கற்பகம் விலாஸில் ஒருநாள் காலை உணவை தாய் பரிமாற, தந்தையோடு உண்டு கொண்டிருந்த ரஞ்சித், தான் அமெரிக்கா போகப் போவதாகவும், அப்படி அங்கே போகும் பட்சத்தில் அதன் பிறகு இந்தியா பக்கமே தலைவைத்து படுக்கப் போவதுமில்லை என்றும் தனது அமர்த்தலானக் குரலில் படுதீவிரமாகச் சொல்ல, பெற்றோர்கள் அதிர்ந்து தான் போனார்கள்.
‘தன் திரண்ட சொத்துக்கள் அத்தனைக்கும் ஒரே ஆண் வாரிசான மகன், அமெரிக்காவே தஞ்சமென்று அங்கேயே இருந்து விட்டால் தன் கதி என்ன ஆவது? அதற்காகவா அவனை அத்தனை கஷ்டப்பட்டு அங்கிருந்து இங்கே தான் அழைத்து வந்தது?’
யோசித்த இராஜசேகரன், மகனின் முடிவில் உள்ளுக்குள் பதைபதைத்துப் போனவராய் “என்னாச்சு ப்பா? ஏன் இப்டி திடீர்னு ஒரு முடிவு எடுத்துருக்க?” என்று கேட்க,
“என்னோட விருப்பத்தை மதிக்காத சொந்தங்களோட, ஒரே வீட்ல ஒன்னா இருக்கிறதோட, யாருமே இல்லாதவனைப் போல கண்காணாத நாட்டுல தனியா இருக்குறதே சுகம்.” கசப்பான குரலில் சொன்னான் ரஞ்சித்.
கூடவே ஒரு விரக்தி சிரிப்பை இதழ்களில் தவழவிட்டவன், “ம்ஹூம்… பெத்த அம்மாவுக்கே எம்மேல நம்பிக்கை வர்றமாதிரி நடந்துக்காத நானெல்லாம், எங்க இருந்தா என்ன?’ என்றான் சலிப்போடு.
மகன் சொல்ல வருவது புரிந்தவராக சௌந்தர்யா, “ஐயோ ரஞ்சித்! எம்பிள்ளை மேலயே எனக்கு நம்பிக்கை இல்லை ன்னு நானெப்படி ப்பா சொல்லுவேன்? உன்னோட லைஃப் ஸ்டைல்லுக்கு ப்ரபா மேட்ச் ஆகமாட்டான்னு தான சொன்னேன்.” அன்றைய தன் வார்த்தைகளுக்காக மறுபடியும் விளக்கம் கொடுத்தார்.
“அப்போ அந்த ப்ரபாவை கல்யாணம் செய்து வைச்சா, நீ எங்கயும் போகாமல் இங்கயே இருந்திடுவியா?” மகனை இங்கே பிடித்து வைத்துக்கொள்ளும் துருப்புச் சீட்டு கிடைத்தவராக, வேகமாக கேட்டார் இராஜசேகரன்.
“என்னோட விருப்பப்படி எல்லாம் நடந்தா, நான் ஏன் நாட்டை விட்டு ஓடப்போறேன்? ஆனா, அது நடக்குமா? நீங்க இரண்டு பேரும், மாமா வீட்டுக்குப் போய் ப்ரபாவை எனக்காக பொண்ணு கேப்பீங்களா? அப்டியே நீங்க கேட்டாலும், அவங்க உடனே தந்துடுவாங்களா என்ன?”
“ஓஹ்… தரமாட்டேன்னு வேற சொல்லுவாங்களோ? அந்த பொண்ணைக் கல்யாணம் செய்துக்க உனக்கு தான் முதல் உரிமை. நீ வேண்டாம்னு சொன்னாத் தான், அவளுக்கு வேற மாப்பிள்ளையே அவங்க பாக்கலாம், தெரியுமா?”
மகன் தங்களைவிட்டு போய்விடக்கூடாது என்பதற்காக, இதுவரை, தான் உறவாகக் கூட பார்க்காத வீட்டில், மகனது உரிமையைப் பற்றிப் பேசிய கணவரை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார் சௌந்தர்யா.
அந்த பார்வை, “இப்போது நீ எதிர்பார்க்கும் உரிமையை, அன்று அவர்களுக்கு கொடுத்தாயா?” என்று அவரைக் கேட்க, எப்போதும் போல இப்போதும் மனைவியின் பார்வைக்கு பதில் சொல்லமுடியாதவராக, மனைவியிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டார் மனிதர்.
