Advertisement

உறைகின்ற நினைவில் உயிராய் நீ 01

                              தமிழகத்தின் அழகான நகரங்களில் ஒன்றான வால்பாறை, தனக்கே உரித்தான குளிர்ச்சியை அனைவர்க்கும் பிரித்தளித்து விடியலுக்கு தயாராகி கொண்டிருக்க, அந்த நகரத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது நந்தவனம்.

                              மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்திருந்தது அந்த தேயிலை தோட்டம்… அதன் உரிமையாளர் மிகவும் அன்பானவராக அப்பகுதியினரால் அறியப்பட, தன் எஸ்டேட் ஊழியர்களுக்காக அதன் ஒரு புறத்திலேயே அவர்கள் குடியிருக்க வீடுகளும் கட்டி கொடுத்திருந்தார் அவர்.

                           பணியாளர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வீடுகள் வழங்கப்பட்டு இருக்க, அந்த எஸ்டேட்டின் மைய பகுதியில் நடுநாயகமாக வீற்றிருந்தது அந்த மாளிகை. அதன் வாசலில் எப்போதோ வந்து செல்லும் முதலாளிக்காக மூன்று விலையுயர்ந்த கார்கள் காத்திருந்தன.. வீட்டின் பக்கவாட்டில் இருந்த செட்டில் ஒரு நவீன ரக பைக் ஒன்றும், மலையேற்றத்தில் பயன்படுத்தப்படும் ஒரு ஜீப்பும் வேறு நின்றிருந்தது.

                            இவற்றை எல்லாம் புதிது போலவே பாதுகாக்கவே தனியாக இருவர் பணியில் இருந்தனர் அந்த எஸ்டேட்டில்.. அது தவிர இருபது பேருக்கு குறையாமல் அந்த வீட்டை பராமரிக்கும் பணியாளர்கள் வேறு..  அந்த வீட்டின் உரிமையாளர் சென்னையில் இருக்க, பக்கத்து எஸ்டேட்டில் இருந்த நண்பர் ஒருவர் மூலம் இதை நிர்வகித்துக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர்.

                        அந்த நந்தவனத்திற்கு அடுத்ததாக அமைந்திருந்தது குறிஞ்சி கார்டன்ஸ்.. நந்தவனம் அளவுக்கு பெரியதாக இல்லாவிட்டாலும், இதுவும் சற்றே பெரிய தோட்டம் தான். அதன் உரிமையாளர் ரங்கராஜன்… இப்போது அவருக்கு வயதாகி விட்டதால் அவர் வீட்டிலேயே இருந்து கொள்ள, எஸ்டேட் நிர்வாகம் அவரது மகன் ஜெகந்நாதனின் கையில் தான்.

                         அந்த குறிஞ்சி கார்டன்ஸ் நடுவிலேயே அவர்களின் வீடு இருக்க, அதற்கு பின்னால் கச்சிதமான அளவில் அமைந்திருந்தது அந்த கெஸ்ட் ஹவுஸ்.. அந்த வீட்டின் பணியாளர்கள் தங்கி கொள்ள ஏற்படுத்தப்பட்டது.. ஆனால் இப்போது அந்த வீட்டின் பணியாளர்கள் அங்கே இல்லாமல் வேறு இருவர் அதில் குடியேறி இருந்தனர்.

                       அந்த விடிந்தும் விடியாத அதிகாலை நேரத்திலேயே, அந்த சிறிய வீட்டின் முக்கிய உறுப்பினர் எழுந்து விட்டிருக்க, அதற்கு மேல் அருகில் இருந்தவளை உறங்கவிட தயாராக இல்லை அவன்.. அருகில் படுத்திருந்தவளை நெருங்கியவன் அவள் கையை பிடித்து, அவள் மார்பின் ஏறி அமர, அப்போதும் அவள் விழிக்காமல் போகவும் தன் குட்டி கரங்களால் அவள் முகத்தில் சப்பென்று ஒரு அடி வைத்தான்.

                     அதிலேயே அங்கே படுத்திருந்தவளின் உறக்கம் களைந்து போக, அவள் மெல்ல கண் விழிக்கவும், கைகொட்டி சிரித்தவன் “இனியா பஸ்ட்…” என்று பூஞ்சிதறலாக சிரித்து வைக்க, அரை தூக்கத்தில் இருந்தவள் சட்டென எழுந்து அமர்ந்து அவனையும் தூக்கி தன் மடியில் இருத்திக் கொண்டாள்.

