அத்தியாயம் 08

துளைக்கும் பார்வையோடு தங்களை நெருங்கி கொண்டிருந்த அண்ணனைக் கண்டு சர்வமும் நடுங்கிப்போன ப்ரபாவதி, தன்னியல்பாக ரஞ்சித்தின் பிடியிலிருந்து விலக முயல, அவனின் பிடியோ உடும்பென மாறியிருந்தது.

“அண்ணன் பக்கத்துல வந்துட்டாங்க, ப்ளீஸ்ஸ்… விடுங்கத்தான்…” பதறிப்போனவளாய் அவன் முகம் பார்த்து கெஞ்சினாள் ப்ரபா.

“உங்களை எப்படி விட்டு கொடுக்க முடியும் அத்தான்னு, இப்போ தான டயலாக் விட்ட பேபி. ஆனா அண்ணனைக் கண்டதும் சொன்னதை மறந்துட்டு, இப்பவே என்னை விட்டுட்டு போறதில குறியா இருக்கியே ம்மா…”

நேரம் காலம் தெரியாமல் கிண்டலடித்தாலும், பெண்ணவளின் தவிப்பு அவனையும் ஏதோ செய்ய, லேசாக தன் பிடியைத் தளர்த்தினான்.

அதற்குள்ளாகவே அவர்களை சமீபித்திருந்தான் சத்யா. தன்னைக் கண்டதும் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்த தங்கையை உறுத்து விழித்தபடியே, அவளின் கையைப் பிடித்து தன்னருகே இழுத்து,

“இங்க என்ன பண்ணுற ப்ரபா?” அடிக்குரலில் உறுமியவன், வார்த்தைகளை பற்களுக்கிடையே கடித்து துப்பினான்.

அண்ணனவன் கேள்விக்கு அவளால் என்ன பதில் சொல்லிவிட முடியும்? உடன்பிறந்தவனின் கோபமுகத்தை ஏறிட்டு பார்க்க முடியாதவளாக நிலம் பார்த்தாள் அந்த பேதை. கண்களோ கார்கால மேகமாக மாறி கண்ணீரை பொழிய ஆரம்பித்தன.

“அழுறத நிறுத்திட்டு முதல்ல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ப்ரபா. இங்க எதுக்காக வந்த?” தங்கையின் தோளைப் பற்றி லேசாக உலுக்கி, அதட்டியபடி மீண்டும் கேட்டான் சத்யா.

“அதான் மச்சான் கேக்கிறார்ல, அத்தானைத் தான் பாக்கவந்தேன்னு தைரியமாச் சொல்லேன் பேபி.” எரிகிற நெருப்பில் எண்ணெய்யைத் திவ்யமாக ஊற்றினான் ரஞ்சித்.

தங்கைக்கு பதில் சொல்ல எடுத்துக்கொடுத்தபடி சவாலாக தன்னைப் பார்த்துக்கொண்டு நின்ற ரஞ்சித்தை தீப்பார்வை பார்த்த சத்யா, எதுவுமே சொல்லாமல் உடன்பிறந்தவளின் கையைப் பற்றியபடி திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

சட்டென்று ப்ரபாவின் கையை எட்டிப் பிடித்த ரஞ்சித், “நான்தானே உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். அப்போ, நானே உன்னை கொண்டு விடுறது தான நியாயம் ப்ரபா?” சடுதியில் நியாயவானாக மாறிப்போனவன், தன்னை நோக்கி ப்ரபாவை இழுத்தான்.

அவ்வளவு தான்… தங்கையை பிடித்திழுத்த ரஞ்சித்தின் கையை மின்னல் வேகத்தில் தட்டிவிட்ட சத்யா, அதே வேகத்தில் அவனின் சட்டையை கொத்தாக பற்ற முயன்றான்.

