Advertisement

தன் மகன் இப்படி ஏதோ ஒரு மொழி தெரியாத ஊரில், தன்னந்தனியாக கிடந்து அல்லாடவா, இத்தனையும் செய்தோம் என்று நினைத்தவருக்கு வேதனை தான் மிஞ்சியது.. எத்தனை தொழில்கள், எத்தனை எத்தனை வீடுகள், வகை வகையான முதலீடுகள்… என்று நினைத்தவருக்கு கசப்பே மிஞ்சியது.

 

என் மகன் இப்படி வனவாசம் வந்து இருக்கவா இத்தனையும்.. ஆண்டவா யாரோ செய்த பிழைக்கு என் மகன் பிணையா?? இல்லை மௌன சாட்சியாக நான் நின்றதால் என் பாவத்தை அவன் தலையில் ஏற்றுகிறாயா ??? என் மகனை எனக்கு திருப்பி கொடுத்து விடேன்..” என்று கலங்கி கண்ணீர் வடித்தது அந்த தாயுள்ளம்…

மூன்று வருடங்களுக்கு முன்பாக,  குழந்தைதனம் நிறைந்த முகத்துடன் ஒருத்தி கலங்கி, கண்ணீர் சிந்தி, கதறியது அசந்தர்பமாக நினைவு வர, அவளின் ஏக்கம் நிறைந்த விழிகளை நினைத்து கண்ணீர் விட்டார் அவர்..

 

அவரின் மாமியார் இழைத்த அநீதிக்கு அன்று சாட்சியாக என்பதை விட துணையாக நின்றவர் அபிராமி.. தன் மகனின் வாழ்வு ஒன்றே அப்போது குறியாக இருந்திருக்க, மாமியாரின் போதனைகளும் மொத்தமாக அவர் மண்டையை கழுவி இருந்தது.

 

அவர் நினைத்திருந்தாலும் அவரின் மாமியாரை தாண்டி பெரிதாக எதுவும் செய்து விட்டிருக்க முடியாது.. பதினெட்டு வயதில் அந்த வீட்டுக்கு மருமகளாக அடியெடுத்து வைத்தவர் மாமியாரின் சொற்களை கேட்டே பழகி போயிருந்தார் என்பதை விட பழக்கப்படுத்தப்பட்டு இருந்தார்.

 

அந்த வீட்டில் அவரின் மாமியார் வைப்பது தான் சட்டம் என்று இருக்க, அதை மீறும் அதிகாரமோ, தைரியமோ யாருக்குமே இருந்தது இல்லை.. அவர் விதிக்கும் சட்டங்களை மீறும் துணிவு கொண்ட ஒருவன் அன்று மொத்தமாக வேரறுந்து சாய்ந்து விட்டிருந்த நிலையில், அன்னையாக நினைத்த மாமியாரின் வாக்கு வேதவாக்காக தெரிந்தது அபிராமிக்கு..

 

அப்போதும் கூட, அந்த சிறுபெண்ணை அத்தனை கடுமையாக பேசி இருக்க வேண்டாம் என்று நினைத்து பலமுறை தனக்குள்ளே அவர் குறுகி நின்றிருக்கிறார்.. அவரின் நியாய மனமும் நடந்தது அனைத்திற்கும் நீ தான் காரணம் என்று குற்றம் சாட்டிக் கொண்டே இருக்க, இந்த மூன்று ஆண்டுகளாகவே நிம்மதியற்ற நிலை தான்..

 

அவளின் கண்ணீரை வேடிக்கை பார்த்து நின்றதாலோ என்னவோ, அதற்கு பின்னான நேரங்களில் பெரிதாக சிரித்ததே இல்லை அவர். அவளின் கண்ணீர் தோய்ந்த பரிதாபமான முகம் நினைவை விட்டு அகலும் முன்னமே மாமியார் அவரிடம் சத்தியம் வாங்கி விட, யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தார்..

