அத்தியாயம் 17
“கைது செய்… கைது செய், குற்றவாளியைக் கைது செய்.”
“நீதி வேண்டும்… நீதி வேண்டும்… ஏழை மாணவிக்கு நீதிவேண்டும்.”
“கண்டிக்கிறோம்… கண்டிக்கிறோம்… போலீஸின் அலட்சிய போக்கை கண்டிக்கிறோம்.”
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண்களும் பெண்களுமாக குழுமியிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த வார்த்தைகளையே திரும்பத் திரும்ப சொல்லியபடி கோஷமிட்டு கொண்டிருந்தனர்.
திடீரென்று கூடிவிட்ட மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனை பாதுகாவலர்கள் திணற, இருதரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.
அந்த மாணவர்களுக்கு தலைவன் போலிருந்த இளைஞன் ஒருவன், தன்னுடன் வந்திருந்தவர்களைப் பார்த்து, “நாம பிரச்சினை பண்ண இங்க வரல ஃப்ரெண்ட்ஸ், நம்ம தோழிக்கு நியாயம் கேட்டு வந்திருக்கோம். சோ, எல்லோரும் அமைதியா, ஹையர் ஆஃபீஸர்ஸ் இங்க வர்றவரைக்கும் அப்பிடியே உக்காருங்க” என்று சொல்ல, மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல மாணவர்கள் அப்படியே அமர்ந்தார்கள். ஆனால், கோஷமிடுவதை மட்டும் கைவிடவில்லை.
அடுத்த ஒருமணி நேரத்தில் சேனாதிபதியின் வாகனம் அங்கே வந்து நிற்க, தன் வேகநடையோடு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு முன்னால் வந்து நின்றான் சேனாதிபதி. உடன் ஜெகன்நாதன் உட்பட இன்னும் சில காவலர்களும் இருந்தார்கள்.
போலீஸைக் கண்டதும் எழும்பிய கூட்டம் இன்னும் உத்வேகமாக கத்தத் தொடங்க, தன்னிரு கைகளை உயர்த்தி அவர்களை அமைதிபடுத்திய சேனாதிபதி, “அனுமதி இல்லாமல் எதுக்கு திடீர்னு இங்க கூடியிருக்கீங்க?” என்று கேட்க,
“எதுக்குன்னே தெரியாதா? சுத்தம்…” என்றொரு கமெண்ட் கூட்டத்திலிருந்து பறந்து வந்தது.
அதை அலட்சியப்படுத்தி, “என்ன பர்பஸ்ஸுக்காக கூடியிருக்கீங்கன்னு நீங்க சொன்னா தானே எனக்கு தெரியும், யாராவது ஒரு ஆள் சொல்லுங்க” என்று கூட்டத்தைப் பார்த்து சேனாதிபதி சொல்ல,
அந்த தலைவன் போன்ற இளைஞன் முன்னே வந்து, தங்களை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “சார்… இரண்டு நாளைக்கு முன்னாடி, எங்க காலேஜ்ல படிக்கிற கமலி ங்குற பொண்ணு, எங்க காலேஜ் ரோட்ல ஆக்சிடென்ட் ஆகி, இப்போ வரைக்கும் சுயநினைவு வராமல், இங்க, இந்த ஹாஸ்ப்பிடல்ல தான் உயிருக்கு போராடிகிட்டு இருக்கிறா.”
“ஆனா, இதோ, இந்த நிமிஷம் வரைக்கும் ஆக்சிடென்ட் பண்ணுனவங்களை போலீஸ் கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணல… இதே வசதியான வீட்டு பிள்ளைகளுக்கு நடந்திருந்தா, போலீஸ் சுறுசுறுப்பா ஸ்டெப்ஸ் எடுத்து குற்றவாளியை அரெஸ்ட் பண்ணியிருக்கும் தானே? ஏழைன்னா, ஏன் இவ்வளவு அலட்சியம்? போலீஸ் உடனடியா ஆக்சிடென்ட் பண்ணுனவங்களை கண்டுபிடிச்சி அரெஸ்ட் பண்ணணும். அதுவரைக்கும் எங்க போராட்டம் தொடரும்” என்றான் கோபமாக.
