்று, வயிற்றுப் பிள்ளையை பெண்குழந்தையாக பாவித்து பேசுபவன், பேசி முடித்து மகளுக்கான முத்தத்தை மனைவியின் வயிற்றுக்கும், மனைவிக்கான முத்தத்தை அவள் உதட்டிலும் பதிப்பது வாடிக்கையாகிப் போனது.
“பாப்பூ ன்னு சொல்லுறீங்களே, ஒருவேளை பையனாப் பொறந்தா என்ன செய்வீங்களாம் த்தான்?” வேண்டுமென்றே ஒருநாள் இரவு கணவனை, சுபாஷிணி வம்பிழுக்க,
“ம்ம்… நோ ப்ராப்ளம் லட்டுக்குட்டி… பாப்பு பிறக்குற வரைக்கும் விடாமுயற்சி தான்” என்று கண் சிமிட்டினான் சேனாதிபதி. ஆக, கணவன் மனைவியாக மனதளவில் இருவரிடமும் நல்ல முன்னேற்றம் தான்.
சேனாதிபதி காவல்துறையில் மறுபடியும் சேரும் நாளுக்காக, அவனோடு சேர்ந்து அவன் குடும்பமே ஆவலாக எதிர்பார்த்திருக்க, திடீரென சேனாதிபதியின் உடலில் ஒரு பின்னடைவு.
ஆமாம்… சர்ஜரியின் போது எலும்போடு சேர்த்து உடம்பில் வைக்கும் ஸ்டீல் ப்ளேட் சேனாதிபதிக்கு ஒத்துக்கொள்ளாததில் இன்ஃபெக்ஷன் ஆக, உடனடியாக சர்ஜரி செய்து அதை அகற்றியே ஆக வேண்டும் என்ற நிலை. பயந்து போனாள் சுபாஷிணி.
அதுவும், “இன்னும் ஒரு மாசம் ப்ளேட் உடம்புக்குள்ள இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்” என்ற மருத்துவரின் கூற்றில், இதனால் கணவனுக்கு எதுவும் பாதகமாக அமைந்துவிடுமோ என்று எண்ணி தவித்துப் போனவள், தன் பயத்தை மறைக்காமல் மருத்துவரிடமும் பகிர்ந்து கொண்டாள்.
சென்னையில் இருக்கும் மருத்துவரின் பரிந்துரையின்படி நாகர்கோவிலின் பிரபல ஆர்த்தோ டாக்டரிடமே இப்போது சிகிச்சைக்கு சென்றிருந்தார்கள்.
“உங்க ஹஸ்பென்ட் போல கால், கைக்கு ஹெவி வொர்க் குடுக்குறவங்க, கண்டிப்பா இந்த ப்ளேட்டை ரிமூவ் பண்ணித்தான் ஆகணும். என்ன… நாம கொஞ்சம் முன்னாடி அவருக்கு ரிமூவ் பண்ணுறோம், அவ்வளவு தான். அதனால அவருக்கு பிரச்சினை எதுவும் வராது” என்று மருத்துவர் சொன்னதில் மனம் லேசாக சமாதானம் அடைந்தாலும், அந்த சிகிச்சைக்குப் பிறகு கணவன் நல்ல முறையில் நடக்கும்வரை, மனதுக்குள் பயம் இருக்கத்தான் செய்தது சுபாஷிணிக்கு.
இரண்டாவது சர்ஜரியும் முடிந்து, அதன் காயம் ஆறி மெதுவாக சேனாதிபதி நடக்கத் தொடங்கிய நேரம், ஒரு மாலை வேளையில் சேனாதிபதியின் மூன்று நண்பர்களும், அவன் வீட்டில் ஒன்றாக வந்து இறங்கினார்கள்.
அன்றிலிருந்து சுமார் ஒருமாத காலம், அந்த நண்பர்கள் கூட்டணி, காலையும் மாலையும் கடற்கரையை நோக்கி விடாது படையெடுத்ததில், சேனாதிபதியின் உடல்நிலை தனது உடல் தகுதியை நிரூபிக்கும் அளவிற்கு முன்னேறியிருந்தது.
ஆமாம்… தன் வாழ்வில் தடைக்கல்லாக வந்த இடரை, தன் இடைவிடா முயற்சியாலும், குடும்பம், மற்றும் நண்பர்களின் துணையோடும் வென்று, இதோ, தன் உடல் தகுதியை நிரூபித்து பணியில் சேர்ந்து கொள்வதற்காக நாளை சென்னைக்கு செல்ல இருக்கிறான் சேனாதிபதி.
