அத்தியாயம் 21

சிகிச்சை முடிந்து வெளியே வந்த சேனாதிபதியிடம் சுபாஷிணி அழைத்ததை ராஜ் சொல்ல, அவர் போனிலிருந்தே மனைவிக்கு அழைத்தான் சேனாதிபதி.

ஆனால், சுபாஷிணியின் போனை ரோட்டில் எறிந்து, அதுவும் எப்போதோ ஒரு வாகனத்தின் டயரில் சிக்கி சின்னாபின்னமாகி போன பிறகு, சேனாதிபதியின் அழைப்பு அவள் போனை எட்டுமா என்ன?

அது தெரியாமல் மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்து பார்த்தவனுக்கு, லேசான பதட்டம் ஒன்று தோன்றியது. உடனே அனுவிற்கு அழைத்து சுபாஷிணி வீட்டில் இருக்கிறாளா என்று பார்த்து சொல்லுமாறு கேட்டான். அவளுமே சென்று பார்த்துவிட்டு, “நான் காலிங் பெல் அடிச்சு பார்த்தேன். ரெஸ்பான்ஸ்ஸே இல்ல கமாண்டர்” என்று பதில் சொன்னாள்.

பொதுவாக கைபேசி என்ற ஒன்று வந்தபிறகு நம் அன்புக்குரியவர்களின் தொலைபேசி எண்களை மனதில் சேமித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் போய், அந்த அஃறிணைப் பொருளில் சேமித்து வைக்கும் பழக்கம் எல்லோரையும் தொற்றிக் கொண்டு விட்டது.

ஏதாவது ஒரு நேரம், இதோ சேனாதிபதிக்கு நேர்ந்தது போல, போன் நம் காலை வாரிவிட்டால், அவசரத் தேவைக்கு கூட யாரையும் அழைக்க முடியாத கையறு நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

அப்படியொரு சூழ்நிலையில் சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காகவே, அவசியமான தொலைபேசி எண்களை மனனம் செய்து வைத்துக் கொள்ளும் பழக்கம் சேனாதிபதிக்கு இருந்தது. அப்படித்தான் சமீபத்தில் தெரிந்து கொண்ட அனுவின் கைபேசி எண்ணையும் சேனாதிபதி மனனம் செய்து வைத்திருந்தான். அது இப்போது தக்க சமயத்தில் அவனுக்கு கை கொடுக்கவும் செய்தது.

“சுபா வெளியே எங்கயும் போனாளான்னு, அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி கிட்ட கேட்டு சொல்லு அனு” என்று சேனாதிபதி அடுத்ததாகச் சொல்ல,

“ஹ்ம்ம்… ஆமா, கால் டாக்சில போனாங்க. காரோட நம்பர்…” என்பது வரை அந்த செக்யூரிட்டி சொன்ன தகவல், அனு மூலம் சேனாதிபதியை வந்து சேர்ந்தது.

ட்ரைவர் ராஜிடம் சுபாஷிணி பேசியதை வைத்துப் பார்க்கும்போது, தன்னைப் பார்க்கத்தான் மனைவி கிளம்பியிருக்கிறாள், அதற்கிடையில் யாரோ புகுந்து தங்கள் கைவரிசையை காட்டி விட்டார்கள் என்பது வரை சேனாதிபதியால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது

ஆனால் அந்த யாரோ, யார் என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. இப்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும் போது அது ரஞ்சனாகவும் இருக்கலாம்.

அதே நேரம், திடீரென்று ஒருவளைவில் முளைத்து தங்கள் காரை குறிவைத்து அசுரத்தனமாக மோதவந்த லாரியை ஏற்பாடு செய்தவர்களின் வேலையாகவும் இருக்கக் கூடலாம். தங்களின் முதல் முயற்சி தோற்றுப் போனதில், அடுத்ததை முயன்றிருக்கலாம் என்ற எண்ணமும் வந்தது.

இந்த எண்ணம் தோன்றவுமே, மனைவிக்கு கெடுதலாக எதுவும் நடந்துவிடக் கூடாதே என்று பதட்டம் வந்து தானாக ஒட்டிக்கொண்டது சேனாதிபதியிடம்.

எல்லாம் சில வினாடிகள் தான், ‘திங்க் பாசிட்டீவ் சேனா.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், மனைவியை மீட்டெடுக்கும் அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கினான்.

சுபாஷிணி சென்ற காரின் பதிவு எண், அந்த கார் சென்ற திசையில் உள்ள அத்தனை சோதனை சாவடிகளுக்கும் முதலில் அனுப்பப்பட்டது.

