அத்தியாயம் 05

“நேற்று மாமா அசத்திட்டாங்கல்ல ம்மா. அதுலயும் அந்த பட்டு சாரியோடக் கலர் எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது தெரியுமா?”

முகம் பூரிப்பில் மின்ன கற்பகம் சில்க்ஸ் உரிமையாளரின் மகள் மயூரா, தன் தாய்மாமன் கொண்டு வந்திருந்த சாதாரணப் பட்டை சிலாகித்து அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

இன்னும் ஒரு மூன்று நாட்கள் ஓய்வெடுத்துவிட்டே பள்ளிக்குப் போகலாம் என்று சௌந்தர்யா மகளிடம் சொல்லியிருந்ததால், வீட்டில் இருந்தாள் பெண்.

“அதுலயும் சத்யா த்தான் சர்ட் பாக்கட்லயிருந்து செயினை எடுத்து மாமா கைல குடுக்கும் போது, நம்ம பாட்டி முகத்தைப் பாக்கணுமே… ஹஹ… சுருங்கிப் போன பூசணிக்கா மாதிரி பாக்கவே பரிதாபமா இருந்தது.”

தன் குரலை சற்றே தாழ்த்தி கிட்டத்தட்ட கிசுகிசுப்பான குரலில் சொன்னாள் மதுரா.

பெண்கள் மூவரும் மதிய உணவை முடித்துக் கொண்டு ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள். கற்பகம் அம்மா சாப்பிட்டு முடித்து தனதறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டார்.

அப்பாவும் மகனும் பிஸினஸ் மீட் என்று சொல்லி மதியம் சாப்பிட வீட்டுக்கு வரவில்லை. சுபா பள்ளிக்குச் சென்றிருக்கிறாள்.

“ப்ச்ச்… யாரைப் பத்தியும் அவங்க இல்லாத நேரத்தில் கமெண்ட் பண்ணாத மது.” கண்டிப்பு கலந்த குரலில் சொல்லிய சௌந்தர்யா,

 தன் அண்ணன் மகன், செயினை எடுத்து தகப்பன் கையில் கொடுக்கும் போது, தனது மாமியாரோடு சேர்ந்து அண்ணன் மனைவியின் முகமும் மாறிப்போனதை பார்க்கத் தானே செய்தார்.

‘எத்தனை காலங்கள் போனாலும் அண்ணியின் மனம் மட்டும் மாறவே செய்யாதா?’ ஆயாசமாக இருந்தது அவருக்கு.

“இது எங்கத்தான் எனக்குன்னு வாங்கிக் குடுத்தது. இதுல நான் தான் படுக்கணும்.”

நேற்று கட்டிய குடிசைக்குள் சத்யா தயவால் குடிவந்திருந்த மெத்தையில் படுப்பதற்கு மதுரா தயாராக, அவளை படுக்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தாள் இளையவள்.

“எங்களுக்கும் அவர் அத்தான் தான் ம்மா, அதனால நாங்களும் படுக்கலாம்.” தங்கையை வேண்டுமென்றே சீண்டிக்கொண்டிருந்த மதுராவை,

“எதுக்கு அவகிட்ட வீணா வம்புக்கு போற மது. நீ உன் ரூம்ல போய் தூங்கு போ” என்று அனுப்பி வைத்தவர், இளைய மகளைப் பார்க்க அவளோ வாகாக கட்டிலில் படுத்துக் கொண்டு சிரித்தாள்.

“நீயும் கொஞ்ச நேரம் தூங்கி எழும்பு டா, அம்மாவும் கொஞ்சம் படுத்து எழும்பிட்டு வரேன்” சொல்லியவர், தங்கள் அறைக்குப் போகாமல், சின்ன மகளின் அறைக்குப் போனார்.

அங்கே நேற்றைய விழாவிற்காக தனது அண்ணன் வாங்கிக்கொடுத்த பட்டுப்புடவை மடிக்கப்பட்டு ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்தது.

வாஞ்சையோடு அதை தடவிக்கொடுத்து அதில் முகம் புதைத்துக் கொண்டவருக்கு, அண்ணனின் எதிர்பார்ப்பில்லாத அன்பில் கண்கள் கசிந்தது.

