Advertisement

பகுதி – 02

சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் எனும் எழுத்துக்களை முகப்பு பகுதியின் இருதூண்கள் தாங்கிக்கொண்டு நின்றது. காவல்நிலையத்தின் சுற்றுச்சூழல் பார்க்க ரம்மியமாக காணப்பட்டது.

வளாகத்திற்குள் நடமாடும் முதலுதவி சிகிச்சை வாகனங்கள் தயார் நிலையில் நின்றுகொண்டிருந்தது.  காவல்துறையில் பெண்காவலர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

இதுவரை எதற்காகவும் காவல்துறை பக்கம் பாதம் பதிக்காத பசுபதி முதன்முறையாக தனது செல்ல மகள் ஆத்மிகாவிற்காக கண்ணீருடன் தன் மனைவி வாசுகியோடு வந்து நின்றார்.

சுமதிம்மா,  “அவங்க யார்? எதுக்கு வந்திருக்காங்கனு விவரங்கள கேளுங்க. ஹெட்கான்ஸ்டபிளும், சப் இன்ஸ்பெக்டர் மாயாவும் இன்னும் வர்லையா?” என டி எஸ் பி ஜீவரேகாவின் கம்பீரமான குரல் காவல்நிலையத்தில் எதிரொலிக்க.

அவங்க ரெண்டு பேரும் பக்கத்தில இருக்க அரசாங்க பள்ளிக்கு பெண்குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டம் பத்தி விழிப்புணர்வு கொடுக்க போனாங்க மேடம். வர கொஞ்சம் லேட் ஆகும்.

இன்ஸ்பெக்டர் ரெஜினாவும் இன்னும் வர்லையா?

அவங்க அந்த பாலியல் வன்கொடுமைக்கு ஆளான  பிரகல்யா பொண்ணு கேஸ் விஷயமா அந்த பாப்பா வீட்டுக்கு விசாரணைக்கு போய் இருக்காங்க மேடம்.

அந்த எப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை? போட்ட வழக்குகளை எல்லாம் ஆன்லைன்ல அப்லோட் பண்ணியாச்சா?

பண்ணியாச்சு மேடம்.

அது சம்பந்தமான  அப்டேட் தகவல்களை எல்லாம் அப்லோட் பண்ணியாச்சா?

பண்ணியாச்சு மேடம்.

“ஓகே. குட். அவங்க ரொம்ப நேரமா நிக்கறாங்க போல. வரச்சொல்லி என்னனு கேளுங்க” என ஜீவரேகா தனது இருக்கையில் அமர.

சரிங்க மேடம். “ஐயா வாங்க. என்ன விஷயமா வந்திருக்கிங்க” என தனது விசாரணையை ஏட்டு சுமதி தொடங்க.

“அம்மா என் பேரு பசுபதி. இவ என் பொண்டாட்டிங்க. புகார் கொடுக்களாம்னு வந்தோமுங்க” என்றவரின் கண்கள் குளமாக. உடலெங்கும் சிறிய நடுக்கம் தென்பட்டது. உடன் வந்த அவரது மனைவியோ ஏற்கனவே அழுது வீங்கிய முகத்தோடு காணப்பட்டார்.

முதல்ல அழாதிங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை. பொறுமையா சொல்லுங்க.

“எங்க பொண்ண மூணு நாளா காணமுங்க. நாங்களும் வருவா வருவானு பாத்த கண்ணும் பூத்து போச்சுங்க. இப்ப வரைக்கும் போனவ வரவே இல்லைங்க” என அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் குரல் உடைந்து அழுதார் பசுபதி.

நீங்க யாரு? உங்க வீடு எங்க இருக்கு. நீங்க என்ன பண்றிங்க? உங்க பொண்ணு பேரு என்ன? ஒவ்வொன்னா சொல்லுங்க.

என் பேரு பசுபதிங்க. எங்க வீடு இங்க ஜங்ஷன்ல தான் இருக்கு. நாங்க தள்ளுவண்டியில இட்லி சுட்டு வித்து பொழப்பு நடத்திட்டு இருக்கோம்மா. என் பெரிய பொண்ணு பேரு ஆத்மிகா.  அவள தான் மூணு நாளா காணலம்மா.

மூணு நாளா காணலனு சொல்றிங்க. உடனே வந்து தகவல் சொல்லாம இப்ப வந்து சொல்றிங்களே.

