Advertisement

அவர்களின் சக்திக்கு உட்பட்ட அவளின் குட்டி குட்டி கனவுகள் அவ்வபோது நனவாக, அதிலேயே திருப்தியாகி போவாள் அவள். மகளின் படிப்பும், அவள் உதிர்க்கும் ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளும் அத்தனை பெருமையாக இருக்கும் அவளின் அன்னைக்கு. அவருக்கு தெரிந்த அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போவார்.

                இவள் கல்லூரி சென்ற அதே நேரம் தான் யாதவ்வும் பள்ளி படிப்பை முடித்திருந்தான். ஜெயந்திக்கு திருமணமாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து தான் சிற்பிகா பிறந்திருக்க, மேகலை முதல் வருட முடிவிலேயே யாதவை சுமந்திருந்தார். அதனால் ஒரு வயது தான் வித்யாசம் இருவருக்கும்..

                   ஆனால் அவன் பள்ளிப்படிப்பிலேயே ஒரு வருடம் கோட்டை விட்டிருக்க, இவள் முடித்த வருடம் தான் அவனும் பன்னிரண்டாம் வகுப்பை தாண்டி இருந்தான். அதுவும் சிற்பிக்கு பெரிய கல்லூரியில் இடம் கிடைத்துவிட, இன்னும் வயிற்றெரிச்சல் தான் மேகலைக்கு. ஆனால் எதையுமே வெளிக்காட்டி கொள்ளவில்லை அவர்.

                    யாதவ் வாங்கிய மதிப்பெண்களுக்கு ஒரு மூன்றாம் தர கல்லூரியில் தான் சீட் கிடைத்திருந்தது. அதுவும் வெறும் டிகிரி படிப்பதற்கு மட்டுமே.. அந்த கல்லூரியே அவன் கெட்டு குட்டி சுவர் ஆவதற்கு காரணமாக இருக்க, வாழ்க்கைக்கு தேவையற்ற அத்தனை விஷயங்களையும் அவன் கற்றுக் கொண்டது அங்கே தான்.

                    ஆனால் அதே நேரம் சிற்பியின் கல்லூரி வாழ்வு இனிதானதாக அமைய, படிப்பு, சில ஆண், பெண் பேதமில்லாத நல்ல நட்புகள்.. கூடவே அன்னையின் சமையல், தையல் பயிற்சி என்று வாழ்வு அழகானதாகவே இருந்தது.

                   அவ்வபோது அவள் அன்னையிடம் “நான் படிப்பை முடிச்சதும் பாரும்மா..உனக்கு பெரிய வீடு வாங்கி கொடுக்கிறேன்.. இந்த தைக்கிறது, சமைக்கிறது இது எல்லாத்தையும் விட்டுடனும்.. உனக்கு சமைக்க ஒரு ஆள், வீட்டு வேலைக்கு ஒரு ஆள்.. உன்னை பார்த்துக்க, நீ சொல்ற எல்லாமே செய்ய ஒரு ஆள்.. அப்படி பார்த்துக்கறேன்மா உன்னை..” என்று தன் கனவுகளை பட்டியலிடுவதும் நடக்கும்.

                    அவள் அன்னை ஒரு சிரிப்புடன் அவள் பேசுவதை ரசித்துக்  அமர்ந்திருப்பார். பெரிதாக பேச்சுக்கள் எப்போதுமே இருக்காது ஜெயந்தியிடம்.. ஆனால் முகத்தில் ஒரு வாடா புன்னகை மட்டும் நிரந்தரமாக தங்கி விட்டதோ என்று நினைக்கும் வகையில் எப்போதுமே அவர் இதழில் உறைந்திருக்கும். அந்த சிரிப்புக்கு முதல் ரசிகையும் அவர் மகள் தான்..

                      ஜெயந்திக்கும் மகளின் மேன்மையான வாழ்வை தவிர்த்து வேறு சிந்தனைகள் இருந்தது இல்லை. இத்தனை ஆண்டுகளாக சேமித்ததில் அவள் பெயரில் மூன்று லட்சத்திற்கு பணம் சேர்த்திருக்க, அவள் வேலைக்கு செல்ல  ஆரம்பித்ததும் இன்னும் சற்று பணம் சேர்த்து ஒரு நல்ல இடத்தில் அவளை கட்டி கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவரின் அதிகபட்ச கனவு.

