“எப்பிடின்னா, துரியோதனன் கண்ணுக்கு எல்லாருமே கெட்டவங்களாவும், தர்மன் கண்ணுக்கு எல்லாருமே நல்லவங்களாவும் தெரிஞ்சாங்களாமே! அப்படி…”

அமைதியாக சொல்லியவன், தன் மார்பில் தூங்கிக் கொண்டிருந்த மகளுக்கு ஒரு முத்தம் வைத்து, படுக்கையில் படுக்க வைத்து விட்டு, பாத்ரூமுக்குள் நுழைந்து காலைக்கடன்களை முடித்து வெளியே வந்தான்.

“என்னைக் கேட்டா, நீ டிகிரி கம்ப்ளீட் செய்துட்டு கவர்மென்ட் எக்ஸாம் எழுதுறதை விட, லா படிக்கலாம் ரேவதி. பாயிண்ட்ஸ் எல்லாம் சும்மா டக்குடக்குன்னு பிடிக்கிற. அதனால லா முடிச்சா கண்டிப்பா உனக்கு ப்ரைட் ஃபியூச்சர் காத்துட்டு இருக்கு.” இலவச ஐடியாவையும் மனைவிக்கு வழங்கி விட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

எப்போதும் போல, காலை நேரத்தில் மாமன், மருமகளால் அந்த சிறிய சமையலறை கலகலப்பாக இருந்தது.

“என்னப்பா? இன்னும் சுபாக்கு நீங்க தான் சமைச்சு குடுக்குறீங்களா? அப்போ டீச்சரம்மா சமையல் கத்துக்குறதுல சரியான மக்கு ஸ்டூடண்ட் தானா?”

“அதெல்லாம் இல்ல முரளி. சுபா, இப்போ சூப்பரா சமைக்குறா தெரியுமா? இன்னைக்கு கூட அவ தான் வெஜ் புலாவ் செய்யப்போறா, நான் அவளுக்கு சும்மா ஹெல்ப்புக்கு நிக்குறேன். அப்பிடித்தானே சுபா ம்மா!”

 மகனின் கேள்விக்கு பதில் சொல்லி, மருமகளிடம் கேள்வியோடு சண்முகம் ‌முடித்தார்.

 கட்டிங் போர்டில் வைத்து காய்கறிகளை லாவகமாக நறுக்கியபடியே, மாமனின் கேள்விக்கு, “ம்ம்…” என்று தலையாட்டினாள் சுபத்ரா.

“டீச்சரம்மா, சமையல் உங்களுக்கு மட்டும் தான் செய்வீங்களா? எங்களுக்கெல்லாம் கிடையாதா?” கண்களால் மனைவியைப் பார்த்து சிரித்தபடியே உல்லாசமாக கேட்டான், அங்கு வந்த சத்யா.

“உங்களுக்கா? உங்களுக்கு எப்பிடி? லேசாக தடுமாறியவள், “எனக்கு குவாண்டிட்டி கம்மியா செய்யத்தான் தெரியும் த்தான்.” லேசாக சிணுங்கினாள்.

“அப்போ மக்கு ஸ்டுடண்ட்ன்னு ஒத்துக்கோங்க டீச்சரம்மா.” வம்பிழுத்தான் கணவன்.

“இப்போ என்ன? உங்களுக்கு புலாவ் வேணும் அவ்வளவு தான? நான் பண்ணுறேன்.” கோதாவில் இறங்கிய சண்முகம், “யாருக்கெல்லாம் வேணும்னு மட்டும் சொல்லிடுங்க” என்று கேட்க,

எப்போதும் போல இவர்களை கண்காணித்தபடியே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த தனலட்சுமியிடம், “ம்மா… உங்களுக்கு வேணுமா?” என்று முரளி கேட்டான். பதிலேதும் சொல்லாமல் கடந்தார் தனலட்சுமி.

“ப்பா… எல்லாருக்குமே செய்யலாம். மிச்சம் இருந்தா நானே ஃப்ரிஜ்ல வச்சு அப்புறமா சாப்ட்டுகிறேன்.” அசடுவழிந்தான் முரளி. அவனின் பாவனையில் அங்கே வெடிச்சிரிப்பு கிளம்பியது.

“டீச்சரம்மா, நீங்கல்லாம் கவர்மென்ட் சம்பளம் வாங்குற ஆளு, இந்த பாவத்துக்கு ஏதாவது பாத்து பண்ணலாம்ல.” வேண்டுமென்றே கேலியாக கேட்டான் முரளி.

பணம் தான் இங்கே பலரது பாசத்தையும் எடை போடும் கருவியாக இருக்கிறது என்று மனைவி சொல்கிறாள். அதே பணத்தை பற்றி சுபத்ராவின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக கேட்டான்.

