Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 04

                            அடுத்த ஒரு வாரமும் வேகமாக ஓடி இருக்க, சிபி மற்றும் அவளின் இளவரசனின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போலவே கிரெச், ஹோட்டல், வீடு என்று அவர்களின் நாட்கள் அமைதியாகவே கழிந்தது.

                       இன்றும் எப்போதும் போல் இனியனை கிரெச்சில் விட்டவள் தான் வேலை பார்க்கும் நந்தவன குடிலை அடைந்திருந்தாள். தன் வழக்கமான வேலைகளை அவள் செய்து கொண்டிருக்க, அத்தனையும் உயர்தர உணவுகள் தான்..

                        அதுவும் பல நாடுகளின் புகழ்பெற்ற உணவுகள் பல அந்த இடத்தில் கிடைக்க, சுவையும், தரமும் கேட்கவே வேண்டாம்.. விலை சற்று கூடுதல் தான் என்றாலும் அவர்களின் சுவைக்காகவே அவர்களை நாடி வருபவர்கள் இப்போது அதிகரிக்க தொடங்கி இருந்தனர்.

                        சிபி தன் காலை வழக்கமாக அங்கிருந்த மற்ற சமையல் ஆட்களுக்கு வேலைகளை பிரித்துக் கொடுத்தவள் அந்த ஹோட்டலின் ஸ்டோர் ரூமில் தங்களிடம் இருந்த பொருட்களின் அளவை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அந்த நேரம் தான் அங்கு வைக்கப்பட்டிருந்த சில சீஸ், மாவு போன்ற பொருட்கள் தேதி முடிந்து விட்டிருந்ததை அவள் கவனிக்க நேர்ந்தது.

                       ஆட்களை அழைத்து தேதி முடிந்திருந்த பொருட்களை அவள் தனியே பிரித்து வைக்க, கிட்டதட்ட அங்கிருந்த சீஸ், கோதுமை மாவு மற்றும் கோகோ பவுடர் மொத்தமுமே காலாவதியானவை தான். இது எப்படி சாத்தியம் என்று புரியவே இல்லை அவளுக்கு.

                       ஜெகா சொல்லி அவள் கேள்விப்பட்டிருந்தவரை நிறுவனர் மேல் சந்தேகிக்க இயலாது. அவள் வேளைக்கு சேர்ந்த இந்த இரண்டரை ஆண்டுகளில் இதுபோல் நடந்ததும் இல்லை. உடனே தன் மேல் அதிகாரியை அழைத்து அவரிடம் விஷயத்தை அவள் தெரிவிக்க, சாவதானமாக கிளம்பி வந்தார் அவர்.

                       சிபி சேர்த்து வைத்திருந்த பொருட்களை கண்டதும் “எதுக்காக இப்படி பிரிச்சு வச்சிருக்கீங்க மேடம்.. ” என்று சாதாரணமாக அவர் கேட்டு வைக்க

                       “சார்.. எல்லாமே தேதி முடிஞ்சி போன ஐட்டம்ஸ்.. இதை வச்சு எப்படி சமைக்க முடியும்.. ஒரு நாளைக்கு நூறு பேர்க்கு மேல செர்வ் பன்றோம்.. இதை வச்சு எப்படி சமைக்க முடியும்?? ஏதாவது பிரச்னை வந்தா ஹோட்டல் பேர் தான் முதல்ல கெடும்.. அதை விட்டுட்டாலும் கூட, எத்தனை பேரோட உயிர்.. எப்படி அலட்சியமா விட முடியும்??? ” என்று அவள் கோபமாக கூற

                         “நான் இந்த மொத்த ஹோட்டலுக்கும் ஹெட் சிற்பிகா.. நீங்க என்னையே கொஸ்டின் பண்ணுவிங்களா?? வெறும் கோதுமை மாவு தானே.. நீங்க சொல்ற அளவுக்கெல்லாம் பெருசா எதுவும் இஸ்சு வர சான்ஸ் இல்ல.. சும்மா ஸீன் கிரியேட் பண்ணாதீங்க..”

