அத்தியாயம் 14

“சுபா… வா… வந்து மெஹந்தி போட்டுக்கோ.” தன் கைகளுக்கு பியூட்டீசியன் மெஹந்தி இட்டு முடிக்கவும், சுபாஷிணியை அழைத்தாள் திவ்யா.

தோழிகள் இருவரும் தற்போது இருப்பது, கும்பகோணத்தில் இருக்கும் திவ்யாவின் வீட்டில். ஆமாம்… தன் திருமணத்திற்காக ஊருக்கு கிளம்பிய திவ்யாவோடு, சுபாஷிணியும் கிளம்பி வந்திருந்தாள்.

நாளை காலையில் திருமணம் என்பதால், மதிய உணவிற்கு பிறகு திவ்யாவின் கைகளை, மணப்பெண் அலங்காரத்திற்கு என்று ஏற்பாடு செய்திருந்த பெண் மருதாணியால் அலங்கரிக்கத் தொடங்கியிருந்தார்.

“கல்யாணப் பொண்ணு, நீ வச்சிக்க வேண்டியது தான். எனக்கெதுக்கு திவ்யா?” ஐந்து வயதான திவ்யாவின் அக்கா மகளோடு சுவாரஸ்யமாக விளையாடிக் கொண்டிருந்த சுபாஷிணி தோளை லேசாக குலுக்கியபடி மருதாணி இட்டுக் கொள்ள மறுக்க,

“ஐயையோ… உங்க கைக்கு எப்போ போட்டுவிடலாம்னு ஆர்வமா இருக்கிற என்னை ஏமாத்திடாதீங்க சிஸ்‌. பிளீஸ்… வந்து உக்காருங்க.” திவ்யாவை முந்திக்கொண்டு சொல்லிய அழகுக்கலைப் பெண், சுபாஷிணியின் கைகளை மெதுவாக பற்றி தன்முன்னே கிடந்த இருக்கையில் அமரவைத்தார். பெண்களே ஆசை கொள்ளும் பேரழகில் இருந்த சுபாஷிணியின் கைகளுக்கு தொழில்முறையில் மருதாணி வைக்க அந்த பெண் ஆசை கொண்டதில் வியப்பொன்றும் இல்லையே.

“அப்போ எங்க கைக்கெல்லாம் ஏன்டா போடுறோம்னு நொந்துகிட்டே போட்டீங்களா சிஸ்டர்?” மணப்பெண்ணை முந்திக்கொண்டு தங்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொண்டு அந்த அறையில் இருந்த திவ்யாவின் உறவுக்கார இளம்பெண்கள் சிலர் பியூட்டீசியனை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தார்கள்.

“ஆத்தாடி… அவங்களை மெஹந்தி போட வைக்குறதுக்காக, ஒரு ஆர்வத்துல சொல்லிட்டேன் தெய்வங்களே… என்னை ஆளவிட்டுடுங்க…” அந்த இளம்வயது பியூட்டீசியனும் அங்கிருந்த இளம்பெண்களுக்கு பேச்சில் ஈடுகொடுக்க, ஒட்டுமொத்த இளையவர்கள் கூட்டமும் கிளுக்கிச் சிரித்தது. சில்லறையை அள்ளிக்கொட்டியது போன்ற அந்த சிரிப்பொலியில் அப்போதே கல்யாணவீடு களைகட்ட ஆரம்பித்து விட்டது.

செங்காந்தள் மலர் போல சிவந்து நீண்டிருந்த சுபாஷிணியின் கையில் ரசனையோடே தன் கை வண்ணத்தை பியூட்டீசியன் காட்டிக் கொண்டிருந்த நேரம், சுபாஷிணியின் போன் அழைத்தது. அழைத்தது சேனாதிபதி தான்.

அங்கிருந்தவர்களின் ஆர்வப் பார்வைகளுக்கு மத்தியில் கணவனின் அழைப்பை ஏற்க மனமின்றி, “பேசிட்டு வந்துடுறேன் சிஸ்” என்று பியூட்டீசியனிடம் சுபாஷிணி அனுமதி வேண்ட, “இடது கைக்கு மட்டும் தானே போட்டு முடிச்சிருக்கேன்” என்று மறுபடியும் ஜெர்க் ஆனார் பியூட்டீசியன்.