அந்த இளைஞன் விஷயத்தை சொல்லி முடிக்கும் வரை அமைதியாக இருந்த கூட்டம், மறுபடியும் தங்கள் கோஷத்தை உச்சஸ்தாயில் தொடங்க,
“உங்க தார்மீக கோபம் எனக்கு புரியுது. சட்டம் தன் கடமையை செய்யும், இப்போ நீங்க கலைஞ்சு போங்க” என்று சத்தமாக சொன்னான் சேனாதிபதி.
“எப்பிடி? இப்போ இரண்டு நாளா சட்டம் தன் கடமையை செய்யுதே… அப்பிடியா? நீங்க மொதல்ல குற்றவாளியை கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணுங்க சார்… அப்புறம் நாங்க கிளம்புறோம்” என்று சத்தம் வந்தது கூட்டத்திலிருந்து.
“சார் தான்… சொல்லுறாங்க ல்ல… அப்புறம் என்ன கூடக்கூட பேசிக்கிட்டு.” சேனாதிபதியோடு நின்றிருந்த காவலர்கள் கூட்டத்தினரிடம் கோபமுகம் காட்ட முயல,
அவர்களைத் தடுத்த சேனாதிபதி, “அவங்களை கேள்வி கேட்க விடுங்க, அப்போ தான் இங்க நடக்குற அநியாயங்கள் கொஞ்சமாவது குறையும்” என்றவன், கூட்டத்தைப் பார்த்து,
“உங்க கோபம் எனக்கு புரியுது. ஆனா, இது ஹாஸ்பிடல். உங்க சத்தம் உள்ளயிருக்குற எத்தனையோ நோயாளிகளுக்கு இடைஞ்சலா இருக்கலாம். என்னை நம்பி, இப்போ இங்கயிருந்து கலைஞ்சு போங்க. கண்டிப்பா குற்றவாளியை சீக்கிரம் உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன்.”
“நீங்களும் விபத்து சம்மந்தமா எதுவும் தகவல் தெரிஞ்சா நேரிலயோ இல்ல போன்லயோ என்னை தொடர்பு செய்து சொல்லுங்க” என்று தன்னுடைய கைபேசி எண்ணைச் சொன்னான். சேனாதிபதியின் தன்மையான நடவடிக்கையிலும், நம்பிக்கை தரும் பேச்சிலும் கவரப்பட்ட கூட்டம், மெல்ல மெல்லக் கலைய ஆரம்பித்தது.
நடந்த பிரச்சினையில் மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவமனைக்குள் இருந்து வெளியே வந்து நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்த சேனாதிபதி, “இதுல யாரு அந்த பொண்ணுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்குறது?” என்று கேட்க, “நான் தான்” என்று முன்னால் வந்தார் ஒரு நாப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மருத்துவர்.
“எனக்கு அந்த பொண்ணைக் காட்டுங்க” என்றபடியே சேனாதிபதி மருத்துவமனைக்குள் நுழைய, உடன் சென்ற மருத்துவர், சேனாதிபதியை ஐசியூ வார்டுக்கு அழைத்துச் சென்று, கண்ணாடி கதவு வழியே தலை, முதல் கால்வரை கட்டோடும், எண்ணற்ற மருத்துவ உபகரணங்களோடும் பிணைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணைக் சுட்டிக் காட்டி, “இந்த பொண்ணு தான்” என்றார்.
மருத்துவர் காட்டிய பெண்ணை உற்றுப் பார்த்தபடியே சில வினாடிகள் நின்றிருந்த சேனாதிபதி, “உள்ள போய் பாக்கலாமா?” என்று கேட்டு, மருத்துவர் அனுமதிக்கவும் ஷூவைக் கழற்றி வெளியே விட்டுவிட்டு அறைக்குள் நுழைந்தான். மருத்துவரும் உடன் சென்றார்.