சௌந்தர்யாவுக்கு தான் இரண்டும் கெட்டான் நிலைமை. முடிவில் பிள்ளைப் பாசமே வென்றது.
கற்பகம் அம்மாவும், தான் பேசி அங்கே எதுவும் மாறிவிடப் போவதில்லை என்பதால், அமைதியாக ஒதுங்கிக் கொண்டார். மறுநாளே பெற்றோரை அழைத்துக் கொண்டு மாமனின் வீட்டுக்கு தகவல் எதுவும் சொல்லாமலேயே பெண் கேட்டு வந்திறங்கி விட்டான் ரஞ்சித்.
அது ஒரு புதன்கிழமையின் பொன் அந்தி மாலைப்பொழுது… அவர்கள் வந்து இறங்கிய நேரத்திற்கு சண்முகம் தம்பதியரைத் தவிர, வேறு ஒருவரும் வீட்டிலில்லை.
சத்யாவும் முரளியும் தங்கள் கடைகளுக்குச் சென்றிருக்க, ரேவதி மகளோடு தாய் வீட்டுக்கு சென்றிருந்தாள்.
அன்றைய பொழுதிற்குப் பிறகு மறுநாளிலிருந்தே கல்லூரிக்கு போக ஆரம்பித்திருந்த ப்ரபா, இன்றும் கல்லூரிக்குத் தான் சென்றிருக்கிறாள்.
காதலர்கள் இருவரும் தற்சமயம் ஃபோனில் பேசிக்கொள்வது இல்லையாதலால், அவளுக்கும் இவர்கள் வரும் விஷயம் தெரியாது.
எதிர்பாராத நேரத்தில் கணவனோடும் மகனோடும் வந்திறங்கிய தங்கையைக் கண்டவுடன் பரபரத்துப் போனார் சண்முகம்.
தன் வயதையும் மறந்தவராய், வாசலுக்கு ஓடியவர், “வாங்க மாப்பிள்ளை…” என்று வாய்நிறைய அழைத்து, மற்ற இருவரையும் புன்னகையோடு கண்களை மூடி தலையசைத்து வரவேற்றவர், தன் தோளில் கிடந்த துண்டால் சோஃபாவில் இல்லாத தூசை தட்டி அவர்களை அதில் உட்காரும்படி பணித்தார்.
பிறகு மனைவியின் புறம் திரும்பி, “போய் குடிக்க ஏதாவது கொண்டு வா ம்மா” என்றவர் கண்டது, கல்லென இறுகியிருந்த மனைவியின் முகத்தை தான்.
மனைவியின் இந்த நிலை எதனாலென்று அவருக்கு புரியத் தான் செய்தது. எத்தனையோ நாட்கள் வாய் ஓயாது மனைவி புலம்ப கேட்டிருக்கிறார் தானே. ஆனால் அதையெல்லாம் காட்டுவதற்கு இது நேரமல்லவே.
“போ தனம்…” கணவனின் கண்களிலிருந்த இறைஞ்சுதலில், எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தவரிடம்,
“அத்த…முன்னல்லாம் இஞ்சியும், ஏலக்காயும் தட்டி போட்டு டீ போட்டுக் குடுப்பீங்களே, அதையே போட்டுக்குடுங்க.” படு இயல்பாக ரஞ்சித் சொல்ல, விழிகள் விரிந்து போயின தனலட்சுமிக்கு.
அதே நிலைமைதான் அவனுடைய பெற்றோருக்கும். அதிலும் இராஜசேகரனுடைய நிலமை… சொல்லவே வேண்டாம்.
தன்னால் பொருந்தமுடியாத மனைவியின் பிறந்த வீட்டு உறவுகளோடு, மகன் இயல்பாக பொருந்த ஆரம்பித்திருப்பதைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது அவருக்கு.
தனலட்சுமியின் மனதுக்குள் சௌந்தர்யா மீது கோபம் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தாலும், கணவனோடும் மகனோடும் ஒரு மகாராணியைப் போல தன்வீட்டில் வந்து உட்கார்ந்திருப்பவரை அலட்சியப்படுத்த முடியவில்லை.