 அவனிடமிருந்து லாவகமாக விலகிய ரஞ்சித், சட்டையை நீவிவிட்டபடியே, “எது செய்யிறதா இருந்தாலும் சொல்லிட்டு செய்யமாட்டியா மச்சான்? எப்பப் பாரு அரைகுறையா எதையாவது செஞ்சு வச்சிட்டு…” கிண்டலாகச் சொன்னாலும் முகத்தில் கடுமை பரவி நின்றது.

அடக்கப்பட்ட கோபத்தோடு எதிரெதிரே சிங்கமென சிலிர்த்துக் கொண்டு நின்ற இருவரையும் பார்த்து கதிகலங்கிப் போய் நின்றாள் ப்ரபா.

ஒருவன் உடன்பிறந்தவன், இன்னொருவனோ உயிராக நேசிப்பவன். யாருக்காக பேசுவது? தெரியவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையும் பழக்கமில்லை.

பதைபதைத்து போய் ‘இருவருக்குமிடையே பெரிதாக கைகலப்பு எதுவும் வந்துவிடுமோ?’ என்று சிந்தைகலங்கி நின்றாள் அந்த சிறுபெண்.

“தோ… கொஞ்சம் தள்ளி அண்ணன் பைக் நிக்குது, அது பக்கத்தில் போய் நில்லு ப்ரபா.” தங்கையிடம் கட்டளை போலச் சொல்லிய சத்யா, தன் சுட்டுவிரலை அத்தை மகனின் முகத்துக்கு நேராக நீட்டியபடி,

“ரஞ்சித்… எதையும் மனசுல வச்சிட்டு என்தங்கச்சி வாழ்க்கையில நீ ஏதாவது கேம் ப்ளே பண்ண நினச்ச… அப்புறம் நான் மனுஷனா இருக்கமாட்டேன்…”

சீறிவரும் கடலலைக்கு நிகராக உறுமியவனின் விரலை அசால்டாக வளைத்துப் பிடித்த ரஞ்சித், “பார்றா… மச்சானுக்கு எம்பேரெல்லாம் கூட இன்னும் நியாபகம் இருக்கே…” மெல்லிய சிரிப்போடு நையாண்டி செய்தான்.

அவனின் செய்கையில் எரிச்சலுற்ற சத்யா, கையை உதறி தன்விரலுக்கு விடுதலை கொடுத்துக் கொண்டு, தங்களையேத் திரும்பித் திரும்பி பார்த்தபடி, தளர்ந்து போய் நடந்து கொண்டிருந்த தங்கையை இரண்டே எட்டில் அடைந்து, அவள் கைப்பற்றி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

“ஹேய்… மச்சான், எதுக்கு இவ்வளவு வெரைப்பா போற? கூல் யா… சீக்கிரம் உன்தங்கச்சியை பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வரேன். அங்க வச்சி நாம மறுபடியும் சந்திக்கலாம்.”

ரஞ்சித் திருவேங்கடத்தின் வார்த்தைகள் சிரிப்போடு கலந்து வந்து அவர்கள் முதுகில் மோதியது. ஆனால் சத்யாவுக்குத் தான் எதுவும் ரசிக்கவில்லை.

கல்லூரியில் தன்னோடு படித்த நண்பனின் திருமணம் மாமல்லபுரத்தில் நடக்கவே, கடையை திறந்து தந்தைவசம் ஒப்படைத்து விட்டு, ஒரு பதினோரு மணிக்குப் பிறகே தன்னுடைய இருசக்கர வாகனத்தில் கிளம்பி வந்திருந்தான் சத்யா.

கிழக்கு கடற்கரை சாலையில், பைக்கில் தன்னந்தனியாக ஒரு நீண்ட பயணம். ரசனையோடு பிரயாணித்தான்.

ஓரளவிற்கு கல்லூரிக்கால நண்பர்கள் திருமணத்திற்கு வந்திருக்க, அவர்களோடு கல்லூரி காலநினைவுகளில் திளைத்திருந்துவிட்டு மாலை ஆனதும் கிளம்பியவன், இவ்வளவு தூரம் வந்தும் கடலில் கால் நனைக்காமல் திரும்பிப்போக மனமில்லாமல், கடற்கரைக்கு வந்திருந்தான்.

