Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 03

                                 தனக்கு முன்னால் இருந்த கணினி திரையை கவனமாக நோக்கி கொண்டிருந்தான் இன்பன்.  அருகில் அவனின் தற்போதைய நண்பன் மற்றும் உதவியாளன் லாரன்ஸ்.. அவனின் நிலையை முற்றிலுமாக அறிந்த ஒருவன். இந்த லண்டன் மாநகரை வெறுமையோடு அவன் சுற்றி வந்த நேரத்தில், ஒரு பாரில் அவனுக்கு நண்பனானவன்.

                              அதன் பின் பரசபரம் இருவரும் பேசிக் கொள்ள தொடங்கி இருக்க, லாரன்ஸ் இயல்பிலேயே அதிகம் பேசுபவனாக இருக்க, இன்பனின் மௌனமும் உடைய தொடங்கி இருந்தது. இன்பன் அங்கேயே தொழில் தொடங்குவதாக சொன்னபோது அவன் உடல்நிலையை கருதி தான் ஏற்கனவே ஒரு பெரிய நிறுவனத்தில் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவனுடன் சேர்ந்து கொண்டிருந்தான் லாரன்ஸ்.

                         அவர்கள் இருவருமே இயல்பாகவே ஒருவர் மீது மற்றவர் அக்கறை செலுத்த, அதிலும் சொந்தம் என்று யாருமில்லாத லாரன்ஸ் இன்பனை தன் சகோதரனை போலவே நினைத்து அவன் நிழலாகவே உடன் இருப்பான் எப்போதும்.

                          இன்றுவரை பேரின்பனின் உடல்நிலை குறித்த விஷயங்கள் அவனை தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது அந்த ஊரில்.

                        சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் தொழில் செய்வது என்று முடிவெடுத்த கணம் இன்பனின் கண்ணெதிரில் தோன்றியது உயர்ந்து நின்ற கட்டிடங்கள் தான். அவனை அறியாமலே அந்த கட்டுமானங்களின் மீது ஒரு ஆர்வம் பிறக்க, அதையே   தொழிலாக செய்வது என்று முடிவெடுத்தான்.

                    ஆனால் அவன் படித்த விஷயங்கள் எதுவும் அந்த நேரம் அவனுக்கு துணை நிற்காமல் போக, தன்னால் முடியுமா என்று தயக்கத்துடன் தான் அவன் லாரன்ஸிடம் ஆலோசனை கேட்டது. இன்பன் இந்த அளவிற்கு வெளியே வர முயற்சிப்பதே அவனுக்கு ஆறுதலாக இருக்க, கூடவே அவனும் கட்டுமானம் தொடர்பான படிப்பையே முடித்திருக்க யோசிக்காமல் நண்பனுக்குத் தைரியம் கொடுத்தான்.

                   அன்று முதல் இன்று வரை நிழலாக அவன் கூடவே இருப்பவன் ஒரு சிறந்த வழிகாட்டியை போலத்தான்.

                            இன்பனும் முதல் லேசாக திணறினாலும் தன் முயற்சியை கைவிடவே இல்லை. அந்தந்த துறையில் வல்லுனர்களாக இருந்தவர்களை தன் நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டவன் அவர்களுடன் சேர்ந்து தானும் உழைக்க, மற்றவை எப்படியோ இந்த மூன்று ஆண்டுகளில் அவன் தொழில் திறமை அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே கைகொடுத்து இருந்தது.

                           இப்போதும் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருந்த மீட்டிங் குறித்த நோட்ஸை தான் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் இன்பன். எப்போதும் போல் லாரன்ஸ் உடன் இருக்க, அவன் படித்து முடித்து நிமிரவும் “என்ன இன்பா.. எல்லாம் ஓகே ஆ…” என்று சற்று கொஞ்சலான தமிழில் கேட்டு வைத்தான் அவன். இந்த மூன்று ஆண்டுகளில் இன்பனை போலவே அவன் தமிழும் பிடித்து போயிருக்க, நன்றாகவே கற்று தேர்ந்திருந்தான் அதையும்.