வேறுவழியில்லாமல் டீயைப் போட்டு எடுத்துக் கொண்டு தனலட்சுமி ஹாலுக்கு வர, கல்லூரி விட்டு வந்த தங்கையை அழைத்துக் கொண்டு சத்யாவும் வீட்டுக்கு வந்துவிட்டான்.
தங்கையை வாசலில் விட்டு விட்டு திரும்பி போக நினைத்தவனுக்கு, வீட்டு வாசலில் நின்ற கார், வீட்டுக்கு யாரோ வந்திருப்பதை உணர்த்த, ‘வந்திருப்பது யாரென்று தான் பார்த்து விட்டு செல்லலாமே’ என்று நினைத்து உள்ளே வந்தவன், கொஞ்சம் உறைந்து தான் போனான்.
சட்டென்று, டீயோடு அங்கு வந்த அன்னையின் கண்களை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தவன், அத்தையிடம், “வாங்கத்த…” என்று முகமன் கூறினான்.
அவனோடு உள்ளே வந்த அவனின் தங்கையோ, தன் வீட்டு ஹாலில் பெற்றோரோடு உட்கார்ந்திருந்த ரஞ்சித்தை எதிர்பார்க்காதவளாக, ஒருவித அதிர்ச்சியும், படபடப்பும் சேர்ந்து கொள்ள, மேகத்திற்கு பின்னால் மறைந்து கொள்ளும் நிலவாக, தன்னை தமையனுக்கு பின்னால் மறைந்துக் கொள்ள முயன்றாள்.
ஆனால் அங்கிருந்த அவளின் சூரியனின் சுட்டுவிழி பார்வையின் வீச்சு தாங்காமல், தமையனின் முதுகுக்குப் பின்னாலிருந்து லேசாக எட்டிப்பார்த்து, “வாங்க…” என்று பொதுவாகச் சொல்லியவள், வேகமாகச் சென்று தனதறைக்குள் மறைந்து கொண்டாள்.
சத்யாவோ, “நீங்க இருங்கத்த… ப்ரபாவைக் கொண்டு விடத்தான் வந்தேன், நான் கிளம்புறேன்.” என்றபடி கிளம்ப ஆயத்தமானான்.
தங்களுக்குள் இதற்கு முன் எதுவுமே நடந்திருக்கவில்லை போன்ற குரலில் இராஜசேகரன் தான் பேசியிருந்தார்.
“எப்படி இவரால் நேரத்திற்கு தகுந்தாற்போலெல்லாம் தன்னை மாற்றிக் கொள்ள முடிகிறது?’ அதிசயித்துப் போனான் சத்யநாதன்.
ஆனாலும், அவரின் வார்த்தைகள், நகர்ந்த அவனின் கால்களுக்கு கடிவாளமிட்டது. தந்தையின் பக்கமாக ஒதுங்கியவன், யாருடைய கவனத்தையும் கவராமல் ஃபோன் செய்து தம்பியையும் வீட்டுக்கு வரச்சொன்னான்.
“எம்பையன் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க விரும்புறான். அதனால எவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிடலாம். சரிதான?”
தனம் கொடுத்த டீயை உறிஞ்சிக்கொண்டே, ஏதோ தன் மகன் கந்தர்வ லோகத்துக்கு கந்தர்வன் போலவும், அவனை கல்யாணம் செய்து கொள்ள இவர்கள் பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற பாவனையில், சண்முகத்திடம் இராஜசேகரன் பேச, பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் சண்முகம்.
திருமணத்தைப் பற்றி மகளின் தீர்க்கமான பதிலும், தன் மகளை பெண் கேட்டு கணவனோடு வந்திருக்கும் தன் தங்கையின் வருகையுமே அவர்முன் விஸ்வரூபமெடுத்து நிற்க, எப்படி எதிர்வினையாற்றுவது எனத் தெரியாமல் தடுமாறி நின்றார் மனிதர்.
உடன்பிறந்தவரின் மனநிலையை நிமிடத்தில் கணித்து விட்ட சௌந்தர்யா, தன் இருக்கையிலிருந்து எழும்பி அண்ணனுக்கு அருகில் சென்று, அவர் கைகளிரண்டையும் பற்றியபடி,
“எல்லாம் நல்லதாவே நடக்கும் ங்குற நம்பிக்கையில என் பையனுக்கு நம்ம ப்ரபாவை கல்யாணம் செய்து கொடுங்கண்ணே” என்று கேட்க, சண்முகத்தின் தலை சரியென்று மெதுவாக ஆடியது.
