சரியாக ஐந்து மணியளவில் கற்பகம் விலாஸூக்கு முன்னால் வந்து நின்ற இரண்டு கார்களிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள் சண்முகம் குடும்பத்தினர்.
வீட்டில் உள்ளவர்கள் தவிர தவமணியும் அவரது கணவரும், முரளியின் மாமனார் மாமியாரும் வந்திருக்கவே இரண்டு கார்களை வாடகைக்கு பிடித்திருந்தான் சத்யா.
அதற்கே, “தண்டச்செலவு” என்று முணுமுணுத்திருந்தார் தனலட்சுமி.
வண்டியிலிருந்து இறங்கியவர்கள் கற்பகம் விலாஸை நிமிர்ந்து பார்க்க, தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலால் இன்னும் கொஞ்சம் வசீகரம் கூடி நின்றது அந்த பங்களா.
வண்டியிலிருந்த பொருட்கள் நிறைந்த பைகளை ப்ரபாவும், தவமணியுமாக கைகளில் அள்ளிக்கொள்ள, ஒரு தயக்கத்தோடே சண்முகத்தை பின்தொடர ஆரம்பித்தனர் எல்லோரும்.
கார் நின்ற இடத்திலிருந்து ஒரு நான்கைந்து எட்டுத் தான் சண்முகம் எடுத்து வைத்திருப்பார், அதற்கிடையில் சிட்டென பறந்து வந்து அவர்முன் நின்றிருந்த சௌந்தர்யா, தமையனின் வலது கையைப் பற்றிக்கொண்டு, “வா ண்ணா…” என்றார் லேசான தழுதழுத்த குரலில்.
தன் சகோதரன் வந்துவிட்ட சந்தோஷத்தில் முகம் பூரிப்பில் மூழ்கியிருந்தாலும், கண்கள் ஏனோ தன் கட்டுப்பாட்டையும் மீறி கலங்கியது அந்த பெண்ணுக்கு.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைத்து இருவரும் பார்த்துக் கொண்டது.
அன்று சௌந்தர்யாவின் கணவரும் அருகிலிருந்ததால் இருவரும் பேசிக்கொள்ளக் கூட முயலவில்லை. அதன் பிறகு இன்று தான் பார்த்துக் கொள்கிறார்கள்.
வறண்ட பாலைநிலத்தில் பயணம் மேற்கொண்டு சோர்ந்து போனவரின் மனது, அங்கே ஒரு பாலைவனச் சோலையைக் கண்டால் எப்படி ஆர்ப்பரிக்குமோ, அப்படி ஒரு மனநிலையில் தன் முன்னே வந்து நின்ற தங்கையை கண்ட சண்முகத்தின் கண்களிரண்டும் லேசாகப் பனித்தது.
தன் கை பிடித்து நிற்கும் தங்கைக்கு சிறுபுன்னகை ஒன்றை தந்தவர், வலதுகரம் கொண்டு தங்கையின் தலையை மென்மையாகத் தடவி தன் ஒட்டுமொத்த பாசத்தையும் வெளிப்படுத்தினார்.
அந்த இரு பாசப்பறவைகளின் பாசப்போராட்டம் கல்லும் கரையும் வண்ணம் இருந்தாலும், சில கல்மனம் படைத்த மனிதர்களை ஏனோ அது சற்றும் கரைக்கவில்லை.
சூழ்நிலையை முதலில் உணர்ந்து கொண்ட சௌந்தர்யா தன் அண்ணனோடு, அண்ணியையும் மற்ற அனைவரையும் வரவேற்று, வீட்டில் வேலை செய்யும் பெண் கொண்டுவந்து தந்த ஆரத்தி தட்டை வாங்கி தன் அண்ணனுக்கும் அவரின் இரு ஆண்மக்களுக்கும் ஆலம் சுற்றி பொட்டிட்டு வீட்டினுள் அழைத்துச் சென்றார்.
ம்ம்… அவர்களில் தாய்மாமனை எதிர்கொண்டு வரவேற்க இப்படியொரு வழக்கம் உண்டு.