                        “எவ்ளோ அலட்சியமா பதில் சொல்றிங்க… சின்ன சின்ன குழந்தைங்க கூட சாப்பிட வர்றாங்க இங்கே.. மனசாட்சி வேண்டாமா சார்..?… நான் இங்கே ஜாயின் பண்ண இந்த ரெண்டரை வருஷத்துல இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்ல… நீங்க இங்கே புதுசா வந்திருக்கீங்க.. தேவை இல்லாத வேலை எல்லாம் செஞ்சு பேரை கெடுத்துக்காதிங்க… என்னால இதை எல்லாம் வச்சு சமைக்க முடியாது…” என்று தீர்மானமாக அவள் கூறிவிட

                      அங்கே நின்றிருந்த மற்ற சமையல் ஆட்களும், அவளுக்கு கீழ் வேலை செய்யும் பிறரும் இவர்களை வேடிக்கை பார்த்து நின்றிருந்தனர். அந்த ஜிஎம் அவளின் இந்த தீர்மானமான பதிலில் கடுப்பானவன் “உங்களால சமைக்க முடியாது அவ்ளோதான.. கிளம்புங்க.. ஆபிஸ்க்கு வந்து கணக்கை முடிச்சுக்கோங்க.. நீங்க வெளியே போனா, உங்க வேலையை செய்ய நாளைக்கே ஒரு ஆள் வருவாங்க.. எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்ல..” என்று திமிராக அவன் பேச

                      “பார்க்கிறேன்.. நாளைக்கு சமைக்க ஆள் வருதா ??இல்ல உன் இடத்துக்கு வேற ஆள் வர்றாங்களா ன்னு.. இப்போவே இந்த விஷயத்தை ஓனர்க்கு அப்டேட் பண்றேன்..” என்றாள் குறையாத ஆத்திரத்துடன்..

                      “தாராளமா செஞ்சுக்கோங்க.. இதை எல்லாம் குறைந்த விலைக்கு கிடைக்கவும் வாங்க சொன்னதே அவர்தான்.. நீ யார்கிட்ட பேசினாலும் உன் வேலைக்கு தான் ஆபத்து..”

                   அவனை அசையாத பார்வை பார்த்தவள் “உன்னை மாதிரி மரியாதை தெரியாத ஒருத்தனுக்கு கீழே என்னால வேலை செய்ய முடியாது.. அதோட இந்த குப்பையெல்லாம் குக் பண்ண நான் ஆள் இல்ல.. போடா நீயும், உன் வேலையும்..” என்று ஆத்திரமாக மொழிந்தவள் அங்கேயிருந்து தன் கைப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

                   அவன் சொன்னது போல, சம்பளத்தை வாங்க கூட அவள் அலுவலகத்திற்கு செல்லவில்லை. மனம் முழுவதும் அங்கு நடந்து கொண்டிருக்கும் குளறுபடியே ஓட, அந்த ஹோட்டல் மட்டுமல்லாமல் அவர்களுக்கு சொந்தமான தாங்கும் விடுதிக்கும் அங்கிருந்தே உணவு சென்று கொண்டிருக்க, இவர்களின் இந்த அலட்சியம் ஏற்கவே முடியவில்லை அவளால்.

                     ஆனால், அங்கு என்ன செய்வது என்பதும் புரியாமல் போக, கிளம்பி விட்டிருந்தாள்.. வீட்டிற்கு சென்றாலும் மனதில் நிம்மதி இருக்காது என்று தோன்ற, மகனை விடும் கிரெச்சிற்கு சென்றவள் அவனையும் அங்கிருந்து அழைத்துக் கொள்ள, அன்னையை கண்டதும் வெகு உற்சாகமாக தாவினான் அவன்.

                      தனது வெஸ்பாவில் முன்னால் அவனை நிற்கவைத்துக் கொண்டவள் அருகிலிருந்த ஐஸ் கிரீம் கடைக்கு அழைத்து செல்ல, இன்னமும் குஷிதான். அவனுக்கு பிடித்தமான பட்டர்ஸ்காட்ச் வாங்கி கொடுத்தவள் அவனை தூக்கி கொண்டு வெளியே வர முற்படும் போது தான், எதிர் புறம் நின்றிருந்தவனை கண்டாள்.

                       யாதவ் என்று அவள் வாய் முணுமுணுக்க, அமைதியாக மீண்டும் சென்று கடையினுள் அமர்ந்து விட்டாள். இப்போது மட்டுமல்ல எப்போதுமே இனி யார் கண்ணிலும் படுவதற்கு தயாராகவே இல்லை அவள். அதிலும் இந்த யாதவ்…

                       இவனை எல்லாம் மனுஷ ஜென்மமாகவே ஏற்க தயாராக இல்லை அவள். இப்போது அவன் கண்ணில் பட்டால் வீண் பிரச்சனைகள் எழக்கூடும் என்பதால், அமைதியாக அமர்ந்து விட்டாள். அவன் அங்கிருந்து கிளம்பும் வரை கடையிலேயே இருந்தவள் அவன் கிளம்பிய பின்னரே அவனுக்கு எதிர்புறம் தன் வண்டியை செலுத்தினாள்.