வெளியே நின்று பார்த்ததை விட இப்போது முகத்தை நன்றாக பார்க்க முடிந்தது. தலையில் அடிபட்டதில், ரத்தம் கட்டி முகம் வீங்கிப் போய் இருந்தாலும் கூட, அந்த பெண்ணிற்கு இருபது வயதுக்குள் தான் இருக்கும் என்று கணிக்க முடிந்தது சேனாதிபதியால்.
எத்தனையோ கேஸ்களை இப்படி பார்த்திருந்தாலும், அந்த சிறுபெண்ணை பார்த்த நொடி மனம் கசங்கித் தான் போனது சேனாதிபதிக்கு.
எழுந்த பெருமூச்சை உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு நிர்மலமான முகத்தோடு, “கேஸ் ஹிஸ்டரி பத்தி சொல்லுங்க டாக்டர்” என்றபடியே அறையை விட்டு வெளியே வந்தான்.
“முந்தாநாள் மத்தியானம் இரண்டரைக்கு போல ஆக்ஸிடென்ட் கேஸ் ன்னு ஆம்புலன்ஸ்ல கொண்டு வந்தாங்க சார். பின்னந்தலையில நல்ல அடி. ப்ளட் ரொம்ப லாஸ் ஆகியிருந்திச்சு. அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஃபார்ம் பண்ணி கேஸ் ஃபைல் பண்ணிட்டு ட்ரீட்மெண்ட் தொடங்கிட்டேன். இதுவரைக்கும் கான்ஸ்சியஸ் வரவே இல்ல. இப்படியே போனா… பிழைக்கிற சான்ஸஸ் ரொம்ப கம்மி” என்றவர், ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் விட்டது சேனாதிபதியின் கண்களில் தவறாமல் பட்டது.
“கேஸ் ரெஜிஸ்டர் ஆகியிருக்குற ஸ்டேஷன்லயிருந்து, போலீஸ் யாரும் வரலையா?”
“வந்தாங்க… வந்து எல்லா ஃபார்மாலிட்டீஸையும் முடிச்சிட்டு, பேஷன்ட்டுக்கு நினைவு திரும்பவும் ஃபோன் பண்ணுங்க, வாக்குமூலம் வாங்கணும்னு சொல்லிட்டு போயிருக்காங்க.” இதைச் சொல்லும்போதே மருத்துவரின் இதழ்கள் ஏளனத்தால் லேசாக வளைந்தன.
“அந்த பொண்ணோட பேரெண்ட்ஸ்?”
ஐசியூ க்கு சற்று தள்ளி, எதிரேயிருந்த சுவரையே வெறித்தபடி தரையில் அமர்ந்திருந்த ஆணையும், அவருக்கு பக்கத்தில், புடவை தலைப்பால் தோளை மூடியபடி சோகமே உருவாக இருந்த பெண்ணையும், அவர்களுக்கு அருகே நின்றுகொண்டு தன்னையும் டாக்டரையும் மலங்க மலங்க பார்த்தபடி நின்றிருந்த பதின்மவயது சிறுமியையும் கண்ட சேனாதிபதி, அவர்கள் தான் விபத்தில் அடிபட்ட பெண்ணின் பெற்றோராக இருக்குமோ என்ற எண்ணத்தில் கேட்க,
“இவங்க தான் சார்” என்று அவர்களையே சுட்டிக்காட்டினார் மருத்துவர்.
அவர்கள் அருகே தயங்கிய கால்களை கட்டுப்படுத்திக் கொண்டு, மருத்துவரோடு அவர் அறைக்குள் நுழைந்த சேனாதிபதி, “ம்ம்… இப்போ சொல்லுங்க டாக்டர்” என்றபடியே மருத்துவருக்கு எதிரே கிடந்த இருக்கையில் அமர்ந்தான்.
“அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே…” சலனமில்லாத குரலில் மருத்துவர் சொல்ல,
“இல்லன்னு உங்களுக்கே தெரியும்” என்றான் அமர்த்தலாக சேனாதிபதி.
சில வினாடிகள் சேனாதிபதியை வெறித்து நோக்கிய டாக்டர், “நீங்க சொல்லு ங்குறீங்க. இந்த கேஸை டீல் பண்ணுற இன்ஸ்பெக்டர் சொல்லாதன்னு சொல்லுறார்… நான் யார் சொல்லுறதை கேக்குறது?” இயலாமையில் எழும்பிய கோபத்தினால் சற்றே குரலை உயர்த்தினார்.
“உங்க மனசாட்சி சொல்லுறதை கேளுங்க, உண்மையை மட்டும் சொல்லுங்க… எப்பவும் எந்த சூழ்நிலையிலும்” என்றான் சேனாதிபதி.
சில வினாடிகள் அங்கே மௌனமே ஆட்சி செய்ய, “அந்த பொண்ணோட கேஸ் ஆக்ஸிடென்ட் கேஸ் இல்ல, அட்டெம்ட் மர்டர்” என்று மௌனம் கலைத்தார் மருத்துவர்.
விபத்தை ஏற்ப்படுத்தியவர்கள், தப்பித்து சென்று விட்டார்கள் என்ற எண்ணத்தில் இருந்த சேனாதிபதிக்கு, டாக்டர் சொன்ன விஷயம் அதிர்ச்சியைத் தர, “எதை வச்சி சொல்லுறீங்க டாக்டர்?” என்றான் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளாமல்.
“விபத்துக்கு அப்புறம் அந்த பொண்ணோட குரல்வளை நெறிக்கப்பட்டிருக்கு. அப்போ எப்பிடி இதை விபத்துன்னு சொல்லமுடியும்?” என்று கேள்வி கேட்டவர்,
“உண்மையை நான் சொல்லிட்டேன். ஆனா, இறங்கி இன்வெஸ்டிகேட் பண்ணுவீங்கன்னு இப்பவும் என்னால நம்ப முடியல” என்றார் நம்பிக்கை இல்லாத குரலில்.
“இது எங்க துறையோட சாபக்கேடு. இராத்திரி, பகல், மழை, வெயில்னு பார்க்காம, மாடு மாதிரி வேலைபாக்குற ஆயிரக்கணக்கான நேர்மையானவங்க எங்க டிபார்ட்மெண்ட்ல இருக்காங்க. ஆனா, ஏதோ ஒருசிலர் செய்யுற தப்பால அந்த நல்லவங்களுக்கும் கூட கெட்ட பெயர் தான். என்ன பண்ணுறது? அதை எல்லாம் யோசிச்சு பாத்தா, இங்க வேலை பாக்க முடியாது” என்றவன்,
“ரிப்போர்ட்ல இந்த விஷயத்தை கொண்டுவர வேண்டாங்குறதுக்கு ஏதாவது ரீசன் சொன்னாரா அந்த இன்ஸ்பெக்டர்?” என்று கேட்டான் தகவல் அறிந்து கொள்ளும் விதமாக.
“ம்ம்… அந்த பொண்ணோட ஹெல்த் கண்டிஷன் மோசமா இருந்ததைப் பாத்துட்டு, இன்னைக்கு ராத்திரி தாண்டாது, விபத்துன்னு சொல்லி கேஸை முடிச்சிவிட்டுடுங்க. இதைப்போல ஆயிரத்தெட்டு கேஸ் இருக்கு எனக்கு, ஒவ்வொன்னுக்கு பின்னாடியும் என்னால ஓடிட்டு இருக்க முடியாதுன்னு சொன்னார்” என்றார் டாக்டர்.