“உனக்கில்லாததா முரளி? எங்கார்டு தரேன், உனக்கு தேவையானதை எடுத்துக்கோ.” எந்த வித தடுமாற்றமும் யோசனையுமின்றி சுபத்ராவிடமிருந்து, பதில் வந்தது.

பள்ளிக்கு புறப்பட்டு கீழே வரும் போது, தன் பேங்க் கார்டை முரளியின் கையில் வைத்து பின்நம்பரையும் சொல்லியவள், “நான் வேலை பார்த்து சம்பளம் வாங்கத் தொடங்கின நாள்ல இருந்து எந்த பெரிய செலவுமே செய்யாமல் சேர்ந்து கிடக்கிற பணம் தான் முரளி. உனக்கு உபயோகமானா எனக்கு சந்தோஷம் தான். எடுத்துக்கோ” என்றும் சொல்ல, ஆயிரம் அர்த்தத்தோடு அங்கு நின்ற மனைவியைப் பார்த்தான் முரளி.

************************

தான் பொறுப்பேற்று நடத்தும் வேளச்சேரி கற்பகம் சில்க்ஸ்ஸில் தனக்கான ஆஃபீஸ் ரூமில் உட்கார்ந்திருந்தான் ரஞ்சித். நேரம் மாலை ஆறுமணி.

கையிலிருந்த சிறிய கோப்பையிலிருந்து டீயை துளித்துளியாக உறிஞ்சியவனின் சிந்தை முழுவதும், ப்ரபாவதியே நிறைந்திருந்தாள்.

அதிலும் இராஜசேகரன் அன்று அப்படி ஒரு வார்த்தை சொன்னதிலிருந்து, ‘தான் கொஞ்சம் அதிகப்படியாகத்தான் ப்ரபாவதியிடம் நடந்து கொள்கிறோமோ?’ என்ற எண்ணம் ரஞ்சித்தின் மனதில் அடிக்கடி தோன்றுவதோடு,

‘பாவம்… சின்னப் பெண், கொஞ்சம் விட்டுத்தான் பிடியேன்டா’ என்ற வார்த்தையும் மனதுக்குள் அடிக்கடி கேட்கத் தொடங்கியிருக்கிறது.

மனைவியைப் பற்றி நினைக்கும் போதே, சண்டையும் சமாதானமுமாக போய்க்கொண்டிருக்கும் தங்கள் வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது.

‘ஒருவகையில் இந்த வாழ்க்கை கூட காரசாரமா நல்லாத்தான் இருக்கு.’ சிரித்துக்கொண்டவன், தன் எண்ணத்தின் நாயகிக்கு ஃபோன் செய்யவேண்டி அதை கையிலெடுத்தான்.

ஆனால் அதுவோ முந்திக்கொண்டு அவனை அழைத்தது. அழைத்தது ராகுல். இவனோடு அமெரிக்காவில் ஒன்றாக பணியிலிருந்தவன். இப்போதும் இருப்பவன். சென்னைக்காரன் தான். விடுமுறையில் தாய்நாட்டுக்கு வந்திருக்கிறான்.

தந்தை ஏகப்பட்ட தொழிலை வைத்திருக்க, அது எதையும் தன் தலையில் சுமக்காமல், அவனுக்கு பிடித்த துறையில் தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருக்கிறான்.

திரையில் அவன் பெயரைக் காணவுமே முகம் மலர்ச்சியை தத்தெடுக்க, “சொல்லு ப்ரோ…” என்றான் ரஞ்சித் அலைபேசியை காதுக்கு கொடுத்து.

அவனோ, “இன்னைக்கு நைட் பார்ட்டி அரேன்ஜ் பண்ணியிருக்கிறேன் மாப்ள, வந்து சேரு” என்றான் எடுத்த எடுப்பிலேயே ஹோட்டலின் பெயரைச் சொல்லி.

“பார்ட்டியா?”

“ஏன்டா, டேய்… இதுக்கு முன்னாடி நீ பார்டியே பண்ணாத மாதிரி ஏன்டா வாயப்பிளக்கிற?” கிண்டலாகச் சிரித்த ராகுல்,

“இப்பல்லாம் வீக் எண்ட் பார்ட்டீஸ்ல உன்னை காணவே முடியுறதுல்லன்னு நம்ம ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள் சொல்லுதே. அவ்வளவு நல்லவன் ஆகிட்டியா ராசா நீ” என்று காலை வேறு வாரினான்.

“அப்டியில்ல ப்ரோ… இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு. சின்ன பொண்ணு வேற. நம்ம அவதாரத்தைக் கண்டு பயந்து போய்ட கூடாதுல்ல, அதான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.” பதிலுக்கு ரஞ்சித் சொல்லிச் சிரித்தான்.