போலீஸார் தங்கள் ஏசிபி மனைவியை கண்டுபிடித்து விடும் வேகத்தில் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தார்கள். அதன் பலனாக அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே, வேலை முற்று பெறாத அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே அந்த கார் நிற்பதை கண்டுபிடித்தார்கள்.

 அந்த காருக்குள் கிடந்த பர்ஸ் உங்கள் மனைவியுடையதா என்று கேட்டு சேனாதிபதியின் கைகளுக்கு வர, அதை அடையாளம் கண்டு கொண்டவனுக்கு, அணிந்திருந்த காக்கிக் சட்டையையும் மீறி மனைவிக்காக உள்ளம் பதைபதைத்தது.

 அங்கேயிருந்த மூன்று கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களில் ஏதோ ஒன்றில் தான் சுபாஷிணியை மறைத்து வைத்திருக்க கூடும் என்றும் போலீஸார் சந்தேகப்பட, அங்கிருந்த நான்கைந்து காவலர்கள், அதிரடியாக அந்த கட்டிடங்களுக்குள் நுழைந்து தேடவும் ஆரம்பித்து விட்டார்கள்.

போலீஸார் சந்தேகப்பட்டது போல அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தான் சுபாஷிணியோடு இருந்தான் ரஞ்சன்.

பதட்டத்தில் அளவுக்கு அதிகமான மயக்கமருந்தை உறிஞ்சி தன் நுரையீரல் முழுவதும் சுபாஷிணி நிரப்பியிருந்த காரணத்தால் இன்னமும் அவளின் மயக்கம் தெளிந்திருக்கவில்லை.

சுபாஷிணியை சுவரோடு சாய்த்து அமர வைத்துவிட்டு, அங்கிருந்த ஒரு திண்டில் அமர்ந்திருந்த ரஞ்சனின் மனதில் அடுத்து என்ன, என்று ஓடிக்கொண்டிருந்தது.

 போலீஸார் எந்த அளவிற்கு தன்னைத் தேடுவார்களோ, அதைவிட இருமடங்கு வேகமாக இராஜபூபதியின் ஆட்களும் தன்னைத் தேடுவார்கள் என்றும் அவனுக்கு தெரியும்.

போலீஸாரின் கைகளில் சிக்கினால், தன் உயிராவது மிஞ்சும். ஆனால், இப்போது அதையும் நம்ப முடியாது. என்கவுண்டர் என்ற பெயரில் சேனாதிபதி போட்டுத் தள்ளிவிடவும் வாய்ப்பு உண்டு. இராஜபூபதியின் கைகளில் சிக்கிக் கொண்டாலோ, கண்டிப்பாக அவன் தோட்டத்து மண்ணிற்கு தன்னை உரமாக்கி விடுவான் என்றும் தெரியும்.

அதனால் உடனடியாக ஒளிந்து கொண்டவனின் சின்னமூளை, சுபாஷிணியை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி, சேனாதிபதி மூலமாகவே தப்பிச் சென்றுவிட வேண்டும் என்று தப்புக் கணக்கு போட்டது.

அதற்கேற்றாற்போல் சேனாதிபதிக்கு விபத்தும் ஏற்பட, அதை பயன்படுத்தி சுபாஷிணியை வெளியே வரவைத்து பணயக்கைதியாக கொண்டும் வந்தாயிற்று.

‘இனி சேனாதிபதியை தொடர்பு கொள்ள வேண்டும்’ என்ற ரீதியில் யோசித்துக் கொண்டிருந்தவனின் காதுகளில், கட்டிடத்திற்குள் ஆள் நடமாடும் காலடி சத்தம் கேட்டது. பதட்டத்தோடு அங்குமிங்கும் பார்த்தவன், அந்த அறையில் பால்கனிக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் கட்டப்படாத இடத்திற்கு அருகே சென்று, மறைவாக நின்று கீழே பார்த்தான்.

அவ்வளவு தான்… அங்கே நின்றிருந்த போலீஸ் வாகனத்தை கண்ட ரஞ்சனின் காலுக்கு கீழ் பூமியே நழுவியது.

இங்கிருந்து தப்பிச்செல்ல முழுகொள்ளளவு பெட்ரோல் நிரப்பப்பட்ட வாகனம், ஒரு கோடி பணம், தான் விரும்பிய இடத்தை சென்று அடையும் வரை பணயக்கைதியாக சுபாஷிணி என்று சினிமா பாணியில் திட்டம் தீட்டி வைத்திருந்தவனுக்கு, இத்தனை சீக்கிரத்தில் தன்னை கண்டுகொண்டார்கள் என்பதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

இருந்தாலும், தன் முயற்சியை விட்டுக் கொடுத்துவிட முடியாமல், தன் ஒரே துருப்புச் சீட்டாக இருந்த சுபாஷிணியை, தன் முன்னே கவசம் போல தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டு பால்கனியை நோக்கி வேகமாக நகர்ந்த நேரம், அந்த அறைக்குள் வந்து நின்றான் சேனாதிபதி.