                         ஆனால் உச்சரிப்புகள் சில இடங்களில் சிரிப்பை வரவழைத்து விடும் நமக்கு.. முதலில் பேரின்பனின் பெயரே அவனிடம் சிக்கி சின்ன பின்னமாக சுதாரித்துக் கொண்டவன் எளிதாக இன்பா என்று சொல்லி கொடுத்திருந்தான்.

                          இன்பந் சிரிப்புடன் “எல்லாம் ஓகே தான் லா.. பட் நாம இதுவரைக்கும் இவ்ளோ பெரிய கான்ட்ராக்ட்க்கு ட்ரை பண்ணாதே இல்லை இல்லையா.. சோ கொஞ்சம் நெர்வஸா இருக்கு மேன்..” என்று மறையாமல் கூற

                           “டோன்ட் ஹெசிட்டேட் இன்பா.. யூ கேன்.. உன்னால நிச்சமா முடியும்.. நல்லா பண்ணுவோம்..” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் லாரன்ஸ். புன்னகையுடன் இன்பன் தலையசைக்க நண்பர்கள் இருவரும் மீட்டிங் ஹாலை நோக்கி நடந்தனர்.

                           லண்டனை சேர்ந்த ஒரு பெரிய தொழில் நிறுவனம் தங்கள் மேல்மட்ட ஊழியர்களுக்கான  வீடுகளை கட்டி முடிக்க இவர்களிடம் கொட்டேஷன் கேட்டிருக்க, இவர்கள் குறிப்பிட்டு இருந்த தொகை நியாயமானதாக இருக்கவும், அந்த கான்ட்ராக்ட்டை இவர்களிடம் கொடுக்க முடிவு செய்திருந்தனர். இன்று அந்த வீடுகளுக்கான அமைப்பை முடிவு செய்ய அவர்கள் நிறுவனத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் வருவதாக இருக்க, அதற்கான குறிப்புகளை மீண்டும் ஒருமுறை இன்பன் பார்த்து முடிக்கவும், அவர்கள் அந்த அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

                       லாரன்ஸ் அவர்களை வரவேற்று அழைத்து வர, இன்பனும் கைகுலுக்கி வரவேற்று அமர வைத்தான்.. பொதுவான பேச்சுக்கள் முடியவும் இன்பன் தன் வேலையை தொடங்கினான். அவனுக்கு பின்னால்  இருந்த பெரிய திரையில் அந்த வீடுகளுக்கான 3D வடிவங்கள் இடம்பெற, இடையிடையே அவனின் குறிப்புகள் வேறு.. முழுதாக அவன் விளக்கி முடித்த நேரம் வந்தவர்கள் முகத்திலும் முழு திருப்தி நிலவியது.

                      லாரன்ஸ் அவர்களுக்கு பின்னால் நின்றிருந்தவன் தன் இருகைகளையும் தூக்கி தம்ஸ் அப் போல் காட்ட, அவர்களும் அன்றே அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முடிவானது. அவர்கள் அந்த மீட்டிங் அறையை விட்டு வெளியேறிய நேரம் லாரன்ஸ் தன் நண்பனின் அருகில் வந்தவன் அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த “டேய்.. நான் லிண்டா இல்ல விடுடா..” என்று சத்தமாக கத்தினான் இன்பன்.

                     “போடா இடியட்.. லிண்டா இருந்தா லிப்லாக் செஞ்சிருப்பேன்.. இப்படி லேசா ஹக் பண்ணி விட்டுடுவேனா..” என்று அவன் சிரிக்க, அந்த டேபிளில் இருந்த பைலை அவன் முகத்தில் எறிந்தான் இன்பன். அதை கண்டு கொள்ளாமல் “கம் கம்…” என்று அவன் கையை கோர்த்துக் கொண்டு வெளியேறினான் லாரன்ஸ்.

                  அதற்குமேல் அந்த நிறுவனத்துடனான வேலைகள் சரியாக இருக்க, முதற்கட்டமாக இரு தரப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடிக்க, அந்த நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு செக்கும் போட்டு கொடுத்து விட்டே அங்கிருந்து நகர்ந்தனர்.

                      அந்த அலுவலகத்தில் இருந்த மொத்த டீமுக்கும் அன்று நாள் களைகட்ட, அன்று மாலையில் ஒரு குட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டான் லாரன்ஸ். அவர்கள் நிறுவனத்துக்கு அருகில் இருந்த ஒரு ஹோட்டலில் மேல்நாட்டு மதுவகைகளுடன் விருந்து களைகட்ட, இன்பன் ஒரு அளவோடு நிறுத்திக் கொள்ள,  லாரன்ஸ் மொத்தமாக உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்.