எப்படியும் தனக்காக தன் அண்ணன் வருவாரென்று தெரியும். ஆனால் குடும்பத்தோடு வந்து நிற்பாரென்று அவரே எதிர்பார்க்கவில்லை.

அதுவும் தனது அண்ணியும் சத்யாவும் வருவார்களென்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

சத்யா எப்படியோ? ஆனால் நடந்தது எதையும் அண்ணி மறக்கவில்லை என்பது நேற்றைய தனத்தின் பேச்சிலிருந்தே சௌந்தர்யாவுக்குப் புரிந்தது.

‘இன்று என்றில்லையே, அண்ணனோடு கல்யாணம் முடிந்து வந்த நாளிலிருந்தே என்னை அவருக்கு ஏனோ பிடிக்கவில்லை தானே?’

‘அதன்பிறகு நடந்தவைகளும், இதனால் தான் உன் தங்கை மீது நான் வெறுப்பாக இருக்கிறேனென்று அண்ணனிடம் அவர் சொல்லுவதற்கு ஏதுவாக அமைந்து விட்டதே!’

அறையிலிருந்த கட்டிலில், சோர்ந்து போய் சாய்ந்து கொண்டார் சௌந்தர்யா. இரைதேடி பறக்கும் பறவையாய், மனம் சிறுவயது நினைவுகளைத் தேடி பறந்தது…

அண்ணி… ஸ்கூல்ல நடந்த ரங்கோலி போட்டியில எனக்குத் தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கெடைச்சது.”

  ஆர்ப்பரித்தபடி தரையில் கைவேலையாக அமர்ந்திருந்த தனலட்சுமிக்கு அருகில் பொத்தென்று அமர்ந்தாள் பதினைந்து வயதான சௌந்தர்யா. கையில் முதற்பரிசுக்கான ட்ரோஃபி.

“எருமைமாடு மாதிரி மேல வந்து விழாம, கொஞ்சம் தள்ளி தான் உக்காரேன்.”

பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்த நாத்தனாரின் சந்தோஷம் எதையும் தனக்குள் ஏற்றிக் கொள்ள விரும்பாதவராக முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு சிடுசிடுத்தார், இருபத்தியொரு வயது தனலட்சுமி.

மாநிறம், களையான முகமாக இருக்கும் தனம், புன்னகை என்னும் நகையை மட்டும் மறக்காமல் அணிந்து கொண்டால் பார்ப்பதற்கே அத்தனை பாந்தமாக இருப்பார்.

ஆனால் எப்போதும் முகத்தில் முள்ளைக் கட்டிக்கொண்டு இருந்தாற் போன்ற தோற்றத்தில் இருந்ததால், அதுவும் சௌந்தர்யாவைக் கண்டதும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கடுமை வந்து ஒட்டிக்கொள்ளும் போது முகத்தின் வசீகரம் தொலைந்தே போகிறது பெண்ணுக்கு.

 அண்ணியின் கோபமுகம் கண்டு, உற்சாகம் வடிந்து போனவளாய் உட்கார்ந்திருந்த சௌந்தர்யாவை, “எங்கிட்ட காட்டு ராசாத்தி” என்ற குரல் அழைக்க,

அந்த சின்ன முன்னறையில் வயர்கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியின் அருகில் வந்து உட்கார்ந்து, அவரின் சுருங்கிப்போன கரங்களை பற்றிய சௌந்தர்யா,

 நொடியில் தன் கலங்கிய முகம் மறைத்து புன்னகையை முகத்தில் பூசிக்கொண்டு, “எழும்பி உக்காருறீங்களா பாட்டி?” என்று கேட்டாள்.

“சரி” என்று தலையசைத்தவருக்கு உதவி செய்து எழுப்பி உட்கார வைத்து, பரிசுக் கோப்பையைக் காட்ட, தன் நடுங்கும் கரங்களால் ஆர்வமாக அதைத் தடவிப்பார்த்தவர், “அப்படியே உங்கம்மாகிட்ட இருந்து இந்த திறமை உங்கிட்ட வந்துடிச்சி.”