                    அந்த இரண்டரை வயது அழகோவியம், அவள் மடியில் அழகாக பொருந்தி கொண்டு அவள் முகத்தை பார்த்து சிரித்தது மீண்டும். அந்த காலை வேளை எப்போதுமே இனிமையானது அந்த வீட்டில்.. அவள் முதலில் எழுந்தாலும் கூட இதே போல, சற்றே மென்மையாக கொஞ்சியவாறே அவனை எழுப்பி விடுவாள்.

                     அவன் முகத்தில் இருக்கும் அந்த வாடா புன்னகையை பார்த்த பின்பே அவளின் அந்த நாள் அழகானதாக ஒரு எண்ணம் அவளுக்கு.. தன் சொர்க்கம் தன் கைக்குள் என்பதை பாடமாக சொல்லிக் கொள்பவள் இந்த முறை தன் சொர்க்கத்தை கை நழுவ விட தயாராக இல்லை.

                   எப்போதுமே அவனை சுற்றியே தன் வாழ்வு என்று பலமுறை தனக்குத்தானே சொல்லி மனதில் உருவேற்றி இருந்தவள், கடந்து போன சில நினைவுகளால் இறுகித்தான் போயிருந்தாள். வெளியுலக தொடர்புகளை முழுவதுமாக துண்டித்துக் கொண்டவள் ஜெகந்நாதனின் அன்பை புறக்கணிக்க முடியாமல் இங்கே தங்கி இருக்கிறாள்.

                   நிச்சயம் தங்கித்தான் இருக்கிறாள் அவனிடம் தஞ்சமடையவில்லை. அவள் படித்த படிப்பு கைவிட்டாலும், அவளின் பொழுது போக்கு இன்று தொழிலாக மாறி போயிருக்க, மகன் தனக்குள் இருந்த நேரங்களில் தன்னை இன்னும் மெருகேற்றிக் கொண்டிருந்தாள்.

                             அந்த வால்பாறையின் முக்கியமான ஹோட்டல்களில் ஒன்றான நந்தவன குடிலின் தலைமை சமையலர் அவள். அந்த நகரத்தின் முக்கியமான விருந்துகள், திருமணங்கள், பிறந்தநாள் இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு அவளின் கேக் தான் பிரதானமாக இருந்தது.

                         அவள் கேக் செய்வதிலும், பேக்கிங்கிலும் கை தேர்ந்தவளாக இருக்க, அவளின் புதுமையான ரெசிபிகள் அவளை பிறரிடம் இருந்து தனித்து காட்டியது. அந்த நந்தவனகுடிலில் அவளை வேலைக்கு சேர்த்து விட்டது ஜெகந்நாதன் தான்.  அவளின் திறமையையும், அவளது மெனக்கெடலையும் பார்த்தவன் தானாகவே அவளுக்கு அங்கே வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்க, அவனின் அந்த உதவியை மறுக்காமல் ஏற்றுக் கொண்டிருந்தாள் அவள்.

                           அந்த விடுதியின் நிறுவனர் ஜெகந்நாதனுக்கு தெரிந்தவராக இருக்க, முதலில் குழந்தையை தன்னோடு வைத்துக் கொண்டே சமாளித்தவள், இப்போது சில மாதங்களாக அவனை அருகில் இருந்த கிரெச் சில் விட்டுவிட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டிருந்தாள்.

                          இன்றும் அவளுக்கு வேலை நாளாகவே இருக்க, எழுந்து கொள்ள வேண்டிய நேரத்தையும் தாண்டி உறங்கி போயிருந்தாள். ஆனால் மகன் என்றும் போல் சரியான நேரத்திற்கு எழுந்து விட, அன்னையை எழுப்பி விட்டிருந்தான்.