 

அடுத்த நாளே மகன் அவர்களின் கவனத்தை ஈர்த்துக் கொள்ள, அதற்குமேல் அந்த அப்பாவி பெண்ணின் நினைவு மனதின் ஓரம் புதைந்து போயிருந்தது. மெல்ல மெல்ல மகன் மீண்டு வர, அடுத்த துயரம்… அவரது மாமியார் உறக்கத்திலேயே உயிரை விட்டிருக்க, மொத்தமாக சுருண்டு போனார் அவர்.

 

மகனின் நிலை, மாமியாரின் பிரிவு, என்று உடைந்து போனவர் முழுதாக இறைவனை சரணடைய, இறைவன் அவருக்கு கை கொடுக்கவில்லை.. மாமியார் இறந்த மூன்றே மாதத்தில் மகன் வெளிநாடு செல்கிறேன் என்று வந்து நிற்க, அவன் இருந்த நிலை அவர்களை யோசிக்க விடாமல் செய்ய, அனுமதி கொடுத்து அனுப்பி வைத்தனர்.

 

ஆனால், அவன் நிரந்தரமாக லண்டன் வாசியாக மாறி போக, அபிராமியின் தனிமை சொல்ல முடியாத அளவுக்கு அவரை கொன்று கொண்டிருந்தது.. கணவரிடமும் சொல்ல முடியாமல், மகன் உடல்நிலை இருக்கும் நிலையில் அவனிடமும் சொல்ல முடியாமல் தனக்குள் புழுங்கி போயிருந்தார் அவர்.

மாமியாரின் செயல்களுக்கு முழுதாக துணை நின்ற மனிதரிடம் என்னவென்று ஆறுதல் தேட முடியும் அவரால். அவர் கணவர் மதுசூதனன் மொத்தமாக அன்னையின் வளர்ப்பு.. அவரின் கொள்கைகளும் கோட்பாடுகளும் மொத்தமாக மதுசூதனனுக்கும் பாடம் செய்யப்பட்டு இருக்க, அவரின் அந்தஸ்து தான் எப்போதும் முன்னே நிற்கும்.

 

தாயின் மறைவுக்கு பிறகு கூட, பெரிதாக எதுவும் மாற்றமில்லை அவரிடம். அவரை பொறுத்தவரை அவர் செய்தது சரியாக இருக்க, அந்த பெண்ணை பற்றி எல்லாம் நினைவே இல்லை அவருக்கு.. ஆனால், அந்த ஒரு விஷயத்தை தவிர வேறு எதுவும் குறை சொல்ல முடியாத மனிதர் தான் மதுசூதனன்.

 

பெரிதாக உருகி கரையவில்லை என்றாலும், அபிராமியின் மீதும், பேரின்பனின் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர். அவரின் அக்கறை அவரின் செயல்களில் எப்போதுமே பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்.. அந்த ஒரு காரணத்திற்காக தான் அபிராமியும் இன்றுவரை கட்டுப்பட்டு நிற்கிறார்.

 

மேலும் கணவர் காரணமாக காட்டுவது மகனின் உடல்நிலையாக அல்லவா இருக்கிறது.. இந்த விஷயங்களை அவனிடம் சொல்வதால் அவனுக்கு ஏதும் பாதிப்பு என்றால் தன்னால் தாங்கி கொள்ள முடியுமா ?? என்பதும் கேள்வியாகவே இருக்க, இப்படி தனிமையில் அழுவதை மட்டுமே சுதந்திரமாக செய்து கொண்டிருக்கிறார் அபிராமி.

 

இப்போதும் அவர் அழுது கொண்டே இருக்க, கணவரிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது. கண்களை துடைத்துக் கொண்டவர் அழைப்பை ஏற்க “என்ன அபி..என்ன பண்ற.. இன்பா ஆபிஸ் கிளம்பிட்டானா… நீ சாப்பிட்டியா..” என்று அக்கறையாகவும், அன்பாகவும் வந்து விழுந்தன கேள்விகள்.

“ஒரே நேரத்தில எத்தனை கேள்வி கேட்பிங்க…” என்று கேட்டவர் தன்னை இயல்பாக காட்டிக் கொள்ள பார்க்க , எதிரில் இருந்தவர் “என்னமா ஏன் குரல் ஏதோ போல இருக்கு.. என்ன ஆச்சு அபிம்மா..” என்று உருக தொடங்கி விட்டார்.