“பயப்படாதீங்க… ஃபோன் பேசி முடிச்சிட்டு கண்டிப்பா வந்துருவாங்க. அந்த கேப்ல, எங்கையை கொஞ்சம் கவனிங்க” என்று சொல்லியபடியே பெண்ணொருத்தி வந்து நிற்க, தோழியிடம் பார்வையாலே சொல்லிவிட்டு, மாடியில் தான் தங்கியிருந்த அறையை நோக்கி நகர்ந்தாள் சுபாஷிணி.

 மாடிப்படியில் கால் வைக்கும் போதே முழுதாக ஒரு முறை அடித்து ஓய்ந்திருந்த கைபேசி மறுமுறையும் அழைக்க, அழைப்பை ஏற்று பேசியை காதுக்கு கொடுத்து,

“ஹலோ” என்றாள் சுபாஷிணி.

எதிர்பக்கம் இருந்த சேனாதிபதியோ எடுத்த எடுப்பிலேயே, “எப்போ கிளம்புற சுபா?” என்றான் தன் அமர்த்தலான குரலில்.

‘ஏன்? ஏசிபி க்கு சண்டை போடுறதுக்கு ஆள் இல்லாம ரொம்ப போரடிக்குதோ?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், “நாளைக்கு காலைல தான் கல்யாணம்” என்றாள் நினைத்ததற்கு மாறாக.

“அப்போ கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பிடுவ ல்ல?” ஆர்வமாக வந்தது சேனாதிபதியிடமிருந்து கேள்வி.

“இல்ல… ஈவ்னிங் ஏதோ ஃபங்ஷன் இருக்குதாம். அதை முடிச்சிட்டு போலாம்னு திவ்யா சொல்லுறா. அதுவும் இல்லாம, நைட் ட்ராவல் வேண்டாம்… காலைல போனா போதும்னு திவ்யா வீட்டுல எல்லாரும் சொல்லுறாங்க. அதனால நாளைகழிச்சி காலைல தான் கிளம்புவேன்.”

 எந்தவிதமான உணர்வுகளையும் காட்டிக் கொள்ளாமல் நிதானமாக பேசிய மனைவியின் குரலில், சில வினாடிகள் அமைதியாக இருந்த சேனாதிபதி “பழிவாங்கிட்ட இல்ல” என்றான் அமைதியாக.

“யாரு? நானா? நீங்களா?” இப்போதும் பதறாத குரலில் கேட்டு கணவனை பதறவைத்தாள் சுபாஷிணி. என்றாலும் மனைவியின் கேள்வியை அந்தரத்தில் விட்டு விட்டு, “திரும்ப வரும்போது யார் உங்கூட வர்றா?” என்று அடுத்த கேள்விக்கு தாவினான் சேனாதிபதி.

‘அதானே… பதில் சொல்ல முடியலைன்னா உடனே அடுத்த கேள்விக்கு போய்டுறது..’ மனதுக்குள் அலுத்தபடி, “இன்னைக்கு நைட், ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ் இங்க வர்றாங்க. அவங்க கூட வருவேன்” என்று பதில் சொன்னாள் சுபாஷிணி.

ஆடிட்டர் ஆனந்தனும், உடன்வேலை பார்க்கும் இரு ஆண்களும் ஏதோ முக்கியமான வேலை இருப்பதால், திருமணத்திற்கு வரமுடியாது என்று திவ்யாவிற்கு சென்னையிலேயே தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி கல்யாண பரிசும் கொடுத்து விட்டார்கள். மீதமிருக்கும் மூன்று பெண்கள் மட்டும் தான் இன்னும் சற்றுநேரத்தில் வருகிறார்கள்.

அதை விளக்கமாகச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக சுபாஷிணி சொல்ல, “ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ் ன்னா.. யாரெல்லாம்?” என்று விளக்கம் கேட்டான் சேனாதிபதி.

சேனாதிபதியின் கேள்வியில், ‘அக்யூஸ்ட் கிட்ட பேசிப்பேசி பொண்டாட்டி கூட பேசும்போது கூட, விசாரணை பண்ணுற மாதிரியே பேசுறது’ என்று அங்கலாய்த்துக் கொண்டது சுபாஷிணியின் மனது.

ஆனாலும், எல்லாவற்றையும் சுபாஷிணி விளக்கமாகச் சொல்ல, காலையில் பயணம் செய்ய இருக்கும் ட்ரெயின், அதன் நேரம் என்று எல்லா விபரங்களையும் கேட்டுவிட்டு, “ஒகே.. உன்னிஷ்டம் போலவே வா… சேஃப் ஜர்னி” என்று சேனாதிபதி அழைப்பைத் துண்டித்தான்.