                         குழந்தையை கையில் வைத்து அமர்ந்திருந்தவள் நேரத்தை பார்க்க, அது ஏழு மணியை காட்டவும், சட்டென எழுந்து கொண்டவள் மகனை கீழே அமர்த்தி அவனுக்கு அருகில் சில விளையாட்டு சாமான்களை எடுத்து போட, மகன் சமத்தாக அவற்றுடன் விளையாட, அந்த இடைவெளியில் குளியல் அறைக்குள் நுழைந்தவள் காலைக்கடன்களை முடித்து, குளித்து அடுத்த பத்து நிமிடங்களில் வெளியே வந்துவிட்டாள்.

                         மகன் விளையாடிக் கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டே, சமையல் அறைக்கு சென்றவள் பாலை அடுப்பில் வைத்து திரும்ப, மகன் கால்களை கட்டிக் கொண்டான். எப்போதும் இது நடப்பது தான்… அவள் அருகில் இல்லாத நேரங்களில் சமத்தாக இருப்பவன், தாயை பார்த்துவிட்டால் அவளின் சேலையை பிடித்துக் கொண்டே அலைவான்.

                        இப்போதும் அவன் உயரத்திற்கு அவளின் தொடை பகுதியில் இருந்த சேலை கொசுவத்தை பிடித்துக் கொண்டு, அவள் கால்களில் முகத்தை புதைத்துக் கொண்டு அவன் நிற்க, தன் செல்ல மகனை கையில்  ஏந்தி கொண்டவள் அவனுக்கென வைத்திருந்த ஒரு குட்டி பிரஷ்ஷில் சிறிது பற்பசையை வைத்து அவனிடம் நீட்ட, குஷியாக அதை கையில் வாங்கி கொண்டவன் தன் அன்னை ஏற்கனவே சொல்லி இருந்ததை போல, பல் விளக்குவதாக பேர் பண்ணிக் கொண்டிருந்தான்.

                     இதற்குள் அவள் கையில் இருந்தும் கீழே இறங்கி இருக்க, அந்த குட்டி பிரஷை கையில் வைத்துக் கொண்டு வீட்டை சுற்றி வந்து கொண்டிருந்தது அந்த குட்டி பூவனம்.. பாலை காய்ச்சி டம்ளருக்கு மாற்றி கொண்டவள் மகனை தேடி வெளியே வர, பாத்ரூமில் இருந்த பைப்பை திறந்து விட்டிருந்தான் மகன்.

                  அவள் துணி துவைக்க என்று வைத்திருந்த ஒரு சிறிய வாளியில் தண்ணீர் நிரம்பி கொண்டிருக்க, அதற்குள் கைகளை விட்டு தட் தட்டென தட்டி விளையாடிக் கொண்டிருந்தான் இனியன். முகம் முழுவதும் சிரிப்பு விருந்திருக்க, குட்டியாக ஒரு வெண்டைக்காய்க்கு கைகால்கள் முளைத்தது போல தான் இருந்தான் அவன்.

                    அந்த வாளியில் இருந்த தண்ணீர் முகத்தில் தெறிக்க தெறிக்க, அவன் உற்சாகம் இன்னும் பல மடங்கு அதிகமாக, தாயை பார்த்து விட்டவன் அவள் மீதும் நீரை தன் குட்டி கைகளால் அள்ளி வீச, சிரித்துக் கொண்டே அவனை நெருங்கினாள் சிற்பிகா.

                      அவனை கையில் தூக்கியவள் அந்த வாளியிலேயே அவனை இறக்கி விட்டு, அருகில் இருந்த சோப்பை கையில் எடுக்க, சிரிப்பு மறந்து வீலென்ற சத்தத்துடன் அழுகையை தொடங்கி விட்டான் மகன். “இவ்ளோ நேரம் போட்ட ஆட்டம் என்ன.. இப்போ சோப்பை பார்த்ததும் அழுகை… குளிக்கறதுல அப்படி என்னடா குட்டி கஷ்டம் உனக்கு..” என்று அவனிடம் பேசிக் கொண்டே, அவன் கைகள், உடலில் சோப்பை தேய்த்து கொண்டே, “இனியா குட்டி… இன்னிக்கு எங்கே போறோம்.. இனியா எங்கே விளையாட போறாங்க..” என்று பேச்சு கொடுக்க, அழுகை சற்றே குறைந்தது.

                      “இனியா கூல்.. கூல் கோயி..” என்று அரைகுறையாக வார்த்தைகள் வர, தன் அழுத்தத்தால் சொல்வதை புரிய வைக்க முயன்றான் அவன்.