வந்துடுவான்னு நினைச்சு தான் காத்துகிடந்தோம்மா. ஆனா அவ வர மாதிரி தெரில. ரொம்ப பயமா இருக்கு. அதான் இங்க வந்துட்டோம்.

உங்க பொண்ணுக்கு எத்தனை வயசு. என்ன படிக்கிறாங்க.

வயசு இருபத்து ஒன்னுங்க. பி எஸ் ஸி முடிச்சதுங்க. அதுக்கு மேல  கலெக்டர் ஆகனும்னு எப்பவும் சொல்லிட்டே இருக்கும். அதுக்கு ஏதோ பரிச்சை எழுதனும்னு சொல்லும். அதுக்கு ஏதேதோ சொல்லுவா. அதெல்லாம் எங்களுக்கு புரியாது.

“உங்க பொண்ணு எந்த காலேஜ்ல படிச்சாங்க?”

“இந்த பொம்பள புள்ளைங்க படிக்கிற காலேஜ். கெவர்மெண்ட் காலேஜி. நல்லா படிக்கற புள்ளைங்க” என கண்ணீர் விட்டார்.

கடைசியா உங்க பொண்ணு வீட்ட விட்டு போகும்போது என்ன கலர் டிரஸ் போட்டு இருந்தாங்க. சுடிதாரா? தாவணியா? சேலையா?

சுடிதாரு தாம்மா. மஞ்சகலர்ல மேல்சட்டையும், செவப்பு கலர்ல ஃபேண்டும் போட்டு இருந்தா. அதே செவப்பு கலர்ல மேல போடுற துணி. அதென்னமோ சால்வையாமாம்.

எங்க போறேன்னு சொல்லிட்டு போனாங்க.

அவ பிரண்ட பாக்க போறேன்னு சொன்னா.

அவங்க வீடு எங்க இருக்குனு சொன்னாளா? பேர் எதுவும் சொன்னாளா?

அவங்க வீடு புதுரோடுல இருக்குனு சொன்னா. பேரு நெனப்புல இல்லம்மா.

கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க ஐயா.

இல்லம்மா. கேளுங்க.

உங்க பொண்ணுக்கு காதல் அது இதுனு..

அய்யோ! அம்மா. என் பொண்ண நான் அப்படி வளக்கல. அப்படி பட்ட பொண்ணும் இல்ல. என்ன வார்த்தை கேட்டிங்க. நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு.

பதட்டப்படாதிங்க ஐயா. எல்லா விஷயமும் தெரிஞ்சா தான உங்க பொண்ண கண்டுபிடிக்க முடியும்.

உங்க பொண்ணு செல்ஃபோன் எதுவும் வச்சிருந்தாங்களா?

“எங்க வீட்டுல இந்த ஒரு செல்லு தாங்க இருக்கு. அவளுக்குனு தனியா செல்லு எதுவும் இல்லங்க” என தனது நோக்கியா செல்லை எடுத்துக் காட்டினார்.

பழைய மாடல். பார்க்கும்போதே தெரிந்தது. பேருக்கு மட்டுமே செல்லாக தெரிந்தது.

உங்க பொண்ணு கடைசியா எப்போ வீட்ட விட்டு போனாங்க.

திங்கட்கிழமை காலைல பதினோரு மணி இருக்கும். அப்ப போனவ தான். இன்னும் வீட்டுக்கு வர்ல. என் பொண்ணு தப்பு பண்றவ இல்லங்க. அவளுக்கு என்ன ஆச்சோனு பயமா இருக்கு. எப்படியாவது நீங்க தான் கண்டுபிடிச்சு கொடுக்கனும்.

எங்க ஜீவரேகா மேடம் கிட்ட ஒரு கேஸ் வந்துட்டாவே அது எப்பேர்ப்பட்ட கேஸா இருந்தாலும் சிதறு தேங்காய் மாதிரி உடச்சி உண்மைய கொண்டு வந்திருவாங்க. கவலப்படாதிங்க.

அக்கம்பக்கத்தில அவங்கள பத்தி சொன்னாங்கம்மா. அதான் நம்பிக்கையோட வந்திருக்கோம்மா.

அதெல்லாம் நிச்சயமா கண்டுபிடிச்சிடலாம். கவலப்படாதிங்க.