போலீஸோடு போலீஸாக இணைந்து, மனைவியை இப்போது பார்த்து விடமாட்டோமா? இன்னும் சற்று நேரத்தில் பார்த்து விடமாட்டோமா?’ என்று உயிரை கண்களில் தேக்கி ஒவ்வொரு தளமாக தேடிக்கொண்டிருந்த சேனாதிபதியின் கண்களில் மனைவியைக் காணவும் புத்தொளி வந்தது.

அதேநேரம், ரஞ்சன் தான் மனைவியை இங்கே கொண்டு வந்திருக்கிறான் என்பது புரியவும், ‘இப்படி அவசரகுடுக்கையாக இவன் விரித்த வலையில் மாட்டிக் கொண்டாளே’ என்று மனைவி மீது கோபமும் வந்தது.

ஆனால், அடுத்த வினாடியே மனைவியின் நிலைமை கருத்தில் பதிய, “ராஸ்கல்… என்னடா ஆச்சு சுபாவுக்கு?” என்று கேட்டபடியே, கையிலிருந்த துப்பாக்கியோடு அவனருகே வேகமாக செல்ல முயன்றான் சேனாதிபதி.

சேனாதிபதியை அருகில் வரவிடுவதே தனக்கு ஆபத்து. இதில் துப்பாக்கியோடு வரவிட்டால் பேராபத்து என்பது புரிய, “கூல் டவுன் ஏசிபி சார்… மொதல்ல உங்க துப்பாக்கியை தூக்கித் தூரப்போடுங்க. அப்புறம் சொல்லுறேன்.” சுபாஷிணியை தன்னோடு சேர்த்து இழுத்துக் கொண்டு பின்னால் நகர்ந்தபடியே சொன்னான் ரஞ்சன்.

ரஞ்சனின் வார்த்தைகளை கருத்தில் கொள்ளாமல், “விடுடா சுபாவை” என்றபடியே முன்னோக்கி நகர்ந்த சேனாதிபதிக்கு, முற்றுமுழுதாக தனக்கான பாதுகாப்பு கவசம் போல சுபாஷிணியை வைத்துக் கொண்டு, அவளுக்கு பின்னால் நின்றிருந்த ரஞ்சன் மீது, தன் கையிலிருந்த ஆயுதத்தை பிரயோகிக்கவும் யோசனையாக இருந்தது.

“சொல்றேன்ல… துப்பாக்கியைத் தூக்கி தூரப்போடுடா. இல்லைன்னா, நான் செத்தாலும் பரவாயில்லைன்னு என் அத்தை மகளோட கீழ குதிச்சிடுவேன்.” அதட்டலாக சொல்லியபடியே சுபாஷிணியோடு பின்னோக்கி நகர்ந்தபடியே இருந்தான் ரஞ்சன்.

ரஞ்சனுக்கும் அவன் பின்னால் சுற்று சுவர் எதுவும் இல்லாமல் இருந்த பகுதிக்கும் இடையேயான தூரம் குறைந்து கொண்டே வர, “ஹே…ய்… அப்பிடியே நில்லுடா. முட்டாள்த்தனமா எதுவும் செய்துடாத.” தன் கையிலிருந்த துப்பாக்கியை தூக்கி எறிந்தபடி ரஞ்சனை நோக்கி ஓடிவந்தான் சேனாதிபதி.

“துப்பாக்கியை தூரப்போட்டா மட்டும் போதாது பங்காளி, அங்கயே நிக்கணும்.” கையை நீட்டி, எச்சரிப்பது போல சொன்ன ரஞ்சன்,

 “ஏசிபி க்கு பொண்டாட்டி மேல ரொம்ப லவ் போல, சொன்ன உடனே துப்பாக்கியை தூக்கி தூரப் போட்டுட்டீங்க” என்று சிரித்தான்.