                      “ஹேய்.. ஸ்கூல் போறாங்களா இனியாம்மா… என்பட்டுக்குட்டி.. புது டிரஸ் போட்டுட்டு போக போறாங்க..” என்று கொஞ்சிக் கொண்டே அவனை குளிப்பாட்டி முடித்தவள், அவன் உடலை துடைத்து, அந்த குட்டி டவலை அவன் இடுப்பில் கட்டிவிட்டாள்.

                   அவனை கீழே அமர வைத்து, அந்த பால் டம்ளரை கையில் எடுக்க, அதை தன்னிடம் கொடுக்க சொல்லி அடம் பிடித்தான் மகன்.. அவனை லேசாக முறைத்தவள் அவன் அழுகைக்கு உதட்டை பிதுக்கவும் “போதுண்டா..” என்று திட்டிக் கொண்டே பால் டம்ளரை அவன் கையில் கொடுத்து விட்டாள்.

                      அந்த டம்ளரை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டவன் அதை தன் வாயில் சரித்துக் கொள்ள, பாதிப்பால் அவன் வாய்க்குள் செல்ல, மீதிப்பால் அவன் கழுத்து வழியாக கீழிறங்கி அவன் குட்டி தொப்பையை நனைத்து, அவன் இடுப்பில் கட்டி இருந்த டவலை அடைந்தது.

                       சிற்பிகா சமையல் அறைக்குள் சென்று விட்டிருக்க, பாலை குடித்து முடித்தவன் தன் மீது வழிந்த பாலை பார்த்து, சத்தமாக “மா….” என்று கத்திக் க்கொண்டே அழ தொடங்க, இந்த முறை அலட்டிக் கொள்ளாமல் சமையல் அரை வாயிலில் வந்து நின்றாள் அவள்.

                    கையை கட்டிக் கொண்டு அந்த வாயிலின் ஒருபக்கம் சாய்ந்து கொண்டவள் இனியனின் முகம் பார்க்க “மா.. சாச்சி.. சாச்சி போச்.. ” என்று அவன் வயிற்றை காட்டி அழுதான் மகன். தாய் அசையாமல் நின்றதில் அழுது கொண்டே எழுந்தவன் கையிலிருந்த டம்ளரை தூக்கி அடித்து விட்டு, நடக்க முற்பட, இடுப்பில் இருந்த டவல் கீழே விழுந்தது.

                      வெண்ணை திருடிய கண்ணன் சாட்சியுடன் நிற்பதை போல, வயிறு, கழுத்து என்று பால் வடிய, மகன் நிற்க, நியாயமாக கோபம் வரவேண்டும் அவளுக்கு. ஆனால் மகனின் சேட்டைகள் வேறு ஒருவனை நினைவுபடுத்த, முகத்தில் அமைதியாக ஒரு புன்னகை மட்டுமே.

                  பெண்ணவள் பிரபஞ்சம் மறந்து, பேரன்பை தேட, மகன் வழக்கம் போல் அவள் சேலை கொசுவத்தை இழுத்துக் கொண்டிருந்தான். இதுவும் அவன் செயல் தான்.. அவளை சேலையில் கண்ட நொடிக்கெல்லாம், அவனின் விரல்கள் இதோ இதே போலத்தான் அவள் கொசுவத்தை அளந்து கொண்டிருக்கும். அதன் வடிவை ஒழுங்கு படுத்துபவன் அவள் இடுப்பு சேலையை சரி செய்வது போல், அவள் இடுப்பையும் வருடி, மீட்டி சில ராகங்களை படைத்துவிட்டே விலகுவான்.

                      அவள் தெரிந்தே தொலைத்து விட்டவனை குறித்த தேடலில் இறங்கிவிட, மகனின் பொறுமை பறந்து போயிருந்தது.. தாயின் கால் இடுக்கில் முகத்தை தேய்த்து கொண்டிருந்தவன் தன் குட்டி கைகளால் அவளை அடித்து அவள் கவனத்தை தன்னிடம் திருப்பினான்.

                  சிற்பிகா அவனை குனிந்து பார்த்தவள் அவன் உயரத்திற்கு மண்டியிட்டு, ஒரு காலில் அமர, தன் மீது இருந்த பால் மொத்தத்தையும் அவளது சேலையில் துடைத்து இருந்தவன் மீண்டும் தன் உடலை அவளிடம் காட்டி நின்றான்.