 ஆர்ப்பரித்தபடி கரையை நோக்கி ஓடிவரும் அலைகளை, வண்டியிலிருந்தே ரசனையோடு பார்த்திருந்தவனுக்கு, கடற்கரையோரம் நின்றிருந்த ஜோடியில், அந்த பெண் தங்கையைப் போலிருக்க, யோசனையோடு தான் முன்னேறி வந்திருந்தான்.

ஆனால் அது தங்கை தான் எனத்தெரியவும், அவள் கூடவே அத்தைமகன் ரஞ்சித்தையும் காணவுமே, அவனின் உலகம் தட்டாமாலையாக சுற்றிற்று.

‘எதுக்காக இங்க வந்த ப்ரபான்னு கேட்டா… எம்முன்னாடியே, அத்தானை பாக்க வந்தேன் சொல்லுன்னு எவ்வளவு தைரியமா சொல்லிக் குடுக்கிறான். ராஸ்கல்…’ உள்ளுக்குள் ஆழிப்பேரலையாய் கோபம் கொந்தளிக்க, சத்யாவின் கைகளில் பைக் வீட்டை நோக்கி பறந்தது.

 வண்டியில், தன்பின்னே அமர்ந்திருந்த தங்கையிடம், வழிநெடுகிலும் மௌனமொழியை மட்டுமே கைக்கொண்டவனாக, வண்டியை விரட்டிக் கொண்டிருந்தான் அந்த அண்ணன்.

தன் நீண்ட பயணத்தை முடித்துக்கொண்ட அந்த வாகனம், அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் போது நேரம் கிட்டத்தட்ட மாலை ஏழு மணியாகியிருந்தது.

வண்டி வாசலில் நிற்கவுமே வீட்டுக்குள்ளிருந்து விரைந்து வந்த தனலட்சுமி, “இன்னைக்கு என்னடி இவ்வளவு நேரமாகிடிச்சு? பொம்பளப்பிள்ள வெளியப் போனா, இருட்டுறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து சேரணும்ங்கிற அறிவு கிடையாதா உனக்கு?”

மகளை முதலில் அதட்டியவர், “உள்ள வந்து ஒரு கப் காஃபி குடிச்சிட்டு போடா” என்று மகனிடம் சொன்னார்.

 அவனோ, “கடையை அடைச்சிட்டு வரேன் ம்மா” என்று சொல்லி, தங்கையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீட்டுக்குள் வராமல் அப்படியே திரும்பி சென்றுவிட்டான்.

அண்ணனின் பார்வையில் மனதிற்குள் கிலி பரவ, முகம் வெளுத்துப் போய் நின்றவளிடம், “என்னாச்சு? தலையை எதுவும் வலிக்குதா? போ… போய்… குளிச்சிட்டு வா, சூடா காஃபி தரேன்.”

‘சற்று முன் அதட்டியது இவர் தானா?’ என்று எண்ணுமளவிற்கு தனலட்சுமியின் பேச்சிருக்க, கண்கள் துளிர்த்தது ப்ரபாவிற்கு.

‘இன்னும் இப்படியே நின்றிருந்தால் தன்னைத்தானே காட்டிக் கொடுத்துவிடக்கூடும்’ என்று நினைத்தவள், அவசரமாக தனதறைக்குள் நுழைந்து கொண்டாள்.

இரவு வழக்கமான நேரத்திற்கு வந்த அந்த வீட்டின் ஆண்கள் மூவரும், குளித்து முடித்து சாப்பாட்டு மேஜை முன் அமர, தட்டு வைத்து அவர்களுக்கு பரிமாறிய தனம்,

“வந்து குளிச்சிட்டு படுத்தவ தான்… அப்புறம் காஃபி குடிக்கக் கூட வெளிய வராமத் தூக்கம் தான் நடக்குது.” முணுமுணுத்துக் கொண்டே, மகளின் அறை வாசலில் நின்று கொண்டு, “ப்ரபா… ஏய் ப்ரபா… எழும்பி சாப்பிட வா” என்று சத்தம் கொடுத்தார்.