“ஆனா ஒரு விஷயம் தெரியுமா பங்காளி உங்களுக்கு? நான் மட்டும் சுபாவைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு பிடிவாதமா சொல்லியிருந்தா, மூனு வருசத்துக்கு முன்னாடியே எங்க கல்யாணம் நடந்துருக்கும். உங்காதல் ஓவியம் இந்நேரத்துக்கு எம்பிள்ளைக்குட்டியை…”

தன் இஷ்டத்திற்கு பேசிக்கொண்டே போன ரஞ்சனுக்கு, கண்கள் இரண்டும் சிவந்து, தன் வலது கையில் கிடந்த வெள்ளிக்காப்பை இடது கையால் தள்ளியபடி, பல்லைக் கடித்துக்கொண்டு முன்னோக்கி நகர்ந்த சேனாதிபதியின் செயலில் குப்பென்று வியர்த்துப் போனது.

 சட்டென்று தன் பேச்சை நிறுத்தி, “ஹேய்… அங்கேயே நில்லு… அங்கேயே நில்லு” என்று பதறியவன், “நான் என்ன டாக்டரா? இவ்வளவு தான் மயக்கமருந்து குடுக்கணும்னு அளவு பாத்து குடுக்க? கொஞ்சம் அதிகமாயிடிச்சி போல, அதான் இன்னும் உம்பொண்டாட்டி கண்ணு முழிக்கல.” அலட்சியம் போல காட்டிக்கொண்டு சொல்லியவன் அப்போதும் பின்னோக்கி நகர்வதை மட்டும் நிறுத்தவில்லை.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த சேனாதிபதி, தகுதியில் தன்னைவிட பல படிகளுக்கு மேலே இருப்பதில், எப்போதுமே காழ்ப்புணர்ச்சி உண்டு ரஞ்சனுக்கு. அதை இந்தநேரத்திலும் இன்னோரன்ன வார்த்தைகளில் வெளிப்படுத்த முயன்றவனுக்கு, இதற்கு மேலும் சேனாதிபதியின் பொறுமையை சோதித்தால், நடப்பது நடக்கட்டும் என்று தன்மேல் அவன் பாய்ந்துவிடக் கூடும் என்ற பயம் தோன்றியது.

 அப்படி மட்டும் நடந்து விட்டால் தன்னால் சேனாதிபதியை தாக்குபிடிக்க முடியாது என்பது தெரிந்ததால், அநாவசியமான பேச்சை தவிர்த்து, பதில் சொன்னான்.

ரஞ்சனின், பங்காளி என்ற அழைப்பும் அசட்டுத்தனமான பேச்சும் உச்சபட்ச கோபத்தை சேனாதிபதிக்கு உண்டாக்கி இருந்தது. இதே வேறு நேரமாக இருந்திருந்தால் ரஞ்சனின் வாய் வெற்றிலை பாக்கு போட்டிருக்கும். இப்போது சேனாதிபதியின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியாக ரஞ்சனின் கைகளில் மாட்டிக்கொண்டிருக்கும் சுபாஷிணி இருக்க, வேறுவழியில்லாமல் அடக்கப்பட்ட கோபத்தோடு நின்றிருந்தவனுக்கு,

  முதலில் மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசரம் புரிய, “எதுன்னாலும் பிறகு பேசிக்கலாம் ரஞ்சன், மொதல்ல சுபாவை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போவோம்” என்று பேச்சுவார்த்தையில் இறங்கினான்.

“ஹஹ… அப்புறம்… உன் பொண்டாட்டியை ஹாஸ்பிடலுக்கு அனுப்பிட்டு, நான் கையை கட்டிகிட்டு ஜெயிலுக்கு போகவா இவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டேன் கோப்பால்…” மொட்டை அடித்திருந்த தன் தலையை தடவியபடியே கேலியாக சொன்னான் ரஞ்சன்.

மனைவியை வைத்து தன்னை ஒருவன் மிரட்டிக் கொண்டிருக்க, எதுவுமே செய்யமுடியாமல் நின்ற தன் கையறு நிலையை அறவே வெறுத்தான் சேனாதிபதி.

பேசியபடி மெதுவாக பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்த ரஞ்சனின் செயலில், கைப்பிடி இல்லாத காங்கிரீட் விளிம்புக்கும் அவனுக்குமான தூரம் வேறு குறைந்து கொண்டே போனதில், சேனாதிபதியின் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் ஏறி இறங்கியது.

அதற்கு மேலும் கைகட்டி வேடிக்கை பார்க்க மனமின்றி, சட்டென்று முடிவெடுத்தவனாக, ஒரு புன்முறுவலோடு ரஞ்சனுக்கு பின்னால் தன் பார்வையை வீசிய சேனாதிபதி, “அப்படியே இவனை குண்டுகட்டா தூக்கு ஜெகா” என்று சத்தமாகச் சொல்ல, தன் பின்பக்கமாக யாரும் வந்துவிட்டார்களோ என்று பதறிப்போய் திரும்பிப் பார்த்த ரஞ்சனின் கைகள், சுபாஷிணியின் மீதான தன் பிடியை லேசாக தளர்த்தியது.