அதை பார்த்துக் கொண்டிருந்த தனலெட்சுமி சட்டென்று எரிச்சல் மூண்டவராக, வாய் வார்த்தையாக தன் கணவர் பதில் சொல்லுவதற்குள்ளாகவே, “உண்மையைச் சொல்லணும்னா, உங்க பையனுக்கு எங்க பொண்ணைக் கட்டிக்குடுக்க இம்மியளவு கூட எங்களுக்கு விருப்பம் கிடையாது” என்றார் வேகமாக.
தனலட்சுமியின் பேச்சு, ஒரு நிமிடம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரோ அலட்டிக்கொள்ளாமல்,
“ஆனா, எம்பொண்ணு உண்மையாவே உங்க பையனை விரும்புறதால, வேறவழியில்லாமல் நாங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டியதாப் போச்சு” என்று முடித்தார்.
‘உண்மையாகவே’ என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாக, சத்தமாகச் சொல்லிய தனலட்சுமியின் செயலில் கொஞ்சம் அதிருப்தியாக மகனைப் பார்த்தார் ராஜசேகரன்.
அவனுக்குமே மாமன் மனைவியின் பேச்சு ரசிக்கவில்லை தான். ஆனால் இந்த திருமணத்திற்கு தடையாக அவர் இருப்பார் என்று எண்ணியிருந்தவனுக்கு, அவருடைய சம்மதம், ஏனையவற்றை பொருட்படுத்தாமல் அமைதியாக இருக்க வைத்தது.
அவனைப் பொருத்தவரை இந்த திருமணம் மிக மிக அவசியமான ஒன்று. அது நல்ல முறையில் நடைபெறுவதற்காக எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வான்.
தன் மனநிலையின் மாற்றத்தை எண்ணி ரஞ்சித்துக்கே சிரிப்பு வந்தது. ‘ஹை கிளாஸ் சொசைட்டியில் பிறந்து, பணமும் பகட்டுமாக வளர்ந்து, அமெரிக்க நாகரீகத்தில் புரண்ட தனக்குள் எப்படி, இப்படி ஒரு மாற்றம் வந்தது?’
தன் கேள்விக்கு பதில் அந்த மூன்றெழுத்து வார்த்தை தான் என்னும் போது அவனுக்கே தன்னை நினைத்து மலைப்பாகத் தான் இருந்தது.
‘எப்படியோ, எல்லாம் சரியாக நடந்தால் சரிதான்.’ என்றெண்ணியவன், தேவையில்லாத வார்த்தைகளை இந்த காதில் வாங்கி, அந்த காது வழியாக வெளியே விடும் காரியக்காரன் ஆகிப்போனான்.
தனலட்சுமியுமே எளிதாக ஒன்றும் இந்த திருமணத்திற்கு சம்மதித்து விடவில்லை. மகளுக்கு வேறொரு வரனோடு திருமணம் நடந்தால், ஏற்படக்கூடிய பிரச்சினைகளின் அடிஆழம் வரை சென்று, அலசி ஆராய்ந்து தவமணி கூறிய வார்த்தைகளே, அவரை இந்த முடிவுக்கு சம்மதிக்க வைத்தது.
ம்ம்… ஆண்பிள்ளைகளின் எத்தனைக் காதல்களை வேண்டுமானாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்த சமுதாயம், பெண் பிள்ளைகளின் காதலை அப்படியொன்றும் சும்மா விட்டுவிடுவதில்லையே. கண், காது, மூக்கு வைத்து நடமாடவிட்டு, அந்த பெண்ணின் திருமண வாழ்க்கையையே சிலசமயங்களில் கேள்விக்குறியாக்கி விடுகிறதே!
“ஒருவேளை அப்படி ஏதாவது அசம்பாவிதம், நம் பிள்ளையின் வாழ்விலும் நடந்துவிட்டால் என்ன செய்யமுடியும்?” என்ற தவமணியின் கேள்வியே, விருப்பம் இல்லாவிட்டாலும் தனலட்சுமியை இந்த திருமணத்திற்கு தலையாட்ட வைத்திருந்தது.
திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கவும், தன் கையோடு கொண்டு வந்திருந்த பூவை எடுத்துக் கொண்டு ப்ரபா நுழைந்த அறைக்குள், சௌந்தர்யாவும் நுழைந்தார்.