“என்ன்ன? இன்னமும் ப்ரபாவதி தேவியார் இரவு போஜனம் உட்கொள்ளவில்லையா! அப்படியானால் இன்று சென்னையில் சூரியன் மேற்கே உதித்து, கிழக்கே மறைந்து விட்டதா என்ன?” கேலியாக புருவங்களை உச்சி மேட்டுக்கே உயர்த்தினான் முரளி.

உண்மையில் குளித்துவிட்டு படுத்தது தான் தெரியும் ப்ரபாவிற்கு. எப்படி? எதனால்? என்று தெரியவில்லை, ஆழ்ந்த உறக்கத்திற்கு தான் சென்றிருந்தது பெண்.

தகப்பனும் அண்ணன்மார்களும் வீட்டுக்குள் நுழையும் போது தான், தூக்கம் கலைந்து விழித்தாள். மறுநொடியே தான் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை ஓடிவந்து அவள் சிந்தனையில் அமர்ந்து கொள்ள, பயம் அழையா விருந்தாளியாக வந்து அவளை அசைத்துப் பார்த்தது.

அன்னையின் அழைப்பைத் தொடர்ந்து எழுந்தவள், ‘என்றைக்காக இருந்தாலும், இப்படி ஒரு சூழ்நிலையைத் தான் சந்தித்து தானே ஆக வேண்டும்’ என்ற எண்ணத்தில், மனதிற்கு தைரியத்தை கொடுத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியே வந்தாள்.

ஆனால், அறையை விட்டு வெளியே வரவுமே, அவள் கொண்டிருந்த தைரியம் நாலுகால் பாய்சலில் அவளை விட்டு தெறித்து ஓட, நொந்து போய் சவலைப் பிள்ளையாய் சாப்பாட்டு மேஜை முன் அமர்ந்தாள்.

 தன் எதிரே அமர்ந்து உண்டு கொண்டிருந்த சத்யாவின் குற்றம் சாட்டும் பார்வையை சந்திக்க முடியாமல், அன்னை பரிமாறிய உணவை அளைந்தன அவள் விரல்கள்.

“ஏன் ப்ரபா? மத்தியானம் கட்டுனதே மூனு நாளைக்கு போதுமோ?” அவளின் செயலைக் கண்டு முரளி கிண்டலாகக் கேட்டான்.

 சத்யாவோ, “சாப்பாடை வேஸ்ட் பண்ணாம சாப்பிடு ப்ரபா” என்று அதட்டினான்.

அந்த அதட்டல் வேலை செய்ய, கடகடவென்று உண்டு முடித்தவள், தாய்க்கு உதவியாக சமையலறையில் சில பாத்திரங்களை கழுவி கொடுத்து விட்டு தனதறைக்குள் நுழைந்து கொள்ள முயல,

எப்போதும் போல், சாப்பிட்டு முடித்து முன்ஹாலில் தன் தம்பியோடும், அப்பாவோடும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த சத்யா, “இங்க வா ப்ரபா” என்றழைத்தான்.

நடுநடுங்கிப் போனவள், கீ கொடுத்த பொம்மையாய் போய் நின்றாள். இதயம் தாளம் தப்பித் துடிக்க ஆரம்பித்தது.

“உக்காரு.” நாற்காலியைக் காட்ட, உட்கார்ந்தாள்.

வழக்கமில்லாத வழக்கமாக, மூத்த மகனின் செயல்களில் ஒரு கோபம் இருக்க, தனலட்சுமியும் யோசனையோடு மகளின் அருகே வந்து நின்றார்.