 ரஞ்சனுக்கு அருகே வந்து மனைவியின் இடையோடு கைக்கொடுத்து தன்னோடு இழுத்துக் கொள்ள சேனாதிபதிக்கு அந்த கண்ணிமைக்கும் நேரம் போதுமானதாக இருந்தது.

நொடிப்பொழுதுக்குள் சேனாதிபதி தன்னை ஏமாற்றி விட்டது புரிய, ஆங்காரத்தோடு அவனோடு கைகலப்பில் ஈடுபட ஆரம்பித்தான் ரஞ்சன்.

இத்தனை நேரமும் இழுத்துப் பிடித்திருந்த பொறுமையை, மனைவி தன் கைவசம் வந்ததும் காற்றில் பறக்க விட்ட சேனாதிபதி, தன் மொத்த கோபத்தையும் ஒற்றை அறையாக ரஞ்சனின் கன்னத்தில் இறக்க, சுருண்டு போனான் ரஞ்சன். என்றாலும், அடங்க மறுத்து மறுபடியும் மறுபடியும் சேனாதிபதியோடு மல்லுக்கு நின்றான்.

 மனைவியை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டு ரஞ்சனையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சேனாதிபதிக்கு சற்று சிரமமாக இருக்கவே, ஒரு ஓரமாக சுபாஷிணியை அமர வைக்க முயன்றான்.

 இதற்கு மேலும் அங்கே நின்றால் சேனாதிபதியின் கைகளில் மாட்டிக்கொள்வது உறுதி என்ற எண்ணத்தில் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓட ஆரம்பித்தான் ரஞ்சன்.

மனைவியை ஒருமுறை திரும்பி பார்த்து விட்டு அவனை துரத்திக்கொண்டு ஓடினான் சேனாதிபதி. அந்த தளத்தின் மொட்டைமாடிக்கு வந்திருந்தான் ரஞ்சன். அங்கே அடுத்த தளம் கட்டுவதற்கு ஏதுவாக ஆங்காங்கே பில்லர்களை வளர்த்து விட்டிருந்தார்கள்.

மூழ்குபவன் கைகளில் கிடைத்ததை பற்றிக்கொண்டு தப்பிவிட முயல்வது போல, அந்த மொட்டைமாடியின் ஓரத்திற்கு வந்துவிட்ட ரஞ்சன் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் அங்குமிங்குமாக பதட்டத்தில் ஓடிக்கொண்டேயிருக்க, தரையோடு இருந்த பில்லர் ஒன்று வேகமாக அவன் கால்களை தடுக்கிவிட்டதில் சிதறி விழுந்தான்.

அவனுக்கு பின்னே மிக அருகில் வந்துவிட்ட சேனாதிபதி, நடக்க இருப்பதை நொடிப்பொழுதில் கணித்து, “ஹேய்.. பாத்து…” என்று கத்தியபடியே, அவனை பிடித்து விடும் வேகத்தில், கையை நீட்டிக் கொண்டு முன்னோக்கி பாய்ந்தான்.

அந்தோ பரிதாபம்… சேனாதிபதியின் நீட்டிய கரங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் ரஞ்சன் தரையை நோக்கி பயணிக்க, அவனை பிடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் முன்னோக்கி பாய்ந்த சேனாதிபதியும், நிலைதடுமாறி மாடியிலிருந்து உருண்டு ரஞ்சனோடே கீழே விழத் தொடங்கினான்.

*****

கண்களைத் திறந்த சுபாஷிணிக்கு மசமசவென்று பார்வை தெளிவில்லாமல் இருக்கவே, வலது கையால் கண்களைத் தடவிவிட முயல, கையில் சுருக்கென்று வலித்தது. கையை மடக்கி கண்முன்னே கொண்டு வந்து வலித்த இடத்தைப் பார்த்தாள். மணிக்கட்டில் வென்ஃப்ளான் குத்தியிருந்தது.

அறையில் பரவியிருந்த மருந்து நெடியை சுவாசித்தவளுக்கு, தான் மருத்துவமனையில் இருப்பது புரிந்தது. குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்களில் படுக்கை அருகேயிருந்த நாற்காலியில் கண்களை மூடியபடி சாய்ந்திருந்த அனு விழ, கையை நீட்டி அவளைத் தொட்டு, “அனு… அத்தான்… அத்தான்… எப்பிடி இருக்காங்க?” என்றாள் வேகமாக.