டாக்டர் சொன்னதை கேட்கவும் கோபத்தால் முகம் சிவந்து போனது சேனாதிபதிக்கு. “அவர் சொன்னா, உடனே நீங்க கேக்கணுமா? படிச்சவங்க தானே நீங்க?” உள்ளடக்கிய கோபக்குரலில் கேட்டான்.
“வேறவழி…” என்றார் டாக்டர் அலுத்துக் கொண்டே.
“நீங்களும் ஒரு கவர்மெண்ட் சர்வெண்ட் ங்குறதை மறந்துட்டு பேசுறீங்க டாக்டர் சார். ஒரு அரசாங்க அதிகாரியை தவறு செய்யும்படி மிரட்டினா, என்ன நடக்குங்குறதை நீங்க அந்த இன்ஸ்பெக்டருக்கு காட்டியிருக்கணும். அதை விட்டுட்டு சப்பக்கட்டு கட்டாதீங்க” என்றவன்,
“எங்கிட்ட சொன்னதை கோர்ட்ல வந்து சொல்ல ரெடியா இருங்க” என்றபடியே அறையிலிருந்து வெளியே வந்து, விபத்துக்குள்ளான கமலியின் பெற்றோர்களிடம் சென்றான்.
அழுது அழுது ஜீவன் வற்றிப்போன கண்களால் சேனாதிபதியை ஏறிட்டவர்களின் தோற்றம், அப்பட்டமாக அவர்களின் வறுமையை பறைசாற்றியது.
“நான் படிச்சு, பெரிய ஆஃபீஸர் ஆயிடுவேன். அதுக்கப்புறம், நம்ம கஷ்டம் எல்லாம் போய்டும் ப்பா ன்னு அடிக்கடி எம்பொண்ணு சொல்லுவா… இப்போ எம்பொண்ணே எங்களை விட்டுட்டு போய்டுவாப் போலயே சார்.” வாயை டவலால் மூடி அழுதபடி மெதுவாக எழும்பினார் அந்த பெண்ணின் தகப்பன். அவரின் வார்த்தைகளில் கதறி அழுதார்கள் அவர் மனைவியும், மகளும்.
அவர்கள் அழுது முடிக்க அவகாசம் கொடுத்து அமைதியாக நின்ற சேனாதிபதி, “உங்க பொண்ணுக்கு விபத்து நடந்தது உங்களுக்கு எப்போ தெரியவந்திச்சி? யார் உங்களுக்கு சொன்னது?” என்று கேட்க,
“எங்க பக்கத்து வீட்டு பொண்ணு, அவ புருஷனுக்கு உடம்பு சரியில்லாம இங்க தான் வச்சு பாத்துக்குறா. அவ தான் எம்பொண்ணை கண்டுகிட்டு மத்தியானம் இரண்டரைக்கு போல போன் பண்ணி சொன்னா, உடனே நாங்க வந்துட்டோம்.” அழுகையினூடே சொன்னார் அந்த பெண்ணின் அம்மா.
“உங்க பொண்ணு ஏன் அந்நேரத்துக்கு காலேஜை விட்டு வெளியே வந்தா? ஏதாவது தெரியுமா உங்களுக்கு?” சேனாதிபதியின் இந்த கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.
“சரி… உங்க பொண்ணோட செல்போனைக் குடுங்க.” சேனாதிபதி கேட்க,
“எங்க கமலியோட காலேஜ்பை கிடைச்சுது. ஆனா, போன் அவ பைக்குள்ள இல்லங்கய்யா… எங்கயோ விழுந்திடிச்சி போல” என்றார் அப்பாவியாக அந்த பெண்ணின் தாயார்.
இந்த அப்பாவித்தனத்தை பயன்படுத்தி தான் ஒருகொலை முயற்சியை விபத்தாக மாற்ற அந்த இன்ஸ்பெக்டர் முயன்றிருக்கிறார் என்பது புரிய, “உங்க பொண்ணு நடவடிக்கைல இப்போ சமீபமா ஏதாவது மாற்றம் தெரிஞ்சுதா? அதாவது அதிகப்படியான கோபம், அமைதி, அழுகை… இப்பிடி ஏதாவது” என்று அடுத்த கேள்விக்கு தாவினான்.