                      சிற்பிகாவிற்கு பதினெட்டு வயது முடிந்து பத்தொன்பதாவது வயது தொடங்கி இருக்க, பிறந்த நாள் என்பதால் அவளை கோவிலுக்கு சென்று வர சொன்னார் ஜெயந்தி. வாழ்வில் முதல் முறையாக சேலை அணிந்திருக்க, அன்னையின் கைவண்ணத்தில் சேலையை விடவும் அட்டகாசமாக இருந்தது ரவிக்கை.

                      அந்த கருநீல நிற சில்க் காட்டன் அவளின் நிறத்திற்கு எடுப்பாக இருக்க, தலைக்கு மல்லிகை பூ, பொருத்தமாக வாங்கிய கவரிங் அணிமணிகள் என்று அசத்தலாக இருந்தாள் அன்று. கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருக்க, “நீ வந்தால் தான் கோவிலுக்கு போவேன்..” என்று அன்னையிடம் அடம் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

                      அவளின் பிடிவாதம் தாங்காமல் ஜெயந்தியும் உடன் சென்றிருக்க, வெகு மகிழ்ச்சியாக இருந்தாள். காலையிலேயே அன்னையிடம் ஆசீர்வாதம் வாங்கி இருக்க, இப்போது கோவிலில் அவள் பெயரில் ஜெயந்தி அர்ச்சனை செய்து முடிக்கவும் அன்னையும் மகளும் அந்த கோவிலின் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டனர்.

                        இருவரும் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டிருக்க, அதிகமாக பேசியது சிற்பி தான். அன்னை அதே சிரிப்புடன் தலை அசைத்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு எதிரே இருந்த மண்டபத்தில் அமர்ந்திருந்த ஒருவன் சிற்பியை கண் எடுக்காமல் பார்த்திருந்ததை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை.

                      அங்கு கோவிலுக்கு வந்திருந்த குழந்தைகளை காட்டி அன்னையிடம் சிரிப்போடு அவள் பேசிக் கொண்டிருக்க, அந்த குழந்தைகளின் சிரிப்புக்கும், அவள் முகத்தில் இருந்த புன்னகைக்கும் வித்யாசமே தெரியவில்லை அவனுக்கு. சேலை காட்டியதில் சற்றே பெரிய பெண்ணாக வேறு தெரிய, பார்த்த நொடியே அவனை ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்திருந்தாள் சிற்பி.

                     காதல் என்றால் காத தூரம் ஓடுபவன், ஒரு பெண்ணை ரசிப்புடன் நோக்கி கொண்டு அமர்ந்திருந்தான்.

                     எதிரில் இருந்த அம்மாவும், மகளும் சற்று நேரம் கழித்து கிளம்பிவிட, அதன்பிறகே சுற்றம் உணர்ந்தான் அவன். அவன் கதை அப்படி இருக்க, வீட்டிற்கு வந்த சிற்பிகாவோ அன்னை செய்து கொடுத்த பிரியாணியை நன்றாக ஒரு வெட்டு வெட்டியவள், அன்றைய பொழுதை மகிழ்வுடன் கழித்திருந்தாள்.

                     அடுத்த நாள் வழக்கமான விடியலாகவே இருக்க, எப்போதும் போல் எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பியவள் அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரியை அடைந்திருந்தாள். தோழிகள் பிறந்தநாள் ட்ரீட் என்று அவளை சூழ்ந்து கொள்ள, அன்னை கொடுத்திருந்த பாயசத்தை அவர்களிடம் நீட்டிவிட, அவளை முறைத்தாலும் அவள் நிலை தெரிந்தவர்கள் என்பதால் எதுவும் பேசாமல் வாங்கி கொண்டனர். அதன் சுவை அத்தனை அருமையாக இருக்க, அதற்குமேல் பேச்சே இல்லை அவ்விடத்தில்.

                      சிற்பியின் நெருங்கிய தோழி உமா “சூப்பர் டேஸ்ட்டி.. இதுக்காகவே உன்னை மன்னிச்சு விட்டுடறோம்..”

                       “ஏய்.. கொழுப்பா.. எதுக்குடி என்னை மன்னிக்கணும்..”

                      “பிறந்தநாள் அதுவுமா சொல்லாம கூட லீவு போட்டா, உன்னை கொஞ்சுவாங்களா… உன்னை எல்லாம் ஓட விட்டு உதைக்கணும்..” என்று திட்டிக் கொண்டே வந்து சேர்ந்தான் நந்தா. அவனுடன் மகேஷ், உமேஷ் என்று அவளின் மற்ற தோழர்களும் வர, பெண் தோழிகளான சாதனா, நித்யா என்று அத்தனை பெரும் சூழ்ந்து கொண்டனர்.