“நீ அடக்கி வாசிப்பியோ இல்லை அடங்காம வாசிப்பியோ எனக்கு தெரியாது மாப்ள. இன்னைக்கு பார்டிக்கு கண்டிப்பா வர்ற, அவ்வளவு தான்…” என்றவன் ரஞ்சித்தின் பதிலைக்கூட எதிர்பாராமல் ஃபோனை வைத்துவிட்டான்.

‘பார்டிக்கு போவதா? வேண்டாமா?’ என்ற யோசனையில் ஆழ்ந்த ரஞ்சித், இறுதியில் போய்விட்டு தான் வந்துவிடுவோமே என்று முடிவு செய்து, தந்தைக்கு மட்டும் ஃபோன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்பியிருந்தான்.

கிளம்புவதற்கு முன் ஃபோனை சைலண்ட் மோடில் வேறு போட்டுவைத்தான்.

கல்யாண கட்டுக்குள் சிக்காத காலத்தில், பார்ட்டி நேரத்தில் கல்யாணம் ஆன நண்பர்களுக்கு அவர்களின் மனைவிமார்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு, நண்பர்கள் அடிக்கும் கமெண்டே அவனை அப்படி செய்ய வைத்திருந்தது.

நகரின் அந்த பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பார்ட்டி ஹாலே அமளிதுமளி பட்டது.

அதிலும் கல்யாணத்திற்கு பிறகு முதன்முறையாக ரஞ்சித் பார்டிக்கு வந்திருக்க, இளையவர்களின் பாஷையில் சொன்னால், ரஞ்சித்தை வைத்து செய்தார்கள் அவன் நண்பர்கள்.

எல்லாருடைய கேலிக்கும், கிண்டலுக்கும் ஈடுகொடுத்து, ஒருவழியாக அவன் அங்கிருந்து கிளம்பி வீடுவந்து சேரும்போது, மணி கிட்டத்தட்ட பன்னிரண்டை நெருங்கி கொண்டிருந்தது.

அதேபோல அங்கு பரிமாறப்பட்ட உற்சாக பானத்திடமிருந்தும் அவன் திட்டமிட்டு சென்றிருந்தபடி தப்பிக்க முடியவில்லை.

நண்பர்களோடு நடந்த பேச்சு சுவாரஸ்யத்தில், உள்ளே போன உற்சாக பானத்தின் அளவை கவனிக்க மறந்துவிட, ‘லேசா பெயருக்கு சிப் பண்ணிட்டு வந்திடலாம்’ என்ற அவனின் திட்டமிடலும் தகர்ந்து போயிருந்தது.

வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்த, கதவை திறந்தார் சௌந்தர்யா.

“ரொம்ப நேரமா ப்ரபா உன்னை தேடிகிட்டே இருந்தா ரஞ்சித். ‌ அப்பா சொல்லி நீ போயிருந்த இடம் எனக்கு தெரியும். ஆனா அதை ப்ரபா எப்பிடி எடுத்துப்பாளோன்னு, நான் அவகிட்ட சொல்லை. இதுக்கு மேல இப்பிடி ஒரு தர்மசங்கடமான நிலைமைல கொண்டு வந்து என்னை நிறுத்தமாட்டன்னு நம்புறேன்.”

 மகனின் கண்களைப் பார்த்து கண்டிப்பாக சௌந்தர்யா பேச, அதை ஏற்றுக்கொள்வது போல, லேசாக தலையசைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தான்.

‘இவ்வளவு நாளும் ஊமையா இருந்த மாமியாரே பேச்சுல ரவுண்டு கட்டி அடிச்சா, வாயாடி மருமக உன்னை விட்டு வைப்பாளா ரஞ்சித்? பேசாம வந்த சுவடே தெரியாமல் கவுந்தடிச்சு படித்துடு.’

அவன் மனம் அழகாக ஐடியா கொடுக்க, ‘அப்படியே செய்துவிட வேண்டியது தான்’ என்ற முடிவோடு தங்கள் அறைக்குள் வந்தவனின் கண்கள் நைட்லேம்ப் வெளிச்சத்தில் கட்டிலைப் பார்க்க, பார்த்தது பார்த்தபடி நின்று போனான் ரஞ்சித்.

ம்ம்… எழுதிவைத்த சித்திரமாக கட்டிலில் துயில் கொண்டிருந்த ப்ரபாவதியின் தோற்றம், ரஞ்சித்தின் முடிவை தவிடு பொடியாக்கியது என்றால்,

பெண்ணவள் அணிந்திருந்த குட்டி டாப்ஸ் லேசாக மேலேறி பளீரென்று வெற்றிடையை காட்டி, என்னை தொட்டுப்பார்… என்னை தொட்டுப்பாரென்று கணவனை அழைத்தது.