சௌந்தர்யாவை பின்பற்றி வீட்டுக்குள் செல்வதற்காக வாசற்படியினில் கால்வைக்கும் போது ஒவ்வொருவரின் மனமும் வெவ்வேறு மனநிலையில் இருந்தது.
அதில் உச்சகட்டமாக நம் சத்யாவின் ஒரு மனமோ, “வெக்கம்கெட்டு போய் நீ எதற்கடா இங்கே வந்தாய்?” என்று அவனைச் சாடியது.
இன்னொரு மனமோ, “நான் போகவேண்டாம்னு சொல்லியதுக்கு அந்த மனுஷன் மோட்டுவளையே வெறிச்சு பாத்துட்டு இருந்ததை நேற்றைக்கு நீ பார்த்த தான?” என்று பதில் கேள்வி கேட்டது.
ஆமாம்… நேற்றிரவு தனது பதிலால் அங்கு போவதில் தனக்கு உடன்பாடில்லை என்று மறைமுகமாக மூத்தமகன் சொல்லியதிலிருந்து அமைதியாக மோட்டுவளையை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார் சண்முகம்.
அதலபாதாளத்தில் விழுந்த குடும்பத்தை தன்னிரு தோள்களில் சுமந்து இன்று ஓரளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கும் மகனின் வார்த்தைகளை சட்டென்று மறுத்துவிட முடியவில்லை அவரால்.
அதேநேரம் அண்ணன் வருவானென்று காத்திருக்கும் தன் தங்கையையும் ஏமாற்றும் துணிவும் அவருக்கில்லை.
என்ன செய்வதென்று விடைதெரியாமல் மருகிக்கொண்டிருந்த நேரம் தான், எல்லா சீர் பொருட்களையும் வாங்கிக் கொடுத்ததுமில்லாமல் உடன் கிளம்பியும் வந்திருந்தான் சத்யா.
இங்கு வந்து தன் தந்தைக்கும் அவரின் தங்கைக்குமிடையே நடந்த பாச பரிவர்த்தனைகளைக் கண்டபின் ‘அவர்கள் இருவருக்காக இங்கே வந்தது தப்பேயில்லை’ என்ற தீர்ப்பையும் தனக்குத்தானே கூறிக் கொண்டது சத்யாவின் மனது.
இவர்கள் வரும் போதே கற்பகம் விலாஸ் அதன் சொந்தங்களாலும் பந்தங்களாலும் நிறைந்திருந்தது.
ரொம்பவும் நெருக்கமானவர்களையே இந்த விழாவிற்காக அழைத்திருந்தார்கள். அப்படியிருந்துமே ஓரளவிற்கு கூட்டம் கூடிவிட்டது தான்.
அந்த கூட்டத்தோடு அளவளாவிக் கொண்டிருந்த ராஜசேகரன் வெளியே நடந்து கொண்டிருந்தவற்றை கண்டும் காணாதது போல நின்று கொண்டார்.
ஏதோ வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு மிகமுக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்திக் கொண்டிருப்பது போன்ற பாவனையில் நின்றவர், எதிரியே ஆனாலும் தன்வீட்டுக்கு வருபவர்களை வரவேற்க வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட மறந்து போனார்.
ஆனால் அது எதையும் சட்டை செய்யாமல் சண்முகம் தங்கையின் கணவரின் அருகில் சென்று, “நல்லாயிருக்கீங்களா மாப்ள?” என்று பவ்யமாக கேட்டுவைக்க
“ஹ்ம்ம்…” என்றார் அந்த மனிதர் இத்தனை வயதிலும் தன் மாப்பிள்ளை முறுக்கை கைவிடாமல்.
ஆனால் என்றுமில்லாத திருநாளாக தங்கையின் மூத்த மகன் ரஞ்சித் திருவேங்கடத்திடமிருந்து இன்று வரவேற்பு கிடைத்தது அந்த மாமனுக்கு.
அதைக்கண்டு, அவனின் அன்னைக்கே மயக்கம் வரும் போல இருந்தால், மற்றவர்களின் நிலைமை சொல்லவும் வேண்டுமா என்ன?