அங்கே தன் அத்தையை எதிர்பாராத ப்ரபா மெல்ல எழுந்து நின்றாள். அவளை ஆதூரமாக கட்டிக்கொண்ட சௌந்தர்யா,
வாடிக்கிடந்த அந்த மலர்முகத்தைக் கழுவி வரச்சொல்லி, ஆசை ஆசையாக தலைசீவி, பின்னலிட்டு, தான் கொண்டு வந்திருந்த பூவை, அந்த பூவைக்கு சூடிவிட்டார்.
மனமோ, ‘இந்த சிறுபெண், வாழ்க்கையில் என்னைப்போல வலிகளை சந்தித்து விடக்கூடாது இறைவா!’ என்று பிரார்த்தனை செய்தது.
அதே நேரம் இன்றைய மகனின் நடவடிக்கை, ‘அப்படி எல்லாம் எதுவும் நடந்து விடாது’ என்ற நம்பிக்கையையும் அந்த தாயின் மனதில் விதைத்திருந்தது.
“சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்து சேரு கண்ணம்மா…” என்ற வார்த்தையோடு, அவர் அறையை விட்டு வெளியே வந்தார்.
அவர் மகனோ, “ம்மா… பிளீஸ்… ஒரு ஃபைவ் மினிட்ஸ், நானும் ப்ரபாவை பாத்துட்டு வந்துடுறேன்.”
அனைவருக்கும் தனித்தனியாக அறைகள் இருந்தாலும் அடிப்படையில் அது ஒரு சிறிய வீடே. எனவே ஹாலில் பேசிய ரஞ்சித்தின் வார்த்தைகள் ப்ரபாவுக்கும் தெளிவாக கேட்க, உடல் விறைப்புற்றது பெண்ணுக்கு.
அவளோ, “போடி, நீ வேணாம்னு சொல்லிட்டு, இப்போ ஏன் வந்து நிக்குறீங்க? போங்க… போங்க…” அவன் அணைப்புக்குள் அடங்க மறுத்து, திமிறியபடியே தழுதழுத்தக் குரலில் சொல்லி, தன் பிஞ்சுக்கரங்களால் அவன் மார்பில் மொத்தினாள்.
அந்த பூங்கரங்களை அநாயாசமாக சமாளித்து பெண்ணவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், அவள் உச்சந்தலையில் தன் நாடியை அழுந்த பதிந்தபடியே, “இப்போ வேணும்னு தோணிச்சு, அதான் வந்துட்டேன்” என்றான் மென்மையானக் குரலில்.
சண்டைக்கு தயாரானவளிடம், “அம்மா தாயே! அன்னைக்கு ஏதோ தெரியாம சொல்லிட்டேன் ம்மா… இனி ஜென்மத்துக்கும் உங்கிட்ட இப்டி பேசமாட்டேன் போதுமா?” சொல்லியவனின் நெஞ்சுக்குள் ஏதோ தடம்புரண்டது மட்டும் நிஜம்.
“ரஞ்சித்…”
அன்னையின் அழைப்பில், தான் கேட்ட ஐந்து நிமிடங்கள் காலாவதியாகிப் போனது தெரியவர, சட்டென்று தன் பெண்மயிலை இறுக அணைத்து, அந்த பட்டுக்கன்னத்தில் அழுத்தமாக தன் அச்சாரத்தை பதித்தவன்,
“கண்டதையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காம, அத்தானை மட்டுமே நினச்சிட்டிரு பேபி.” கண் சிமிட்டியபடியே சொல்லியவன் அறையிலிருந்து வெளியேறினான்.
போகும் தன் அத்தானையே, இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் ப்ரபாவதி.
****************
திருமணத்தை தள்ளிப்போட மணமகன் விரும்பாததால், அன்றிலிருந்து சரியாக முப்பதாவது நாள் திருமணம் என்றும், மீதி படிப்பை ப்ரபா திருமணத்திற்கு பிறகு படித்து கொள்ளலாமென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
திருமணத்தை பெண் வீட்டார் தான் நடத்துவோம் என்று சத்யநாதனும், முரளியும் திட்டவட்டமாக சொல்லியிருந்தார்கள்.