“அவளும் இப்படித்தான்… மார்கழி மாசம் முழுசும் தெருவையே அடச்சி கோலம் போட்டு கலர் குடுப்பா பாரு… நாளெல்லாம் பாத்துட்டே இருக்கலாம்.”

“மகராசி! இன்னும் கொஞ்சம் நாள் இருந்து, இந்த பொட்டப் பிள்ளைக்கு ஒரு நல்லது செய்து பாக்காம, இவ்வளவு அவசரமா எதுக்கு போய் சேர்ந்தாளோ தெரியலை?”

அங்கலாய்த்துக் கொண்ட அந்த பெரியவர், சண்முகம், சௌந்தர்யாவின் அம்மாவழி பாட்டியின் தங்கை.

இவர்கள் இருவரின் சம்பாஷணையை கேட்டுக்கோண்டே எழும்பிச் சென்ற தனம், தன் செயல்களால், ‌’இருபத்தைந்தே வயதான சண்முகத்திற்கு தான் அவசரப்பட்டு திருமணம் செய்து வைத்து விட்டோமோ?’ என்ற எண்ணத்தை அந்த முதியவருக்கு அடிக்கடி வரவைத்தார்.

அடிப்படையில் காஞ்சிபுரம் தான் சண்முகத்துடைய சொந்த ஊர். ஆனால் அவருடைய தந்தை காலத்திலேயே அதாவது சண்முகம் சிறுவனாக இருக்கும் போதே சென்னைக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தவர் தான் சண்முகத்தின் தந்தை.

சண்முகத்தின் தந்தையோடு சேர்ந்து அவரது அண்ணன் குடும்பமும், அதாவது சண்முகத்தின் பெரியப்பா குடும்பமும் கிளம்பி வந்திருந்தார்கள்.

 காஞ்சிபுரத்தில் வீட்டில் தறி போட்டு பட்டு நெசவு செய்த குடும்பம் தான் அவர்களுடையது.

அந்த தொழிலில் பெரிய அளவில் வருமானம் இல்லாமல் போகவே, அண்ணனும் தம்பியும் பட்டணத்துக்குப் போனால் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சென்னைக்கு குடும்பத்தோடு தங்கள் ஜாகையை மாற்றியிருந்தார்கள்.

சென்னைக்கு வந்தபிறகு தான் சௌந்தர்யா அவரின் பெற்றோருக்குப் பிறந்தது. உலகத்து அழகையெல்லாம் தன்னில் அள்ளிக்கொண்டு பிறந்ததாலோ என்னவோ சௌந்தர்யா என்று ஆசையாகவே தங்கள் குழந்தைக்கு பெயர் வைத்திருந்தனர் அந்த பெற்றோர். சௌந்தர்யா வுக்கும் சண்முகத்திற்கும் பத்து வயது வித்தியாசம்.

சண்முகத்தின் பெரியப்பாவுக்கும் பாலன், அன்பரசன் என்று இரண்டு ஆண்மக்கள் உண்டு. இருவருமே சண்முகத்தை விட வயதில் பெரியவர்களே.

ஒருவழியாக சென்னையில் குடியேறியிருந்த அண்ணன், தம்பி இருவருக்கும், வீட்டு வாடகை மாதந்தோறும் ஒரு பெரிய செலவாக இருக்க, இனி இங்கேயே தான் தங்கள் பிழைப்பு என்று முடிவு செய்தவர்கள், ஊரில் கிடந்த ஒன்றிரண்டு சொத்துகள், வீடுகள் எல்லாவற்றையும் விற்று இங்கே சென்னையில் இடம் வாங்கி விட்டார்கள்.

 வேளச்சேரியில் வீட்டு மனைகள் விற்பனையாகத் தொடங்கிய நேரமது. சேர்ந்தாற்போல் ஒரு இடத்தை தெரிவு செய்து வாங்கியவர்கள், தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு அருகருகே சிறியதாக வீடும் கட்டிக்கொண்டனர்.

எதிர்பாராதவிதமாக சண்முகத்தின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர, அதுவரை நன்றாகப் போய்க்கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை ஆட்டம் காண ஆரம்பித்தது.