                         சிற்பி அவர்களை பாவமாக பார்த்து வைக்க “இந்த லுக் கொடுக்காத.. உன் மூஞ்சியை பார்த்தாலே திட்டகூட வரல..” என்று உமேஷ் முறைக்க

                         “டேய்.. புரிஞ்சிக்கோங்கடா.. என் அம்மா மட்டும் தான் இருப்பாங்க வீட்ல.. டெய்லி உங்ககூட தான் சுத்தறேன்.. ஒருநாள் என் அம்மாவோட இருக்க நினைச்சேன்.. அது ஒரு கொலை குத்தமா..” என்று சிற்பி சிலிர்த்துக் கொள்ள

                          “உன்னை அடிக்கிறது தப்பே இல்ல.. இருந்தாலும் பின்னாடி பார்த்துக்கறோம்.. இப்போ கூட வா..” என்று அழைத்தனர் அவளை.

                           “ஏய்.. எங்கே கூப்பிடறீங்க… கிளாஸ்க்கு டைம் ஆச்சு..” என்று அவள் பதற

                         “ஆங்… முடிஞ்சு போன உன் பிறந்த நாளுக்கு வாழ்த்து பாட  வேண்டாம்.. வாடி..” என்று கையை பிடித்து இழுத்து சென்றனர் அவளை..

                          அன்றைய வகுப்புகளுக்கு அத்தனை பேரும் மட்டம் போட்டுவிட, முதலில் அவர்கள் கல்லூரியின் பின்புறம் இருந்த கேன்டீனில் ஒரு கேக்கை வைத்து சிற்பியை வெட்ட சொல்ல, “எனக்கு நேத்திக்கு பர்த் டேடா… அறிவாளிகளா..” என்று அவள் சலிக்க

                         “ஏன்.. இன்னைக்கு கேக் வெட்டினா வேணாம் ன்னு சொல்வியா நீ..” என்று முறைத்தது நண்பர்கள் குழு.

                         சிறு சிரிப்புடன் அவள் கேக் கட் செய்ய, சிறிது நேரம் மேலும், கீழும் சிந்தி, ஆட்டம் போட்டு முடித்தவர்கள் அடுத்ததாக தியேட்டருக்கு செல்ல திட்டமிட, முடியவே முடியாது என்ற சிற்பியையும் கட்டாயப்படுத்தி கிட்டதட்ட இழுத்து சென்றிருந்தனர்.

                          அவள் கல்லூரியில் இருந்து வகுப்பை புறக்கணித்து வெளியே வருவது இதுதான் முதல் முறை என்பதால் சிற்பி சற்று பதட்டத்துடனே இருக்க, நண்பர்கள் அவள் முகத்தையே பார்க்கவும் மெல்ல மெல்ல அவர்களுடன் கலந்து விட்டாள்.

                           அவளுக்கு நினைவு தெரிந்து அவள் தியேட்டருக்கு எல்லாம் சென்றதே இல்லை என்பதால், முதல் முறை படம் பார்ப்பதை போன்ற எண்ணம் தான். படமும் சற்று சுமாராக இருக்க, நன்றாகவே நேரம் சென்றது.

                           படம் முடியவும், சரியாக மூன்று மணிக்கு கிளம்பியவர்கள் எப்போதும் போல் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

                                 அடுத்த நாள் இவர்கள் கல்லூரிக்கு செல்லும் முன்பாகவே இவர்கள் ஏழு பேருக்கும் கல்லூரி முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. நேற்று இவர்கள் செய்த சம்பவம் சிறப்பாக எதிர்வினையை காட்டி இருக்க, ஏழு பேரும் கேண்டினில் கேக் வெட்டியது வரை தெரிந்திருந்தது அவருக்கு. கிளாசை கட் அடித்ததும் தெரிந்து விட, விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

                           பலநாள் பலமுறை கட் அடித்தவர்கள் எல்லாம் அமர்ந்திருக்க, இந்த எழுவர் கூட்டணி முதல் முயற்சியிலேயே கல்லூரி முதல்வர் அறை வரையில் தங்களின்  பெயரை பதிவு செய்திருந்தது. ஏழு பேரும் கல்லூரி முதல்வரின் முன்பாக நிற்க, அவருக்கு எதிரில் அமர்ந்திருந்தான் அவன்.

                         ஏழு பேருக்குமே அவன் யாரென்பது தெரியாமல் போக, அமைதியாகவே நின்றனர். ஆனால் அவனுக்கு  சிற்பியை தெரியுமே… அதே கண் எடுக்காத பார்வையால் அவளை அளந்து கொண்டிருந்தான் இன்பன்… பேரின்பன்….

Advertisement