“அதெப்படி…” என்று முரண்டு செய்ய ஆரம்பித்த தகப்பனை,
அந்த மாதத்தில் திருமணங்கள் அதிகமாக இல்லையாதலால் வேளச்சேரியில், தான் எதிர்பார்த்த கல்யாணமண்டபத்தை எளிதாகவே புக் செய்திருந்தான் சத்யா.
அன்று தங்கள் கடையின் வாரவிடுமுறை தினமாதலால், நிதானமாக எழுந்து எல்லா வேலைகளையும் முடித்து உட்கார்ந்திருந்தார்கள் அந்த வீட்டின் ஆண்கள் மூவரும்.
“கல்யாணத்துக்கு எத்தனை பத்திரிகை அடிக்க வேண்டி இருக்கும் ப்பா?”
“சும்மாவே ஏகப்பட்ட செலவு இருக்கும். அதனால நெறைய ஆட்கள் கூப்பிடாம சிம்பிளா கல்யாணத்தைப் பண்ணுனாப் போதும் ப்பா.”
பெரிய மகனின் கேள்விக்கு பதில் சொல்லிய சண்முகம், “சத்யா, கல்யாணச் செலவை சமாளிக்க பணம் போதுமான அளவு உங்ககிட்ட இருக்காப்பா” தயக்கமாகக் கேட்டார்.
தந்தையின் கேள்வியை உள்வாங்கிய மகன், ஒருநிமிடம் அமைதியாக இருந்துவிட்டு பேச ஆரம்பித்தான்.
“உண்மையைச் சொல்லணும்னா, இப்போ கைல காசு தட்டுப்பாடு தான் ப்பா. தம்பிக்கு கடை கட்டி ஒரு வருஷம் தான் முடிஞ்சிருக்கு. அதனால கேஷ்ஷா கையில கிடையாது.”
“வர்ற வருமானத்துல, வீடு கட்டுறதுக்குன்னு ஒரு பெரிய தொகையை சீட்டு கட்டுறோம். தம்பி கடை கட்டும் போது சாட்டேஜ் ஆன தொகைக்கு போட்ட லோனுக்கு தவணை கட்டுறோம். வீட்டு செலவு, வாடகைன்னு எல்லாம் கடை வருமானத்துல தான். அதனால பெருசா சேத்து வைக்க முடியல.”
“அதே போல, ப்ரபா கல்யாணத்துக்குன்னு போட்டு வச்சிருக்க டெப்பாசிட் மெச்சூர் ஆக இன்னும் பத்து மாசம் இருக்கு. அதை இப்போ உடைச்சு எடுத்தா அதோட முழு பெனிஃபிட்டும் நமக்கு கிடைக்காது. அதான் என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன் ப்பா.” உண்மையான நிலவரத்தை தந்தையிடம் மறைக்காமல் கூறினான் தலைமகன்.
“எப்பிடின்னாலும் ஒரு ஐம்பது பவுன் நகையாவது நாம ப்ரபாவுக்கு போடணும்ல சத்யா?” தன் ஆசையை கேள்வியாக கேட்டார் தனலட்சுமி.
“ம்ம்… கண்டிப்பா போட்டுறலாம் ம்மா… ஆனா, உடனடியா பணத்துக்கு தான்…” என்று இழுத்தவன்,
“ஏன் முரளி, இப்போ தான பழைய கடை லோன் முடிஞ்சு அதோட டாக்குமெண்ட்டை கைல எடுத்தோம். பேசாம கடை மேல திரும்பவும் லோன் எடுத்துறலாமா?” என்றவன்,
“ம்ப்ச்… இல்ல… இல்ல, லோனுக்கு ஆயிரம் ப்ரொசீஜர்ஸ். நம்ம அவசரத்துக்கு உடனே பணம் கிடைக்காது. பேசாம ராம்லால் சேட்டு கிட்ட கடையை அடமானம் வச்சு தற்சமயம் பணத்தை புரட்டிருவோம். அப்புறம் அந்த டெபாசிட் மெச்சூர் ஆனதும்…”
சத்யா முழுவதும் சொல்லிக்கூட முடிக்கவில்லை, அவன் வார்த்தைகளுக்கிடையே குறுக்கே பாய்ந்திருந்த தனலட்சுமி, “ஒருத்தி கல்யாணத்துக்கு குடியிருந்த வீட்டை அடமானம் வச்சு, அத நாம இழந்தது போதாதா? இப்போ இவ கல்யாணத்துக்காக கடையையும் அடமானம் வச்சு அதையும் நாம இழக்கணுமா?” ஓவென்று கத்தியிருந்தார்.