 ‘நீங்க சொல்லாட்டாலும் நான் என் இஷ்டம் போலத்தான் வருவேன்.’ வழக்கம் போல மனதிற்குள் முணுமுணுத்தபடியே அறைக்குள் வந்திருந்த சுபாஷிணி, மாமன் குடும்பத்தார் வந்திருந்த நாளின் நினைவு தந்த தாக்கத்தில் தளர்ந்து போல் கட்டிலில் சாய்ந்தாள்.

பொதுவாக, ஒருசில பெண்களுக்கு தன் உறவினர்களின் நடவடிக்கைகள் பிடிக்காவிட்டாலும் கூட, அந்த உறவினர்களின் நடவடிக்கைகள் தன் கணவன்மார்களின் வாய்மூலம் விமர்சிக்கப்படும் போது அவமானமாக உணர்வார்கள். அந்த மனநிலையில் அன்று இருந்த சுபாஷிணி அளவுக்கதிகமாகவே ரஞ்சனுக்கு பரிந்துகொண்டு பேசிவிட, எல்லாம் தப்பாகிப் போனது.

  கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்ட சேனாதிபதியை மறுநாள் காலையில் தான் சுபாஷிணியால் காண முடிந்தது.

நடந்து முடிந்திருந்த நிகழ்வுகள் கண்ணுக்குத் தெரியாத ஒரு இடைவெளியை இருவருக்கும் இடையே உருவாக்கியிருக்க, அதைத் தாண்டும் முயற்சியில் இருவருமே ஈடுபடவில்லை.

தன் வேலைகளைத் தன்போக்கில் செய்து கொண்டு சுபாஷிணி ஒருபக்கம் வேலைக்கு கிளம்பினாள் என்றால் சேனாதிபதி அவன்போக்கில் அவன் வேலையில் இறங்கியிருந்தான்.

 நிதானமாக யோசித்து பார்க்கும் போது ரம்யா கணவனுக்காக உதவி கேட்க வேண்டும் என்ற தன்னுடைய எண்ணம் முட்டாள் தனத்தின் உச்சம் என்று தோன்றவே, அதைப் பற்றி எதுவுமே கணவனிடம் பேசவில்லை சுபாஷிணி.

சேனாதிபதியுமே அவர்கள் எதற்காக வந்திருந்தார்கள் என்ற கேள்வியை மனைவியின் முன் வைக்கவும் இல்லை.

அன்றிரவு எப்போதும் போல வீட்டுக்கு வந்து காலையில் அலுவலகத்திற்கு சென்ற கணவன், இரவு பத்து மணி ஆகியும் வராமல் போகவே, தன் வீம்பு, பிடிவாதம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, கணவனுக்கு அழைத்து விட்டாள் சுபாஷிணி.

ஆனால், அழைப்பு துண்டிக்கப்பட்டு, சேனாதிபதியின் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று வந்து விழுந்தது. தான் ஒரு கேஸ் விஷயமாக தனிப்படை ஒன்றுக்கு தலைமை தாங்கி ஆந்திராவுக்கு சென்றிருப்பதாகவும், வருவதற்கு இரண்டு மூன்று நாட்களாகலாம் என்றும், முக்கியமான இன்வெஸ்டிகேஷனில் இருப்பதால் சுபாஷிணி அவனுக்கு அழைக்க வேண்டாம் என்றும், அவனே நேரம் கிடைக்கும் போது போன் செய்வதாகவும் சொன்னது அந்த மெசேஜிலிருந்த தகவல்.

சேனாதிபதி தந்த தகவலில், விறுவிறு என்று கோபம் ஏறியது சுபாஷிணிக்கு. தன்னிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாததோடு, தான் அவனைத் தேடும் வரைக்கும், தன்னைத் தேடாத கணவனின் செயலில் ஒருவிதமான விரக்தி மனப்பான்மை தோன்ற, திருமணத்திற்காக ஊருக்கு கிளம்பிய தோழியோடு தானும் கிளம்பி விட்டாள். அதுவும் கணவனைப் போலவே, தன் துணையிடம் தகவல் சொல்லாமலேயே.

ஆமாம்… திவ்யாவின் திருமணத்திற்கு செல்வதைப் பற்றி தம்பதியர் ஏற்கனவே பேசியிருந்தார்கள் என்றாலும், திவ்யா உடன் செல்வதைப் பற்றி சுபாஷிணி முடிவு எதுவும் செய்யாத நிலையில், தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வேலை விஷயமாக வெளியே சென்ற கணவனின் செயல் சுபாஷிணியையும் அவ்வாறே செய்யும்படி தூண்டியது.

