Advertisement

             மூன்று ஆண்டுகளுக்கு முன் அவன் இருந்த நிலை தானாகவே அவர் கண்முன் விரிந்தது. இந்த பழக்கங்கள் எல்லாம் அறவே பிடிக்காது அவனுக்கு..

                     அவர்களுக்கு சொந்தமான கல்லூரியிலேயே அவன் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க, மேற்படிப்புக்காக டெல்லிக்கும் சென்று வந்திருந்த சமயம் அது. அவன் வெளிநாட்டுக்கே சென்று படிக்கும் அளவுக்கு திறமை இருந்தாலும் தன் அன்னையையும், பாட்டியையும் பிரிய முடியாமல் டெல்லியின் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் தனது மேலாண்மை படிப்பை நிறைவு செய்து அப்போது தான் சென்னைக்கு வந்திருந்தான்.

                     தொழிலில் தானாகவே ஒரு ஈடுபாடு இருக்க, வந்த ஒரு மாதத்திலேயே தந்தையுடன் அலுவலகம் சென்று வரவும் ஆரம்பிக்க, அவனின் திறமையை கண்டு பூரித்து தான் போனார் மதுசூதனன். மகனின் ஆர்வத்தை கண்டவர் தனது தொழில்களின் முழு உரிமையையும் அவனுக்கு கொடுத்துவிட அப்போதே முடிவு செய்து கொண்டார்.

                      அதன் படியே அடுத்த ஆறு மாதங்களில் அவனுக்கு திறம்பட கற்பித்தவர், தன் தொழில் வட்டாரத்தையும், மீடியாவையும் கூட்டி தனது தொழில்களை முழுவதுமாக இனி தன் மகன் மட்டுமே பார்த்துக் கொள்வான் என்றும் அறிவித்து விட்டார்.

                     கிட்டத்தட்ட குருவி தலையில் பனங்காயை வைத்தது போல் தோன்றியது இன்பனுக்கு. அதையும் அவன் தந்தையிடம் தெரிவிக்க, “உன்னால முடியும் இன்பா.. என்னை விட நீ நல்லா வருவ.. இப்போ என்ன நான் தான் உன்கூடவே இருக்கேனே.. நீ என்ன செய்ய சொன்னாலும் செஞ்சி கொடுக்க போறேன்.. அப்புறம் என்ன..” என்று சுலபமாக பதில் கொடுத்தார் அவர்.

                 “டேட்.. நானும் உங்ககூடவே தானே இருக்கேன்.. நீங்க என்ன சொன்னாலும் செய்யவும் தயாரா தான் இருக்கேன்.. அப்புறம் இதுக்கெல்லாம் என்ன அவசியம்..” என்று அவன் விடாமல் கேள்வி கேட்க

                 “என்ன பேசற இன்பா… நான் பார்த்த வரைக்கும் நம்ம சர்க்கிள்ல யாரோட பசங்களும் உன் அளவுக்கு திறமை இல்ல.. அதுவும் அத்தனை பெருகும் ஏதோ ஒரு கெட்ட பழக்கம் இருக்கு…அப்படி இருக்க என் மகன் எத்தனை பொறுப்பா இருக்கான்.. நான் அவனுக்கு சரியான மரியாதையை கொடுக்கணும் இல்லையா…”

                      “இனி நம்மோட பிசினஸ் மொத்தமும் உன் கையில தான் ன்னு எல்லாருக்கும் தெரியணும்… என் இன்பனுக்கான மரியாதையை ஒவ்வொருத்தரும் அவனுக்கு கொடுத்தாகணும்… நீ இன்னும் பெருசா… நிறைய நிறைய சாதிக்கணும் இன்பா..” என்று ஒரு தந்தையாக அவர் பூரிப்பில் பொங்கி கொண்டிருக்க,

               “போதும்..போதும்.. என் பிள்ளை மேல மொத்தமா கண் வைக்காதிங்க.. அவன் படிப்பை முடிச்சே ஒரு வருஷம் கூட முடியல.. அதுக்குள்ள அவனையும் உங்களை மாதிரியே மாத்திட்டு இருக்கீங்க.. நல்லா ட்ரைன் பண்றிங்க..” என்று முறைத்தார் அபிராமி..

                  மதுசூதனன் சத்தமாக சிரித்தவாறு “உன் மகனை நான் ட்ரைன் பண்ண எல்லாம் எதுவுமே இல்ல.. என் மகன் என்னைவிட பெரிய இடத்துக்கு வருவான் அபி..” என்று பெருமையாக கூறினார்..

