Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 02

                               அந்த ஒற்றை அறை வீட்டின் ஒரு பக்கத்தில் பாய் விரித்து இருக்க, அந்த பாயில் கால்களை நீட்டி சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அவள்… அவள் மடியில் தலையை வைத்து படுத்திருந்தான் அவன். அவளின் வயிற்றில் முகத்தை புதைத்திருந்தவன் குட்டி குட்டி முத்தங்களை அவளுக்கு பரிசாக்கி கொண்டிருக்க, அவள் ஒரு கை அவனது தலையை கோதிக் கொண்டிருந்தது..

                           மற்றொரு கையை அசையவிடாமல் அவன் பிடித்திருக்க, “கையை விடுங்க…” என்று மெல்லிய மணியோசையாக சிணுங்கலுடன் உயிர்பெற்றது வார்த்தைகள்.

                            அவள் சிணுங்கல்களை கண்டு கொள்ளாமல் அவன் ஒரு கையால் அவளின் இடையை சுற்றி வந்து இறுக்க, அவன் கைகள் உரசியதில் சற்றே கூச்சத்துடன் நெளிய தொடங்கினாள் அவள். “ரசிகா… நெளியாம இருடி..” என்று தலையை நிமிர்த்தாமல் கூறியவன் அவளிடம் இடையிலக்கணம் தேடுவதில் மும்முரமாக

                           “கூச்சமா இருக்குங்க… கையையாவது விடுங்க..” என்று மீண்டும் உரைக்க

                       “இது என்னை ரொம்ப தொந்தரவு பண்ணுதே..” என்று அவள் கையை பார்த்தே கூறினான் அவன்.

                    “ரொம்ப இம்சை பண்றிங்க நீங்க.. என்னை விடாம பிடிச்சு வச்சுட்டுகிட்டு, இந்த வேலை பார்த்துட்டு இருக்கீங்க… ” என்று சொல்லிக் கொண்டே வந்தவள் “ஆஆ… ஹ்ஸ்…” என்று சின்னதாக கத்திவிட, அவள் இடுப்பில் மீசை உராய சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.

                    அந்த நேர செல்ல கோபத்தில் சட்டென அவனை மடியில் இருந்து அவள் தள்ளிவிட, கீழே பாயில் விழுந்தவன் கண்களை திறந்து பார்க்க,  அவன் கண்ணில்பட்டது அவன் தலைக்கு மேலாக தொங்கி கொண்டிருந்த சாண்டிலியர் விளக்கு தான். அதன் மதிப்பே சில லட்சங்களில் இருக்கும்.

                    மெல்ல நிதானத்திற்கு வந்தவன் கண்களை மூடி திறந்து தன்னை நிலைப்படுத்த, அவள் மடி இருந்த இடத்தில் ஒரு தலையணை மட்டுமே இருந்தது. அவன் தலை மெத்தையில் கிடந்தது. எப்போதும் போல் கண்களை மூடி அவள் முகத்திற்கு அவன் முகவரி தேட, நேரம் விரையமானது தான் மிச்சம்..

                        இந்த கடைசி மூன்றரை ஆண்டுகளில் அவள் இல்லாத அவனின் கனவுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. ஆனால் இத்தனை ஆண்டு தவத்தில் ஒருமுறை கூட அவளின் முகம் பார்க்கும் வரம் மட்டும் கிட்டவே இல்லை…

                      சில நேரங்களில் கைகோர்த்து, சில நேரங்களில் தலைகோதி, சில நேரங்களில் அவன் தோல் சாய்ந்து, சில நேரங்களில் அவன் மார்பில் தலை சாய்த்து, சில நேரங்களில் அவனின் மடி சாய்ந்து, இன்னும் சில நேரங்களில் அவனை மடியில் சாய்த்து கொண்டு என்று அவளின் பிம்பங்கள் தான் எத்தனை எத்தனை…

                     ஆனால் அவன் முகம் பார்க்க முயலும் நிமிடங்களில், அந்த களவாணி பெண் காற்றாய் கரைந்து விட, அவன் உறக்கமும் பறந்து விடும்.. சில நேரங்களில் அரை தூக்கத்தில் எழுபவன் மீண்டும் உறங்கி கனவுக்காக காத்திருந்த கதைகளும் உண்டு…

                      ஆனால் இன்று வரை இறைவியின் தரிசனம் கிடைக்க பெறாமலே இருந்தது. இப்போதும் கனவில் கண்ட காட்சிகளை அசைபோட்டுக் கொண்டு அமைதியாக கண்களை மூடி அவன் படுத்திருக்க, சில நிமிடங்களில் அவன் அறையில் இருந்த அலைபேசி அவன் இருப்பை காட்டிக் கொண்டது.