அவ்வளவு தான்… சற்று முன் எடுத்த முடிவை காற்றோடு கலந்து விட்டு, சிக்கலுக்குள் சிக்கிக்கொள்ள முடிவெடுத்து விட்டான் ரஞ்சித்.

மனைவியின் அருகில் அமர்ந்து அவள் வெற்றிடையில் கைகொடுத்து தன்னை நோக்கி திருப்பினான். அதில்

சட்டென்று விழித்துக்கொண்ட ப்ரபாவதி,

“எங்க போனீங்க த்தான்? ஏன் இவ்வளவு லேட்? இன்ன இடத்துக்கு தான் போறேன்னு சொல்லிட்டு போக மாட்டீங்களா? சரி, சொல்லிட்டு தான் போகலை, ஃபோனையாவது ஆன்ல போடமாட்டீங்களா?” சரமாரியாக கேள்விக்கணைகளை வீசினாள்.

காமனவன் கோட்டையின் வாசலில் நின்று கொண்டிருந்தவனுக்கு, காதலியின் கேள்விக்கணைகள் எரிச்சலூட்டியது. தான் ‌நினைத்தது நடக்காத கோபத்தில், “எங்க போனாலும் உங்கிட்ட சொல்லிட்டு தான் போகணுமோ? சரியான மிடில்க்ளாஸ் மென்டாலிட்டி” என்று முணுமுணுத்தான்.

லேட்டாக வந்ததுமில்லாம், அதைப்பற்றி கொஞ்சம் கூட வருத்தம் தெரிவிக்காமல், தெனாவெட்டாக பேசிய கணவனின் பேச்சில் தாறுமாறாக ப்ரபாவதிக்கு கோபம் ஏறியது.

“ஓ… அப்டின்னா, பொண்ணுங்களும் வீட்டுல சொல்லாம, கொள்ளாம ராத்திரி முழுக்க ஊரை சுத்திட்டு வீட்டுக்கு லேட்டா வரலாமா? அது தான் உங்க ஹைக்கிளால் மென்டாலிட்டியா? இது எனக்கு தெரியாமப் போச்சே!” என்று அதிசயத்தவள், கணவனில் ஏதோ வித்தியாசப்பட, அவன் முகத்தருகே தன் முகத்தை கொண்டு போய், மூக்கை சுருக்கி வாசம் பிடித்தாள்.

“என் பேபி, செம மூட்ல இருக்குது போலயே, வந்ததும் வராததுமா மாமனை வாசம் புடிக்குது.” உல்லாசமாக கேட்டவன் ப்ரபாவதி எதிர்பாராத நேரத்தில், தன்னருகில் இருந்த அவளின் முகத்தைப் பற்றி இதழமுதம் அருந்திவிட, அவனில் இருந்த ஆல்கஹாலின் வாடை உள்ளேன் ஐயா என்று ப்ரபாவதியிடம் தன் இருப்பை உறுதிப்படுத்தியது.

“ச்ச்சீ… த்தூ… கருமம்… குடிச்சிருக்கீங்களா?”

முகத்தை அருவருப்பாக சுருக்கியபடி, தன் உதடுகளை பிய்த்து விடுவது போல கையால் துடைத்துக்கொண்டே கேட்டாள் ப்ரபாவதி.

“என்ன சொன்ன? எம்முத்தம் உனக்கு ச்சீ… த்தூ… கருமமா? இந்த முத்தத்துக்காக ஆயிரம் பேரு காத்துக்கிடக்க, போயும்… போயும்… உன்னைப் போய் கல்யாணம் பண்ணுனேன் பாரு என்னைச் சொல்லணும்.”

“இல்லயில்ல… இந்த வீட்டுல மூனு கேர்ள்ஸ்ஸுக்கு மூத்த அண்ணனா என்னை பெத்துப் போட்டாங்களே… என்னை பெத்தவங்க, அவங்களை சொல்லணும்.”

கணவனின் வார்த்தைகளில் உறைந்து போய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரபாவதி. அவளை சட்டை செய்யாதவனாக,

“இந்த சுபா மட்டும் கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகியிருந்தான்னா, நானும் என்னைப் போல ஹைக்கிளாஸ் மென்டாலிட்டி உள்ள ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி லைஃபை ஜாலியா என்ஜாய் பண்ணியிருப்பேன். இப்பிடி எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வர்ற உன்பக்கமா தலை வச்சு கூட படுத்துருக்க மாட்டேன்.”

ரஞ்சித்தின் உள்ளே போயிருந்த குட்டிச் சாத்தான் குட்டையை அழகாக குழப்பிவிட்டுக் கொண்டிருந்தது…