“ம்மா… உங்க பொண்ணு இன்னைக்கு எங்கப் போனா தெரியுமா?” தாயிடமிருந்து ஆரம்பித்தான் சத்யா.

“ஹ்ம்ம்… மாமல்லபுரத்துக்கு பக்கத்துல ஏதோ ஒரு ஊர் பெயர் சொன்னாளே… என்னாச்சுப்பா?”

“இல்ல… நான் அவளை மாமல்லபுரம் கடற்கரையிலப் பாத்தேன். அதான்…”

“ஓஹ்… போன வேலை முடிஞ்சதும், அவ கூட சுத்தும் வானரக் கூட்டம் எல்லாம் சேர்ந்து போயிருக்கும் பா.”

‘சொல்லிச் சென்ற இடத்தை தவிர, வேறு இடத்துக்கும் மகள் சென்றது தான் மகனின் கோபத்துக்கு காரணம்’ என்று எண்ணிய தனம், அவனை சமாதானப்படுத்தும் வகையில் பதில் சொன்னார்.

“இல்லையே… அவங்க யாரும் அங்க இல்லையே… வேற ஒரு ஆளுல்ல அவகூட நின்னது.”

“அது யாருடா?”

“உங்க நாத்தனார் மகன் ரஞ்சித்!”

“ஹாங்… நீ என்ன சொல்லுற சத்யா?”

இந்த வெடிகுண்டை தனம் மட்டுமல்ல, அங்கிருந்த யாருமே, ஏன்? தங்கள் அறை வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரேவதி கூட எதிர்பார்க்கவில்லை என்பது, அதிர்ந்து போன அனைவருடைய முகத்திலிருந்தே தெரிந்தது.

“நீ… நீ… சொல்லுறது உண்மையா சத்யா?”

தன் கேள்வியில் இருக்கும் அபத்தம் புரியாமல் மகனிடமே “உண்மையா?” என்று தனம் கேட்க, “ஆமாம்…” என்று தலையசைத்தான் சத்யா.

அவ்வளவு தான்… வானமே இடிந்து தன் தலையில் வந்து விழுந்தது போல நிலைகுலைந்து போன தனலட்சுமி, கோபம் கண்களை மறைக்க, பளாரென்று மகளை கன்னத்தில் அறைந்திருந்தார்.

அடுத்த கணமே தாவிவந்து தங்கையை அணைத்துக் கொண்ட முரளி, தாய் தன் முந்தானைக்குள் குழந்தையை பொதிந்து வைத்துக்கொள்வது போல தனக்குள் தங்கையைப் பொதிந்து கொண்டான்.

“விடுடா… நீ விடுடா… என்ன காரியம் செய்துட்டு, பூனை மாதிரி வந்து உக்காந்திருக்கா? நீ தள்ளிப் போ, அவளை என்ன பண்ணுறேன் பாரு…”

காளி சொரூபமாக மாறி நின்ற தனலட்சுமி, மகனின் கைகளுக்குள் இருந்து மகளை விலக்க முயற்சிக்க, முடியாமல் போகவே முரளிக்கும் சேர்த்தே அடிவைத்தார்.

தாங்கிக் கொண்டவன், “ம்மா… என்ன விஷயம்ன்னு அவகிட்ட கேக்கமாம இஷ்டத்துக்கு நீங்க அடிச்சா… சின்னபொண்ணு ம்மா… உங்க கோபத்தை தாங்கமாட்டாம்மா…” லேசான தழுதழுப்போடு வந்தது முரளியிடமிருந்து வார்த்தைகள்.

“என்னோட கோபத்தையே உன் தங்கச்சியால தாங்க முடியாதுன்னு சொல்லுறியே, அந்த வீட்ல இருக்குற ஆளுங்களோட அலட்சியத்தை மட்டும் தாங்கிடுவாளாம்மா?”