 

கணவரின் கரிசனத்தில் மீண்டும் கண்ணீர் வர, சத்தமாகவே விசும்பினார் அபிராமி..   “அபி என்னம்மா.. எதுக்கு அழற.. இன்பா ஏதாவது சொன்னானா.. என்னமா..” என்று பதட்டமாக வினவ

 

சற்றே தெளிந்தவர் “அதெல்லாம் ஒண்ணுமில்லங்க.. ஏதோ நியாபகம்.. இன்பாவை ஊருக்கு கூப்பிட்டேன்.. அவன் மறுக்கவும் சட்டுன்னு அழுகை வந்துடுச்சு.. அந்த நேரம் நீங்க கூப்பிட்டிங்க..” என்று அவர் சமாளிக்க

 

மனைவியை அறியாதவரா மதுசூதனன்.. “எதுக்காக அவனை தொந்தரவு பண்ற அபி… அவன் கொஞ்சநாள் அங்கேயே இருக்கட்டுமே..” என்று மேலோட்டமாக சொல்ல

 

“உங்களுக்கென்ன ஆயிரம் பிசினஸ் இருக்கு, ஊர் ஊரா அலைஞ்சிட்டு இருக்கீங்க.. நான் அப்படியா? என் மகன் மட்டும்தான் ஒரே துணை எனக்கு… அவனையும் இப்படி இங்கே விட்டுட்டு நான் எதுக்கு இருக்கணும்… யாருக்கு என்ன பாவம் செஞ்சேனோ.. என் தலையெழுத்து இப்படியா இருக்கணும்..” என்று அவர் வெடிக்க

 

“நீ யாருக்கும் எந்த பாவமும் செய்யல அபி.. தேவை இல்லாததை யோசிச்சு நீயே உன்னை வருத்திட்டு இருக்க.. அன்னிக்கு என்ன நடந்ததோ அது மொத்தமும் என் மகனோட நல்ல வாழ்க்கைக்காக தான் நடந்தது.. ஒரு அப்பாவா என் மகனோட வாழ்க்கையை நான் காப்பாத்தினது எப்படி பாவம் ஆகும்…”

 

“எவ்ளோ ஒரு ஊர் பேர் தெரியாத அனாதை என் மகனை மயக்கி இழுத்துட்டு போவா.. நான் வேடிக்கை பார்த்திட்டு நிற்கணுமா… அவளை அந்த அளவோட விட்டதே உனக்காக தான்… கலையரசு துடிச்சிட்டு இருந்தான்… சும்மா அதையே நினைச்சு புலம்பி இருக்கறவங்க நிம்மதியை கெடுத்திடாத…”

 

“இன்னும் சரியா சொல்லப்போனா, நீ யாருக்காக வருத்தப்படறியோ அவளே கூட உன் மகனை மாதிரி நாலு பேரை மாத்தி இருப்பா.. உன் மகன் நினைவெல்லாம் இருக்கவே இருக்காது அவளுக்கு.. படிக்கிற வயசுல அவ செஞ்ச காரியம் சரி, என் மகனை நான் காப்பாத்தினது தப்பா…??” என்று அவர் கோபத்தில் வார்த்தைகளை விட, ஏன்தான் பேசினோமோ?? என்று வந்தது அபிராமிக்கு..

 

“உங்ககிட்ட போராடற நிலைமைல நான் இல்ல… போனை வைக்கிறேன்.. எனக்கு கொஞ்சம் தூங்கணும்..” என்றவர் அழைப்பை துண்டிக்க போக,

 

“என்ன செய்யுது உனக்கு.. இன்பாக்கு போன் பண்ணவா.. இல்ல நான் கிளம்பி வரட்டுமா??” என்று அவர் அமைதியாக கேட்க,

 

அவரின் பாசம் கூட பரமாகவே தோன்றியது அந்த நொடி.. “வேண்டாம்.. நான் பார்த்துக்கறேன்..” என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டு சென்று தன் அறையில் கண்களை மூடி படுத்துவிட்டார்.

Advertisement