ஆனால், அவன் அளவிற்கு இல்லாமல், செல்லும் விபரம் குறித்து, குறிப்பு ஒன்று எழுதி ஒரு புத்தகத்தில் வைத்து, அதை பெட்சைட் லேம்ப் பக்கத்தில் வைத்துவிட்டு தான் வந்திருந்தாள் சுபாஷிணி.

சென்றிருந்த வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு, சுபாஷிணி, திவ்யாவோடு கிளம்பி சென்ற மறுநாள் வீடுவந்து சேர்ந்திருந்தான் சேனாதிபதி.

அவன் வந்த நேரம் மாலை நான்கு மணி என்பதால், வேலைக்கு சென்றிருப்பாள் என்று நினைத்து மனைவி வீட்டில் இல்லாததை பெரிதாக எண்ணவில்லை சேனாதிபதி.

ஆனால், வேலையில் முழுகவனமும் இருக்கும் போது வராத மனைவியின் ஞாபகம் வீட்டில் காலடி எடுத்து வைத்ததுமே வந்தது. சிரித்துக் கொண்டவன், ‘ஒரு தூக்கம் போட்டு எழும்பவும், மனைவி வரவும் சரியாக இருக்கும்’ என்று எண்ணி கட்டிலில் விழுந்தான்.

நான்கு நாட்கள் ஓயாத அலைச்சலில், உடல் சோர்ந்திருக்க, தூக்கம் அவனை வாரிச் சுருட்டிக் கொண்டது. சேனாதிபதி கண்விழிக்கும் போது ஆறரை மணி கடந்திருந்தது.

அறை முழுவதும் வெளிச்சம் மங்கி லேசான இருள் பரவ ஆரம்பித்திருந்தது. தான் தூங்குவதால் லைட்டை மனைவி போடவில்லை போலும் என்ற எண்ணத்தோடு, கட்டிலில் எழும்பி அமர்ந்த சேனாதிபதியின் கண்கள் மனைவியைத் தேடி ஆர்வமாக சுழல, சுபாஷிணி அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததற்கான அடையாளம் எதுவுமே அங்கே இல்லை.

யோசனையோடு அறையை விட்டு வெளியே வந்தால், வீடு முழுவதும் இருளில் மூழ்கிக் கிடந்தது. பெரும்பாலும் ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடும் பழக்கம் உடைய மனைவியை காணவில்லை என்றதும் உடம்பில் சிறு பதட்டம் ஒட்டிக்கொள்ள, சுபாஷிணியின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தான் சேனாதிபதி.

அவனை ஏமாற்றாமல் அவன் அழைப்பை எடுத்து சுபாஷிணி பேச, “இன்னும் ஏன் வீட்டுக்கு வரல சுபா?” என்றான் ஆசுவாசமான குரலில்.

அவளோ, “நான் சென்னைல இருந்தா தானே வீட்டுக்கு வரமுடியும்” என்றாள்.

 சென்னையில் இல்லை என்ற மனைவியின் பதில் மறுபடியும் அவனை பதட்டம் கொள்ள வைக்க, “என்ன சொல்லுற சுபா? சொல்லுறதை கொஞ்சம் தெளிவா சொல்லு” என்றான் சேனாதிபதி.

“நான் திவ்யா கூட அவ வீட்டுக்கு வந்திருக்கேன். வந்து ரெண்டு நாள் ஆச்சு” என்றாள் சுபாஷிணி. ‘ரெண்டு நாளா நான் அங்க இல்ல… நீ இன்னைக்கு வந்து சாவகாசமா தேடுறியோ?’ என்ற கிண்டல் இருந்தது சுபாஷிணியின் குரலில்.

மனைவி சொன்ன தகவலை ஏற்றுக் கொள்ள மறுத்தது சேனாதிபதியின் மனது. அது எப்படி என்னிடம் சொல்லாமல் போகலாம்? ஒரு நிமிடம் நான் தவித்து போனேனே என்ற எண்ணம் தோன்றிய அதேநேரம், தன்னையும் காணாமல் மனைவியும் இப்படித்தானே தவித்திருப்பாள் என்று நினைக்க மறந்தவனாக, “எங்க போனாலும் எங்கிட்ட சொல்லிட்டு போகணும்னு தெரியாதா உனக்கு?” என்று எரிந்து விழுந்தான்.