                     அலைபேசியின் அலாரத்தை அணைத்து வைத்தவன் எழுந்து தன் அறையின் ஜன்னலை திறந்து விட, மொத்தமாக முகத்தில் வந்து மோதியது லண்டன் மாநகரின்  குளிர்ந்த காற்று. நகரத்தில் இருந்து சற்றே தள்ளி இருந்தது இவன் வீடு  அமைந்திருந்த பகுதி.

                      நல்ல பரப்பளவில் போதுமான இடைவெளியுடன் சற்று தள்ளி தள்ளியே வீடுகள் இருக்க, இவன் தனிமையை கெடுப்பவர் யாருமில்லை அங்கே. அவன் தந்தை இந்தியாவில் இருக்க, அவன் அன்னை இங்கே இவனுடன் இருக்கிறார்.. அடுத்த வாரத்தில் அவரும் இந்தியா கிளம்புவதாக இருந்தது.

                     ஆனால், பிறந்து வளர்ந்த நாடாக இருந்தாலும் ஏனோ அங்கே செல்வதில் நாட்டம் இல்லை அவனுக்கு.. முகம் தெரியாத மனிதர்களின் கரிசனத்தையோ, பார்வையையோ தாங்கி கொள்ள முடியாமல் தவிப்புடன் தான் ஓடி வந்திருந்தான் இந்த நகரத்திற்கு.

                        அவன் தந்தைக்கு இந்தியாவில் ஏகப்பட்ட தொழில்கள் இருக்க, மூன்று மாதம் இருந்துவிட்டு வருகிறேன் என்று வந்தவன், இங்கேயே தனக்கென ஓர் கட்டுமான தொழிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.. அதிலும் முட்டி மோதி, ஏற்ற இறக்கங்களை சமாளித்து இப்போது சொல்லி கொள்ளும் படியான ஒரு நிலையான இடத்தை தனக்கென அவன் தக்க வைத்துக் கொண்டிருக்க, அவன் தந்தைக்கு வருத்தம் தான்.

                     தந்தையிடம் இருந்து பணத்தை மட்டுமே முதலீடாக பெற்றுக் கொண்டவன் உழைப்பதற்கு மட்டும் தானே மொத்தமாக மூழ்கி போக, அவன் தனிமையிலிருந்தும் அவனுக்கு விடுதலை கிடைக்க, தொழிலும் அவனை விடாமல் அணைத்து கொண்டது.

                       அவன் தந்தை எப்போதோ வாங்கி வைத்திருந்த இந்த வீடு அவனின் இருப்பிடமாக மாறிப் போயிருக்க, அவனும் மொத்தமாகவே லண்டன் வாசியாகி போயிருந்தான்.. இப்போதைக்கு இந்தியா செல்லும் எண்ணமே இல்லை அவனிடம்.

                      மீண்டும் ஒருமுறை தன்னால் தடுமாறி நிற்க முடியாது என்பது வரையில் அவனுக்கு தெரிந்திருக்க, இப்போதைக்கு அவனின் எண்ணமெல்லாம் அவனின் தொழிலை குறித்து தான்.

                        இன்றும் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்க, அதை நினைவு படுத்திக் கொண்டு குளிக்க சென்றான் அவன்.. அவன் பேரின்பன்.. ஆறடி அழகன் தான் என்று ஒப்புக்கொள்ளும் வகையில் சர்வ லட்சணங்களும் பொருந்திய ஆண் மகன். சற்றே முறுக்கேறிய உடல், யாரையும் நொடியில் எடைபோட்டு விடும் கூர்மையான கண்கள்.. நெற்றியில் வந்து விழும் அலையலையான தலைமுடி என்று அடுக்கி கொண்டே போகலாம்..

                  இந்த மூன்று ஆண்டு லண்டன் வாசம் வேறு அவனை இன்னும் வெளுப்பாக்கி விட்டிருக்க, லண்டன் பெண்களே பலர் அவன் பின்னே சுற்றி வர தயாராக தான் இருக்கின்றனர். ஆனால்  அவன் மனம் அந்த கனவு காரியை தான் காணும் அத்தனை பெண்களிடமும் தேட, இன்றுவரை தேடல் முற்று பெறாமலே இருக்கிறது.

                    இதற்குள் குளித்து வெளியே வந்திருந்தவன் உடையை மாற்றி, அலுவலகம் செல்வதற்கு தயாராக கீழே இறங்க, அந்த மரப்படிகளின் கீழே பெரிதாக நீண்டு விரிந்திருந்தது அந்த ஹால். அதன் ஒருபக்க மூலையில் திறந்தவெளி சமையல் அறையாக இருக்க, அதற்கு எதிர்புறம் இரண்டு அறைகள்.. மாடியில் இரண்டு அறைகள் என்று கச்சிதமாக இருந்தது அந்த வீடு..