“ப்ச்ச்… நடந்ததையே திரும்ப திரும்ப சொல்லிட்டு…”

அன்னையின் வார்த்தையில் லேசாக சலித்துக்கொண்டவன், “நீ சொல்லுடா, எதுக்காக ரஞ்சித் கூட அங்க போன?” மயிலிறகால் தடவியது போல தங்கையிடம் இதமான வார்த்தைகளால் கேட்டான் முரளி.

ஆனால் அழுகையே பதிலாக வந்தது ப்ரபாவிடமிருந்து.

“ச்சு… அழாமச் சொல்லு… எங்களுக்கும் என்ன நடந்ததுன்னு தெரியணும்ல.”

அண்ணனின் வார்த்தைகள் தந்த ஆதரவில், “நானும் அத்தானும் விரும்புறோம். அதை அவங்க வீட்ல அத்தான் சொல்லிட்டாங்களாம்… அதான்…” அழுகையோடேச் சொல்லியவள், மீதியைச் சொல்லமுடியாமல் கேவினாள்.

“ம்ம்… அதான்…”

மேலே சொல்லு என்பது போல முரளி எடுத்துக் கொடுத்தான்.

“நம்ம வீட்லயும் சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்கத்தான், அத்தான் என்னை அங்க கூட்டிட்டு போனாங்க.” சிறுபிள்ளையாய் தேம்பியபடி சொல்லி முடித்தாள்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன? ப்ரபாவை ரஞ்சித்தோடு ஒன்றாகப் பார்த்ததாக சத்யா சொல்லிய போதே, இப்படி ஒரு விஷயம் தான் வருமென்று ஊகித்திருந்தாலும், தங்கள் வீட்டு பெண் மூலமாக அதைக் கேட்கும் போது, ஒருவராலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

“அத்தானாம்… அத்தான்… யாருடி உனக்கு அத்தான்?” மறுபடியும் தனம் ஆரம்பிக்க,

“நம்ம வீட்டுக்கு ஒரு ‘சௌந்தர்யா’ போதும் ப்ரபா!” ஆயிரம் அர்த்தங்கள் அடங்கிய வார்த்தைகளை அமைதியாக உதிர்த்தார் சண்முகம்.

தங்கள் வீட்டு பெண்ணரசியின் வார்த்தையில் பேதலித்துப்போய் இருந்தவர்களுக்கு, அந்த குடும்பத் தலைவனின் வார்த்தைகள், நெஞ்சில் சொல்லொண்ணா வலியை உண்டாக்கியது. ‘எத்தனை காயப்பட்டு போயிருந்தால், இந்த ஜீவன், இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லும்?’

அலைகள் இல்லாத கடல் போல் அமைதியாகிப் போனது வீடு. ஆனால் அமைதியாக இருக்கவில்லை சண்முகம்.

“என்தங்கச்சிக்கு வாழ்க்கையில வசதி வாய்ப்புகளுக்கு ஒரு கொறயில்லை. ஆனா நிம்மதி? அவ நிம்மதியா இருக்காளான்னு எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியலையே ம்மா?” லேசாக தொண்டையைச் செருமிக்கொண்டவர்,

“என் தங்கச்சி வாழ்க்கையில செய்த தப்பை, நான், உன் வாழ்க்கையில செய்யக்கூடாதுன்னு நெனைக்கிறேன். புரிஞ்சிக்கோ ம்மா.” கரகரத்தக் குரலில் மகளிடம் சொல்லியவாறே அங்கிருந்து எழுந்து சென்று விட்டார் சண்முகம்.

“உன்னை அடிச்சது நம்ம அம்மா தான். ஆனா அதைக் கூட தாங்க முடியாம தவிச்சுப் போனான் முரளி. உங்கல்யாணம் நீ சொல்லுற மாதிரி நடந்தா, வருங்காலத்தில அண்ணன்களா உங்கிட்ட சுதந்திரமா எங்களால நெருங்க முடியுமா?”