“இல்ல… எங்கப்பொண்ணு எப்பவும் போலதான் சார் இருந்தா.” ஒருசேர சொன்னார்கள் பெற்றவர்கள்.
“இல்ல சார்… இப்போ கொஞ்ச நாளா, அக்கா அடிக்கடி தனியா போய் போன் அட்டண்ட் பண்ணுனா. ஒவ்வொரு தடவையும் பேசி முடிச்சிட்டு வரும் போதும் பயந்து போய் வந்தது போல எனக்கு தோணும். அதோட, அப்பாவைத் தவிர வேற எந்த ஆம்பிளையையும் நம்பாதன்னு இப்போ ஒருவாரமா அடிக்கடி எங்கிட்ட சொல்லிட்டே இருந்தா” என்றாள் அந்த பெண்ணின் தங்கை.
போனைக் காணவில்லை என்றவுடனேயே இப்படி ஏதாவது இருக்கலாம் என்று யூகித்திருந்த சேனாதிபதிக்கு, வழக்கின் போக்கு லேசாக பிடிபட்டது.
சிறிய மகள் கூறிய தகவலில் திகைத்து தான் போனார்கள் அந்த பெற்றவர்கள். அவர்களிடம், “உங்க பொண்ணோட விபத்து, கொலை முயற்சியோ ங்குற சந்தேகம் இருக்கு. விசாரணையோட முடிவுலதான் எல்லா விஷயமும் தெரியும். உங்களுக்கு எதுவும் தகவல் தெரியவந்தா, எங்கிட்ட தயங்காம சொல்லுங்க” என்றவன் அந்த பெண் கமலியின் கைபேசி எண்ணை அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டான்.
“ஹாங்… அப்புறம், எம்பொண்ணு கையைவிட்டு போய்ட்டுவாளோன்னு நினைக்காதீங்க, கண்டிப்பா பிழைச்சு வந்துடுவான்னு நினைங்க. நேர்மறை எண்ணங்களுக்கு எப்பவுமே வலிமை அதிகம்” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
ஏழ்மையையும், அவர்களின் அறியாமையையும் உபயோகப்படுத்திக் கொண்டு, தன் கடமையிலிருந்து நழுவப்பார்க்கும் அந்த இன்ஸ்பெக்டரை அப்போதே சந்தித்து கன்னம் கன்னமாக அறையும் ஆத்திரம் எழுந்தது சேனாதிபதிக்கு.
அதற்கு முன், விபத்து நடந்த இடத்தை பார்வையிட விரும்பவே, உடன் வந்திருந்த காவலர்களோடு சம்பவ இடத்திற்கு கிளம்பினான்.
அந்த மாணவர்கள் சொன்ன அரசு கலைக்கல்லூரி, நகரத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாகவே இருந்தது. கல்லூரியிலிருந்து சிறிது தூரம் தள்ளி தான் விபத்து நடைபெற்றிருந்தது.
விபத்து நடந்த இடத்திற்கு அருகே ஒரு பெரிய கட்டிடம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. கட்டிட வேலைக்காக, மணல், ஜல்லி குவித்து போடப்பட்டிருக்க, அதன் அருகே நின்றிருந்த சிமெண்ட் கம்பத்தில் தான் அந்த பெண்ணின் தலை மோதியிருக்கும் போல, இரத்தத்தடம் உறைந்து போய் காணப்பட்டது.
போலீஸ் வந்து இறங்கி அந்த இடத்தை பார்வையிடத் தொடங்கவுமே ஆங்காங்கே இருந்த கடைகளில் இருந்த மக்களின் பார்வை எல்லாம் இங்கே தான்.