                  அவன் உடலை தாய் துடைத்து விடும் வரை அவளை அடுத்த வேலை பார்க்க விட மாட்டான் மகன். இந்த இரண்டரை வயதில் அவனின் சில செயல்கள் எல்லாம் எப்போதும் அதிசயம் தான் அவளுக்கு.. ஆனால் யாரின் மகன் என்று கேட்டுக் கொண்டு அமைதியாகி விடுவாள்.

                   இப்போதும் அப்படியே.. அவன் எத்தனை ஆட்டம் போட்டாலும், உடலிலோ, துணியிலோ எதுவும் ஒட்டிக் கொள்ள கூடாது.. மற்ற பிள்ளைகளை போல மண்ணில் கையை வைத்து விளையாடுவதும் கூட நடக்காது.. அவள் வீட்டின் வெளியே இருக்கும் செடிகளை தொட்டு பார்ப்பதும், அந்த செடிகளில் வந்து அமரும் பட்டு பூச்சியை விரட்டிக் கொண்டே அந்த வீட்டை சுற்றி ஓடி வருவதும் தான் அவனின் மிகப்பெரிய பொழுபோக்கு.

                   அந்த வீட்டின் டிரைவர் முதல் தோட்டக்காரன், காவல் காரன் என்று அத்தனை பெரும் அவனது விசிறியாக இருக்க, அவனை பற்றிய கவலை தேவை இல்லை.

                 முன்னால் நின்ற மகனை மீண்டும் தூக்கி சென்று குளிக்க வைத்து, தூக்கி வந்து உடையை மாற்றியவள் தயார் செய்திருந்த குட்டி குட்டி பூரியை பிய்த்து அவன் வாயில் ஊட்ட, அதையும் கையில் கேட்டான் மகன்.

                “அம்மாக்கு டைம் ஆச்சு இனியா… அடிப்பேன்… சாப்பிடு..” என்று சிற்பிகா அதட்ட, அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவன் அவள் கழுத்தை கட்டிக் கொண்டு “மா.. இனியா… கிச்.. கிச் பண்றேன்..” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு செல்லம் கொஞ்ச

                  “அப்படியே அப்பாவை போல..” என்று சீராட்டிக் கொண்டவள் “நீ என்ன செஞ்சாலும் உன்கிட்ட கொடுக்கமாட்டேன்.. சாப்பிடு..” என்று அவன் வாயில் திணிக்க, அடுத்த சில நிமிடங்களில் உணவு தீர்ந்து போயிருக்க, தானும் உடையை மாற்றிக் கொண்டு கிளம்பியவள் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

                தன் வீட்டிற்கு முன்னால் இருந்த அந்த பெரிய வீட்டிற்குள் நுழைந்தவள் அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்த பெரியவரிடம் சென்று நிற்க, “வாம்மா.. வேலைக்கு கிளம்பிட்டியா..” என்று பாசமாக விசாரித்தார் அவர்.

                 “கிளம்பிட்டேன் ஐயா.. உங்ககிட்ட சொல்லிட்டு போகத்தான் வந்தேன்..” என்றவன் தன் கையில் இருந்த டிபன் பாக்ஸை அவரிடம் நீட்ட, சந்தோஷமாக கையில் வாங்கி கொண்டார். அதை திறந்து பார்க்க, உள்ளே மூன்று சப்பாத்திகளும், சிறிது சன்னாவும் இருக்க, அந்த பெரியவருக்கு ஏக குஷி..

              பின்னே அவர் மகன் கொடுக்கும் கஞ்சியில் இருந்து இன்று விடுதலை அல்லவா.  அவருக்கு உடலில் சர்க்கரையும், கொழுப்பும் அளவுக்கு அதிகமாகவே சேர்ந்திருக்க, அதன் பொருட்டு உணவில் ஏக கட்டுப்பாடுகள். ஆனால் சிற்பிகா மட்டும் அதற்கெல்லாம் விதிவிலக்கு.