                  அந்த வீட்டில் இருந்த அலங்கார பொருட்கள் அவர்களின் பணச்செழுமையை பறைசாற்ற, எப்போதும் போல் அவற்றை சற்றும் கண்டு கொள்ளாமல் நிதானமாக இறங்கி வந்தான் அவன். அவன் ஹாலிலிருந்த சோஃபாவை அடையும் நேரம் அவன் அன்னை அவனை சாப்பிட அழைத்திருந்தார்.

                   சிறு சிரிப்புடன் அவரை நெருங்கியவன் “அடுத்த வாரத்துல இருந்து எப்படி சமைச்சு கொடுப்பிங்க…” என்று கிண்டலாக கேட்க, அபிராமியின் முகம் சுருங்கி விட்டது.

                     “ஏன் கண்ணா இப்படி பண்ற.. நீ என்னோடவே வந்து இருந்திடேன்… அம்மா உன்னை பார்த்துக்கறேண்டா.. உன்கிட்ட யாரும் எதுவும் கேட்காம நான் பார்த்துக்கறேன் ராஜா… அம்மா கூடவே வந்திடேன்..” என்று அவர் கெஞ்சலாக கேட்க, மறுக்க முடியாமல் பரிதவித்தது அவன் உள்ளம்.

                     ஆனால், அங்கே செல்லவும் மனம் இடம் கொடுக்காமல் போக, “அம்மா.. வாங்க.. வந்து உட்காருங்க.. என்ன இப்போ, என்கூடவே இருக்கணும்… அவ்ளோதானே..”

                   “நீங்க இங்கேயே இருங்க.. நான் அப்பாகிட்ட பேசறேன்..” என்று சமாதானம் செய்ய

                    மகனை பாவமாக பார்த்தவர் “என்னால முடியாது கண்ணா.. அப்பாக்கு எப்பவுமே தொழில் தான் முக்கியம், பிசினஸ பார்க்கிறவர் தன்னை பார்த்துக்க மாட்டாரு.. நான்கூட இருந்து செஞ்சா தான் எனக்கும் நிம்மதியா இருக்கும்… அதனால தான் சொல்றேன்…”

                   “நீ அம்மாவோட வந்திடுடா.. வேணும்னா நாம சென்னைக்கு போகாம, வால்பாறைக்கு போயிடுவோம்.. அங்கே யாரும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டார்களே…” என்று அவர் எடுத்துக் கூற

                   “அம்மா.. கொஞ்ச நாள் என்னை என் போக்குல விடுங்க.. நான் என்ன மொத்தமாக இங்கேயே இருந்திட போறேனா.. எப்படி இருந்தாலும் அதுதான் என் ஊரு, வந்துதான் ஆகணும்.. எனக்கு தெரியும்மா.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க..நானே வர்றேன்..” என்று அவன் முடிவாக கூறி, அவர் கையை பிடித்துக் கொள்ள அதற்குமேல் என்ன பேச  அவரால்.

                    மகனது வேதனையான முகத்தை கண்டதும் தன் கண்ணீர் மறந்து போக, அவன் முகத்தை தடவி கொடுத்தவர் “சீக்கிரம் வந்திடு இன்பா.. அம்மாக்கு உன்னை விட்டு இருக்க முடியாது..” என்று அவன் உச்சியில் இதழ் பதித்தவர் “வா சாப்பிடு.. நேரமாச்சு பார் உனக்கு..” என்று சுடச்சுட இட்லியை அவனுக்கு பரிமாற

                  “இந்த லண்டன்ல கூட இப்படி சாப்டா இட்லி செஞ்சு கொடுக்க என் அம்மாவால மட்டும் தான் முடியும்.. சூப்பர் டேஸ்ட்மா…” என்று சிலாகித்துக் கொண்டே உண்டு முடித்தவன்,  தன் அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு “மா.. ஈவினிங் வந்து வெளியே கூட்டிட்டு போறேன்.. இன்னிக்கு நாம லண்டன் முழுக்க சுத்தி வர்றோம்…”

                    “உங்க புருஷன் பணம் மொத்தத்தையும், இன்னிக்கே ஊதி விடுறோம்..” என்று விட்டு வேகமாக சென்று தன் காரில் ஏறினான்.. வாசலில் வந்து நின்றவருக்கு கையை அசைத்து காட்டிவிட்டு அவன் புறப்பட்டுவிட, வாசலில் நின்றிருந்த அபிராமிக்கு கண்களில் கண்ணீர் கரையுடைத்துக் கொண்டு பெருகியது.

Advertisement