சுபாஷிணிக்கு இப்போது ஏழாவது மாதம் நடந்து கொண்டிருப்பதால், பிரசவத்திற்கு பிறகு சென்னைக்கு அனுப்பி வைக்கலாம் என்று ஒரு மனதாக எல்லோராலும் முடிவெடுக்கப்பட்டது. சேனாதிபதிக்குமே அந்த முடிவு சரி என்று மனதுக்கு பட்டதால் சம்மதம் சொன்னான்.
அன்றிரவு தனக்கருகில் அமைதியாக படுத்திருந்த மனைவியின் முகவடிவை விரல்களால் அளந்தபடியே, “இந்த மாதிரி நேரத்துல உங்கூட யாராவது இருக்கணும் லட்டுகுட்டி. நான் டியூட்டி க்கு போனா எப்போ வருவேன்னு எனக்கே தெரியாது. அதான் உன்னை இங்க விட்டுட்டு போறேன். உனக்கொன்னும் வருத்தம் இல்லையே” என்று சேனாதிபதி கேட்க,
ஏற்கனவே பிரசவத்தைக் குறித்து லேசான மிரட்சியோடு இருந்த சுபாஷிணி எல்லா பக்கமும் தலையசைத்து வைத்தாள்.
“குட்.. பெரிய லட்டுகுட்டி ஒகே சொல்லிடிச்சி, இப்போ சின்ன லட்டுகுட்டி கிட்ட கேப்போமா?” என்றவன் மனைவியின் வயிற்றில் மென்மையாக கை வைத்து “பாப்பூ… அப்பா டியூட்டில ஜாயின் பண்ணிட்டு, லீவ் கிடைச்சதும் ஓடி வந்துடுவேனாம். அதுவரைக்கும் என் லட்டுக்குட்டி அம்மாவுக்கு கஷ்டம் குடுக்காமல் சமத்தா இருப்பீங்களாம்” என்று சொல்ல, புரிந்தது என்பது போல தாயின் வயிற்றுக்குள் உருண்டது அவர்களின் குழந்தை.
இத்தனை நாட்களில் மிகத்துல்லியமாக குழந்தையின் துடிப்பை இப்படி உணராத சேனாதிபதியிடம் ஒரு பரபரப்பு வந்து ஒட்டிக்கொள்ள, “உன்னை ஃபீல் பண்ண விடாம உங்கம்மா ஒரு கர்ட்டனை போட்டு வச்சிருக்காங்க பாரு டா செல்லம்” என்றபடியே தனக்கும் தன் மகவுக்கும் இடையே தடையாக இருந்த மனைவியின் நைட்டியை விலக்க முயன்றான்.
கணவனின் கைகளை சட்டென்று தடுத்து, “நீங்க ஃபீல் பண்ணுன வரைக்கும் போதும் பாஸ்” என்று சிணுங்கினாள் சுபாஷிணி.
“பொறாமை… எங்க, நீயும் நானும் கூட்டணி வச்சிப்போம்மோன்னு உங்க அம்மாவுக்கு பொறாமை டா பட்டூ…” என்று சிரித்தபடியே, குழந்தைக்கான முத்தத்தை மனைவியின் வயிற்றில் கொடுத்தான்.
அடுத்து, தாய்மையின் பேரழகில் பூரித்திருந்த மனைவியின் மதிமுகத்தை தன் கண்களால் கொள்ளையிட்டபடியே, “மயக்குறடி…” என்று, மனைவியின் நெற்றி, கன்னம், இதழ்கள் என்று முத்த ஊர்வலம் நடத்தி கழுத்தில் வந்து இளைப்பாறியவனின் கைகள், கணவனாக அத்துமீறத் தொடங்கியிருந்தது.
அத்தனை நேரமும் நெகிழிந்து போயிருந்த சுபாஷிணியின் உடல் சட்டென்று இறுக, கணவனின் கைகளைத் தடுத்து மெதுவாக விலக்கியவள், கட்டிலில் எழும்பி அமர்ந்தாள்.
லேசாக தலையைத் தூக்கி, “என்னாச்சு சுபா?” என்று கேட்ட சேனாதிபதியின் குரலில் அப்பட்டமாக தாபம் கொட்டிக் கிடந்தது.
முகமெல்லாம் முத்து முத்தாக வியர்த்திருக்க, “ஒன்றுமில்லை..” என்பது போல தலையை இடவலமாக அசைத்து விட்டு பாத்ரூம் உள்ளே நுழைந்து கொண்ட மனைவியை, யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் சேனாதிபதி…