              கிட்டத்தட்ட தினமுமே எதையாவது கொண்டு வந்து கொடுப்பாள். அவள் இனியனுக்காக பார்த்து பார்த்து சமைப்பதால் ஜெகனும் பெரிதாக அவளை கட்டுப்படுத்த மாட்டான். அவளும் ரங்கராஜனின் உடல்நிலைக்கு ஏற்ற உணவுகளையே பெரும்பாலும் செய்து கொடுப்பதால் ஜெகன் பெரிதாக கண்டுகொள்ள மாட்டான் இவர்களை.

               இன்றும் அதுபோலவே அவர் மகிழ்வுடன் வாங்கி கொள்ள, மாடியிலிருந்து மகன் இறங்கி வந்தான். வந்தவன் “இன்னிக்கு என்ன கொண்டு வந்த.. உங்க ஐயாக்கு.” என்று நக்கலாக வினவி, இனியனை நோக்கி கையை நீட்ட, சட்டென அவனிடம் தாவினான் இனியன்.

               சிற்பிகா “ரெண்டே ரெண்டு சப்பாத்தி கொண்டு வந்தேன்.. அதுக்குள்ள உங்களுக்கு  மூக்கு வேர்த்துடுச்சா..” என்று அவனை முறைக்க,

                    சட்டென்று மூண்ட சிரிப்புடன் “அப்பாவை கவனிக்கிறவ, மகனையும் கவனிச்சா நான் ஏன் வாயை திறக்க போறேன்.. அது என்ன ஓர வஞ்சனை.. அவருக்கு மட்டும் கொண்டு வர்ற..” என்று அவன் கேட்க

                  “உனக்கும் சேர்த்து நான் கொண்டு வந்தா, சந்திராம்மா சமைக்கிறத என்ன செய்ய…” என்று மாறாத சிரிப்புடன் கேட்டவள் “நேரமாகிடுச்சு ஜெகா.. பாப்பாவை கொடு..” என்று அவனிடம் இருந்த தன் மகனை வாங்கி கொண்டாள்.

                      அவர்களிடம் விடைபெற்று வெளியில் வந்தவள் தன் ஸ்கூட்டியின் முன் பக்கம் மகனை நிறுத்திக் கொண்டு வேகமாக புறப்பட்டாள். செல்லும் அவளையே விழியெடுக்காமல் பார்த்து நின்றான் ஜெகா.

                     அத்தனை வசதி வாய்ப்புகள் நண்பனிடம் இருக்க, இவள் ஒரு ஹோட்டலில் சமையல் வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்ற நினைவே கசந்தது அவனுக்கு. ஆனால் அப்படி ஒரு வேலையை அவளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவனும் அவன்தான் என்பது தான் விந்தையே…

                  அன்றைய சூழ்நிலையில் அவளை பிடித்து வைக்கும் வழி தெரியாமல், கையில் கிடைத்த காரணத்தை கூறி, பாதி உண்மையும், பாதி பொய்யுமாக உரைத்து அவளை சமாளித்து இங்கே அழைத்து வந்திருந்தான்.. மீண்டும் தனியாக கிளம்பியவளை அனுப்பி வைக்க மனமில்லாமல், அவனே இந்த வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான்.

                  என்ன சொன்னாலும் தன்னிடம் வேலைக்கு வரமாட்டேன் என்று நிற்பவளை அவனும் என்னதான் செய்வான். அவள் படிப்புக்கு ஏற்ற வேலை தேட வேண்டுமானால் எந்த சான்றிதழும் இல்லை அவளிடம்.. என்றோ ஒருநாள் நண்பன் வருவான் என்ற நம்பிக்கையை மட்டுமே வைத்து அவளை இங்கே தக்க வைத்து இருந்தான் அவன்.

                  யோசனைகளோடே வெளியில் வந்தவன் தன் எஸ்டேட்டை தாண்டி, நந்தவனத்தை அடைய, ஒரு கணம் மனம் நின்று மீண்டும் துடித்தது… இந்த நந்தவனத்தின் நாயகன் இங்கே வந்து இறங்கும் நாள் என்று வருமோ??? இல்லை இந்த நந்தவனத்தின் ரகசியம் எப்போது சிபிக்கு தெரியுமோ, அன்றே தனக்கு முடிவு கட்டி விடுவாள் என்று சற்றே அச்சத்துடன் நினைத்துக் கொண்டான் ஜெகா…

                

.

..

                     

               

Advertisement