வந்ததுல இருந்து நீங்க மட்டும் தான் பேசறிங்க. இந்தம்மா ஒன்னுமே பேசலயே.

அவ ரொம்ப பயந்து போய் பித்து புடிச்ச மாதிரி ஆகிட்டா. என்ன சொல்லியும் அவ சமாதானப்படலங்க. இப்படியே தான் பேயரஞ்ச மாதிரி கிடக்கறா.

அம்மா. எங்ககிட்ட வவ்துட்டிங்கல்ல. உங்ங பொண்ண கண்டிப்பா கண்டுபிடிச்சடலாம். அவங்க தான் டி எஸ் பி ஜீவரேகா மேடம். அவங்கள பார்த்து ரெண்டு வார்த்தை பேசுங்க.

பசுபதியின் உடலிலும் மனதிலும் வலிமையின்றி இருந்தது. ஆனாலும் கண்கள் ஜீவரேகாவைப் பார்க்க கைகள் தானாகவே நன்றி கூற இணைந்தது.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ஐயா. இது எங்க கடமை. நீங்க கவலப்படாம அவங்க கேட்கற விவரங்களை கொடுங்க. நாங்க பாத்துக்கறோம். உங்க பொண்ணு நிச்சயமா கிடைப்பா. நீங்க அவங்க கேட்கறத சொல்லுங்க.

“சரிங்கம்மா” என சுமதியைப் பார்க்க.

உங்கள பத்தின விவரங்கள், உங்க பொண்ண பத்தி விவரங்கள சொல்லுங்க. இவங்க எழுதுவாங்க. உஷா, “இவங்க சொல்ற விவரங்கள எழுதுங்க” என சுமதி கூற.

உஷா பசுபதி மற்ற விவரங்களை சொல்ல சொல்ல எழுதிக்கொண்டார்.

ஐயா, பொண்ணோட போட்டோ எதுவும் இருந்தா கொடுங்க. இதுல ஒரு கையெழுத்து போடுங்க.

“இந்தாங்க என் பொண்ணோட ஃபோட்டோ. எப்படியாவது என் பொண்ண கண்டுபிடிச்சு கொடுங்கம்மா. உங்கள என் குலசாமியா நினைச்சிக்கறேன்” என கரம் கூப்பி நிற்க.

ஃபோட்டோவை  கையில் வாங்கிப் பார்த்த சுமதி ஒரு கணம் புருவங்களை சுழித்தார். “இந்த பொண்ணா?” என்றார்.

இவ தான் என் பொண்ணு ஆத்விகா. இவள பாத்திங்களா?

ஆமா. நேத்து கூட நைட் நகரமலை அடிவாரம் பக்கம் போகும் போது அங்க பாத்தேன்.

என்னம்மா சொல்றிங்க. நகரமலை அடிவாரமா? அங்க எதுக்கு போனா? அங்க என் பொண்ணுக்கு யாரையும் தெரியாதே.

சுமதி, “அந்த பொண்ண நீங்க நேத்து பாத்திங்களா?” என ஜீவரேகா கேட்க.

ஆமா மேடம். நேத்து வீட்டுக்கு போற வழில நான் பாத்தேன். இவங்க சொல்ற அதே கலர் டிரஸ் தான் போட்டு இருந்தா. எனக்கு நல்லா நினைவுல இருக்கு மேடம். இதே பொண்ணு தான்.

அவ தனியா போனாளா? இல்ல கூட யாராவது போனாங்களா?

அந்த பொண்ணு மட்டும் தனியா தான் போனா மேடம். அவ முகத்துல ஒரு சோகம் தெரிஞ்சது.

என்னம்மா சொல்றிங்க. அப்படினா என் பொண்ணு இந்நேரத்துக்கு வீட்டுக்கு வந்திருக்கனுமே. ஆனா இப்போ வரைக்கும் வர்லையே.

“கொஞ்சம் பொறுமையா இருங்க. நாங்க விசாரிச்சிட்டு உங்களுக்கு தகவல் சொல்றோம். நீங்க கிளம்புங்க ஐயா” என ஜீவரேகா கூற.

பசுபதி தன்மனைவியுடன் வீட்டுக்கு கிளம்பினார்.

அப்போது இன்ஸ்பெக்டர் ரெஜினா மிடுக்கோடு கம்பீரமாக காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். ஜீவரேகாவைப் பார்த்து குட் மார்னிங் மேம் என கூற.