                    வீடு வந்து சேரும் வரையும் கூட, சுற்றிலும் யாராவது தன்னை கவனிக்கிறார்களோ என்பது போன்ற ஒரு ஆராயும் பார்வை தான்.. சற்று பயத்துடனே வீட்டை அடைந்தவள் சமைக்க கூட தோன்றாமல் மகனிடம் சில விளையாட்டு பொருட்களை கொடுத்துவிட்டு அமைதியாக படுத்து விட்டாள்.

                 கடையில் கண்ட யாதவ் அவளின் முன்ஜென்மம் என்று நினைத்திருந்த நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை நினைவுறுத்தி விட்டு சென்றிருக்க, நெஞ்சம் முழுவதும் பாரமான ஒரு உணர்வு.. மனம் தானாகவே அன்னையை தேட, அவரின் அன்புக்கும், பரிவுக்கும் ஏங்கியது மனது.

                    அவர்தான் அத்தனை அவசரமாக என்னை விட்டு சென்றுவிட்டாரே…. என்று நினைத்த கணம் கண்களில் கண்ணீர் வர, அவளின் வாழ்வு அவளின் கண்முன் விரிந்தது.

                      சிறுவயது முதலே அவர்களின் சொந்த வீட்டில் தான் வசித்து வந்தது சிற்பியின் குடும்பம். அவள் தந்தை நல்ல நிறுவனம் ஒன்றில் வேலையில் இருக்க, குடி, எப்போதாவது பெண்கள் என்று இருந்தவர் இவளின் பன்னிரண்டு வயதில் உடன் வேலை பார்க்கும் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள, அதற்குமேல் அந்த வீட்டில் இருக்க மனமில்லாமல் வெளியேறி இருந்தார் அவளின் அன்னை ஜெயந்தி.

                     அந்த வயதில் பன்னிரண்டு வயது பெண் குழந்தையை வைத்துக் கொண்டு எங்கு செல்வது என்று புரியாமல் நின்றவர் தன் தம்பியிடம் அடைக்கலமாக, மனைவியின் குணம் புரிந்தவர் என்பதால் இவர்கள் சென்ற மறுவாரமே தனியாக ஒரு வீட்டை பார்த்து அங்கு இவர்களை குடியமர்த்தி விட்டார் ஞானம். அவரது மனைவி மேகலையும் நல்லவராகவே நடந்து கொண்டார் அப்போது. அவர்களின் ஒரே மகன் யாதவ்.

                     அதன்பின் ஞானம் தன் அக்காவிற்கு செய்தது ஒரு தையல் இயந்திரம் வாங்கி கொடுத்தது மட்டும் தான்… அதற்குமேல் வேறு எதுவுமே கேட்டுக் கொள்ளவில்லை ஜெயந்தி. அங்கு அக்கம் பக்கம் இருந்த பெண்களுக்கு உடை தைத்து கொடுப்பவர் ஆரி வேலைகளையும் கற்று தெரிந்திருக்க, அது அவருக்கு கை கொடுத்தது.

                    சாதாரண ஒரு ரவிக்கையை கூட, திருமண சேலைக்கான ரவிக்கையை போல் மாற்றி காட்டும் விட்டதை அவருக்கு கைவர, கணிசமாக பணமும் கிடைக்க, அது அவர்கள் இருவருக்கும் போதுமானதாகவே இருந்தது. சிற்பியும் தாயின் நிலை உணர்ந்து அருமையாக படிக்க, அவள் படித்த பள்ளியில் எப்போதுமே அவள்தான் முதல் மாணவி.

                 அரசாங்க பள்ளியிலேயே படிப்பை முடித்தவள் பன்னிரண்டாம் வகுப்பில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்திருக்க, அவளுக்கு கேட்காமலே இன்ஜினியரிங் சீட்டும் கிடைத்தது.. அவளின் மதிப்பெண்களுக்கு அந்த கல்வி நிறுவனமே அவளின் படிப்பு செலவு மொத்தத்தையும் ஏற்றுக் கொள்ள, அத்தனை மகிழ்ச்சியாக கல்லூரிக்கு கிளம்பினாள் அவள்.

                    அதுவரையும் கூட, வாழ்வில் பெரிதாக எந்த துன்பத்தையும் சந்தித்தது இல்லை அவள். தந்தை உடன் இல்லை என்பதை தவிர, பெரிதாக வேறு எந்த குறையும் இருந்தது இல்லை. அந்த சிறிய வீட்டில் அன்னையும் மகளும் மட்டுமே வசித்து வந்தாலும் அந்த வீட்டின் மகாராணி அவள்.

Advertisement