  சண்முகத்தின் பெற்றோர் உயிரோடு இருக்கும் வரை புன்னகை முகமாக வலம் வந்து கொண்டிருந்த பெரியம்மா, அவர்களின் மறைவுக்குப் பிறகு, ‘எங்கே இந்த பிள்ளைகளின் பொறுப்பு தங்கள் மேல் விழுந்து விடுமோ?’ என்ற எண்ணத்தில் தன் கோபமுகத்தை காட்ட ஆரம்பித்தார்.

“எத்தனை நாள் தான் அடுத்த வீட்டிலே சாப்பிடுவீங்க. நீ பொம்பளபிள்ளத் தான, உன் அண்ணனுக்கு சோறாக்கிக் குடு.” பத்தே வயது சிறுமியான சௌந்தர்யாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார் அந்த பெண்மணி.

அவளும் எந்த கல்மிஷமும் இல்லாமல் பெரியம்மா சொன்ன வார்த்தையை சிரமேற்கொண்டு, தகப்பனாகிப் போன தமையனுக்காக சமைக்க முயற்சி செய்ய, அதைப் பார்த்த சண்முகத்திற்குத் தான் உயிரே போய்விட்டு வந்தது.

எதற்காக தங்கை இந்த முயற்சியில் இறங்கினாள் என்ற விஷயத்தை தங்கை மூலமாகவே தெரிந்து கொண்டவர், அன்றே ஊரிலிருந்த தன் தாயின் சித்தியிடம் வந்து நின்றார்.

அந்த பெரிய மனுஷியும் தன் அக்காவின் பேரப்பிள்ளைகளின் நிலை கண்டு, தன் மகனின் அனுமதியோடு அண்ணன் தங்கையோடு இருப்பதற்கு சம்மதித்து சென்னை வந்தார்.

நாட்களும் வேகமாக ஓட பத்து வயது சௌந்தர்யா பருவ வயது சௌந்தர்யாவாக வளர்ந்து நின்றாள். கூடவே அவளின் இராஜ அழகும் போட்டி போட்டு வளர்ந்து, பாட்டியின் மனதில் பயத்தையும் வளர்த்தது.

‘வயது போன காலத்தில் தன்னால் அந்த சிறுபெண்ணை பாதுகாத்து வளர்த்துவிட முடியுமா?’ என்ற கேள்வி மிரட்ட, அதைச் சொல்லியே சண்முகத்தை திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார்.

ஆனால் நடந்ததென்னவோ அத்தனையும் நேர்மாறாகத் தான் இருந்தது.

ஆமாம்… அண்ணனின் மனைவி அண்ணியாக இல்லாமல் அம்மாவாகவே மாறி தங்கள் வீட்டு பெண் பிள்ளையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், புதுப் பெண் தனலட்சுமியிடம் பாட்டி சொன்ன அறிவுரைகள் எல்லாம் சௌந்தர்யா மீது தனத்துக்கு ஒரு வெறுப்பையே வளர்த்தது.

அதிலும், “இது சின்னப்பிள்ளை இருக்குற வீடு, அதனால பாத்து பதவிசா நடத்துக்கணும்.” கல்யாணம் முடிந்த அன்று தனத்திடம் பாட்டி சொன்ன வார்த்தைகள், ‘நான் மட்டும் என்ன, எல்லாம் ஆண்டு அனுபவித்து ஓய்ந்து போன வயசுலயா இருக்குறேன்? எனக்கும் இருபத்தோரு வயசு தானே ஆகுது!’

‘சின்னப்பிள்ளை இருந்ததுன்னா அந்த பிள்ளையை கட்டிகுடுத்துட்டு இவங்க பையனுக்கு கல்யாணத்தை முடிக்க வேண்டியது தானே? அதைவிட்டுட்டு எங்கிட்ட வந்து இஷ்டத்துக்கு பேசுறாங்க!’ என்று அன்றே தனலட்சுமியை உள்ளுக்குள் முரண்பட்டு போக வைத்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, முதல்நாள் இரவே, “என் உயிரே என் தங்கச்சி தான்‌. அவள நீ நல்லா பாத்துப்பன்னு நம்பி தான், நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிச்சேன்.”