“இந்த கல்யாணத்தை நீ செய்தா, ஒருவேளை இந்த அண்ணன்களோட பாசம், உனக்கு இல்லாமக் கூட போகலாம். நல்லா யோசிச்சிக்கோ ப்ரபா.”

தம்பியின் தலையை லேசாக கலைத்துவிட்டு, தங்கையின் தலையை தடவியபடியே சத்யாவும் சென்றுவிட்டான்.

“என்னடா? முடியாது… இந்த கல்யாணம் நடக்காதுன்னு, அவகிட்ட உறுதியா சொல்லுறதை விட்டுட்டு, ஆளாளுக்கு புரிஞ்சுக்கோ, யோசிச்சிக்கோன்னு சொல்லுறீங்க. எது நல்லது, எது கெட்டதுன்னு முடிவெடுக்குற அளவுக்கு அவ பெரிய ஆளா ஆகிட்டாளோ?”

“ம்மா… அவரவர் வாழ்க்கை அவரவர் கையில. நாம நல்லது கெட்டது சொல்லித்தான் கொடுக்க முடியும். முடிவெடுக்க வேண்டியது வாழவேண்டியவங்க தான்.”

ஆற்றமாட்டாமல் தன்னிடம் புலம்பிய அன்னையிடம் சமாதானமாகச் சொல்லிய முரளி, “நீ உன் ரூமுக்கு போய் அமைதியா இருந்து யோசிச்சு பாருடா… இந்த கல்யாணம் சரியா வருமான்னு உனக்கேப் புரியும். போ…” தங்கையை அனுப்பி வைத்தான்.

அறைக்குள் வந்து அமைதியாக கட்டிலில் படுத்த ப்ரபாவின் மூளைக்குள், ஆயிரம் கேள்விகள் சிறு நண்டுகளாக ஊர்ந்தது.

அதிலும் சத்யாவின் வார்த்தை அவளுக்குள் ஒரு பயத்தையே உண்டாக்கியிருந்தது.

‘நான் அத்தானை கல்யாணம் செய்து கொண்டால், என் அண்ணன்களோடு ஒரு நல்லுறவு எனக்கு இல்லாமல் போய்விடுமோ?’ அப்படி யோசிக்க கூட பிடிக்கவில்லை அவளுக்கு.

ஆனால் அத்தைக்காக, அவமானத்தைக் கூட தாங்கிக்கொண்டு ஒரு அடிமை போல அவர் வீட்டுக்கு சென்று வரும் அப்பா நினைவுக்கு வந்தார்.

 ‘எங்கள் திருமணத்திற்கு பிறகு அத்தானும், அவருடைய அப்பாவைப் போலவே என் அண்ணன்மார்களிடம் நடந்து கொண்டால், நான் என்ன செய்வேன்?’

ஒன்றன்பின் ஒன்றாக எழுந்த கேள்விகளில் சோர்ந்து போனவளாக புரண்டு படுத்தவளின் கைகள், அருகில் கிடந்த கைபேசியில் பட, எடுத்துப் பார்த்தாள்.

ரஞ்சித்திடமிருந்து சில மிஸ்டு கால்களும், பல மெசேஜ்களும் வந்து விழுந்து கிடந்தது. மெசேஜை ஓப்பன் செய்து பார்த்தாள்.

“உங்கண்ணன் நம்ம விஷயத்தை வீட்ல சொல்லிட்டானா?” என்று முதல் மெசேஜ் வந்திருந்தது. அதைத் தொடர்ந்து,

“என்னாச்சு?”

“ஏதாவது பிரச்சினையா?”

“பதில் சொல்லு பேபி” என்று மெசேஜ்கள் வந்து குவிந்திருந்தது.

எதற்கும் பதில் சொல்ல முடியாமல், கடிகாரத்தின் பெண்டுலமாக அங்குமிங்கும் தவிப்போடு அல்லாடத் தொடங்கியது ப்ரபாவதியின் மனது…