குட் மார்னிங் ரெஜினா. போன வேலை என்ன ஆச்சி.

தீவிரமா விசாரணை பண்ணேன் மேம். இன்னும் ரெண்டு நாள்ல இந்த கேஸ் முடிவுக்கு வந்துடும்.

வெரி குட் ரெஜினா. நம்ம பார்வைல இருந்து ஒரு குற்றவாளி கூட தப்பக்கூடாது.

“யெஸ் மேம்” என்றார்.

அப்போது ரெஜினாவிற்கு ஒரு கால் வந்தது. எதிர்முனையில் இருந்த குரலில் நடுக்கமும், பதட்டம், பயத்தை உணரமுடிந்தது.

அனைத்து மகளிர் காவல் நிலையமா மேடம்.

பதட்டப்படாம விஷயத்தை சொல்லுங்க. நீங்க யார்? எங்கிருந்து பேசறிங்க.

“மேடம் நான் ஜங்ஷன் பக்கத்தில தான் இராஜாஜி நகர்ல இருந்து பேசறேன். இ.. இங்க.. ஒரு.. கொலை நடத்திருக்கு மேம். பார்க்கவே பயங்கரமா இருக்கு. குறிப்பிட்ட முகவரியைக் சொல்லி நீங்க உடனே வரனும்” என்றார். .

” ஓகே. இதோ ஃபைவ் மினிட்ஸ்ல அங்க எங்க டீமோட அங்க இருப்போம்” என்ற ரெஜீனா விஷயத்தை ஜீவரேகாவிடம் சொல்ல. ஜீவரேகாவும் சேர்ந்து கிளம்பினார்கள்.

போகும் வழியில் இன்ஸ்பெக்டர் மாயாவிற்கு தகவல் கொடுத்து கொலை நடந்த இடத்திற்கு வரச்சொன்னார்.

இவர்கள் ஜீப்பில் ஏறி அமர. ஜீப் கொலை நடந்த இடத்திற்கு வேகமாக சென்றது. ஃபோனில் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சற்று நேரத்தில் வந்து சேர்ந்தனர்.

அந்த குறிப்பிட்ட வீட்டின் முன்பாக மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏட்டு சுமதி முன்னால் சென்று கூட்டத்தை விலக்கிவிட்டார்.

ரெஜினாவும், ஜீவரேகாவும் நீளமான வராண்டாவில்  நுழைந்தனர். இருவரது கண்களுக்கும் சற்று அதிகமாகவே வேலை கொடுத்து சுழல விட்டிருந்தனர்.

வீட்டிற்குள் நுழைய. ஹாலில் சோஃபாவின் அருகே உடல் முழுவதும் உறுப்புகள் சிதைக்கப்பட்டு, மூளை சிதைந்து வெளியே நிற்க. கண்கள் பிதுங்கி, ஆங்காங்கே சதைகள் கிழிந்து தொங்க  ஒரு உடல் கீழே சரிந்து கிடந்தது.

அதைப்பார்த்த ஜீவரேகாவிற்கு புருவங்கள் உயரந்தது. ரெஜினா இந்த கொலைல ஒரு வித்தியாசத்தை கவனிச்சிங்களா? இப்படியும் ஒரு கொலைய பண்ண முடியுமா?

நீங்க என்ன யோசிக்கறீங்கனு நான் யூகிச்சிட்டேன் மேடம். எனக்கும் ஆச்சர்யமா தான் இருக்கு. கொலைகாரன் ரொம்ப திறமையானவன் போல. இந்த கேஸ் நமக்கு சவாலா தான் இருக்கும்னு நினைக்கிறேன் மேடம்.

“ஜீவரேகாவின் கண்கள் அங்கு கிடந்த உடலில் ஆழமாக ஊடுருவி தன் தேடலைத் தொடங்கி இருந்தது. இது எப்படி சாத்தியம். இப்படியும் கொலை பண்ண முடியுமா? எப்படி?” என சிந்தித்துக் கொண்டிருக்க.

அப்போது ரெஜினாவின் குரல் ஜீவரேகாவின் சிந்தனையைக் கலைத்தது.

மேடம், “அங்க பாருங்க” என மிரண்டு போய் அங்கிருந்த கண்ணாடியைக் காட்ட.

ஜீவரேகா ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தார்.

உயிர் உறையும்…..

Advertisement