 கேட்டுக் கொண்டிருப்பவர் மனநிலையறியாமல் சண்முகம் வார்த்தைகளை விட, சண்முகத்தின் உயிரான சௌந்தர்யாவை அந்த நொடியிலிருந்து பிடிக்காமல் போனது தனலட்சுமிக்கு.

தாலி என்ற ஒன்றை தனக்கு கட்டிவிட்டதால் தன் கணவன் இனி தனக்கு மட்டுமே சொந்தம் என்ற மனநிலையில் இருந்த தனத்துக்கு, தன் கைத்தாலியை வாங்கிக் கொண்ட பொழுதிலிருந்து என்னுடைய கஷ்ட நஷ்டங்களிலும், பொறுப்புகளிலும் மனைவிக்கும் பங்குண்டு என்ற மனநிலையில் இருந்த சண்முகம் கூறிய வார்த்தைகள் வேப்பங்காயாக கசந்தது.

அதன் பிறகான நாட்களில் தனத்துக்கு, சௌந்தர்யா மீதான வெறுப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் போனது.

அதுவும் கணவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் சௌந்தர்யாவுக்கு எதிராக அவரால் மூச்சைக் கூட விட்டுவிட முடியாது என்பதை மிக விரைவிலேயே புரிந்து கொண்ட தனம், கணவன் இல்லாத நேரத்தில் தன் துவேஷத்தை அதிகமாக காட்டுவார்.

ஆனால் தனது உயிரான அண்ணனின் மனைவியை தன் தாயாகவே நினைத்த சௌந்தர்யா, எந்த ஒரு சூழ்நிலையிலும் அண்ணியின் நடவடிக்கைகளை அண்ணனின் காதுகளுக்கு கொண்டு போவதே இல்லை.

பாட்டியும், சண்முகத்தின் திருமணம் முடிந்து ஒரு ஆறு மாத காலத்திலேயே இறைவனடி சேர்ந்துவிட, தட்டுவாரும் இல்லாமல் கொட்டுவாரும் இல்லாமல் சௌந்தர்யாவை வறுத்தெடுத்தார் தனம்.

தங்களுக்கென்று ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தை மூலம் தன் கணவனை தன் கைகளுக்குள் கட்டி இழுத்துவிடலாமென்று தனம் நினைத்தால், அதுவும் நடக்கவில்லை.

பள்ளிப்படிப்பை முடித்த சௌந்தர்யா கல்லூரிக்கு சென்று படிக்க விருப்பப்பட, தங்கையின் ஆசையை தட்டாமல் நிறைவேற்றினார் சண்முகம்.

ஆனால் கல்லூரி வாசம் முடிந்து தங்கை காதல் என்று வந்து நிற்கும் போது தான் மனிதர் ஆடிப்போனார்.

அதிலும் மாப்பிள்ளையின் வசதிவாய்ப்புகளைக் கண்டு பயம் தான் வந்தது அவருக்கு.

ஆனால் மாப்பிள்ளை இராஜசேகரன் சௌந்தர்யாவை கல்யாணம் பண்ணுவதில் உறுதியாக இருக்க, திருமணமும் நடந்து முடிந்திருந்தது.

ஏழை சண்முகத்தின் தங்கை இப்போது பணக்கார இராஜசேகரனின் மனைவியாக அவளை இன்னமும் அதிகமாக பிடிக்காமல் போனது தனத்திற்கு.

எல்லாவற்றுக்கும் மேலாக பிள்ளைச் செல்வத்திற்காக ஐந்து வருடங்களாக தனம் ஒற்றைக்காலில் தவமிருக்க, திருமணம் முடிந்த இரண்டே மாதங்களில் நல்ல செய்தி சொன்ன சௌந்தர்யாவை சுத்தமாக பிடிக்காமல் போனது தனத்திற்கு.

தாய்மாமனாகப் போகும் சந்தோஷத்தில் ஆனந்த கூத்தாடிய கணவனிடம் வெளிப்படையாகவே வெடித்துச் சிதறிய தனம், ஐந்தாவது மாதம் சீர்செய்ய கணவனோடு நாத்தனார் வீட்டுக்கு வரமறுத்தார்.