                   இன்பன் சிரித்துக் கொண்டே தன் அன்னையின் மடியில் படுத்து கொள்ள “மொதல்ல இவனுக்கு ஒரு பொண்ணை பாருங்க.. அப்புறம் பிசினஸ் பார்க்கலாம்.. இருபத்தாறு வயசாச்சு, இப்போவே பார்க்க ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்..” என்று அவர் தன் விருப்பத்தை தெரிவிக்க

                   “அதுக்குள்ள என்ன அவசரம்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அபி.. நான் மாதவி கிட்ட பேசறேன்… நாம என்ன புதுசாவா பெண் பார்க்க போறோம்.. ஏற்கனவே எல்லாம் முடிவு செஞ்சது தானே…” என்று கூறும்போதே, லேசான பயம் தான் அபிராமிக்கு..

                   ஏனோ அவருக்கு மாதவியை பிடித்த அளவுக்கு அவர் கணவரையும், அவள் மகள்களையும் பிடிக்காது. அதிலும் அவர்கள் அபிராமிக்கு எதுவுமே தெரியாது என்பது போல் ஒரு பார்வையை எப்போதும் செலுத்த பெரிதாக ஓட்டுதல் கிடையாது.

                      ஆனால் தன் மாமியாரை மீறியும் எதுவும் பேச முடியாமல் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தார் அபிராமி. இப்போது மகன் என்ன சொல்வானோ என்பது போல் பார்க்க, அவன் எதைப்பற்றியும் கவலை அற்றவனாக “டேட்.. இப்போ ஒரு அவசரமும் இல்ல.. குறைந்தது இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்.. அதுக்கு பிறகு பேசுங்க உங்க தங்கச்சி கிட்ட..” என்று இலகுவாக கூறிவிட்டான்.

                 அதன் பிறகு அவனின் திருமண பேச்சை யாரும் பெரிதாக பேசவில்லை. அபிராமியின் மாமியார் வசந்தா வும் அவர் மகள் வீட்டில் இருக்க, அவர்களின் வீட்டில் அனைத்தும் நன்றாக தான் போய் கொண்டிருந்தது. மகனும் தொழிலில் முழு ஆர்வமாக வெளிமாநிலம், வெளிநாடு என்று சுற்றிக் கொண்டே இருக்க, தந்தையும், மகனுமப்படி ஒரு ஒற்றுமை..

                  அபிராமி தன் குடும்பத்தை எண்ணி பூரித்திருந்த நேரம் தான் வசந்தா மீண்டும் அந்த வீட்டிற்கு வந்தது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்திருந்தவர் ஒரே பிடியாக பேரனுக்கு திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று நிற்க, பேரன் பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தான்.

                   அடுத்த சில தினங்களில் மதுசூதனனை தன் வழிக்கு கொண்டு வந்தவர் அவரையும் வைத்துக் கொண்டே பேரனிடம் பேச்சை ஆரம்பிக்க, முதலில் அமைதியாக இருந்தவன் அவர் முழுதாக பேசி முடிக்கவும் “நீங்க சொல்றபடி நான் உடனே கல்யாணம் செஞ்சுக்கறேன் பாட்டி.. ஆனா பொண்ணு மஞ்சரி இல்ல..” என்று நிதானமாக வெடிகுண்டை வீசி முடித்தான்.

                  வசந்தா அதிர்ந்து போனாலும் காட்டிக் கொள்ளாமல் “என்ன பேசற இன்பா.. உனக்கும் மஞ்சரிக்கும் தான் கல்யாணம் ன்னு ஏற்கனவே பேசி வச்சது தானே.. இப்போ வந்து அவ பொண்ணு இல்ல ன்னு சொல்ற.. என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல..” என்று அவர் அதட்ட

                  “பாட்டி ப்ளீஸ்.. எனக்கும் மஞ்சரிக்கும் கல்யாணம் பேசினது நீங்க.. நான் எப்பவும் அவளை விரும்பினது கிடையாது.. நீங்க ஆசைப்படவும் மறுக்க முடியாம ஓகே சொன்னேன்.. ஆனா, இப்போ நிச்சயமா என்னால அவளை கல்யாணம் செய்துக்க முடியாது..”

                  “அதுதான் ஏன்??… எங்க விருப்பத்துக்கு சரின்னு தானே சொன்ன இதுநாள் வரைக்கும்.. இப்போ மட்டும் என்ன..” என்று அவர் இறுக்கி பிடிக்க

                  “அப்போ சொன்னேன் பாட்டி.. இப்பவும் அப்படியே இருக்கணுமா என்ன…நிச்சயமா என்னால முடியாது ..” என்று தீர்மானமாக அவன் உரைக்க, அப்போதுதான் மதுசூதனன் வாயை திறந்தார்.