                       அங்கு வெஸ்டர்ன் இசை வேறு முழங்கி கொண்டிருக்க, அதற்கேற்ப நடனமும் ஒருபுறம் நடந்தது. அங்கிருந்த சிலர் இன்பனை ஆர்வமாக ஆட அழைக்க, மறுத்து விட்டு அமைதியாக கையில் கிளாஸுடன் அவன் அமர்ந்திருக்க, லாரன்ஸ் “கேர்ள்ஸ்.. ஷால் வீ..” என்று கேட்டுக் கொண்டே எழுந்தவன் ஜோதியில் ஐக்கியமாகி விட, இன்பன் தன் கையில் மொபைலை வைத்துக் கொண்டு அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தான்..

                       அந்த போதையிலும் லாரன்ஸ்க்கு ஏதோ உறுத்த திரும்பி இன்பனை பார்த்தவன் “ஓஹ்.. ஷீட்..” என்று கூவிக்கொண்டே,ஓடி வந்து அவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கி கொண்டான். போதாதற்கு இன்பனை முறைத்து வேறு வைக்க, சத்தமாக சிரித்தான் இன்பன்.

                       ஏற்கனவே ஒருமுறை இவன் செய்து வைத்த வேலையால், அவன் காதலியிடம் அவன் சரியாக வாங்கி இருக்க, அவளை சமாதானப்படுத்த என்னவெல்லாம் செய்தான் என்பது லேசாக நினைவு வரவும், இன்பனின் தோளில் லேசாக குத்திவிட்டு ஓடினான் லாரன்ஸ்.

                      அன்றைய நாள் இருவருக்கும் வெகு சிறப்பாக கழிந்திருக்க, அந்த நாளின் முடிவில் லாரன்ஸை தூக்கி சென்று அவன் அறையில் விட்டவன் லிண்டாவுக்கு கால் செய்து சொல்லிவிட்டே அங்கிருந்து கிளம்பினான்.

                  அவன் வீட்டிற்கு வரவும் தான் காலையில் அன்னையிடம் வெளியே அழைத்து செல்வதாக சொன்னததே நினைவு வர, ஹாலில் அமர்ந்திருந்த அன்னையின் முகம் வேறு குற்றவுணர்ச்சியை கொடுத்தது. அவரை கண்ட நிமிடம் தன் தலையிலேயே அடித்துக் கொண்டவன் “சாரி.. சாரிம்மா.. மறந்துட்டேன் நிஜமா..” என்று தலையில் கையை வைத்துக் கொள்ள

                 “போதும் வாடா.. குளிச்சிட்டு வா சாப்பிடுவோம்…” என்றவர் முன்னே நடக்க

                 “ம்மா.. நான் சாப்பிட்டுட்டேன்ம்மா..” என்று கூறியவன் அன்னையை பாவமாக பார்க்க, இப்போது தான் உண்மையில் அவர்முகம் வாடி போனது.

                  அவரின் வாட்டம் பொறுக்காமல் “ம்மா.. வாங்க நாம சாப்பிடுவோம்.. நீங்க ஊட்டி விடுங்க.. நான் கொஞ்சமா சாப்பிடுறேன்..” என்று அவரின் கையை பிடித்து அழைத்து சென்றவன் அவர் உண்டு முடிக்கும் வரை அவருடனே இருந்தான்.

                   மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தவர்கள் அதன் பிறகே உறங்கச் செல்ல, அன்னையை சமாளித்து விட்டதாகவே நினைத்தான் இன்பன். ஆனால் அறைக்கு வந்த அபிராமியே மீண்டும் ஒருமுறை மகனை நினைத்து அழுகையில் கரைந்தார்.

                    அவன் உள்ளே நுழையும் போது அவன் கண்களில் இருந்த லேசான மயக்கம் அவருக்கு தெரிந்துவிட, மகன் சமாளிப்பது தெரியவும், தானும் தெரியாதது போல் இருந்து கொண்டார். ஆனால், தாய் அறியாத சூலா??

Advertisement