தன் மனைவி மனதிற்குள் இத்தனை அழுக்குகளை சுமந்து கொண்டு திரிந்திருக்கிறாளென்று சண்முகத்திற்கு அன்று தான் தெரிந்தது.

ஒருவழியாக சௌந்தர்யா குழந்தை உண்டாகிய ஐந்து மாதங்களுக்குப் பிறகு தனம் வயிற்றிலும் சத்யா உருவாக, கொஞ்சம் சாந்தமுகம் காட்டினார் அம்மணி.

ஆனால்…

“சௌந்தர்யா… ஏய் சௌந்தர்யா…” மாமியாரின் அழைப்பில் நினைவலைகள் அறுபட, அடித்துப் பிடித்து எழுந்து,”என்னத்த?” என்று கேட்டுக் கொண்டு ஹாலில் இருந்த மாமியாருக்கருகில் போய் நின்றார் சௌந்தர்யா.

“இந்த பவுசுக்கு ஒண்ணும் கொறவில்ல. ஆனா நாலு மணியானா ஒருத்தி டீ கூட மாத்திரை போடுவாளே, அதை எடுத்து கைல குடுக்கணும்ங்குற விஷயத்தை மட்டும் வசதியா மறந்தாச்சு.”

“சாரி த்த… அப்டியே கொஞ்சம் கண்ணசந்துட்டேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க, இதோ ஒருநிமிஷத்துல கொண்டு வந்துடுறேன்” எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் சௌந்தர்யா நகர்ந்தார்.

“சரியான ஊமக்குசும்பி… அண்ணங்காரன் குடும்பத்த கண்டவுடனே, இங்க இருக்குறவங்களை சுத்தமா மறந்தாச்சு. கேட்டா, ரொம்ப பதவிசா பதில் சொல்லுற மாதிரி நடிக்குறது.”

தன் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாமல் அமைதியாக நகர்ந்து செல்லும் மருமகளின் செயல் கூட எரிச்சலைத் தர, முணுமுணுத்தார் கற்பகம்.

“ஏன் பாட்டி… அந்த மாத்திரை உங்க ரூம்லதான இருக்குது? நீங்க ரூம்லயிருந்து வரும் போது கையோட எடுத்துட்டு வரவேண்டியது தான? எதுக்கு எங்கம்மாவை சும்மா சும்மா ஏவுறீங்க?

கற்பகத்தின் குரலில் தூக்கம் விழித்திருந்த மயூரா தான் கேட்டது.

 “மாமங்காரன் காத்துபட்டும் இந்த சில்வண்டு இன்னும் சிலுத்துக்காம இருக்கேன்னு நினைச்சேன்… வந்துட்டியா? வாடியம்மா… வா.”

தன் அம்மாவை சதா ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கும் பாட்டியிடம் சண்டை பிடிப்பது மயூராவின் வழக்கம் தான்.

ஆனால் அதைக் கூட இன்று சண்முகத்தின் வருகையோடு தொடர்புபடுத்தி பேசினார் கற்பகம்.

“எத்தனையோ வருஷத்துக்கு அப்புறம், இப்பத்தான் எங்கமாமா இங்க வந்துருக்காங்க பாட்டி. அதுகூட உங்களுக்கு பொறுக்கலையா?”

தாய்க்கு வாய்க்காத தைரியம் மகளுக்கு வாய்த்திருக்க, சட்டென்று கேட்டுவிட்டாள் மயூரா.

“மயூ… என்ன பழக்கம் இது? பெரியவங்கன்னு ஒரு மட்டுமரியாதையில்லாமல் கூடக் கூட பேசிக்கிட்டு. மன்னிப்பு கேளு பாட்டிகிட்ட..”

வேறு யார்? சௌந்தர்யா தான்.

“நல்லாயிருக்குடி அம்மா உங்கதை! பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் நல்லாவே ஆட்டுற.”

“ம்ஹும்ம்… நீங்க அவங்களுக்காகச் சொன்னா, அவங்க உங்களையேக் கொற சொல்லுறாங்க பாத்தீங்களா ம்மா? இதுதான் நல்லதுக்கே காலம் கிடையாதுன்னு சொல்லுறது.”