ஆமாம்… பொன்னை வைக்கும் இடத்தில் பூவையாவது வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கையின் கல்யாண செலவிற்காக, தான் குடியிருந்த வீட்டை தன் பெரியப்பா மகன் பாலனிடம் அடமானம் வைத்திருந்தார் சண்முகம்.
ஆனால் அந்த அடமான பத்திரத்தை, கிரயபத்திரமாகவே மாற்றி சண்முகம் குடும்பத்தாரை ஏமாற்றி, வீட்டை விட்டே வெளியே அனுப்பி விட்டார் அந்த மனிதர்.
அதனால் தான் இப்போதும் அடமானம் என்றதும் பதறிப்போனார் தனலட்சுமி.
“ம்மா… ஒருத்தங்க அப்படி செய்தாங்கன்னா, எல்லாரும் அப்படியே செய்வாங்கன்னு கிடையாதும்மா. நமக்கு இப்போ இதை விட்டா வேற ஆப்ஷனே கிடையாது ம்மா.” சூழ்நிலையை அன்னைக்கு புரிய வைக்க முயன்றான் சத்யா.
ஆனால் தனம் அதை ஏற்றுக்கொள்ளாமல் முரண்டு பிடிக்கவே, “ண்ணா… பேசாம ரேவதி நகையை வாங்கி ப்ரபாவுக்கு போடுவோம். அப்புறம் பணம் மட்டும் தானே, எப்படியாவது ஏற்பாடு பண்ணிக்கலாம். காசு வந்ததும் ரேவதிக்கு செஞ்சுக்கலாம்.”
பிரச்சினைக்கு தன்னால் முடிந்த தீர்வை முரளி சொல்ல, வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற ரேவதியின் முகம் இருண்டு போனது.
ஆனால் சத்யாவோ, “சேச்ச… நம்ம வீட்டுக்கு வாழ வந்த பிள்ளைக்கு, நாம புதுசா செய்து போடணுமேயொழிய, அதுட்ட இருக்குறதை பிடுங்கக்கூடாது டா” என்று தம்பியின் யோசனையை உடனடியாக மறுத்தான்.
பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொருவரும் அப்படி செய்யலாமா? இப்படி செய்யலாமா? என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
“டிஸ்கஷன் எல்லாம் பயங்கரமா போய்ட்டு இருக்குது போலயே?” என்று கேட்டுக்கொண்டே அங்கே வந்தார் தவமணி. வீட்டில் உள்ளவர்களின் முகங்களெல்லாம் கொஞ்சம் களையிழந்தது போல அவருக்கு தோன்றவே, “என்ன விஷயம்?” என்று தங்கையிடம் கேட்டார்.
ஆறுதலாக சாய்ந்து கொள்ள தோள் கிடைக்கவும், தனலட்சுமி அத்தனையையும் மடை திறந்த வெள்ளமென தவமணியிடம் கொட்டினார்.
கவனமாக கேட்டுக் கொண்ட அந்த பெண்மணி, “கல்யாணத்துக்கு தேவையான பணத்தை நான் தரேன் சத்யா. உனக்கு வரவேண்டிய பணம் வந்ததும் நீ எனக்குத் திருப்பித் தா.” கொஞ்சம் கூட யோசிக்காமல் பளீரென்று சொல்லியிருந்தார்.
‘கல்யாணச் செலவென்றால் சும்மாவா? அவ்வளவு பெரியத் தொகையை கைமாற்றாக வாங்குவதா? அதுவும் பத்து மாதங்களுக்கு!’ என்ற எண்ணத்தில், “அது… பெரியம்மா…” லேசாக தடுமாறினான் சத்யா.
“என்னடா? எனக்கு ஒரு பணக்கஷ்டம் வந்து, அந்நேரம் உங்கிட்ட பணம் இருந்தா, பெரியம்மாவுக்கு தர, நீ யோசிப்பியா என்ன?”
தவமணியின் கேள்விக்கு, “இல்லை” என்று சத்யா தலையசைத்தான். “அப்போ எவ்வளவு பணம் வேணுமோ, நீயும் எங்கிட்ட வாங்கிக்கோ.” தீர்மானமாக கூறினார் தவமணி…