ம்ம்… சௌந்தர்யா, இராஜசேகரன் தம்பதியரின் மூத்தமகன் ரஞ்சித் திருவேங்கடம், உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் அப்படியே அச்சு அசல் தந்தையே.
தனது எம் பி ஏ படிப்பை அமெரிக்காவில் முடித்தவன், சிறிதுகாலம் அங்கேயே வேலை பார்த்துவிட்டு, தந்தையின் தொந்தரவு தாளாமல் இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு வந்து, தந்தையால் வேளச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டிருந்த ‘கற்பகம் சில்க்ஸ்’ ஸை நிர்வகித்து வருகிறான்.
அத்திபூத்தாற் போல கிடைத்த மூத்த மருமகனின் வரவேற்பில் அகம் குளிர்ந்து போன சண்முகம், அகமும் முகமும் மலர தன் மூத்தமகனைப் பார்க்க,
அவன் அது எதையும் கண்டுகொள்ளாமல், “அத்த! குடிசை எந்த இடத்துல கட்டணும் சொல்லுங்க, செஞ்சிடலாம்” என்று தன் அத்தையையே அந்த இடத்திலிருந்து நகர்த்த முயன்றான்.
ஆம்… ரஞ்சித்திற்கும் சத்தியாவிற்கும் சிறு வயதிலிருந்தே ஒருவருக்கொருவர் ஆகாது.
ஆரம்பகாலங்களில், ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கொரு தரம் தன்வீட்டுக்கு வருகை தரும் அத்தையோடு, உடன்வரும் அவர் பெற்ற ரத்தினங்களில், தன்னைவிட ஐந்தே மாதங்கள் பெரியவனான ரஞ்சித்தின் அலட்டல்கள் சத்யாவிற்கு பிடிக்காமல் போகவே, எப்போதுமே அவனிடமிருந்து ஒதுங்கியே இருப்பான் சத்யா.
பெண்பிள்ளைகள் எல்லாம் ஆர்வத்தோடு மாமனின் வீட்டுக்கு வரும் போது ரஞ்சித்துக்கு மட்டும் தாய்மாமன் வீட்டுக்கு வருவதே பிடிக்காது.
இருந்தாலும் தன் பிறந்த வீட்டோடு தன் பிள்ளைகளுக்கு தொடர்பு விட்டுப் போகக்கூடாது என்பதற்காகவே பிள்ளைகளை வலிய அழைத்து வருவார் சௌந்தர்யா.
ஆனால் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் தான். வளர்ந்து சுயமாக சிந்திக்க ஆரம்பித்த பின்னர் சௌந்தர்யாவின் பேச்சுக்கள் எல்லாம் அவனிடம் எடுபடவே இல்லை.
சிறிது சிறிதாக தாயோடு அங்கு வருவதை ரஞ்சித் நிறுத்திக் கொள்ள, நாளடைவில் சௌந்தர்யாவே தன் பிறந்த வீட்டுக்குப் போகமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
“குடிசை எங்க த்த கட்டணும்?” சத்யா இன்னொரு முறை கேட்க, “ஆண்டவா! எல்லாம் இப்படியே சரியாகி நல்லது நடந்து விடக்கூடாதா?’ என்ற எண்ணம் மனதில் ஓட, எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
“ம்ம்… இங்க தான்… ஹால்ல அந்த ஓரமா கட்டணும் கண்ணா!” என்றார் சௌந்தர்யா.
“கண்ணா!” என்ற அத்தையின் பிரத்யேக அழைப்பில், ஒரு வினாடி இன்னொரு அழைப்பு சத்யாவின் நெஞ்சுக்குள் உலாவர, சட்டென்று அந்த நினைப்பை அணைபோட்டு தடுத்தவன்,
வலது காலை மடக்கி வேஷ்டியைக் கையில் பிடித்து மடித்துக் கட்டியபடி, சட்டையின் கையையும் மடித்து விட்டுக் கொண்டு வேலைக்காரர்கள் கொண்டு வைத்த தென்னங்கீற்றை வைத்து மடமடவென்று தம்பியோடு சேர்ந்து குடிசை கட்ட ஆரம்பித்து விட்டான்.