“ஹா… இப்போ நீ சொன்னியே ஒருவார்த்தை, நல்லதுக்கே காலம் கிடையாதுன்னு, அது நூத்துல ஒரு வார்த்தை தான் டி யம்மா… அத நான் ஒத்துக்குறேன்.”

சிறிய பேத்தி மயூராவுக்கு சரிக்குச் சரியாக மல்லுக்கட்டிய கற்பகம் அம்மாள், ஒரு கோணல் சிரிப்பை உதட்டில் நெளிய விட்டு,

“உங்கம்மா வயித்துல நீ இருக்கும் போது, எனக்கு மூனு பிள்ளைங்க போதும், இதை அபார்ஷன் பண்ணிக்கலாம்னு உங்கப்பா சொன்னான். நான் தான், இல்லடா உயிர்னு ஆயாச்சு பெறக்கட்டும்னு, இந்த பூமியில நீ பிறக்குறதுக்கு காரணமா இருந்தேன்.”

“ஆனா, இப்போ அவன் ஆசைப்படியே செஞ்சுருக்கலாமோன்னு என்னை நீ நினைக்க வச்சிட்ட..”

என்றைக்கும் போலத்தான் இன்றும் மயூரா பாட்டியோடு மல்லுக்கு நின்றாள், ஆனால் கற்பகமோ இன்று மாறி நின்றார்.

பாட்டியின் வார்த்தைகள் அந்த பிஞ்சு இதயத்தை வசமாக பதம் பார்க்க, கண்களில் நீர் வழிய பக்கத்தில் நின்ற தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டு,

 “பாட்டி சொல்லுறதெல்லாம் உண்மையா? சொல்லுங்க ம்மா” என்று கேவத் தொடங்கினாள்.

மகளின் கேள்விக்கு என்ன சொல்லுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு சௌந்தர்யா நிற்க, பாட்டியின் வார்த்தைகளை கேட்டுக் கொண்டு வீட்டினுள் வந்த ரஞ்சித், தன் அன்னையிடமிருந்து தங்கையைப் பிரித்து, தோளோடு அணைத்துக் கொண்டு,

“அப்டியெல்லாம் இல்லடா… உன் பேச்சை ஸ்டாப் பண்ணுறதுக்காக, சும்மா வாய்க்கு வந்ததை பாட்டி பேசுறாங்க. அதப் போய் நம்பிட்டு அம்மாட்ட அப்படியான்னு கேள்வி வேறக் கேக்குறியே?”

இலகு குரலில் சொல்லியவன், “ஏன் பாட்டி? இத்தனை வயசுக்குப் பிறகும் எதப் பேசணும், எதப் பேசக்கூடாதுன்னு கூடவா உங்களுக்கு தெரியல?” என்று கேட்க, அங்கு நின்ற அத்தனை பேரும் அதிர்ந்து தான் போனார்கள்.

ஆம்… ரஞ்சித் இத்தனை நாட்களில் ஒருநாள் கூட தனது அம்மாவுக்காகவோ இல்லை தங்கைகளுக்காகவோ பாட்டியிடம் பரிந்து கொண்டு வந்தவனேக் கிடையாது.

என்றும் இல்லாமல் இன்று அது நடந்திருக்க, அதிர்ந்து போய் பேரனைப் பார்த்த கற்பகத்திற்கு, நேற்று முகமெல்லாம் சிவந்து போய் மாடியிலிருந்து அரக்கப்பரக்க இறங்கி ஓடிய ப்ரபாவதியும், அவளுக்கு பின்னால் மோகனப் புன்னகையை சிந்தியபடி வந்த தன் பேரனுமே நினைவுக்கு வந்தனர்.

நேற்றைய அந்த நிகழ்வையும், இன்றைய இந்த நிகழ்வையும் இணைத்து யோசித்தவரின் அனுபவ அறிவு, ‘இது சரியில்லை?’ என்று சொல்லியது.

அவரைப் போலவே இன்னொரு நபருக்கும், விதிர்விதிர்த்து போய் வந்து நின்ற ப்ரபாவதியின் தோற்றம் மனதிற்குள் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியிருந்தது.

அந்த நபர் தனலட்சுமி அன்றி, வேறு யாராக இருக்க முடியும்?