                  “இப்படி மாத்தி மாத்தி பேசறது உன் வழக்கம் இல்லையே இன்பா.. நேரடியா சொல்லு, மஞ்சரியை மறுக்க என்ன காரணம்..” என்று அழுத்தமாக அவர் கேட்க

                   தந்தையின் கண்களை பார்க்க முடியாமல் தடுமாறினான் மகன். சற்றே திணறியவன் சில நொடிகளில் தன்னை மீட்டெடுத்து தனக்கே உரிய கம்பீரத்துடன் “நான் வேற ஒரு பெண்ணை விரும்பறேன் டேட்.. அவளைத் தவிர யாரையும் என்னால யோசிக்க முடியல டேட்.. சோ.. ப்ளீஸ் இதோட இந்த பேச்சை விட்டுடுங்க..” என்று நிமிர்ந்து நின்றான்.

              “இது சரியா இன்பா.. உன் அத்தைக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்.. இல்ல மஞ்சரிக்கு தான் என்ன பதில் சொல்லட்டும்… உனக்காக ஒருத்தி ஏற்கனவே காத்திருக்கும் போது நீ இப்படி இன்னொருத்தியை விரும்புறதா சொல்றது என்ன நியாயம்.. ” என்று அவர் நியாயம் கேட்க

                “மஞ்சரி பெருசா பீல் பண்ண மாட்டா டாடி.. அத்தைகிட்ட வேணும்ன்னா நான் பேசறேன்…”

              “நீ என்னடா என் மக கிட்ட பேசுறது.. முதல்ல என் பேத்தி வாழ்க்கைக்கு ஒரு பதில் சொல்லு.. அவ பிறந்ததுல இருந்தே உன்னைத்தான் கட்டிக்க போறதா கனவு கண்டுட்டு இருக்கா.. இப்போ அவகிட்ட இதை எப்படி நான் சொல்வேன்..” என்று ஆவேசமாக வசந்தா குதிக்க

               “உங்க பேத்தி என்னைவிட பெட்டரா ஒருத்தனை செலக்ட் பண்ணிடுவா பாட்டி.. நான் பேச வேண்டாம் ன்னு நினைக்கிறேன்.. என்னால மஞ்சரியை மட்டும் இல்ல ரசிகாவை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..”

               “நான் உங்க பேரன் பாட்டி.. உங்க பிடிவாதம் என்கிட்டேயும் கொஞ்சம் இருக்கு.. நீங்க இதோட மஞ்சரி பேச்சை எப்பவும் பேசாதீங்க..” என்று முடிவாக சொல்லிவிட்டு தன் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான்.

                வசந்தா தாம் தூம் என்று குதித்து கொண்டிருக்க, மதுசூதனன் தான் “அம்மா.. கொஞ்சம் அமைதியா இருங்க.. கொஞ்ச நாள் போகட்டும்.. இன்பா நம்மை மீறி எதுவும் செய்ய மாட்டான்.. நான் பேசறேன் அவன்கிட்ட..” என்று அவரை அமைதிப்படுத்தினார்.

                          ஆனால், அவரின் மகன் இவர்களிடம் பேசி சென்ற அடுத்த ஒரே மாதத்தில் அவன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து அழைத்து வருவான் என்பது அந்த வீட்டில் யாருமே எதிர்பார்க்காதது.. அவன் குடும்பம் உச்சகட்ட அதிர்ச்சியில் அதிர்ந்து நிற்க, பேச்சு வார்த்தைகள் தடித்து போனதில் அன்றே அந்த வீட்டை விட்டு வெளியேறியும் விட்டான்.

                  அவன் அன்னையை தவிர யாரையும் பொருட்படுத்தாதவன் அபிராமியின் பாதத்தில் மட்டுமே பணிந்து எழ, அபிராமி தன் மகனின் தலையில் கைவைக்க முற்பட்டவர் தன் கணவரின் பார்வையில் அழுது கொண்டே பின்னால் நகர்ந்து விட்டார்.

                 தன் அன்னையை பார்த்து கசப்புடன் சிரித்தவன் அவனுக்கான மாற்று உடைகளை கூட எடுக்காமல் அந்த வீட்டை விட்டு நடந்தே சென்றான்.. உடன் அவன் தாலி கட்டி அழைத்து வந்திருந்த அவன் மனைவியும்.. அதற்கு பிறகாக அவர் மகனை பார்த்தது அன்றிலிருந்து சரியாக நான்கு மாதம் கழித்து மருத்துவமனையில் வைத்து தான்…

                  அதுவும் அவன் இருந்த நிலை……

Advertisement