சத்யாவின் அந்த செயலை அங்கு நின்ற பெருந்தனக்காரர்கள் அனைவரும் ஆவென்று வியந்து பார்த்தார்களென்றால்,
வயதுப் பெண்களோ, நெடுநெடுவென்ற உயரத்தில், அதற்கேற்ற உடல்வாகோடு, புதுநிறத்தில் ஜம்மென்று பார்ப்பவர்கள் அனைவரையும் வசீகரித்து தன் பாக்கட்டில் போட்டுக்கொள்ளும் தோற்றத்தில் நின்று கொண்டிருந்த சத்யாவை பெரும் ஆர்வத்தோடு பார்வையிட ஆரம்பித்தனர்.
அதற்கிடையில் பெண்கள் அனைவரையும் வரவேற்று மதுரா தன் தங்கை இருக்கும் அறைக்கு கூட்டிச்செல்ல, குடிசை கட்டிக்கொண்டிருந்த சத்யா தங்கையிடம், “ப்ரபா! எல்லாம் நாம வாங்கிட்டு வந்ததை போட்டு மயூராவைக் கூட்டிட்டு வா” என்று சத்தமாகச் சொன்னான்.
சத்யாவின் வார்த்தைகளைக் கேட்டுகொண்டே அங்கே வந்தார், கற்பகம் விலாஸ், கற்பகம் சில்க்ஸ் இவற்றின் பெயருக்கு சொந்தக்காரரான கற்பகம்.
அந்த கண்களில் மட்டும் அலட்சியத்திற்கு பதில் அன்பும், கனிவும் குடிகொண்டிருந்தால் சாட்சாத் கற்பகாம்பிகை என்று கையெடுத்து கும்பிடலாம் போன்ற தோற்றத்தில் இருந்தார் அந்த மூதாட்டி.
தன்மகன்கள் இருவரும் தனக்குப் பதில் குடிசைக் கட்டுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்த சண்முகம், அம்மூதாட்டியைக் கண்டதும் அவசரகதியில் ஒரு வணக்கம் ஒன்றை வைக்க, பதிலேதும் சொல்லாமல் சிலிர்த்துக் கொண்டு போனது அந்த கிழச்சிங்கம்.
சத்யாவுக்கோ, அவரைக் கண்டதுமே இதற்கு முன்னால் நடந்த இருசடங்குகளிலும் குடிசை கட்டுவதற்கு தன் தந்தையை அனுமதிக்காமல் தன்னுடைய அக்காவின் மகள்வழி பேரனைக்கொண்டு அவர் நிறைவேற்றிக் கொண்டதெல்லாம் நினைவுக்கு வர, லேசாக முகம் கறுத்தது.
அண்ணனின் முகமாறுதலிலேயே அவனின் மனநிலை புரிந்து விட்ட முரளி, அவனை இயல்புக்கு கொண்டு வருவதற்காக, “நானும் வேஷ்டி கட்டிட்டு வந்திருக்கலாமோன்னு இப்ப தோணுது ண்ணா” என்றான் மெதுவாக.
சம்மந்தமே இல்லாமல் திடீரென்று முரளி இப்படி பேச லேசான குழப்பத்துடன், “ஏன் டா?” என்றான் சத்யா.
“இல்ல… நானும் வந்த நேரத்தில இருந்து கவனிச்சிட்டு தான் இருக்குறேன். இங்க நிக்குற வயசுப் பொண்ணுங்க அத்தனையும் வச்சகண்ணு வாங்காம உங்களை சைட் அடிக்குதுங்க.”
“நானும் வேஷ்டி கட்டிட்டு வந்திருந்தா என்னையும் சைட் அடிச்சிருப்பாங்கல. அநியாயத்துக்கு ஒரு நல்ல ஆப்பர்சூனிட்டியை மிஸ் பண்ணிட்டனே…” சிரித்தபடியே போலியாக கண்ணீர் வடித்தான்.